உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/4. புலவர் மகள் புறப்பட்டாள்

விக்கிமூலம் இலிருந்து

4

புலவர் மகள் புறப்பட்டாள்

பொழுது விடிந்தது. புலவர் துயிலெழுந்தார். அசதியை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து கிளம்பியவர் சுற்றுமுற்றும் பார்த்தார். வழக்கமாக அவரது படுக்கையின் அருகே வெள்ளிச் செம்பில் வைக்கப்பட்டிருக்கும் தெளிந்த நீராகாரத்தைக் காணவில்லை. எழுந்ததும் வாய் கழுவி நீராகாரம் அருந்துவது இளமை முதல், புலவர் பெருமான் பழகிக் கொண்ட ஒன்றாகும். அந்தப் பழக்கத்திற்கு இத்தனை நாளும் தடங்கல் ஏற்பட்டது கிடையாது. அன்று ஏற்பட்ட மாறுதல் அவருக்குத் திகைப்பை உண்டாக்கியது.

முத்துநகை படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அவள் இல்லை. தெருப்பக்கம் திரும்பினார். கதவு திறந்து கிடந்தது. எழுதும்போது மெய்மறந்து எழுத்தாணியைத் தலையிலேயே குத்திக்கொண்டது போன்ற அதிர்ச்சியால் துடித்தார்.

"முத்துநகை! முத்துநகை!" என வீடெங்கும் ஓடினார். தோட்டத்துப் புறம் சென்று சத்தம் போட்டார். அவரது படபடப்பு அடங்கவில்லை. கிணற்றடிக்கு ஓடினார். கிணற்றுக் கட்டையில் மர உருளை மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது. கயிற்றுச் சுருளைக் காணவில்லை. "அய்யோ அம்மா!" என அழத் தொடங்கியவரின் கண்ணில் எதிர்த்தாற்போல் கயிறும் தோண்டியும் தோன்றவே ஆறுதல் அடைந்தார்.

மறுபடியும் உள்ளே வந்தார். அவள் படுத்திருந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே நின்றார். ஒரு ஓலை. தலையணைக்கருகே தலை நீட்டிக்கொண்டிருந்தது. ஆத்திரமும் ஆவலும் ததும்ப அதை எடுத்துப் பார்த்தார். அவர் நா உதிர்த்த சொற்களை அவர் காதுகள் நம்பவில்லை. அவர் விழியில் பட்ட எழுத்துக்களை அவரது மொழியறிவு ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துணைப் பயங்கரமான வாசகங்களை அந்த ஓலை பேரிடியென முழங்கியது. மாரி மின்னல் போல் தோன்றிடச் செய்தது. கண்களை இறுக மூடிக்கொண்டார். இமை இடுக்குகளின் வழியாக நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. தன்னையே நம்பாமல் மறுமுறையும் படித்தார்.

"அன்புள்ள தந்தையே! என்னை மன்னித்து விடுங்கள். சோழப் பெருநாட்டின் கீர்த்தியைக் குலைக்கச் சதி நடைபெறுகிறது. அந்தச் சதியிலேயே யார் யாரோ ஈடுபட்டிருக்கிறார்கள். என்னையே நான் சந்தேகப்படுகிற அளவுக்கு இந்தத் திருநாட்டில் ஒரு புதிய நிலை உருவாகியிருக்கிறது. கரிகாற்சோழனின் உயிரைக் குடிக்கவும் நமது தாயகத்தின்மீது படைகொண்டு மோதிப் பழி தீர்க்கவும் பகைவர்கள் நேரம் பார்த்திருக்கிறார்கள். அவர்கட்கு இங்குள்ள சிலர் எடுபிடிகளாய் அமைந்துவிட்டார்கள். அந்தோ! சுதந்திரத் திருநாடே! உன்கதி இப்படியா ஆகவேண்டும்? இரவெல்லாம் எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தேன், தந்தையே! தமிழ் வளர்க்கும் நல்லோர் எனப் போற்றப்பட்ட பெருமக்கள் கூட அந்தத் தமிழ் வளர்த்த பண்பை மறந்துவிட்டனர் என்பதை நினைக்கும்போது என் நெஞ்சில் நெருப்பு மூண்டுவிட்டது. நான் ஏன் சோழ நாட்டில் பிறந்தேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். விடை கிடைத்தது. தாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறதாம். அந்தப் பொறுப்பை நிறைவேற்றப் புறப்பட்டுவிட்டேன். இந்தக் காரியத்தில் என் தந்தையே குறுக்கிட்டாலும் இறந்துபோன என் தாயே எழுந்து வந்து தடுத்தாலும் என்னையும் என் இலட்சியத்தையும் தோற்கடித்துவிட முடியாது என்று உறுதிபூண்டு கிளம்பிவிட்டேன்.

