உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/37. ரோமபுரிக்குத் தூதுவன்

விக்கிமூலம் இலிருந்து

37

ரோமபுரிக்குத் தூதுவன்

ண்பகல் உணவினை அருந்திவிட்டுப் பெருவழுதிப் பாண்டியனைக் காணச்சென்றார் காரிக்கண்ணனார். அவருடன் முத்துநகையும் போனாள்.

அவர்களுடைய உரையாடல் எடுத்த எடுப்பிலேயே செழியனைப் பற்றியே திரும்பியது.

"ஆமாம். செழியன் இன்று சாட்சியம் அளித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று பாண்டிய வேந்தன் ஆர்வத்துடன் கேட்டான்.

'மிகமிக அருமையாக அமைந்திருந்தது அரசே! அவரை வெறும் மறவர் என்றுதான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்; இந்த அளவுக்கு வரலாற்று அறிவும், சமய ஆராய்ச்சியும், வாதிடும் ஆற்றலும், எல்லாவற்றையும் விட நடுவு நிலைமை பிறழாத நல்ல பண்பாடும் அவரிடம் அமைந்திருக்கும் என்று நான் நினைத்திடவே இல்லை!" என்று தம் வியப்பினை வெளியிட்டார் புலவர்.

"ஆமாம் அரசே! இவ்வளவு தெளிவாக - இனிமையாக -கம்பீரமாக. அவை நடுவே அண்ணா முழக்கமிடுவார் என்று நானும் எதிர்பார்க்கவே இல்லை" என்று முத்துநகையும் உவகை மேலிட உரைத்தாள்.

"ஆமாம்; நாம் ரோமாபுரிக்குத் தூதுவர் அனுப்புவது பற்றிக் கரிகாற்சோழர் ஏதோ கருத்தினைத் தெரிவித்ததாகக் கூற வந்தீர்கள் அல்லவா?"

"ஆம், மன்னவா! அவர் தங்களுடைய மகன் இளம்பெருவழுதியை அனுப்புவதே சாலச் சிறந்தது என்று...."

"அப்படியா....ஆனால் நான் அவனை அனுப்பப் போவதில்லை. செழியனைத்தான் அந்தப் பொறுப்பான பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்."

பாண்டிய மன்னன் இவ்வாறு பகர்ந்திடவும், "அது தான் சரியான முடிவு! பொருத்தமான ஆள் என் அண்ணா தான்! ஆம். என்னுடைய அண்ணாவேதான்!" என்று களிப்பினில் மிதந்து உரக்கவே மொழிந்திட்டாள் முத்துநகை. ரோமாபுரிக்கு யாரைத் தூதுவராக அனுப்புவது என்பதைப் பற்றிப் பெருவழுதிப் பாண்டியன் வெளியிட்ட முடிவினைக் கேட்டதும் முத்துநகைதான் களிப்புக் கடலிலே மூழ்கித் திளைத்திட்டாளேயன்றிக் காரிக்கண்ணனார் கருத்து எதனையும் கூறிடவில்லை; ஆழ்ந்த சிந்தனையுடனேயே அவர் அமர்ந்திருந்தார்.

அந்தப் பொறுப்பும் புகழும் மிக்க பதவிக்குப் பொருத்தமான ஆள் இளம்பெருவழுதியா, நெடுமாறனா என்று இருவரைப் பற்றி மட்டுமே பொதுமக்கள் தத்தம் ஊகங்களை உலவவிடச் செய்து கொண்டிருக்கும் வேளையில் இளம்பெருவழுதி ஏற்புடையவன்' என்று தாமும் சோழப் பேரரசருமே திண்ணமாக எண்ணிக் கொண்டிருக்கிற நிலையில் செழியனின் பெயர் சற்றுத் திகைப்பினையே அளித்திட்டது புலவருக்கு.

