ரோமாபுரிப் பாண்டியன்/41. ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு
41
ஜூனோ, சமைத்த தமிழ்ச் சோறு
மகிழ்ச்சி ஆரவாரத்தின் இறுதியில் மௌனத்தில் புதைந்துவிட்ட அந்த விருந்து மண்டபத்தினின்றும் செழியன் வெளியே வந்திட்ட பொழுது ரோமாபுரி நகரமே இருளில் மூழ்கியிருந்தது.
ஆயினும் அந்தப் 'பாலத்தின்' குன்றிலிருந்து சற்றுக் கீழே பார்த்திட்டபோது மரங்களை மொய்த்திடும் மின்மினிப் பூச்சிகளைப் போல், ஆங்காங்கே விளக்குகள் எரிவதும் தனி அழகாகத்தான் இருந்தது.
வாசல்வரை வந்து தன் கையைக் குலுக்கி விடை கொடுத்துவிட்டு அகஸ்டஸ் திரும்பிய பின்னர், செழியன் தனக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்த தேரினை நோக்கி நடந்தான். அவன் பின்னாலேயே வந்திட்ட ஜூனோ "சரி, போய் வருகிறீர்களா?" என்றாள்.
"ஏன், நீ வரவில்லையா?" என்று கேட்டான் செழியன்.
"நான் எதற்கு வரவேண்டும்?"
"வந்து... ஒன்றுமில்லை... ஒருவேளை நீ வருவாயோ என்று தான் கேட்டேன்." என்று மென்று விழுங்கினான் செழியன்.
"நான் வரத்தான் வேண்டுமென்று தாங்கள் விரும்பினால், நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்"
அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
"என்ன இப்படித் திகைத்துப்போய் நிற்கிறீர்கள்? ஆசை-அச்சம் இரண்டும் தங்களை அலைக்கழிக்கின்றன இல்லையா?" - 'களுக்'கெனச் சிரித்தவாறே வினவினாள் ஜூனோ.
"ஆசையாவது அச்சமாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை!" -சமாளித்திட முயன்றான் செழியன்.
"ஏன் மறைக்கிறீர்கள்? சற்று முன்பு விருந்து மண்டபத்திலே மேசனசுக்கும் மற்ற கவிஞர்களுக்கும் வார்த்தைப் போர் நடைபெற்றதே; அதை என் மூலம் அறிந்திடவும் தங்களுக்கு ஆசை; அதற்காக என்னை இப்போது இந்த இரவிலே தனியாக அழைத்துச் சென்றால் மற்றவர்கள் என்ன கதை கட்டி விடுவார்களோ என்றும் தங்களுக்கு அச்சம், அப்படித்தானே?'
தன்னுடைய நெஞ்சில் நெளிந்திடும் நினைவலைகளை எவ்வாறு இவ்வளவு சரியாக இந்த ஜூனோ கண்டுபிடித்தாள் என்று வியப்புற்ற அந்த தமிழகத் தூதுவனுக்கு, "ஆமாம், ஆமாம்; உன் ஊகம் சரிதான்" என்று தலையாட்டுவதைத் தவிர வேறு வழி ஏது?
"இருந்தாலும் நீங்கள் இப்படியெல்லாம் அஞ்சிச் சாகக்கூடாது! மேலும், இந்த ரோமாபுரி நகரிலே அகஸ்டஸ் பெருமகனார் முதல் சாதாரண அடிமைவரை என் இயல்பைப் பற்றி - நடத்தையைப்பற்றி அறிவார்கள். நானே ஒரு வேளை தவறி நடந்திட்டால்கூட யாரும் இங்கே நம்பிடமாட்டார்கள். ஏனென்றால் ஆண்களைப் பொறுத்தமட்டில் நான் அவ்வளவு பொல்லாதவள்" என்று நகைத்திட்ட ஜூனோ செழியனின் மறுமொழி எதையும் எதிர்பார்க்காதவளாகத் தேரினில் போய் ஏறிக்கொண்டாள்; அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.
சாரதியிடம் ஜூனோ ஏதோ கூறினாள். அடுத்த கணமே. வரும்பொழுது இருந்த விரைவினைக் காட்டிலும் கடுங்காற்றுப்பட்ட கருமேகத் திரள்போலக் கடுகிப் பறக்கலாயின புரவிகள்.
