ரோமாபுரிப் பாண்டியன்/49. கல்லணை எழுப்பினார்
49
கல்லணை எழுப்பினார்
கடற்பயணத்திலேயே இவ்வாறு நெடுநாட்கள் கழிகின்றனவே என்னும் மாளாக் கவலையில் ஆழ்ந்திட்டான் நம் மறத்தமிழன் ரோமாபுரிப் பாண்டியன்.
'தமிழ்த் தாயைப் பேணிக் காத்திடும் தலைமகனை, பாண்டியகுலக் கோமகனை தந்தையினும் மேலாகத் தன்மீது பாசமழையினைப் பொழிந்திடும் பெருவழுதிப்பாண்டியனை 'எப்போது சந்தித்திடுவோமோ, எப்போது சந்தித்திடுவோமோ?' என்று அவனது உள்ளம் துடியாய்த் துடித்திட்டது.
எனினும் அந்த வாட்டத்தினை மறக்கடிக்கச் செய்து அவ்வப்போது அவனை உற்சாகத்தில் - கிளர்ச்சியூட்டும் உவகைப் பெருக்கில் - ஆழ்த்தி வந்தது தாமரையின் கனிமுகமே!
ஆம்; இரவிலே முத்துநகையோடு உறங்கிய நேரம் தவிர, பகலிலே அவள் பெரும்பாலும் செழியனின் அருகினில் அமர்ந்தே பொழுதினைக் கழித்திட்டாள். ரோமாபுரியில் நிகழ்ந்திட்ட விந்தைகளையும், விளையாட்டுகளையும், சதிகளையும், சண்டைகளையும், காட்சிகளையும், ஆட்சி நெறிகளையும் அவர்கள் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து உரையாடித் திளைத்திட்டனர். வரம்பினை மீறிடாத வகையினில் சிற்சில சமயம் ஓரங்கச் சிறு நாடகங்களையும் நடத்திக் களித்திட்டனர் யாரும் அறிந்திடாமல்!
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட அந்த இன்பப் புனலுக்குக் குறுக்கே மாமியார் வேலையை செய்திடாமல் முத்துநகை யும் கண்டும் காணாதவளாக ஒதுங்கிக் கொண்டாள்.
ஆனால், ஒரு நாள் காலை -
தாமரையின் தாழம்பூ மேனியெழிலையே செழியன் தன் விழிகளால் பருகிக் கொண்டிருக்கும் வேளை.
"ஆமாம், அகஸ்டஸ் அவர்கள் அளித்திட்ட எத்தனையோ பரிசுகளில் ஒன்றை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? மற்ற பொருள்களுக்கும் தங்களை யாரும் பார்த்திடவில்லையே என்கிற ஏக்கம் இராதா?" என்று கேலியாக நகைத்திட்டவாறே, தன் கையிலே ஓர் அழகான நீண்ட பெரிய பேழையுடன் அவனுடைய அறையினுள் நுழைந்திட்டாள் முத்துநகை.
"நீ சொல்வது சரிதான் முத்துநகை! எனக்கும் அவற்றையெல்லாம் கண்டு களித்திட வேண்டும் என்று ஆசைதான். ஆனால் உன்னுடைய வாயாடித் தோழி அதற்கு இடம் தந்தால்தானே?" என்று கண்களைச் சிமிட்டினான் செழியன்.
"பார்த்தாயா, பார்த்தாயா? எவ்வளவு அபாண்டமான பழியை என்மீது போடுகிறார்? நானா அவற்றையெல்லாம் காணவேண்டாம் என்று இவருடைய கண்களைக் கட்டிப் போட்டேன்? இவர்தான், 'இரு இரு... போகாதே! நீ பக்கத்தில் இல்லாவிட்டால் பொழுதே போக மாட்டேன் என்கிறது' என்றெல்லாம் பல்லைக் காட்டிப் பசப்பிவிட்டு இப்போது என்னை வாயாடி என்கிறார்:... வாயாடி!" செல்லமாகச் சிணுங்கியவாறே சரியாகச் சூடு கொடுத்திட்டாள் தாமரை.
அவளது சிணுங்கலைக் கண்டு மேலும் சிரித்திட்ட முத்துநகை. குரலைச் சற்று இழுத்தாற்போல் இப்படிக் கூறினாள்;
"செழியன் அண்ணா! உங்கள் மீது எனக்கு இப்போது மிகுந்த இரக்கம் ஏற்படுகிறது!"
"ஏனோ?"
"அவளை வாயாடி என்று சாதாரணமாகச் சொல்லப் போய், நீங்களே இப்பொழுது வாயாடிப் பட்டம் வாங்கிக் கட்டிக் கொண்டீர்களே, அதை நினைத்துதான்! அதனாலேதான் பெண்களிடம் பேசும்பொழுது எந்த வார்த்தையையுமே அளந்து பேசிடவேண்டும், இல்லையோ...?"
