ரோமாபுரிப் பாண்டியன்/40. அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்
40
அகஸ்டஸ் மன்னனின் விருந்தோம்பல்
மறுநாள் காலை
ரோமாபுரி செனேட் -பாராளுமன்றம் - கோலாகலமான மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து திளைத்திட்டது. அதற்குக் காரணம் தமிழகத்திலிருந்து செழியன் கொண்டு வந்திருந்த பலவகையான பரிசுப் பொருள்களே. முத்துச் சரங்கள், யானைத் தந்தங்கள். மெல்லிழைத் துகில்கள், கிராம்பு, மிளகு, சந்தனம் மற்றும் வாசனைப் பொருள்கள் முதலானவற்றை தொட்டுப் பார்ப்பதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் செனேட் உறுப்பினர்கள் தங்கள் வயது முதிர்ச்சியினையும் மறந்து ஆர்வம் காட்டினர். ஆர்ப்பரித்தனர்.
பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் செனேட் உறுப்பினர்களுக்குச் சிறப்பான முறையிலே செழியனைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் அகஸ்டஸ்.
"மாண்புமிகு உறுப்பினர் அவர்களே! எந்தநாடு இந்த உலகிலேயே தொன்மைமிக்கதாகச் சொல்லப்படுகிறதோ; எந்த நாட்டுப் பொருள்கள் ரோமானியர்களை மட்டுமின்றி மேனாட்டார், கீழ்நாட்டார் எல்லாரையுமே கவர்ந்துள்ளனவோ, எந்த நாட்டினுடைய தாய்மொழி, அதாவது தமிழ்மொழி இனிமை மிக்கதென்றும் பழைமை வாய்ந்ததென்றும் பாராட்டப்படுகிறதோ அந்த நாட்டிலிருந்து வந்திருப்பவரே இந்த தூதுவர். இவருடைய நாடு செழிப்பு மிகுந்தது என்று சொல்வார்கள். அந்தச் செழிப்பு என்னும் பொருளை உணர்த்தத்தானோ என்னவோ இவரது பெயரும் 'செழியன்' என்பதாகும். வயதில் - வடிவத்தில்தான் இவர் இளைஞரே அன்றி அறிவில் - ஆராய்ச்சியில் - பண்பில் பழக்கத்தில் இவர் முதியவரே. நாம் தெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுகிற மேன்மை தங்கிய 'ஜூலியஸ் சீசர்' அவர்களைப் போலவே இன்று கீழை நாடுகளிலே இணையற்ற மாமன்னராகத் திகழ்பவர் கரிகால் பெருவளத்தான் என்னும் சோழப் பேரரசர் ஆவார். அவருடைய உயிரினைத் தக்க சமயத்தினில் காப்பாற்றிட்ட பெருமையும் படைத்தவர் இச்செழியன். நம்முடைய ரோமானியத் தூதுவர் இவர்களுடைய பாண்டிய நாட்டுக்குச் சென்றிருப்பதைப் பற்றித் தாங்கள் யாவரும் முன்பே அறிவீர்கள். அவருக்கு மாற்றாகவே இப்போது இவர் இங்கே வந்துள்ளார். இவருடைய வருகையால் நம் இரு நாடுகளுடைய வணிகத்தொடர்புகள். கலச்சார உறவுகள் மேலும் வளர்ந்திடும் என்று நான் திண்ணமாக நம்புகிறேன். நம்முடைய மக்களின் சார்பாக அரசின் சார்பாக செனேட்டின் சார்பாகத் தமிழகத்திலிருந்து வந்துள்ள இந்த இளந் தூதுவரை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்."
-அகஸ்டஸ் இவ்வாறு அறிமுகப்படுத்தி அமர்ந்திடவும் அந்த செனேட் மண்டபமே அதிர்ந்திடும்படியாகக் கரவொலிகள் எழுந்து முழங்கின.
அவருடைய உரையினை சிப்பியோ அவ்வப்போது மொழி பெயர்த்திடுவதைக் கேட்கக் கேட்கச் செழியனின் மேனியெல்லாம் புளகமுற்றுச் சிலிர்த்தது. தேனில் விழுந்திட்ட வண்டெனக் கிறங்கிப் போனான் அவன்.
பின்னர் தன் நன்றியுரையினை அவன் நவின்றிட எழுந்திட்டான்.
"மாட்சிமை தங்கிய அகஸ்டஸ் பெருமகனார் அவர்களே, மாண்புமிக்க செனேட் உறுப்பினர்களே! தங்கள் நல்வரவேற்பிற்கு என் நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய தலைவரின் அன்பார்ந்த பாராட்டு மழையிலே நனைந்து போன நான், என் நாவினைப் புரட்டி நாலுவார்த்தை பேச முடியாத அளவுக்கு இன்பத்தில் சிலிர்த்து நிற்கிறேன். திக்கெட்டும் புகழொளி வீசிடும் தங்களுடைய ரோமாபுரிப் பேரரசின் கீர்த்தியினையோ வீர வரலாற்றையோ நான் ஒன்றும் புதிதாகப் புகன்றிடத் தேவையில்லை. எனினும் ஒரு சிலவற்றைப் பற்றி குறிப்பிடாமல் போனால் கடமையிலிருந்து வழுவிய குறைபாட்டுக்கு இலக்கானவன் ஆகிவிடுவேன். தங்கள் மாநகரிலே மலர்ந்துள்ள கட்டடக் கலை என் மனத்தினை மிகவும் கவர்கிறது. செங்கல்லாகத் தாம் கண்ட ரோம் நகரைச் சலவைக் கல்லாக மாற்றிய சிற்பியே அகஸ்டஸ் என்னும் புகழ் மகுடத்தினை வருங்கால வரலாற்றாசிரியர்கள் பொருத்தமாகப் புனைந்து மகிழ்ந்தாலும் நான் வியப்படைந்திட மாட்டேன். இத்தகைய கட்டட அமைப்புத் திட்டங்களால் எத்தனையோ ஏழைகளையும் வாழவைக்கிறார் தங்கள் தலைவர். அடுத்து, மக்களுக்கும் மக்களின் பிரநிநிதிகளாகிய தங்களுக்கும் அவர் தந்திடுகின்ற மதிப்பு என் இதயக் கிண்ணியில் தேனைச் சொரிகின்றது. 'மாமன்னன்' என்று மற்றவர்கள் தம்மை அழைப்பதையே வெறுக்கின்ற அளவுக்கு அவர் அதிகாரப் பித்து அற்றவராக உண்மையான குடியரசுவாதியாகத் தம்மை உயர்த்திக் கொண்டுள்ளார். குடிமக்களின் எண்ணப்படியேதான் எங்கள் நாட்டுக் கொற்றவர்களும் கோலோச்சுகிறார்கள் என்றாலும், இது எங்களுக்குப் புதுமையான அரசியல் நெறியே என்பதனை ஒப்புக் கொள்வதற்கு நான் வெட்கப்படவில்லை.