பெருவழுதியின் முடிவு பாண்டிய நாட்டு மக்களிடையே எத்தகைய வரவேற்பிற்கு இலக்காகிடுமோ என்பது ஒரு புறம் இருக்கக் கரிகாலன் உள்ளத்திற்கு அது கசப்பினைக் கொடுத்திட்டால் என்ன செய்வது என்னும் கலக்கமும் உண்டாகாமல் இல்லை அவருக்கு.

ஆனால், புலவரின் நெஞ்சக் கடலினடியில் ஓடிடும் நினைவோட்டத்தினை அப்படியே ஊடுருவிப் படம் பிடித்து விட்டவரைப்போல், "என்ன புலவர் அவர்களே! தாங்கள் கருத்து ஏதும் பகர்ந்திடாமல் அமைதியாக இருக்கிறீர்களே! கரிகாலன் வருத்தமுறுவாரோ என்கிற வாட்டமா?” என்று முறுவலித்தவாறே கேட்டான் பாண்டிய வேந்தன்.

"ஆம், மன்னவா. அவர் விழைந்ததும் - என்னிடம் மொழிந்ததும் இளவரசன் இளம்பெருவழுதியைப் பற்றித்தான். இப்போது செழியன் செல்லப் போவது குறித்துக் கேள்வியுற்றால் அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று தான்"

"கவலைப்படாதீர்கள், புலவர் அவர்களே! செழியனைப் பற்றிய சிந்தனையே இல்லாத நிலையில், இளம்பெருவழுதி ஏற்றவன் என்று அவர் எண்ணியிருத்தல் கூடும். ஆனால், இப்போது செழியனைப்பற்றிக் கேள்வியுற்றதும், அவர் கண்டிப்பாகத் தம் கருத்தினை மாற்றிக் கொண்டு விடுவார். அதுமட்டும் அன்று; அவன்தான் பொருத்தமான தூதுவன் என்று அவர் வாயாலேயே புகன்றிடவும் போகிறார் பாருங்களேன்!"

"தங்கள் கூற்றினை நான் மறுத்திடுவதாக நினைக்க வேண்டாம், அரசே! ஆனால் இளவரசரைத் தூதுவராக அனுப்பி வைப்பதில் தங்களுக்கு ஏன் தயக்கம் என்பதை நான் அறிந்திடலாமா?"

"அவன் இளவரசனாக இருப்பதுதான்!" என்று சிரித்திட்டான் பெருவழுதி.

"தாங்கள் விளம்புவது எனக்கு விளங்கிடவில்லையே!" என்று தம் திகைப்பினை வெளிப்படுத்தினார் காரிக்கண்ணனார்.

"வேறொன்றும் இல்லை, புலவர் அவர்களே! இளம்பெருவழுதி சாதாரண நிலையில் உள்ளவன் அல்லன். நம்முடைய பாண்டிய மண்டலப் பேராளுகையின் கீழ் உள்ள கொற்கைப்பட்டினத்தை ஆண்டு கொண்டிருப்பவன். அவனை இப்போது அங்கிருந்து கிளப்பி ரோமாபுரிக்கு அனுப்பி வைத்திட்டால், பிறகு, யாரை அங்கே இளவரசனாக அமர்த்துவது? வழிவழியாக வந்துள்ள மரபினை ஒட்டிக் கொற்கைப்பட்டினத்தின் தனி நிருவாகத்தினை யாரிடம் ஒப்படைப்பது என்பதே பெருஞ் சிக்கலாக உருவெடுத்து விடாதா?"

"ஏன், வேறு மாற்றுவழி மூலம் தீர்வு கண்டிட முடியாதா?"

"எப்படி முடியும் புலவர் அவர்களே!"

"கொற்கைப் பட்டினத்தைத் தங்களுடைய நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்துவிட்டால் என்ன?"

