ரோமாபுரிப் பாண்டியன்/44. உச்சிமேல் வைத்து மெச்சினர்
44
உச்சிமேல் வைத்து மெச்சினர்
செழியனும் சிப்பியோவும் ஏறி வந்திட்ட தேர், அகஸ்டஸின் இல்லத்தினை அணுகிய பொழுது, அங்கு ஒரே பரபரப்பு நிலவிற்று.
தலையினைக் குனிந்து, தன் முழங்கால்களிலே முகத்தினைப் புதைத்திட்டவாறே விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள் ஜூனோ.
'அவள் ஏன் இப்படி அழுகிறாள்? ஒருவேளை அகஸ்டசுக்குத்தான் ஏதாவது?' என்று திடுக்கிட்டுப் போனான் செழியன்.
தன்னை மறந்து அழுகையில் அழுந்திக் கிடந்திட்ட ஜூனோ தனக்கு மிக அருகினில் தேர் நெருங்கிவிட்ட பிறகே ஏதோ ஒலி கேட்கிறதே என்னும் உணர்வினைப் பெற்றவளாகத் தலைநிமிர்ந்து பார்த்திட்டாள்.
செழியன் - சிப்பியோ இருவருடைய உருவங்களைக் கண்டதும் அவளது உள்ளத்தினை நெருப்பிலே தள்ளிய துயரச்சுமை கரைந்திட்டது. கவலையிருள் மறைந்திட்டது; துள்ளிக் குதித்தோடினாள் இளங்கன்றாக. தேரினைவிட்டுக் கீழே இறங்கிடும் ஆணழகனை - தமிழகத் தூதுவனை அள்ளித் தழுவிக்கொண்டாள் ஆர்வத்தோடு. அவனுடைய பரந்த மார்பினிலே அவளது முகமலர் பதிந்திட்டது. விழிச்சுனையிலிருந்தோ கண்ணீர் அருவி சூடேறிய இன்பப் பாலின் நுரைச் சிதறலாக வழிந்து கொட்டியது. அவள் இதுகாறும் அழுது புலம்பியது தன்னைக் காணாமல் தான் என்பதனை விரைவில் உணர்ந்து கொண்டான் செழியன்.
அவளுடைய அணைப்பினின்றும் மெல்ல விடுபட முயன்றிட்டவனாக அவளது தலையினை நிமிர்த்தி, "அகஸ்டசுக்கு ஏதாவது பேராபத்தா?" என்று பதற்றத்துடன் வினவினான்.
"உங்களைக் காணோமே, என்ன நேரிட்டதோ என்கிற இதயத் துடிப்பினைத் தவிர, அவருக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை. உங்களை எங்கெல்லாம் தேடுவது? மேசனசின் ஆட்களை விரட்டிவிட்டபிறகு நீங்கள் எங்கேதான் போனீர்கள்?" என்று விசும்பலுக்கிடையே விடையிறுத்ததுடன் மறு கேள்வியும் தொடுத்திட முயன்றாள் ஜூனோ.
“காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றிருந்தோம். ஆமாம். மேசனசின் ஆட்களை விரட்டிவிட்டோம் என்பது உனக்கு எப்படித் தெரியும்?' "உங்களுக்குத் துணை புரிந்திடப் படைவீரர்களை அனுப்பி வைத்திடுமாறு சிப்பியோ செய்தி சொல்லி அனுப்பிடவில்லையா? அதன்படி நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்திட்ட வீரர்கள் உங்களுடைய தாக்குதலுக்கு இரையாகித் தரையிலே முனகிக் கிடந்திட்ட ஓர் எதிரியினைக் கண்டுவிட்டார்கள். அவன்தான் அங்கே நடந்தவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் மொழிந்திருக்கிறான். அவனுடைய கூற்றினை படைவீரர்கள் திரும்பி வந்து அகஸ்டஸ் அவர்களிடம் பகர்ந்திடும்பொழுது, நானும் வட்டக் கலையரங்கத்திலிருந்து வந்து விட்டேன். சரி; வாருங்கள் உள்ளே. உடனே நாம் ஆட்சித் தலைவரைப் பார்த்திட வேண்டாமா? உங்களைக் கண்டதும் அவர் எத்தனை பூரிப்பு அடைவார் தெரியுமா?" என்று செழியனை உயிரோடு பார்த்துவிட்டதால் உண்டான பூரிப்புடன் பொங்கிய கண்ணீரை வழித்தெறிந்திட்டவாறே ஆடவர் இருவரையும் இல்லத்தினுள் அழைத்துச் சென்றாள் ஜூனோ.