ஆட்சித் துறையில், அரசு நிர்வாகத்தில் 'பிரின்செப்ஸ் அவர்கள் கொணர்ந்துள்ள சீர்திருத்தத் திட்டங்கள் என் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. என் நெஞ்சைக் கவர்ந்திட்ட மேலும் ஒரு புதுமை, காலத்தைக் கணக்கிடத் தங்கள் நாட்டவர் கண்டுபிடித்துள்ள 'காலண்டர்' நாட்காட்டி முறை. இவை போன்று தங்கள் ரோமாபுரிப் பேரரசுக்குப் பெருமை தரக்கூடியவைகளை எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும் நேரம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் எல்லாருடைய நல்லெண்ணத்திற்கும் எங்களுடைய வேந்தர் பெருவழுதிப் பாண்டியர் சார்பிலும் தமிழகம் முழுமையின் சார்பிலும் மீண்டும் ஒரு முறை நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
செழியனின் உரையினை சிப்பியோ மொழி பெயர்த்திடக் கேட்ட செனேட் உறுப்பினர்கள் அடிக்கடி கரவொலிகளை எழுப்பித் தங்கள் களிப்பினைப் பறைசாற்றினர். அவனுடைய வாக்கு வன்மையினையும், எதனையும் நுணுகி நோக்கிடும் அறிவுக் கூர்மையினையும் அவர்கள் தங்களுக்குள் மெச்சிக் கொண்டனர்.
சில நொடிகளில் ஒரு பருமனான மனிதர் எழுந்து நின்றார். அவருடைய சட்டையிலே காணப்பட்ட ஊதா நிறப் பட்டைக்கோடு, காலணியிலே தென்பட்ட பிறை வடிவமான அலங்கார அணி, மார்பின் குறுக்காகப் போர்த்திருந்த 'டோகா' என்னும் மேலங்கி ஆகியவற்றைக் கொண்டு அவரும் ஒரு செனேட் உறுப்பினரே என்னும் தெளிவினைப் பெற்றிட்டான் செழியன்.
“புதிதாக வந்திருக்கும் தூதுவரிடம் அவருடைய நாடு, மொழி களைப் பற்றி எனக்கு ஏற்பட்டுள்ள சில ஐயப்பாடுகளைத் தெளிவு படுத்திக் கொள்ளலாமா?" என்று அகஸ்டஸை நோக்கிக் கேட்டார் அந்த செனேட் உறுப்பினர்.
"ஓ! தாரளமாகக் கேட்கலாமே! நீங்கள் எந்த ஐயப்பாட்டினை எழுப்பினாலும் அவர் சரியான விளக்கந்தந்திடுவார் என்றே கருதுகிறேன்."
அகஸ்டஸ் இவ்வாறு பகர்ந்திடவும் செழியன் - செனேட் உறுப்பினர் இருவருக்குமிடையே இணைப்புப் பாலமாகத் தட்டுத் தடங்கலின்றி மொழி பெயர்த்திடத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் சிப்பியோ.
"திராவிட இனத்தவராகிய நீங்கள் இப்போதுள்ள தமிழகப் பகுதிக்குத் தெற்கே இருந்துதான் வந்தீர்கள் என்று சொல்கிறார்களே, சரிதானா?" என்று தம் முதல் கணையினைத் தொடுத்திட்டார் செனேட் உறுப்பினர். "தெற்கே இருந்து வந்தோம் என்பது சரியல்ல. இப்போதைய தமிழகம் முன்னொரு காலத்தில் தெற்கே பரந்து கிடந்திட்ட இலமூரியக் கண்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பகுதியாக இணைந்து இருந்தது என்பதே பொருத்தமான கூற்றாகும். அந்தக் கண்டத்தில் பாய்ந்திட்ட பஃறுளியாறு ஓங்கி உயர்ந்து நின்றிட்ட குமரிமலை எல்லாவற்றையுமே கடல் விழுங்கிவிட்டது" என்றான் செழியன்.
"மலையைக்கூடக் கடல் விழுங்க முடியுமா என்ன?" என்று தம் வியப்பினைத் தெரிவித்து விட்டார் செனேட்டர்.
அதற்குச் செழியன் விடையளிக்கு முன்னரே அகஸ்டஸுக்கு நெருங்கிய நண்பரும், பெருங்கவிஞருமான வெர்ஜில் என்பவர் எழுந்து "இமயமலையே ஒரு காலத்தில் கடலாகத் தான் இருந்தது என்கிறபோது குமரி மலையைக் கடல் விழுங்கியதில் என்ன வியப்பு இருக்கிறது? கடல் மலையாவதும், மலை கடலாவதும் இயற்கைக் கொந்தளிப்பின் விளைவுகளே அன்றி வேறல்ல" என்று சிரித்திட்டார்.
"இந்த நேரத்தில் இன்னொரு பேருண்மையைக் கூறவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இமயமலையும் கங்கையாறும் கடற் பகுதிகளாக இருந்த காலத்தில் சிந்து நதி பாயும் நிலப்பரப்பிலே எங்கள் முன்னோர்களான திராவிட இனத்தவர்களே சிறப்போடு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய நாகரிகமே நாளாவட்டத்தில் அங்கிருந்து கிளம்பி பாபிலோனிய நாகரிகமாக -போனிசிய நாகரிகமாக- கிரேக்க நாகரிகமாக - எகிப்திய நாகரிகமாகப் பல வடிவங்கள் எடுத்துப் பரவியதாக எங்கள் நாட்டு அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்" என்றான் செழியன்.
"ஆமாம், ஆமாம்! நானும் கூட அப்படித்தான் ஒரு கிரேக்க அறிஞர் சொன்னதைக் கேட்டதாக நினைவு" என்றார் கவிஞர் வெர்ஜில்.
உடனே ஹொரஸ் என்னும் இன்னொரு கவிஞர் எழுந்தார்.
"இப்பொழுது உள்ள தமிழகத்தில் உள்ள திராவிடர்களுக்கும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள மக்களுக்கும் உறவு முறைகள் உண்டா?"