ஆனால், ஒவ்வொரு திருப்பத்தினையும் கடந்திடும் பொழுது, மிகுதியாகவே குலுங்கிப் பாய்ந்திட்டது தேர். அவ்வாறு குலுங்கிடும் பொழுதெல்லாம், ஜூனோவின் கட்டுக்குலையாத பட்டுடல், செழியன் மீது மெல்ல விழுவதும், பின்னர் விலகுவதுமாக வேடிக்கைகள் புரிந்திட்டது.
செழியனுக்கோ... அந்தப் பருவக் கிள்ளையின் மெல்லிய உராய்வினால் மேனியெங்கும் புல்லரிப்பு - புது வெப்பம் பரவிட நேர்ந்தாலும், அந்தச் சமயத்தில் தாமரையின் நினைவு வந்து அவனுக்கு எச்சரிக்கைக் கவசமாய்த் துணை புரிந்திட்டது.
தேரின் குலுக்கல்களால் தனக்கும் செழியனுக்கும் ஏற்பட்டிடும் மேனி நெருக்கங்களைப் பற்றிய நினைவே இல்லாதவளைப் போல, விருந்து மண்டபத்திலே புயலினை எழுப்பிய சொற்போர்களைப் பற்றி விரித்துரைத்தாள் ஜூனோ.
அவளுடைய கூற்றுகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு வந்திட்ட செழியன் "மேசனஸ் இந்த அளவுக்குப் பழி வாங்கிடும் உணர்ச்சியுள்ளவராக இருக்கிறாரே; அவர் ஒருவேளை தமக்கென்று ஆட்களைத் திரட்டி அகஸ்டசை வீழ்த்திட முயல்வாரோ." என்று வினவினான்.
"ஊம்... அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே நடக்காது. மேசனஸ் இருக்கிறாரே, அவர் இப்போது பல் இல்லாத நச்சுப்பாம்பு; காலொடிந்து விட்ட கிழட்டுப்புலி! அவருடைய பேச்சை இனி யார் கேட்பார்கள்?"
"என்றாலும் அவர் பெரிய செல்வச் சீமான் இல்லையா?"
"சீமானாக இருந்தால் மட்டும் போதுமா? எதையும் செய்துவிட முடியுமா?"
"போகட்டும், மேசனசுக்கு மனைவி மற்றும் எல்லாரும் இருக்கிறார்களா? பெருங்குடும்பமா?"
"ஏன், அவர் வீட்டிலே பெண் எடுக்கலாம் என்கின்ற எண்ணமா?" -கேலியாகச் சிரித்திட்டாள் ஜூனோ.
"ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தால் இப்படி குறுக்கே வெட்டுகிறாயே? மேலும் அவரது குடும்பத்தைப் பற்றி எதற்காகக் கேட்கிறேன் தெரியுமா?"
"எதற்கு?”
"தம் தந்தைக்கு ஓர் அவமானம் எதிர்ப்பு -என்றால் அதனைத் தகர்த்தெறியக் கிளர்ந்தெழும் அளவுக்கு மேசனசுக்குப்பிள்ளைகள் இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளத்தான்."
"அவருடைய பிள்ளைகளைப் பற்றியெல்லம் எனக்கொன்றும் தெரியாது."
"நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே! நேற்று வரை அகஸ்டஸின் நெருங்கிய நண்பர்தானே மேசனஸ்?" செழியனின் இந்த வினாவுக்கு உடனடியாக விடையிறுத்திடாத ஜூனோ, சில நொடிகள் சென்றதும் மிகவும் மெல்லிய குரலில் இப்படிக் கேட்டாள்:
"ரோமாபுரியிலுள்ள பெரிய மனிதர்களின் குடும்பங்களைப் பற்றியோ அகஸ்டஸின் பகைவர்களைப் பற்றியோ அறிந்துகொண்டு உங்களுக்கு என்ன ஆகப்போகிறது? நான் கேட்கிறேனே என்று கோபித்துக் கொள்ளக்கூடாது; தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையே உறவை வளர்க்க வந்தீர்களா? இல்லை, உளவறிய வந்தீர்களா?" ஜூனோ இப்படி மடக்கியதும் செழியன் உண்மையிலேயே வெல வெலத்துப் போய்விட்டான். தன் மீது தவறான ஐயப்பாடு கொண்டு விட்டாளோ என்றும் அஞ்சினான். எனினும் அந்த அச்சத்தினை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஏதோ வியப்பினில் ஆழ்ந்தவனைப் போல் நகைப்பொலியை உதிர்த்திட்டான்.