"போதும், தங்கச்சி! போதும். இனிமேல் உன் தோழியோடு பேசும்பொழுது, படி - மரக்கால் எல்லாவற்றையுமே பக்கத்திலே வைத்துக் கொண்டு நன்றாக அளந்து பேசுகிறேன். இப்போது அந்தப் பேழையை இப்படிக் கொண்டுவந்து திறந்து காட்டுகிறாயா? அகஸ்டஸ் என்னென்ன பொருள்களையெல்லாம் வழங்கியுள்ளார் என்று நாம் நம் கண்ணாலே அளந்து பார்ப்போம்!" -செழியன் இவ்வாறு செப்பிடவும் அவன் அமர்ந்திருந்த அகலமான கட்டில் மெத்தையிலேயே பேழையினைக் கொணர்ந்து வைத்திட்டாள் முத்துநகை, அதனைத் திறந்திட்டவாறே.
"நீ ஏன் எட்டியே நிற்கிறாய் தாமரை? நீயும் அருகில் வந்து பார். என்னென்ன விந்தையான பரிசுகளையெல்லாம் அகஸ்டஸ் அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்று உனக்கும் தெரிந்திட வேண்டாமா?" என்று அழைத்திட்டாள். "எனக்கொன்றும் அவற்றைப் பற்றித் தெரிந்திடத் தேவையில்லை" அலட்சியமாகப் பகர்ந்திட்டாள் தாமரை.
"என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்!"
"அந்தப் பொருள்களையெல்லாம் இந்தப் பேழையில் அடுக்கி வைத்தவளே நான்தானே?"
"அப்படியா? ஆமாம்; நான் குறிப்பிட்டேனே அந்தப் பொருளும்" என்று முத்துநகை கேட்டு முடிப்பதற்குள் திறக்கப்பட்டுவிட்ட பேழையினுள் இருந்தவாறே 'பளிச்'சென்று மின்னி மூவருடைய கண்களையும் ஈர்த்துவிட்டது அது!
அதனைக் கண்டதுமே "ஆமாம், இது எப்படி அகஸ்டசுக்குக் கிட்டியது?" - என்று துள்ளிக் குதித்து எழுந்து நின்றுவிட்டான் செழியன்.
"அது மிகப் பெரிய கதை, அண்ணா! மிகப்பெரிய கதை! இதிலே வேடிக்கை என்ன தெரியுமா! ரோமாபுரிக்குச் சென்றிடத்தக்க தமிழகத் தூதுவர் மூலமாகவாவது இந்தப் பொருளினை அடைந்திட மாட்டோமா என்று கரிகால் சோழர் எத்துணையோ ஏக்கம் ஏங்கியிருக்கிறார். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளின் நெருக்கடியினாலும், யார் தூதுவராகச் செல்வாரோ என்று கடைசிவரை தெரியாததாலும் அவரால் உங்களிடம் இதுபற்றி நேரடியாகக் கலந்துரையாடிட முடியாமற் போய் விட்டது. உங்களை அழைத்து வருவதற்கு என்னை அனுப்பவதென்று பெருவழுதிப் பாண்டியர் முடிவு செய்த பின்னரே கரிகாலர் இதயத்தை அரித்துக் கொண்டிருந்த ஏக்கத்தைப் பற்றியும், அதனை நீக்கிடுவதற்காக நான் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பினைப் பற்றியும் என் தந்தையார் மூலம் நான் அறிந்துகொண்டேன். எப்படியோ என் எண்ணம் ஈடேறிவிட்டது." - மகிழ்ச்சியிலே நீராடியவளாகப் பெருமூச் செறிந்திட்டாள் முத்துநகை.
செழியனுக்கு வியப்பினையும், முத்துநகைக்குப் பெருமிதத்தையும் அளித்திட்ட அந்த அற்புதமான பொருள் தான் என்ன? அதன் பின்னே ஒளிந்திருந்த ஒரு வரலாறு தழுவிய கதைதான் என்ன?
கரிகாலன் காலத்திலேயே தமிழக மாந்தர்க்குக் குறிப்பாகச் சோழமண்டலத்தைச் சார்ந்தவருக்கு தாங்கவொண்ணாத தலையிடியைத் தந்தவண்ணமே பாய்ந்திருக்கிறது காவிரியாறு!
ஆனால் அதனுடைய முரட்டுத்தனமான வெள்ளப் பெருக்கிற்கு முதல் பலி ஆகிக் கொண்டிருந்தவர்கள் குடகு நாட்டினைச் சார்ந்திட்ட பெருமக்களே! அங்கே 'பாகமண்டலா' என்னும் இடத்தருகேயுள்ள ஒரு நெடிய குன்றிலே இருக்கின்ற நீண்ட சுனையொன்றினைத் தேர்ந்தெடுத்து, 'இங்கேதான் காவிரிக் கன்னி பிறந்தாள்' என்று கூறி அதற்கு 'தலைக் காவிரி' என்றும் பெயர் சூட்டி இன்று பேசி மகிழ்ந்திட்டாலும், பொன்னி கருக்கொண்டது அந்த மலைச் சுனையிலே மட்டுமா? இல்லை, குடகு நாட்டிலுள்ள 'மெர்க்காரா' - பாகமண்டலா முதலான எல்லாப் பகுதிகளிலுமே பசுமையான புல்வெளிகளையும் உயரமான காற்றாடி மரங்களையும் போர்வையாகப் போர்த்துக் கொண்டு, விண்ணைத் தொட்டிடும் அளவுக்கு நெடுநெடுவென்று ஓங்கிநின்றிடும் குன்றுகளுக்கும், அவற்றைத் தழுவிக் கொஞ்சிடும் மேக நங்கைக்கும் பிறந்திடும் மழைக் குழந்தையே பொன்னிச் செல்வி!
