உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/45. நெடுமாறனின் நெஞ்சம்

விக்கிமூலம் இலிருந்து

45

நெடுமாறனின் நெஞ்சம்

துரை மாநகர் மட்டுமல்ல பாண்டி மண்டலமே துயரப் பெருமூச்சினைவிட்டுக் கொண்டிருந்தது; அந்தப் பெருமூச்சு எந்த நேரத்திலும் கதறலாக - கண்ணீர் வெள்ளமாக - வெடித்திடலாம் என்னும் நிலையும் அப்போது நிலவிற்று.

அதற்குக் காரணம் என்ன? அணைந்திடப்போகும் விளக்காக உதிர்ந்திடப் போகும் பழுத்த மட்டையாக - பெருவழுதிப் பாண்டியன் மறுபடியும் படுக்கையிலேயே விழுந்திட்டதுதான் !

சில திங்களுக்கு முன்னர் உடல் தேறி நடமாடியவன் ரோமாபுரிக்குத் தூதுவனாகப் புறப்பட்ட செழியனை வழியனுப்பி வைத்திடக் கொற்கைப் பட்டினத்துக் கடற்கரைக்கே சென்றிட்டவன். -இப்போது கால்களை அசைத்திடாமல், கரங்களை இயக்கிடாமல் கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கிடந்திட்டான்.

எனினும், ஒளி குன்றிடாத விழிகளும், மிக மெல்லிய குரலில் என்றாலும் பேச்சினை இழந்திடாத வாயுமே இன்னும் அரசன் கவலைக்கிடமான நிலையினை எய்திடவில்லையெனப் பகராமல் பகர்ந்தன.

தங்களுடைய மாமன்னர் இங்ஙனம் மரணத்தின் வாயிலை நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டாரே என்று மக்கள் எல்லோரும் மனம் நொந்து வேதனை நெருப்பினில் வெந்திடும் வேளையில்-

அரசனின் அருமை மகனான இளம்பெருவழுதியோ எழிலரசி தாமரையை இன்னும் கண்டுபிடித்திட முடியவில்லையே என்னும் ஏக்கச் சேற்றிலேயே புழுவாய் நெளிந்திட்டான். இரவோடு இரவாக ஊருக்கு ஊர் அவளைத் தேடித் தேடி அலைந்திட்டான்.

தளபதி நெடுமாறனுக்கோ அரியணையை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றியே ஓய்ந்திடாத சிந்தனை, அடங்காத ஆசைப் பசி!

இந்நிலையில், புலவர் காரிக்கண்ணனாரும் அவருடைய செல்ல மகள் முத்துநகையுமே, ஊண், உறக்கம் பாராது ஓய்வுதனை நாடாது பாண்டிய வேந்தன் அருகிலேயே இருந்து பரிவோடு கவனித்துக் கொண்டனர், அவனுக்கு ஆகவேண்டியவற்றை.

பிணியின் கொடுமை ஒருபுறம் இருந்திடப் பொறாமை மிக்க தளபதியும், பொறுப்பே இல்லாத இளவரசனும் தனக்குப் பின்னால் இந்த நாட்டினை எந்தத் திக்கினில் இட்டுச் செல்வரோ என்னும் பெருங்கவலையே பெருவழுதிப் பாண்டியனைப் பெரிதும் வாட்டிற்று; வதைத்திட்டது!

அவன் முத்துநகையையும், புலவர் காரிக்கண்ணனாரையும் தனக்கு மிக அருகாக அழைத்து, அவர்களுடைய செவிகளில் மட்டுமே விழுந்திடுமாறு தன் எண்ணங்கள் சிலவற்றைத் திணறித் திணறியே வெளிப்படுத்தினான்;

