உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/42. வீரம் விளைத்த மறவன்

விக்கிமூலம் இலிருந்து

42

வீரம் விளைத்த மறவன்

ற்றைக்கெல்லாம், வாசலில் காத்துக் கொண்டிருநத அழகிய தேர், ஜூனோ குறிப்பிட்ட வட்டக் கலையரங்கினை நோக்கி காற்றாய்ப் பறந்திட்டது.

மக்களை மகிழ்ச்சி வெள்ளத்திலே ஆழ்த்திடும் அந்தக் கலையரங்கினுள் நுழைந்திட்டபொழுது, செழியனுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப் பெற்றது. பல செனேட்டர்கள் தமிழக முறைப்படி வணக்கம் புரிந்தனர். அகஸ்டஸ் பெருமகனோ, அவனுடைய கரத்தினைப்பற்றி, அழுத்தி குலுக்கித் தம் அருகிலேயே அமர்த்திக் கொண்டார். அவர்கள் இருவருக்கும் பின்புறமாகச் சற்று உயரமான இருக்கையில் மொழி பெயர்ப்பதற்கு ஏதுவாக உட்கார்ந்து கொண்டாள் ஜூனோ.

'காலரிகள்' புடைசூழத் தற்கால சர்க்கஸ் கூடாரங்கள் எப்படித் திகழ்கின்றனவோ அப்படிப்பட்ட அமைப்பினை ஓரளவு உடையதே அந்த வட்டக் கலையரங்கம். ஏறத்தாழ இருபதாயிரம் மக்களுக்கு மேல் குழுமி இருந்திடக்கூடும் என்று செழியன் தன் மனத்திற்குள் கணக்கிட்டுக் கொண்டான்.

கலையரங்கின் மையத்திலுள்ள அடித்தளத்தில், முதலில் மல்லர்கள் வீராவேசத்துடன் பொருதிட முற்பட்டனர். 'கிளேடியேட்டர்கள்' என்று அழைக்கப்பட்ட அம்மல்லர்கள்; சாதாரணப் பொதுமக்கள் சமூகத்தினையோ, செனேட்டர் போன்ற செல்வக் குடிகளையோ சார்ந்தவர்கள் அல்லர். சாவு அல்லது ஆயுள் தண்டனை போன்ற கடுமையான சிறைத் தண்டனை பெற்றவர்களிலிருந்தும், போர்க் கைதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அவர்கள். நாளாவட்டத்தில் அவசரகாலப் படைப் பயிற்சி பெற்றவர்களும் மல்லர்கள் ஆனார்கள்.

அன்று நடைபெற்றிட்ட மற்போரிலே சண்டை தொடங்கி அறை நாழிகைக்கெல்லாம் ஒரு மல்லன் இரங்கத்தக்க முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். அவனைக் கொன்றவனை மெச்சிடும் வகையினில், பார்வையாளர்கள் அத்தனை பேரும் கரவொலிகள் எழுப்பி 'யே...யே.!' என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.

இறந்துபோன மனிதனுக்காக ஒருவர் கூட இரங்காதது செழியனுக்குத் திடுக்கீடாக இருந்திட்டது.

அடுத்துச் சிங்கத்திற்கும் மனிதனுக்குமிடையே போர் தொடங்கிற்று.

"இவனும் அந்த மல்லர்கள் வகையினைச் சார்ந்திட்டவன்தானா?" என்று வினவினான் செழியன்.

"இல்லை, ஆனால் இவனும் சாவுத் தண்டனைப் பெற்ற கைதியே" என்றார் அகஸ்டஸ்:

சிறிது நேரம்கூடச் சென்றிருக்காது. அந்த முரட்டுச் சிங்கம், கையிலே கருவியேதும் இல்லாமல் தனித்து மாட்டிக் கொண்டு விட்ட அந்த மனிதனைத் தன் கால் நகங்களாலும், கூரிய பற்களாலும் நார் நாராய்க் கிழித்துப் போட்டிட முனைந்தது. குருதி வெள்ளமோ குபுகுபுவென்று ஆறாய்ப் பாய்ந்திடலாயிற்று. தன் உயிரினை, விலங்கு மன்னனின் வெறிப் பசிக்கு இரையாகப் படைக்க நேர்ந்திட்ட அந்த அப்பாவி மனிதன் கதறித் துடித்திட்டான். அவனுடைய கதறல் ஒலி அந்த அரங்கத்தினையே அதிர்ந்திடச் செய்து விட்டது.

