உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/36. சமணமும் பௌத்தமும்

விக்கிமூலம் இலிருந்து

36

சமணமும் பௌத்தமும்

ன்று 'அறங்கூறு அவை' யத்தினில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பெளத்த சமயத்தினர் ஒருபுறமும், சமண சமயத்தினர் அவர்களுக்கு எதிர்ப்புறமாகவும் அணிவகுத்தாற்போல் அமர்ந்திருந்தனர். பிற சமயங்களைச் சேர்ந்தவர்களும் எந்தச் சமயத்தினையும் சாராதவர்களும் கூடப் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

அந்த விந்தையான வழக்கு எங்ஙனம் நடைபெறுகிறது என்று கண்டிடும் ஆர்வத்தில் அமைச்சர்கள், அறவோர்கள், படைத்தளபதிகள், தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகிய ஐம்பெருங்குழுவினர் மட்டுமின்றி, 'கரும் விதிகள்' எனப்படும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர் போன்றவர்களும் பார்வையாளர் பகுதியிலே அமர்ந்திருந்தனர்.

ரோமாபுரி நாட்டிலிருந்து வந்திருந்த தூதுவரும் அங்கே வருகை புரிந்திருந்தார்.

புலவர் காரிக்கண்ணனார், முத்துநகை, இளம்பெருவழுதி ஆகி யோரும் ஒருபுறத்தில் உட்கார்ந்திருந்தனர்.

அறங்கூறு அவையத்தின் தலைவர் முதலில் தம் வழக்கினை யாவரும் அறிந்திட முறையிட்டுக் கொள்ளுமாறு சமணத் துறவியை அழைத்திட்டார்.

பசுமலையிலே தம் சமயத்தினர் எவ்வாறு பௌத்தர்களால் தாக்கப்பட்டனர் என்பதனை விரிவாக எடுத்துரைத்தார் அந்தச் சமணத் துறவி.

"இந்தத் தமிழகத்திலே பௌத்த சமயம்போல இன்று நேற்று வந்து நுழைந்தது அல்ல எங்கள் சமண சமயம். இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரருக்குப் பின்னே பல சமணத் தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களுள் பத்திர பாகு மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் சந்திரகுப்த மவுரியருக்கே குருவாக இருந்தவர். அவரது சீடரான விசாக முனிவர் என்பவரே முதன் முதலாகச் சோழ -பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பிட வந்தவர்..."

சமணத் துறவி இவ்வாறு வாதிடும்பொழுதே. எதிர்வழக்காடிட வந்திருந்த புத்தபிக்கு எழுந்து குறுக்கிட்டார்.

"மேன்மை தங்கிய அறங்கூறும் அறிஞர்களே! எனது மதிப்பினுக் குரிய நண்பர் சமணத் துறவியார், தங்கள் வழக்கினை எடுத்துரைக்க வந்தாரா அல்லது தங்கள் சமயத்தின் வரலாற்றைப் பரப்பிட வந்தாரா என்று விளங்கிடவில்லை. தொடர்பில்லாத செய்திகளையெல்லாம் அவர் சுற்றி வளைத்துப் பேசிக் காலத்தை வீணடிக்க வேண்டாமெனக் கட்டளை இடுமாறு பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்."

உடனே அவையத் தலைவர், “புத்த பிக்குவின் மறுப்பு முறையானதே! இனி சமணத் துறவி வழக்கினுக்குத் தொடர்பில்லாதவற்றைச் சொல்வத னைத் தவிர்த்திடல் வேண்டும்" என்றார்.

அந்த ஆணைக்குப் பணிந்த சமணத் துறவி தொடர்ந்திட்டார்.

...பசுமலை நிகழ்ச்சி மட்டும்தான் பௌத்தர்கள் எங்களைத் தாக்க முனைந்திட்ட முதற்களம் என்பதில்லை. இதற்கு முன் பலமுறை எங்களை அவர்கள் தாக்கியிருக்கிறார்கள். தரக்குறைவாகப் பழித்தும் இருக்கிறார்கள். நாங்கள் கார்த்திகை முதலான மாதங்களில்; அட்டமி முதல் பௌர்ணமி வரையுள்ள நாட்களில், தெய்வப் பொம்மைகளை வைத்துத் தேர் ஊர்வலம் நடந்திடுவது எங்கள் சமண வழிபாட்டு முறைகளிலே ஒன்று. அதனை ஏன் இந்த பௌத்தர்கள் பழித்திட வேண்டும்? எங்கள் முதல் தீர்த்தங்கரரின் சின்னம் எருது ஆகும். அதனைக் கொடிகளில் பொறித்து நாங்கள் ஏந்திச் சென்றால் இவர்களுக்கு என்ன வந்தது? எங்கள் மனம் புண்படும் வண்ணம் ஏன் பேசிட வேண்டும்? இவ்வாறு ஒரு சமயத்தினர் இன்னொரு சமயத்தினரின் மனத்தைப் புண்படுத்த லாமா? பௌத்தர்கள் மட்டும் தங்கள் புத்தரை வழிபட்டிட வில்லையா?"