...புலவர் அவர்களே! சாவின் சிறகுகள் விரைவில் என்னைத் தழுவிக் கொள்ளும் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. மரண மண்டலத்தின் பயங்கரமான ஓலம் ஒன்று, என் காதிலே இரைச்சலை எழுப்புவதையும் என்னால் தெளிவாகக் கேட்கமுடிகிறது. கொந்தளிப்பிலே கடல் குமுறுவதைப்போல் - புயல் வீச்சிலே மரங்கள் பொருமு வதைப்போல் - என் இதயக்குலை அதிர்ந்து நடுங்குவதை உங்களுக்கு எப்படித்தான் எடுத்துரைத்திடுவேன்?... ஆனால் இந்த மண்ணுக்கு என் உடலும், காற்றுக்கு என் உயிர் மூச்சும் உரிமை யாக்கிடுமுன் 'நான்' என்னும் புலனறிவுக்கெல்லாம் புலப்பட்டிடாத ஓர் உள்ளுணர்வோடு இயங்கி வந்திட்ட நான், என்னைப் பற்றிய சில உண்மைகளை - மறை பொருளான செய்திகளை - வெளிப்படுத்திட விழைகிறேன். அதற்குள் சோழப் பேரரசர் கரிகாலரையும். ரோமாபுரி யிலுள்ள செழியனையும் நான் பார்த்திட வேண்டும். அவர்களை உடனே வரவழைத்திட ஏற்பாடு கள் செய்யச் சொல்லுங்கள்."

தான் இறக்கப்போவதைப் பற்றிப் பாண்டியவேந்தன் கூறிய சொற்களால் காரிக்கண்ணனாரின் உள்ளம் நெகிழ்ந்து விட்டது; கண்களும் குளமாகிவிட்டன. முத்துநகையோ தன் கொடியுடலே குலுங்கிடும் வண்ணம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள்.

வழிந்திட்ட விழிநீரைத் தம் கொன்றைக்காய் போன்ற விரல் நுனியால் வழித்தெறிந்திட்ட புலவர். "...சோழப் பேரரசரை விரைவில் அழைத்து வந்திடலாம்; ஆனால் எங்கோ நெடுந்தூரத்திற்கு அப்பால் உள்ள செழியனை எவ்வாறு கடிதில் கொணர்ந்திட முடியும் என்பதுதான் கவலையினை அளிக்கின்றது" என்று தயக்கத்துடன் மொழிந்திட்டார்.

"ஏன், அவன் வருகிறவரை இந்த உடம்பிலே என் உயிர் தங்குமோ என்னவோ என்று அஞ்சுகிறீர்களா? ஆனால் புலவர்அவர்களே! நான் இப்போது கூறுவதை நன்றாக உங்கள் மனத்திலே பதிய வைத்துக் கொள்ளுங்கள். செழியனின் முகத்தினைக் கடைசியாக ஒரு முறையேனும் கண்டிடாமல் என் கண்கள் கண்டிப்பாய் மூடிட மாட்டா. இப்போது உடனே செழியனின் வருகைக்கு ஆவன செய்யுங்கள்."

"அவனை அழைத்து வருவதற்கு யாரை அனுப்பி வைக்கலாம் என்பதனையும் மன்னர் அவர்கள் தெரிவித்திட்டால் நல்லது."

"ஆமாம். இங்கிருந்து சென்றிடக் கூடிய ஆள். நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்திடல் வேண்டும். ஏனெனில், இங்கு நிலவிடும் சில நெருக்கடியான அரசியல் நிலைமைகளைப் பற்றியெல்லாம் அந்தரங்கமான செய்திகளை அந்த ஆளிடம் நான் சொல்லி அனுப்பவேண்டியுள்ளது. அச்செய்திகளை முன்கூட்டியே அறிந்திட்டால்தான் சிந்தனைக் குழப்பமின்றித் தெளிந்த நெஞ்சத்தோடு இங்கு வந்தவுடனேயே சிக்கல்கள் பலவற்றிற்குத் தீர்வு கண்டிட இயலும் செழியனால்! அதோடு அவனை அழைத்து வந்திட ரோமாபுரிக்கு செல்கின்றவர் நம்முடைய நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்திட்டால் மட்டும் போதாது; செழியனின் நல்லெண்ணத்தைப் பெற்றவராகவும் விளங்கிடல் வேண்டும். அப்போதுதான் அந்த ஆள் கூறிடக்கூறிய அந்தரங்கச் செய்திகளை அவனால் நம்பிட முடியும். அலட்சியப்படுத் திடாமல் உடனே கிளம்பிடவும் தோன்றும். ஏன் புலவர் அவர்களே, இப்படி நாம் செய்திட்டால் என்ன?"