அந்த நாளில் இந்தக் காவிரி, யாருக்குமே அடங்கிடாத ஆண்மை மிகுந்த பெண்ணாக - ஏன், மூக்கணாங் கயிறு போடப்படாத முரட்டுக் காளையாகவே - தறிகெட்டுத் திரிந்திருக்கிறது.
அதனுடைய கட்டுக்கடங்காத போக்கினால் குடகையும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளையும் சார்ந்திட்ட மக்கள் பட்டபாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசியில் அக்குறுநில மன்னர்களில் ஒருவன், அதற்கு ஏதேனும் ஒரு வழி கண்டு துணை புரிந்திடுமாறு சோழப் பேரரசரை அணுகியிருக்கிறான்.
கரிகாலன் குடகு போன்ற மேற்கு மலைத்தொடர்களைச் சார்ந்திட்ட இடங்களுக்கு ஓரளவு வடிகால் பகுதியாக விளங்குகின்ற சோழ மண்டலத்திலே, காவிரியின் போக்கினை ஒழுங்குபடுத்தி, உறுதியான கரைகளை அமைத்துவிட்டால் திடீர் திடீர் என்று திசை தடுமாறிப் பொங்குகின்ற வெள்ளத்திற்கு இரையாகின்ற குடகு நாட்டு மக்களையும் காப்பாற்றிடலாம்; அதே சமயம் சோழ மண்டலத்தையும் சோற்றுக் களஞ்சியம் ஆக்கிடலாம் என்று எண்ணிடலானார். அதற்கேற்ப காவிரி யாற்றின் சீரான ஓட்டத்திற்கென்று ஓர் அருமையான திட்டத்தினையும் அவர் உருவாக்கினார்.
அந்தத் திட்டத்தின் ஒரு தலையாய அங்கமே 'கல்லணை'
தாம் எழுப்பிட விழைந்த கல்லணை எவ்வாறு அமைந்திடவேண்டும் என்பதனை விளக்குவதற்காக முதலில் நெட்டித் தக்கைகளைக் கொண்டு தாமே ஒரு சிறு சின்னத்தினை வடித்துக் காட்டினான் சோழப் பேரரசன். அது மிக நன்றாக அமைந்திடவே அதனையே பொற்கொல்லர்களைக் கொண்டு பசும்பொன்னிலே வைரங்களையும் பதித்து, அற்புதச் சிற்பமாகப் படைத்து மகிழ்ந்திட்டான் அவன்!
சந்தனம் மணக்காது, செந்தேன் இனிக்காது என்று சாதிப்பதன் மூலமே தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் எந்தக் காலத்திலும் இருந்து தான் வந்திருக்கிறார்கள் அல்லவா?
அத்தகைய அறிவாளிகள் கரிகாலன் காலத்திலும் குடகு நாட்டிலே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்லணைத் திட்டத்தின் மூலம் கரிகாலன் வரலாற்றுப்புகழ் பெற்றிடப் போகிறானே என்னும் எரிச்சலும், அழுக்காறும் ஏற்பட்டுவிட்டன. எனவே அந்தத் திட்டம் 'இனிக்காது; கசக்கும்! மணக்காது; நாறும்!' - என்றெல்லாம் ஏளனம் செய்ததோடு அவர்களுடைய வஞ்சக வலையின் காரணமாக கரிகாலர் கண்ணிலும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த அந்த கல்லணை அமைப்புச் சின்னம் - பசும்பொன்னில் வார்க்கப்பட்டது -சில நாட்களிலேயே திடீரென்று காணாமற் போய்விட்டது.
சில ஆண்டுகள் சென்றதும், குடகு நாட்டைச் சார்ந்திட்ட அழுக்காற்றின் தலைப்பிள்ளைகள் சிலர் கொள்ளை அடித்துச் சென்றிட்ட அந்தக் கல்லணைச் சின்னம், அவர்களுடைய கையைவிட்டுத்தப்பி, மேற்குக் கடற்கரையிலுள்ள முசிறித் துறைமுகப்பட்டினத்திற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்த யவனர்கள் மூலம் ரோமாபுரி அரண்மனைக்குச் சென்றுவிட்டது என்னும் இரகசியச் செய்தி கரிகாலனுக்கு எட்டிற்று. அதனை எவ்வாறேனும் அடைந்திட மாட்டோமா என்னும் ஏக்கம் ஒவ்வொரு நாளும் மன்னனை வாட்டிற்று.
யாரை அனுப்பி அதனை ரோமாபுரியிலிருந்து மீட்டு வருவது என்று கரிகாலன் குழம்பிக்கொண்டிருந்த வேளையில்தான்... தாம் சிறைப்பட்டிருந்த நிலையிலும் ரோமாபுரிக்குப் பாண்டிய வேந்தன் தூதுவர் ஒருவரை அனுப்பவிருப்பதையும், மன்னர் குலத்தினில் பிறந்திட்ட அந்த இளைஞனான தூதுவனைக் கொண்டே, கல்லணைச் சின்னத்தைப் பெற்றிட வாய்ப்புண்டு என்றும், வேறு சில இரகசியச் செய்திகளையும் உட்பொருள்களாக இணைத்து மறைத்துப் புலவர் காரிக்கண்ணனார் ஓலைச் சுவடிகளில் எழுதி முன்பு செழியன் மூலம் கரிகாலனுக்கு எட்டிடுமாறு செய்திட்டார்.