அவையத் தலைவர் மெல்ல முறுவலித்தார்:-

"மனம் புண்படுகிறது, மனம் புண்படுகிறது என்றெல்லாம் கூறுவது இருக்கிறதே அது ஒரு விந்தையான வறட்டு வாதம். பண்படுகிற மனம் புண்படாது; புண்படுகிற மனம் பண்படாது. தங்களுடைய கருத்துக்கு இன்னொருவர் மாற்றுக் கருத்தினைக் கூறிடுவதா என்னும் மமதை எண்ணங் கொண்டோர்தாம் இங்ஙனம், 'மனம் புண்படுகிறது; மனம் புண்படுகிறது' என்றெல்லாம் புலம்பிடுவார்கள். கருத்தைக் கருத்தினால் மோதுங்களேன்! இலட்சியத்தை இலட்சியத்தால் வெல்லுங்களேன்! அதனை விடுத்து உங்கள் சமயங்களில்... - தத்துவங்களில் - சாத்திரங்களில் சடங்குகளில் உள்ள குறைபாடுகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டவே கூடாது என்று உங்களுடைய சிந்தனை வளத்திற்கு நீங்களே ஏன் சிறையிட்டுக் கொள்கிறீர்கள்? 'இந்தச் சமணர்கள் இன்னும் பொம்மை வணக்கத்திலேயே புதைந்து கிடக்கிறார்களே! அவர்கள் இன்னும் பரிநிருவாணம் அடைவதற்குரிய சரியான பாதையினைத் தேர்ந்தெடுத்திடவில்லையே! அவர்களுடைய இந்தத் தடுமாற்றமே எங்கள் மனத்தைப் புண்படுத்துகிறதே!' என்று பௌத்தர்களும் வாதிக்கலாம் அல்லவா? இது எப்படி இருக்கிறது தெரியுமா? புலால் உண்பவனைப் பார்த்து, 'அய்யோ! ஓர் உயிரைக் கொன்று இப்படி உண்கிறாயே! என் மனம் எவ்வளவு புண்படுகிறது தெரியுமா?' என்றானாம் புலால் மறுத்தவன். உடனே அவனை நோக்கி புலால் உண்பவன் 'அய்யோ! உன் உடல் எவ்வளவு இளைத்து விட்டது! இறைச்சி உண்டால்தானே உன் இளைத்த உடம்பு தேறும்! இல்லையென்றால் விரைவிலேயே நாடி நரம்புகள் தளர்ந்து செயலற்று மடிந்திடுவாயே! உன் நிலையினைக் காண என் மனம் எவ்வளவு புண்படுகிறது தெரியுமா?' என்று கூறினானாம். அப்படித்தான் வேடிக்கையாக இருக்கிறது இந்தச் சமயவாதிகள் மனம் புண்படுவதாகப் பேசிடும் பொழுது! உண்மையான - அழுத்தமான சமயவாதியின் முதல் இலக்கணமே சகிப்பு உணர்ச்சிதான். அத்தகைய சகிப்பு உணர்ச்சியினால் பக்குவப்பட்ட சமயவாதி, பிறருடைய பழிப்பையோ எதிர்ப்பையோ பொருட்படுத்திடவே மாட்டான்; பொருட்படுத்திடவும் கூடாது. ஆகவே பௌத்தர்களால் மனம் புண்படுகிறது என்கின்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று. நீங்கள் மேலே தொடரலாம்..." என்றார் அவையத் தலைவர்.

பின்னர் புத்தபிக்கு தம் வாதத்தினைத் தொடங்கினார்.

"மேன்மை தங்கிய அறங்கூறு அவையத்தோரே! எனது நண்பர் சமணத் துறவியார் பசுமலை நிகழ்ச்சிக்கு இல்லாத காரணங்களை யெல்லாம் ஏராளமாக அடுக்கியதைக் கேட்டீர்கள். அவருடைய வழக்கும் சரி, வாதமும் சரி, எழுதாத பனுவலுக்கு எழிலான பாயிரம் என்பதைத் தவிர வேறென்ன? உண்மையிலேயே பசுமலை நிகழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்ன தெரியுமா?" என்று வினவி, சில நொடிகள் இடைவெளிவிட்டு, அந்த அறங்கூறு அவையம் முழுமையையுமே தம் பார்வையினால் அளந்திட்ட அவர், “ஒரு பெண்! ஆம். ஒரு பெண்! அதுவும், சமண முனிவரான கனகநந்தி என்பவர் புகலிடம் கொடுத்து அவளை வெளியே அனுப்பிட முடியாது என்று வீராப்பாகப் பேசிடுகின்றாரே, அந்தப் பெண்!" என்று அழுத்தமாக மொழிந்திட்டார்.