சோழ நாட்டுப் பகைவர்களும், துரோகிகளும் மண்ணோடு மண்ணாகும் வரையில் எனக்கு வேலை இருக்கிறது. அதுவரையில் என்னைத் தேடாதீர்கள். என் கடமையில் நான் வெற்றிபெற்று உயிரோடிருந்தால் திரும்பிவந்து தங்களைச் சந்திக்கிறேன். நான் கடமையில் உயிரைத் தந்துவிட்டேன் என்றால் தங்கள் அனுமதியின்றி நான் எடுத்துச் செல்லும் செழியனின் புலிநக மாலை மட்டும் தங்களிடம் திரும்பிவந்து சேரும். அது நான் செத்துவிட்டேன் என்பதற்கு அடையாளம். என்னை வாழ்த்துங்கள் அப்பா, வணக்கம்".

அன்புள்ள,

முத்துநகை

இனி எத்தனை தடவை படித்தாலும் அதே எழுத்துக்கள் தாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்த பிறகே அந்த ஓலையைப் படிப்பதை நிறுத்திக்கொண்டார். தமிழ் எழுத்துக்களை அவர் எத்தனையோ முறை கண்ணிலே ஒற்றிக்கொண்டு பரவசமுற்றிருக்கிறார்! அந்த நேரத்தில் கண்களை மலர்க்கொண்டு தொடுவது போன்ற உணர்ச்சியையே அவர் பெற்றிருக்கிறார். ஆனால் இந்த எழுத்துக்களோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு குத்தீட்டி போல அவரது கண்களில் பாய்ந்து கொண்டி ருந்தன. முத்துநகையின் திடீர் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன? சோழ நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை இவள் போய்த் தடுத்து நிறுத்துவதா? எல்லாம் ஒரே புதிராக இருந்தது புலவருக்கு.

பாவம், புலவரைத் தவிக்க விட்டுவிட்டு முத்துநகை நேரே கரிகாற் சோழனுடைய அரண்மனை வாயிலில் போய் நின்றாள். என்றுமில்லாத அதிசயமாக, ஒரு பெண் தன்னந்தனியாக விடியற்காலையில் வந்து நிற்பது கண்ட காவலர்கள் வியப்புற்றனர்.

"யாரம்மா? என்ன வேண்டும்?" எனக் கேட்டவாறு அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

"நான் அவசரமாக அரசரைப் பார்க்கவேண்டும்!" என்று நடுங்கிய வாறு முத்துநகை கூறினாள். உடனே இரு வீரர்கள் உள்ளே சென்று வெகுநேரம் கழித்து வெளியே வந்தனர். என்ன பதில் சொல்லப் போகிறார்களோ என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்த முத்துநகை மகிழும்வண்ணம் பதில் கிடைத்தது. அவளை அழைத்துவருமாறு சோழன் உத்திரவு தந்துவிட்டான்.

வீரர்களுடன் முத்துநகை கரிகாலனின் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். அவள் நடந்து செல்லும் வழியெல்லாம் தாயகத்துக் கலைச்செல்வம் உயிர்பெற்றுச் சிலையாய் - ஓவியங்களாய் விளங்கிய காட்சி கண்டு பெருமூச்செறிந்தாள். தங்க மெருகேற்றிய தூண்களும், அவைகளில் பொருத்தப்பட்ட தந்தத்தால் ஆன விளக்குகளும், "அடடா! தமிழகத்து வளமே வளம்" என அவளைக் கூறிடச் செய்தன. மன்னர் போரிட்டுக் கொன்ற புலி, சிங்கம், சிறுத்தைகளின் தோல்கள் ஒரு புறத்திலே மாட்டப்பட்டிருந்தன. நசுங்கிப்போன ஒரு மணிக்கிரீடம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதன் கீழே "தோல்வியுற்ற பன்றி நாட்டரசரின் மணிமுடி" - என்ற எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒரு நீண்ட சுவரில் கரிகாலனின் இலங்கைப் படையெடுப்பை விளக்கும் ஓவியம் தீட்டப்பட்டு அது காண்பவர் உள்ளத்தில் புதிய எழுச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அதனையடுத்து ஒரு பெருந்தூணில் மிகவும் கனமான வாள் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அந்த வாளின் முனை ஒடிந்திருந்தது. அதன் கீழே. "இந்த வாள் இருங்கோவேள் மன்னர் ஓடும்போது போர்க்களத்தில் விட்டுச் சென்றது" எனத் தீட்டப்பட்டிருந்தது.

அவைகளையெல்லாம் காணக் காண முத்துநகைக்கு மேலும் ஆத்திரம் மூண்டது. "இவ்வளவு சிறப்புக்குரியவன், சிம்மமெனப் புகழப்படுபவன், தன் நாட்டு மன்னவனைக் கவிழ்ப்பதற்குச் சதியா?" எனக்கேட்டுக் குமுறுவது போல் அவள் மென்மையான இதழ்கள் பெருத்துத் துடித்தன.

இறுதியில், கரிகாலன் இருக்கும் மாளிகைக்குள் அவள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் கரிகாலனுக்கு ஒரே ஆச்சரியம்!

"என்ன! நீயா?" எனப் பதட்டத்துடன் கேட்டான்.

"ஆமாம், கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்" என்றாள் முத்துநகை.

அரசன், காவலர்களைச் சைகை காட்டி வெளியே அனுப்பி வைத்தான். முத்துநகை அரசரையே பார்த்துக் கொண்டு நின்றாள். கரிகாலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "என்னம்மா! எங்கே வந்தாய்? என்ன நடந்தது? புலவர் எங்கே?"

இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன சோழனின் காலில் தடாலென விழுந்து, "மன்னவா! என்னை மன்னியுங்கள்!" எனக் கதறி அழுதாள் அந்தப் பைங்கொடி.

"எழுந்திரம்மா! செய்தியைச் சொல்! எதற்காக இந்தக் காலை நேரத்தில்? விடிந்ததும் விடியாததுமாக?" எனக் கேட்டான் சோழன்.

"விடியவில்லை அரசே; விடியவில்லை; சோழநாட்டைச் சூழ்ந்துள்ள இருள் இன்னும் விலகவில்லை. அதைத் தெரிவிக்கவே தங்களிடம் ஓடி வந்தேன்!"

"என்ன சொல்கிறாய்?"

"திக்கெட்டும் படையெடுத்து நிலம் பல வென்றவர் தாங்கள் ! சோழர் படையினர் கொட்டும் முரசொலி கேட்டுத் தாள்வீழ்ந்த பகைவர் ஏராளம்! ஏராளம்! ஒளியரை, பொதுவரை, இலங்கையரை வென்றீர்கள்! வேளிர்குடி மன்னரைத் தோற்கடித்தீர்கள்! தங்கள் வெற்றிவேலின் பெருமையைப் புகழாத நாடு இல்லை! இமயத்திலே நமது கொடியினைப் பொறித்தீர்கள்! இல்லையென்று கூறவில்லை! ஆனால் ஒன்று, மன்னா! இத்தனை வெற்றித் திறமிருந்தும் தங்களுக்குத் தாயகத்தில் முளைவிட்டு வளரும் துரோகக் கூட்டத்தைப் புரிந்து கொள்ளும் திறமில்லை! மன்னிக்கவும்! தங்கள் பரந்த தூய உள்ளம் அந்தத் துரோகிகளைப் பற்றி நினைக்காமலே விட்டு விட்டது என்பதை நான் உணர்கிறேன். ஆனாலும் அரசே! அந்தக் கூட்டம் வளருமேயானால் நாடு அழியும்; நமது பெருமை அழியும்!"

"என்ன! துரோகக் கூட்டமா? யார் அவர்கள்? எங்கிருக்கிறார்கள்?"

"அவர்கள் ஒன்றும் தனியிடத்தில் வாழ்வது கிடையாதே! காக்கைகளைப் போலக் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதும் கிடையாதே! துரோகிகள் நமக்குப் பணிவிடை புரியும் ஊழியர்களிலே கூட இருப்பார்கள்! படை நடத்தும் தளபதிகளிலேகூட இருப்பார்கள்! பாமாலை தொடுக்கும் புலவர்களிலே கூட இருப்பார்கள்!"

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் விவரமாகச் சொல்லம்மா!"

"அரசே, அந்தத் துரோகிகள் யார் என்று கண்டுபிடித்து நாட்டைக் காப்பாற்றுவதே என் வேலை, அதற்காகவே வீட்டை விட்டு வெளிக் கிளம்பி விட்டேன்!'

"அப்படியானால் புலவர் அவர்களுக்குக் கூட...

"அப்பாவுக்குத் தெரியாது. தெரியவும் கூடாது. தெரிந்தால் நான் திறமையற்றவள் எனக் கூறி என்னைத் தடுத்து விடுவார். அரசே! தாங்கள் எனக்குச் செய்ய வேண்டிய உதவியெல்லாம் இந்தச் சந்திப்பை ரகசியமாக வைத்துக் கொள்வதுதான்!"

"நீ என்ன சொல்கிறாய் என்று உனக்காவது புரிகிறதா?"

"தோகை மயிலெனத் தாங்கள் நம்பியிருக்கிற சிலர், முள்ளம்பன்றிகள் என்பதை நிரூபித்துக் காட்டப் போகும் நேரம் ஒன்று வருகிறது. அதற்குத்தான் இந்தச் சந்திப்பு ஒரு ஆரம்பம் மன்னர் மன்னா! தங்களிடம் தோற்றோடிய இருங்கோவேள் எப்படியும் தங்களைப் பழிதீர்த்துக் கொள்ள அலைகிறான் என்பதை அறிவீர்கள் அல்லவா?"

"சொல், கேட்கிறேன்"

"தாங்களும் பாண்டிய மன்னரும் பவனி வந்தபோது இருங்கோவேளின் தளபதி தங்களைச் சதி புரிந்து கொல்வதற்கு தலைநகருக்கு வந்திருக்கிறான்...!"

"ஆ! அப்படியா?"

"முழுவதும் கேளுங்கள். தங்களைக் கொல்லவும் ஈட்டியை கையிலே எடுத்து விட்டான். அந்த நேரத்தில் பாண்டிய நாட்டு வீரர் ஒருவர் தங்களைக் காப்பாற்றினார்!"

"யார் அந்த வீரன்?"

"செழியன்!"

"என்ன செழியனா? இப்போது அந்தச் செழியன் எங்கே?"