செழியனிடமிருந்து அச்சுவடியைப் பறித்துக் கரிகாலன் கண்ணில் படுமாறு மெய்க்காவலன் வைத்துச் சென்றதையும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் அருகிருக்க அவற்றைப் பின்னர் சோழப்பேரரசன் படித்துவிட்டுக் காரிக்கண்ணனாரின் நல்லெண்ணத்தினைப் புரிந்து கொண்டு அவரைச் சிறையினின்றும் விடுவிக்க ஆணை பிறப்பித்ததையும் முன்னே கண்டோம்.
ஆனால் தூதுவராக யாரை அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டு, எதிர்பார்த்தவாறு இளம்பெருவழுதி செல்லாமல், செழியனே புறப்பட்டுச் சென்ற நிலையில் அவனிடம் நேரடியாகத் தம் உள்ளக் கிடக்கையினை வெளிப்படுத்திடக் கரிகாலனுக்குச் சூழ்நிலை வாய்த்திடவில்லை!
எனினும், அவனுடைய ஏக்கத்தைப் பற்றி - அதனாலேயே சில காலம் அவன் இரவு நேரங்களில் உறங்காமல் தவித்ததுபற்றி - புலவர் காரிக்கண்ணனார் நன்கு அறிந்தவர் அல்லவா? ஆகவேதான் செழியனை அழைத்து வருவதற்குப் பெருவழுதிப் பாண்டியன் தன்னுடைய மகள் முத்துநகையை அனுப்ப முடிவு செய்ததும், அவளிடம் கல்லணைச் சின்னம் பற்றிய கதையினைக் கூறிச் செழியனின் செல்வாக்கினைப் பயன்படுத்தி அதனைத் திரும்ப பெற்றிட முயலுமாறு மொழிந்தனுப்பினார் புலவர்.
ரோமாபுரிக்கு வந்த பின்னரோ செழியனிடம் அந்தச் சின்னத்தைப் பற்றி விவாதிப்பதற்கெல்லாம், முதல் நாளில் முத்துநகைக்கு நேரம் கிட்டிடவில்லை. அடுத்த நாள் ஜூனோவுடன் அகஸ்டசைச் சந்தித்த பொழுது கல்லணைச் சின்னம் பற்றி அவரிடம் பேச்சினை எடுக்குமாறு அவளையே தூண்டிவிட்டாள் முத்துநகை.
கரிகாலனிடம் பெருமதிப்பு வைத்திருந்த அகஸ்டசும் அட்டியேதும் சொல்லிடவில்லை.
...நானே எவ்வாறோ என் கையில் வந்து சிக்கிவிட்ட கல்லணைச் சின்னத்தினைக் கரிகாலனிடம் யார் மூலம் சேர்ப்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். செழியன் மூலமே அனுப்பிடலாம் என்றும் பின்னர் முடிவு செய்தேன். ஆனால் இங்கு புகைந்துவிட்ட பல்வேறு சிக்கல்களின் காரணமாகத் தூதுவரிடம் அதைப்பற்றிக் கலைந்துரையாடிட இயலாமற் போயிற்று. இப்போது நம் நம்பிக்கைக்குரிய இந்தப் பெண்ணிடமே அதனைக் கொடுத்தனுப்பினால் போகிறது!" என்று உடனே இசைவினை அளித்துவிட்டார் ரோமாபுரி ஆட்சித் தலைவர்.
இவ்வாறாகக் கல்லணைச் சின்னத்தின் கதையினை முத்துநகை கூறி முடிக்கவும் செழியன் எங்கோ ஓர் விந்தையான உலகிலே தான் சஞ்சரிப்பதாகவே உணர்ந்திட்டான்.
தன்எதிரே மின்னிப் பளிச்சிடும் அந்தப் பசும்பொன் பரிசுப் பொருளையே இமை கொட்டாமல் பார்த்து மகிழ்ந்திட்டான்.
"என்னதான் நானும் பற்றுதல் உள்ளவன்தான் என்றாலும், கரிகாலரின் ஏக்கத்தினை உன் ஒருத்தியால் தான் தீர்த்து வைத்திட முடியும் என்பதையே சூழ்நிலைகள் மெய்ப்பித்துள்ளன பார்த்தாயா?" என்று தன் உடன் பிறவாத் தங்கையினைப் பெருமிதத்தோடு நோக்கினான் நம் ரோமாபுரிப் பாண்டியன்.
திடீரென்று அவனுக்கு ஓர் அச்சம் கலந்த ஐயப்பாடு தோன்றிவிட்டது.
