உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/48. ஜூனோவா; தாமரையா

விக்கிமூலம் இலிருந்து

48

ஜூனோவா; தாமரையா

கஸ்டஸ் பெருமகனாரே துறைமுகத்திற்கு நேரே வந்து வழியனுப்பி வைத்திட செழியன், முத்துநகை, ஜூனோ முதலானோரைச் சுமந்திட்ட மரக்கலம், ரோமாபுரியை விட்டு தமிழகம் நோக்கிப் புறப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, சிப்பியோ, உடன் வரவில்லை. பிணியுற்றுவிட்ட தன் அன்னையைப் பேணிடும் பொருட்டு அவன் தன் தாயகத்திலேயே தங்கிவிட்டான். அழகு மலிந்திட்ட ரோமாபுரி - ஆற்றல் மிகுந்திட்ட அகஸ்டஸ் சீசர்-இவர்களைப் பிரிவதிலே எத்துணைத் துயரம் உண்டாயிற்றோ அதற்குச் சற்றும் குறைந்திடாத வேதனையே இனிய நண்பன் சிப்பியோவைப் பிரிவதிலும் செழியனுக்கு ஏற்பட்டது. முன்பு தமிழகத்திலிருந்து ரோமாபுரிக்கு வந்திட்ட பொழுது அந்தக் கப்பற் பயணத்தைக் கலகலப்பானதாக - களிப்பு நிறைந்ததாக ஆக்கியவன் சிப்பியோவே அல்லவா?

இப்போதோ, ரோமாபுரியைப் பிரிந்துவரும் துயரத்தோடு பெருவழுதிப் பாண்டியர் என்ன ஆனாரோ என்ற துக்கமும் செழியனின் நெஞ்சுக் கூட்டை நெரித்துப் பிசைந்திட்டது.

இந்த வேளையில் அவனைக் கவலை இருளினின்றும் கரையேற்றி மகிழ்ச்சி வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியது யார்? ஜூனோதான் அல்லவா?

ஆனால் அவளோ...?

கடலிலே மரக்கலம் மிதக்கத் தொடங்கி நெடுநேரங்கடந்திட்ட போதிலும் ஜூனோ அவன் கண்ணிலேயே தென்படவில்லை. அவளும் முத்துநகையும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறையில் என்னதான் இரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்களோ? ஏன்தான் அப்படிக் 'கலீர் கலீர்' என்று சிரிப்பலைகள் எழுப்புவார்களோ?

இரண்டொரு தடவை முத்துநகையாவது அவன் அறைக்கு வந்து எட்டிப் பார்த்து "ஏதேனும் கொண்டு வரச் சொல்ல வேண்டுமா அண்ணா?" என்று கேட்டுவிட்டுச் சென்றாள்.

ஜூனோவோ அம்மாதிரி வந்திடவும் இல்லை. அவன் எப்படி இருக்கிறான் என்று பார்த்திடவும் இல்லை.

'அவள் எங்கே இருக்கிறாள்? என்ன செய்கிறாள்?' என்று முத்துநகையை உசாவிடவும் செழியனுக்குத் தயக்கமாக இருந்தது. பிறகு அவள் ஏதேனும் கேலி செய்திட மாட்டாளா?

பொழுது போகாமல் தனிமையில் புழுங்கிக் கொண்டிருந்த செழியன், கதிரவன் எப்போது மேற்கு வானிலே சரிந்திடுவான் என்று காத்திருந் தான். வெயிலின் வெம்மை நன்றாகத் தணிந்துவிட்டது என்று தெரிந்த தும், மரக்கலத்தின் மேல்தளத்திற்குச் சென்றிட்டான்.

சிறிது நேரத்தில் முத்துநகையும் வந்து சேர்ந்தாள்.

"என்ன அண்ணா உங்கள் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது? உடம்புக்கு ஏதாவது முடியவில்லையா?" - ஏளனம் இழைந்திடும் மெல்லிய முறுவலுடன் கேட்டாள் அவள்

"உடம்புக்கு ஒன்றும் இல்லை; நன்றாகத்தான் இருக்கிறேன்"

"அப்படியானால் உள்ளந்தான் சரியாக இல்லை என்கிறீர்களா?"

"அது போகட்டும்; ஏதோ இரகசியங்களைச் சொல்லப் போவதாக நேற்று செனேட் மண்டபத்தில் என் வாய்க்குப் பூட்டுப் போட்டாயே! இந்த நேரம்வரை அதைப்பற்றி வாயையே திறக்காமல் அந்த ரோமாபுரிக்காரியோடேயே அரட்டையடித்துக் கொண்டிருக்கிறாயே! இப்போதாவது அந்த இரகசியங்களைச் சொல்லலாமே?"