"அதற்குமேல் என்னைக் கேட்டுப் பயனில்லை. செழியன் போன இடம் எனக்குத் தெரியாது. மேலும் விளக்கம் பெறவே நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டிருக்கிறேன். செல்லும் வழியில் தங்களை எச்சரித்துவிட்டுப் போவது என் கடமையென எண்ணினேன்!"

"குழந்தாய்! என்னைக் கொல்லச் சதி நடத்துகிறவன் இருங்கோவேள்! அவனை என் படை கொண்டு வெல்லுகிறேன். நீ எதற்காகக் கஷ்டப்பட வேண்டும்?"

"படையினால் மட்டுமே பகையை வென்றுவிட முடியுமா? புகை நுழையாத இடங்களிலும் பொல்லாத துரோகிகள் நுழைந்து விடுவார்களே! அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டாமா?"

"அதற்கு?"

"அந்த ஒற்றர் வேலையை நான் மேற்கொள்கிறேன் என்கிறேன்!"

"உன் கடமையுணர்வுக்கும் தாய்நாட்டுப் பற்றுக்கும் இந்தச் சோழனின் மணிமுடி வணக்கம் தெரிவிக்கத் தாழ்கிறது அம்மா! ஆனால் ஒன்று... அருமையாக உன்னை வளர்க்கும் புலவர் பெருந்தகையார் மனவேதனை அடைவாரே?"

"அவரைப் பற்றிக் கூடத் தாங்கள் ஆச்சரியமான செய்தியைக் கேள்விப்படுவீர்கள் அரசே!"

இதைச் சொல்லும்போது அவள் நாக்கு நடுங்கியது. கண்கள் குளமாயின. ஆயினும் மறைத்துக் கொண்டு சமாளித்தாள். சோழன், அவள் மேலும் என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். அவள் பேச்சை மாற்றினாள்.

"அதாவது, அப்பாவும் என்னைப் போலவே ஒற்றர் வேலையை மேற்கொள்ள நேரிடலாம் என்கிறேன்!" எனக் கூறி, அரசனின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் புதிய கம்பீரம் களை கட்டி நின்றது.

தன்னுயிருக்காகவும் தாயகத்துப் பெருமைக்காகவும் தமிழ் வளர்க்கும் குடும்பமொன்று கவலைப்படுவது கேட்க அவனுக்குப் பூரிப்புப் பொங்கி வழிந்தது. தன் தந்தைக்குக்கூடத் தெரியாமல் நாட்டுப் பணி புரியப் புறப்பட்டுவிட்ட இந்த இளந்தமிழச்சியின் வீரத்தைக் கண்டு கரிகாலன் பெருமை கொண்டான்.

"உன்னை நான் வாழ்த்துகிறேன். உன் கடமைக்கு என்னென்ன வேண்டுமோ கேள், தருகிறேன்!" என உரைத்தான்.

"அதிகம் எதுவும் தேவையில்லை. ஐந்தாறு வீரர் உடைகள், ஒரு நல்ல குதிரை! அவ்வளவு போதும்!"

"ஆண் வேடத்தில் புறப்படுகிறாயா? உன் குரல் உன்னைக் காட்டிக் கொடுத்து விடாதா?"

"தங்களுக்கேன் கவலை? தங்களைக்கூட நான் ஏமாற்றக்கூடும்!"

கரிகாலன் சிரித்துக் கொண்டான். கைதட்டி மெய்க் காப்பாளனைக் கூப்பிட்டான். முத்துநகையை அழைத்துப் போய் யாருக்கும் தெரியாமல் அவள் கேட்பதைக் கொடுத்தனுப்ப உத்தரவிட்டான். முத்துநகை, சோழனிடம் விடை பெற்றுக் கொள்ளும்போது, தன் தந்தையின் காதில் இந்தச் செய்தியைப் போட்டுவிடக் கூடாதென்று கெஞ்சிக் கேட்டாள். அவனும், "கரிகாலன் வாக்குத் தவற மாட்டான்." என்று அவளைப் பார்த்துக் கனிவோடு உறுதி தந்தான். ஆபத்தான வேலையில், தடுத்தும் கேளாமல் அடியெடுத்து வைக்கிற அவளுக்கு அவன் நல்ல எச்சரிக்கை தந்து அனுப்பி வைத்தான்.

அவள் போனதும் கரிகாலனுக்கு ஒரே குழப்பம். புலவருக்கும் தெரியாமல் முத்துநகை இந்தக் காரியத்தில் ஈடுபட்டது ஏன்? - என்ற கேள்வி அவனைக் குடைந்தது. "தந்தை தடுத்து விடுவார்! அதனால்தான் அவருக்குத் தெரியக்கூடாது" என்று முத்துநகை கூறிய சமாதானம் அவ்வளவு போதுமானதாக அவனுக்குப் படவில்லை. அப்பாவைப் பற்றிக்கூட ஆச்சரியமான செய்திகள் கேள்விப்படுவீர்கள் என்று அவள் கூறியதும். "தோகை மயில்" "முள்ளம் பன்றி" என்ற வார்த்தைகளும் அவன் நெஞ்சிலே உருண்டோடின.

