ரோமாபுரிப் பாண்டியன்/39. மேல் நாட்டு மண்
39
மேல் நாட்டு மண்
சிப்பியோவின் உரத்த குரல் செழியன் உறக்கத்தைக் கலைக்கத் தவறிடவில்லை. உள்ளங்கையால் அழுத்திக் கசக்கி, இமைக் கதவுகளைத் திறந்து கொண்ட அவன், கொட்டாவி விட்டவாறே படுக்கையில் எழுந்து அமர்ந்திட்டான்.
காலைப் பகலவனின் கோல ஒளி, அந்த மரக்கல அறையினுள் வட்டவடிவமான சிறு சாளரத்தின் வழியே மெள்ள எட்டிப் பார்த்திட முனைந்தது.
உடம்பினை நெளித்துச் சோம்பலைத் துரத்திட முயன்றிட்ட செழியன், "நாம் இப்போது எங்கே வந்திருக்கிறோம்?" என்று தன் எதிரே நின்று கொண்டிருந்த சிப்பியோவை நோக்கிக் கேட்டான்.
“டைபர் நதி கடலில் கலந்திடும் இடத்துக்கு வந்து விட்டோம். தூதுவர் அவர்களே!" என்று விடையிறுத்தான் அந்த ரோமாபுரி இளைஞன்.
"இங்கிருந்து ரோமாபுரி நகருக்கு இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கும்?"
"ஏறத்தாழப் பதினைந்து கற்கள் இருக்கலாம்."
"அப்படியானால் விரைவிலேயே நம்முடைய இந்த நெடும் பயணம் முடிவு பெறப்போகிறது என்று சொல்லுங்கள்!"
"ஆம், தூதுவர் அவர்களே!"
"இத்தனை நாட்கள் கடலிலேயே பயணம் புரிந்திட்ட போதிலும், அலுப்போ, சலிப்போ அவ்வளவாக எனக்கு ஏற்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா, சிப்பியோ?"
“என்ன காரணம்?"
"நீங்கள் எனக்கு வழித்துணையாக வாய்த்திட்டது தான்!"
செழியனின் இந்தப் புகழுரையைக் கேட்டதும், வெட்கத்தால் உடல் குன்றிப் போனான் அந்த இளைஞன்.
பாண்டிய நாட்டுத் தூதுவனும், வெறும் முகத்துதிக்காக அவனைப் பாராட்டிடவில்லை. தான் தமிழகத்தை விட்டுக் கிளம்பும்பொழுது தனக்குத் துணையாகக் கொற்கைப் பட்டினத்து இளவரசரின் துணை மெய்க்காவலனாகப் பணியாற்றிடும் வடிவம்பலம் என்னும் மறவனையே தன்னோடு அழைத்து வந்திடுவதற்கு எண்ணியிருந்தான் அவன். ஆனால், தாமரையைத் தேடிடும் வேலையில் ஈடுபடுத்திட வேண்டி, அவனை அனுப்பி வைக்க இசைந்திடவில்லை இளம் பெருவழுதி, தன்னுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவனாக வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது என்று செழியன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், "நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்களைப் போலவே தமிழ் மட்டுமே அறிந்த ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்வதை விடத் தமிழ் இலத்தீன் இரண்டு மொழிகளும் அறிந்த ஒருவர் துணையாக வந்தால் நல்லதுதானே? எங்கள் நாட்டிலிருந்து வணிகத்தின் பொருட்டு அயல்நாடு களுக்கெல்லாம் சென்று அனுபவங்கள் நிறையப் பெற்ற இளைஞன் ஒருவன் என்னுடன் இங்கே வந்துள்ளான். அவன் பெயர் 'சிப்பியோ' என்பதாகும். அவனை உங்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கிறேன். நீங்கள் விரும்பினால், ரோமாபுரி சென்ற பிறகும் உங்களுடைய மொழிபெயர்ப்பாளனாக அவனைப் பயன்படுத்திக் கொண்டிடலாம்" என்றார் பாண்டிய நாட்டுக்கு வந்திருந்த ரோமாபுரியின் தூதுவர். அவருடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டே, சிப்பியோ என்னும் அந்த இளைஞன் செழியனுக்கு இதுகாறும் வழித்துணையாக வந்ததோடு, அவனுக்குத் தேவையான பற்பல வசதிகளையும் கவனித்துக் கொண்டான்.
மரக்கலம் கடந்திட்ட ஒவ்வொரு நிலப் பகுதியைப் பற்றியும் அவன் அளித்திட்ட விளக்கங்கள் - வரலாற்று உண்மைகள் - கற்பனைக் கதைகள் யாவற்றிலும் சுவை கூட்டித் தன்பால் ஈடுபாடு கொள்ளுமாறு செய்துவிட்டான் செழியனை.
செழியனிடம் அசைத்திட முடியாத ஓர் அன்புப் பிணைப்பு உண்டாயிற்று சிப்பியோவுக்கு! அதனால்தான் ரோமாபுரி மன்னர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தான் உரையாடுவதற்கு உரிய பாலமாக - மொழி பெயர்ப்பாளராக உதவிடவேண்டும் என்ற செழியனின் கோரிக்கையை அவனால் உதறித் தள்ளிட -புறக்கணித்திட முடிந்திட வில்லை.
காலைச் சிற்றுண்டியை ஒருவழியாக முடித்துக்கொண்டு செழியன், அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்திடாமல் வழக்கம் போல், அந்த மரக்கலத்தின் மேல்தளத்திற்குச் சென்றிட்டான். சிப்பியோவும் அவனைப் பின் தொடர்ந்தான்.
காலைநேரத்தில் 'சுள்' என்று வீசிடும் இளவெயிலில் அவனைத் தொற்றிக் கொண்டிருந்த குளிர் பறந்தோடிற்று. உடம்பிற்கும் உள்ளத்திற்கும் ஒரு தனியான சுறுசுறுப்பு உண்டாயிற்று.
"டைபர் நதி இத்துணை அகலமாக இருக்குமென்று நான் நினைத்திடவே இல்லை" என்றான் செழியன்.
"அகலமானது மட்டுமல்ல; தத்துவப் பேரறிஞர்களின் சிந்தனையைப் போல் இந்த நதி ஆழமானதும் கூட!" என்றான் சிப்பியோ.
"இதன் கரையிலேதான் ரோம் நகரம் அமைந்துள்ளது இல்லையா?"
"ஆம், தூதுவர் அவர்களே!"
"ஆற்றங்கரையிலே அமைந்திருக்கும் எந்த நகருமே ஒரு தனி அழகுதான்! ஆனால் பூம்புகாரைப் போலக் கடலை ஒட்டியே ரோமாபுரி இருந்திருந்தால் இன்னும் அதன் சிறப்பு மேலோங்கியிருக்கும் இல்லையா?"
"மாவீரன் ரோமுலசுக்கும் முதலில் அந்த எண்ணம் தான் ஏற்பட்டதாம். ஆனால், இங்கே கடற்கொள்ளைக்காரர்களின் கொடுமையான நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சியே உள்நாட்டில் ரோம் நகரை அவனே நிறுவினானாம். இப்போதும் அதன் எழிலுக்கு ஒன்றும் குறைவு இல்லை. அதுவும் எங்கள் அகஸ்டஸ் மன்னர் அரியணை ஏறிய பின்னர் அவருடைய அற்புதமான வீடு கட்டும் திட்டங்களால், தலைநகருக்கு ஒரு தனிப்பொலிவே உண்டாகியுள்ளது."
"ஆமாம், அகஸ்டஸ் மன்னர் ஜூலியஸ் சீசரின் நேரான வழித் தோன்றல் இல்லையாமே? அவருடைய உடன்பிறந்தவர் ஒருவரின் பேரப்பிள்ளைதானாமே! அப்படியானால் ஜூலியஸ் சீசரின் பெயரைச் சொல்லிட அவருக்கு என்று பிள்ளையே பிறந்திட வில்லையா?"