ஆனால்; அவன், 'குய்யோ! முறையோ!' என்று கூவக் கூவ - அவன் உடலிலிருந்து குருதி வெள்ளம் பாயப் பாய ரோமானியர்கள் ஆர்ப்பரிப்பு அதிகமாயிற்றே அல்லாமல் குறைந்திடவில்லை.

அவர்களுடைய இந்தக் கருணையற்ற போக்கினைக் கண்டு, செழியனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

"இந்த ரோமானியர்கள் என்ன மிருகங்களைவிட மிருக மனம் கொண்டவர்களாக இருக்கிறார்களே! ஒரு மனிதன் இறப்பதை - அதுவும் ஒரு சிங்கத்தினால் சின்னாபின்னமாகக் கிழிக்கப்பட்டு இறப்பதை இப்படியா மகிழ்ச்சியாரவாரம் செய்து வேடிக்கை பார்ப்பது? இவ்வளவு கேவலமாகவா இவர்களுடைய இதயக் கூடு பழுதுபட்டிட வேண்டும்?" அவன் வாய்விட்டே கூறி விட்டான், உணர்ச்சிவயப்பட்டு.

ஆனால் அவன் புகன்ற சொற்களைக் கேட்டு ஜூனோ திடுக்கிட்டுப் போனாள். அவற்றை எப்படி மொழி பெயர்ப்பது. அங்ஙனமே மொழி பெயர்த்திட்டால் அகஸ்டசுக்கு ஆத்திரம் வந்திடுமே? என்ன செய்வது என்றெல்லாம் திணறினாள் அவள்.

அகஸ்டசோ, "என்ன சொல்கிறார்?" என்றார் பின்புறம் திரும்பி.

ஜூனோவோ வாயினைத் திறந்திடாமல் மிரள மிரள விழித்திட்டாள்.

"ம் என்ன விழிக்கிறாய்? அவர் என்ன கூறினார்?" என்று மீண்டும் அதட்டினார் அகஸ்டஸ்.

கடுமை கனன்றிட்ட அகஸ்டசின் அதட்டலைக்கேட்ட பின்னரே, 'தான் எவ்வளவு பெரிய தவறினைப் புரிந்திட்டோம்' என்று உணர்ந்திடலானான் செழியன், அத்துடன் ஏதுமறியாத ஜூனோவையும் ஓர் இக்கட்டில் தள்ளித்திணறிடச் செய்துவிட்டோமே என்றும் வருந்திடலானான் அவன்.

உடனே பின்புறமாகத் தன் முகத்தினைத் திருப்பி "எனக்கு என்ன நேர்ந்திடுமோ என்று அஞ்சி, அவருடைய அவநம்பிக்கைக்கு ஐயப்பாட்டுக்கு நீ ஆளாகி விடாதே! உன்னுடைய கடமையை நீ ஒழுங்காகச் செய்; ஊம்.. தயங்காதே!" என்று எச்சரித்திட்டான்.

அதற்குமேல் ஜூனோ நேரத்தை வீணாக்கிடவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். ரோமானியர்களின் மிருக மனம் பற்றிச் செழியன் உணர்ச்சி வயப்பட்டு உரைத்தவற்றையெல்லாம் மடமடவென்று மொழிபெயர்த்துத் தள்ளினாள். அவள் பகர்ந்து முடித்ததும், அகஸ்டசின் பரந்த முகத்தினிலே ஆத்திரம் படர்ந்திடவில்லை; அனலும் கொழுந்திடவில்லை; மாறாக ஆழ்ந்த சிந்தனையில் காலூன்றிய பொருட்செறிவோடு கூடிய புன்னகையே இழையோடிற்று!

"நீ தூதுவரைக் கவனித்துக் கொள்; அவருக்கு ஏதேனும் ஐயப்பாடு எழுந்திட்டால் அதனைத் தெளிவுபடுத்து" என்று இயம்பிவிட்டு மெல்ல நகர்ந்திட்டார் அகஸ்டஸ்.