"தாங்கள் மொழிவதும் ஒரு வகையில் சரிதான். ஆனால் நான் அவ்வாறு விழைந்திடவில்லை. ஏன் தெரியுமா? நம்முடைய பாண்டிய மண்டலம் இருக்கிறதே, இது ஒரு பரந்த நாடு; பல்வேறு வகைப்பட்ட மக்கள் உறைந்திடும் நாடு. இங்கே ஆட்சிப் பொறுப்பு - அதிகாரக் குவிப்பும் ஒரே இடத்தினில் திரண்டிருப்பது நல்லது அல்ல; ஏனெனில் நம்முடைய ஆளுகையின் சீரிய பலன்கள் நேரிய திட்டங்கள், ஏழை நடுத்தர மக்களை எளிதாக -விரைவாக -எட்டிடமாட்டா, அதன் பொருட்டு. இந்த மாபெரும் பாண்டிய மண்டலத்தையே ஐந்தாறு மாநிலங்களாகப் பகுத்து, அவற்றின் முன்னேற்றத்திற்கு எத்தகைய முட்டுக்கட்டையும் ஏற்படாத வண்ணம் சுயாட்சியினையே வழங்கி, அதே சமயம் அவை அனைத்தும் ஒரே பேராளுகையின் கீழ் இயங்கிடும் கூட்டாட்சி முறையினைத் தோற்றுவித்திடலாமா என்று அண்மைக் காலமாக நான் சிந்தித்து வருகிறேன்.

ஆகவே தன்னாட்சித் திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்திடும் கொற்கையின் தற்போதைய ஆட்சி அமைப்பினைக் குலைத்திட வேண்டாம் என்றே கருதுகிறேன்."

"தாங்கள் விரிவாக உரைத்த பின்னரே எனக்கும் தெளிவாக விளங்குகிறது அரசே! சுயாட்சி என்பது மாட்சி மிக்க அரிய திட்டம்தான். ஒரு பரந்த கொல்லையிலே சிறுசிறு பாத்திகளைக் கட்டிப் பயிர்களைச் செடிகளை விளைவித்தல் போல ஒரு பெரிய நாட்டினைச் சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்குத் தன்னாட்சியினை வழங்கிடுதல் வரவேற்கத்தக்க முயற்சியே! அதுவும் கொற்கை போன்ற புகழ் மிக்க துறைமுகப் பட்டினங்கள்-நகர்கள்- முதலானவை நம் இளவரசர் போன்ற திறமைசாலிகளின் தனி நிருவாகத்தினில் இருந்திட்டால்தான் வெளிநாட்டினர் பலர் இங்கே வந்திடவும், நமது மண்ணின் வளத்தைக் கண்டு வியந்திடவும். வாணிகத் தொடர்புகள் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்புகள் ஏற்படும்."

"இப்போதாவது புரிகிறதா புலவர் அவர்களே, நான் இளம்பெரு வழுதியை ரோமாபுரிக்கு அனுப்ப விரும்பிடாததற்கான காரணம்? மேலும் செழியன் இருக்கிறானே, அவன் ஒரு திறமைச் சுரங்கம் சிந்தனைச் சுடர்! அதனால்தான் அந்தப் பொறுப்பான பதவிக்கு ஆள் அவனே என்று திடமாகத் தோன்றியது; அவனையே தேர்ந்தெடுத்தேன்."

"தங்களுடைய முடிவு முற்றிலும் சரியானதே என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மன்னவா! தக்கவாறு எடுத்துரைத்தால் கரிகாலரும் ஒப்புக்கொள்ளாமல் போக மாட்டார்"

- காரிக்கண்ணனார் இவ்வாறு இயம்பிடவும் அதுகாறும் அவர்கள் இருவருடைய உரையாடலையும் பொறுமையோடு கவனித்துக் கொண்டிருந்த முத்துநகை மீண்டும் தன் குரலை எழுப்பினாள்:

“நீங்கள் என்னப்பா, செழியன்தான் ரோமாபுரிக்குப் போகிறார் என்று அறிந்தவுடனேயே, சோழப் பேரரசர் இரட்டிப்பு மகிழ்ச்சியினை எய்திடமாட்டாரா? செழியன் அண்ணாவின் அறிவிலும் ஆற்றலிலும் அவருக்கு எத்துணை நம்பிக்கை - நன்மதிப்பு உண்டு என்பதனை நானல்லவா அறிந்திடுவேன்!" என்றெல்லாம் அவள் புகலப் புகல, அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் தமக்கே சூட்டப்பெற்ற மகுடமாக எண்ணிய பூரிப்பில் மிதந்திட்டார் பெருவழுதிப் பாண்டியர்.