"ஏன் பிறந்திடவில்லை? எகிப்து நாட்டில் எழிலரசி கிளியோபாத்ரா பெற்றெடுத்த சீசரியோன்" என்பவர் ஜூலியஸ் சீசரின் மகன்தானே! ஒரு காலத்தில் சீசர் மன்னர் தம்முடைய தலைநகரையே அலெக்சாண்டிரியாவுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறார் என்றும், அங்கே ஆண்டிடும் கிளியோபாத்ராவை மணந்து கொண்டு தங்களுக்குப் பிறந்திட்ட சீசரியோனைத் தம்முடைய சட்டப்படியான - முறையான மகன் என்று அறிவித்திடப் போகிறார் என்று கூட வலுவான வதந்திகள் உலவினவாம். ஆனால், தம்முடைய பெருமைமிக்க 'ஹெலனி'யப் பரம்பரையில் உதித்திட்ட ஒருவரே தமக்குப் பின்னர் ரோமாபுரிப் பேரரசின் மாமன்னராக மகுடம் சூட்டிட வேண்டும் என்று விழைந்ததாலேயே, அவர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டாராம். அத்துடன் பிஞ்சுப் பருவத்திலேயே பெருஞ் சூட்டிகையோடு துறுதுறுவென்று விளங்கிய தம்முடைய ஒன்றுவிட்ட பேரப் பிள்ளையாகிய ஆக்டேவியன் பிற்காலத்திலே இணையற்ற வீரராய் இலங்கிடுவார் என்னும் எண்ணம் சீசரின் இதயத்திலே அழுத்தமாகப் பதிந்து விட்டது. அதனால் தான் தம்முடைய வழித்தோன்றலாக - தத்துப் பிள்ளையாக ஆக்டேவியனைப் பற்றி தமது உயிலிலேயே குறிப்பிட்டிருந்தாராம் அவர். அந்தக் குறிப்பு மட்டும் இல்லாமற் போயிருந்தால், கதையே வேறு விதமாக மாறியிருக்கும்."
"எப்படி?"
"தம்முடைய மனைவி கல்பூர்னியா எவ்வளவோ அச்சத்துடன் தடுத்திட்ட போதிலும், கருவி ஏதுமின்றி வெறுங்கரத்தோடு செனெட் சபையினை நோக்கிச் சென்றிட்ட ஜூலியஸ் சீசரை வஞ்சகமாய் வளைத்துக் கொண்டு கொன்றார்கள் அல்லவா? அந்தச் சதி நாடகத்தின் தலையாய் கதாநாயகர்களான கேசியசோ, புரூட்டசோ அல்லது மாவீரன் மார்க் அந்தோணியோ, லெபிட்சோ அரியணைக்கு உரிமை கொண்டாடியிருப்பார்கள். அரசர் ஆக்டேவியனே, சீசரின் உயிலைப் பற்றி அறியாமல் போயிருந்தால் தாழ்வு மனம் கொண்டு ஒதுங்கியோ சென்றிருந்தாலும்கூட வியப்படைவதற்கு இல்லை?"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஜூலியஸ் சீசருக்குப் பின்னுள்ள ரோமாபுரியின் அரசியல் வரலாற்றிலே அவருடைய உயிலுக்குப் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறதே!"
"ஆம், தூதுவர் அவர்களே, அந்த உயிலினால் அரசர் ஆக்டேவியன் மட்டும் பலன் பெறவில்லை. ரோம் நகர மக்களும் பெரும்பயன் அடைந்தார்கள்!"
"எப்படி?"
"டைபர் நதிக்கு அப்பால், தாம் அரும்பாடுபட்டு வெகு தொலைவு வரை செழிப்போடு வளர்த்து வைத்திருந்த அழகான தோட்டங்களை, ஒவ்வொரு ரோம் நகரக் குடி மகனுக்கும் தலைக்கு இவ்வளவு பரப்பளவு என்று உரிமைப்படுத்தி எழுதியிருந்தார் சீசர்!"
"வியப்பாக இருக்கிறதே! இணையற்ற மாவீரன் என்று மட்டுமே இதுவரை ஜூலியஸ் சீசரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன்; அவர் தலை சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்திருக்கிறாரே. ஆமாம்; உங்களுடைய அகஸ்டஸ் மன்னர்தானே அந்த ஆக்டேவியன்?"
"அதிலே சந்தேகம் என்ன? தூதுவர் அவர்களே, இருவரும் ஒருவரேதான்!" என்று சிரித்திட்டான் சிப்பியோ, "அதுசரி; ஆக்டேவியன் என்னும் இயற்பெயரை விட்டுவிட்டு 'அகஸ்டஸ்' என்னும் புதுப்பெயரை ஏன் வைத்துக் கொண்டார்"
"அவராக ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை; செனேட் மன்றமும், ரோமானிய மக்களும் சேர்ந்துதான் அந்தப் பட்டத்தை - புதுப் பெயரை அவருக்கு வழங்கினர். ஏன் தெரியுமா? ஜூலியஸ் சீசருக்குப் பின்னர், இந்த மாபெரும் ரோமாபுரிப் பேரரசு துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று எதிரிகள் எதிர்பார்த்தனர்; உள்நாட்டிலும் பலர் பதவி வேட்டையாடிக் கலகம் விளைக்க முற்பட்டனர். அவர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து நாட்டின் பெருமையைக் காத்திட, மக்களுக்கு நல்வழ்வு கிட்டிட, உயிரைப்பணயம் வைத்துப் போராடினார் ஆக்டேவியன். ஆனால், சிறிது காலத்திற்கு முன்னர் செனேட் மன்றத்தைக் கூட்டித் தம்முடைய அதிகாரங்களையும் தம்முடைய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களையும் உடனே துறக்கப் போவதாகவும் அவற்றை செனேட் மன்றம், பொதுமக்கள் இவர்களுடைய பொறுப்பில் விட்டுவிடுவதாகவும் திடீரென்று அறிவித்து விட்டார் அவர். அவருடைய 'பதவித் துறப்பு' எல்லாருக்குமே அதிர்ச்சி அளித்திட்டது. அவர்பால் பெருமதிப்பையும், அன்பையும் பொது மக்களிடையே அது உருவாக்கி விட்டது. செனேட் மன்றம் அவருடைய பெருந்தன்மைக்கு நன்றி செலுத்திடும் வகையில், நாட்டு நலனை முன்னிட்டு ஆட்சிப் பொறுப்புகளை அவர் ஏற்றிடத்தான் வேண்டும் என்று வற்புறுத்திற்று. ஏராளமான அதிகாரங்களை வழங்கிடவும் அது முன் வந்தது. அதுமட்டுமா? அவர் மீது அளவிடற்கரிய சிறப்புப் பட்டங்களையும் அள்ளிச் சொரிந்தது. அவருடைய வீரம், கருணை, நீதி, நேர்மை ஆகிய பண்பு நலன்களைப் பாராட்டிடும் வகையினில் தங்கத்தால் ஆன பட்டயம் செனேட் மண்டபத்தினுள்ளேயே பதிக்கப் பெற்றது. அப்போதுதான் முதற்குடிமகன் 'அகஸ்டஸ்' என்னும் மிக உயர்ந்த சிறப்புப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அது முதலாக ஆக்டேவியன் என்னும் இயற்பெயரே மறையும் அளவுக்கு 'அகஸ்டஸ்’ என்னும் சிறப்புப் பெயரே நிலைக்கலாயிற்று.
"நீங்கள் கூறியவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் ஜூலியஸ் சீசரையும் மிஞ்சி விடுவார் போல் இருக்கிறதே உங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்று தன் வியப்பினை வெளிப்படுத்தினான் செழியன்.
"நீங்கள் மொழிவது முற்றிலும் சரிதான் தூதுவர் அவர்களே! போரிலே புயவலிமையினைக் காட்டிடும் புலியாகப் பாய்வதைப் போன்று அமைதியை நிலைநாட்டுவதிலும் அழகுப் புறாவாக அவர் திகழ்கின்றார். கலைகளை வளர்த்திட வேண்டும். இலக்கியங்களைப் பெருக்கிவிட வேண்டும் என்றெல்லாம் அவர் கொண்டிருக்கும் பேரார்வம் இருக்கிறதே, அது அளவிடற்கரியது, அழகான வீடுகளை எழுப்புவதிலும், ஆட்சித் துறையினைச் செப்பனிடுவதிலும் அவர் காட்டிடும் அக்கறையும் கொஞ்ச நஞ்சமல்ல.