"எப்படி மன்னவா?"

"தங்களுக்குத்தான் யவனக் கிழவர்கள் பலரிடமும் நெருக்கமான பழக்கம் உண்டே! அவர்களுள் நற்பண்பு வாய்ந்திட்ட ஒருவரோடு நம் முத்துநகையையே அனுப்பி வைத்திட்டால் என்ன?"

"அதுவும் சிறந்த ஏற்பாடாகவே அமைந்திடும்; ஆனால்.. என்றவாறே தன் மகளின் நிலை எங்ஙனம் இருந்திடுமோ என்று அறிந்திட விழைந்தவர்போல் அவளுடைய முகத்தினை நோக்கினார் புலவர்.

அவளோ...?

"ஆனால்... என்று ஏன் இழுக்கிறீர்கள் அப்பா? நம்முடைய பாண்டிய வேந்தரின் விருப்பங்களை நிறைவேற்றுவதை விட வேறு என்னதான் எனக்கு இன்பம் அளித்திடக் கூடியதாக இருந்திடப் போகிறது? செழியன் அண்ணாவையும் நான் நன்கு அறிந்திடுவேன்; அவருக்கும் என்னைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். எனவே, அவரை அழைத்து வந்திட எனக்கு அட்டியேதும் இல்லை; இவ்வளவு நெடுந்தூரம் பயணம் செய்திட வேண்டுமே என்கிற அச்சமும் எனக்கு இல்லை."

முத்துநகை இவ்வாறு மொழிந்திடக் கேட்டதும் பெருவழுதிப் பாண்டியனின், துயர நிழல்படர்ந்து கூம்பிக் கிடந்திட்ட முகம் கூடச் சற்றே விரிந்து மலர்ந்திட்டது. பூரிப்பினால்!

...உன்னைப் பற்றி - உன் ஆற்றலைப் பற்றி - உன் அஞ்சாமையைப் பற்றி நான் அறிந்திட மாட்டேனா, முத்துநகை? செழியனின் உயிரினைக் காப்பாற்றிடத்தானே கரிகாலனின் இசைவோடு நீ ஆணுடை அணிந்து காடுமேடெல்லாம் சுற்றிப் படாதபாடுகளையெல்லாம் பட்டுத் தவித்திட்டாய்! உன்னுடைய நாணயத்திற்கும் நேரிய நெஞ்சினுக்கும் இந்த நானிலமேதான் ஈடாகுமா? தந்தை என்கிற சொந்த உறவு முறைகளைக் கூடத் தூரத்தள்ளி வைத்துவிட்டு, ஆட்சிக்கு அணுவளவும் ஊறு வந்திடக் கூடாது என்று அரும்பணியாற்றிய உன் ஆர்வத்திற்கு எதனைத்தான் இணையாக இயம்பிட முடியும்? எனவே நீ என் பொருட்டு ரோமாபுரிக் குச் சென்றிட முன் வந்தது குறித்து எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி! என்னை மடக்கிப் போட்டு விட்ட முடக்குவாத நோயே பாதி தீர்ந்து விட்டது போல் நான் இப்போது எத்துணைக் களிப்பினைத் துய்த்திடுகிறேன் தெரியுமா?"

பல நாட்களாக நான்கு வார்த்தைகளைச் சேர்ந்தாற் போல் உதிர்த் திடவே திணறலைக் காட்டிய பாண்டிய வேந்தர், இன்று நெடுநேரம் தெளிவாக உணர்ச்சிப் பெருக்கோடு பேசியது. புலவருக்கும் முத்துநகைக்கும் உவப்பினை மட்டுமின்றி வியப்பினையும் அளித்திட்டது. மறுநாளே முத்துநகை யவனக் கிழவர் ஒருவர் துணையோடு ரோமாபுரி நோக்கி மரக்கலத்தில் கிளம்பிவிட்டாள்.