"அறவே இல்லை; இடையில் எழுந்த மலைகளே எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய தடுப்புச் சுவர்கள் ஆகிவிட்டன. நெடுங்காலத்திற்கு முன்னரே அங்கேயே தங்கியிருக்க நேர்ந்திட்ட திராவிடர்கள் வேண்டுமானால் புதிதாக வந்த இனத்தவரோடு கலந்து அவர்களாகவே மாறியிருக்கலாம். ஆனால் வடக்கே எத்தகைய சமூக மாறுதல் ஏற்பட்ட போதிலும் தென்பகுதியில் வாழ்கின்ற திராவிடர்களாகிய நாங்கள் அத்தகைய மாறுதல் எதற்கும் இலக்காகாமல் தனித்துத் தான் வாழ்ந்து வருகிறோம்."
"இப்போது வடக்கில் மட்டும் உள்ள ஆரியர் பிற்காலத்தில் தெற்கேயும் வரலாம் இல்லையா?"
"அதைப்பற்றி இப்போதே நான் எப்படி ஆருடம் கூற முடியும்?"
"உங்கள் நாட்டினருக்கு ஆருடம் பற்றிக்கூடத் தெரியுமா?" என்று வியப்போடு வினவினார் வேறொரு செனேட்டர்
"ஏன் இல்லை? ஆனால், விண் அறிவினை அடிப்படையாகக் கொண்டிட்ட ஆருடம், சோதிடம் - போன்றவற்றை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் அணுகி வளர்த்திடாமல் வேறெங்கோ திசை திருப்பிக் கொண்டு போய்விட்டதால் தான் என் போன்றவர்களுக்கு அவற்றிலே நம்பிக்கை இல்லையேயன்றி, அந்தக் கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களும் எங்கள் நாட்டில் இருந்தார்கள்; இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, எல்லாத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவும் எங்கள் நாட்டவருக்கு உண்டு. அதனால்தான் தமிழில் மருத்துவ நூல், நீதி நூல், இலக்கண நூல், இலக்கிய நூல் முதலான பலதரப்பட்ட நூல்களும் இருக்கின்றன."
"போகட்டும், உங்களுடைய முத்து, பொன்னை விட உயர்ந்ததா?" என்று திடீரென்று ஒரு வெடிகுண்டை வீசினார் முதலில் வினா எழுப்பிய செனேட்டர்
"கண்டிப்பாக உயர்ந்ததுதான்! அதிலே ஐயப்பாடு ஏது? எங்களுடைய ஒரேயொரு முத்துவுக்கு அதைப்போல மூன்று மடங்கு எடையுள்ள பொன்னை வைத்தால் கூட அதற்கு ஈடாகுமா?" - அறைகூவலே விடுத்தான் செழியன்.
அவனுடைய மிடுக்கான குரல், ஆணித்தரமான வாதங்கள். தயக்கம் துளியும் இன்றி உடனுக்குடன் சுறுசுறுப்பாக அளிந்த விடைகள் எல்லாமே அங்கே குழுமியிருந்த அத்தனை பேரையுறே மூக்கின்மீது விரல் வைத்திடுமாறு தூண்டின.
செனேட்டின் அன்றைய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் எல்லா உறுப்பினர்களுமே போட்டி போட்டுக் கொண்டு செழியனின் கரத்தைப் பற்றிக் குலுக்கினர். கட்டித் தழுவினர்; வாழ்த்து மலர்களைச் சொரிந்தனர்; 'தகுதியான திறமைசாலியைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார் பாண்டிய வேந்தர்' என்று பாராட்டு மகுடத்தையும் புனைந்தனர்.
அன்று மாலை வேளை.
தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தின் உப்பரிகையில் நின்றவாறே தன் பார்வையைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் செழியன். சற்றுத் தொலைவில் டைபர் நதி கடல் குஞ்சாகக் காட்சி அளித்திட்டது; அதிலே படகுகளும்-நாவாய்களும் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.
தனிமைச் சிறையில் சிக்கிவிட்ட செழியனுக்கு சிப்பியோ பேச்சுத் துணைக்கு இல்லாமற் போனது பெருங்குறையாக மனத்தினை வெறுமைப்படுத்தி வாட்டிற்று. இத்தனை நாட்களாக அங்கே இங்கே அசைந்திடாமல் அவனோடேயே ஒட்டிக் கொண்டு துணைபுரிந்திட்ட அந்த ரோமானிய இளைஞன் தன்னுடைய குடும்பத்தினரையும் போய்ப் பார்த்து வர வேண்டாமா?
செழியனின் விழிகள் சட்டென்று கீழே சென்றன. அவன் தங்கியுள்ள இல்லத்தினை நோக்கி ஜூனோ வந்து கொண்டிருந்தாள்.
வேறு யாரோடும் அல்ல; தன்னந்தனியளாக!
இயற்கைக் காட்சிகள் பரிமாறிடும் எழில் விருந்தினில் தன் விழிகளை மிதக்கவிட்டுக் கொண்டிருந்த செழியன். ஜூனோவைக் கண்டதும், அவளை வரவேற்றிடும் பொருட்டுத் தன் அறைக்குள் திரும்பினான்.
அவனது மனத்தினுள்ளே புதியதொரு சிக்கல் முளைத்து விட்டது; தனக்கோ இலத்தீன் மொழி தெரியாது. அவளுக்கோ தமிழ் தெரிந்திருக்க வழியில்லை. இந்நிலையில் இருவரும் எவ்வாறு நெடுநேரம் தனியாக உரையாடிட இயலும் என்பதே அந்தச் சிக்கல்.
இரண்டு, ஊமைகள் சந்தித்துக் கொண்டால் எட்டி இருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்! அத்தகைய சைகை நாடகத்தினைத்தான் நாங்கள் இருவரும் நடித்திட வேண்டுமோ? என்று எண்ணிய அளவில் உள்ளூர அவனால் சிரிக்காமல் இருந்திட முடியவில்லை.
மேகங்களில் மிதந்து வரும் மணிப் புறாவினைப் போலச் சாம்பல் நிற உடைகள் அணிந்து, 'மெல்லியல்' என்னுஞ் சொல்லுக்கேற்ப மெல்ல வந்து சேர்ந்திட்டாள் ஜூனோ.
அறையினுள் நுழைந்திட்ட அவள், அல்லி மொட்டாகத் தன் கரங்களைக் குவித்து வணக்கம் புரிந்திட்டாள். செழியனும் மறுவணக்கம் செய்தான். தன் எதிரே கிடந்திட்ட இருக்கையில் அமர்ந்திடுமாறு கையினால் சைகை காட்டினான்.