அடித்தளத்தில் நிகழ்ந்திடும் விலங்குச் சண்டைகளை வேடிக்கை பார்ப்பதில் முழுமையாக - மும்முரமாக ஈடுபட்டு இருந்தமையால், பார்வையாளர்கள் யாரும் அகஸ்டஸ் அந்த அரங்கத்தினைவிட்டு வெளி யேறியதைக் கவனித்திடவில்லை.

கீழே இப்போது வெள்ளை யானை ஒன்று பல விந்தைகளைப் புரிந்த வண்ணம் இருந்தது.

"இந்த யானை ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து வந்ததா?" என்று வினவினான் செழியன்.

"ஆமாம்." என்றாள் ஜூனோ.

'ஆப்பிரிக்கா' என்னும் சொல் தன் செவியினில் விழுந்ததால் ஏற்பட்ட ஏதோ ஓர் எண்ணக் குறுகுறுப்பினால் - "தூதுவர் என்ன கேட்டார்?" என்று ஜூனோவை நோக்கினாள் லிவியா.

செழியனின் வினாவினை அவள் மொழிபெயர்த்துக் கூறினாள். உடனே, "இது ஆப்பிரிக்க யானை இல்லை; இது சயாம் நாட்டுக் காட்டைச் சார்ந்தது. அண்மையில்தான் தனி ஏற்பாடுகளுடன் என் கணவர் இதனை வரவழைத்தார்" என்று விளக்கமளித்திட்டாள் அகஸ்டசின் மனைவி.

பின்னர், அக்கலையரங்கம் முழுவதிலும் களிப்பு வெள்ளம் கங்கு கரையற்றுப் பொங்கிப் பெருகிட, தன் பருத்த உடலினை நெளித்து நெளித்து ஆடிடும் யானையின் நடனத்திலேயே ஆர்வத்துடன் அவள் பார்வையைச் செலுத்திடலானாள்.

லிவியா என்ன, யாருமே இனிமேல் தங்களைக் கவனிக்கப் போவதில்லை என்னும் துணிச்சல் வந்து விட்டது போலும் ஜூனோவுக்கு. அவள், செழியனின் வாயைக் கிளறத் தொடங்கிவிட்டாள்.

"நீங்கள் என்ன மரக்கட்டையா? இல்லை; மண் பொம்மையா?"

"ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று சற்றுத் திகைப்புடனேயே கேட்டான் செழியன்.

"இல்லை எல்லோருமே இங்கே ஒவ்வொரு வேடிக்கையினைக் கண்டிடும் பொழுதும் உற்சாகத்தோடு கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். நீங்கள் மட்டும். 'உம்' என்று கற்சிலை மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே!"

"மனிதர்கள் மடிந்து விழுந்திடும்பொழுது மகிழ்ச்சியாவது, மண்ணாங்கட்டியாவது? இதற்குப்போய் நான் கைகளை வேறு தட்ட வேண்டுமா? நன்றாக இருக்கிறது!"

"என்ன செய்வது? இம்மாதிரியான வேடிக்கைகளைக் கண்டு களிப்பது எங்கள் நாட்டில் தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ள பழக்கம். ஏன், உங்கள் தமிழகத்திலே மாட்டுச் சண்டைகள், கோழிச் சண்டைகள் எல்லாம் நடத்தி வேடிக்கை பார்ப்பீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே!"

"நீ சொல்வதைப் பார்த்தால் மாடு - கோழிகளுக்கும், மனிதர்களுக்கும் வேறுபாடே இல்லை என்று கருதுவதாகத் தெரிகிறதே!"

"தவறு, வாய் பேசாத - வஞ்சனையற்ற - அந்த விலங்கினத்தையும், பறவை இனத்தையும்விட மனிதர்கள் அத்துணை உயர்ந்தவர்கள் அல்லர் என்பதே என் தாழ்மையான எண்ணம். நீங்களேதான் பாருங்களேன்; அகஸ்டஸ் பெருமகனார் எவ்வளவோ பொறுமையோடு - நல்லெண்ணத்தோடு-பெருந்தன்மையோடு விரைந்து செயலாற்றிட முற்படும் பொழுதும் மேசனஸ் போன்றவர்கள் புழுதியை வாரித் தூற்றிடவில்லையா? ஏசல் - ஏளனம் - ஏகடியம்... என்று தங்கள் பயன்பாட்டினைப் பலவீனப்படுத்திக் கொள்வதில்தானே அவர்கள் குதூகலம் அடைகிறார்கள்."

