உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/46. தூதுவர்க்குச் செய்தி

விக்கிமூலம் இலிருந்து

46

தூதுவர்க்குச் செய்தி

வனக்கிழவருடன் ரோமாபுரி மண்ணை மிதித்திட்ட முத்துநகை, ஏதோ ஒரு புதிய உலகுக்கு வந்துவிட்ட உணர்வுகளால் தழுவப்பட்டு இன்பக் கிளுகிளுப்பிலே மிதந்திட்டாள்.

கடலின் கரம்போல் நீண்டு பாய்ந்தோடும் டைபர் நதி - தேர்ச் சப்பரம்போல் வடிவம் அமைந்திட்ட ஊசியிலை மரங்கள் - அஞ்சறைப் பெட்டிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல் ஓங்கி உயர்ந்திட்ட கட்டடங்கள் - அவற்றுள்ளும் சேல்கெண்டை மீனின் செதில் போலப் பளபளத்திடும் சலவைக்கல் கட்டடங்கள் எல்லாமே அவளது உள்ளக் கிண்ணியிலே வழிய வழியப் பொழிந்திட்டன உவகைத் தேனை!

செழியனைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருந்த அவளை வழியிலே காண நேர்ந்திட்ட சில ரோமானியர்கள். ஒருகணம் திகைத்துப் போய்த் தேங்கி நின்றனர்; வியப்பு மின்னிடும் தங்கள் விழிகளால் அவள் உருவத்தினையே ஏற இறங்க அளந்தனர்; பின்னரே மேலே நடந்தனர். ஏன் அப்படி?

முத்துநகையைப்போல் புதுமையான முறையிலே புடவை உடுத்தியவளை - கச்சை அணிந்தவளை - கடயம் பூண்டவளை அவர்கள் இதுவரை தங்கள் நாட்டிலே கண்டதில்லை. அதனால்தான் அவர்களுக்கு அத்துணை வியப்பு - திகைப்பு!

சிலர், யவனக்கிழவரை அணுகி அவள் யார்? எந்த நாட்டிலிருந்து வருகிறாள் என்றெல்லாம் வினவிடவும் தவறவில்லை. அவள் தமிழகத்துத் தளிர்க்கொடிதான் - செழியனுக்கும் உறவினர்தான் என்று அறிந் திட்டவுடனே, அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடும் மரியாதை யோடும் அவளுக்கு வணக்கம் புரிந்து வரவேற்புக் கூறினர்.

முத்துநகையையும் யவனக்கிழவரையும் சுமந்திட்ட சிறிய தேர், நகர்மன்றமாகிய ஃபோராத்தின் வழியாகச் சென்றிட்ட பொழுது, அங்கே அகஸ்டஸினால் புதிதாக எழுப்பப்பெற்ற கருத்தரங்க மேடையை ஒட்டி, ஏழெட்டுப் பேர் கும்பலாகக் குழுமி இருந்தனர். உரத்த குரலில் அவர்கள் எதைப்பற்றியோ உரையாடிய வண்ணமும் இருந்தனர். சூடு பறந்திடும் அவர்களுடைய பேச்சினூடே இரண்டு சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப் பட்டன; ஒன்று அகஸ்டஸ், மற்றது செழியன்.

முத்துநகை ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாகப் பெருமூச்செறிந்திட்டாள்.

உரையாடிக் கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை; தூரம் போனதும் தெரியவில்லை. அவர்களைச் சுமந்து வந்திட்ட சிறு தேர் விரைவிலேயே செழியன் இல்லத்தினை நெருங்கிவிட்டாற்போன்ற உணர்வே இருவருக்கும் உண்டாயிற்று.

தேரினைவிட்டுக் கீழே இறங்கிய முத்துநகை, தமிழகத் தூதுவன் தங்கியுள்ள மாபெரும் மாளிகையினைக் கண்டதும் மலைத்தே போய்விட்டாள்.

செழியன் அண்ணாவை ஓர் இளவரசரை போலத்தான் அகஸ்டஸ் நடத்தி வருகிறார் என்று தெரிகிறது; இல்லையென்றால் இவ்வளவு அழகிய பெரிய மாளிகையை அளித்திருப்பாரா?' என்று எண்ணிக் கொண்டு அவள், யவனக்கிழவர் பின்தொடர, மேல் உப்பரிகைக்கு விரைந்திட்டாள்.

அங்கே, மிகப் பரந்தவெளிக்கூடத்தில் அவள் நுழைந்திட்டபொழுது படுக்கையறைப் பக்கமிருந்து வந்த குரலொலிகள் அவளைத் திகைக்க வைத்திட்டன.