அவளோ உடனே அங்கு அமர்ந்திடவில்லை. அந்த இருக்கையின் அருகினில் வந்து அதனை ஒரு கரத்தினால் பற்றியவாறே அவனை நேருக்குநேர் நோக்கினாள்; இமைக்க மறந்து நோக்கினாள்.
முட்டை வடிவு கொண்ட முகப்பூ மலர்ந்திடத் தேன் சொட்டும் செவ்விதழ்கள் மெல்லவே விரிந்திட, வெள்ளரிவிதைப் பற்கள் வெள்ளிபோல் மின்னிச் சற்றே தெரிந்திடத் தலை சாய்த்துப் பார்த்திட்டாள்.
வாய் மலரைத்தான் திறந்து வார்த்தைத் தேன் சிந்தவில்லை. ஆயினும் அவள் விழிகள் ஆயிரம் கதைகள் பேசின!
பறிகொடுத்த பொன்னகையை மறுபடியும் அடைந்தவள் போல் பருகினாள் அவன் முகத்தைப் பார்வையால், பாவையவள்!
கூர்வேலாய்ப் பாய்ந்து வந்த கோதையின் விழிவீச்சை நேராகச் சந்திக்கும் வலுவேது செழியனுக்கு? நிலைகுலைந்தான்; ஒருகணத்தில்! நாணம்தான் இடம் மாறத் தலை குனிந்தான்; தளிர்க்கொடியாள் தாமரையை நினைத்திட்டான்; அலை பாயும் கடலெனவே ஆடிற்று அவன் இதயம்!
'மலையென்றும், மடுவென்றும் மண்ணிலே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியதோடு நின்றிருக்கக் கூடாதா? உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்னும் பிளவுகளுக்கு விளை நிலமாய் மனித இதயங்களிலும் மேடு - பள்ளங்களை உண்டாக்கிவிட்ட ஒருவன் எவ்வாறு நடுநிலைமை பிறழ்ந்திடாத இறைவனாக இருந்திட முடியும்?' என்னும் அறிவாராய்ச்சி யினாலோ என்னவோ ஆண்டவன் இருந்திடுவதாகக் கூறப்படும் அற்புதங்களையெல்லாம் நம்புவதே இல்லை செழியன்.
ஆனால், இந்த ஜூனோவைப் பார்த்திடும்பொழுது அந்தத் தாமரைதான் ஆண்டவனிடம் வரம் பெற்றுத் தேவதைகளைப்போல் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு இப்படித் திடீரென்று ரோமாபுரி மண்ணிலே குதித்திருப்பாளோ என்று வேடிக்கையாக எண்ணிடலா னான் அவன்.
தாமரைக்குள்ள அதே மிதப்புக் கன்னம் - அதே சங்குக் கழுத்து - அதே இளஞ்சிரிப்பு - அதே கிறங்கும் பார்வை எல்லாமே அவளேதான்! எனினும் அவளிடமிருந்து இவளைப் பிரித்துக் காட்டிடும் சில வேறுபாடு களும் இல்லாமல் இல்லை.
தாமரையோ இளவரசிக்கே உரிய முறையில் கச்சையும் சேலையுமாக ஒயிலாக உடையுடுத்துப் பொற்சிலை போல் காட்சியளிப்பாள்; இந்த ஜூனோ தனது நாட்டுப் பாணியில் மெல்லிய அங்கியொன்றினை மேலேபோர்த்துக் கொண்டு தலையையும் ஓரளவு முக்காடிட்டவாறு பொம்மைபோல் தோற்றமளிக்கிறாள். தாமரைக்குத் தொடையினைத் தொடும் அளவுக்குக் கருமையான கூந்தல்; ஜூனோவுக்கோ செம்மறிக் கடாவின் மேலுடல் போலச் சுருள் சுருளான தலைமுடி. தாமரை, கண்களுக்கு அஞ்சனம் மட்டுமே தீட்டியிருப்பாள். இந்த ஜூனோவோ இமைக் கூட்டினிலிருந்து புருவம் வரையுள்ள அகலமான விழி மேடு எங்கும் காயாம்பூ நிறத்தில் வேறு எதனையோ மினுமினுவென்று பூசியிருக்கிறாள்.
'இவள் தாமரையாகவே இருந்திடக் கூடாதா?' என்று ஏங்கித் தவித்திட்டான் செழியன்; 'எகிப்து மண்ணிலே பிறந்து ரோமாபுரியிலே அகஸ்டஸின் செல்ல மகள் போல் வாழ்ந்து வரும் இவள் எப்படித் தாமரையாக முடியும்?' என்று தன்னைத்தானே சமாதானமும் படுத்திக் கொண்டான், அடுத்த கணமே!
ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது; சிப்பியோ செப்பியதைப்போல், மற்றவர்களுக்கெல்லாம் கனல் துண்டாய்க் காட்சி அளித்திட்ட அவள் செழியனைப் பொறுத்தமட்டில் அனலை வீசிட மாட்டாள் என்பதே அது. அவளுடைய பசித்த பார்வைக்கு - மயக்கும் முறுவலுக்கு வேறு என்ன தான் பொருள்?
ஆனால் - தாமரை கொலுவேறிக் கோலோச்சிடும் என் இதய பீடத்தில் இந்த ஜூனோவுக்கு இடமா?' - எண்ணங்கள் சிலிர்த்தெழுந்தன செழியனின் நெஞ்சினுள். அதே சமயம்...
"உங்களுக்கு இங்கே ஏதாவது வசதிக்குறைவாக இருக்கிறதா?" என்று கேட்டாள் ஜூனோ.
செழியனுக்கு ஒரே வியப்பாகப் போய்விட்டது, அவளுடைய வினாவினைக் கேட்டதும்.
"உனக்குத் தமிழ்க் கூடத் தெரியுமா?" என்று உணர்ச்சிப் பெருக்கோடு மறு கேள்வியினைத் தொடுத்திட்டான்.
"ஓ தெரியுமே! நான் எகிப்து நாட்டில் இருந்திட்ட பொழுதே எங்கள் பேரரசி கிளியோபாத்ராவிடம் மஸ்லின் துணிகளை விற்பதற்காக இந்தப் பக்கத்து யவனக்கிழவர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர் உங்கள் நாட்டுக்கும் வாணிகத்தை முன்னிட்டுப் போய் வருவாராம். அவர்தான் உங்களுடைய தமிழ் மொழியின் இனிமையைப்பற்றி எடுத்துச் சொல்லி எனக்கும் கற்றுக் கொடுத்தார்.