"ஆமாம், முன்பே உன்னைக் கேட்க நினைத்தேன். அகஸ்டஸ் பெருமகனார் ஏன் இப்படித் திடீரென்று எழுந்து போனார்? உண்மையிலேயே அவருக்கு உடல் நலம் இல்லையா?"

"உங்களுக்குத் தெரியாதா? சில ஆண்டுகளாகவே அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. அதுவும் தம் தங்கை ஆக்டேவியாவின் மகன் மார்செல்லஸ் இளவயதில் இறப்பைத் தழுவியதும் அவர் உடம்பு மிகவும் கெட்டுவிட்டது. தமக்குப் பின்னர் அந்த மார்செல்லஸ் தான் ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்று அவர் பெரிதும் கனவு கண்டு இருந்தார். எனவே அவரது இறப்பு இவருக்குத் தாங்கொணாத இடியாகிவிட்டது. இப்போது வெளித்தோற்றத்தில்தான் அவர் இரும்புக் கோட்டை; உள்ளூரவோ உளுத்த மூங்கில் உடலைப் பொறுத்தமட்டில் தான் இப்படி உரைத்திடலாமே யன்றி அவருடைய உள்ளம் எப்போதுமே வைரம்தான்; உறுதி - உயர்நோக்கு - எல்லாவற்றிலுமே வைரம்தான்!" ஜூனோ இவ்வாறு உரைத்திடும் பொழுதே மேசனஸ், அவர்களுக்கு அருகினில் வந்திட்டார்.

"நான் இவரைப்பற்றிக் கூறியது இவர் காதில் விழுந்திருக்குமோ? அதற்காக வம்பு செய்யத்தான் வந்திருப்பாரோ?" என்னும் அச்சம் படர்ந்திடாமல் இல்லை அந்த அழகுக் கிள்ளையின் முகத்தினில்! அவரோ செழியனை நோக்கி. "என்ன தூதுவர் அவர்களே! உங்களை மாபெரும் வீரர் என்கிறார்களே? அதோ கீழே மல்லர்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறதே அந்தக் காண்டாமிருகம், அதனை நீங்கள் ஏன் அடக்கிடக்கூடாது? அதன் மூலம் இங்கே உங்கள் வீரத்தினையும் நீங்கள் ஏன் நிலைநாட்டிடக்கூடாது?" என்றார்.

மேசனசின் இந்தக் குத்தலான சொற்களைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் ஜூனோ.

ரோமாபுரிப் பேரரசு முழுவதிலுமே 'இலக்கிய வட்ட ஏந்தல்' என்றும், 'அரசியல் புலி' என்றும் பெரும் புகழினைப் பெற்றுள்ள மேசனஸ் தன்னைப் பார்த்து பகர்ந்தவற்றை ஜூனோ ஏன் உடனே மொழிபெயர்த் திடாமல் உதடுகளை மூடிக்கொண்டு விட்டாள் என்பது செழியனுக்கு விளங்கிடவில்லை.

...இவள் முகம் கூட ஒருமாதிரியாக வெளிறிவிட்டதே. ஏன்?' என்று எண்ணிய அவன் அவளை நோக்கி, "இந்தப் பெரியவர் என்ன சொல்கிறார்?" என்று வினவினான்.

"ம்.. நீங்கள் அந்தக் காண்டாமிருகத்தோடு சண்டை போட வேண்டுமாம்" - பல்லிடிக்கில் பகர்ந்திட்ட ஜூனோ "ஆனால் நீங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள்!" என்று எச்சரிக்கவும் செய்தாள்.

மேசனசுக்கும் ஏதோ ஐயப்பாடு எழுந்துவிட்டது.

"நான் உரைத்தவற்றையெல்லாம் முழுவதுமாக அவரிடம் நீ மொழி பெயர்த்திட்டதாகத் தெரியவில்லையே!" என்று இலத்தீனில் கூறினார் அவர்.

