உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/38. மரக்கலம் விரைந்தது

விக்கிமூலம் இலிருந்து

38

மரக்கலம் விரைந்தது

செழியனின் விழிகள் இரண்டும் செக்கர் வானம் போல் சிவந்து

பளபளத்தன. கண்ணீர் சுனைகளாகிக் கடகடவென்று நீரையும் பொழிந்து தள்ளின. ஏழ்மை ஒன்றினையே தோழமையாகக் கொண்டிட்ட தனக்கு - குடிப்பெருமை பேசிக் கும்மாளங்கொட்ட முடிந்திடாத தனக்கு இத்துணை கோலாகலமாக ஒரு வழியனுப்பு விழா நிகழ்ந்திடக் கூடுமென்று அவன் நினைத்ததே இல்லை. அதுவும், பெருவழுதிப் பாண்டியன் பிணியோடு போராடி அப்பொழுதுதான் தேறி எழுந்திட்டான். தன்பொருட்டே மதுரை மாநகரினின்றும் கொற்கை வரை வந்து வாழ்த்து மலர்களை வாரிச் சொரிந்திடுவான் என்று அவன் கனவிலும் கருதிடவில்லை. அளவிடற்கரிய பாசப்புனல், செழியனின் உள்ளத்தைப் புல்லரிக்க வைத்திட்டது. உடம்பையும் குன்றிடச் செய்திட்டது. அந்த நன்றியுணர்வின் வெளிப்பாடே கண்ணீர் அருவியாகி அவனது கன்ன மேட்டினில் தவழ்ந்து வழிந்தோடிற்று.

தான் ஏறி நிற்கும் அந்த மாபெரும் மரக்கலம், நீலக்கடலினை உழுதுகொண்டு நெடுந்தொலைவு வந்திட்ட பின்னரும், செழியனின் பரந்த முகம் கொற்கைத் துறைமுகத்தினை நோக்கியே திரும்பி இருந்திட்டது. நினைவுகள் அனைத்துமே தமிழ் மண்ணைப் பற்றியே தழுவிக் கிடந்தன.

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர்கூடத் தான் இப்படியொரு நெடும் பயணத்தில் ஈடுபடக் கூடுமென்றோ, தனக்காக ஒரு பொறுப்பு மிக்க பெரும்பதவி காத்திருக்குமென்றோ செழியன் எண்ணிடவே இல்லை. அறங்கூறு அவையத்திலே அவன் சாட்சியம் அளித்திட்ட அன்று மாலை தான் யாரும் அருகினில் இல்லாத வேளையாகப் பார்த்துப் பாண்டிய வேந்தன் தம் முடிவினை அவனிடம் பகர்ந்தார். முதலில் அவனால் அதனை நம்பிடக்கூட முடியவில்லை. தம்முடைய மகன் இளம்பெருவழுதிக்குக் குறுக்கே தளபதி நெடுமாறன் தடைச்சுவர்களை எழுப்புகின்றானே என்னும் ஆத்திரத்தில் அல்லது மன அலுக்கையில் தான் தன்னை அந்தத் தூதுவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாக மன்னன் வேடிக்கைக்காக மொழிகின்றானோ என்று கூட அவன் எண்ணினான். ஆனால், கொற்கையைவிட்டு இளம்பெருவழுதியை ஏன் வெளியே அனுப்பிட இயலாது என்பதனையும், ரோமாபுரியிலே மேற்கொண்டிட வேண்டிய பணிகளைப் பற்றியும் அவன் விளக்கிய பிறகே, உண்மையாகத்தான் அரசர் உரைக்கின்றார் என்று உணர்ந்து தெளிந்திட்டான் செழியன்.

பதவி என்றதுமே பல்லக்கிலே பவனி வந்திடலாம்; பஞ்சணையிலே படுத்துப் புரண்டிடலாம்; இட்ட பணியினைச் செய்திட ஏவியதை முடித்திட எடுபிடிகள் ஏராளமிருப்பர்; எனவே இன்பக் குளத்திலே தன் இச்சைப்படி யெல்லாம் நீச்சலடித்திடலாம் என் றெல்லாம் சிலர் கற்பனைச் சரங்களை அற்புதமாகத் தொடுத்திடக்கூடும்!

ஆனால் செழியனைப் பொறுத்தவரை, பதவி என்பது களியாட்ட அரங்கமல்ல; கனி இதழ் அமுதும் அல்ல; கடமையைப் புரிந்திட, நுடமுற்று நலிவார்க்கு ஊன்று கோலாய் உதவிட, கருணையைப் பொழிந்திட, தடங்காணாது அலைவார்க்குத் தக்க வழித்துணையாகிட, அது ஓர் அருமையான வாய்ப்பு; வழி-கருவி-ஏற்பாடு அவ்வளவே!