குழுமியிருந்த அத்தனை பேருடைய விழிகளுமே வியப்பினால் விரிந்தன.

எடுத்த எடுப்பிலேயே எல்லோரையும் திகைப்புக் கடலினில் திணறிடச் செய்துவிட்ட அந்தப் புத்த பிக்கு. தம்முடைய கூர்மையான வாதங்களை மிடுக்கான குரலில் மேலும் அடுக்கிடலானார்.

"பெருமதிப்பிற்குரிய அறங்கூறு அவையப் பெரியோர்களே! மற்றவர்களை வியப்பினில் ஆழ்த்திடவோ வீண்பழி சுமத்திடவோ நான் ஏதோ கற்பனைச் சரடு விடுவதாகக் கருதிட வேண்டாம். என்னுடைய ஒவ்வொரு வாதத்திற்குமே அசைத்திட முடியாத ஆதாரம் உண்டு; ஆதாரம் இல்லையென்றால் நான் வாதிடவே மாட்டேன், அதுவும் மூதறிஞர் கனகநந்தி அவர்களிடம் எனக்குப் பெருமதிப்பே உண்டு.

ஆனால் ஒரு மூதறிஞரிடமோ, ஒரு பெருந்தலைவரிடமோ மதிப்பு வைக்கிறோம் என்றால், அதற்காக அவர்களுடைய முரண்பட்ட மொழிகளுக்கும் அறம் பிறழ்ந்த செயல்களுக்கும் நாம் எப்பொழுதுமே தலையாட்டிக் கொண்டே இருந்திட வேண்டுமா? காலப் போக்கிற்கு ஒவ்வாத அவர்களுடைய தவறான பாட்டுகளுக்கே தாளம்போட்டு வாழ்ந்திட வேண்டுமா? அவ்வாறு தலையாட்டிடவில்லை-தாளம் போட்டிடவில்லை என்பதற்காகத்தான் எங்களுடைய பழைய நட்பினை மறந்து நன்றியினையும் கொன்று. மூதறிஞர் கனகநந்தி அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எங்கோ திசைமாறிச் செல்கிறார்கள்? எங்கள்மீது வசை மாரியும் பொழிகின்றார்கள்.

இங்கே சமணத் துறவியார் எத்துணையோ அவதூறுகளையெல்லாம் ஏராளமாக அள்ளி வீசினார். அவரைப்போல, ஒருவர் மீது குற்றங்கூறுவதும் எளிது; ஊழல் புகார்கள் பலவற்றினை உலவிடச் செய்வதும் எளிது. ஆனால் மற்றவர்களைப் பற்றி "ஊழல் ஊழல்" என்று உரக்கக் கூவிடுமுன் தாமும் தங்களைச் சார்ந்தவர்களும் அத்தகைய ஊழல்களுக்கும் - குற்றங்களுக்கும்-அப்பாற்பட்டவர்களா என்பதனையும் ஒரு கணம் எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தன்னுடைய வேட்டியிலே கையகலத்திற்கு மேல் உள்ள கறையினை வைத்துக் கொண்டு மற்றவர்கள் துண்டிலே உள்ள ஒரு சிறு புள்ளியை பெரிது படுத்திப் பேசுவதா? இதனால் எங்களைப் பற்றிக் குறையே கூறக்கூடா தென்று நான் வாதிடவில்லை. எங்களிடம் தவறுகள் இருந்தால் - அவை தக்க சான்றுகளோடு மெய்ப்பிக்கப்பட்டால் - அவற்றைத் தவிர்த்திடவும் திருத்திக் கொள்ளவும் நாங்கள் என்றைக்குமே தயங்கியதில்லை. அதற்காக ஒருவர் மீது வீண்பழி சுமத்துவதற்கும் ஒரு வரம்பு இல்லையா? சரி; ஒருவன் மீது ஊழல் புகார் என்னும் வாளினைப் பாய்ச்சிடும் பொழுது, அந்த வீரன் தன் கரத்திலிருக்கும் கேடயத்தினால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முற்படுவது எப்படித் தவறாகும்? அவன் எழுப்பிடுகின்ற எதிர் குற்றச்சாட்டுதான் அவனது கரத்திலுள்ள கேடயம்! அந்தக் கேடயத்தைக் கண்டதுமே -எதிர்க் குற்றச்சாட்டு பாய்ந்து வந்ததுமே நமது சமண நண்பர்கள் இடிந்து போவானேன்? எரிச்சலைக் கக்குவானேன்? முதலில் அவர்கள் தங்கள் சமணக் கோவிலிலே சிதறிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தித் துப்புரவாக்கட்டும். அதற்குப் பிறகு எங்களைப் பற்றி இழிவாகப் பேசட்டும்..." புத்த பிக்கு இவ்வாறு இயம்பிடும் பொழுதே அந்தச் சமணத் துறவி இடையிலே குறுக்கிட்டார்.