இதற்குள் அகஸ்டசின் மனைவி லிவியா இடைமறித்திட்டாள்.

"ஆமாம், மேசனஸ்என்ன கேட்கிறார். ஜூனோ?"

"ம்.. தமிழகத் தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தோடு சண்டைபோட வேண்டுமாம்!"

"அப்படியா" என்று வியந்திட்ட லிவியாவின் பார்வை இப்போது மேசனசை நோக்கித் திரும்பிற்று

"அவர் எதற்கு அவ்வாறு மிருகங்களோடு போய்ச் சண்டை போட வேண்டும்" - அழுத்தமாகவே கேட்டாள் லிவியா.

"ஒரு வேடிக்கைதான்! அத்துடன் பலபேரை மாய்த்திடும் ஒரு விலங்கினை வீழ்த்தினார் என்றால் அவருடைய வீரத்திற்கும் வெற்றிப் பெருமிதந்தானே."

"அவர் இங்கு வந்திருப்பது மற்போர்த் திறனைக் காட்டிட அல்ல; நட்புறவை நாட்டிட! மேலும் அவர் என்ன சாதாரண கிளேடியேட்டரா? அல்லது மரண தண்டனையோ, கடுங்காவல் தண்டனையோ பெற்ற கைதியா? அவரைப் போய் ஒரு மிருகத்தோடு சண்டை போடச் சொல்வது, அவரை அவமானப்படுத்துவதற்கே ஒப்பாகும்".

"நீ சொல்வதைக் கேட்கும்பொழுது எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. விலங்கோடு சண்டை போடுவதை அவமானமாக கருதுகிற வன் உண்மையான வீரனாக இருந்திட முடியுமா? சரி, இப்போது அடித்தளத்திலுள்ள ஒரு காண்டாமிருகம் வெறி பிடித்துப்போய் மேலே ஏறி வந்து எல்லாரையும் தாக்கிட முற்பட்டால்... அப்போது ஒரு ஆண்மகன் அதனை அடக்கிடத்தானே வேண்டும்; அவ்வாறு அடக்குவது அவமானம் ஆகிவிடுமா?"

"அந்த மாதிரி ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்பொழுது வந்துள்ள அத்தனை பேர்களுடைய உயிரை மட்டுமல்ல, உங்களுடைய உயிரையும் சேர்த்துக் காப்பாற்றித் தந்திடுவார் இந்தத் தமிழக தூதுவர்; கவலைப்படாதீர்கள்" என்று கேலியாக நகைத்திட்டாள் லிவியா.

அவர்கள் உரையாடிக்கொண்டதை உடனுக்குடன் மொழி பெயர்த் திடுமாறு ஜூனோவை வற்புறுத்திக்கேட்டு அறிந்து கொண்ட செழியன் மேசனசை நோக்கி, 'காண்டாமிருகத்தோடு சண்டை போட்டிடத் தயார்' என்பதாகக் கைகளினால் சைகை செய்ததுடன் தலையினை ஆட்டி ஒப்புதலும் தந்திட்டான்.

அந்தக் கிழட்டு வேங்கையின் உற்சாகத்தைக் கேட்டிட வேண்டுமா? பார்வையாளர்கள் அத்தனை பேருடைய கவனமும் தன் பக்கம் திரும்பி டும் வண்ணம், "யே...! நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக் கெல்லாம் மகிழ்ச்சியினை ஊட்டிடும் மகத்தான செய்தி! இதோ! இந்தத் தமிழகத் தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தோடு பொருதிடப் போகிறார்!" என்று உரக்கக் கூவினார்.

அந்த அறிவிப்பினைக் கேட்டதும் கலையரங்கம் முழுவதும் கரவொலிகளால் அதிர்ந்திட்டது; களிப்பு வெறி பீரிட்டது.