மொத்தத்தில் நாடு முழுவதும் வறுமை அகன்று, வளங்கள் நிறைந்து, புதுமை மணம் கமழ்ந்திடும் பொருட்டுப் புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டிய வண்ணமே உள்ளார் எங்கள் அகஸ்டஸ் மன்னர். பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தோடு தூதுவராகத் தொடர்புகளை அவர் மேற்கொள்ள முற்பட்டதே வேறு யாருக்குமே தோன்றிடாத புதுமையான ஏற்பாடல்லவா?" என்று பெருமிதத்தோடு கூறி மகிழ்ந்திட்டான் சிப்பியோ.
மரக்கலம் ரோம் நகரினை நெருங்கிற்று. செழியனை வரவேற்றிட செனேட் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமின்றிப் பொதுமக்களும் வந்திருந்தனர்.
இவ்வளவு திரளாக ரோமானியர்கள் குழுமிநின்று தனக்கு உற்சாகமான வரவேற்பினை வழங்கிடுவர் என்று செழியன் எதிர்பார்த்திடவே இல்லை.
நானிலம் போற்றிடும் நாகரிகத்தின் தொட்டிலாகத் தன் புகழ்ப் பதாகையின் பட்டொளி வீசிப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் அந்த ரோமாபுரி மண்ணில் தன்னுடைய காலடிகளை வைத்ததுமே செழியனுடைய உடலும் உள்ளமும் புளகமுற்றுச் சிலிர்த்தன.
அயல்நாடு ஒன்றிலே பல நூறு மனிதர்களின் பார்வைக்கு விருந்தாகப் பாராட்டிற்கு உரியவனாக - தன்னை உயர்த்திவிட்டு எங்கோ தொலைதூரத்திற்கு அப்பால் அமைதியாக அமர்ந்திருக்கும் பெருவழுதிப் பாண்டியனையே அப்போது தன் நெஞ்சினுள் நினைத்து நன்றியறித்லோடு வழிபாடு புரிந்து கொண்டான் செழியன்.
மரக்கலத்தைவிட்டு இறங்கித் தரையினில் அவன் அடி வைத்ததுமே அங்கே நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனுக்கு முதன் முதலில் வரவேற்பு மாலையைச் சூட்டிட வந்தது யார் தெரியுமா?
ஓர் அழகுப் பதுமை!
அவளுடைய நீல விழிகள் நெஞ்சின் அடிக்குருத்தையே வருடி விடுவதுபோல் வந்தன செழியனை நோக்கி.
"இவள் யார்?" என்று தன் அருகில் நிற்கும் சிப்பியோவைத் தணிந்த குரலில் அவன் கேட்டு முடிப்பதற்குள் - ஆரணங்கின் அழகு மாலை, செழியனின் கழுத்தில் வந்து விழுந்து விட்டது!
கரவொலிகள் விண்ணைப் பிளந்தன; இன்னிசைக் கருவிகள் பண்மாரி பொழிந்தன.
மாலையை அணிவித்த அந்த மடந்தை அத்துடன் திரும்பிடவில்லை; வாழைக் குருத்தினையொத்த தன் வாளிப்பான பூங்கரத்தினால் செழியனின் கையை இறுக்கிப் பற்றிக் குலுக்கினாள்.
"ரோமாபுரிப் பெருநாட்டின் ஆட்சித் தலைவர் அகஸ்டஸ் அவர்களின் சார்பிலே உவகைப் பெருக்குடன் உளமார வரவேற்கிறேன். தமிழ் வளர்த்திடும் பாண்டிய நாட்டின் தூதுவராக வந்திருக்கும் தங்களுக்கு எங்கள் மக்கள், செனேட், அரசாங்கம் ஆகிய எல்லாருடைய சார்பிலும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!" என்று அவள் இலத்தீனில் உரைத்திட்டவற்றை மொழிபெயர்த்திட்டான் அருகினில் நின்றிருந்த சிப்பியோ.
"தங்களுடைய சிறப்பு மிக்க வரவேற்புக்கு என் உளங்கனிந்த நன்றி! கலை, வாணிகம், பண்பாடு முதலான எல்லாத் துறைகளிலுமே தமிழகமும் ரோமாபுரியும் இணைந்து முன்னேறிட முடியும் என்கிற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மூவேந்தர்கள் உட்பட தமிழக மக்கள் அத்தனை பேருடைய நல்லெண்ணத்தையும் உரித்தாக்குகிறேன்" என்ற செழியனின் மறுமொழியையும் சிப்பியோ மொழி பெயர்த்திட்டான்.
சிறிது நேரத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட புரவிகள் பூட்டப்பெற்ற தேர் ஒன்றில் செழியன் ஏறி நின்றான்.
"நீங்களும் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதானே தேர் கடந்து சென்றிடும் ஒவ்வொரு முக்கியப்பகுதியைப் பற்றியும் அவருக்கு நீங்கள் விளக்கம் உரைத்திடலாம்!" என்று இலத்தீனில் கூறினாள் அந்த ஆரணங்கு.
அவளுடைய வார்த்தைகளுக்கு இணங்க, சிப்பியோவும் செழியனுடன் ஏறி நின்றான்.
வாழ்த்தொலிகளுக்கிடையே - வரவேற்பு முழக்கங்களுக்கிடையே அந்த அழகான தேர் அசைந்து நகர்ந்திட்டது.
"ஆமாம், அந்தப் பெண் யார் என்று முன்பேகேட்டேன்; நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே!" என்று தன் ஆவலைக் கட்டுப்படுத்திட இயலாமல் சிப்பியோவை வினவினான் செழியன்.
"மன்னரின் சார்பில் மலர் மாலை சூட்டியதிலிருந்தே அவள் எத்தகைய உயர்ந்த இடத்தினில் இருந்திட வேண்டும் என்பது தெரியவில்லையா!" என்று சிரித்தான் சிப்பியோ.
"ஒரு வேளை அகஸ்டஸின் அருமை மகளோ?"
"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்."
"அது என்ன, வைத்துக் கொள்வது?"
"சொந்த மகள் இல்லை; ஆயினும் தனக்குப் பிறந்த ஜூலியாவைவிட எத்தனையோமடங்கு மேலாக அவளை நேசிக்கின்றார் அகஸ்டஸ் மன்னர். அதனால்தான் அப்படிச் சொன்னேன்!"
"அவள் பெயர் என்ன?"
"ஜூனோ," என்ற சிப்பியோ அதற்கு மேலும் செழியனின் பொறுமையினைச் சோதித்திட விழையாதவனாக அவரைப் பற்றிய விவரங்களை விளம்பிடத் தலைப்பட்டான்.
"எகிப்திய எழிலரசி கிளியோபாத்ராவைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்பீர்களே?"
"அழகினை அழியாமல் காப்பாற்றிடக் கழுதைப்பாலிலே குளித்தாள் எனக் கதை கதையாகப் பேசப்படும் அவளைப் பற்றி யார்தான் அறிந்திட மாட்டார்கள்?"
"அந்தக் கிளியோபாத்ராவிடம் - பணிப்பெண்ணாகத் தோழிக்குத் தோழியாகத் தன் பிஞ்சுப் பருவத்தில் தொண்டு புரிந்து வந்தவளே இந்த ஜூனோ. அகஸ்டஸ் மன்னர் எகிப்தின் மீது படையெடுத்து வெற்றிக் கொடியினை நாட்டியபொழுது அந்தத் தோல்விச் சுமையினைத் தாங்கிடும் நெஞ்சுரத்தின் இழந்திட்ட நிலையில், தன் ஆசைக்கிளியும் மடிந்து விட்டாள் என்னும் தவறான செய்தியினை நம்பித் தற்கொலையைத் தழுவிக் கொண்டார் மாவீரர் அந்தோணி. அப்போது அரண்மனையில் நுழைந்துவிட்ட அகஸ்டஸ் மன்னரிடம் தங்கள் அரசியை இழிவாக நடத்திடக்கூடாது என்று இறைஞ்சி நின்றவள் இதே ஜுனோதான். தன் அரசியிடம் இவளுக்கிருந்த நன்றியுணர்வினைக் கண்டு வியப்பினில் ஆழ்ந்திட்டார் அகஸ்டஸ். ஆனால் அவருடைய கையினில் அகப்பட்டு விட்டால், அவமானம் அடைந்திட நேருமோ என்று அஞ்சிய கிளியோபாத்ரா, சீறும் நாகத்தை தன் சிவந்த இதழ்களிலே முத்தமிட வைத்துச் சாவின் மடியிலே போய் வீழ்ந்திட்டாள். தன் தலைவியின் பிணத்தைக் கட்டிக் கொண்டு ஜூனோ கதறிய கதறல், அகஸ்டசின் இதயத்தையே மெழுகென உருகிடச் செய்தது; அந்தச் சிறுமியின் மீது தணியாத பாச ஊற்றுப் பொங்கிப் பீரிடுமாறும் அது செய்துவிட்டது. எகிப்திலேயே அவளை விட்டுவிட்டுத் திரும்பிட மனம் இல்லாத அகஸ்டஸ் மன்னர், அவளைத் தம் கையோடு ரோமாபுரிக்கு அழைத்து வந்திட்டார். அன்று முதல் அவருடைய மகளுக்கு மேலான மகளாக. அவருடைய உள்ளமென்னும் அரியணையிலே செல்லப் பெண்ணாக -செல்வாக்குமிக்கவளாகக் கொலுவேறி விட்டாள் இந்த ஜூனோ! இன்று இவள்தான் அவருடைய அந்தரங்கச் செயலாளர் என்றாலும் மிகையில்லை.