இருங்கோவேளினால் கொப்பளித்துக் கொண்டிருந்த உள்நாட்டுப் பூசல்கள் - உட்பகைகள் - அவனுடைய மறைவோடு மறைந்துவிட்ட போதிலும், பூம்புகாரில் மட்டுமின்றிச் சோழ மண்டலத்தின் பிற பகுதிகளிலும், பல முன்னேற்றத் திட்டங்களை செயற்படுத்திட முனைந்து ஈடுபட்டு இருந்தமையால் கரிகாற்சோழனுக்கு ஓய்வு என்பதே எள்ளளவு கூட இல்லாமல் அருகிப்போய்விட்டது. என்றாலும் கூடப் பாண்டிய வேந்தன் மீண்டும் படுக்கையோடு படுக்கையாக விழுந்திட்டான் என்றும், தன்னுடைய இறுதிக்கால ஆசைகளை ஏற்பாடுகளைத் தெரி வித்திடக் கரிகாலனைக் காண விழைகின்றான் என்றும் புலவர் காரிக் கண்ணனாரிடமிருந்து மறவன் ஒருவன் மூலம் மடல் வந்திடவும், தன்னுடைய அலுவல்கள் அத்தனையையும் ஒத்திவைத்துவிட்டான் சோழப் பேரரசன்; மதுரை மாநகரினை நோக்கி உடனே புறப்பட்டும் விட்டான்.

முத்தமிழ் வளர்த்திடும் வித்தாரத் தொட்டிலாம் பாண்டிய நாட்டுத் தலைநகரமே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது.

தலைநகரத்தின் வாயில் முகப்பினை வந்தடைந்திட்ட பெருந்தேரினை விட்டுக் கீழே இறங்கியதுமே, கரிகாலனின் கழுத்தினிலே பட்டத்து யானை ஆள் உயர மாலை ஒன்றினைச் சூட்டியது.

முரசங்கள் முழங்கின.

பறைகள் அதிர்ந்தன.

யாழும், குழலுமோ போட்டியிட்டுக் கொண்டு இசையருவியை பொழிய விட்டன!

இத்தகைய கோலாகலமான வரவேற்பு, அதுவும் அந்த நேரத்தில் — தனக்கு வழங்கப் பெறும் என்று கரிகாலன் எதிர்பார்த்திடவே இல்லை.

தளபதி நெடுமாறன், கரங்கூப்பித் தொழுது அரசனை வரவேற்றவாறே, “தாங்கள் இந்த யானையின் மீதே ஏறிக் கொள்ளலாம்” என்று பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

“முதலில் பாண்டியப் பேரரசரின் உடல் நலம் எவ்வாறுள்ளது என்பதைப் பற்றிக் கூறுங்கள்” என்று ஆர்வத் துடிப்புடன் வினவினான் சோழ மாமன்னன்.

“அப்படி நம்பிக்கை போய் விடக் கூடிய நிலை இல்லை; வெறும் வாத நோய்தானே! அத்துணை விரைவில் ஒன்றும் ஆகி விடாது!” — அலட்சியச் சிரிப்புடன் நெடுமாறன் இவ்வாறு உரைத்ததைக் கேட்டுக் கரிகாலன் ஒரு கணம் திகைத்துப் போனான். ‘எவ்வளவு கபடு நிறைந்தவன் இவன்! மன்னரின் உயிரை மதிக்காமல் எத்துணை எளிதாகப் பேசுகிறான்!’ என்று உள்ளூர எண்ணிக் கொண்ட கரிகாலன், ஒரு குறுஞ் சிரிப்பினை முகத்தினில் தவழ விட்டவாறே, தன் திருவடிகளை எடுத்து வைத்து நகரினுள் நுழைந்திடலானான்.

“தாங்கள் யானை மீதே வலம் வருவதற்குத்தான் இந்த ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்துள்ளேன். அப்பொழுதுதான் எங்கள் தலைநகரத்து மக்களும் தங்களைக் கண்டு களிப்பார்கள்” என்று மீண்டும் மொழிந்திட்டான் நெடுமாறன்.