அதே சமயம் அகஸ்டசுக்கு மிகவும் நெருக்கமான செனேட்டர்கள். கவிஞர்கள், கலைஞர்கள் முதலானோர் திகைப்பிலே மூழ்கினர்; எனினும் தாங்கள் மிகச் சிறந்த மேதையெனக் கொண்டாடிடும் மேசனசே அத்தகைய ஓர் அறிவிப்பினைச் செய்திட்டதால், அவரை மறுத்துப் பேசிடவோ, எதிர்ப்புக் குரல் எழுப்பிடவோ அவர்களில் யாருக்கும் துணிவு வந்திடவில்லை. குழுமியிருந்திட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வேடிக்கை காணத்துடித்திடும் வேட்கை வெறியின் முன்னே, தங்கள் வார்த்தைகள் ஆற்று வெள்ளத்திலே விழுந்திட்ட அனல் பொறிகளாய் ஆகிவிடலாம் என்கிற அச்சம், அவநம்பிக்கை ஆகியவையும் அவர்களது வாயினை அடைத்திருக்கலாம்.

லிவியா, ஜூலியா முதலான பெண்மணிகளோ அதிர்ச்சியால் தாக்குண்டு மீள முடியாமல் தத்தளித்தனர்.

ஜூனோவுக்கோ அணையைத் தகர்த்திடும் பிரளயமாகப் பொங்கிற்று அழுகை! அதனைத் தடுத்திடவே அவளால் முடியவில்லை; தன் இதய மொட்டே நடுநடுங்கிட, பலரும் தன்னைப் பார்ப்பார்களே என்னும் வெட்கத்திற்குக் கூட விடுதலை வழங்கிவிட்டு, அவள் விசிம்பி அழத் தொடங்கிவிட்டாள். அவளைப் பார்த்ததும், லிவியா, ஜூலியா இருவரது கன்னங்களிலும்கூடக் கண்ணீர் வழிந்திடத் தொடங்கிற்று.

"நீங்கள் எதற்காக இப்படி அழுகிறீர்கள்? என்னுடைய வீரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா! இந்தக் காண்டா மிருகம் என்ன, எத்தனையோ, வேங்கைகள், சிறுத்தைகள், ஏன் சிங்கங்களையே அடக்கிவிடக் கூடிய ஆற்றல் எனக்குத் திண்ணமாக உண்டு. எங்கள் தமிழகத்திலே ஒரு சாதாரணப் பெண்ணே பாய்ந்துவரும் புலியினை முறத்தினாலேயே துரத்தி அடித்திடக் கூடிய வலிமை வாய்ந்திட்டவள் என்றால், அவளுடைய வயிற்றிலே பிறந்திடும் என்போன்ற தமிழ் இளைஞர்களுக்கு இந்த விலங்குகளெல்லாம் எந்த மூலை? கால் தூசு மாதிரி!" என்று வீரங் கொப்பளித்திடும் சொற்களைக் கொண்டு சோகங் கப்பிடும் அந்தச் சுந்தரவல்லிகளுக்கு தேறுதல் மொழிந்திட்டான் செழியன்.

ஜூனோவின் அச்சம் - நடுக்கம் - அழுகையினை அகற்றிடுவது அத்துணை எளிதாக இல்லை.

"இந்த நாட்டுக் காண்டாமிருகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது; அதிலும் இன்று வெறிபிடித்து நிற்கும் அது மிகவும் பொல்லாதது; எத்தனையோ மல்லர்களைக் கொன்று குவித்தது. அதனிடம் போய் உங்கள் உயிரை ஏன் அநியாயமாகப் பலியிட வேண்டும்? எனக்கு அப்போதே தெரியும் மேசனஸ் ஏதாவது இப்படி செய்வார் என்று. அகஸ்டஸ் பெருமகனாரிடமும் ரோமாபுரி மக்களிடமும் நீங்கள் பெற்றுள்ள செல்வாக்கை கண்டு அவருக்கு வயிற்றெரிச்சல்; அந்தப் பொறாமையினால் தான் உங்களைத் தீர்த்துக் கட்டிடவே இப்படிச் சூழ்ச்சி செய்கிறார் மேசனஸ்! அந்த மிருகத்தோடு சண்டை போடப் போகாதீர்கள்! உங்களுக்கு ஏதாவது என்றால்... பிறகு... நான்-"

தேம்பித் தேம்பியே கூறிவந்திட்ட ஜூனோவுக்குச் சட்டென்று தொண்டையே அடைத்துக் கொண்டு விட்டது!