அவள் புகன்றவை அனைத்தும் பொய்யல்ல என்று மெய்ப்பிப்பவரைப் போலவே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து கொண்டார் மேன்மை மிகு அகஸ்டஸ் அவர்களும், செழியனைக் கண்டதும். அப்படியே ஆரத்தழுவிக்கொண்டு விட்டார் - பங்காளி காய்ச்சல் இல்லாத - பாசப் பிணைப்பினால் கட்டுண்ட - தம்பி உடையான் படைக்கஞ்சான் என்னும் இறுமாந்த நிலையினை எய்திட்ட ஒரு மூத்த அண்ணனைப் போலவே அவனை அணைத்துத் திளைத்திட்டார் அவர். நன்றியறிதலின் உந்துதலால் தூர் அள்ளிய கேணியில் பீரிட்டடிக்கும் நீரூற்றுப் போலப் பாய்ந்திடும் கண்ணீர் வெள்ளத்தினை அவரால் கட்டுப்படுத்திட முடிய வில்லை.
"என்னுடைய உயிரினைத் தக்க சமயத்தில் காப்பாற்றிட எங்கோ தமி ழகத்திலிருந்து ஒரு தூதுவர் வந்திட வேண்டும் என்று இருந்திருக்கிறதே, அந்த விந்தையைப் பார்த்தீர்களா? உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்திடப் போகிறேன். செழியன்!" என்று கூறிடும்பொழுதே குரல் தழுதழுத்தது அகஸ்டசுக்கு.
மறுநாள் காலை.
செழியன் கண் விழித்திட்ட பொழுது தன் முகத்திற்கு மேலே ஒரு செந்தாமரைப் பூ சிரித்து மலர்ந்திருப்பதைக் கண்டான்.
தாமரை எங்கே வந்தாள்? என்னும் ஐயப்பாட்டினைக் கொண்டிட்டான் அவன். ஆனால் சாம்பல் நிறங்கொண்ட சுருள் முடியினை ஊன்றிக் கவனித்திட்ட பின்னரே அவள் ஜூனோதான் என்னும் தெளிவு உண்டாயிற்று அவனுக்கு.
படுக்கை மெத்தையில் அவனது தலைமாட்டில் அமர்ந்திருந்த ஜூனோ தன் தலையினை அவனுக்கு மிகநெருக்கமாகக் கவிழ்த்திட்ட வண்ணம் அவனது முடியினைக் கோதுவதும் நெற்றியைப் பிடித்து விடுவதுமாக இருந்திட்டாள். முந்தினநாள் கடுஞ்சண்டைகளினால் ஏற்பட்ட உடம்பு அலுக்கையினை மறக்க அடித்திடும் வகையில் அவளது மலர்க்கரம் தன் மேனியிலே தவழ்ந்திடுவது இதமாக - இன்பமாகவே இருந்திட்டது செழியனுக்கு - என்றாலும் மற்றவர்கள் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்னும் எண்ணம் எழுந்திட்டதுமே அவளு டைய கையினை மெல்ல அப்புறப்படுத்திவிட்டுப் படுக்கையினின்று கீழே இறங்கி நின்று கொண்டான் அவன்.
போலித்தனமான ஒரு புன்முறுவலைச் சிந்தியவாறே, "நீ எப்போது வந்தாய்?" என்று கேட்டான் ஜூனோவை நோக்கி.
"சிறிது நேரத்திற்கு முன்னர்தான் வந்தேன். அகஸ்டஸ் அவர்கள் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்."
"எதற்கு?"
"உங்களுடைய உடல் நலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆலயங்களுக்கெல்லாம் சென்று வழிபாடுகள் நடத்திட வேண்டுமாம். முக்கியமாக பாலத்தீன் குன்றில் அவர் புதிதாக எழுப்பியுள்ள 'அப்பல்லோ' தெய்வத்தின் ஆலயத்திற்கும், 'கேபிடால்' குன்றிலுள்ள ஜூபிடர் ஆலயத்திற்கும், ரோமாபுரிப் பேரரசின் வெற்றிக்கே காரணமான தெய்வமாகக் கருதப்படும் 'மார்ஸ்' ஆலயத்திற்கும் போக வேண்டுமாம்."
எனக்கென்னவோ என் உடல் நலம் தேறுவதற்கு இப்போது தேவையானது தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் சிகிச்சைதானே அன்றித் தெய்வ வழிபாடு அல்ல என்றே தோன்றுகிறது!" என்று சிரித்திட்டான் செழியன்.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லை என்று தெரிகிறதே!"
"கடவுளை நாம் நம்புகிறோமா என்பதைவிடக் கடவுள் நம்மை நம்பிடும் அளவுக்கும் நாம் நாணயமானவர்களாக, நச்செண்ணங்கள் இல்லாதவர்களாக. கருணை மிகுந்தவர்களாக, கடமையிலிருந்து வழுவாதவர்களாக - நடந்து கொள்கிறோமா என்று சிந்தித்திட வேண்டும்; செயலாற்றிடவும் வேண்டும்."
"நீங்கள் பொல்லாத ஆள்தான்! எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கிறீர்களே! சரி நேரமாகிறது, புறப்படுங்கள். இந்நேரம் உங்கள் வருகையினை ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருப்பார் அகஸ்டஸ் பெருமகனார்."