"உன் கேள்வியைக் கேட்டு எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது பல்லாயிரக்கணக்கான கற்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் நாட்டிலே உளவு அறிவதால் எங்கள் நாட்டுக்கு என்ன ஆகப்போகிறது? அத்துடன் அகஸ்டஸ் பெருமகனைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். நாலா திக்குகளிலும் புகழொளி வீசிடும் உங்கள் நாட்டின் நாயகன், உட்பகையென்னும் நரிகளால் - நச்சரவங்களால் தீண்டப்படக்கூடாதே என்னும் நல்லெண்ணத்தால்தான், நான் மேசனசைப்பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேனேயன்றி வேறல்ல; ஆகவே எனக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக நீ எண்ணிக் கொண்டால் அது முழுக்க முழுக்கக் கற்பனைதானே தவிர, உண்மை ஆகாது! இந்த விளக்கத்திற்குப் பிறகும் என் மீது எழுந்த ஐயப்பாடு விலகிடவில்லையென்றால் நீயே ஒற்றர்களை வைத்து என்னைக் கண்காணிக்கலாம்."
செழியன் இங்ஙனம் உணர்ச்சிப்பெருக்குடன் உரைத்திடவும் ஜூனோவோ கடகடவென்று வாய்விட்டுச் சிரித்திட்டாள்; தன் உடம்பு குலுங்கிட அவள் சிரித்த சிரிப்பில் விழிகளிலிருந்து கண்ணீர்கூட வழியலாயிற்று.
"உங்கள்மீது எனக்கு ஐயப்பாடு என்றால், இத்துணைக் கலகலப்பாக உங்களுடன் மனம்விட்டு பேசிடுவேனா? பழகிடுவேனா? நீங்கள் உளவு அறிவதாகக் கொஞ்சம் தெரிந்தாலும் அதை உங்களிடமா நேரிலேயே கேட்பேன். ஆட்களை வைத்துக் கையுங்களவுமாகப் பிடித்திட மாட்டேனா? நல்ல வேடிக்கை!... இந்த ஆண்கள் மிகவும் மோசம்! உடனே உணர்ச்சி வசப்பட்டுவிடுவதுதான் உங்களுக்கு வாடிக்கை!' ஜூனோவின் இந்தச் சொற்களைக் கேட்டதும் செழியன் வெட்கித் தலைகுனிந்தான்.
'வெளித்தோற்றத்தில் - பேச்சில் -விளையாட்டுப் பெண் போல இருக்கிறாள் ஆனால் எல்லா வகையிலும் என்னை மடக்கி விடுகிறாளே! பொல்லாத குறும்புக்காரிதான் இவள்; இவளைக் கட்டிக் கொள்கிறவன் படாதபாடுதான் பட வேண்டும்' என்று உள்ளூர எண்ணிக் கொண்டான் அவன்.
இதற்குள் அவன் தங்கியிருக்கும் மாளிகை வாசலுக்கு வந்து விட்டது அந்தத்தேர். அதனின்றும் இறங்கிய அவனிடம் "என்மேல் கோபமா?" என்று செல்லமாகக் கேட்டாள் ஜூனோ.
'இல்லை,' என்று சொல்லாமலே தலையை மட்டும் அசைத்திட்டான் செழியன்.
தமிழகத்தைவிட்டு ரோமாபுரிக்குக் கிளம்பிடும்பொழுது செழியனின் சிந்தனையை உராய்ந்திட்ட சிறு கவலை ஒன்று உண்டு; தனக்கு மொழி தெரிந்திடாத - நண்பர்களும் இல்லாத - ஒரு நாட்டிற்குச் செல்கிறோமே; அங்கே பொழுது எப்படிப் போகுமோ என்பதே அந்தக் கவலை.
ஆனால், அவனுடைய கவலைக்கு இடமே ஏற்படாத வகையினில் பல்வேறு களியாட்ட அரங்குகளைக் கொண்டு அவனைக் கவர்ந்து இழுத்திட்டது ரோமாபுரி.
ஒருநாள் பிற்பகல்!
நீராட்டக் கட்டத்திலிருந்து தான் தங்கியுள்ள மாளிகைக்குத் திரும்பிய செழியன், வாசலில் வெண்புரவிகள் பூட்டப்பெற்ற தேர் ஒன்று நிற்பதனைக் கண்டு திகைப்புற்றான்.