"உன்னுடைய உள்ளன்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்; என்றாலும் நீ இவ்வளவு கோழையாக இருந்திடக் கூடாது. எனக்காக நீ அழுவதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? உன்னையே தவறாகக் கருதிடமாட்டார்களா? எனவே, உடனே உன் விசும்பலை நிறுத்து! நான் எத்தனையோ சூழ்ச்சிகளையெல்லாமல் எதிர்ப்பட நேர்ந்தவன்; எதிர்நீச்சல் அடித்தவன், இந்த மேசனசின் சூழ்ச்சியை மட்டும் என்னால் முறியடித்திட முடியாதா? அவருக்கு என் மீது பொறாமை என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே! நெருப்புச் சூடுபட்டுப் பாகு கரையலாம்; ஆனால் பாறை கரைந்திடாது; அப்படித்தான் ஒருவருடைய அழுக்காற்றின் காரணமாக இன்னொருவருடைய ஆற்றல் அவிந்திடாது; செல்வாக்கும் தேய்ந்திடாது. ஆகவே என்னைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு நீ மகிழ்ச்சியோடு நான் போடப் போகும் சண்டைகளைக் கவனித்துப் பார்!' என்ற செழியன், மிடுக்கோடு அந்த இடத்தைவிட்டு அகன்றிட்டான்.

சற்றைக்கெல்லாம் அந்த வட்டக் கலையரங்கத்தின் அடித்தளத்திலே புழுதி கிளம்புகிறதா, புகைதான் எழும்புகிறதா என்று இனம் பிரித்திட முடியாதவாறு தூள் பறந்திட்டது.

மதங்கொண்ட யானை என்பார்களே அப்படித்தான் திமிர் ஏறிய அந்தக் காண்டாமிருகம் வெறியாட்டம் ஆடிற்று; செழியனைப் பாய்ந்து பாய்ந்து தாக்கிற்று.

தமிழினத்தின் தனிப்பெருந்திருநாளாம் பொங்கற் பெருவிழாவின் போது எத்தனையோ ஏறுதழுவுதல் விளையாட்டுக்களிலெல்லாம் மற்றவர்களால் அடக்கமுடியாத காளைகளைக்கூட அடக்கிக் கைதேர்ந்தவன் செழியன்! அந்தத் துணிச்சலிலேயே இந்தக் காண்டாமிருகத்தையும் வீழ்த்திடலாம் என்னும் நம்பிக்கை உண்டாயிற்று அவனுக்கு. ஆனால் அந்தக் காளைகளைவிடக் கொழுத்துப் பருத்திட்ட அதற்கு வலிமை மிகுதி என்பதனைப் பொருதமுற்பட்ட பின்னரே புரிந்துகொள்ள முடிந்தது அவனால்.

தொடக்கத்தில், அவன் சற்றுப் பின்வாங்கிடும்படி நேர்ந்திட்டது. அதனைக் கண்டு, பார்வையாளர்கள் கேலியாக நகைக்கவும் செய்திட்டனர்.

நேரம் செல்லச் செல்ல பின்வாங்கிக் கொண்டிருந்த செழியன் முன்னேறிடத் தலைப்பட்டான். தன் திறமை - தந்திரம் எல்லாவற்றையும் ஒருங்கு திரட்டித் தன் பலங்கொண்டமட்டும் அவ்விலங்கோடு மல்லாடினான்; வெட்டுக் கிளியினைப்போல் ஒரே தாவாகத் தாவிப் பறந்து அதன் முதுகின் மேல் ஏறி நின்று வேடிக்கைகள் சிலவும் புரிந்திட்டான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆண்மையிற்சிறந்த அந்தத் தமிழ் மறவனின் வலிமை மிகுந்த நெடுங்கரங்களின் கிடுக்கிப் பிடியிலே சிக்குண்டு, அந்தக் காண்டாமிருகத்தின் தொளதொளப்பான பெருங் கழுத்துத் துவண்டு நெரியுண்டது. புயலின்போது புளியமரம் சாய்ந்திடுவது போல 'மடார்' என்று தரையிலே வீழ்ந்திட்ட காண்டாமிருகம் மீண்டும் தலை தூக்கிடவே இல்லை!