அறங்கூறு அவையத்திலிருந்து புறப்பட்ட இளம்பெருவழுதி புரவி மீதேறி நேரே பசுமலைக்குத்தான் சென்றான். அங்கேயுள்ள சமணக் கோவிலையும் அதனை ஒட்டிய 'அஞ்சினான் புகலிடத்'தையும் நோட்டம் விட்டான். எப்படியாவது கனகநந்தி முனிவரால் காப்பாற்றப்பட்ட காரிகை தாமரையாகவே இருந்திடமாட்டாளா? அவளும் அங்கேயே ஒளிந்திருக்கமாட்டாளா? என்கிற ஏக்கம் அவனுக்கு. சில பௌத்தர்கள், சமணர்கள், வைதீகச் சமயத்தினர் எல்லாரிடமும்கூட மெல்ல உசாவிப் பார்த்தான். பகலிலே சரியாகத் துப்புத்துலக்கிட இயலாதென்று இரவிலே மாறுவேடம் பூண்டும் தன் புலனாய்வு வேலையினில் முனைந்து ஈடுபட்டான். எனினும் தாமரையைப் பற்றி எந்தவிதத் தடயமும் அவனுக்குக் கிட்டவில்லை.

கடந்த சில நாட்களாகத் தன்னுடைய காதற் கிள்ளையை எவ்வாறேனும் கண்டிடமாட்டோமா என்கிற மாளாத வேட்கை வெறியினால் அவன் பட்டிருக்கும் பாடுகள் எண்ணிலும் அடங்கா; ஏட்டிலும் அடங்கமாட்டா. கரிகாலனிடமும் காரிக்கண்ணனாரிடமும் அந்தப் பாழ் மண்டபத்தில் விடைபெற்றுக் கொண்டு தாமரையை அழைத்து வருவதற்காகப் பூம்புகார் அரண்மனையை அடைந்தவனை அதிர்ச்சி தரும் செய்தியொன்றே வரவேற்றது. பரபரப்புடன் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த காவலர்களில் ஒருவன்தான் தாமரை தப்பிவிட்ட அந்தச் செய்தியினைக் கூறி அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்கியவன். அதன் பின்னர் சில தவறான தகவல்களை நம்பி, அவளைத் தேடிடும் முயற்சியில் தன் புரவியினைத் தட்டிவிட்ட அவன், அலைந்திட்ட அலைச்சல் - கிடந்திட்ட பட்டினி - அடைந்திட்டமயக்கம் - தவித்திட்ட தவிப்பு - ஏராளம், ஏராளம்! அதனாலேயே அவன் குறித்த நேரத்தில் கொற்கைப் பட்டினத்திற்குத் திரும்பிவர முடியாமலும், பிணியுற்ற தன் தந்தையைக் கண்டிட உடனே மதுரை மாநகர்க்கு வந்திட முடியாமலும், தான் கெட்ட பெயரினைச் சுமந்திட வேண்டிய நிலைமையும் அவனுக்கு நேர்ந்திட்டது.

இந்த 'தேடு படலம்' இன்னும் நீடிக்கிறதே என்று நினைத்திட்ட அளவில் அவனது நெஞ்சிலே வலி எடுத்திடாமல் இல்லை. கனகநந்தி முனிவராவது தனக்குக் கை கொடுத்திட மாட்டாரா என்னும் அவனது கனவும் பலித்திடவில்லை. தான் அடைக்கலம் அளித்திட்ட அணங்கின் பெயர் என்ன என்பதையாவது அந்த மனிதர் அறிந்து வைத்திருக்கக் கூடாதா?