"அவளைப் பார்த்தாலே அறிவு மிகுந்தவள் - ஆற்றல் நிறைந்தவுள் -என்று நாம் எண்ணிடும்படியான தோற்றத் தினையே அவள் தருகிறாள். மற்றவர்களின் இதயத்திலே இரக்க உணர்வினைச் சுரக்க வைத்திடும் சோகச் சாயலும் அவளது முகத்திலே இழையோடுகிறது...
"ஏதேது, உங்களுக்கும் அவள் மீது இரக்கம் உண்டாகி விடும்போல் இருக்கிறதே!...பிறகு, இரக்கம் உருக்கம் ஆகி, உருக்கம் மயக்கமாகி, மயக்கம் மையலாகி...!" என்று முடிக்காமலே சிரித்திட்டான் சிப்பியோ.
செழியனும் அவனது அடுக்குச் சொற்களைக் கேட்டு ஒரு வரட்டுச் சிரிப்பினை உதிர்த்திட்டான். எனினும் 'மையல்' என்னும் சொல்லைக் கேட்டதும் தாமரை என்னும் அந்தத் தையலே செழியனின் எண்ணத் திரையினில் மின்னினாள். அவளைப்பற்றிய நினைவுகள் படருமுன்னே, சிப்பியோ மீண்டும் தொடர்ந்திட்டான்.
"உங்கள் நாட்டிலே, காதலியோ மனைவியோதான் ஓர் ஆடவன் கழுத்தில் மாலை சூட்டுவாள் என்று எப்போதோ கேள்விப்பட்டதாக நினைவு. நான் கூறுவது சரிதானா?"
"சரிதான் சிப்பியோ. ஆனால் கிழவர்களின் கழுத்திலே எந்தப் பெண்ணும் சூட்டலாம்." என்று செழியன் சிரித்திட்டான்.
"ஆனால் நீங்கள் ஒன்றும் கிழவர் இல்லையே! உங்கள் கழுத்திலோ ஜூனோ மாலை சூட்டியிருக்கிறாள். என்ன ஆகப் போகிறதோ?"- குறும்பு நெளிந்திடக் கண்களைச் சிமிட்டினான் சிப்பியோ.
"எங்கள் நாட்டுப் பெண்ணொருத்தி இப்படி எனக்கு மாலை அணிவித்திருந்தால் நானும் உங்களைப் போலவே அஞ்சியிருப்பேன்.ஆனால் ஜூனோ உங்கள் நாடாயிற்றே! சின்னச் சின்னச் செயல்களுக்கெல்லாம் பெரிய பெரிய உட்பொருள்களைக் கற்பித்து உள்ளத்தைக் குழப்பிக் கொள்ளாமல், எதையுமே மேலோட்டமாகப் பெரும் போக்காகவே - மேனாட்டாராகிய நீங்கள் பார்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாதா? மேலும் எங்கள் நாட்டு வழக்கங்கள் ஜூனோவுக்கு எப்படித் தெரியும்? அத்துடன் அவளைப் போன்ற அறிவாளியான பெண்கள் திடீர்க் காதலுக்கெல்லாம் அவ்வளவு எளிதாக இரையாகிவிடுவார்களா என்ன?"
"நீங்கள் உரைப்பதும் உண்மைதான் தூதுவர் அவர்களே! ஜூனோ ஒரு நெருங்க முடியாத நெருப்புத் துண்டுதான் என்று எல்லாரும் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்"
தேர் இப்போது ஓர் அகலமான வீதியில் திரும்பிற்று.
இருமருங்கிலும் உயரமான கட்டடங்கள் புதுமெருகுடன் பளபளத்தன. அவற்றின் வகைவகையான வண்ணப்பொலிவு கண்ணைக் கவர்ந்திட்டது.
"இந்தக் கட்டடங்கள் எல்லாம் விண்ணையே தொட்டு விடும்போல் இருக்கின்றனவே!..." என்று தன் வியப்பினை வெளிப்படுத்தினான் செழியன்.
"அப்படியெல்லாம் அவை விண்ணைத் தொட்டிட முடியாது தூதுவர் அவர்களே! அவற்றின் உயரத்திற்கும் உச்சவரம்பு வைத்திருக் கிறார் எங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்றான் சிப்பியோ.
“கட்டடத்தின் உயரத்திற்குக்கூட உச்ச வரம்பா? வேடிக்கையாக இருக்கிறதே!"
"வேடிக்கை இல்லை; விளையாட்டும் இல்லை; உண்மையாகத்தான் உரைக்கிறேன். அணி அணியாக உள்ள இந்தக் குடியிருப்பு வீடுகள் அறுபது அடிக்குமேல் உயரமாக இருந்திடக்கூடாது என்று வரையறை செய்துள்ளார். அதோ தெரிகிறதே பார்த்தீர்களா? பழமையான கட்டடங்கள் கொண்ட ஒரு பகுதி?"
"ஆமாம், உயரமான தூண்கள் கொண்ட ஒரு கற்பீடம் கூடத் தெரிகிறதே! அது என்ன?"
"அதுதான் பழைய ஃபோரம் என்பது; அதாவது நகரப் பொதுமன்றம் மிகமிகத் தொன்மையான காலத்திலேயே உருவானது அது."
"அங்கே புதிய கட்டடங்களும் தென்படுகின்றனவே?"
"அவையெல்லாம் இப்போது அகஸ்டஸ் மன்னரால் புதுப்பிக்கப்பட்டவை."
"அந்தக் கட்டடங்களுக்கு நடுவே ஒரு புதிய ஆலயம் கூடத் தெரிகிறதே! அது எந்தத் தெய்வத்திற்கு உரியது?"
"ஜூலியஸ் சீசர் ஆலயம்தான் அது."
"அப்படியானால் அந்த மாவீர ரைத் தெய்வமாகவே வழிபடுகிறீர்கள் என்று சொல்லுங்கள்!"
"எங்களுடைய நன்றியுணர்வின் அறிகுறியாகத்தான் அவருக்கு இவ்வாறு ஆலயம் எழுப்பி வழிபடுகிறோமே அல்லாமல் வேறு எதனையும் எதிர்பார்த்து அல்ல; வீழ்ச்சியுற்றுக் கிடந்த ரோமாபுரியை எழுச்சி மிக்கதாக வரலாற்றிலே என்றென்றும் நிலைத்து நிற்பதாக உருவாக்கி, இந்த மாபெரும் பேரரசுக்கு மறுமலர்ச்சியினை அளித்திட்டவரே ஜூலியஸ் சீசர்தானே! பழிக்குப் பழி வாங்க நினைத்திடாத, பகைவர்க்கும் அருள் பாலித்திட்ட, பண்புத் திலகம் அவர். அந்த மாமேதைக்கு - தலைமகனுக்கு இந்த நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் தலை வணக்கம் புரிந்திட வேண்டாமா? அதற்காகவே நிலையான நினைவுச் சின்னமாக இந்த ஆலயத்தினை எழுப்பிச் சீசருக்குக் காணிக்கையாக்கினார் அகஸ்டஸ் மன்னர்" சிப்பியோ இவ்வாறு விளம்பிடும்பொழுதே செழியன் குறுக்கிட்டான்.
