ரோமாபுரிப் பாண்டியன்/47. செழியன் பெற்ற பரிசு
47
செழியன் பெற்ற பரிசு
நேரமோ ஓடிக் கொண்டிருந்தது.
காலைக் கதிரவனின் பொற்கதிர்களில் சாதாரணமாகத் தவழ்ந்திடும் தாங்கிக் கொள்ளத்தக்க குடமிளகாய்க் காரம் கூட மாறி, கொதி உலையின் அனல் வீச்சும் ஏறத்தொடங்கிவிட்டது.
அப்படியும் ஜூனோ வந்தபாடில்லை. முத்துநகையையாவது அனுப்பி வைத்தாளா என்றால், அதுவும் இல்லை. செழியனுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த தேர், முந்தின நாள் பழுதடைந்துவிட்டது. அதற்கு மாற்றாக இன்னொரு தேரினை அனுப்புவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதுவும் வந்து சேர்ந்திடவில்லை. இவ்வாறு தேர் இல்லாமற் போனதே அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்திட்டது.
'இந்த ஜூனோ என்ன இப்படிச் செய்துவிட்டாள்? நான் உடனே அகஸ்டஸ் அவர்களிடம் விடைபெற்றிட வேண்டாமா? அப்பொழுது தானே மரக்கலத்தினுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இன்றே தமிழகத் திற்குக் கிளம்பிட இயலும்?' என்று தவியாய்த் தவித்திட்ட செழியன் நொடிக்கு நொடி பொறுமையினை இழந்திட்டவனாய் உப்பரிகையின் தாழ்வாரப் பகுதியிலே அங்கும் இங்குமாய் உலவிய வண்ணம் இருந்தான்.
ஒரு 'பைன்' மரத்தின் உயரத்திற்குப் பகலவன் வான மண்டலத்தில் மேலேறிய பின்னரே முத்துநகை மட்டும் தனியே வந்து சேர்ந்தாள்!
"ஏன், ஜூனோ இங்கே வரவில்லையா?" என்று பரபரப்புடன் வினவினான் செழியன்.
"அவள் எங்கே இப்போது வரப்போகிறாள் ? எதையோ நினைத்துக் கொண்டு சின்னக் குழந்தை மாதிரித் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருக்கிறாள்" என்றாள் முத்துநகை.
"என்ன காரணமாம்?"
"தன் நெஞ்சிலே நிறைந்தவர்களைப் பிரிவதென்றால் யாருக்கும் அழுகை வராமல் சிரிப்பா வரும்?" - நகைப்புடன் கேலியாகக் கேட்டாள் முத்துநகை.
"அவளுடைய நெஞ்சில் நிறைந்தவர்கள் யாரும் அண்மையில் இறந்து போனதாக எனக்குத் தெரியவில்லை!"
"ஏன் இப்படியெல்லாம் அமங்கலமாகப் பேசுகிறீர்கள்? ஓர் அப்பாவிப் பெண்ணின் மனத்தைக் கெடுத்துவிட்டு இப்படிப பாரா முகமாய் நடிப்பது உங்களுக்கே அழகாக இருக்கிறதா?"
"நீ என்ன சொல்கிறாய் முத்துநகை?"
"உண்மையைத்தான் உடைத்துச் சொல்கிறேன். அண்ணா! அவள் உங்கள் மீது பைத்தியமாகவே இருக்கிறாள். என்னைப் பொறுத்தவரையில் வெளித்தோற்றத்திலேதான் அவள் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வீராங்கனையாக விளங்குகிறாளே யன்றி உள்ளூர அவள் ஓர் உணர்ச்சிப் பிழம்பே. நீங்கள் மட்டும் அவளுக்கு ஏதாவது ஒரு வழி செய்யாமல் தமிழகத்திற்குப் புறப்பட்டீர்களோ, அவள் இந்த டைபர் நதியிலேயே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாலும் நான் வியப்படைந்திட மாட்டேன். அந்தப் பழி உங்களைப் பிறகு வாளா விடாது. நீங்கள்தான் அவளை மணம்புரிந்து கொண்டு நம் தமிழகத்திற்கே கூட்டி வந்துவிட்டால் என்ன?"
