உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/43. கிரேக்க மருத்துவம்

விக்கிமூலம் இலிருந்து

43

கிரேக்க மருத்துவம்

செழியன் இவ்வாறு வெற்றி கொண்டதும், அந்த வட்டக் கலையரங்கத்திலே எதிரொலி எழுப்பிய ஆரவாரங்களுக்கு எல்லையே இல்லை. ரோமானியர்கள் அத்தனை பேருமே தத்தம் இருக்கையை விட்டுத் துள்ளிக் குதித்தனர்; "செழியன் வாழ்க! செழியன் வாழ்க! வெற்றி பெற்ற தமிழகத் தூதுவருக்கு வணக்கம் செய்வோம்...!" என்றெல்லாம் தங்கள் மொழியினில் தொண்டை கிழிய முழங்கினர்.

ஜூனோவுக்கோ கால்கள் தரையில் பாவிடவில்லை. இன்பப் பூரிப் பிலே மிதந்தவளாக - இல்லை - பறந்தவளாக அவனை வாழ்த்தி வர வேற்றிட அடித்தளத்தினை நோக்கி ஓடினாள்.

...ஆனால், அங்கே செழியனைக் காணோம்!

'அதற்குள் எங்கே மாயமாய் மறைந்திட்டார்?' என்று எண்ணிய அவள், மற்போர்க் களத்தின் வாயிற்புறத்தே நின்றிட்ட ஒரு மல்லனைப் பார்த்து,

"தமிழகத் தூதுவர் எங்கே?" என்று பரபரப்போடு கேட்டாள்.

"இந்தப் பக்கந்தான் போனார்" என்றான் அவன்.

"அவருக்குப் பலத்த காயமா?"

"இல்லை; முழங்கையில் மட்டும் சிறாய்ப்புக்கள் இருந்தன. தோள்பட் டையிலே சிறு கீறல் ஏற்பட்டு குருதி வழிந்திட்டது. மற்றபடி காயம் எதுவும் தெரிந்திடவில்லை" - அதனைக் கேட்டு நிம்மதியாய்ப் பெருமூச் செறிந்தாள் ஜூனோ.

'தூதுவர் அந்தக் காண்டாமிருகத்தினையே மண் கவ்வச் செய்திட்ட செய்தியினைக் கேட்டால், அகஸ்டஸ் பெருமகனாருக்கு அளவில்லாத பூரிப்பு உண்டாகுமே! மற்றவர்கள் போய்த் தெரிவிக்குமுன், நானே முந்திக்கொண்டு சென்று முதலில் சொன்னால் என்ன?' என்னும் விந்தையானதோர் ஆசையும் உண்டாயிற்று அவளுக்கு.

தேரினை நிறுத்தி வைத்துவிட்டு வந்த இடத்தை நோக்கி விரைந்திட்டாள்.

அங்கோ... அவளுடைய தேரினைக் காணோம்!

'அடிமை' யொருவன் அவளை நோக்கி ஓடோடி வந்தான்.

"தேரைக் காணோமே என்று தேடுகிறீர்களா? தமிழகத் தூதுவரும் சிப்பியோவும் இப்போதுதான் அதில் ஏறிக் கொண்டு போனார்கள்" என்றான்.

"அப்படியா? அவர்கள் எந்தப்பக்கம் போனார்கள் என்று தெரியுமா?"

"பாலத்தின் குன்றுப் பக்கம்தான் தேர் பறந்து சென்றதைப் பார்த்தேன்" என்றான் அடிமை.

ஆனால் அதே நேரத்தில் செழியனோ...?

அவள் நினைத்திட்டது போல் அகஸ்டஸைச் சந்தித்து அளவளாவிக் கொண்டா இருந்திட்டான்?

அல்லது, தனக்கு ஏற்பட்டு விட்ட சிறு காயங்களுக்குச் சிகிச்சைதான் பெற்றுக் கொண்டிருந்தானா?

அல்ல.

பிறகு...?