தேரின் ஓரமாகவே அதன் நிழலில் நின்றுகொண்டிருந்த சாரதியின் வணக்கத்தினை ஏற்றுக்கொண்ட அவன் 'இந்த நேரத்தில் ஜூனோ ஏன் வந்திருக்கிறாள் அதுவும் தேரோடு? அகஸ்டஸ் ஒருவேளை அழைத்துவரச் சொல்லியிருப்பாரோ?' என்று எண்ண ஓட்டங்களை அசை போட்டவாறே படிகளில் மேலேறிச் சென்றான் பரபரப்போடு.
அவன் எதிர்பார்த்திட்டவாறு முன்கூடத்தில் ஜூனோ இல்லை. பணியாளையும் காணோம். ஆனால், அறைக் கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன. தற்செயலாக அவனது பார்வை படுக்கையறை நோக்கிச் சென்றிட்டது. அங்கோ?
அவன் துயில்கின்ற கட்டில் மெத்தையில் ஒயிலாகப் படுத்திருந்தாள் ஜூனோ!
'சே! இந்த ரோமானியப் பெண்களுக்கு எந்த வரைமுறையுமே கிடையாதா? யார் படுக்கையில் யார் படுப்பது என்று எள்ளளவேனும் எண்ணிப் பார்த்திட வேண்டாமா?' என்று எரிச்சலுற்ற செழியன் அவள் அருகினில் சென்றிட்டான்.
மூங்கில் குருத்தினைப்போல் மழுமழுப்பான தன் கரங்களையே தலையணையாக மடக்கிக்கொண்டு மல்லாந்து கிடந்திட்ட அவள், அயர்ந்து உறங்குவதுபோல் காணப்பட்டாள். அவளுடைய நிலாப் பிஞ்சு நெற்றியிலே பசும் புல்லில் தேங்கிய பனித்துளி போல வேர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத தறுதலைப் பிள்ளைகள்போல் அவளுடைய சுருள் முடியின் பிடிப்புக்குள் அடங்காமல் ஒன்றிரண்டு சுருள் கேசங்கள் காற்றிலே சிலிர்த்தெழுந்து அந்த வேர்வை முத்துக்களுக்கு வெண்சாமரம் வீசிடக் காத்திருந்தன. பாதியாக அறுத்தும் அறுக்காமலும் விரிந்திட்ட கொய்யாக் கனிபோல் சற்றே பிளந்திருந்த செவ்விதழ்கள் 'பல் என்னும் வெள்ளிச் சுரங்கம் உள்ளே இருக்கிறது!' என்று சொல்லாமற் சொல்லின.
அயர்ந்து உறங்கிடும் தன்னை மறந்திட்ட நிலையிலும் அவளுடைய பூமுகம் எங்கணும் இழைந்திட்டது ஓர் அருமையான காந்தப்புன்னகை! தாமரையின் தளிர் முகத்தினில் தவழ்ந்திடுமே, அதே கனவுக்கோலக் காந்தப்புன்னகை.
சட்டென்று ஓர் அச்சம் வந்து ஆட்டிப்படைத்திட்டது செழியனை.
'இந்த நேரத்தில் சிப்பியோவோ பணியாளோ வந்து ஜூனோ இந்தக் கோலத்தில் படுத்துறங்குவதைப் பார்த்து விட்டால் என்ன செய்வது? ஏதோ ஓர் உரிமையில்லாவிட்டால் அவனுடைய தனி அறையில், அதுவும் கட்டில் மெத்தையில் அவள் இப்படிக் கண்மூடிக் கிடந்திடுவாளா என்று எண்ணிட மாட்டார்களா? இவளுடைய விளையாட்டுத் தனமான போக்கினால் பெரும் இடர்கள் எல்லாம் விளைந்திடும் போல் இருக்கிறதே' என்று கிலியுற்ற செழியன் "ஜூனோ! ஜூனோ!" என்று எழுப்பினான்.
ஊகூம்.. அவளோ விழிப்பதாக இல்லை.
யாராவது வந்து பார்த்திடப் போகிறார்களே என்ற துடிப்பு மிகுதியாகிவிட்டது செழியனுக்கு. வேறு வழியில்லை. எனவே தலையணையாக மடங்கிப் பிணைத்திருந்த அவளுடைய கரங்களைத் தொட்டுப் பிடித்து விலக்கிவிட்டான். உடனே அவளுடைய இமைக் கதவுகள் திறந்தன. தூக்கக் கலக்கத்தில் மலங்க மலங்க விழித்திட்ட அவள் செழியனின் முகத்தினைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள்.