"எங்கள் சமணக் கோவில்கள் என்றைக்குமே தூய்மையானவைதாம். ஆனால் அவர்களுடைய புத்த விகாரங்களிலேதான் குப்பைகள் மலைமலையாகக் குவிந்து கிடக்கின்றன" என்று அனலினைக் கக்கினார் அவர்.

"அறங்கூறு அவையப் பெரியோர்களே! சமணத்துறவி அவர்களின் ஆத்திரத்தைக் கண்டு என்னால் வருந்திடாமல் இருக்க முடியவில்லை. முதலில் புத்த பிக்குகளாகிய நாங்கள் உறைகின்ற இடத்தின் பெயரையாவது அவர் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? அவருக்கு எப்பொழுதுமே வடபுலத்தில் இடம் பிடிப்பதிலேயே குறி போலும்! அதனால் தான் அங்கே உள்ள புத்த விகாரங்களை நினைவில் வைத்திருக்கிறார். ஆனால், தென்புலத்திலே, அதாவது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தமிழகம் முதலான பகுதிகளிலே, புத்த பிக்குகள் ஒரு குழுவாக சங்கமாக உறைகின்ற இடம் பௌத்தக் 'குகை' என்றுதான் அழைக்கப் படுகிறதேயன்றி புத்த 'விகார்' என்று அல்ல. புத்த 'விகார்' இருப்பதெல்லாம் வடபுலத்திலேதான்! அது போகட்டும்; இந்த வழக்கினை பொறுத்தமட்டில் சமணத் துறவியார் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன். முதலாவது குற்றச்சாட்டு சமண சமயத்தினரின் வழிபாட்டினைக் கேலி புரிந்து அவர்கள் மனத்தினைப் புண்படுத்துகிறோம் என்பது; இரண்டாவது குற்றச்சாட்டு, அவர்களுடைய சமயத்தலைவர் கனகநந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கிறோம் என்பது; எங்கள் பௌத்த சங்கக் கூட்டம் ஒன்றிலே தங்கள் ஐயப்பாடுகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள வந்த சில சமண நண்பர்களை நாங்கள் நையப்புடைத்தோம் என்பது, மூன்றாவது.

"முதலாவது குற்றச்சாட்டினைப் பொறுத்தமட்டில் சமண சமயத்தினர் அண்மைக் காலமாகக் கையாண்டு வருகின்ற வழிபாட்டு முறைகளிலும், ஊர்வலக் காட்சிகளிலும் உண்மையிலேயே எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனை மழுப்பிடவோ மறுத்திடவோ நான் விரும்பவில்லை. சமயத்துறையிலே குழந்தைப் பருவத்தில் அரிச்சுவடிப் பயிற்சி பெறுவோர்க்கு வேண்டுமானால் பொம்மை வணக்கம் உருவ வழிபாடு - தேவையாக இருக்கலாம். அறிவில் முதிர்ந்திட வேண்டிய பெரியவர்களும் அந்தத் தொடக்க முறைகளிலேயே தங்களுடைய சிந்தனை வளர்ச்சியை முடக்கிக் கொள்வானேன்? சின்னஞ் சிறுவர்களுக்கு விளக்கிடுவதற்காக, 'இதோ பார், இதுதான் மரம் என்பது; இதோ பார். இதுதான் மாடு என்பது...' என்று சொல்லிக் கொடுத்திடும் முதல் பாடத்தினையே எத்தனை காலத்திற்குத்தான் உருப்போட்டுக் கொண்டிருப்பது? மேலும் உருவ வழிபாடு என்பது 'வேறோர்' சமயத்திற்குத்தான் உரிமையுடையது. அந்த வேறோர் சமயத்தின் கோட்பாடுகளை முறியடித்திட முளைத்ததுதானே சமண சமயம்! நான் அறிந்த அளவிலே, விருடபதேவர் முதல் மகாவீரர் வரை சமணத் தீர்த்தங்கரர்கள் உருவ வழிபாட்டினை வரவேற்றிடவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்த நிலையில் இன்றையச் சமணர்கள் தங்களுடைய பண்டைய வழிகாட்டிகளின் பாதையினைவிட்டுத் தடம் புரண்டிடும் பொழுது மற்றவர்கள் மறுப்புக் கணையினைத் தொடுப்பது இயற்கை தானே? அந்த மறுப்பு சில வேளைகளில் 'கேலி, கிண்டல்' வடிவத்திலும் வருகின்றது. அவர்கள் மட்டும் எங்கள் பௌத்த சமயத்தினைக் கேலி செய்ததில்லையா?"