அது எப்படி அவளை நான் மணந்திட முடியும்? காதலிப்பது ஒருத்தியை, மணம் முடிப்பதோ வேறொருத்தியை என்றால், அது காதலையே சூதாட்டக் காயாக்கிடும் வஞ்சகச் செயல் இல்லையா?"
"நீங்கள் என்ன புதிர் போடுகிறீர்கள்? உண்மையிலேயே நீங்கள் ஜூனோவைக் காதலித்திடவில்லையா?"
"இல்லை. அறவே இல்லை; அவள் வேண்டுமானால் என்னைக் காதலித்திருக்கலாம்; அதற்கு நானா பொறுப்பாளி? நான் காதலித்த தெல்லாம் ஒரே ஒருத்தியைத்தான் - தாமரையைத்தான்!"
"நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது! தாமரையை நம் இளவரசர் இளம்பெருவழுதி அல்லவா காதலிக்கிறார்? அவர்தானே இன்றைக்கும் அவளைத்தேடி அல்லும் பகலும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்?"
"ஏன், இன்னும் அவளைக் கண்டுபிடித்திட முடியவில்லையா?"
"அது அவ்வளவு கிள்ளுக்கீரையா என்ன? அந்த இருங்கோவேளின் ஆட்கள் அவளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்களோ! இல்லை. கொன்றுவிட்டார்களோ - கொளுத்தி விட்டார்களோ? யார் கண்டது? அது சரி. நீங்கள் தாமரையைக் காதலிக்கின்ற அழகு இவ்வளவு தானா?"
ஏளனமாக வினவினாள் முத்துநகை.
"என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? என் காதல் உண்மையானதுதான் என்று உன்னால் நம்ப முடியவில்லையா?"
"நம்பும்படியாக நீங்கள் நடந்துகொள்ளவில்லையே! காணாமற் போன தாமரையைக் கண்டுபிடித்திட நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டீர்கள்? தூதுவர் பதவி கிட்டியது!. ரோமாபுரிக்கு ஓடிவந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்கள்..."
"நான் ஒன்றும் இந்தப் பதவிக்காக ஏங்கிப் போய்ப் பேராசை பிடித்து இங்கே ஓடிவந்து விடவில்லை. மக்களில் பெரும்பாலோர் இந்தப் பொறுப்பிற்கு நான் பொருத்தமானவன் என்று நம்பினார்கள்; விரும்பினார்கள்; மன்னரும் கட்டளையிட்டார்; அவருடைய கட்டளையை நான் எப்படி மீறிட முடியும்? காதல் பெரிதா, கடமை பெரிதா என்று சிந்திக்கும்பொழுது கடமையே பெரிதென்று எனக்குப் பட்டது. உன் தந்தையாகிய புலவர் அவர்களும் அவ்வாறே வற்புறுத்தினார்கள். அதனால்தான், இந்தப் பதவியினை ஏற்றுக் கொண்டேனே தவிர வேறில்லை!"
"நான் சொல்ல முற்பட்டதும் அதனைத்தான். உங்களை பொறுத்தவரை காதலைவிடக் கடமைதான் பெரிது; அந்த உங்கள் கண்ணோட்டத்தினை நான் குறைத்து மதிப்பிடவே இல்லை. அதேசமயம் நம் இளவரசரைப் பார்த்தீர்களா? கொற்கைப்பட்டினத்தின் நிர்வாகத்தைப் பற்றிய கவலையைவிடத் தாமரையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள கவலையே அவருக்கு மிகுதியாகி விட்டது. அவரைப் போலக் காதலுக்காகக் கடமையை மறக்கவோ - துறக்கவோ - முடியாத நீங்கள், பிறகு அந்தக் காதலியை மட்டும் மறக்காமல் மனம் புழுங்குவானேன்? மகிழ்ச்சியினைத் துறப்பானேன்? இன்னோர் உண்மையையும் உரைத் திட்டால் உங்களுக்குச் சினம் வந்திடாதே?"
"என்ன உண்மை அது?"
"உங்களை ரோமாபுரியில் கொண்டு வந்து நிறுத்தியதில் உங்களுடைய கடமையுணர்வுக்கு முக்கால் பங்கு பெருமை உண்டென்றால், இளவரசரே காதலிக்கிறார் என்கிறபோது இனிமேல் தாமரை எங்கே நமக்குக் கிட்டிடப்போகிறாள்?' என்கிற உங்கள் 'விரக்தி'க்கு - வெறுப்புணர்வுக்கு - கால் பங்கேனும் இடம் உண்டல்லவா?"