"நீங்கள் வந்து நெடுநேரம் ஆகிவிட்டதா?" என்று வினவியவாறே பரபரப்புடன் தன் உடையினைச் சரிசெய்து கொண்டாள்.
"இப்போது தான் வந்தேன். ஆமாம், நீ இப்படி வந்து இங்கே தூங்கிடலாமா?" - சற்றுக் கடுமை தெறித்தது செழியனின் குரலில்.
"உடல் அலுக்கை; ஒரே அசதி. தாங்கமுடியவில்லை. அதனால்தான் படுத்துவிட்டேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்!"- கொஞ்சும் முறுவலுடன் கெஞ்சிய அவள், "எங்கே போயிருந்தீர்கள்? உங்களுக்காக எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறேன் தெரியுமா? உங்கள் பணியாளைக் கூடத் தேடி அழைத்து வருமாறு அனுப்பி வைத்தேன். அவனைப் பார்க்க வில்லையா நீங்கள்?" என்று கேட்டாள்.
"இல்லையே! நான் நீராட்டக் கட்டத்திற்கு போய் இருந்தேன்!"
"எந்த 'பாத்'திற்கு?' 'உங்கள் ரோம் நகரத்தில் தான் நூற்றுஎழுபது 'பாத்' துக்கள் போல் இருக்கின்றனவாமே! எந்த 'பாத்'தின் பெயரை நான் நினைவில் வைத்துக்கொண்டு சொல்வது?'
"போகட்டும், இன்னும் நீங்கள் உணவு அருந்தவில்லை அல்லவா?"
"இனிமேல்தான்!"
"நல்லது. உணவுக் கூடத்துக்கு வாருங்கள். அங்கே உங்களுக்குப் புதுமையான விருந்து கிடைக்கும்?" என்றவாறே, அவனை முந்திக் கொண்டு, துள்ளிக் குதித்தோடினாள் ஜூனோ.
'என்ன புதுமையான விருந்தாக இருக்கும்?' என்று எண்ணியவாறே முகம், கை கால்களை அலம்பிக்கொண்டு உணவுக் கூடத்திற்கு வந்திட்ட செழியன், அங்கே மேசை மீது ஜூனோ பரிமாறிக்கொண்டிருந்த வற்றைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்திட்டான்.
மலர்ந்த மல்லிகை இதழ்களைப் போல் வெள்ளை வெளேர் என்று தென்பட்ட அரிசிச் சோறே அவனை அவ்வாறு வியப்பில் ஆழ்த்தியது. உண்பதற்காக மேசையை ஒட்டிக் கிடந்திட்ட இருக்கையினில் வந்து அமர்ந்திட்ட செழியன்.,
"ஆமாம், உங்கள் ரோம் நாட்டிலே கோதுமை தானே கிடைக்கும்; இந்த அரிசி உங்களுக்கு எப்படிக் கிட்டியது?" என்று கேட்டான்.
"நீங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது? எங்கள் அகஸ்டஸ் பெருமகனார் மனம் வைத்திட்டால், இந்த உலகத்திலே கிடைத்திடாத எந்த பொருளேனும் உண்டா? ஆனால், இது உங்களுக்கென்றே உங்கள் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்ந்த வகை அரிசியே ஆகும்!"
"குழம்புகூடத் தமிழ் நாட்டில் வைக்கப்படுவது போலவே மூக்கைத் துளைக்கிறதே!"
"உங்கள் நாட்டு ஏலம், இலவங்கப்பட்டை முதலான மணம் வீசிடும் பொருள்களைச் சேர்த்துச் செய்திட்டால் மூக்கை துளைத்திடாமல் வேறு என்ன செய்யுமாம்!"
"இது என்ன வெறும் ஈரல் துண்டுகளாக எடுத்துப் போடுகிறாய்! அதுவும் இவ்வளவு பெரிய துண்டுகளாக!"
"ஆட்டு ஈரலாக இருந்திருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்போம்!"
"அப்படியானால் இது வேறு எதனுடைய ஈரல்?"
"நீங்கள் தான் கண்டு பிடியுங்களேன் எதனுடைய ஈரல் என்று" - கேலியாக நகைத்திட்டாள் ஜூனோ. நன்றாகச் சுவைத்து மென்றிட்ட செழியனால் சரியாக அதனைக் கண்டுபிடித்திட முடியவில்லை.