"அதோ தெரிகிறதே, அது என்ன வளைவு?"
"அதுவா? அதுதான் புதிதாக எழுப்பப்பட்ட அகஸ்டஸ் வளைவு!"
"அது என்ன இவ்வளவு பெரிதாக இருக்கிறதே?"
"வெறும் அழகுக்காகவோ கவர்ச்சிக்காகவோ மட்டும் எழுப்பப் பட்டது அல்லவே அந்த வளைவு! இந்த ரோமானியக் குடியரசை மாட்சிமைமிக்கதாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்ட தனி மனிதர்கள், பெருங் குடும்பங்கள், தளபதிகள், தலைமை நீதிபதிகள் - முதலான தனிச்சிறப்பு வாய்ந்தவர்களின் பெயர்களெல்லாம் அதிலே பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கால ஓட்டத்தின் கணிதமாகிய 'நாள்காட்டி'யும் அதிலே பொறிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு பெரிதாக அந்த வளைவு அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால் அந்த வளைவே ஒரு வரலாற்றுப் பட்டியல்தான்!"
சிப்பியோ கூறிடும் விளக்கங்களைக் கேட்கக் கேட்கச் செழியனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. "எத்தகைய புதுமைகளையெல்லாம் இந்த ரோமாபுரியிலே கொண்டு வந்திருக்கிறார்கள்!" என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான் அவன்.
அந்த வளைவினுக்கு அப்பால் தேர் கடந்திட்டதும், பழைய பொது மன்றக் கட்டடங்களுக்கு வடக்காக ஒரு பெருந்திடல் தென்பட்டது. அங்கே பல புதிய தளவரிசைகளும், தூண்களும், சலவைக் கற்களின் குவியல்களும் காணப்பட்டன.
"இங்கேயும் புதிதாகக் கட்டடங்கள் எழும்பிடும்போல் தெரிகிறதே!" என்றான் செழியன்.
"ஆம் தூதுவர் அவர்களே! அகஸ்டஸ் பொதுமன்றம் எழும்பிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமா? குளிக்கும் அறைகள், குழாய்க் கால்வாய்கள், அரைவட்ட வடிவமான கலையரங்கங்கள், மற்போர்க் களங்கள், நுழை வாயில்கள் அலங்கார வளைவுகள், ஆலயங்கள் என்று ரோமாபுரியையே எழில்மிக்க நகரமாக உருமாற்றுவதற்கு இடையறாது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்று பெருமிதத்துடன் சிப்பியோ பகர்ந்திடவும், செழியன் இடைமறித்தான்.
"இவற்றுக்கெல்லாம் நிறையச் செலவாகுமே! அரசாங்கக் கருவூலம் எல்லாவற்றுக்கும் இடங்கொடுக்குமா?"
"அது எப்படி முடியும்? தன்னுடைய சொந்த சொத்துக்களைக் கொண்டுதான் அகஸ்டஸே ஈடுசெய்கிறார்; போதாததற்கு, அக்ரிபா, டைபீரியஸ் போன்ற அவருடைய மிக நெருக்கமான நண்பர்களும் பொருள் கொடுத்து உதவுகிறார்கள்."
தேர் எங்கெங்கோ வளைந்து விரைந்து ஓடிக் கொண்டிருந்தது.
"ஆமாம்; நாம் இப்போது எங்கே போகிறோம்?"- திடீரென்று செழியன் இப்படிக் கேட்டதும், சிப்பியோ ஒரு கணம் திகைத்திட்டான். பிறகு தானே மறுவினா எழுப்பினான்.
"என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நாம் முதலில் அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்திட வேண்டாமா?"
"சந்திக்கத்தான் வேண்டும்; ஆனால் இந்தத் தேர் எங்கோ குன்றுப் பகுதியை நோக்கிச் செல்கிறதே?"
"அஞ்சாதீர்கள், அகஸ்டஸ் பெருமகனார் குடியிருக்கும் பாலதீன் குன்றுக்குத்தான் இந்தத் தேர் செல்கிறது. அப்புறம் இன்னொன்றையும் உங்களுக்கு நினைவுபடுத்திட வேண்டுமே!"
"எதைப்பற்றி சிப்பியோ?”
"அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்திடும்பொழுது, நம் அரசரை 'மன்னர்' அல்லது 'பேரரசர்' என்று அழைத்தது போல, அந்தச் சொற்களைக் கொண்டு இவரை விளித்திட வேண்டாம்."
“ஏன்?"
'தம்மை 'மன்னர்' என்று மற்றவர்கள் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மக்களாட்சியின் மாண்பு ஓங்கிடும் பொருட்டு ரோமானியக் குடியரசின் 'முதற்குடிமகன்' என்று தாம் அழைக்கப் படுவதையே அவர் பெரிதும் விழைகின்றார். ஆகவே, நீங்களும் அவரை 'பிரின்செப்ஸ்' என்றோ அல்லது உங்களது மொழியில் நயமான முறையில் பெருமகனார்' என்றோ குறிப்பிட்டாலே போதும்."
"நல்லது சிப்பியோ! அப்படியே நான் மறந்துபோய் ஏதாவது சொல்லிவிட்டாலும் நீங்கள் மொழிபெயர்க்கும் போது சரிசெய்து விடுங்கள்!" என்று கேட்டுக் கொண்டான் செழியன்.
சிறிது நேரத்தில் அந்த அழகிய சிறு தேர், பசுமை கொழித்திடும் பொழில் நடுவே உள்ள அகஸ்டஸின் இல்லத்தின் முன்னே நின்றது.
சில நொடிகளில் அகஸ்டஸே வெளிவாயிலுக்கு வந்திட்டார் செழியனை வரவேற்றிட!
அவருடைய பரந்த தோளுக்குப் பின்னாலே இரு மான் விழிகள் மலர் விழிகள் தெரிந்தன.
அந்தப் பொன்வண்டு விழிகளுக்குரிய பூங்கொடி யார் என்று ஊகித்திடச் செழியனுக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. ஏனெனில் அகஸ்டஸ் மாவீரனின் முகச்சாயலை அப்படியே உரித்து வைத்தாற் போல் நின்றிருந்தாள் அவள்.
அத்துடன் அவரே சிறிது நேரத்தில், "இவள்தான் என் மகள் ஜூலியா" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
செழியன் இரு கரங்களையும் கூப்பி அவளுக்கு வணக்கம் புரிந்திடும்பொழுதே, "தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தூதுவர் இவர்தானா?" என்று கேட்டவாறே வந்தாள் ஒரு நடுத்தர வயது நாரீமணி. தழையத் தழைய மெல்லிய துகில் உடுத்தியிருந்த அவள் முகத்திலே தளிர்நிலை கடந்திட்ட இலையின் முதிர்ச்சி படர்ந்திருந்த போதிலும் அவளுடைய குவளை விழிகளிலே ஒருவகைக் குறுகுறுப்பு நெளிந்திட்டது.
"இவள்தான் என் மனைவி லிவியா" என்று அறிமுகப்படுத்தினார் அகஸ்டஸ்.
அவளுடைய கூற்றினைத் தமிழில் மொழி பெயர்த்திடும்பொழுதே.
"இவள் இவருடைய இரண்டாவது மனைவி. நான் முன்பு சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான் சிப்பியோ.