"நீ சொல்கிறபடியே தான் வைத்துக் கொள்ளேன்!"
"அப்படி நீங்களே அடைய முடியாது என்று ஒதுக்கி விட்டு விட்டவளை இன்னும் ஏன் நினைத்து நினைத்து உருகிட வேண்டும்.?"
"நீ கூறுவதைப் பார்த்தால் ஜூனோவையே மணந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாய் போல் தெரிகிறதே!"
"கண்டிப்பாக! எனக்கென்னவோ ஜூனோ உங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவள் என்றே தோன்றுகிறது. அத்தோடு, நாம் தேடிச் செல்கின்ற பொருளைவிட நம்மைத் தேடி வருகின்ற பொருளே நமக்கு ஏற்றது - இனிப்பானது அப்புறம் இன்னொன்றை உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேனே!"
"என்ன அது?"
"இன்று நாம் தமிழகத்திற்குப் புறப்பட முடியாது! நாளை மறுநாள் தான் கிளம்பலாம்."
"ஏன் அப்படி? இந்த ஒத்திவைப்பும் ஜூனோவின் தந்திரம்தானா?"
"இல்லை, இல்லை; அகஸ்டஸ் பெருமகனாரே என்னிடம் நேரில் சொன்னார். நாளைக்கு உங்களுக்கு ஒரு பெரிய பிரிவு விழா விருந்தினை நடத்தியே தீரவேண்டுமாம்!"
"ஆமாம்; நீ எப்போது அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்தாய்?"
"சற்று முன்னர்தான் அவரைச் சந்தித்தேன்; ஜூனோதான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள்; நான் எதிர்பாராத அளவுக்கு என்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்திட்டாள்"
"ஓகோ! அந்தப் புகழ்ச்சியில் மயங்கித்தான் அவளுக்காகப் பரிந்து பேசிடவும் முனைந்தாயாக்கும்!" - கேலியாக நகைத்திட்டான் செழியன்.
"நான் ஒன்றும் புகழ்ச்சிக்கு மயங்கிவிடுபவள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணா?... அப்புறம் இன்னொன்றையும் அகஸ்டஸ் வற்புறுத்தினார் !"
"எதைப் பற்றி?"
"நாளை நடக்கப்பேகும் விருந்தைப் பற்றித்தான். சில தலையாய விருதுகளையும் பரிசுப் பொருள்களையும் அவர் அளித்திட திட்டமிட்டுள்ளாராம்; அவற்றுள் எதையுமே மறுத்திடாமல் நீங்கள் எல்லாவற்றையுமே ஏற்றுக் கொண்டிட வேண்டுமாம்!"
"அப்படியா?... ஆனால் அவற்றை நான் தமிழகத்திற்குக் கொண்டு சென்றால். அங்கேயுள்ள தளபதி நெடுமாறன் போன்றவர்கள் வயிற் றெரிச்சல் கொண்டிட மாட்டார்களோ?"
"இப்படியெல்லாம் பொறாமைப் புழுக்களுக்கு அஞ்சி அஞ்சி நம்மை நாமே எத்தனை காலத்திற்குத்தான் ஒடுக்கி ஒடுக்கி உடைந்து சிதைவது? நாமாக, ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக, அவருக்கு உரிமையுள்ள பொருளைப் பறித்திடவில்லையே!"
முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும், செழியன் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திட்டான்.
மறுநாள்.
முத்துநகை செழியனுக்குத் தந்திட்ட முன்னறிவிப்புப் பொய்யில்லை என்பதைப் போலவே, செனேட் மண்டபம் மனித வெள்ளத்தால் நிரம்பி வழிந்திட்டது. அங்கே செனேட்டர்கள் மாத்திரமின்றி, செல்வச் சீமான்கள், கவிஞர்கள், கலை வல்லுநர்கள், படைத்தளபதிகள், உயர் அதிகாரிகள் முதலானோரும் தத்தம் குடும்பத்தினருடன் குழுமியிருந்தனர். மண்டபத்திற்கு வெளியே ஏழை, எளிய நடுத்தர மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்; வெறுங்கையுடன் இல்லை; பரிசுகளுடன்!