இப்போது சமணத் துறவி மீண்டும் எழுந்தார்.

"எங்களுடைய வழிபாட்டைப்பற்றி இவ்வளவு விரிவாக அலசுகிறீர்களே. நீங்கள் மட்டும் கவுதமபுத்தரை எதற்காக வழிபடுகிறீர்கள்? அந்த வழிபாடுகளெல்லாம் ஒழுங்கு முறையோடு தான் நடக்கின்றனவா?"

"சமணத் துறவியாரின் இந்த வினா, அவர் இன்னும் எங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது. நாங்களும் புத்தரை வழிபடுகிறோம்; இல்லையென்று சொல்லிவிட வில்லை; ஆனால் எந்த ஒரு பௌத்தனாகட்டும் அவனுடைய வழிபாட்டு முறைகளிலே தான் விரும்பியவற்றையெல்லாம் அடைந்திட விழைகின்ற விண்ணப்ப இயல்பு இருக்கவே இருக்காது. அவன் புரிகின்ற வழிபாடுகளெல்லாம் தன்னைத் 'தம்மபத விளக்கொளி கொண்டு நன்னெறிப் படுத்திய கவுதம புத்தருக்கு நன்றி தெரிவித்திடும் முறையினில் அமைந்திட்ட வழிபாடுகளே அன்றி வேறல்ல. உண்மையிலேயே மற்ற சமயவாதிகளை விட முதிர்ச்சியுற்றவன் பெளத்தன் ஒருவனே! ஏனெனில், மற்றவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் இறைவனிடம் சென்று, 'அது வேண்டும்: இது வேண்டும்'. என்று குழந்தைகளைப் போலக் கெஞ்சுகிறார்கள். பௌத்தன் அப்படியெல்லாம் கெஞ்சமாட்டான். அவன் ஒருவன் தான் எதனையுமே இச்சிக்காமல் எதற்குமே கவலைப்பட்டிடாமல் - பகுத்தறிவு ஒன்றினையே வழித் துணையாகக் கொண்டு உண்மையை நாடிச் செல்கிறான்.

"பௌத்த வழிபாட்டின் இந்த அடிப்படையினைப்புரிந்து கொள்ளா மல் யாராவது புத்தரை வணங்குவதில் ஈடுபட்டார் களானாலும் அவர்களும் சரியான பாதையினில் நடைபோடவில்லை என்றே பொருளாகும். ஆகவே சமணத் துறவி அவர்கள் எங்கள் வழிபாட்டு முறைகளைப் பற்றி நுனிப்புல் மேய்ந்திட வேண்டாம். அதே வேளையில், எங்கள் நெறிகளிலேயே முரண்பாடுகள் தென்பட்டால் தாராளமாகக் கண்டிக்கட்டும். அவ்வாறு கண்டிப்பதாலேயே நாங்கள் ஒன்றும் 'வைதீக சமய த்தினரைப் போலக் குடியே முழுகி விட்டதாக இடிந்து போய்விட மாட்டோம். அவர்கள்தான் தங்களுடைய தத்துவங்களை - சாத்திரச் சடங்குகளை - யாராவது கடுகளவு கண்டித்தாலும் மலையளவு பெரிது படுத்தி அலறுவார்கள்; 'எங்கள் மனம் புண்படுகிறது... மனம் புண்படுகிறது...'என்றெல்லாம் ஓலமிடுவார்கள்; ஊரையே கூட்டுவார்கள். எனக்கு ஏற்படுகின்ற வேதனையும் வியப்பும் என்ன தெரியுமா? பௌத்த சமயத்தினராகிய எங்களைப்போல் 'எதையும் தாங்கும் இதயம்' படைத்திட வேண்டிய சமண சமயத்தினரே 'மனம் புண்படுகிறது' என்று கூசாமல் கூறுகிறார்களே என்பதுதான்; நற்காலமாக, அறங்கூறு அவையத் தலைவராகிய தாங்களே அதுபற்றித் தெளிவான தீர்ப்பினை வழங்கிவிட்டீர்கள். அதற்குமேல் நான் ஒன்றும் புதிதாக விரித்துரைக்கத் தேவையில்லை.