"தாமரையைத்தான் இளம்பெருவழுதி என்கின்ற இளவரசரும் காதலிப்பதாகக் கூறுகிறீர்களே! அப்படியிருக்க அவளையே இன்னும் ஏன் நீங்கள் நினைத்துக் கொண்டு அழவேண்டும்? உங்களை நீங்கள் ஏன் பாழடித்துக் கொள்ள வேண்டும்?"

"அதுதான் எனக்கும் புரிந்திடவில்லை. ஓலைச்சுவடியில் வரையப்பட்ட எழுத்தினைப்போல அவள் என் இதயமடலிலே ஆழமாக, அழுத்தமாகப் பதிந்துவிட்டாள். அவளை எப்படி அவ்வளவு எளிதாக என் நெஞ்சினைவிட்டுப் பிய்த்து எறிந்திட முடியும்? தாமரையையாவது நான் மறப்பதாவது?"

"உங்களை வஞ்சித்துவிட்டு இன்னொருவனுக்குத் தன் கழுத்தை நீட்டத் துணிந்துவிட்ட அந்தக் கேடு கெட்டவளை நீங்கள் நினைத்துக் கொண்டே இருப்பதில் என்ன பொருள் இருக்கிறது? என்ன பயன் இருக்கிறது?"

"ஆனால் தாமரை என்னை வஞ்சித்தாள் என்று சொல்ல முடியாதே! அவளிடந்தான் நான் என் காதலைப் பற்றி மனத்திறந்து பேசிட வில்லையே!"

"அப்படியானால் அது ஒருதலைக்காதல்; அந்த அப்பாவித்தனமான ஒருதலைக் காதலுக்காகவா வறண்ட பாலைவனமாக வாழ்வையே அழித்துக் கொள்வது! இது எல்லாவற்றையும்விடப் பெரிய முட்டாள் தனம்! இருங்கள், நான் இப்போதே போய் அகஸ்டஸ் பெருமகனாரிடம் சொல்லி உங்கள் பைத்தியக்காரத்தனம் எல்லாம் பறந்தோடுவதற்கு வழிசெய்து விடுகிறேன்?"

"அய்யய்யோ இதைப்பற்றியெல்லாம் அவரிடம் போய் ஏதும் சொல்லித் தொலைக்காதே! என்ன கிளம்பி விட்டாய் ? சொல்வதைக் கேள்!" என்று உரக்கக் கத்தியவாறே ஜூனோவை பின்தொடர்ந்து வெளிக்கூடத்திற்கு விரைந்து வந்திட்டான் செழியன்.

அங்கோ... முறுவல் பூத்து நின்றிருக்கும் முத்துநகையைக் கண்டதுமே அவன் செயலற்றுத் திகைத்திட்டான்; திகைப்பு வெள்ளத்தில் ஆழ்ந்து விட்டான்.

அவனைவிட ஜூனோதான் மிகவும் திடுக்கிட்டு விட்டாள்.

தனக்குப் போட்டியாகத் தமிழகத்திலிருந்து இன்னொருத்தி வந்து முளைக்கிறாளே என்கிற அச்சமோ? இல்லையென்றால் சாயம் கலந்திட்ட சல்லாத் துணிபோல் அவள் முகம் அப்படி வெளுத்துப் போவானேன்?

"என்ன முத்துநகை இது? இப்படித் திடீரென்று...? நீ வரப் போவதைப்பற்றி முன் கூட்டியே எனக்குத் தகவல் தெரிவித்திருக்கலாமே!"

"தெரிவிக்கலாம்தான். ஆனால் அதற்கெல்லாம் நேரம் ஏது? பெருவழுதிப்பாண்டியர் மீண்டும் படுக்கையில் விழுந்துவிட்டார்..."

"என்ன! பாண்டிய மன்னர் மீண்டும் படுக்கையில் விழுந்து விட்டாரா?" - பதறிப்போய் கேட்டான் செழியன்.

"ஆமாம்; இனிமேல் அவரால் நடக்கக்கூட முடியாது. ஏனென்றால் முடக்குவாத நோயும் சேர்ந்துகொண்டுவிட்டது. இனி அவர் பிழைத் தெழுவதே அரிதுதான்!" முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும் செழியன் கன்னப் பரப்பிலே கண்ணீர்வெள்ளம் வழிந்தோடியது.

அந்தத் துயரச் சூழ்நிலையில் சில விநாடிகள் வார்த்தைகள் வெளிவந்திடவில்லை எவருக்குமே.

சிறிது நேரம் சென்றது.