இப்படி அரசனுக்குக் குழப்பத்தையும், புலவருக்கு அதிர்ச்சியையும் உண்டாக்கிவிட்டு, முத்துநகை வாட்ட சாட்டமான குதிரையொன்றில், வீரன் உடையில், காட்டுப் பாதையில் கடும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய முதல் இலட்சியம், செழியன் எங்கு கொண்டு செல்லப்பட்டான் என்று கண்டுபிடிப்பது, அதற்காகவே அவள் காட்டுப்பாதையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தாள். இருங்கோவேளும் அவனது ஆட்களும் காடுகளில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவள் கேள்விப்பட்டதை வைத்து அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். நெடுநேரம் குதிரையை விரட்டியதால் அதுவும் களைத்துத் தானும் களைத்துக் கடைசியில் காட்டிலுள்ள ஒரு சுனையின் அருகே இறங்கினாள். சுனையில் நீர் அருந்தி, குதிரையையும் மேய விட்டு விட்டுக் கொஞ்சம் காலாற்றிக் கொள்ள இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது சிறிது தொலைவில் யாரோ வரும் சந்தடி கேட்டது. பாறைகளைப் போல் அமைந்து காட்டாற்று நீரை வழியவிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பெருங்கற்களுக்கிடையே நின்று உற்றுக் கவனித்தாள். ஒரு அழகான யுவதி; அங்கமெல்லாம் தங்கநிறம் பெற்ற தளிர்க்கொடி! ஆடியசைந்து அந்தச் சுனையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

தன்னருகேதான் அவள் வருகிறாள் எனக்கண்ட முத்துநகை. வேகமாக ஓடி, ஒரு நீண்ட கல்லில் படுத்துக் கொண்டாள்.

சுனையருகே வந்துவிட்ட அந்தப் பருவச்சிட்டு, படுத்துறங்கும் வீரனைக் கண்டாள்! திடுக்கிட்டாள்! ஓடிவிட எண்ணினாள்; ஓடவும் முயன்றாள். ஆனால், அவளது விழிகள் அவளைப் போக விடாமல், வேலியிலே சிக்கிக் கொண்ட ஆடைபோல், உறங்கும் வீரனின் மீது சிக்கிக் கொண்டன.

தூங்குவதுபோல் பாசாங்கு செய்தால் சில நேரங்களில் மிகுந்த வேதனை ஏற்பட்டுவிடும். யாருக்காகப் பயந்து கொண்டு தூங்குவதுபோல் நடிக்கிறோமோ அவர்கள் பக்கத்திலே இருக்கிறார்களா, போய்விட்டார்களா என்பது தெரியாது. தூக்க நடிப்பில் இமைக் கதவுக்குள்ளே உருண்டு கொண்டிருக்கும் விழிகள் வேறு காட்டிக் கொடுத்து விடும்.

தூங்கும் வேடதாரி எவ்வளவு நேரந்தான் மூச்சை ஒரே மாதிரி இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருக்க முடியும்? அப்படி இப்படிப் புரண்டு படுப்பதுபோல் நடித்து, எந்த நேரத்திலே வேண்டுமானாலும் விழிகளை மெல்லத் திறந்து, நடப்பதை அறிந்து கொள்ளலாம்.

அப்படிச் செய்வதற்கும் வழியில்லாமல் போய்விட்டது முத்துநகைக்கு. காரணம் அவள் படுத்திருந்த பாறையில் புரள்வதற்கே வகையில்லை. அண்மையிலே எந்தச் சலனமும் இல்லை. அருவி ஓசையையும் அடவி அசைவையும் தவிர! அங்கு வந்த அழகு மங்கை இருக்கிறாளோ? அல்லது போய் விட்டாளோ? ஒரே குழப்பம். வந்த மங்கையோ எப்பாடுபட்டேனும் தன் கண்களை மீட்டுக் கொள்ளத் துடித்தாளே தவிர வேறெதுவும் செய்திடவில்லை!

அதனால் அவர்களிருவரையும் பொறுத்தவரையில் அமைதி குடிகொண்டிருந்தது. வெளித் தோற்றத்திற்கு! உள்ளமோ வெள்ளப்பாகு போல் உருகிக் கொண்டிருந்தது அந்தப் பெண்ணுக்கு! முத்துநகையினால் அதிக நேரம் நடிப்பதற்கு இயலவில்லை. அதனால் அவளும் ஒரே சோகத்தில் படுத்துக் கிடந்தாள். நாழிகை நீண்டு கொண்டே போனது.

முத்துநகைக்கு இப்போது ஒரு புது யோசனை உதயமாயிற்று. அந்தப் பெண் அருகில்தான் இருக்கிறாளா அல்லது போய்விட்டாளா என்பதை அறிந்து கொள்ள அவள் ஒரு தந்திரத்தைக் கையாண்டாள். 'தான் தூங்குகின்ற பாறையிலிருந்து புரண்டு கீழே விழுவதுபோல் பாசாங்கு செய்தால் அவள் ஓடிவந்து பிடிக்கக்கூடும். அப்படி ஓடிவந்து பிடித்தால் அவள் இருக்கிறாள் என்று அர்த்தம்' என எண்ணிக்கொண்டு முத்துநகை தூக்கக் கலக்கத்தில் 'உஸ்' என்று சோம்பல் முறித்துக் கொண்டு பாறையின் விளிம்பில் புரண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே அந்தப் பெண் ஓடிப் போய் முத்துநகையைக் கீழே விழாமல் பிடித்து விட்டாள்.