அவனுடைய ஆசை என்ன தெரியுமா?

‘யானையின் முதுகிலுள்ள அழகிய - சிறிய கொலு மண்டபம் போன்ற இருக்கையிலே கரிகாலன் அமர்ந்து கொள்வார்; அவருக்கு அருகிலேயே தானும் அமர்ந்திடலாம். சோழப் பேரரசனைக் கண்டு களித்திடும் மக்கள், தன்னையும் நன்கு நோக்குவார்கள். பெருவழுதிப் பாண்டியன் மறைவுக்குப் பின்னர், தான் ஊர்வலம் வருவதற்கு இந்த ஊர்வலமே ஒரு வெள்ளோட்டம் ஆகத்தான் அமையட்டுமே!’

என்றெல்லாம் கற்பனைக் கடலிலே மிதந்து கொண்டிருந்தான் நெடுமாறன்.

ஆனால் கரிகாலனோ...?

"உங்கள் மன்னன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும்போது எனக்கு மட்டும் யானைமீது ஊர்வலமா? நன்றாக இருக்கிறது, தளபதி யாரே! நன்றாக இருக்கிறது உங்கள் ஏற்பாடு! முதலில் இந்த முரசங்கள் முழங்குவதையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்கள். இத்தகைய போலித் தனமான வரவேற்புகள் எல்லாம் எனக்கு அறவே பிடிக்கமாட்டா" என்று கூறிய அவன், தொடர்ந்து நடந்தே சென்றிட்டான்.

சற்றைக்கெல்லாம் புலவர் காரிக்கண்ணனார் கரிகாலனை எதிர்கொண்டழைக்க வந்து சேர்ந்தார்.

காவலரும் பாவலரும் உரையாடியவாறே மதுரை வீதியூடே நடந்து சென்றனர்.

அரண்மனைக்குள் வந்து, படுக்கையில் கிடந்திடும் பெருவழுதிப் பாண்டியனைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனான் கரிகாலன்.

வற்றிய பீர்க்கங்காய் போலப் பாண்டிய வேந்தனின் உடல், ஒட்டிச் சுருங்கி உலர்ந்திருக்கக் கூடுமென்று அவன் நினைத்திடவே இல்லை; அவனுடைய விழிகள் நீரிலே மிதந்தன.

சிறிது நேரம் சென்றது.

அந்தத் தனியறையில் கரிகாலனையும், காரிக்கண்ணனாரையும் தவிரத் தனக்குச் சிகிச்சை அளித்திட்ட அரண்மனை மருத்துவர் உட்படத் தன்னைக்காண வந்திருந்த அத்தனை பேரையும் ஏன், தளபதி நெடுமாறனையே கூட - வெளியேறி விடுமாறு தன் கையினாலேயே சைகை செய்திட்டான் பெருவழுதிப் பாண்டியன்.

அவர்கள் யாவரும் அகன்றிட்ட பின்னர், தன் தலைப்புறத்தே சுவர் ஓரமாகக் கிடந்திட்ட ஒரு சிறிய பேழையினை எடுத்து வருமாறு கூறினார், காரிக்கண்ணனாரிடம்.

புலவர் அதனைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தார். பெருவழுதி தந்த திறவுகோலினால் அதனைத் திறந்தார்.

உள்ளே, ஒரு பகுதியில் பல்வேறு வயிரக் கற்கள், அணிமணிகள், பதக்கங்கள் மின்னின; மறு பகுதியில் ஓலை நறுக்குகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பாண்டிய வேந்தனின் வேண்டுகோளின்படி அந்தச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினான் கரிகாலன்.

அந்தச் சுவடிப் புதையலில் அவனது விழிகள் தோயத் தோய, அவனது பரந்த முகத்திலோ வியப்பு - வேதனை - தவிப்பு - கவலை - எல்லாமே இருளும் ஒளியும்போல மாறி மாறிப் படர்ந்தன !