அடுத்து, சமணத் துறவியார் சாட்டிய இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகள் எந்தவித ஆதாரங்களும் இல்லாதவை ஆகும். வெறும் வதந்திகளை மட்டும் நம்பி எழுப்பப்பட்ட மணல் வீடுகள் அவை! விளக்கமான முறையிலே அவற்றுக்கு மறுப்புத் தெரிவித்திடுமுன். ஒருவருடைய உண்மையான சாட்சியத்தைக் கேட்பது இன்றியமையாதது என்று எண்ணுகிறேன். ஏனெனில், இந்த இரு குற்றசாட்டுகளுக்கும் பின்னணியாக எழுந்திட்ட பெரும் பூசலுக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அவர் வேறு யாரும் அல்லர், பாண்டிய வேந்தரின் பேரன்புக்கு உரியவரும் அவர் தம் மெய்க்காவல் மறவருமான செழியன் அவர்களே. அவர்தான் கடைசி நேரத்தில் எங்கள் இரு சமயத்தினரும் குருதிக் குளத்திலே மிதந்திடாதவாறு அமைதியினை ஏற்படுத்தியவர். அவர் எத்தகைய சாட்சியம் அளித்திடினும் அதனை ஏற்பதற்கு நாங்கள் உடன்படுகிறோம்" என்று மொழிந்துவிட்டுப் புத்தபிக்கு அமர்ந்து விட்டார்.

செழியன் சாட்சியம் அளித்திடப் போகிறான் என்றதும் அந்த அவையத்தில் குழுமியிருந்த அத்தனை பேருடைய உள்ளத்திலும், ஏதோ புதுமையான பொருட்காட்சியினை கண்டிடப் போகும் ஆர்வம் ததும்பிற்று.

காரிக்கண்ணனார். இளம்பெருவழுதி மற்றும் அமைச்சர்கள் முதலானோர் தத்தம் இருக்கைகளில் நிமிர்ந்து உட்கார்ந்து, கூர்ந்து கவனிக்க முற்பட்டனர்.

முத்துநகைக்கோ இனம் விளங்கிடாத உவகைப்பெருக்கு. 'இந்த அண்ணனுக்கு இத்தனை பேர் நடுவே தட்டுத் தடங்கலின்றி நன்றாகப் பேசிட முடியுமா?' என்கிற ஐயப்பாடும் அவளுக்கு எழாமல் இல்லை. எனினும் வியப்பினால் உந்தப்பட்டவளாகச் செழியன் மொழிவதைக் கேட்டிடத் தன் செவிகளைத் தீட்டிக் கொண்டாள்.

அவள் நினைத்திட்டதைப் போல் சாட்சியம் மொழிந்திடுவதில் எந்தவிதத் தடுமாற்றத்தினையும் அடைந்திடவில்லை செழியன். தட்டுத் தடங்கலின்றிச் சொற்கள் யாவும் அருவித் திரைபோல் மிகவும் இயல்பாக விறுவிறுப்பாக -வந்து விழுந்தன. அவனது கனமான கம்பீரக்குரல் வீணையே வந்து பேசுவதுபோல் இருந்தது. ஆம்; அவனது குரலிலே இழைந்த ஓர் இனிமையான இசை மணம், அந்த அவையம் முழுவதிலுமே கமழ்ந்து வழிந்தது!