"நான் புறப்படட்டுமா?" என்று மெல்லக் கேட்டாள் ஜூனோ.

"ஊம்..." என்று செழியன் சட்டென்று ஏதோ நினைவு வந்து விட்ட வனைப்போல், "ஆமாம்; முத்துநகையும் உன்னோடு வந்து தங்கட்டுமே! உங்கள் ஆட்சித் தலைவரின் இல்லத்தையும் அவள் பார்த்த மாதிரி இருக்கும்" என்றான்.

"அதுவும் நல்ல யோசனைதான்; நாளைக்கே நானும் உங்களுடன் தபழகத்திற்குத் திரும்பிட வேண்டுமே? அதற்குள் இந்த அழகான ரோமாபுரியை நான் எங்கே சுற்றிப் பார்த்திட முடியும்? ஆகவே, அந்த ஆட்சித் தலைவரின் இல்லம் ஒன்றையாவது பார்க்க முடிந்ததே என்கிற நிறையாவது எனக்கு கிடைத்திடட்டும்" என்றாள் முத்துநகை.

"நீங்கள் நாளைக்கே கிளம்பிடத்தான் வேண்டுமா?" கேட்கும் பொழுதே ஜூனோவின் குரல் தழுதழுத்து விட்டது!

'வேறு வழி...?' என்பதைத் தவிர வேறு என்ன விடையைத்தான் அளித்திட முடியும் செழியனால்?

இரவு முழுவதும் உறக்கமே வந்திடவில்லை செழியனுக்கு; மண்ணிலே புரட்டி எடுக்கப்படும் மட்டக்குதிரையினைப் போலப் பற்பல வகையான நினைவுக் கயிறுகளின் இழுப்புக்கு ஏற்ப அவன் படுக்கையிலேயே புரண்டு புரண்டு நெளிந்திட்டான்.

தன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட பெருவழுதிப் பாண்டியனின் பெருந்தன்மை - பாசமழை -

தான் ரோமாபுரிக்குத் தூதுவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் செரித்துக் கொள்ள முடிந்திடாமல் தளபதி நெடுமாறன் கக்கிய புகைச்சல்கள் - பொறாமைக் கொழுந்துகள்

சுழலும் விழியாலும் சுவை கொட்டும் மொழியாலும் தன்னைச் சொக்க வைத்திட்ட தாமரையை, இளம்பெருவழுதியும் காதலிக்கிறான் என்பது தெரிந்தும்கூட அவளைத் தன் மனத்திரையினின்றும் பிய்த் தெறிய இயலாமல் அவளிடம் தான் கொண்டிருக்கும் ஈடுபாடு இதயத்தாகம் -

அதே தமிழகத் தளிர்க்கொடியின் முகவெட்டும் உடற்கட்டும் பூண்டு, இந்த ரோமாபுரி மண்ணிலே தன்னையே வளைய வளையச் சுற்றி வந்து, தனக்காக உயிரினை விடவும் தயங்கிடாத கட்டழகி ஜூனோவின் விழிவீச்சு - மதுப்பேச்சு.

'ஜூலியஸ் சீசருக்கு பின்னால் ரோமானியப் பேரரசு என்ன ஆகுமோ?' என்று - வேண்டியவர்களின் அச்சமும், வேண்டாதவர்களின் ஆசையும் நிறைவேறிடா வண்ணம், அவரைப் போலவே தன்னாலும் பெயர் எடுத்திட முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிடும் அகஸ்டஸ் பெருமகனாரின் செயல் வேகம் - சீரிய திட்டங்கள் -

அவர் தன்னை மிக மேலாக மதித்து நடத்துவதோடு நில்லாமல் தன்னுடைய உடன்பிறப்பாகவே ஏற்றுக் கொண்டாற் போல் காட்டிடும் அரவணைப்பு - அன்பு வெள்ளம் -

எல்லாமே செழியனின் இமைக் கூட்டினுள்ளே அரங்கேறி அவனை அயர்ந்து உறங்கவிடாமல் ஆட்டிப் படைத்திட்டன.

பொழுது புலர்ந்திடு முன்னரே அவன் படுக்கையை விட்டு எழுந்துவிட்டான். தன்னுடைய ஆடைகள், போர்க் கருவிகள், ரோமாபுரி வந்த பின்னர் தான் வாங்கிய விந்தையான பொருள்கள் எல்லாவற்றையும் பெரிய - சிறிய பேழைகளில் அடுக்கித் தமிழக பயணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அத்துணை விரைவாக அவன் படுக்கைக்கு விடை கொடுத்திட்டான்.