தேரினில் வந்திடும்பொழுதே அகஸ்டஸின் குடும்ப வாழ்க்கை யினைப் பற்றி அவன் செழியனிடம் பகர்ந்திட்ட கதை இதுதான்;
ஜூலியஸ் சீசரை வஞ்சகமாய்த் தீர்த்துக் கட்டிய கேசியஸ், புரூட்டஸ் இருவரும் முறியடிக்கப்பட்டு அவர்கள் தற்கொலையைத் தழுவிக் கொண்ட பின்னர். ஆட்சியைக் கைப்பற்றுவதில் அகஸ்டஸூக்குட் போட்டியாகக் கிளம்பி வீழ்ச்சியுற்றவர்கள் அந்தோணியும் லெபிடசும் மட்டும் அல்லர்; சேக்ஸ்டஸ் பாம்பியஸ் என்று இன்னொரு பேராசைக் காரனும் இருந்தான். சிசிலி, சார்டினியா மாநிலங்கள் முதலில் அவனு கட்டுப்பாட்டிலேயே சிக்கியிருந்தன. 'ஸ்கிரிபோனியா' (Scribonia) என்பவள் அவனுடைய சொந்தக்காரி. அவளைத்தான் அகஸ்டஸ் முதலில் மணந்து கொண்டார். அவளுக்குப் பிறந்திட்டவளே ஜூலியா. அகஸ்டஸ் - ஸ்கிரிபோனியா இல்லறப் படகின் ஓட்டம் நெடுநாள் நீடித்திடவில்லை. கருத்துக்கள் மோதின; கசப்புகள் வளர்ந்தன. அந்தக் கசப்பின் அரிப்பில் இதயப்பிணைப்பு விழுந்திட்ட பின்னர் இணைந்து வாழ்ந்திடுவதில் என்ன பொருள் இருக்கிறது என்று எண்ணிய அகஸ்டஸ் ஸ்கிரிபோனியாவை மணவிலக்குச் செய்திட்டார். இதிலே வருந்துவதற்குரியது என்னவென்றால் ஜூலியாவை என்றைக்கு இவள் பெற்றெடுத்தாளோ அதே நாளிலேதான் அந்த மணவிலக்கு! அதன் பிறகு கிளாடியஸ் நீரோ என்பவரின் மனைவியாக வாழ்க்கைப் பட்டிருந்த இந்த லிவியாவின் பேரழகு அகஸ்டஸின் இதயத்தினைக் காந்தம் போல் ஈர்த்திட்டது. அவளைத் தம் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார். அதனால் தமது முதல் மனைவி பெற்றுத் தந்த ஜூலியாவிடம் அவருக்குள்ள இரத்த பாசம் சிறிதும் வற்றிடவில்லை ஜூலியா பருவச் சிட்டாக வளர்ந்த பின்னர், தம் உயிருக்குயிரான நண்பனும் தம் பகைவர்களை முறியடிப்பதிலும் தமக்கு உறுதுணையாய் -வலக்கரமாய் விளங்குபவனுமான அக்ரிபா என்பனுக்கே அவளை மணம் செய்து கொடுத்திட்டார் அகஸ்டஸ். அவன் இப்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளான்.
சிப்பியோ மொழிந்திட்ட இந்தத் தகவல்களைச் செழியன் மனத்தினுள்ளே அசைபோட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அகஸ்டஸ் தம் இல்லத்தினுள் அவனை அழைத்துச் சென்றிட்டார்.
ஒரு நீண்ட அகலமான கூடம், நடுநடுவே பருமனான தூண்கள், சுவர்களும் தூண்களும் அத்திக்காயின் வெளிர் பச்சை வண்ணம் பூசப் பெற்றுக் கண்ணுக்கு விருந்தளித்தன. கூடத்தின் ஒரு புறத்திலே விதவிதமான கலைப்பொருள்கள் - சிற்பங்கள் அழகை உமிழ்ந்தன. அக்டேவியன் என்னும் இயற்பெயரோடு இருந்த காலத்தில் அகஸ்டஸ் பல பந்தயங்களில் ஈடுபட்டு அள்ளிக் கொணர்ந்திட்ட பரிசுப் பொருள்கள் வரிசை வரிசையாக இருந்தன. வேறொரு புறத்தில் நூல்கள் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பொருள்களிலுமே செழியனைக் கவர்ந்தது கூடத்தின் மையப் பகுதியில் சுவர் ஓரமாக வைக்கப்பெற்றிருந்த ஜூலியஸ் சீசரின் சின்னஞ்சிறு பளிங்குச் சிலைதான்.
அந்தச் சிலையினை ஒட்டிக் கிடந்த இருக்கையில் அகஸ்டஸ், செழியன், லிவியா, ஜூலியா வந்து அமர்ந்தனர். அந்த இல்லத்தினில் பணியாற்றிடும் அகஸ்டஸின் அடிமைகளும், உரிமை மனிதர்களுமாகச் சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செழியனைப் பார்க்க முற்பட்டனர்.
சில விநாடிகளில் சிரியா நாட்டினில் தயாரான ‘சுவை நீர்' கொண்ட எகிப்து நாட்டுக் கண்ணாடிக் குவளைகள் அடங்கிய தட்டினை ஏந்தி வந்திட்டாள் ஒரு பணிப்பெண். அகஸ்டஸின் மனைவி, தானே அந்தச் சுவை நீரை எடுத்துச் செழியனிடம் நீட்டினாள்; மற்றவர்களுக்கும் வழங்கினாள்.
அதனைப் பருகியவாறே பெருவழுதிப் பாண்டியன், கரிகாற்சோழன், சேரமாமன்னன் முதலானோரது நலன்கள் பற்றியும், தமிழகத்தின் வளங்கள், துறைமுகங்களின் சிறப்பு, வணிகப் பொருள்களுக்குப் பிற நாடுகளில் உள்ள வரவேற்பு முதலானவை பற்றியும் பரவலான முறையில் உரையாடினார் அகஸ்டஸ்.
அதே வேளையில் செழியனின் நெஞ்சிலோ அலைகளை எழுப்பிய வண்ணம் இருந்தது அந்தப் பெருவீரரின் பண்பு நலன்.
அது வேறொன்றும் இல்லை. அவரது எளிமையே!
ரோமாபுரியைப் போன்ற ஒரு மாபெரும் பேரரசின் செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவராகத் திகழ்ந்திடும் அகஸ்டஸ், ஈடு இணையற்ற ஆடம்பரமான அரண்மனையில்தான் உறைந்திடுவார் என்றே கற்பனை செய்து வைத்திருந்தான் செழியன். நேரினில் வந்து பார்த்திட்ட பிறகோ, அவனுடைய இதயப்பரப்பு வியப்பினால் விம்மிப் புல்லரித்திட்டது.
ஒரேயொரு உப்பரிகை மட்டுமே பூண்டதாக அவரது இல்லம் இத்துணை எளிமை மலிந்து இருந்திடக்கூடுமென்று அவன் எண்ணிடவே இல்லை. அந்த இல்லத்தில் மட்டுமின்றி அவருடைய நடை, உடை, பேச்சு, பழக்கம் எல்லாவற்றிலுமே எளிமை! எளிமை!
பரந்த ரோமானியப் பேரரசு முழுவதும் படர்ந்து தழைத்தவண்ணம் உள்ள அகஸ்டசினுடைய செல்வாக்குத் தருவின் ஆணிவேர் எங்கே இருக்கிறது? அவர்தம் ஆண்மை மிக்க அரிமா வீரத்திலோ புதுமைச் சிந்தனைகளிலோ, முன்னேற்றத் திட்டங்களிலோ மட்டுமா அது அடங்கியுள்ளது? இல்லை! அவரது எளிமைப் பண்பாட்டிலேயே அது பொதிந்து பொலிகிறது என்பதனை நொடியில் புரிந்து கொண்டு விட்டான் செழியன். தன்னலக் கலப்பற்ற அடக்கம் நிறைந்திட்ட உண்மையான குடியரசுவாதியாக வெறுஞ்சொல்லில் மட்டுமின்றி எண்ணம் செயல் எல்லாவற்றிலுமே அவர் நடந்து காட்டுவதால்தான் உலகப் புகழின் ஒளி வட்டம் அவரது தலையைச் சுற்றிலும் விரிந்த வண்ணம் உள்ளது என்பதனையும் உணர்ந்து மகிழ்ந்திட்டான் அவன்.
சில நொடிகள் சென்றிட்ட பின்னர்-சுவை நீரினைத் தானும் பருகியவாறே லிவியா இங்ஙனம் இயம்பினாள்;
"உங்களுடைய பாண்டியநாட்டு 'முத்தாரம்' என்றால் எனக்கு அளவில்லாத ஆசை! என்ன விலையென்றாலும் வாங்கி விடுவேன்"
உடனே அகஸ்டஸ் இடைமறித்தார், “பார்த்தீர்களா, தூதுவர் அவர்களே? நீங்கள் இந்த நாட்டில் அடி வைப்பதற்குள்ளேயே உங்கள் நாட்டு முத்து மீதுதான் என் மனைவியின் சிந்தனை செல்கிறது. ஆமாம்.. உங்கள் நாட்டுப் பெண்களும் இப்படித்தான் - நகை என்றால் பைத்தியம் பிடித்து அலைவார்களா?"