"உனக்குத் தமிழ் தெரியும் என்பதை அகஸ்டஸ் பெருமகனாரும் அறிவாரா?"
"நன்றாக அறிவார்! ஆனால் அண்மைக் காலம்வரை இந்த உண் மையை அவரிடம் உரைத்திடவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிடவில்லை. நீங்கள் முத்தாரத்தைப் பரிசளித்துவிட்டுத் திரும்பினீர்கள் அல்லவா? அதற்குப் பிறகுதான் எனக்கும் தமிழ் தெரியும் என்று அவரிடம் கூறினேன். தமிழைப் பற்றிய சிறப்புக்களையும் எடுத்துரைத்தேன். நான் சொன்னவற்றை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவர் செனேட்டர்களிடம் அவ்வளவு அருமையாக உங்களை அறிமுகப் படுத்தினார்".
"அப்படியா? நீ புகல்வதைக் கேட்கக் கேட்க எனக்கு எவ்வளவு பூரிப்பாக இருக்கிறது தெரியுமா? எங்கள் நாட்டைப் பற்றி - மொழியைப் பற்றி - சரியான முறையில் உங்கள் ஆட்சித் தலைவரிடம் எடுத்துச் சொன்ன உனக்கு எவ்வாறு நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. அது சரி; உனக்குத்தான் தமிழ் தெரியுமே! பிறகு ஏன் இலத்தீன் மொழியில் முதல் முதலில் என்னை வரவேற்றாய்?"
"என்ன, அப்படிக் கேட்டு விட்டீர்கள்? வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரை வரவேற்றிடும்பொழுது சொந்த நாட்டுக்குச் சிறப்பிடம் தருவதுதானே சரியான முறை ஒழுங்கு -மரபு?"
"ஆமாம், ஆமாம்; நீ மொழிவது முற்றிலும் சரி தான்."
சிறிது நேரம் அமைதியில் கழிந்திட்டது. இருவருக்குமே மேலும் என்ன பேசுவது என்னும் திணறல் போலும்!
"எங்கள் ரோமாபுரி உங்களுக்கு எப்படி இருக்கிறது? பிடித்திருக்கிறதா?' -ஜூனோவின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வார்த்தைகள் தான் இப்படி வந்தனவே அன்றி, அவளுடைய பளிங்கு விழிகளோ, 'என்னைப் பிடித்திருக்கிறதா?' என்று கேட்பது போலவே பேசின!
அவளுடைய பார்வையின் பொருளைப்புரிந்தும் புரியாதவனைப் போல. "ஓ! மிக நன்றாகப் பிடித்திருக்கிறதே!" என்றிட்டான் செழியன்; தன்னுடைய பரந்த முகத்தினை இப்போது தரையை நோக்கியே கவிழ்த்துக் கொண்டான் அவன்.
"இங்கே, நீங்கள் பார்த்துக் களித்திட வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. ரோமாபுரியையே பளபளவென மின்னும் அழகுத் திருநகராக மாற்றுவதில் முனைந்து ஈடுபட்டுள்ளார் எங்கள் அகஸ்டஸ் பெருமகன்!"
"சிப்பியோ கூட அப்படித்தான் சொன்னார்."
"ஒரு நாளைக்கு, 'ஸ்டாடிலஸ்டராஸ்' அரைவட்டக் கலையரங்குக்குச் செல்வோம். அங்கே விலங்குகள் - வீரர்கள் - வேடிக்கையான முறையில் சண்டை போடுவார்கள்."
"அப்படியா" என்று வியப்போடு கேட்ட செழியன் 'உன்னுடனா வரச்சொல்கிறாய்?' என்று உள்ளூர எண்ணிக் கொண்டான்.
சற்றைக்கெல்லாம் தேர்ச் சாரதி ஒருவன் வெளியில் நின்றவாறே அறைப் பக்கம் தலையைக் காட்டினான்.
"ஓ! நீ வந்துவிட்டாயா?" என்று ஜூனோ, செழியனை நோக்கி, “சரி கிளம்புங்கள் விரைவாக" என்றாள்.
திகைப்பின் நிழல் சட்டென்று தன் முகத்தினில் படிந்திட, "எதற்கு...எங்கே...?" என்று மென்று விழுங்கியவாறே கேட்டான் செழியன்.
'களுக்' கென்று பாளைச் சிரிப்பொன்றை வெடித்திட்ட ஜூனோ, "ஏன், என்னோடு தனியாகப் புறப்படுவதற்குப் பயமாக இருக்கிறதா? உங்கள் முகமே மாறிவிட்டதே! எவ்வளவோ பெரிய வீரர் என்று கேள்விப்பட்டேன். இப்படி பயந்து சாகிறீர்களே! பரவாயில்லை; நான் உங்களை ஒன்றும் செய்துவிடமாட்டேன். நாம் இப்போது போகப் போவது எங்கள் ஆட்சித் தலைவரின் இல்லத்திற்கு, ஒரு விருந்திலே கலந்து கொள்வதற்கு!" என்று குறும்பு நெளிந்திட அவனை நோக்கினாள்.
"விருந்தா? எதற்கு?"
"எங்கள் நாட்டுப் புகழ்மிக்க எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், கலைவல்லுநர்கள் ஆகியோரை உங்களுக்கு அறிமுகப்படுத்திடவேண்டுமாம்... அதற்காகத்தான் தனியாக இந்த விருந்து" - ஜூனோ இவ்வாறு புதிரை அவிழ்த்த பின்னரே மனத்தெம்பு வந்தவனாக அவளோடு புறப்பட ஆயத்தமானான் செழியன்.
சிறிது நேரத்தில் ஓர் அலங்காரமான தேர் ஜூனோ, செழியன் இருவரையும் சுமந்து கொண்டு அகஸ்டசின் இல்லம் நோக்கி விரைந்தது.
'டிரிப்லினியம்' என்று அழைக்கப்படும் விருந்துக்கூடத்தில் அவர்கள் நுழைந்ததுமே, "ஏன், சிப்பியோ வரவில்லையா?" என்று வினவினார் அகஸ்டஸ்.
"இல்லை, தம்முடைய பெற்றோரைக் கண்டு வருவதற்காகப் பிற்பகலிலேயே போய்விட்டாராம் அவர்" என்றாள் ஜூனோ.