... மேன்மை தங்கிய அவையப் பெரியோர்களே! ஒரு சமயத்தினர் தான் தவறுகளைப் புரிந்திட்டார்கள், இன்னொரு சமயத்தினர் எதுவுமே செய்திடவில்லை என்று என்னால் கூறிட இயலவில்லை. சுருங்கச் சொன்னால், இரு சாராருமே தாங்கள் சமயவாதிகள் என்பதனை மறந்து விட்டார்கள். பொறுப்பு உள்ள ஒரு சமயவாதிக்குரிய தரமோ - தன்னல மறுப்போ -முதிர்ச்சியோ - சகிப்புணர்ச்சியோ-அவர்களிடம் இல்லவே இல்லை. செந்நெற்பயிரின் செழுமையைக் கெடுத்திடும் கோரைப் புல் மாதிரி பகுத்தறிவினைப் பாழ்படுத்த வந்தவைதானே மூட நம்பிக்கைகளும், சாதிப் பாகுபாடுகளும்! அவற்றை விடாப்பிடியாக வேரூன்றித் தழைக்க வைத்திடும் ஒரு பொது எதிரியின் கரம் ஓங்கிடாமல் விழிப்போடு வேலை செய்திட வேண்டிய இந்த இரு சமயத்தினரும் தாங்களே ஒருவருக்கொருவர் பொருத முற்பட்டுவிட்டது வேதனைக்குரியதே யாகும். சமணம், பௌத்தம் இவற்றிடமுள்ள பற்றினாலோ அல்லது வேறோர் சமயத்திடமுள்ள வெறுப்பினாலோ நான் இவ்வாறு விளம்பிடவில்லை. எல்லாச் சமயங்களும் எனக்கு ஒன்றுதான்! எந்த சமயத்திலே உயர்ந்த நெறிகள் இருப்பினும் அவை நம் போற்றுதலுக் குரியவையே - இதனால் எனக்கென்று தனிக்கொள்கை ஏதும் இல்லாமலும் இல்லை. 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!' என்பதே என் கொள்கை! உருவ வழிபாட்டிலிருந்து ஒளி வழிபாட்டுக்கு உதயசூரியன் வழிபாட்டுக்கு - உயர்ந்திட்ட பண்டைக்காலத் திராவிட சமயத்தின் ஒப்பற்ற கொள்கையே என் கொள்கை! புறத்தினில் உள்ள கோவில்களுக்குச் செல்வதைவிட அகத்தையே - உள்ளத்தையே - பெருங்கோவிலாகக் கண்டு வழிபட்ட திருமூலரின் திருவாக்காக மலர்ந்திட்ட கொள்கையும் அதுவே! 'திராவிட சமயமா?' என்று சிலர் விழிகளை அகல விரித்திடக்கூடும், சமண - பௌத்த சமயங்களில் உள்ள கொல்லாமை, கள்ளுண்ணாமை போன்ற அடிப்படைக் கொள்கைகளையெல்லாம் அண்மைக்காலமாக எந்த சமயம் தன்னுடையதாக்கிக் கொண்டு தழைத்துப் படர்கிறதோ, அந்தச் சமயம் தான் திராவிட சமயத்தின் உயிர்நாடியான தத்துவங்களையும் தனக்கே உரித்தாக்கிக் கொண்டு வளர்ந்து, திராவிட சமயத்தின் பெயரே மறைந்திடுமாறு செய்து வருகிறது..."

"ஆமாம்; திராவிட சமயம், பெளத்த சமயம், சமண சமயம் இவற்றின் கருத்துக்களை இரவல் வாங்கி வளரும் அந்த வேறோர் சமயத்திற்கும் இந்த வழக்கத்திற்கும் என்ன தொடர்பு"

"தொடர்பு இருக்கிறது! அவையத் தலைவர் அவர்களே; தொடர்பு இருக்கிறது! இந்த பௌத்த-சமணச் சமயத்தினர் இடையே கசப்புணர்ச்சியை மறைமுகமாக நின்று வளர்த்து விட்டவர்களே அந்த வேறோர் சமயத்தினர்தான். ஒரு புத்த பிக்குவோடு ஒரு பெண்ணைத் தொடர்புபடுத்திப் புரளியைக் கிளப்பிவிட்டவர்களும் அவர்கள்தான். பௌத்தர்கள், கனகநந்தி முனிவர் மீது களங்கங் கற்பித்திட முனைந்தார்கள். அதனாலேயே பசுமலைக் கலவரமும் எழுந்தது."

"அப்படியானால் இந்த வழக்குப் புகையினை எழுப்பி விட்ட நெருப்புத் துண்டே, புத்தபிக்குவைப் பற்றிய புரளிதான் என்கிறீர்களா?"

"ஆம்; அவையத் தலைவர் அவர்களே! மாரிக்காலத்திலே பிச்சை எடுத்திடும் பொருட்டு வெளியே ஏகிடும் எந்த பிக்குவும் ஏழு நாட்களுக்குள் தங்கள் பௌத்தக் குகைக்குத் திரும்பிட வேண்டும் என்பது பெளத்த சங்க விதி. ஆனால் ஒரு புத்த பிக்கு அவ்வாறு வந்திடவில்லை. அதற்குக் காரணம், மூலிகையொன்றின் மணத்தினால் அவர் மயக்கமுற்று விழுந்துவிட்டதேஆகும். முல்லைத் திணையினைச் சார்ந்திட்ட பெண்ணொருத்தி அவரைத் தன் முதுகிலே சுமந்து வந்து குகையினில் சேர்த்திருக்கிறாள். அதனைக் கண்டு விட்டுத்தான் பிக்குவுக்கும் அந்தப் பூவைக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு உண்டு என்று புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டனர். தனக்கு உணவினையே அளித்திடும் பெண்ணாக இருந்த போதிலும் எந்த ஒரு புத்த பிக்குவும் அவளை நிமிர்ந்து பார்ப்பதோ, அவளோடு உரையாடுவதோ, அவளுடைய அழகையோ, அழகின்மையையோ ஊன்றிக் கவனிப்பதோ அறவே கூடாது என்பதும் பௌத்த சங்கத்தின் கடுமையான விதி. தங்களுடைய இந்தச் சங்க விதிக்கே இழுக்கினை உண்டாக்கியதாகப் புத்த பிக்குவின் மீது அபாண்டப் பழியைச் சமணர்கள் சுமத்துகிறார்களே என்கிற ஆத்திரம் உண்டாகி விட்டது பௌத்தர்களுக்கு. அவர்கள் எதிர்க்குற்றச்சாட்டினை எழுப்பிடும் வகையிலே கனகநந்தி முனிவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார்."