"ஓ! தாராளமாகச் சொல்லலாம்; அதற்காகத்தானே நான் இங்கே மேல்தளத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் என்மீது உங்களுக்கு நிரம்பக் கோபம் போல் இருக்கிறது!"

"உன் மீது சினம்கொண்டு இனிமேல் எனக்கு என்ன ஆகப் போகிறது? எப்படியோ அகஸ்டஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்து ஜூனோவை என் தலையிலே கட்டி வைத்துவிட்டாய்! ஏன்தான் அப்படிச் செய்தாய் என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை."

"ஐயோ பாவம்! கீழ்த்தளத்திற்குச் சென்றிடும் வாசல் பக்கத்தைத் திரும்பிப் பார்த்தீர்களானால் எல்லாம் புரிந்து விட்டுப் போகிறது!" என்று 'களுக்' கென்று சிரித்திட்டாள் முத்துநகை.

செழியன் உடனே திரும்பி நோக்கினான்.

அங்கே தலை சாய்த்து நின்றிட்ட தளிர்க்கொடியைக் கண்டதுமோ...

பூவரசங்காயைச் சுழற்றி விட்டமாதிரி இந்த பூமிப் பந்தே சுற்றுவதுபோல் இருந்தது செழியனுக்கு!

"அவள் யார், தாமரைதானா... இல்லை?" தன் அருகில் நின்றிருக்கும் முத்துநகையிடம் பரபரப்புடன் வினவினான் தமிழகத் தூதுவன்.

"சரிதான் போங்கள்! அதற்குள்ளே அவளுடைய முகத்தையே மறந்து விட்டீர்களா? இதுதான் நீங்கள் தாமரையிடம் கொண்டிருப்பதாகக் கூறிய ஆறாக்காதலுக்கு அழகா?... அர்த்தமா?"

"நீ என்ன சொல்கிறாய் முத்துநகை? நனவா கனவா என்று என்னால் நம்பவே முடியவில்லையே! அசல் ஜூனோ மாதிரியே இருக்கிறாளே!"

"ஜூனோ மாதிரி என்ன? அசல் ஜூனோவேதான்?”

"என்ன புதிர் போடுகிறாய்? தாமரையைப் போய் ஜூனோ என்கிறாயே?"

"நீங்கள் தான் ஜூனோவைப் போய்த் தாமரை என்கிறீர்கள்?" -கலகலவென்று கேலியாக நகைத்திட்டாள் முத்துநகை!

அவள் இப்படி விடுகதை போட்டுச் செழியனைத் திணற அடிப்ப தைக் கண்டு பொறுக்கவில்லை போலும் புதிதாக வந்து நின்றிட்ட அந்தப் பூவைக்கு.

"ஏண்டி இன்னும் அவரைப் போட்டு வாட்டி எடுக்கிறாய்? விரைவாகத்தான் உண்மைகளையெல்லாம் விடுவித்துத் தொலையேன்!" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் அவள்.

"அடி, அம்மாடி! அதற்குள்ளே அவர் கடுகளவு வாடுவது கூட உனக்கு மலையளவாக வாட்டம் தருகிறதா? அப்படியானால் நீ நடித்திருக்கும் நடிப்பையெல்லாம் நீயே உடைத்துக் கூறு; அப்போதுதான் அவருக்கும் இனிக்கும்; இனிமேல் நான் இங்கே இருந்திடவும் கூடாது!" என்று மொழிந்தவாறே கீழ்த்தளத்தை நோக்கி முத்துநகை பிடித்தாளே ஓட்டம்

தனித்துவிடப்பட்ட அந்த இளம் காதலர்களுக்கு முதலில் எப்படி, யார் பேச்சினைத் துவக்குவது என்றே தெரிந்திடவில்லை.

வேட்கை தரும் வெப்பத்தால், விம்முகின்ற நெஞ்சத்தால் அவர்கள், ஒருவரையொருவர் விழிகளாலேயே விழுங்கிக் கொண்டனர். உணர்வு களாலேயே தழுவிக் கொண்டனர்.

தன்னை விட்டுப் பறந்து போய் விட்டதாகக் கருதப்பட்ட கிட்டாதென்று எண்ணப்பட்ட ஆசைக்கிளி இப்படித் திடீரென்று திரும்பி வந்து தன் தோளிலேயே தொற்றிடக்கூடும் என்று செழியனால் எண்ணிப் பார்த்திடவே முடியவில்லை.