அகஸ்டஸின் இல்லம் இருந்திடும் 'பாலத்தீன்' குன்றுக்கும் அருகே 'பரமபதம்' விளையாடும் படத்திலே காணப்படும் பாம்பினைப்போல் நெளிந்து வளைந்து செல்கிறதல்லவா ஒரு நெடுஞ்சாலை? அதிலே மேசனஸ் என்னும் வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளாகப் புரவிகள் மீதேறிப் பறந்து கொண்டிருந்த சில வீரர்களைப் பொருதிய வண்ணம் இருந்திட்டான் செழியன். சற்று முன்னர், காண்டாமிருகத்தோடு புரிந்திட்டானே அதனைவிடக் கடுமையான சண்டை; சாலை ஓரத்திலே தொடங்கிய அது, சற்றைக்கெல்லாம்.சாலையை ஒட்டிய இறக்கத்தில் உள்ள ஊசி இலைகளைக் கொண்ட 'பைன்' மரங்கள் அடர்ந்திட்ட பகுதிக்கும் நகர்ந்துவிட்டது.

முதலில் வெறுங்கையனாகத்தான் அந்த வீரர்களிடையே புகுந்திட்டான் செழியன். ஆனால் கண்ணின் இமை திறந்திடும் அந்தக் கண நேரத்திற்குள் ஒரு வீரனுடைய வயிற்றினைத் தன் தலையினால் மோதித் தாக்கி அவனைத் தடுமாறி விழுந்திடச் செய்து, அவன் கரத்தில் இருந்திட்ட வாளினைப் பறித்துவிட்டான் அவன். அந்த வாளுக்குச் சிலர் வகையான உணவாகி வீழ்ந்தனர். பின்னர் நம் நாட்டுச் சூலாயுதம் போன்ற கருவியொன்றும் அதே வீர்களிடமிருந்து இவனுக்குக் கிட்டிவிட்டது.

சிலம்பு விளையாட்டிலே, தேர்ச்சி மிகுந்திட்ட இவன், 'போத்துச் சுற்றல்' முறைப்படி அந்தச் சூலாயுதத்தைச் சுழற்றித் தன்னைக் காத்துக் கொண்டதுடன் தாக்கிடவும் முற்பட்டான். இவனுடைய சுழல்வீச்சுப் பாய்ச்சலுக்கு ஈடு கொடுத்திட இயலாமல் திணறிப் போயினர் எதிரிகள்; எனவே எடுத்தனர் ஓட்டம் விரைவிலேயே! பழைய உடம்போடு அல்ல; பழுத்த காயங்களோடு? ஒரு சிலர் இடுப்பு ஒடிந்து போய் எழுந்திருக்கவே முடியாமல் தரையினையே முத்தமிட்டுக் கிடந்தனர்.

அவர்களுடைய முனகலும், மற்றவர்களின் ஓட்டமும் சிப்பியோ வுக்குச் சிரிப்பையே அளித்திட்டன. இத்துணை எளிதாக - விரைவாக அந்த முரட்டு வீரர்களைச் செழியன் முறியடித்துவிடக் கூடும் என்று அவன் எதிர்பார்த்திடவே இல்லை.

கொடிய காண்டாமிருகத்தோடும் அதைவிடக் கொடிய மனிதர்களோடும் நெடுநேரம் சண்டையிட்ட களைப்பு நம் தமிழகத் தூதுவனையும் தழுவிக் கொள்ளத் தவறிடவில்லை. இரைக்க இரைக்க - மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட - ஒரு 'பைன்' மரத்தினடியிலே உட்கார்ந்து விட்டான் அவன்.

கரங்கள் இரண்டினையும் முதுகுப்புறம் முட்டுக் கொடுத்தவாறு அவன் அமர்ந்திட்டதைக் கண்ட சிப்பியோ ஓடோடி வந்தான். செழியனின் இடக்கரத்திலே குருதி வழிவதனைக் கண்டதுமோ அவனுடைய பதற்றம் பன்மடங்காயிற்று.

"காயம் பலமாக இருக்கும்போல் தெரிகிறதே! சரி, வாருங்கள்! உடனே ஒரு மருத்துவரிடம் போய்க் காண்பித்து விடுவோம்."