தமிழகத் தூதுவனால் எப்படி இந்தச் சாதாரண ரோமானியர்களின் நெஞ்சிலே இத்துணை விரையில் — எளிதில் — இடம் பிடித்திட இயன்றது? அதற்கு இரண்டு தலையாய நிகழ்ச்சிகளே காரணங்கள் ஆகும். ஒன்று, அடக்கிடவே முடியாது என்று கருதப்பட்ட காண்டாமிருகத்தினையே அவன் வீழ்த்தியது; இரண்டாவது, மேசனசின் சதி நெருப்பினால் சாம்பலாகி விடா வண்ணம் ஆட்சித் தலைவர் அகஸ்டஸையே அவன் காப்பாற்றியது.
தங்கள் தலைவரின் உயிருக்கு உறுதுணையாய் — பேரரணாய்த் — தன் வீரத்தினைப் பயன்படுத்திய தமிழ் மறவனுக்குத் தாங்கள் ஏதேனும் நன்றியின் சின்னமாகத் தந்திடவே வேண்டும் என்கிற துடிப்புடனேயே அந்தச் சாதாரணப் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர். கடற் பரப்பாகவே காட்சியளித்திட்டனர். செழியனைக் கண்டிடவும், அவன் கரத்தினைக் குலுக்கி, தாங்கள் கொண்டு வந்திட்ட பரிசுகளைத் தந்திடவும், அவர்கள் காட்டிய ஆர்வத்திற்கு ஆல்பஸ் மலையினைக் கூட இணையாகக் கூற முடியாது. இடித்துப் புடைத்துக் கொண்டு செனேட் மண்டபத்திற்குள் ஒவ்வொருவராகச் சென்று திரும்பிய அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குள், ரோம் நகரப் படை அணியைச் சார்ந்திட்ட வீரர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது.
பொது மக்களும், செனேட்டர்கள் முதலான பெரு மனிதர்களும் பரிசுகளை வழங்கி முடிந்ததும், அகஸ்டஸ் எழுந்து நின்றார். அவரது பரந்த முகத்தினில் துயரத்தின் நிழல் நன்றாகப் படர்ந்திருந்தது. தழுதழுத்த குரலில் உரையாற்றிடத் தொடங்கினார் அவர்.
தமிழ்கத் தூதுவர் செழியனைப் பாராட்டிட நம்முடைய வார்த்தைகளுக்கு வலுவோ பொலிவோ இருப்பதாக நான் கருதிடவில்லை. இங்கே உள்ளேயும், வெளியேயும் பல்லாயிரக்கணக்கினில் திரண்டிருக்கிறார்களே, இந்த மனிதர்களின் மாக்கடலைவிட வேறு மாபெரும் பாராட்டு அவருக்குத் தேவையும் இல்லை. ஆனாலும் இந்த நேரத்திலே உங்கள் எல்லாருடைய சார்பிலும் சில விருதுகளையும் பட்டங்களையும் வழங்குதல் மிகவும் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். இன்றுமுதல் செழியன் அவர்கள், இந்த ரோமானியப் பேரரசின் 'நிரந்தர குடிமகன்' ஆக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்; அத்தோடு சிறப்புப் படைத் தளபதிகளுள் ஒருவராகவும் உயர்த்தப்படுகிறார்; அவருடைய தற்காப்பிற்காகவும் நாட்டின் பொதுப் பாதுகாப்பிற்காகவும் அவருக்கென்று சில 'லீஜன்கள்' (படையணிகள்) ஒதுக்கப்படும். இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து தம் தாயகம் சென்றிட்டாலும் அவர் விரைவில் திரும்பிடுவார் என்னும் நம்பிக்கையுடனும், திரும்ப வேண்டும் என்னும் கோரிக்கையுடனும் இந் சிறப்பங்கள் செய்யப் படுகின்றன. அடுத்து, அவருக்கு ஒரு புதிய பட்டத்தினை வழங்கிட விழைகின்றேன்; 'ரோமாபுரிப் பாண்டியன்' என்பதே அந்தப் பட்டம்."