மதுரை வந்திட்ட பின்னரும் தாமரைக்காக அலைந்திட்ட அலைச்ச லில் உடல்கூடச் சற்று இளைத்துவிட்டது இளம்பெருவழுதிக்கு; மனச்சோர்வுக்கோ எல்லையே இல்லை.

இந்நிலையில் -

ஒருநாள், உழைத்துக் களைத்துவிட்ட கதிரவன் ஓய்வெடுக்கச் சென்று கொண்டிருக்கும் மாலை வேளை.

வைகையாற்றங்கரையை அடுத்திட்ட வளங்கொழித்திடும் சோலை யொன்றில், தன்னந்தனியாக உலவிட வந்த இளம்பெருவழுதி ஒரு மருத மரத்தின் வேரினில் தலையைச் சாய்த்த வண்ணம் படுத்திருந்தான். அவனுடைய வலக்கரத்தில் எழுத்தாணியும், இடக்கரத்தில் பன்னீர்ப்பூவின் நிறத்தில் சற்றே மஞ்சள் பூசப்பெற்ற பனை ஓலைகளும் இருந்தன.

அவனுடைய எண்ணங்களோ கற்பனை வானிலே சிறகடித்துப் பறந்து திரிந்து - தாமரையின் எழில் வழியும் தளிருடல் மீதே மொய்த்து, முக்குளித்துப் பழக்குலைப் பாக்களாகப் புதுவடிவம் பெற்றுக் கொண்டிருந்தன.

அந்த இனிமையான வேளையில் யாரோ ஒருவருடைய கனைப்பு இளம்பெருவழுதியின் சிந்தனையைக் கலைத்திட்டது. அவன் எழுதுவதை நிறுத்தி நிமிர்ந்து உட்கார்ந்து எதிரே நோக்கினான். அப்போது சோலையினுள் வந்து நுழைந்தவன் வேறு யாரும் அல்லன்; தளபதி நெடுமாறனே.

"என்ன இளவரசர் அவர்களே! பாக்கள் புனைவதற்கு அருமையான இடமாகத்தான் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய வருகை, கடிதாகப் பறந்து சென்றிடும் தங்கள் கற்பனைப் புரவிக்குக் கடிவாளம் போட்டு நிறுத்திவிட்டதா?" என்று வேடிக்கையாக கேட்டுக் கொண்டே வந்தான் அவன்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் எங்கே இங்கே இவ்வளவு தூரம் - அதுவும் தன்னந்தனியாக?”

"எல்லாம் தங்களைச் சந்தித்திட வேண்டித்தான். இன்று காலை யிலிருந்து மதுரை மாநகர் முழுவதையுமே அலசிவிட்டேன் ஆட்களைவிட்டு. தங்களைக் கண்டுபிடித்திட முடியவில்லை"

“ஏன் அவ்வாறு தேடினீர்கள்? ஏதேனும் முக்கியமான செய்தியா?"

"முக்கியமான செய்தி மட்டும் இல்லை; தலையே போகிற சிக்கல்! பாண்டிய மண்டலத்தின் பெருமைக்கே அறைகூவல் விடுத்திடும் பெருஞ்சிக்கல்! என்றவாறே இளம்பெருவழுதிக்கு எதிரே, உழைப்பாளி யின் நரம்பினைப்போல் புடைத்து நீண்டு கிடந்த மரத்தின் இன்னொரு வேரின்மீது அமர்ந்திட்டான் நெடுமாறன்.

"அப்படியென்ன அவிழ்த்திடவே முடியாத பெருஞ்சிக்கல் தளபதி யாரே? அதுவும் திடீரென்று..."

“இது திடீரென்று முளைத்திட்ட சிக்கல் இல்லை; சில நாட்களாகவே நாடு முழுவதும் கனன்று கொண்டிருந்த சிக்கல்தான். இன்று வெடித்து விட்டது."

"தாங்கள் எதைப் பற்றிக் கூறுகிறீர்கள் தளபதியாரே?"

"ரோமாபுரி நாட்டுக்குத் தூதுவர் ஒருவர் சென்றிட வேண்டியுள்ளதே, அதைப் பற்றித்தான்."