இந்தத் தாமரையென்னும் தளிர்க்கொடிக்காக - தமிழ்ச் சிட்டுக்காக - அவன் எத்தனை எத்தனை இரவுகள் இமைக்கூடுகளை மூடிட முடியாமல் உறக்கமே இன்றித் தவித்திருக்கிறான். ஏங்கி ஏங்கிப் பொருமியிருக்கிறான் - புலம்பியிருக்கிறான்! ஏன் இந்த ஜூனோவையே எப்படி எப்படியெல்லாம் புறக்கணித்திருக்கிறான்.

ஆனால் அதே ஜூனோவாக இந்தத் தாமரைதான் நடித்துக் கொண்டி ருந்தாள் என்பதனை இன்னும் அவனால் நம்பிடவே முடியவில்லை. நனவா கனவா என்னும் திகைப்பும் அவனைவிட்டு முழுமையாக நழுவிடவும் இல்லை.

பூம்புகார் அரண்மனையை விட்டுத் தப்பிய இந்தப் பூங்கொடி இந்த ரோமாபுரிக்கு எங்ஙனம் வர முடிந்தது? இங்கே உள்ளவர்களுடன் எவ்வாறு இத்துணை ஈடுபாட்டுடன் இரண்டறக் கலந்து பழகிட முடிந்தது போன்ற ஐயப்பாடுகளும் அவனுள் எழாமல் இல்லை.

தொலைவில் நின்றவாறே தன் பார்வையினால் தாமரையின் சந்தனமுக எழிலைப் பருகித் திளைத்திட்ட செழியன் தன் வலக்கரத்தின மேலே தூக்கி ஆள் காட்டி விரலினால் தன்னருகே வந்திடுமாறு அவளுக்குச் சைகை காட்டினான்.

புன்னகையை வழிய விட்டவாறே அவளும் அவனை நோக்கி அன்னம்போல் அசைந்து வந்திட்டாள். அவள் அருகினில் நெருங்கியதும் -

"நீ எவ்வளவு பொல்லாத கள்ளி! என்னை எப்படியெல்லாம் ஏமாற்றிவிட்டாய் இந்த ரோமாபுரியிலே" என்று அவளது மிருதுவான காது மடலைப் பற்றித் திருகினான் செழியன்.

"ஐயோ, வலிக்கிறது! விடுங்கள்!" என்று அவனுடைய விரல்களை விடுவித்துத் தன் கைகளில் ஏந்திக் கொண்டே அவள், "நீங்கள் மட்டும் என்னை ஏமாற்றவில்லையா?" என்று கொஞ்சலாகக் கேட்டாள்.

"நான் எங்கே உன்னை ஏமாற்றினேன்?"

"ஆமாம்.ஆமாம். இப்போது இப்படித்தான் சொல்வீர்கள்! உங்களுக்குத்தான் எல்லாமே மறந்து போயிருக்குமே! ஆனால் பழைய நிகழ்ச்சிகளை - அப்போது நீங்கள் அளித்திட்ட வாக்குறுதிகளை - என்னால் இவ்வளவு விரைவில் மறந்திட முடியுமா?"

"அப்படியென்ன நான் உனக்கு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் தவறிவிட்டேன்?"

"ஏன் தவறிடவில்லை? கரிகாலரைக் கொல்ல முயன்று புகார் அரண்மனையிலே சாவினைத் தழுவிவிட்ட என் அண்ணியாருடைய, ஏன் உங்கள் அக்காளுடைய சவத்தினைக் காணப் புறப்பட்டோமே நினைவிருக்கிறதா? அந்தப் பயணத்திற்கு முன்னர் இருட் சிறையிலே கிடந்திட்ட உங்களைச் சந்திக்க வந்தேனே. அப்போது என்ன சொன்னீர்கள்? 'நீ பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருகிறேன். உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன். உன்னை ஏமாற்ற மாட்டேன்! உன்னுடனேயே வந்து உன்னுடனேயே திரும்புகிறேன்!' என்றெல்லாம் உறுதியளித்தீர்களே! ஆனால் பிறகு எப்படி நடந்து கொண்டீர்கள்? என்னைவிட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைந்திடாத பாதுகாப்பு வீரராகத்தான் இறுதிவரை என் அருகிலேயே இருந்தீர்களா? என் கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டுக் கரிகாலரைக் காப்பாற்றுவதிலேயே நீங்கள் குறியாகிச் செயல்படவில்லையா?" தாமரை இவ்வாறு மடக்கியதும்,

"ஓ, அதைச் சொல்கிறாயா?" என்று கூறுவதைத் தவிர வேறு எந்த மறுப்பினையும் எழுப்பிட இயலாமல் அசடு வழிந்திடச் சிரித்திட்டான் செழியன்.