அகஸ்டஸ் இவ்வாறு மொழிந்து முடிப்பதற்குள்ளேயே செனேட் மண்டபம் மட்டுமல்ல, வெளியே வானமண்டபமே அதிர்ந்திடும் படியாகக் கரவொலிகள் எழுந்து முழங்கின. "ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க! ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!" என்ற ஆர்ப்பரிப்பும், எதிரொலி கிளப்பி விண்ணைப்பிளந்திட்டது.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு அகஸ்டஸ் மீண்டும் தொடர்ந்தார்: "...விலையுயர்ந்த அணிமணிகள், வைரக்கற்கள் அடங்கிய இந்த அழகிய பேழையையும் அவருக்குப் பரிசாக அளிக்கிறேன். இத்துடன் என் உயிருக்குயிரான இன்னொரு பொருளையும் நான் பரிசாக அவருக்கு வழங்குகிறேன். அந்த விலைமதிக்க முடியாத பொருள் எது தெரியுமா?..." என்று அவர் கேட்டு நிறுத்தியதும் எல்லாருமே இமைக்க மறந்து அவரையே திகைப்புடன் நோக்கினர்.
இதோ, இந்தப் பொருளைத்தான்!" என்று அலடஸ் பெருமகனார் சுட்டிக்காட்டியது ஏதோ ஓர் அஃறிணைப் பொருளையா?
அல்ல.
பட்டுத் தளிர்மேனி படைத்திட்ட பாவை - தேன் சொட்டும் மொழிக் கிள்ளை - சுடர் வீசும் அறிவு மயில் - ஜூனோவைத்தான்!
தங்களுடைய ஆட்சித் தலைவர் அளித்திட்ட அற்புதமான பரிசினைக் கண்டு ரோமானிய மக்கள் துள்ளிக் குதித்தனர். உற்சாகந் தாங்கிடாமல்! அவர்களுடைய கரவொலி கலந்த ஆரவாரம் நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சலையே எழுப்பிற்று.
அதே வேளையில் செழியனோ?
அகஸ்டஸ் இவ்வாறு தன்னைப் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் மடக்கிவிடுவார் என்று அவன் எதிர்பார்த்திடவே இல்லை. அவருடைய பரிசினை மறுத்திடவும் துணிவின்றி - மகிழ்ச்சியோடு ஏற்றிடவும் மனம் இன்றி - அவன் தவியாய்த் தவித்தான்; தத்தளித்துத் திணறினான்.
அவனுக்கு அருகினில் அமர்ந்திருந்த முத்துநகைக்கோ, எங்கே அவன் ஜூனோவை ஏற்றிட மறுத்து, முரண்பாடான கருத்துக்களை மொழிந்திடுவானோ என்னும் அச்சம். எனவே இவ்வாறு எச்சரித்திட முனைந்து விட்டாள்:
...செழியன் அண்ணா! அருள் கூர்ந்து உங்கள் நன்றியுரையிலே ஏறுமாறாக ஏதும் இயம்பிவிடாதீர்கள். அகஸ்டஸ் அவர்களின் பரிசளிப்பிலே ஜூனோவைப் பற்றி - ஏன் இந்த ரோமாபுரி நாட்டைப் பற்றி - எத்தனையோ இரகசியங்கள் எல்லாம் ஒளிந்திருக்கின்றன இலை மறை காய்களாக! அவை என்ன என்பதனைப் பின்னர் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன். இப்போது என் பேச்சினைத் தட்டிடாமல் ஜூனோவை ஏற்றுக் கொண்டு விடுங்கள்."
முத்துநகையின் இந்த வேண்டுகோளில் பொதிந்திருந்த அழுத்தம் ஜூனோவைப் பற்றி மாறுபாடாக மறுத்துரைக்கவோ -வெறுத்துப் பேசவோ இடங்கொடாமல் செழியனின் நாவினை முடக்கிப் போட்டு விட்டது.
எனவே தன்னுடைய நன்றியுரையின்போது ஜூனோவைப் பற்றி என்ன நவின்றிட்டான் செழியன்? எதுவுமே இல்லை. பிரியாவிடை பெற்றிட்ட அந்த வேளையில் தன் உள்ளத்தில் பொங்கிடும் உணர்ச்சிகளுக்கெல்லாம் உருவம் தீட்டி, அகஸ்டஸ் அவர்களின் ஆற்றலை வியந்து போற்றி, ரோமானிய மக்களின் நெஞ்சமெல்லாம் உருகிட - உவந்திட அவன் சொற்பொழிவாற்றிய பகுதியின் சாரம் இது தான்: 'நம்மிரு நாடுகளுக்கும் இடையே புதியதொரு கடல் வழியினைக் காண்பதற்கு உங்கள் ஆட்சித் தலைவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு."