"ஆமாம், அதிலே என்ன சிக்கல் இருக்கிறது? யாராவது ஒருவரை அனுப்பி வைத்திட வேண்டியது தானே?"

"என்ன இவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்கள், இளவரசர் அவர்களே! இன்று இந்தப் பாண்டிய மண்டலம் முழுவதுமே என்ன எதிர்பார்க்கிறது; என்ன பேசிக் கொண்டிருக்கிறது தெரியுமா?"

"என்ன பேசிக் கொண்டிருக்கிறது?"

"ரோமாபுரி நாட்டுக்குத் தூதுவராகச் சென்றிடக் கூடிய தகுதியும் திறமையும் படைத்த ஒரே தலைவர் தாங்களே என்றுதான் நாட்டு மக்கள் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்."

"அப்படியா? நான் அதைப்பற்றிச் சிந்தித்திடவே இல்லையே!"

"தாங்கள் வேண்டுமானால் பதவி ஆசை இல்லாதவராக - தாமரை இலைத்தண்ணீராக - ஒதுங்கி இருந்திட முற்படலாம். ஆனால் நல்லவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அவ்வாறெல்லாம் கண்ணைப் பொத்திக்கொண்டு வாளா இருந்திட முடியுமா? அதனால்தான் தங்களைத் தூதுவராக அனுப்பி வைத்திட வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றார்கள்: நானும் விரும்புகின்றேன். எனினும் நமது மன்னர் அவர்களோ வேறுவிதமாக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதைக்கேட்டு நாடே கொந்தளிப்பில் ஆழ்ந்திடுமோ என அஞ்சுகிறேன்"

"மன்னர், யாரை அனுப்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்?"

"மிகமிகச் சாதாரணக் குடியில் பிறந்து - மெய்க்காவல் மறவனாக அலுவல் பார்க்கிறானே செழியன்; அவனைப் போய்த் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்."

"செழியன்தானா? அப்படியானால் அது மிகச்சிறந்த தேர்வு ஆயிற்றே!"

"என்ன இளவரசே இப்படிக் கூறிவிட்டீர்கள்? செழியன் யாரென்று தங்களுக்குத் தெரியுமா?"

"ஓ! நன்றாகத் தெரியுமே? அவனுக்கு ஈடாக நான் என்ன, நம்மவர்களில் யாருமே இல்லை என்று நான் துணிந்து கூறிடுவேன். அவன், சுறுசுறுப்பு மிகுந்தவன்; தூங்காமல் உழைப்பவன்; நம்பிக்கைக்கு உரியவன்; நாணயம் நிறைந்தவன்; கருணையுள்ளம் கொண்டவன்; கடமையாற்றுவதில் வல்லவன்; அரசுக்கு உண்மையோடு தொண்டாற்றிடும் பொழுதே ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைக் காணத்துடிப்பவன்; அவன் அடக்கமானவன்; வயதில் இளையவன் என்பதனால் எதையுமே அறிந்திடாதவன் என்று இளக்காரமாக எண்ணிடாதீர்கள்! அவனுடைய ஆற்றலைப் பற்றித்தான் நாட்டுமக்கள் நன்றாக அறிவார்களே! கரிகால் சோழரை காப்பாற்றிய பெருமையும் அவனுக்கு உண்டாயிற்றே! எல்லாவற்றுக்கும் மணிமகுடம் சூட்டினாற் போல் அண்மையில் அறங்கூறு அவையத்திலே அவன் நடு நிலைமையோடு அளித்திட்ட சாட்சியத்தைக் கேட்டு நாடே வியந்ததே! இந்நிலையில், அவன் நம் தூதுவனாகச் செல்வதற்கு நம்முடைய மக்கள் எதிர்ப்பினையாவது எழுப்பிடவாவது? என்னால் நம்ப முடியவில்லை தளபதியாரே."