"காயம் அப்படி ஒன்றும் கடுமையானதாக இராது என்றே எண்ணுகிறேன். என்றாலும் ஏதேனும் சிகிச்சை செய்திடாமல் இருந்திடவும் கூடாதுதான்" என்ற செழியன், மெல்ல எழுந்திட்டான். சாலையில் நின்றிருக்கும் தேரினை நோக்கிச் சென்றிடும்போதே சிப்பியோவின் பக்கமாகத் திரும்பியவாறு நோக்கி இப்படிக் கூறினான்.

"நீர் மட்டும் தக்க சமயத்தில் மேசனசின் சதியினை உளவறியாமல் போயிருந்தால், வட்டக் கலையரங்கத்திலேயே வேடிக்கை பார்த்துக் கொண்டு வீண்பொழுது கழித்திருந்தால் இந்நேரம் அகஸ்டஸ் பெருமகனாரின் உயிரே பறி போயிருக்குமே!"

"நீங்களும் தக்க சமயத்தில் அந்த மிருகத்தை வீழ்த்திய களைப்பைக் கூட பொருட்படுத்தாமல் உடனே புறப்பட்டு வந்தீர்களே அதைச் சொல்லுங்கள்! வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு விரைவில் இந்த புல்லர்களைப் புறமுதுகிட்டு ஓடிடச் செய்திருக்கவே முடியாது!"

"இவர்களைத் தவிர இன்னும் வேறு யாராவது அகஸ்டஸ் அவர்களின் உயிருக்கு உலை வைக்கச் சென்றிருக்கலாம் அல்லவா?"

"அப்படி யாராவது சென்றிருந்தால் அவர்களுடைய தலை இந்நேரம் துண்டாடப்பட்டிருக்கும்".

"அது எப்படி அவ்வளவு திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள்?"

"சாலையைவிட்டுக் கீழே இறக்கத்தில் நீங்கள் சண்டைபோடும் பொழுதே அகஸ்டஸ் அவர்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு வீரனொருவன் புரவிமீது வந்தான். தற்செயலாக அவனிடம் மேசனசின் சூழ்ச்சியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, ஆட்சித் தலைவரின் பாதுகாப்புக்கு ஆவன செய்திடுமாறு கூறி அனுப்பிவிட்டேன். அது மட்டும் அல்ல; நமக்கு துணையாகவும் சில படைவீரர்களை அனுப்பிடச் சொல்லியிருக்கிறேன்."

"அப்படியா! மிக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் சிப்பியோ! ஆமாம், 'அரசியல், புலி' - என்று அழைக்கப்படும் மேசனஸ் இப்படி ஏன் தன் தரத்தினைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்! சிறிது நேரத்திற்கு முன்னர் வட்டக் கலையரங்கிலே, என்னோடு எவ்வளவு இனிமையாகச் சிரித்துப் பேசினார்? நான் யாரை அறவே வெறுக்கிறேன் தெரியுமா? என்னை நேருக்கு நேர் பொருத வந்திடும் எதிரிகளை அல்ல; கூட்டுறவு கொண்டு குழைந்திடும் பொழுதே குழியையும் பறித்திடும் துரோகிகளையே! அன்று ஜூலியஸ் சீசரை எப்படி புரூட்டஸ் - கேசியஸ் போன்றவர்கள் வஞ்சகமாகக் கொன்றார்களோ, அப்படித்தானே இன்று அகஸ்டசையும் தந்திரமாகக் கொல்ல முயன்றிருக்கிறார் மேசனஸ்! எல்லாரும் வேடிக்கைகளிலே ஈடுபட்டிருக்கும் வேளையாகப் பார்த்து, அகஸ்டசும் உடல் நலம் குன்றித் தனியாக இருந்திடும் சமயம் பார்த்துச் சூழ்ச்சியாக இப்படி ஆட்களை அனுப்பி இருக்கிறாரே! ஆனால் இனியும் இம்மாதிரியான நரிக்குணம் கொண்டோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அகஸ்டசிற்கு மட்டுமல்ல இந்த பரந்த ரோமாபுரிப் பேரரசுக்கே பெருங்கேடுதான் வந்திடும்!"