"ஆமாம் முத்துநகை. நம்முடைய இளவரசரோ தாமரையின்மீது மோகம் கொண்டு திரிகிறார் என்று கூறினாய். இவளோ அவரைக் காதலிக்கவில்லை; இவள் இப்படித் தன்னைக் காதலிக்காமல் என்னைக் காதலிக்கிறாள் என்று அறிந்ததும், அவருக்கு என் மீது ஆத்திரம் வராதா? நான் அவருடைய பகைமையினைத் தேடிக் கொண்டால் அது பாண்டிய மன்னருக்கு நன்றியில்லாமல் நடப்பதாகப் பொருள் ஆகாதா? அதற்கு என்ன வழி செய்யலாம்?" என்று கவலையோடு வினவினான்.
"அதற்கு ஓர் அருமையான திட்டம் வைத்திருக்கிறேன் செழியன் அண்ணா! கலக்கம் அடையாதீர்கள்!" என்று முறுவலுடன் விடை பகர்ந்தாள் முத்துநகை.
"என்ன திட்டம்?"
"ஊம். அதை இப்போது சொல்லமாட்டேன். நாம் செல்லும் இந்த மரக்கலம் பாண்டிய நாட்டை நெருங்கிடும் பொழுதுதான் கூறுவேன்!"
இளம்பெருவழுதியின் எரிச்சலுக்கும் பகைமைக்கும் இலக்காகிடா வண்ணம் முத்துநகை எத்தகைய திட்டத்தினைத் தந்திடக்கூடும் என்று செழியன் தன் மூளையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் பொழுதே, அவளோ இன்னோர் அதிர்ச்சியளித்திடும் அரசியல் செய்தியினை அவனிடம் வெளிப்படுத்தினாள்.
"செழியன் அண்ணா, நீங்கள் என்னவோ இளவரசரின் பகைமை யினைத் தேடிக்கொண்டால் நமது பாண்டிய வேந்தருக்கே நன்றியில்லாமல் நடந்ததாக ஆகிவிடுமே என்றெல்லாம் அஞ்சுகிறீர்கள்! ஆனால், தமக்கு ஒரு தகுதியை - பதவியை - ஏன், வாழ்க்கையையே வழங்கிய அதே பாண்டியப் பேரரசருடைய உள்ளம் உடைந்திடும் வகையினில், தளபதி நெடுமாறர் எத்துணை நன்றி கொன்ற முறைகளில் எல்லாம் நடந்து கொள்கிறார் தெரியுமா? பெருவழுதிப் பாண்டியர் எப்போது கண்ணை மூடுவார், எப்போது தாம் அரியணையைக் கைப்பற்றலாம் என்று அவர் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். இது நானாக அளக்கின்ற கதையில்லை. பாண்டிய வேந்தரே தம் வாயினால் உரைத்திட்ட உண்மை!"
"நீ சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லையே! நெடுமாறருக்கு என்மீதுதான் கோபம் என்று நினைத்திருந்தேன். அவருக்குப் பாண்டிய வேந்தரிடமே உள்ளூர பகைமை இருந்திருக்கிறதே! அவர் ரோமாபுரித் தூதுவர். பாண்டிய மண்டலத்துக் கொற்றவராகப் பட்டம் சூட்டிக் கொள்வதிலும் அவர் குறியாக இருந்திருக்கிறாரே! ஆமாம், அவரது உள்நோக்கங்களை மாமன்னரால் எவ்வாறு உணர முடிந்தது முத்துநகை?"
"பாண்டிய மன்னரின் உப்பைத் தின்று வளர்ந்த ஒரு நிமித்திகன்தான் இந்த உண்மையைக் கொண்டுவந்து போட்டு உடைத்திருக்கிறான். அவர் எப்போது இறப்பார் என்றும், நெடுமாறன் எவ்வளவு விரைவில் ஆட்சிக் கட்டிலை அடைந்திட முடியும் என்றும் அவனிடம் குறி கேட்டிருக்கிறார்கள்!"
"நெடுமாறரா இப்படிக் குறி கேட்டிடும் அளவுக்கு கீழே இறங்கி விட்டார்? அவருக்குத்தான் அறிவுக்குப் பொருந்திடாத இந்த நிமித்திகம் - சோதிடத்தில் எல்லாம் நம்பிக்கையே கிடையாதே!"
"அவருக்கு அதிலே நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எதற்கும் ஆசைப்படாதவராகவும் கூட இருக்கலாம். அவரைப் போலவே அவரைச் சார்ந்துள்ளவர்களும் இருக்கவேண்டும் என்று என்ன நியதி? அவருடைய மிக நெருங்கிய ஒருவர்தான் இப்படிப்போய்க் குறி கேட்டிருக்கிறார்!"
"இவ்வாறு தம்முடைய உறவினர்கள் தடம் புரண்டு நடப்பதற் கெல்லாம் நெடுமாறர் எப்படி இடம் கொடுத்தார்?"
"அவர் இடம் கொடுத்தார் என்பதைவிட அவர்கள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் பொருத்தமானது. நானும் ஒரு பெண்தான். ஆனால் இந்தத் தாமரையே என்மீது சினம் கொண்டாலும் சரி; நான் சொல்வதை நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மனத்தில். மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டுகின்றவர்கள் - மற்றவர்களிடம் போய்க் கடன் கேட்டுக் கையை ஏந்துகின்றவர்கள் - மற்றவர்களைப் பார்த்துத் தேவையில்லாத நேரங்களிலும் தம்மைத் தாழ்வாகவே எண்ணிக் கொள்கின்றவர்கள் - என்றைக்குமே தலை நிமிர்ந்து நடந்திட முடியாது."