"ஊகூம். எனக்குத் தெரியவில்லை"
"இதைக்கூட உங்களால் கண்டுபிடித்திட முடியவில்லையே! நீங்கள் என்ன பெரிய தூதுவர்!"
"கேலி புரிவது இருக்கட்டும். முதலில் இது எதனுடைய ஈரல் என்று சொல்!"
"நீங்கள் இப்போது சுவைக்கின்ற இவை எல்லாமே ஈரல் துண்டுகள் அல்ல."
"பிறகு?"
"பலாமூசுத் துண்டுகளும் கலந்து இருக்கின்றன!"
"அப்படியா? வியப்பாக இருக்கிறதே! அது சரி; இத்துணை அருமையாகச் சமையல் செய்தது யார்?"
"நான்தான்!"
"நீயா? ஏன் பொய் சொல்கிறாய்?"
"ஏன் ? என்னைப் பார்த்தால் சமையல் செய்யக்கூடியவளாக உங்களுக்குத் தெரியவில்லையா?"
"அகஸ்டஸ் பெருமகனாரின் அந்தரங்கச் செயலாளரைப் போலவே இயங்கி, வெளி அலுவல்களில் ஈடுபடும் உனக்குச் சமையல்கட்டிலே நுழைந்திட நேரம் எங்கே இருந்திடப் போகிறது? அது ஒருபுறம் இருக்க, ரோமாபுரியைச் சார்ந்திட்ட உனக்குத் தமிழகச் சமையலைப் போலவே செய்வது என்பது அவ்வளவு எளிதா என்ன?"
"நீங்கள் என் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்திடாதது பற்றி நான் வருந்திடவும் இல்லை; வியந்திடவும் இல்லை. ஏனெனில் உங்கள் தமிழ்நாட்டுச் சமையலைச் சுவையாகச் செய்வது என்பது சற்றுக் கடினந்தான். ஆனால் இதனை நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் தெரியுமா?"
"எப்படி?"
"அலெக்சாண்டிரியா அரண்மனையிலே கிளியோபாத்ரா அரசி யிடம் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய போது, ஒரு யவனக்கிழவ ரிடம் உங்கள் தமிழ்மொழியினைக் கற்றுக் கொண்டேன் என்று உரைத்திட்டேன் அல்லவா?"
"ஆமாம்."
"அதே யவனக் கிழவர்தான் உங்கள் தமிழகச் சமையலையும் கற்றுத் தந்திட்டார். ஆனால் பல ஆண்டுகள் கழித்துச் செய்வதால் எப்படி இருந்திடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டேதான் இருந்தேன்; உண்மையைச் சொல்லுங்கள்! எப்படி இருக்கிறது?"
"எவ்வாறு பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை! இத்துணை அற்புதமாக - மணங் கமழ்ந்திட நீ சமைக்கக்கூடும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் என் நெஞ்சம் நிறைந்திட வயிறு நிரம்பிட உணவினை உட்கொள்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்!" -செழியனின் உவகைப் பெருக்கிலே நீராடி வந்த புகழுரைகளை செவிமடுத்ததும் ஜுனோவின் ஆப்பிள் கன்னங்களிலே செக்கர் படர்ந்திட்டது, நாணத்தினால்!
அவன் உணவருந்திடும் அழகினையே தன் பார்வையினால் பருகித் திளைத்திட்டாள் அந்தப் பருவச் சிட்டு.
வயிறு புடைக்கத் தின்று முடித்திட்ட செழியனுக்கு உடனே படுத்துப் புரள வேண்டும்போல் இருந்தது. ஆனல் ஜூனோ அதற்கு இடந் தந்திடவில்லை.
..சிறிது நேரமாவது கண்ணயர்ந்து எழுந்திட்டால்தான் உண்ட களைப்பு நீங்கும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வது? உங்கள் வருகைக்காக இந்நேரம் எங்கள் அகஸ்டஸ் பெருமகனார் அங்கே வட்டக் கலையரங்கிலே காத்திருப்பாரே! விலங்குகள் - மனிதர்களுக்கிடையே நடைபெறும் சண்டை விளையாட்டுக்களையெல்லாம் நிறுத்தியும் வைத்திருப்பாரே!" என்று அவனை விரைவுப்படுத்திட்டாள் அவள்.