"பெண்கள் எந்த நாட்டில் பிறந்தால் என்ன? எந்த மொழியில் பேசினால் என்ன? அவர்கள் இதயம் ஒன்று தானே? எத்தனை நகைகளைப் பூட்டினாலும் அவர்களுடைய ஆசைப்பசி அடங்கவே அடங்கிடாது!"
"சரியாகச் சொன்னீர்கள், தூதுவரே! சரியாகச் சொன்னீர்கள்! பெண்களின் நெஞ்சக் கடலை நீங்கள் மிகச் சரியாகத்தான் அளந்து வைத்திருக்கிறீர்கள்” என்று கை கொட்டி நகைத்திடலானார் அகஸ்டஸ்.
"ஏதேது! இந்தத் தூதுவர் மிகப் பொல்லாதவராக இருப்பார்போல் இருக்கிறதே! பெண்கள் குலத்தையே ஒரே மட்டமாகத் தாக்கிவிட்டாரே! ஒரு வேளை அவருடைய மனைவி படாதபாடுபடுத்தி இவருக்கு நிறையச் செலவு வைத்திருப்பாளோ என்னவோ?” என்று விளையாட்டாகவே மறுப்புக் கணையினைத் தொடுத்திட்டாள் ஜூலியா.
"இவர் இன்னும் ஒன்றிக் கட்டைதான்!" என்று சிப்பியோ இலத்தீனில் மறுமொழி பகர்ந்திட்டான்.
"அதற்கும் அவள் விட்டுக்கொடுத்திடாமல், இவருடைய காதலி எவளாவது ஏமாற்றியிருப்பாள்; அந்த தோல்வியைத் தாங்கிட முடியாமல் தான் பெண்குலத்தின் மீதே இவர் ஆத்திரத்தைக் கக்குகிறார்!” என்றாள்.
அவளுடைய கூற்றினுக்குச் செழியன் பதிலடி கொடுத்திடு முன்னர் அகஸ்டஸ் முந்திக்கொண்டுவிட்டார்.
"மணம்புரிந்தோ, மையல் கொண்டோதான் ஒரு பெண்ணின் மன இயல்பைத் தெரிந்துகொள்ளவேண்டுமா, என்ன? பார்த்தாலே தெரியாதா? அலையில்லாத கடலாவது, ஆசையில்லாத பெண்ணாவது இந்த உலகத்திலே ஏது!"
"ஏன், ஆண்கள் மட்டும் ஆசையே இல்லாதவர்களோ? ஆண்களுக்குப் புகழாசை! நகை ஆசையால் பெண்கள் ஒரே ஒருவருடைய-தங்கள் கணவருடைய மனத்தை மட்டுமே வதைப்பார்கள். ஆனால் ஆண்கள் புகழாசையால் நாடு பிடித்திடக் கிளம்பி எத்தனையோ பேருடைய மனத்தை வதைப்பதில்லையா? உயிரையே ஏப்பம் விடுவதில்லையா?"
"நீ ஏனடி ஜூலியா அவரிடம் வாதம் பண்ணுகிறாய்? பெண்கள் என்றாலே உன் அப்பாவுக்கு எப்போதுமே ஓர் இளக்காரம்," என்று செல்லமாகச் சிணுங்கிய லிவியாவின் விழிகள் சட்டென்று வியப்பினால் விரிந்தன.
அதற்குக் காரணம் அகஸ்டசிடம் செழியன் எடுத்து நீட்டிக் கொண்டிருந்த ஓர் அழகான சிறிய பேழைதான்.
"இதற்கென்ன இப்போது அவசரம்?"- திகைப்புடன் கேட்டார் அகஸ்டஸ்.
"தங்களுடைய குடும்பத்திற்கு இது என்னுடைய தனிப்பட்ட முதற்பரிசு. அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கச் சார்பிலான பெரும் பரிசுப் பொருள்கள் மரக்கலத்திலே உள்ளன. அவை பின்னர் தங்கள் செனேட் மன்றத்தில் கொலுவேறி இருந்திடும் பொழுது முறைப்படி அன்பளிப்புக்களாக வழங்கப்படும்" என்று விளக்கினான் செழியன்.
"என்ன இருந்தாலும் நீங்கள் கெட்டிக்காரர்தான், தமிழகத் தூதுவரே! என் குடும்பத்தினரை மகிழ்வித்தாலே போதும் என்றுதானே அவர் களுக்கு மட்டும் முதல் பரிசு கொண்டு வந்திருக்கிறீர்கள். எனக்கும் அப்படித் தனிப்பட்ட முறையில் பரிசு கொண்டு வந்திருக்கக்கூடாதா?" என்று கண்களை சிமிட்டியவாறே கேலியாக வினவினார் அகஸ்டஸ்.
"மன்னிக்க வேண்டும், 'பிரின்செப்ஸ்' அவர்களே! தங்கள் குடும்பம் என்றால் அதில் தாங்களும் ஓர் அங்கம் தானே - அடக்கம்தானே என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் இந்த எளிய பரிசினை இப்பொழுது நான் அளிப்பது தங்களிடம்தானே அன்றி, அவர்களிடம் அல்லவே!"
செழியன் இவ்வாறு கழறியதும் ஏதோ காணாத புதுமையைக் கண்டுவிட்டவள் போலத் துள்ளிக் குதித்திட்டாள் ஜூலியா.
"சரியாக மடக்கினீர்கள், தூதுவர் அவர்களே! சரியாக மடக்கினீர்கள்! என் தந்தைக்குக் குடும்பம் என்கிற ஒன்று இருக்கிறது என்னும் நினைப்பே இருப்பதில்லை. அதில் தானும் ஓர் அங்கம் என்கிற கருத்தும் இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் 'நாடு-நாடு-மக்கள்-மக்கள் என்று வெளியுலகைப் பற்றித்தான் கவலைப்படுகிறாரே அன்றி வீட்டைப் பற்றியே சிந்திப்பதில்லை. இவருடைய மருமகனையும் (ஜூலியா அண்மையில் மணந்து கொண்ட அக்ரிபா) தம்மைப் போலவே பொதுநலப் பைத்தியமாக்கி வெளிநாடுகளுக்குப் போகுமாறு செய்து விட்டிருக்கிறார்."
"ஓகோ! இதுதான் சரியான சமயம் என்று என்னைத் தாக்குகிறாயா? இரு, இரு! அக்ரிபா வந்ததும் அவனிடம் சொல்லி உன் வாய்க்குச் சரியாகப் பூட்டுப் போடச் சொல்கிறேன்!" என்று செல்லமாகக் கடிந்தவாறே செழியன் அளித்த பேழையினைத் திறந்திட்டார் அகஸ்டஸ்.
'பளிச் பளிச்' சென்று முத்தாரங்கள் கண்களைப் பறித்தன. இலுப்பை மொட்டுக்களை கொண்டு சரந்தொடுத்திட்டாற் போல் எழிலினை வழியவிட்டன அவை!
"ஓ! என்ன அருமை! என்ன அற்புதம்!" என்று நொடிக்கு ஒருமுறை கூவிடலானாள் லிவியா.
"இவ்வளவு அழகான முத்துமாலைகளை நானும் இதுவரை பார்த்ததே இல்லை" என்று தன் மாற்றாந்தாயோடு சேர்ந்துகொண்டு ஜூலியாவும் தன் வியப்பினை வெளிப்படுத்தினாள்.
பேழையிலிருந்த முத்தாரங்களை ஒவ்வொன்றாக மேலே தூக்கி பார்த்திட்ட அகஸ்டஸ் செழியனை நோக்கி, "ஆமாம், எப்படி இவ்வளவு கணக்காக எங்களுக்கு மூன்று மாலைகள் தேவைப்படும் என்று கொண்டு வந்தீர்கள்? வியப்பாக இருக்கிறதே!" என்று சிரித்திட்டார்.