'நான் மட்டும் அவ்வாறு மாறுவேடம் பூண்டு இருங்கோவேளின் சூதுவலையினைக் கிழித்தெறியாமல் போயிருந்தால் இந்நேரம் கரிகாலரின் வாழ்வும் சோழமண்டலத்தின் ஆட்சியும் எப்படி எப்படியோ திசைமாறியிருக்காதா?' என்று எண்ணிக் கொண்டான் அவன்.

...ம் அது போகட்டும். நீ எப்படி இந்த ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தாய்? அதைச் சொல்! கேட்போம்" என்றான் சிந்தனை வலையினின்றும் மீண்டவனாக.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? அது பெரிய கதை. இங்கு வந்து சேர்வதற்குள் நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் புகார் அரண்மனையிலிருந்து நான் எப்படித் தப்பிச் சென்றேன் தெரியுமா?"

"எப்படி"

"என்னுடைய அண்ணன் இருங்கோவேளின் ஆட்கள்தான் என்னை அப்படித் தந்திரமாகக் கடத்திச் சென்றார்கள்."

"அவர்கள் ஏன் உன்னைக் கடத்திச் சென்றிட வேண்டும்?"

"என்னை வீராங்கனையாக்கிக் கரிகாலரோடு பொருதச் செய்து, மீண்டும் வேளிர்குல அரசினை நிறுவிட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் என்னுடைய உள்ளம் அதற்கு இடம் தந்திடவில்லை. கரிகாலரைப் போன்ற கருணை, பெருந்தன்மை, பேராற்றல் படைத்த பேரரசர்கள் தாம் நம்முடைய தமிழ் மண்ணுக்கு உருவான திட்டங்களை வழங்கி உயர்வான வாழ்க்கை வளத்தினைப் பெருக்கிட முடியும் என்று எனக்கு உறுதியாகப்பட்டது. எனவே எங்களுடைய வேளிர்குல ஆட்களின் சதித்திட்டங்களுக்கு நான் இசைந்திட மறுத்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என் மீது அடங்காத ஆத்திரம். ஆனால் அவர்கள் தங்கள் ஆத்திரத்தின் விளைவாக என்னை ஏதும் செய்வதற்குள்ளேயே நான் அவர்களுடைய பிடிப்பிலிருந்து தப்பியோடி விட்டேன். சோழ மண்டலத்திலேயே நடமாடினால் என் தலைக்கு என்றைக்குமே ஆபத்துதான் என்று தோன்றியது. எனவே சில உழவர்பெருங்குடி மக்கள் உறுதுணையோடு பாண்டிய நாட்டுக்கு ஓட்டம் பிடித்தேன். அப்போதுதான் பசுமலையில் உள்ள 'அஞ்சினான் புகலிட'த்தில் நான் தங்கிட நேர்ந்தது. எனக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டதாலேயே அங்கே கலவரம் விளைந்திடும் போல் செய்தி எட்டியதால் பின்னர் அங்கிருந்தும் வெளியேறினேன்.

"ஓர் அறச்சாலையின் திண்ணையில் ஒருநாள் இரவு நான் 'அறிதுயிலில்' புரண்டிட்டபொழுது பாண்டியநாட்டு இளவரசர் இளம்பெருவழுதி என்மீது அளவற்ற காதல் கொண்டிருப்பதாகவும், என்னைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமாக அலைகிறார் என்றும் இரு மறவர்கள் உரையாடியது என் செவியிலே விழுந்தது. அதைக் கேட்டதும் எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது!"

"அப்படியானால் இளவரசரை உண்மையிலேயே நீ காதலிக்க வில்லையா?"

"நான் எப்போது காதலித்தேன்? ஓர் ஆடவருடன் ஒரு பெண் பாசத்தோடு பழகினாலே அது காதலாகி விடுமா? என்னுடைய கண்ணியமான நட்புறவை அவர் தவறாக எடுத்துக் கொண்டு தடுமாறினால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளி ஆகிட முடியும்? மேலும் நான் காதலித்ததெல்லாம் ஒரே ஒருவரைத்தான்...