"ஆனால் நெடுமாறரை அப்படித் தாழ்வு மனப்பான்மை கொண்டவராகக் கருதிட முடியாதே! அவ்வாறு தாழ்வு மனம் படைத்தவர் என்றால் பாண்டிய நாட்டு அரியணையையே கைப்பற்றிட வேண்டும் என்கிற அளவுக்கு அவருக்கு துணிச்சல் உண்டாகி இருக்குமா?"
"இந்தத் துணிச்சல் அவருக்கு இயல்பாக அமைந்த துணிச்சல் என்று எண்ணுகிறீர்களா?"
"பிறகு?"
"அவரை ஒட்டி நிற்பவர்கள் - உறவுக்காரர்கள் - தங்களை உயர்த்திக் கொள்வதற்காக அவருக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் செயற்கைத் துணிச்சலே இது!"
"அப்படியா?”
"இல்லையென்றால், சோழ நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாரே, அப்போது அவர் அங்கே என்னதான் செய்திட்டார்? கைகளைக் கட்டிக் கொண்டு பேசாமல்தானே இருந்தார்? இருங்கோவேளின் தளபதியான வில்லவன் போன்றவர்கள் சோழப் பேரரசரின் உயிரினைப் பறித்திட முயன்றிட்டபோது உங்களைப் போலத் தலையைக் கொடுத்துக் காத்திடத் தயங்காமல் தான் முன் வந்தாரா? அதனாலேயே அந்தக் குறுநில மன்னரின் மரமாளிகையிலே தனிமைச் சிறையில் வாடினாரா? பின்னர் வெட்கப்படாமல் வேடங்கள் பல புனைந்து எதிரிகளின் சதிகளையெல்லாம் முறியடித்தாரா? அவர்கள் மண்ணோடு மண்ணாகப் பூண்டற்றுப் போகுமளவுக்கு அவர்களை வீழ்த்தினரா? அதற்காக விரைந்துதான் செயல்பட்டாரா?
அப்போது அவர் கையாண்ட அமைதியைக்குறித்துச் சோழப் பேரரசர் எவ்வளவு மனம் புழுங்கினார் தெரியுமா? அவருடைய அந்தச் செயலற்றப் போக்கினைக் கேள்வியுற்றுப் பெருவழுதிப் பாண்டியர் எத்துணை வேதனைக்கு இலக்கானார் தெரியுமா? அத்தகையவர்தான் இன்று அரியணை ஏறிடவே ஆசைப்படுகிறார். இல்லை, அவ்வாறு ஆசைப்படுமாறு தூண்டப்படுகிறார். அவருடைய முயற்சிகளை முறியடித்திட உங்கள் ஒருவரால்தான் முடியும் என்று கருதித்தான் உங்களை அழைத்து வரும் பொருட்டு என்னைத் தேர்ந்தெடுத்திட்டார் பாண்டிய வேந்தர். வரும் வழியிலேயே நாட்டிலே நடைபெற்றிடும் அரசியல் நிலைமைகளையெல்லாம் நன்கு விளக்கிக் கூறி உங்களை எதற்குமே ஆயத்தமாக வருமாறு எச்சரிக்கை செய்திட வேண்டும் என்றும் என்னிடம் அவர் வற்புறுத்தினார். அப்புறம் இன்னொன்றையும் என்னிடம் கூறினார்.
"என்ன?"
'அதுவா!' என்ற முத்துநகை, செழியனின் செவியில் மட்டுமே விழுந்திடுமாறு மிக மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்.
அந்தச் செய்தியினைக் கேட்டதும் அவனுடைய இரத்த நாளங்களே செயலற்று நின்றுவிடுமோ என்னும்படியான திகைப்பு - வியப்பு- பதைபதைப்பு -படபடப்பு!
"ஆமாம், இது தாமரைக்கும் தெரியுமா?" என்று தணிந்த குரலில் கேட்டான் செழியன்.
"அவளுக்குத் தெரிவித்திடாமல், நான் அகஸ்டசிடமும் எப்படி இந்த உண்மையை எட்டவிட்டிருக்க முடியும்? எனக்கென்ன இத்தாலி மொழியா தெரியும்!"
"அப்படியானால் அகஸ்டஸ் வரைக்கும் இந்தச் செய்தி தெரிந்து விட்டதா?"
"இல்லையென்றால், உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அவர் இவ்வளவு எளிதில் நீங்கள் ரோமாபுரியை விட்டுக் கிளம்பிட இசைந்திருப்பாரா?"
"அந்த மனிதர் இதைப்பற்றி எதுவுமே என்னிடம் கேட்டிடவும் இல்லை; கூறிடவும் இல்லையே?"
"நான்தான் அப்படி அவருக்கு வாய்ப்பூட்டுப் போட்டு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டேன்; மேலும், தாயகம் புறப்படுகிற பரபரப்பில், அவருடன் நீண்டபொழுது உரையாடிட உங்களுக்குத்தான் நேரம் ஏது? அவருக்குத் தான் நேரம் ஏது?"