இவ்வாறு செழியன் ஆற்றிய சொற்பொழிவினை உடனுக்குடன் சிப்பியோ மொழி பெயர்த்திடும் பொழுதே செனேட்டர் ஒருவர் குறுக்கிட்டார்.“ஏன் இப்போதுள்ள கடல் வழியால் நன்மை இல்லையா? அதனால் உங்கள் தமிழகத்திற்கு எந்த வகையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்குவீர்களா?"
"இப்போதுள்ள வழியினால் எத்தனையோ இடையூறுகள் எங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளன. அதனால் மரக்கலங்கள் செல்லவேண்டிய தொலைவும் மிகுதி. காலமும் மிகுதி. தற்போது கலங்கள் யாவும், ரோமாபுரியிலிருந்து தென்கிழக்கேயுள்ள செங்கடல், ஏடன் நகர் மற்றும் அரேபியா நாடுகளின் தென் கடற்கரை ஓரத்தினையெல்லாம் தொட்டுக்கொண்டு, சிந்துநதியின் முகத்துவாரத்தை அடைகின்றன; பிறகுதான் அங்கிருந்து நாவலந்தீவின் மேற்குக் கரையோரமாகவே வந்து எங்கள் தமிழகத் துறைமுகங்களைச் சேர்கின்றன. இடையிலே 'ஷீபா' நாட்டினைச் சார்ந்திட்ட 'சபீனியர்கள்' தரகர்களாக இருந்து கொண்டு தந்திடும் தொல்லைகளுக்கோ அளவே இல்லை. இரண்டு நாட்டுப் பொருள்களின் விலைமதிப்பையும் தங்கள் இச்சைப்படி யெல்லாம் அவர்கள் ஏற்றி விட்டு விடுகிறார்கள். இத்தகைய இடைத் தரகர்கள் கொழுப்பதற்கு இடம் அளிப்பது நம்முடைய வணிக வளர்ச்சிக்கு நல்லதே அல்ல."
செழியன் இவ்வாறு ஆணித்தரமாகச் சாற்றிடவும், அகஸ்டஸ் பெருமகனாரும் தக்கவாறு நிலைமையைத் தெளிவுபடுத்தினார்.
"தமிழகத் தூதுவர் புகல்வது முற்றிலும் உண்மையே! அதனால்தான் புதிய கடல் வழியை - வணிக வழியை - எப்படியாவது கண்டுபிடித்து விடுவதற்கான வழி துறைகளை ஆராய்ந்திடுமாறு கப்பல் மாலுமியான 'ஹிப்பில்ஸ்' என்பவருக்கு ஆணையிட்டுள்ளேன். அராபியக் கடற்கரைப் பகுதிகளைத் தொடாத வண்ணம், ஏடனிலிருந்து நேராகச் சென்றிடக் கூடிய வழியினைக் கண்டுபிடிப்பதில் அவர் முனைந்து ஈடுபட்டுள்ளார். அவரது முயற்சி விரைவில் வெல்லும் என நம்புவோமாக!"
"எத்தனையோ புதுப்புதுத் திட்டங்களால் என் இதயத்தைக் கவர்ந்து விட்ட தங்கள் ஆட்சித் தலைவர், இந்தப் புதிய கடல்வழித் திட்டத்தாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார். அவருக்குத் தமிழகத்தின் சார்பில் என் பணிவார்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்! பெருமக்களே! தாங்கள் என்மீது பொழிந் திட்ட பாச மழைக்கு காட்டிய கனிவுக்கு அளித்திட்ட மதிப்பிற்கு அள்ளிக் கொடுத்திட்ட ஆயிரமாயிரம் அற்புதப் பரிசுகளுக்கு - என் உளங்கனிந்த நன்றியினை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு உரிமையாக்கி அமர்கிறேன்."
செழியனின் நன்றியுரை முடிந்ததும் 'ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!' 'ரோமாபுரிப் பாண்டியன் வாழ்க!' என்னும் வாழ்த்தொலிகள் மறுபடியும் செனேட் மண்டபத்தினை அதிர அடித்தன.