"என்ன சிக்கல் அது?"

"ஒரு நாள் நள்ளிரவு நாலைந்து பேர் ஒரு பெண்ணோடு கனகநந்தி முனிவரிடம் வந்திருக்கிறார்கள். தங்களை யாரோ கொல்வதற்கு வருவதபாகவும் தங்களுக்குப் புகலிடம் தர வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். இவ்வாறு அடைக்கலம் தேடி வருகின்றவர்களைச் சமணக் கோவிலை ஒட்டியுள்ள 'அஞ்சினான் புகலிடம்' என்னும் பகுதியில் தங்கிடச் செய்து காப்பாற்ற வேண்டியது சமணர்களின் கடமை. அந்தக் கடமையினை நிறைவேற்றிடும் முறையில்தான் அந்தப் பெண்ணுக்குப் புகலிடம் அளித்தார் கனகநந்தி. ஆனால் அந்தச் செயலையே தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அவர்மீது களங்கம் கற்பிக்க முற்பட்டு விட்டனர் பௌத்தர்கள்."

"அது சரி, அந்தப் பெண் இன்னும் கனகநந்தி முனிவரின் பாதுகாப்பில்தான் இருக்கிறாளா?" - என்று வினவினார் அறங்கூறு அவையத்தலைவர்.

"இல்லை என்று கனகநந்தி முனிவர் நான் உசாவிய பொழுது மறுத்து விட்டார்" என்றான் செழியன்.

"அப்படியா? அந்தக் கனகநந்தி முனிவர் இப்போது இங்கே வந்திருக்கிறாரா?"

"இதோ வந்திருக்கிறேன்." என்று எழுந்து நின்றார் கனகநந்தி முனிவர்

"ஆமாம். நீங்கள் ஒரு பெண்ணுக்குப் புகலிடம் அளித்தது உண்மையா?"

"உண்மைதான்".

"அவள் இப்போது உங்களுடைய 'அஞ்சினான் புகலிட'த்தில் தான் தங்கியிருக்கிறாளா?"

"இல்லை, அவளும் அவளோடு வந்த ஆடவர்களும் அன்று விடிவதற்குள்ளேயே தப்பிவிட்டார்கள்."

"சமணத் தலைவர் பொய் சொல்கிறார்! சமணத் தலைவர் பொய் சொல்கிறார்!" என்று பௌத்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திட முனைந்திட்ட அறங்கூறு தலைவர், "இப்படியெல்லாம் நீங்கள் கூச்சல் போடுவது முறையில்லை. கனகநந்தி முனிவர் கழறுவது பொய்தான் என்றால் அதற்குரிய நடவடிக்கை யிலிருந்து அவர் தப்பிவிட முடியாது. அந்தப் பெண் இன்னும் 'அஞ்சினான் புகலிடத்தில் தான் இருக்கிறாளா, இல்லையா என்பதை அரசு ஒற்றர்கள் புலனாய்ந்து தெரிவித்திட வேண்டும். அதுவரை வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" என்று மொழிந்தவாறே எழுந்துவிட்டார்.

ஒரே பரபரப்பு நிலவிற்று, அந்த வழக்கு மன்றத்தினில்.

அத்துணை பரபரப்பிலும் இளம்பெருவழுதிக்கு மட்டும் ஒரு விந்தை யான எண்ணம் உதிக்கத் தவறிடவில்லை. அவன் தன் அருகிலிருந்த காரிக்கண்ணனாரை நோக்கி, "ஒருக்கால், அந்த இளம் பெண் நம் தாமரையாகவே இருப்பாளோ?" என்று வினவினான் மெல்லிய குரலில்.

அவன் இவ்வாறு கேட்டிடவும் காரிக்கண்ணனாருக்கு மட்டுமல்ல, முத்துநகைக்கும்கூட அத்தகைய ஐயப்பாடு எழலாயிற்று. அடுத்த சில விநாடிகளிலேயே, அந்த அறங்கூறு அவையத்தினைவிட்டு வெகுவேகமாக வெளியேறினான் இளம்பெருவழுதி.