"நீங்கள் என்னதான் சொல்லுங்கள்! மேசனசைப் பழிக்குப் பழி வாங்கிடவே மாட்டார் நம்முடைய ஆட்சித் தலைவர். அவர், இப்படி விட்டுக் கொடுத்துக் கொண்டே போவதுதான் எதிரிகளுக்கு இடங்கொடுத்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீராவேசம் மிக்க வேங்கையாகப் பாய்ந்திட்ட அவர் இப்போது அமைதியை நாடிடும் வெண்புறாவாக மாறிவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள் அவர்கள். அதனால் எதையும் செய்திடலாம். எப்படியும் ஏசிடலாம் என்று எண்ணுகிறார்கள்; என்னைப் பொறுத்த வரையில் நம் ஆட்சித் தலைவரைப் பற்றி அவர்கள் அவ்வாறு கருதிடக் காரணமே, அவர் படை அணிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்திட்டதுதான். ஒரு காலத்தில் இந்த நாட்டில் அறுபது 'லீஜன்'கள் வரை இருந்தன. ஆனால் இன்றைக்கோ நாற்பது - முப்பது - என்று குறைந்து கொண்டே வந்து விட்டன."

"ஒரு 'லீஜன்' என்றால் ஒருபடை அணி அல்லவா? அதிலே சாதாரணமாக எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?"

"ஐயாயிரம் பேர் இருப்பார்கள்"

"ஆமாம். அகஸ்டஸ் ஏன் இப்படிப் படைக் குறைப்பைச் செய்திட்டார்?"

"அமைதியின் மீதுள்ள ஆர்வந்தான். அடிக்கடி சண்டைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் மக்கள் பலர் கொடூரமாக மாள்கிறார்களே என்பது ஒருபுறம் இருக்க, நாட்டுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை வழங்கிட முடியாதல்லவா? கலை, இலக்கியம் முதலானவற்றை வளர்த்திடவும் முடியாதல்லவா? அதனால் தான் போர் என்றாலே வெறுக்கத் தலைப்பட்டுவிட்டார் அகஸ்டஸ்."

"நீங்கள் சொல்வதைக் கேட்டிடும்பொழுது நாவலந்தீவின் வடப் புலத்தினில் கோலோச்சிய அசோக மன்னனின் நினைவே வருகின்றது. என்றாலும் குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்; அப்படியே கூர்வாளைக் கூர்வாளால்தான் சந்திக்க வேண்டும். அதனை விடுத்துக் கூர்வாளைக் குச்சியால் சந்திக்கலாமா? அதனால்தான் விட்டுக் கொடுத்தல் - பொறுத்துக் கொள்ளல் - பகைமைக்குப் பரிசாகப் பாசத்தை அளித்தல் முதலான பண்பு நலன்களையே பலவீனங்களாகக் கருதிடுகின்றனர் சிலர். ஆமாம், இப்போது நம் அகஸ்டஸ் பெருமகனாரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினால் என்ன?"

"உங்கள் கைக்கும் மற்றக் காயங்களுக்கும் முதலில் சிகிச்சை செய்து விட்டுப் பிறகு அவரை நாம் சந்திக்கலாம். ஏனென்றால் இப்போதே நன்றாக இருட்டி விட்டது; விளக்கு வைத்திட்ட பிறகு பெரும்பாலான ரோமானியர்கள் நெடுநேரம் விழித்திருக்க மாட்டார்கள். நம்முடைய மருத்துவரும் உறங்கிப் போய்விட்டால் என்ன செய்வது?"

"ஏன், உறங்கியவரைத் தட்டி எழுப்பினால் விழித்துக் கொள்ள மாட்டாரா என்ன?" என்று செழியன் சிரித்திட்டான்.