"இதிலே கணக்கு ஒன்றும் இல்லை. 'பிரின்செப்ஸ்' அவர்களே! ஆனாலும் எங்கள் நாட்டிலே 'மூன்று' என்கிற எண்ணிக்கையில் ஒரு தனி ஈடுபாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. எங்களுடைய தமிழ் மொழியே இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. எங்கள் தமிழகப் பெருவேந்தர்களும் சேர, சோழ, பாண்டியர் என மூவர் ஆவர். எங்கள் கொடிகளும் கயல். புலி, வில் என மூன்று ஆகும். நாங்கள் உணவிலே விரும்பிச் சுவைத்திடும் கனிகளும் மா, பலா, வாழை என மூன்று ஆகும்."
"ஏதேது, இந்த மூன்று என்னும் எண்ணிக்கையிலே இந்த உலகிலுள்ள அத்தனைப் பொருள்களையும் அடக்கி விடுவீர்கள் போல் இருக்கிறதே!
நல்லது. இப்போது இந்த முத்தாரங்களை உங்கள் சார்பிலே ஒவ்வொருவருக்கும் பரிசளிக்கட்டுமா?" என்றவாறே அகஸ்டஸ் ஒரு முத்தாரத்தை முதலில் தன் மனைவி லிவியாவிடம் நீட்டினார். இன்னொன்றை எடுத்துத் தன் மகள் ஜூலியாவிடம் வழங்கினார்.
மூன்றாவது முத்தாரத்தைத் தாமே அணிந்து கொண்டார் அகஸ்டஸ்.
"உங்களுக்கு நன்றாக இருக்கிறது; மிக நன்றாக இருக்கிறது!" இரண்டு பெண்மணிகளும் கூவினார்கள்.
"சாதாரணமாகப் பரிசுப் பொருள்களைக் கண்டோ, பாராட்டு மொழிகளைக் கேட்டோ நான் மயங்கிவிடுவதில்லை. அவற்றைக் கொண்டு என்னை யாரும் மயக்கிடவும் முடியாது. ஆனால், உங்களுடைய தமிழகத்து முத்தாரம் என்னுடைய அந்த உறுதிப் பாட்டைக்கூடத் தளர்த்திடும்போல் இருக்கிறதே!" - உற்சாகத்தில் மிதந்து தெறித்து விழுந்திட்ட, அகஸ்டஸின் இந்த உளந்திறந்த பாராட்டு மொழிகள், செழியனின் செவிகளில் தேனாகவே இனித்தன.
அந்தப் பாராட்டு மொழிகள் மட்டுந்தானா?
அவருடைய கலகலப்பான பேச்சு - சிரிப்பு ஒரு நாளிலேயே பலநாள் பழகிய நட்புரிமையோடு பாசத்தைப் பொழிய விட்டிடும் உயரிய பண்பாடு - எல்லாமேதான் அவனுக்கு இனித்தன. அதே நேரத்தில்,
'ஆனால் இத்தனைக்கும் நடுவே இவர் ஓர் ஆழமான ஆள்தான். வெற்றுப் புகழ்ச்சியாலோ விதவிதமான பரிசுகளாலோ இவரை விலைகொடுத்து வாங்கிட முடியாதுதான்; தமக்கு என்று ஒரு நெறியினை வகுத்துக்கொண்டு அந்த நெறியிலிருந்து பிறழாத ஓர் உறுதிப்பாடே இவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது' என்கிற ஓர் அழுத்தமான மதிப்பீட்டையும் தூதுவன் என்கிற முறையிலே தன் சிந்தையில் பதிய வைத்துக்கொள்ளத் தவறிடவில்லை செழியன்.
சிறிது நேரம் சென்ற பின்னர் "நம்முடைய தூதுவர் நாளைக் காலையில் எங்கே வரவேண்டும் தெரியுமா?" என்று சிப்பியோவை நோக்கிக் கேட்டார் அகஸ்டஸ்.
"ஓ! எனக்குத் தெரியும்!" - குயிலின் குரல் ஒன்று திடீரென்று மிதந்து வந்தது.
அகஸ்டஸின் அந்தக் கேள்வியும் சரி, அதற்குக் கிடைத்திட்ட மறுமொழியும் சரி இலத்தீன் மொழியிலேயே இருந்தமையால் அவர்கள் பேசிக்கொண்டது செழியனுக்கு புரிந்திடவில்லை.
ஆயினும் அவனுடைய சிந்தனையோ, 'இந்தக் குரலை எங்கோ கேட்டிருக்கிறோமே! எங்கே கேட்டோம்?" என்னும் ஆராய்ச்சியிலே ஈடுபடாமல் இல்லை!
புல்லாங்குழலொத்த இனிமைக்குரல் கொண்ட அந்த ஏந்திழை செழியனின் ஆராய்ச்சிக்கு - நினைவாற்றலுக்கு மேலும் வேலை கொடுத்திடவில்லை; விரைவிலேயே அவர்கள் எல்லாருடைய எதிரிலும் நடுக்கூட்டத்தில் வந்து நின்றிட்டாள்.
ரோமாபுரி மண்ணிலே செழியன் அடிவைத்திட்ட பொழுது அகஸ்டஸ் பெருமகனாரின் சார்பில் ஆரத்தினைச் சூட்டி முதன் முதல் வரவேற்பினை வழங்கினாளே. அதே ஆரணங்குதான் அவள்!
ஆம்! ஜுனோ!
"நீதானா? ஆமாம், ஏன் இவ்வளவு நேரம்?" - என்று வினவினார் அகஸ்டஸ்.
"தூதுவர் தங்கப்போகும் இல்லத்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவா என்று கவனிக்கச் சென்றிருந்தேன்."
“பரவாயில்லை, இப்படியெல்லாம் தனக்காக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருத்தி இங்கே இருக்கக்கூடும் என்பது இந்தத் தூதுவருக்கும் முன்கூட்டியே தெரியும் போலும்! இல்லையென்றால் உனக்கும் சேர்த்து ஒரு பரிசினைக் கொண்டு வந்திருப்பாரா?"
கேலியாக நகைத்திட்டார் அகஸ்டஸ்.
"எனக்காவது, பரிசாவது?" என்று எதிர்க் கேள்வியினை ஜூனோ எழுப்பிடும்பொழுதே, அவளும் அகஸ்டஸும் இலத்தீனில் உரையாடியவற்றைச் செழியனிடம் மொழி பெயர்த்துக் கூறினான் சிப்பியோ.
சற்றைக்கெல்லாம், தாம் விளையாட்டாக அணிந்து கொண்ட மூன்றாவது முத்தாரத்தை அகஸ்டஸ் தம் கழுத்தைவிட்டு கழற்றினார்.
"நான் ஒன்றும் வேடிக்கைக்குச் சொல்லவில்லை ஜூனோ ! இதோ, இதுதான் அவர் கொண்டு வந்திருக்கும் பரிசு!' என்று அந்த முத்தாரத்தை அவளிடம் நீட்டினார்.
"அப்படியா? ரொம்ப அழகாக இருக்கிறதே!" என்று அதனை வாங்கிப் பார்த்திட்ட அவள் ஓரக்கண்ணால் செழியனை நோக்கினாள். அவளுடைய பார்வையிலே நன்றியுணர்வு பொங்கி வழிந்திட்டது.
அகஸ்டஸின் செயல், செழியனைத் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் இவ்வாறு தங்கள் குடும்பத்திற்கு வந்த ஒரு பரிசினை ஜூனோவுக்குக் கொடுத்திடுவார் என்று அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது அகஸ்டஸ் வைத்துள்ள எல்லையில்லாப் பாசத்தைப்பற்றி சிப்பியோ மொழிந்தவை யாவும் உண்மை என்பதை அவருடைய செயல் மூலம் உணர்ந்து கொண்டான் செழியன்.
அதே வேளையில், தன் தந்தையின் பரந்த மார்பினில் மின்னிய முத்தாரம் ஜூனோவின் கைக்குச் சென்றதுமே மோவாயினால் தன் தோளினை இடித்தவாறே ஜூலியோ ஓசைப்படாமல் அந்த இடத்தினை விட்டு அகன்றதையும் அவன் கவனிக்காமல் இல்லை.
'பெண்களுக்குள்ள ஆசை கடல் என்றால் அழுக்காறோ வானந்தான்!' என்று எண்ணிக்கொண்டான்.