"பார்க்கப் போனால், அந்த மாபெரும் ஆட்சித் தலைவர் நீயும் தாமரையும் என்னவெல்லாம் சொன்னீர்களோ அப்படியெல்லாம்தான் ஆடி இருக்கிறார் என்று தெரிகிறது! நீங்கள் இருவரும் என்னதான் அப்படிச் சொக்குப்பொடி போட்டீர்களோ?"
"எல்லாம் உங்களுடைய நன்மைக்காகத்தானே அண்ணா?"
"நான் இல்லை என்று மறுக்கிறேனா? அது சரி, முத்துநகை! ஜூனோவைக் கண்டதுமே இவள் தாமரைதான் என்பதை நீ கண்டுபிடித்து விட்டாயா?"
"ஊகூம்,இவள் இருந்த கோலத்தில் நான் எங்கே இவளை அடையாளம் கண்டுகொள்வது? இவளோடு நான் அகஸ்டசின் இல்லத்திற்குப் படுக்கச் சென்றேன் இல்லையா? அப்போது இவளாகத் தான் தாம் யார் என்கிற உண்மையை வெளிப்படுத்தினாள்; 'தன்னை எப்படியாவது உங்களுடைய பரிசுப் பொருளாக்கித் தமிழகத்திற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கெஞ்சினாள்."
முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும் உடனே தாமரை குறுக்கிட்டாள். 'ஏய். நான் ஒன்றும் உன்னைக் கெஞ்சிடவில்லை. நீதான், "எங்கள் அண்ணனை இப்படியெல்லாம் ஏமாற்றலாமா? அகஸ்டஸ் அவர்களிடம் கூறி எப்படியாவது உன்னைத் தாயகம் கூட்டிப் போய் விடுகிறேன்' என்று சொன்னாய்."
"அடிப்பாவி! முழுப் பூசணிக்காயையும் சோற்றில் றைக்கிறாளே! பார்த்தீர்களா செழியன் அண்ணா! எப்படிப் பொய் பேசுகிறாள் என்று? அது இவள் குற்றம் இல்லை; எங்கள் பெண்ணினத்திற்கே உரிய அகங்காரத்தின் அழியாத சின்னம் அது. பெண் என்பவள் தானாக ஓர் ஆடவனை நாடிச் செல்வது இழுக்காம்; அதனால் ஆடவன் மீது என்னதான் அன்பிருந்தாலும் அனைத்தையும் மனதுக்குள்ளே மறைத்துக் கொண்டு, அவன் தானே தன்னை நாடி வரும்படி நடிப்பதுதான் சிறப்பாம்? என்ன மாய்மாலமான எண்ணங்கள்!"
"போகிறது! நீ ஒருத்தியாவது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாயே!" என்றான் செழியன்.
"ஆணாக வேடம் போட்டு என்னையே ஆலாய்ப் பறக்க வைத்தவள் இல்லையா? அதனால்தான் ஆடவர்களுக்குச் சார்பாக நீ பேசுகிறாய்! உன்னை அப்பொழுதே ஏதாவது செய்து மடக்கி இருக்க வேண்டும்; தப்பித்துக் கொண்டாய்?" என்று செல்லமாக சினந்திட்ட தாமரை, முத்துநகையின் கன்னக் கதுப்பினை அழுத்தித் திருகி அவளைத் தண்டித்திடவே முனைந்துவிட்டாள்.
அந்தப் பெரிய மரக்கலம் முசிறித் துறைமுகப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
தன்னுடைய அறையிலே தனியாக அமர்ந்திருந்த செழியன், பழங்கால நிகழ்ச்சிகளையெல்லாம் மனத்திற்குள்ளேயே அசை போட்டு மகிழ்ந்திட்டான்; அடுத்துத் தன் அருமைத் தாயகத்தினை அடைந்தவுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகளைப் பற்றியும் தன்னுடைய சிந்தனைப் பறவையைச் சிறகடித்துப் பறக்க விட்டான்.
சிறிது நேரத்தில் பெண்கள் இருவரும் அவன் எதிரே வந்து நின்றனர்.
"என்ன முத்துநகை, இது? மறுபடியும் அந்த ஜூனோ எப்படி இங்கு வந்து முளைத்தாள்?" என்று வியப்புடன் வினவினான் செழியன்.
"இந்த மரக்கலத்திலிருந்தேதான் இப்போது வந்து முளைத்திருக்கிறாள்" என்று நகைத்தவாறே விடை பகர்ந்திட்டாள் முத்துநகை.
"ஆமாம்; பழைய ஜூனோ மாதிரிதான் இப்போதும் தெரிகிறேனோ?" - கொஞ்சலாகக் கேட்டாள் தாமரை.
"அசல் அவள் மாதிரியேதான் இருக்கிறாய்! ஆமாம்; ஏன் இந்தப் புதுக்கோலம்-இல்லை, பழங்கோலம்?"
செழியனின் இந்தக் கேள்விக்கு முத்துநகைதான் மறுமொழி கூறினாள்:
"இளவரசன் இளம்பெருவழுதி அவர்களுடைய பகைமையைத் தேடிக் கொள்ளாமல் இருக்க உங்களுக்கு ஓர் அருமையான திட்டம் வைத்திருக்கிறேன் என்று முன்பு கூறினேன் இல்லையா?"
"ஆமாம்."