"விழித்துக் கொள்வார். ஆனால் தூக்கக் கலக்கத்தில் மருந்தினைப் பூசுவதாக நினைத்துக்கொண்டு மணலை எடுத்துத் தூவி விட்டால் என்ன செய்வது?" என்று சிப்பியோவும் நகைத்திட்டான். இருவரும் தேரினை அடைந்து ஏறிக் கொண்டனர். சற்றைக்கெல்லாம் ஒரு மருத்துவரின் இல்லத்து வாசலில் போய் நின்றது தேர்.

ரோமாபுரிச் செல்வச் சீமான்கள் பொதுவாக மேலே ஓரடுக்கோ ஈரடுக்கோ கொண்ட மாளிகைகளிலே அந்தநாளில் வாழ்ந்து வந்தனர். நடுவே சிறு உள் முற்றம் அதனைச் சுற்றிலும் நெடிய தூண்கள் எழுப்பப்பட்ட நீண்ட சதுரமான ‘ஆப்ரியம்' என்று அழைக்கப்படும் கூடம் போன்ற பிரகாரத்தளம். அதனை ஒட்டிச் சிறுசிறு அறைகள், சலவைக்கற்கள் பளபளக்கும் தரைகள், சுவர்கள், உப்பரிகையின் மேலே தனிப் பொலிவோடு கண்களைக் கவரும் பசுமையான 'கூரைப்பூங்கா.'

செழியன் சென்றடைந்திட்ட மருத்துவருடைய இல்லமோ அவன் கற்பனை செய்திருந்தவாறு, பெரிய மாளிகையாக இல்லை; சாதாரண எளிய வீடாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'ஆலிவ்' எண்ணெய் விளக்குகளும் அங்கே எரிந்திடவில்லை; மிருகங்களின் கொழுப்பினாலான மெழுகுவர்த்திகளே அடக்கமான முறையில் ஒளியினைச் சிந்தின. குளிரை விரட்டுவதற்கான கணப்பு இல்லாத வீட்டினையே ரோமாபுரியிலே கண்டிட முடியாது. ஆனால் செல்வர்கள் தங்கள் மாளிகையின் பிராசியர்ஸ் எனப்படும் கலை வேலைப்பாடுகள் கொண்ட பித்தளைத் தட்டிலேதான் மரக்கரித் துண்டுகளால் கணப்புப் போட்டு எரியவிட்டிருப்பார்கள். இந்த மருத்துவரின் இல்லத்திலே கொள்ளிக் கட்டைகளே தகதகவென்று கணப்பாக அனலை வீசிக் கொண்டிருந்தன. கட்டில், பீரோ போன்ற மரச்சாமான்களும் நிறைய இல்லை; இரண்டு மூன்று முக்காலிகளும், ஒரேயொரு நாற்காலியுமே கிடந்தன.

செழியனும் சிப்பியோவும் உள்ளே நுழைந்த பொழுது அந்த வயது முதிர்ந்த மருத்துவர், ஏதோ மூலிகையை ஆய்ந்த வண்ணம் இருந்திட்டார்.

சிப்பியோவைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் வரவேற்ற அவர், "இவர், தமிழகத் தூதுவர்தானே?" என்று கேட்டார்.

"ஆம் அவரேதான்," என்றான் சிப்பியோ.

"இது என்ன கையிலே குருதி வழிந்து உறைந்திருக்கிறது?"

"இன்று ஆம்பி தியேட்டரில், காண்டாமிருகத்தோடு ஒரு வேடிக்கைக்காகச் சண்டைபோட நேர்ந்துவிட்டது. அதனால் சிறிது காயங்கள் ஏற்பட்டுவிட்டன"

பாதிப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைத்திட்டான் சிப்பியோ!

"இது என்ன கொடுமை! காண்டாமிருகத்தோடெல்லாம் இவரைப் போய் சண்டையிடச் சொல்வதாவது? அதனிடமிருந்து உயிரோடு தப்புவதே கடினமாயிற்றே! சரி, இப்படி முக்காலியில் அமருங்கள்! நான் இதோ மருந்து கொண்டு வருகிறேன்" என்றவாறே பின்கட்டினை நோக்கி விரைந்திட்டார் மருத்துவர்.