எனினும் இன்னோர் எண்ணம் முகிழ்த்து அவனது இதயக் கருத்தினையே வாட்டி வதைத்திட்டது.

அந்த எண்ணம் வேறு எதனைப் பற்றியதும் அல்ல; தாமரையைப் பற்றியதே!

இருங்கோவேளின் தங்கையாகப் பிறந்திட்ட போதிலும் அவள் இரும்பு நெஞ்சம் கொண்டவள் அல்லள்; தன்பால் கரும்பு மனம் பூண்டவளே என்பதனை அவளோடு குறுகிய காலமே பழகிட நேர்ந்திட்ட போதிலும், உறுதியாக அவன் உணர்ந்திருந்தான். புகார் அரண்மனையினின்றும் அவள் காணாமற்போய் விட்டாள் என்றதுமே அவளை உடனே தேடிக் கண்டுபிடித்திடவேண்டும் என்று செழியனுடைய உள்ளம் துடியாய்த் துடித்திட்டது. ஆனால், அந்தச் சமயம் பெருவழுதிப்பாண்டியன் உடல்நலம் குன்றிவிட்டதாக வந்த செய்தியும் அதனையொட்டிக் கரிகாலன் விடுத்த கட்டளையும் அவனை அங்கே இங்கே அசைந்திடவிடாமல் மதுரைக்கே கொண்டு வந்து தள்ளின.

பாண்டியத் தலைநகரில் நுழைந்ததுமே பசுமலைப் பூசல் அவனைத் தன்பால் ஈர்த்து முழுவேலை வாங்கி விட்டது. அறங்கூறு அவையத்திலே சாட்சியம் கூறியதும் பின்னர் அதன் தொடர்பாகப் புலனாய்ந்திட வேண்டிய கண்டிப்பான கடமையும் தாமரையைப் பொறுத்து எந்த முயற்சியினையும் அவன் மேற்கொண்டிட இயலாதவாறு அவனது கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டன.

இப்போதோ ரோமாபுரிக்கே தூதுவனாகச் சென்றிட வேண்டிய பெரும் பொறுப்பு!

இந்நிலையில் அவன் இனிமேல் தாமரையை எங்கே போய்த்தேடுவது? எங்ஙனம் அவளைச் சந்திப்பது? எப்போதுதான் அவள் இன்முகத் தினைக் கண்டு களிப்பது? தன் இதய மூட்டையில் சிறையிருக்கும் காதல் மணிகளைத் தான் இனி எந்தக் காலத்தில் அவிழ்த்து விடுவது?

'உன்னை ரோமாபுரிக்குத் தூதுவனாக அனுப்பி வைத்திட எண்ணி யுள்ளேன்,' என்று பாண்டிய மன்னன் பகர்ந்திட்ட அந்த நாள் முதல், நாவாயில் ஏறி ரோமாபுரிக்குப் பயணந் தொடங்கிடும் இந்த நாள்வரை மற்ற எல்லாவற்றையும்விடச் செழியனின் சிந்தனையை இறுக்கிப் பிசைந்திட்டது தாமரையை இனி, எப்போது, எங்ஙனம் சந்தித்திடப் போகிறோம் என்கிற ஏக்கமே !

அந்த ஏக்கத்தின் உறுத்தல் புலவர் காரிக்கண்ணனாரிடம் தாமரை யைப் பற்றி விவாதித்திடும் அளவுக்கும் செழியனைக் கொண்டுபோய் நிறுத்திற்று.

"தங்களுடைய அறிவுரைப்படியே தளபதி நெடுமாறர் கூறுவது போன்ற அவதூறு மொழிகளைக் கூடத் தள்ளிவிட்டே நான் ரோமாபுரி செல்வதற்கு ஆயத்தமாகி விட்டேன். ஆனால் இன்னொரு நினைப்புத் தான் செவியினில் நுழைந்திட்ட சிற்றெறும்பு போல என் நெஞ்சினையே துளைக்கின்றது; நோயினைக் கொடுக்கின்றது" என்று இறங்கிய குரலில் இயம்பினான் செழியன்.

"எதைப் பற்றிய நினைப்பு, செழியா?" என்று பரிவுடன் வினவினார் காரிக்கண்ணனார்.

"தாமரையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அவள் காணாமற் போய்விட்ட புதிரை விடுவிக்காமல் போகின்றோமே என்பதுதான் என்னை மிகவும் வாட்டுகிறது."