அதற்குமேல் முத்துநகையால் தூங்குவதுபோல் பாசாங்கு செய்ய முடியவில்லை. நன்றாக உறங்கியவள் போலக் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஆச்சரியத்தோடு சுற்றுமுற்றும் பார்த்து எழுந்து பாறையில் உட்கார்ந்தாள். எதிரே நிற்பவளைப் பரக்கப் பரக்க விழித்து வியப்போடு உற்று நோக்கினாள்.

அவளோ, தன் நீலக் குறுநயனங்கள் காலின் பெரு விரல் நகத்தில் பிரதிபலிக்குமாறு குனிந்து கொண்டு நின்றாள். அந்த யுவதியின் அழகைக் கண்டு முத்துநகை வியந்தாள். அலையெனச் சுருண்டு கிடந்த அவள் கூந்தலின் எழிலும், அம்புமுனை எனத் தக்க விழியும், கீற்று மின்னல் போன்ற கீர்த்திமிக்க இடையும் - அருவியே ஒரு பெண்ணுருக் கொண்டு அருகே வந்ததோ என எண்ணத் தோன்றும் விதத்தில் இருந்தன.

குனிந்த தலை நிமிர்வாள் எனச் சிறிது நேரம் காத்திருந்தாள் முத்துநகை. அவளோ நிலத்திற்குக் கண்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவளைக் கொண்டு ஏதாவது புதுச் செய்திகள் தெரிந்து கொள்ளக்கூடும் என்ற ஒரு ஆசையும் முத்துநகைக்கு எழுந்தது. நாட்டு எல்லைகளைக் கடந்து வெகு தொலைவிலேயுள்ள காட்டு நடுவிலே இப்படி ஒரு காரிகையைக் கண்டது பற்றிய ஆராய்ச்சிக் குழப்பம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது.

'இவள் யாராக இருக்கும்? பார்த்தால் நன்றாக வாழ்ந்தவளைப் போல்தானே தெரிகிறது... இவள் குடும்பம் இப்போது நொடித்துவிட்டி ருக்குமா? முகத்திலே ஏன் அத்துணைச் சோகம் கப்பியிருக்கிறது? அந்தச் சோகத்திரையையும் விலக்கிவிட்டுக் கூத்து மேடையின் தீப்பந்த ஒளிபோல ஒரு புதிய உணர்ச்சிப் பிரவாகம் அவள் வதனத்தில் படர்ந்திடக் காரணம் என்ன? என்னை அவள் காதலிக்கிறாளா? அய்யய்யோ... என்னை அவள் ஆண் மகன் என்றே நம்பிவிட்டாளா? இப்படி ஒரு விபரீதம் இந்த வேடத்தால் ஏற்படும் என்று எனக்குத் தெரியாதே! சரி. இவளைப்பற்றி எப்படி விவரம் அறிந்து கொள்வது?' என்றெல்லாம் முத்துநகையின் நெஞ்சத்தில் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்தன.

"நீ யாரம்மா?" என்று கேட்டுவிட வாய் திறந்தாள். அதற்குள் திடீரென ஒரு தடை; குரல்! அவளுக்குப் பெண் குரல் என்று புரிந்துவிட்டால் என்ன செய்வது? ஆணைப் போலக் குரலை மாற்றிப் பேச அவள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இப்போதுதானே வேடம் போட்டிருக்கிறாள். போகப் போகத்தானே வேடமும் நடிப்பும் பூரணத்துவம் பெறும்! அதனால் அவள் தன் குரல் மூலம் தானே தன்னைக் காட்டிக் கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஊமைபோல் நடந்துகொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். மெதுவாக அந்தப் பெண்ணின் அருகே சென்று கைஜாடை செய்து “நீ யார்?” என்று கேட்டாள்.

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. புன்னகை புரிந்தவாறு. கன்னங்கள் சிவக்க, "வலிக்கிறதே." என்று கழுத்து அழுவதையும் பொருட்படுத்தாமல் குனிந்து கொண்டாள்.

முத்துநகை அவளது முகவாய்க் கட்டையைத் தன் கையால் திருப்பித் தன் முகத்தை அசைத்தவாறு ஊமைச் சைகையில் மறுபடியும் கேட்டாள் யாரென்று.

அந்தப் பெண் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட நகர்ந்து சென்று, ஓடி நின்று, முத்துநகையைப் பார்த்து, "ஏன் உங்களுக்குப் பேசத் தெரியாதா?" என்று வீணைத் தந்தி அதிர்ந்தது போன்ற தொனியில் கேள்வி யொன்றைத் தொடுத்தாள்.

கேட்டதும் முத்துநகை, இடையில் செருகியிருந்த ஓலைகளில் ஒன்றையெடுத்து, ஏதோ அவசர அவசரமாக எழுதினாள். அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அவள் அந்த ஓலையை வெட்கத்தோடு கரம் நீட்டி வாங்கிப் படித்துப் பார்த்தாள்.