"தாங்கள் மொழிவதைக் கேட்டு என்ன புகல்வதென்றே எனக்குப் புரியவில்லை. செழியன் அறிஞனாக ஆற்றல்மிக்க மறவனாக இருந்திடலாம். ஆனால் அவனுடைய குடிப்பிறப்பு என்ன? பிற்பட்ட குடியினில் பிறந்தோரையெல்லாம் நாம் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்திடலாமா? பிறகு அந்தப் பதவிகளுக்குரிய பெருமை தான் என்ன என்று பெரியவர்கள் சிலர் கேட்கின்றார்கள். அவர்களுக்கு நாம் என்ன மறுமொழி தருவது?

"தாங்கள் சொல்வதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது தளபதியாரே: குடிப்பிறப்புப் பற்றிப் பெருமிதம் பேசிடும் கொடிய பிணி நமது மண்ணையும் தொற்றிக் கொண்டு விட்டதா? மேட்டுக் குடியிலே பிறந்தவர்கள்தான் மேலான பதவிகளைத் தாங்கிடவேண்டும் என்பது என்ன நேர்மை? என்ன நீதி? என்ன அறம்? அதுவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றவர்களே. அதே கடவுளின் குழந்தைகளிடம் உயர்வு தாழ்வு கற்பித்துச் சாதிச் சழக்குகளை ஊடுருவவிட்டு, உயர்ந்த குடியினில் பிறந்தவர்களே மேலும் உச்சிக்குச் சென்றிட வழிவகுக்கலாமா? சதி புரியலாமா? பிற்பட்ட குடியில் பிறந்த ஒருவன் எத்துணைத் திறமைசாலியாக இருப்பினும் பெரிய மனிதன் ஆவதா என்ற வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? இது அவர்கள் வழிபடுகின்ற தெய்வத்திற்கே அடுக்குமா? அவர் களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால், அந்த மனச்சாட்சிக்கே அது ஒருப்படுமா? குடிப்பெருமையில்லை என்கிற காரணத்திற்காக ஒருவனுடைய அறிவை - திறமையை இழிவாக எண்ணுவதைப் போன்ற கேவலமான குணம் - நச்சுப் பண்பாடு வேறு எதுவுமே இல்லை. அந்தப் போக்கினை நான் அறவே வெறுக்கிறேன். மேட்டுக்குடிப் போக்கினை நான் அறவே வெறுக்கிறேன். மேட்டுக் குடியினில் பிறந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் அந்த அகங்காரர்களின் வாயினை அடைப்பதற்காகவேனும் செழியனைத்தான் நாம் தூதுவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திட வேண்டும்; மன்னர் அவனைத் தேர்ந்தெடுத்தது முழுக்க முழக்கச் சரியானதே!" என்று அழுத்தமாக மொழிந்திட்டான் இளம்பெருவழுதி.

தன்னைத் தூதுவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திடவில்லையே என்கிற ஆத்திரம் நெடுமாறனுக்கு. எனவே, தனயனின் கரத்தினைக் கொண்டே தந்தையின் கண்ணைக் குத்துவதற்குச் சதி புரிய முயன்றிட்டான் அவன். ஆனால் அவனுடைய சூழ்ச்சி பரந்த உள்ளம் படைத்திட்ட பாவலனும், தனிப்பெரும் பண்பு உடைய நாவலனும், இனக்காவலனுமான இளம்பெருவழுதியிடம் பலித்திடவில்லை.

ஒரு கிழமை உருண்டோடிற்று.

பெருவழுதிப்பாண்டியன், காரிக்கண்ணனார் உட்படப் பெரியோர்கள். பேரறிஞர்களின் வாழ்த்து மலர்களை மலை மலையாகச் சுமந்த வண்ணம், பொறுப்புமிக்க அந்தப் பதவியினை ஏற்றிட, ரோமாபுரி நோக்கி புறப்பட்டுச் சென்றிட்டான் செழியன்.

தென்பாண்டிக் கடற்கரையே அன்று திருவிழாக் கோலம் பூண்டு அவனைக் கோலாகலமாக வழியனுப்பி வைத்தது.