"விருந்திலே நான் அறிமுகம் செய்வதை உடனுக்குடன் மொழி பெயர்த்துக் கூறினால்தானே நம் தூதுவர் உடனுக்குடன் விளங்கிக் கொள்ள முடியும்?.... ம் ஒன்று செய்தால் என்ன? உனக்குத்தான் தமிழ் தெரியும் என்று சொன்னாயே!"
"ஆம்..?"
"அப்படியானால் நீயே மொழிபெயர்ப்பு வேலையை மேற்கொண்டு விடேன்!"
"தங்கள் கட்டளைப்படியே மொழி பெயர்த்துக் கூறிட நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஆனால்..."
"என்ன ஆனால்...? நம்முடைய விருந்துகளில் பொதுவாகப் பெண்கள் இருப்பதை நாம் அனுமதிப்பதே இல்லையே என்று தயங்குகிறாயா?"
"ஆம்"
"நீயும் எங்களோடு சேர்ந்து விருந்தினை அருந்தினால்தானே தவறாகும்! நீ வெறும் மொழி பெயர்ப்பு மட்டுந்தானே செய்யப் போகிறாய்? ஆகவே மற்றவர்கள் மறுப்பேதும் சொல்லமாட்டார்கள்; அஞ்சாதே!" என்று ஊக்கமூட்டினார் அகஸ்டஸ்.
எதிலுமே எளிமையைக் கடைப்பிடித்திடுவதைப் பெரிதும் விழைந்திடும் ரோமானியப் பேரரசின் ஆட்சித் தலைவரான அகஸ்டஸ், உணவு முறைகளிலும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால் அன்றைக்கு என்னவோ விருந்து வகைகள் சற்று ஆடம்பரமாகவே பரிமாறப்பட்டன.
வேக வைக்கப்பட்ட கிளிஞ்சல் மீன்கள், பன்றியிறைச்சி வறுவல், தோல் உரிக்கப்பட்ட முழுக் கோழி, கோதுமை ரொட்டி, அவியல் செய்யப்பட்ட முட்டைக் கோசு, பீட்ரூட், வெள்ளரிக்காய்கள், ஆப்பிள் பழங்கள், பேரிக் காய்கள்-என்று பல்வேறு உணவுப் பண்டங்கள் அங்கே தட்டுத் தட்டாகக் கட்டுப்பாடின்றி நிரம்பி வழிந்தன. போதை அளித்திடும் ஒயினும் ஆங்காங்கே கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றித் தரப்பட்டது.
செழியனுக்கு இறைச்சி வகைகள் அவ்வளவாகப் பிடித்திடவில்லை. மீன்களை மட்டும் சுவை பார்த்தான். காய்கறிகளை விரும்பியுண்டான். ஜூனோ அவன் அருகிலேயே நின்று கொண்டு "அது நன்றாக இருக்கும். இது நன்றாக இருக்கும்..." என்று அவனை விடாப்பிடியாக உண்ண வைத்த வண்ணம் இருந்தாள்.
உணவை அருந்தியவாறே, விருந்திலே கலந்து கொண்டுள்ள புகழ் பெற்ற கவிஞர்கள் - அரசியல்வாதிகள் - கலை வல்லுநர்கள் - முதலா னோரை அறிமுகம் செய்திடலானார் அகஸ்டஸ்.
"இதோ இருக்கிறாரே. இவர்தான் மேசனஸ், நுட்பமான அரசியல் அறிஞர். ஆக்டியம் சண்டையில் நான் அந்தோணியின் படைகளைத் தோற்கடிக்கச் சென்ற வேளையில் இங்கே ரோமாபுரியில் அமைதி காத்திட்ட பெருமை இவரையே சாரும். தேர்ந்த நிருவாகத் திறமை படைத்தவர். எல்லாவற்றையும்விட இலக்கியத் தாகம் மிகுந்தவர். எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஒரு குழுவாக இணைத்து அவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர். நெடுங்காலமாகவே இனிய நண்பர்.....
"இதோ இவர்தான் கவிஞர் வெர்ஜில், எங்கள் நாட்டின் பழம் பெருமை வாய்ந்த மாட்சியினைப் பழச்சுவையினையும் மிஞ்சிடும் வண்ணம் பாக்களாக வடித்திடுவதில் வல்லவர்; வரலாற்றறிவு மிகுந்தவர்; கிரேக்கர்களுக்கு ஹோமர் எவ்வாறோ அப்படித்தான் ரோமானியர்களாகிய எங்களுக்கு இவர் மாபெரும் கவிஞர் அகஸ்டஸ் இங்ஙனம் இயம்பிடும் பொழுதே மேசனஸ் இடைமறித்தார்.
“கவிஞர் வெர்ஜில் அவர்கள் வெறும் பாவாணர் மட்டுமல்ல; பெரிய தொலைநோக்காளரும் (தீர்க்கதரிசியும்) கூட ! பிற்காலத்தில் பிறந்திடப் போகும் ஓர் ஆண் குழந்தை இந்த உலகிற்கே ஒரு பொற்காலத்தைக் கொணரப் போவதாக இவர் முன்பே எழுதி வைத்துள்ளார். நம்முடைய அகஸ்டசின் தங்கை ஆக்டேவியாவுக்கும் அந்தோணிக்கும் பிறந்திட்ட மார்செல்லஸ் என்னும் பையன்தான் அத்தகைய ஒளி விளக்காகத் திகழ்வானோ என்று நாங்கள் எல்லோரும் எண்ணினோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அவன் இறந்து போனான். என்றாலும் கவிஞர் வெர்ஜிலின் ஆருடம் பலித்தே தீரும் என்று நாங்கள் எல்லோரும் உறுதியாக நம்புகிறோம்."
மேசனஸ் இப்படிக் கூறி முடித்ததும் அகஸ்டஸ் மேலும் தொடர்ந்திட்டார்.
"அதோ... இருக்கிறாரே அவர்தான் கவிஞர் ஹோரேஸ், பாடல்களிலே நகைச்சுவையினை வழியவிடுவதில் கைதேர்ந்தவர், போலி வாழ்க்கை வாழ்பவர்களும் வாய்ச்சொல்லில் வீரர்களும் இவருடைய நையாண்டிக் கணைகளால் நையப் புடைக்கப்படுவார்கள். அதற்காக ஓரவஞ்சனையாகவோ ஒரு சார்பாகவோ குறை கண்டு பிடிப்பதனையே தொழிலாகவும் இவர் கொண்டிடவில்லை. சிரிக்க வைப்பதோடு நில்லாமல், சிந்திக்க வைக்கவும் செய்வார்; சீர்திருத்த நோக்கங்களுக்கு ஆக்கம் அளிப்பவர்...."