"நான் ஒரு இலட்சியத்திற்காகப் பேசாத நோன்பு கடைப்பிடித்து வருகிறேன்; அந்த இலட்சியம் இன்னும் சில காலத்தில் நிறைவேறி விடும். அதற்குப் பிறகே நான் ஊமை நிலையிலிருந்து விடுபடுவேன்" என்று எழுதப் பட்டிருந்த அந்த வாசகம் அவளுக்குப் பேராச்சரியத்தை உண்டாக்கியது.

"உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள் அவள்.

உடனே முத்துநகை தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, அதில் கோக்கப்பட்டிருந்த முத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.

"ஓகோ-முத்துவா உங்கள் பெயர்!" என்றாள் அவள்.

முத்துநகையும் "ஆம்" என்பது போல் தலையசைத்து விட்டு “உன் பெயர் என்ன?" என்ற கேள்வியை விரல் மூலம் கேட்டாள்.

அதற்கு அந்தப் பெண் உடனே பதில் சொல்லி விடவில்லை. அவள் கண்கள் கலங்கிவிட்டன. முகம் கறுத்து விட்டது. தலையில் கை வைத்தவாறு திரும்பிக் கொண்டாள். முத்துநகை அவளை விடவில்லை. அருகே சென்று அவளது தோளில் கை வைத்து திருப்பினாள். அந்தச் செய்கை அந்தப் பாவைக்கு எப்படிப்பட்ட இன்ப உணர்ச்சியை அளித்தது தெரியுமா?

ஆனாலும் அழுதவாறு முத்துநகையை நோக்கி "உங்கள் இலட்சியம் என்ன?" என்று கேட்டாள். “சொல்ல முடியாது" என்று சைகை மூலம் தெரிவித்தாள் முத்துநகை.

"உங்கள் இலட்சியத்தைத் தெரிவித்தால்தான் என் பெயரைச் சொல்லுவேன்!" என்று கண்ணீர் விட்டவாறு அவள் கூறினாள்.

முத்துநகை கீழே குனிந்து பார்த்தாள். சுற்றும் முற்றும் நோக்கினாள். இறுதியில் அவள் தேடியது கிடைத்தது. ஆமாம். ஒரு கரித்துண்டு! அந்தக் கரித்துண்டைக் காட்டி "இது என்ன?" என்றாள் ஊமை ஜாடையில்!

"கரி!" என்றாள் அந்தக் கட்டழகி.

பிறகு முத்துநகை தன் காலைக் காட்டிக் கேட்டாள் அவள் "இது கால்" என்றாள்.

இரண்டையும் சேர்த்துக் காட்டி முத்துநகை, மறுபடியும் கேள்வியை ஜாடை மூலமாக எழுப்பினாள்.

"கரி -கால்... கரி கால்... கரிகால். ஆமாம்; கரிகால் சோழன்! அவனுக்கு என்ன?" ஆவலுடன் கேட்டாள் அந்தப் பெண்.

முத்துநகையோ, சிரித்துக்கொண்டே வாளை உருவிப் பழி தீர்ப்பதுபோல உயர்த்திக் காட்டினாள்.

"கரிகால் சோழனைப் பழி வாங்குவதுதான் இலட்சியமா?"- சிறிது சத்தம் போட்டே கேட்டாள் அந்தப் பாவை!

முத்துநகை, "ஆமாம்" என்பது போல் தலையை ஆவேசமாக ஆட்டிக் கண்களை உருட்டி விழித்துப் பழி வாங்கும் உணர்ச்சிக்கு ஏற்றாற்போல் நடித்தாள். நடித்தவள் சும்மாயிருக்கவில்லை; "இப்போது சொல் உன் பெயர் என்ன?" என்ற பழைய கேள்விக்கணையை மீண்டும் பூட்டினாள்.

"என் பெயர் தாமரை! என்னிடம் இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள்!" என்று அந்தப் பெண் சொல்லி முடிப்பதற்குள் விம்மி விம்மி அழுது விட்டாள்.

முத்துநகைக்கோ ஒரே பயம்! எங்கே திடீரென்று வாய் தவறிப் பேசி விடுவோமோ என்ற பயம்தான் அது! அதற்காக ஒவ்வொரு பொழுதும் தன்னை எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டாள். தாமரையிடம் ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும் என்ற அவளது எண்ணம் வலுப்பெற்றது. காரணம், கரிகாற்சோழனை நான் பழி வாங்கப் போகிறேன் எனத் தெரிவித்ததும் அவளது முகத்தில் ஒரு ஒளி பளிச்சிட்டு மறைந்ததை முத்துநகை இதயத்தில் குறித்து வைத்துக் கொண்டாள். ஓலையை எடுத்து எழுதினாள். அதைத் தாமரையிடம் காட்டினாள்.

அதில்,

"உன்னைப்பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் சொல்!

இங்ஙனம், முத்து"

என்று எழுதியிருந்தது.

தாமரை, ஓலையைப் பார்த்துவிட்டு, முத்துநகையின் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். இருவர் விழிகளும் சிறிது நேரம் உறவாடின. முத்துநகைக்கு வேடிக்கையாக இருந்தது. "எவ்வளவு பைத்தியக்காரப் பெண் இந்தத் தாமரை!" என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள்.