மூன்று நாட்கள் கழித்து 'செனேட்' மன்றம் கூடிய பொழுது தமிழகத் தூதுவனுக்குத் தனிப்பட்ட முறையிலே கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வாழ்த்து மலர்கள் வழங்கப்பட்டன.
"எங்களுடைய அகஸ்டசின் உயிரைக் காப்பாற்றிய அற்புத வீரரே! உங்களுக்கு எங்கள் நன்றியினை எப்படித்தான் தெரிவித்திடப் போகிறோம்!" என்று ஒவ்வொரு செனேட்டரும் அவனுடைய கரத்தினைப் பற்றிக் குலுக்கித் தங்கள் பேரன்பினைப் பெருமதிப்பினைத் தெரிவித்துக் கொண்டனர்.
அவர்கள் அத்தனை பேரிடமும் செழியன் மட்டும் என்ன நவின்றிட்டான் தெரியுமா?
“உங்கள் ஆட்சித் தலைவரின் உயிரினை நான்தான் காப்பாற்றினேன் என்பதில் முழு உண்மை இல்லை; உங்கள் நாட்டு சிப்பியோதான் அவரைக் காப்பாற்றிடும் கேடயமாக விளங்கியவர். அவர் மட்டும் தக்க சமயத்தில் தீயவர்களின் திட்டங்களை உளவறிந்து வந்து உரைத்திடாமல் போயிருந்தால், நானும் உடனே செயல்பட்டிருக்க முடிந்திராதல்லவா? எனவே உங்களுடைய பாராட்டுத் தேனமுதைப் பெரும் அளவு பருகித் திளைத்திட வேண்டியவர் சிப்பியோதான்!"
தன்னடக்கமான உண்மையை ஒளித்திடாத சாதாரணமானவர்களுடைய தொண்டினையும் பெரிதாக மதித்திடத் தவறிடாத செழியனின் இச்சொற்கள். செனேட்டர்களிடம் மேலும் நன்மதிப்பினையே வாங்கிக் கொடுத்தன. அவனை எவ்வாறெல்லாம் சிறப்பிக்க வேண்டும் என்பது பற்றிப் புதிய திட்டங்களையெல்லாம் தீட்டித் தந்திடப் போட்டியிட்டனர் அந்த செனேட்டர்கள்.
ஒருவர், "செழியன் அவர்களை நம்முடைய செனேட் உறுப்பினராகவே நியமித்திட வேண்டும்" என்றார்.
இன்னொருவர், "தமிழகத் தூதுவரின் பெயரிலே ஓர் 'ஆம்பிதியேட்ட' ரையே உருவாக்கினால் என்ன?" என்று கேட்டார்.
வேறொருவர், "நம் நாட்டுப் படைத்தளபதிகளுள் ஒருவராக பதவி அளித்து அவரைச் சிறப்பிக்கலாம்" என்றார்.
மற்றொருவர், "அவருக்கு என்று சில 'லீஜன்'களை (படை அணிகளை) ஒதுக்கினால் என்ன?" என்று அடித்துப் பேசினார்.
செனேட்டர்கள் இவ்வாறு செழியனை உச்சிமேல் வைத்துப் போற்றிப் புகழ்வதைக் கேட்கக் கேட்க அகஸ்டசுக்குப் பூரிப்புத் தாங்கவில்லை.
"மதிப்புக்குரிய செனேட்டர்களே! உங்களுடைய உணர்ச்சிகளுக்கெல்லாம் எந்த அளவுக்கு வடிவம் கொடுத்திட இயலுமோ அந்த அளவுக்குத் தமிழகத் தூதுவருக்கு நம் நன்றியறிதலைத் தெரிவித்திட நடவடிக்கைகள் எடுத்திடுவேன் என்பதனை இங்கே உறுதியோடு உரைத்திட விழைகிறேன். தனிப்பட்ட முறையிலே அவருக்கு நான் எத்துணை கடன்பட்டிருக்கிறேன் என்று இயம்பிடத்தேவையில்லை. அவர் மட்டும் வேங்கைப் பாய்ச்சலில் விரைந்து வந்து மேசனசின் ஆட்களை விரட்டிடத் தவறியிருந்தால்... அதனை நினைத்தாலே என் நெஞ்சம் நடுக்குறுகின்றது." - அதற்கு மேல் அந்த மாபெரும் ஆட்சித் தலைவரின் நாவிற்கு வலுவில்லை. தான் எண்ணியவற்றை எடுத்துரைத்திட!
உணர்ச்சிகளின் இறுக்கத்தினை தாங்கவொண்ணாமல் அவரது இதயம் விம்மிற்று. அந்த விம்மலின் வெளிப்பாடாகக் கண்ணீரும் வழிந்தோடிற்று.
அந்த நேரத்தில்-
தமிழகத்திலோ...?