சிப்பியோவின் முகம் ஏனோ சட்டென்று கறுத்து விட்டது. அவரைப் பின் தொடர்ந்தே சென்றிட்ட அவன், “என்ன மருத்துவரே! அவர் தமிழகத் தூதுவர் என்று தெரிந்திருந்தும் அவரைப் போய் முக்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு நீங்கள் பாட்டுக்கு உள்ளே வந்துவிட்டீர்களே! மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள், முதியவர்கள், சிறப்பு விருந்தினர் கள் ஆகியோரை நாற்காலியில் அமரச் செய்திடுவதுதான் நம்நாட்டுப் பண்பாடு -பழக்கம் என்பது உங்களுக்கு தெரியாதா?" என்று தாழ்ந்த குரலில் இலத்தீன் மொழியினில் கடிந்து கொண்டான்.

"மன்னித்துக் கொள் சிப்பியோ! ஏதோ நினைப்பினில் மறந்தே போய்விட்டேன்” என்று மொழிந்திட்ட அவர், பரபரப்போடு நாற்காலியை எடுத்து வந்து செழியனின் அருகே போட்டு, அதிலே அமர்ந் திடுமாறு சைகை காட்டினார்.

சிப்பியோவும் அவரும் உரையாடியவற்றைப் புரிந்து கொள்ளா செழியன், அவர் சைகை காட்டியவாறே நாற்காலியில் போய் உட்கார்ந்திட்டான்.

சிறிது நேரத்திலேயே சிகிச்சை முடிந்துவிட்டது.

சிப்பியோ, 'டெனரீ' எனப்படும் வெள்ளி நாணயங்கள் இரண்டினை எடுத்து மருத்துவரிடம் நீட்டினான். அவரோ அதனை வாங்கிட அறவே மறுத்துவிட்டார்.

பின்னர் இளைஞர்கள் இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வீதிக்கு வந்தனர். தேரினில் ஏறிக் கொண்டதும், "இந்த மருத்துவர் பெரிய செல்வச் செழுமை உள்ளவராக இருந்திடுவார் என்று எண்ணினேன். இவரோ மிகமிக எளிமையான இல்லத்தில் - எளிய வாழ்க்கையே வாழ்கின்றாரே!" என்று தன் வியப்பினைத் தெரிவித்திட்டான் செழியன்.

"ஓகோ! 'மருத்துவர்' என்றதும் அவர் உயர்குடியில் பிறந்தவராக - வசதி, வாய்ப்புகள் மிகுந்தவராகத்தான் இருப்பார் என்று எண்ணிவிட்டீர்கள் போல் இருக்கிறது! ஆனால் எங்கள் ரோமாபுரியிலே மற்ற எல்லாத் துறைகளும் தழைத்துச் சிறந்திட்ட போதிலும், பன்னெடுங் காலமாகவே மருத்துவத் துறை மட்டும் வளர்ச்சியுற்றிடவே இல்லை. கிரேக்கர்கள்தாம் முதன்முதலில் இங்கே மருந்து வகைகள் சிகிச்சை முறைகள் முதலானவற்றைப் பரப்பினார்கள். அந்த மருத்துவர்களோ பெரும் பாலும் அடிமைகள் - அல்லது அடிமைகளாக இருந்து விடுதலை பெற்றவர்கள் - என்ற வகையினராகத்தான் இருந்தார்களேயன்றி, உயர் குடியில் பிறந்தவர்களாக இருந்திட்டதில்லை. ஜூலியஸ் சீசர்தான் அவர்களுக்குத் தகுந்த மரியாதையினைத் தந்து குடியுரிமையும் வழங்கினார். இப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளது. உங்களுக்கு சிகிச்சை அளித்திட்டாரே, இந்த மருத்துவரும் கிரேக்கர் வழியில் வந்தவரே. அதனால்தான் எங்கள் நாட்டுப் பழக்கவழக்கங்களை அடிக்கடி மறந்து போய்த் தடுமாறுகின்றார்" என்றான் சிப்பியோ.