தாமரைக்குத் தன் உள்ளத்தில் தேங்கிக் கிடப்பதையெல்லாம் கொட்டி விட வேண்டும் என்ற துடிப்பு உதயமாகி விட்டது. அவள் ஈர உதடுகள் அதற்காகப் பிரியத் தொடங்கி விட்டன.

அந்தச் சமயத்தில் நாலைந்து பெண்கள் ஏக காலத்தில் "தாமரை! தாமரை!" என்று அழைக்கும் ஒலி கேட்டு. அவள் திடுக்கிட்டாள். தன் அன்புக்குரிய முத்துவைப் பார்த்து, "நாளை இதே இடத்தில் இதே நேரத்தில் சந்திக்கிறேன்" என்று அவசர அவசரமாகக் கூறிவிட்டு ஓடி விட்டாள். முத்துநகை சந்தடியின்றி அப்படியே நின்றாள்.

சிறிது நேரம் கழிந்ததும், தாமரை சென்ற வழியே மெதுவாகத் தொடர்ந்து சென்று கவனித்தாள். தாமரையும் இன்னும் நான்கைந்து பெண்களும் அருவியின் ஒரு பகுதியிலே ஆடையின்றிக் குதூகலமாகக் குளித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டாள். அவளுக்கே ஒரு வித வெட்கம், கண்களை மூடிக்கொண்டாள். தன்னை ஆண்மகன் என்று தாமரை நினைத்துக் கொண்டதால் ஏற்பட்ட புதுவெட்கம் போலும் அது! அருவியிலே ஆடிப் பாடிக் களித்துக் கரையேறி ஆடைகளை உடுத்திக் கொண்ட அந்த ஆரணங்குகள், கொஞ்ச தூரம் நடந்து சென்று புதர் மறைவுகளில் கட்டப்பட்டிருந்த குதிரைகளில் ஏறிக் கொண்டனர். முத்துநகைக்கு குழப்பம் அதிகமாயிற்று. அவளும் திரும்பி ஓடிவந்து தன் குதிரையின் மீது ஏறிக் கொண்டாள்.

மெதுவாக அந்தப் பெண்கள் கூட்டத்தைத் தொடர்ந்து புறப்பட்டாள். தாமரை முதலியவர்களின் குதிரைகள் புறப்பட்ட நேரத்தில் மட்டும் மெதுவாக நடக்கத் துவங்கிப் பிறகு நாலுகால் பாய்ச்சலில் ஓடின. முத்துநகையும் தன் குதிரையின் குளம்படிச் சத்தம் அவர்களுக்குக் கேட்காத வகையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவர்களைத் தொடர்ந்து சென்ற அவள் பார்வை திடீரென வேறுபக்கம் பாய்ந்தது. என்ன வியப்புக்குரிய காட்சி! அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை, தனக்கு மிகவும் தெரிந்த 'யவனக் கிழவர்’ வெகு தொலைவில் ஓர் உயர்ந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து, தாமரை முதலியவர்களின் குதிரைகளையும், தன் குதிரையையும் தன்னையும் உற்று நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவளால் முன்னும் போக முடியவில்லை, பின்னும் போக முடியவில்லை.

இருங்கோவேள் தானே யவனக் கிழவராக இருக்க வேண்டும் என்று அவள் செய்திருந்த யூகம் வலுப்பெற்று விட்டது. அவன் கையில் சிக்கினால் தன் இலட்சியம் எதுவும் நிறைவேறாமல் போய்விடும் என்ற பயமும் அவளைப் பதற வைத்தது. குதிரையை வேகமாகத் தட்டி அதன் விலாப்புறத்தில் நுனிக்கால் குத்தி நாலுகால் பாய்ச்சலில் பறக்கவிட்டாள்.

யவனக் கிழவரும் விடவில்லை. அதிவேகமாகத் தொடர்ந்து துரத்தினார். காடு மேடுகளில் இரண்டு குதிரைகளும் காற்றைப் போல் நுழைந்து சென்றன.

தனக்கோ போரிடும் திறமை கிடையாது. இளமையிற் கற்ற குதிரையேற்றமும் சிறிது வாட்பயிற்சியும் இருங்கோவேள் போன்ற மாவீரர்களை எதிர்த்து நிற்கப் பயன்படாது என்ற பயம் அவளை மேலும் வேகமாக ஓடச் செய்தது. யவனக்கிழவர் வரும் குதிரையின் குளம்படிச் சத்தம் முத்துநகையின் இருதயத் துடிப்பால் எழும் ஒலியின் முன்னே நிற்க முடியுமா என்பது சந்தேகமே!

எங்கெங்கோ ஓடிச் சுற்றிக் கடைசியில் யவனக் கிழவரிடமிருந்து தப்பித்துக் கொண்டாள்.

மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில் சந்தடியின்றி அவளும் குதிரையும் நின்றுகொள்ளவே, யவனக் கிழவர் ஓடி ஏமாந்து விட்டார். கிழவரின் குதிரைக் குளம்படி ஓசை குறைந்ததும் முத்துநகை தன் குதிரையை வேறு பக்கம் திருப்பினாள்.