அகஸ்டஸ் தொடர்ந்து விருந்தினரை அறிமுகம் செய்தார்:
"அதோ, அந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் மாபெரும் எழுத்தாளர் லிவி. கவிஞர் வெர்ஜில் எங்ஙனம் காப்பியம் இயற்றுவதில் வல்லவரோ, அவ்வாறே வரலாற்று நூல்களை உரைநடையில் வடித்துத் தள்ளுவதில் இவர் தலை சிறந்தவர்."
இன்னும் டிபுலெஸ், பிராபெர்சியஸ் முதலானவர்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டே சென்றிட்ட அகஸ்டஸ் கோப்பையில் ஊற்றி வைக்கப்பட்ட ஒயினைச் செழியன் குடிக்காமலேயே இருப்பதைக் கவனித்துவிட்டார்.
"ஏன், ஒயின் உங்களுக்குப் பிடிக்காதா?"
"இல்லை." என்று தலையை அசைத்திட்டான் செழியன்.
"வியப்பாக இருக்கிறதே! சோமரசமே பருகிடக்கூடிய கீழை நாட்டுப் பகுதியிலிருந்து வந்துவிட்டு ஒயின் பிடிக்கவில்லை என்கிறீர்களே!" -அகஸ்டஸ் இவ்வாறு பகர்ந்திடவும் கவிஞர் வெர்ஜில் குறுக்கிட்டார்.
"சோமரசம் பருகுகிறவர்கள் விந்திய மலைக்கு வடக்கே வாழ்ந்திடும் ஆரியர்களே அன்றி இவர்கள் அல்லர்."
"அப்படியானால் உங்கள் தமிழ்நாட்டில் மதுப்பொருளே கிடையாதா?" என்று செழியனை நோக்கி ஓர் ஐயப்பாட்டினை எழுப்பினார் அகஸ்டஸ்.
“ஏன், 'கள்' என்று ஒரு போதைப் பொருள் இருக்கிறது."
"அது எப்படி இருக்கும்? ஒயினைப்போல் உடல் நரம்புகளுக்கு உணர்ச்சியூட்டக்கூடியதா?"
அது பாலைப் போல் வெண்மையாகத்தான் இருக்கும். உழைக்கும் பாட்டாளிகளின் அலுக்கையை அகற்றக்கூடிய உயிர்ச்சத்து அதில் இருப்பதாகச் சிலர் உரைப்பார்கள். ஆப்பம் முதலான உணவுப் பண்டங்கள் நன்றாக வெந்து மலர்வதற்குச் சில தாய்மார்கள் அதனைப் பயன்படுத்தியதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும், மயங்கித் தடுமாறிடும் அளவுக்குக் கள்ளே கதியென்று கிடப்பவர்களை எங்களுடைய மக்கள் அவ்வளவாக மதிப்பதில்லை."
"நீங்கள் கூறுவது உண்மைதான் தூதுவரே! அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான். மதுப்பொருள்களை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்துவதோடு நின்று கொள்வதே நல்லது. அதனால்தான் நான் கூட எங்கள் நாட்டிலுள்ள மற்றவர்களைப் போல் ஒயினை மிகுதியாகப் பருகுவதில்லை"- அகஸ்டஸ் தம் வார்த்தைகளை முடிக்கு முன்னரே மேசனஸ் என்பவர் எழுந்தார்; கரகரப்பான குரலில் இவ்வாறு கூறலானார்:
"தூதுவரே! இங்கே வந்திடாத இன்னொரு தீவிரமான இளம் எழுத்தாளரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லி வைப்பது என்னுடைய கடமையாகும்; ஓவிட் என்பது அவரது பெயர். காதலைப் என்பது அவரது பற்றி வருணிப்பதிலே அவர் மாபெரும் மன்னன். ஆண் - பெண் உறவுகளை...
"நிறுத்து மேசனஸ், நிறுத்து! சிறுமையைச் சேர்ப்பவர்களைப் பற்றியெல்லாம் இங்கே விளம்பரப்படுத்திட தேவையில்லை. போலிப் புகழுக்காக -வயிற்றுப் பிழைப்புக்காக - காமக்களஞ்சியங்களை அவிழ்த்துவிட்டு இளம் உள்ளங்களைக் கெடுப்பவனெல்லாம் தரமான எழுத்தாளனாக ஆகிவிட முடியுமா? எழுதுகோலை எடுத்தவன் தன்னைச் சுற்றிலும் உள்ள அசிங்கத்தைப் 'படம்' வரைந்தால் மட்டும் போதாது; அதனை அகற்றுவதற்குரிய 'பாடம்' புகட்டுகின்ற சிந்தனைத் தெளிவு உள்ளவனாகவும் அவன் இருந்திட வேண்டும்!"
"ஆமாம்; எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஏன் வீணாகக் கதை அளக்கிறாய்?"-மேசனஸ் இப்படிக் குறுக்கிட்டு வெட்டியதும் அகஸ்டஸின் விழிகள் இரண்டும் இரு நெருப்புத் துண்டங்களாகச் சிவந்து விட்டன.
ஆயினும் அவர் உடனே ஆத்திரத்தைக் கக்கிடவில்லை வார்த்தைகளின் மூலம். அவரது பார்வை எதிரே சிரித்துக் கொண்டிருந்த மலர்க் கொத்தின் மீதே நிலை குத்தி நின்றிட்டது. தம்முள் சீறி எழுந்திடும் சினத்தினைத் தணித்துக் கொள்ளத்தானோ என்னவோ, கோப்பையில் பாதிக்குமேல் எஞ்சியிருந்த ஒயினைத் தம்முடைய வழக்கத்திற்கு மாறாக ஒரே விழுங்கில் மடமடவென்று விழுங்கனார்.
குழுமியிருந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாரும் மேசனஸ் இப்படிக் குத்தலாக அகஸ்டஸை சாடியதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தனர். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் ஊமை நாடகமாகவே தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர். சில காலமாகவே அகஸ்டஸ்-மேசனஸ் நட்புப் பாலத்திலே வெடிப்பு விழுந்துவிட்டதை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றாலும், வெளிநாட்டுத் தூதுவர் முன்னிலையில் தங்கள் ஆட்சித் தலைவரை மட்டந்தட்டிப் பழி வாங்கிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திடவே இல்லை.