"அவர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" - கண்ணைச் சிமிட்டிய வண்ணம் குறும்பு நெளிந்திடக் கேட்டான் செழியன்.

"ஊம்.. அவர் யார் என்று இனிமேல் தான் என் வாயினால் வேறே சொல்ல வேண்டுமாக்கும்!" என்று தன் மோவாயைத் தோளிலே இடித்துக் கொண்டு, முறுவலித்த தாமரை மேலும் தொடர்ந்தாள்.

"அப்புறம் கேளுங்கள். இந்த இளவரசரின் வேட்டையிலிருந்து இனி எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்னும் பெருந்துயரத்தோடு அலைந்திட்ட நான் எப்படியோ மேற்குக் கடற்கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே பசிக்களைப்பினால் மயக்க முற்று விழுந்துவிட்ட என்னை ஒரு யவனக் கிழவர் வந்து காப்பாற்றினார். அவர் முன்பே எனக்கு அறிமுகமானவர்தான். என்னுடைய அண்ணனிடம் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவரே அவர். எங்கள் மரமாளிகைக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த அவரிடம்தான் இத்தாலி மொழியினைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கற்றுக் கொண்டது. என்னுடைய அவல நிலையினைக் கேள்வியுற்ற அவர், 'சிறிது காலம் என்னுடன் ரோமாபுரியில் வந்து தங்கிவிடேன். உன்னுடைய மன நிலை சரியானவுடன், தமிழகத்திலும் அரசியல் கொந்தளிப்புகள் அடங்கியவுடன் நீ உன் தாயகத்திற்குத் திரும்பி வரலாம்'-என்றார். அவருடைய வற்புறுத்தலினால்தான் நான் ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தேன்."

"ஆமாம், இங்கே வந்ததும் ஜூனோவாக எப்படி மாறினாய்?"

"ம் அதுவும் ஒரு சுவையான கதைதான்! யவனக் கிழவர் இல்லத்திற்கு அந்த உண்மையான ஜூனோ ஒரு முறை வந்தாள். முதற் சந்திப்பிலேயே நாங்கள் இணை பிரியாத தோழிகளாகிவிட்டோம். எங்களுடைய உருவ ஒற்றுமையோ, எங்களை இரட்டைப் பிறவிகள் என்றே சொல்லும்படியாக அமைந்துவிட்டது! அந்தச் சமயம் அகஸ்டஸ் பெருமகனாருக்குத் தம்முடைய ஆட்சிப்பொறுப்பினுக்கு மேசனஸ் போன்ற நயவஞ்சகர்களால் இடையூறு உண்டாகலாமோ என்கிற அச்சம் முளைவிட்டுக் கொண்டிருந்த நேரம். மேசனஸ் என்பவர் இலக்கியப் புலமையில் ஆர்வங்கொண்டவரே தவிர, ஆட்சி நடத்துவதற்குத் தேவையான கூர்மை மிகுந்த தொலைநோக்கோ, அலுக்காமல் உழைக்கக் கூடிய சுறுசுறுப்போ, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிடும் சுய சிந்தனையோ, அந்தத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிடும் செயலாற்றலோ அவருக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அகஸ்டஸ் அவர்கள் வெளிநாடுகளில் எதிரிகளோடு பொருதிக்கொண்டிருந்த வேளையில் சிறிது காலம் ரோமாபுரி நகரின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார் என்பதைத் தவிர, வேறு பெருமிதப்படத்தக்க அளவுக்கு ஆட்சி அனுபவம் உண்டு என்றும் கூறிட முடியாது. ஆனாலும் அவருக்கும் ஆட்சித் தலைவராக ஆகிட வேண்டும் என்று அடக்கவொண்ணாத பேராசை. அதனால்தான் அகஸ்டசைத் தந்திரமாக வீழ்த்துவதில் தம் சிந்தனையைச் செலவிட முனைந்திட்டார். அவருடைய நடவடிக்கைகளை உளவு அறிவதற்குத் தகுதியான நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் சிலர் அகஸ்டசுக்கு அப்போது தேவைப்பட்டார்கள். மற்றவர்களைவிட ஜூனோவை அந்த ஒற்றுவேலையில் ஈடுபடுத்துவது நல்லதாயிற்றே என்று அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த வேளையில் தான் ஜூனோ ஒரு நாள் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். என்னைக் கண்டதுமே எங்கள் இருவருடைய உருவ ஒற்றுமையையும் பயன்படுத்தி உண்மையான ஜூனோவை நம்முடைய முத்துநகையைப் போல ஆணாக உலவவிடத் திட்டமிட்டு விட்டார்."