"அந்தக் கவலை உனக்கு ஏன் செழியா? கரிகாற் சோழரும், பெருவழுதிப் பாண்டியரும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? அவர் களைவிட இளவரசர் இளம்பெருவழுதி அவளைக் கண்டு பிடித்திடாமல் விடவே மாட்டாரே!"

"அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"நீ வினவுவது வேடிக்கையாக இருக்கிறதே? காணாமற்போன காதலியைக் கண்டுபிடித்திடும் துடிப்பும் அக்கறையும் காதலனுக்குத் தானே மிகுதியாக இருந்திட முடியும்?"

"தாங்கள் உரைப்பது உண்மைதானா புலவர் அவர்களே" பதைபதைப்புடன் கேட்டான் செழியன்.

"இதுவும் என்ன, பாக்களில் வரக்கூடிய கற்பனைக் காட்சிகளில் ஒன்றாகத்தான் இருந்திடும் என்று எண்ணிவிட்டாயா செழியா? மெய்யாகவே இளவரசர்-தாமரையைக் காதலிக்கத்தான் காதலிக்கிறார். கொற்கையில் நிகழ்ந்திட்ட மொழிப் போரினைப் பற்றிப் புகாரிலிருந்து நாம் மதுரை வந்திடும்பொழுதே புகன்றேன் அல்லவா? அந்த அறப் போரில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நம் இளவரசர் தம் இதயத்தினைக் கொள்ளை கொடுத்துவிட்டார் அந்தக் கோதையிடம்! முத்துநகை உடன் வந்ததால் அவர்களுடைய காதலைப் பற்றிய உண்மையை வெளிப்படையாக அப்போது உனக்கு நான் உரைத்திட விரும்பவில்லை" காரிக்கண்ணனார் இவ்வாறு கூறக் கூறத் தன்னை யாரோ கழுத்தினை நெறித்திடுவதாகவே நொந்து மடிந்திட்டான் செழியன்.

கரைகடந்திடும் வெள்ளத்தின் நடுவே தெப்பம் ஒன்று தென்பட்டாற் போல, 'இளவரசரின் காதல் வெறுங்கைக் கிளையாக இருந்திட்டால்?' என்னும் எண்ணம் முகிழ்ந்திட்டது மின்னலாக; ஆனால், அடுத்த நொடியே '....உம்! என்ன இருந்தாலும் அவளும் இளவரசி. அவனும் இளவரசன்; பொருத்தமான இணை! நானோ சாதாரண மறவன்! என்னை எப்படி அவள் ஏற்றுக் கொண்டிட இயலும்? என்னுடைய காதல்தான் 'கைக்கிளையாக இற்று ஒடிந்திட வேண்டும்' என்று எண்ணி நைந்திட்டான் அவன்.

'அப்படியானால் அந்தத் தளிர்க்கொடியின் குளுகுளுப்பான கூரிய பார்வை, பன்னீர்ப்பூவின் மெல்லிய புன்னகை? காதினில் தேன் பாய்ச்சிய கனிவான மொழிகள் எல்லாமே நடிப்புத்தானா? நாடகந்தானா?' - பெருமூச்செறிவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது செழியனுக்கு?

ஆனால் தாமரை இனி தனக்குக் கிட்டிடப் போவதில்லை என்னும் ஆறாத் துயரமே அவனது உள்ளத்தில் வெறுமையைத் தோற்றுவித்து, 'சரி; இந்தத் தமிழ் மண்ணிலே தங்கியிருந்து - தாமரையை இளம்பெருவழுதி யோடு சந்திக்கவும் நேர்ந்து - உள்ளுக்குள்ளேயே புழுங்கிச் சாவதைவிட வெளிநாடு சென்றிடுவது நல்லதுதான்!' என்னும் உறுதியான முடிவினை அவன் எடுத்திடவும் தூண்டியது.

வெளியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு இவ்வாறு எத்தனையோ அவதூறுகளும் அபாண்டப் பழிகளும் அலைக்கழித்திட்ட போதிலும் - தன்னுடைய காதற் கோட்டை வெறும் கானல் நீராக, மணல் வீடாகச் சரிந்து விழுந்து தன் இதயப்பரப்பினையே சுக்கல் நூறாக இடிந்து நொறுங்கிடச் செய்திட்ட போதிலும் பெருவழுதிப் பாண்டியன் கொற்கை வரை வந்து வழியனுப்பி வைத்திட்ட காட்சி ஆறாத புண்கள் அத்தனைக்கும் அருமருந்தாகவே அமைந்து விட்டது!