கலகலப்பாக விளங்கிய விருந்துக்கூடம் சட்டென்று கல்லறைக் கூடம் போல் அமைதியில் ஆழ்ந்திட்டது செழியனுக்கு வருத்தத்தையே அளித்திட்டது. மேசனஸ் ஏதோ வரம்புமீறித் தாக்கியிருக்க வேண்டும் என்று அவன் ஊகித்துக்கொண்டான். ஆனால் அவருடைய தாக்குதலை ஜூனோ மொழி பெயர்த்திடவில்லை. தன் உதடுகளை இறுக்கி மூடிக்கொண்டு விட்டாள் அவள்.
சிறிது நேரத்தில் ஹொரேஸ் எழுந்தார். குரலைக் கனைத்துக் கொண்டார்:
"மதிப்பிற்குரிய மேசனஸ் அவர்களே! நம்முடைய ஆட்சித் தலைவரை இவ்வளவு அலட்சியமாகத் தாங்கள் பேசியது எனக்கு மிகுந்த துயரினைக் கொடுக்கிறது. இந்த ரோமாபுரி நாட்டிலே இலக்கிய வளர்ச்சிக்காகக் கவிஞர் வெர்ஜிலைப் போன்றவர்களையும் ஆதரித்துத் தாங்கள் ஆற்றியுள்ள அரும்பணியை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. அதற்காக அகஸ்டஸ் பெருமகனாரையே ஏதும் அறியாதவர் என்று பேசுவதா? "நம்முடைய அகஸ்டஸ் இந்த நாட்டின் காவலர் மட்டுமல்லர்; கவிதையிலும் அவர் கை தேர்ந்த சிற்பி!" என்று தாங்களே ஒரு முறைக்குப் பலமுறை அவரைப்பற்றி உயர்வாகப் புகழ்ந்திருக்கிறீர்கள். அன்று அப்படி வானளாவப் போற்றிவிட்டு இன்று இப்படி எடுத்தெறிந்து பேசிடலாமா என்று எண்ணிப் பார்த்திட வேண்டுகிறேன்."
- ஹொரேஸ் இவ்வாறு கூறியதும் அடுத்துக் கவிஞர் டிபுலெஸ் என்பவர் எழுந்தார். அவருக்கு இன்பியல் பாட்டுகளை பாடுவதை விட இரங்கற்பாக்களை - துன்பியல் செய்யுட்களை இயற்றுவதிலேயே தனி இன்பம். போர் என்றாலே உள்ளம் பொருமுகின்றவர். அமைதி என்றாலோ அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. மேசனஸ் எங்ஙனம் ஓர் இலக்கிய வட்டத்தை ஏற்படுத்தினாரோ அவ்வாறே அவருக்கு போட்டியாக வாலெரியஸ் மெசல்லா என்பவரும் பிறிதொரு இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். அந்தக் குழுவினைச் சார்ந்தவரே டிபுலெஸ்.
"எழுத்துலகின் ஆக்கத்திற்குப் பாடுபடும் வள்ளல் என்று புகழப்படும் மேசனஸ் அவர்கள், நம்முடைய ஆட்சித் தலைவரின் அறிவாற்றலைக் குறைத்து மதிப்பிடுவதை கண்டு-ஏன், எடை போடவே தெரியாமல் இருப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைகிறேன்; வெட்கப்படுகிறேன். இங்கே இல்லாத ஒருவரைப் பற்றி எதற்குப் பேசிட வேண்டும்? மேலும், நேற்றுவரை யாரைத் தூற்றினாரோ அவரையே இன்று எதற்காகப் போற்றிட வேண்டும். அதுவும், அயல்நாட்டுத் தூதுவர் ஒருவர் முன்னிலையில் நம்முடைய ஆட்சித் தலைவரைப் பற்றி நாமே இடித்துரைக்கலாமா? ஏளனப்படுத்தலாமா? ஆகவே, தம்முடைய ஆணவப் பேச்சுக்காக மேசனஸ் அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்டிட வேண்டும்" -டிபுலெஸ் இவ்வாறு அழுத்தமாக உரைத்திடவும் முதுபெருங்கவிஞர் வெர்ஜில் உட்பட அனைவருமே, "ஆம் ஆம்" என்று கூச்சலிட்டனர்.
விருந்து மண்டபமே அதிரும்படியான அந்த முழக்கத்தினைக் கேட்டதும் மேசனசுக்கும் ஆத்திரம் வந்து விட்டது. அதற்காகத் தம் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திடவும் அவர் ஆயத்தமாக இல்லை.
"நான் எதற்காகவும் எவரிடத்தும் மன்னிப்புக் கேட்டிடத் தேவையே இல்லை. நீங்கள் அத்தனை பேரும் ஒன்று கூடினாலும் என்னை இம்மிகூட அசைத்திட முடியாது. உங்கள் சலசலப்புக்கெல்லாம் நானா அஞ்சுகிறவன்?" என்று அவர் விரைந்து அங்கிருந்து வெளியேறி விட்டார்.
"வெட்கம்! வெட்கம்!"... என்று தம் செவிகளே கிழிந்திடும்படி எழுந்திட்ட கூக்குரல்களையெல்லாம் அவர் பொருட்படுத்திடவே இல்லை!
சில விநாடிகள் சென்றதும் அகஸ்டஸின் பரந்த முகத்தினில் வறட்டுப் புன்னகையொன்று இழையலாயிற்று. ஜூனோவிடம் "இனி, நீ மொழி பெயர்க்கலாம்." என்ற அவர், செழியனை நோக்கினார்.
"மேசனஸ் இவ்வாறு விருந்தின் நடுவே எழுந்து போனமைக்காக நீங்கள் ஒன்றும் வருந்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். முதுமையின் காரணமாகவோ என்னவோ அவரது மனநிலை இப்பொழுதெல்லாம் சரியாக இருப்பதில்லை. எனவே, அவருடைய செய்கையை நீங்கள் பொருட்படுத்திடவேண்டாம்" என்றார் அகஸ்டஸ்.
"அவருடைய செய்கையைக் கண்டு எனக்கு வருத்தம் ஏதும் இல்லை; ஆனால் தங்கள் மனம் நொந்திடும் அளவுக்கு நிலைமை மாறியதைக் கண்டுதான் என்னால் வருந்திடாமல் இருக்க முடியவில்லை. தங்கள் பொறுமை, பொறுப்புணர்ச்சி, பெருந்தன்மை எல்லாமே என் உள்ளத் தினை மிகவும் கவர்கின்றன." என்று மறுமொழி பகர்ந்திட்டான் செழியன்.