"நீ சொல்வதைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரே வியப்பாக இருக்கிறதே! ஆமாம். என்னை முதன்முதலில் ரோமாபுரியில் வரவேற்றுக் கை குலுக்கியது நீதானா? அந்த உண்மையான ஜூனோவா?"

"அவள்தான் உங்களை வரவேற்றவள். பெரும்பாலும் செனேட் கூட்டங்களுக்கும் அரசியல் விழாக்களுக்கும் அவள்தான் வருவாள்; நான் வரமாட்டேன். அதேபோல் உங்களுடன் தனித்து இருக்கக்கூடிய சூழ் நிலைகளில் எல்லாம் நான்தான் வந்திருக்கிறேன். அவள் வந்ததில்லை!"

"ஆமாம், மேசனசின் குடும்பத்தைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டபோது நீ என்மீது எரிந்து விழுந்தது கூட இதனால்தானா?"

"பின்னே எரிந்து விழாமல் அப்போது நான் என்ன செய்திடமுடியும்? உண்மையான ஜூனோவானால் எல்லா விவரங்களையும் அறிந்து வைத்திருப்பாள்!"

"தமிழகச் சமையலை கிளியோபாத்ராவிடம் இருந்த போதே ஒரு யவனக் கிழவர் மூலம் கற்றுக் கொண்டதாகக் கூறியதெல்லாம்கூடப் பொய்தானே?"

"முழுக்க முழுக்கப் பொய்தான்! அதிலே வேறு சந்தேகமா!" என்று சிரித்திட்டாள் தாமரை.

"அது சரி, அந்த ஆடை அலங்காரங்களையெல்லாம் எப்படி அவ் வளவு கச்சிதமாக உன்னால் செய்துகொள்ள முடிந்தது? அதுவும் செம் பட்டையான சுருட்டை முடியை எப்படி உன்னால் வைத்துக் கொள்ள முடிந்தது?”

"இந்த ஒப்பனைக் கலையெல்லாம் தமிழகப் பெண்டிருக்கு பெரிய கடினமான காரியமா? ஆனால் என்னுடைய நீண்ட கூந்தலைக் கத்தரித்திட நேர்ந்ததே என்பதுதான் எனக்கு மிகுந்த வருத்தம் அளித்திட்டது. என்ன செய்வது? அகஸ்டஸ் பெருமகனாருக்குச் செய்திடும் ஒரு தியாகமாக இருக்கட்டுமே என்றுதான் அதற்கும் துணிந்திட்டேன்"

"ஆமாம், இப்போது நீ ஜூனோ வடிவத்திலேயே தமிழகத்திற்குத் திரும்பிவிட்டாயே. இனிமேல் அந்த உண்மையான ஜூனோ எப்படிப் பெண்ணுருவிலே நடமாட முடியும்? எந்தக் காலத்திற்கும் அவள் இனி வடையில் தானே இருந்தாக வேண்டும்?"

"அது ஒன்றும் தேவையில்லை. ரோமாபுரிப் பெண்கள் மணவிலக்குச் செய்து கொள்வதுதான் வாடிக்கையான காரியமாயிற்றே? ஆகவே, சிறிது காலம் சென்றதும் தமிழகத்துத் தூதுவரைப் பிடிக்காமல் மணவில்க்குச் செய்து கொண்டு திரும்பிவிட்டதாக அவள் அங்கே மீண்டும் தலையெடுத்துவிடுவாள்!" என்று சிரித்திட்டாள் தாமரை.

"நீ சொல்வதைப் பார்த்தால் ரோமாபுரியிலே எதையுமே எளிதாக எடுத்துக் கொண்டு நினைத்ததை முடித்து விடுவார்கள் போல் இருக்கிறதே! அப்பப்ப! பொல்லாத மூளை!" என்று தானும் நகைத்தவாறே தன் வியப்பினை வெளியிட்டான்.

"ஆமாம்; இன்னும் உங்கள் கதை முடிந்திடவில்லையா?" என்று முத்துநகை குரல் கொடுத்துக் கொண்டே வராமல் போயிருந்தால் இருட்டிப் போனது கூடத் தெரியாமல் அந்த இளங்காதலர்கள் இன்னும் எத்தனை நாழிகைதான் தங்கள் இதயங்களை பரிமாறிக் கொண்டே இருந்திருப்பார்களோ!