"அந்தத் திட்டத்திற்கு அடித்தளந்தான் இந்த இத்தாலிய நாட்டு எழிற்கோலம்!"
"உன்னுடைய திட்டம்தான் என்ன? அதை முதலில் சற்று விளக்கமாகத்தான் சொல்லிவிடேன்."
"இவள்மீது பைத்தியமாகவே அலைந்திடும் இளவரசருக்கு இவள் தன்னைக் காதலிக்கவில்லை, உங்களைத்தான் காதலிக்கிறாள் என்ற கசப்பான உண்மையினை எந்த வகையிலும் செரித்துக் கொள்ளவே முடியாது. உங்களோடு இவள் தாயகம் திரும்பிடுவதைக் கண்டாலே அவருக்கு ஆத்திரம் சீறிக்கொண்டுதான் வரும். தம்முடைய அரசியல் ஆதிக்கத்தினைப் பயன்படுத்தி இவளை உங்களிடமிருந்து பறித்துக் கொள்ள முயற்சி செய்தாலும் செய்திடக் கூடும். அத்தகைய நிலைமைகளுக்கு இடம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் எனக்கு ஒரு வழிதான் புலப்படுகின்றது."
"என்ன வழி அது?"
"நாம் பாண்டிய நாட்டை அடைந்தவுடனேயே இளவரசருக்குத் திருமணம் நிகழ்ந்திட நாமே எவ்வாறேனும் ஏற்பாடு செய்திட வேண்டும்."
"அதற்கு அவர் இசைந்தால்தானே?"
"அவரை இசைய வைப்பதில்தான் நம்முடைய திறமையே இருக்கிறது!"
"தாமரை, யவனக்கிழவர் ஒருவரோடு ரோமாபுரிக்கே ஓடிவிட்டாள் என்றும், அங்கே இத்தாலிய வீரன் ஒருவனை மணந்து கொண்டு இன்பமாக வாழ்கிறாள் என்றும் கூறி விட வேண்டும்!"
"அய்யய்யோ! அந்த அவமானத்தையெல்லாம் என்னால் தாங்கிட முடியாது; நான் எதற்கு அப்படியெல்லாம் 'ஒழுக்கங்கெட்டவள்' என்று பெயர் எடுத்திட வேண்டும்?" என்று கொதிப்புடன் சீறினாள் தாமரை.
"சரி! அப்போது இப்படிக் கூறலாம்; நீ யவனக் கிழவரோடு ரோமாபுரிக்குத் தப்பிச் சென்றதாகவும், வழியிலே நடுக்கடலிலே விழுந்து தற்கொலை புரிந்து கொண்டதாயும் கதை கட்டி விடலாம்."
"ஆனால் இந்தக் கதையை அவர் நம்பிட வேண்டுமே?" என்றான் செழியன்.
"அவர் நம்பும்படியாகத்தான் நாம் சில தந்திரங்களைச் செய்திட வேண்டும். யாராவது ஒரு யவனக்கிழவரைப் பிடித்துத் தாமரை தற்கொலை புரிந்து கொண்டதைத் தாம் கண்ணாரக் கண்டதாக இளவரசரிடமே நேரில் வந்து சொல்ல வைத்திடத்தான் வேண்டும். அப்போது தான் அவர் தாமரையைப் பற்றிய ஆசைக் கனவுகளை அறுத்தெறிவார். இன்னொரு பேரழகியை அவருடைய தலையிலே கட்டிவிட வேண்டியதுதான், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் பிறகு தாமரையைப் பற்றிய மோகத் தீ அவரிடம் தானாகத் தணிந்துவிடும் - அவிந்துவிடும். அதுவரைக்கும் இவள் ஜூனோவாகத் தான் நடமாடிட வேண்டும்."
"அடி அம்மா! அத்துணை நெடுங்காலத்திற்கு இந்த இத்தாலிய உடையிலேயேதான் நான் சிறை இருந்திட வேண்டுமா? முடியாது!" என்று எதிர்ப்பினை எழுப்பினாள் தாமரை.
"வேறு என்ன மாற்றுவழி இருக்கிறது? நீ உன் உண்மையான உருவத்தில் - தாமரையாகவே பாண்டிய நாட்டில் அடியெடுத்து வைத்தால் இளவரசர் வாளா விடுவாரா? பிறகு செழியன் அண்ணாவுக்கும் அவருக்கும் தீராப்பகையே கொழுந்துவிட்டு எரியாதா? அதனைப் பயன்படுத்திக் கொண்டு தளபதி நெடுமாறர் குறுக்கே புகுந்து கொலுவேறிட முற்பட்டுவிட்டால் என்ன செய்வது? எல்லா விளைவுகளையும் எண்ணிப் பார்த்துத்தான் நான் இப்படித் திட்டமிடத் துணிந்தேன்."
முத்துநகை இவ்வாறு அழுத்தமாக மொழிந்திடவும் தங்களுக்கும் வேறு வழியெதுவும் தோன்றிடாத அந்த இளங்காதலர்கள் ஒருவரை யொருவர் இரக்கத்தோடு பார்த்துக் கொண்டனர்.
அந்த நெடிய கடற்பயணம் முடிவுற்று, அவர்கள் மூவரும் கொற்கைத் துறைமுகத்தினை மிதித்திட்டபோது அங்கே அவர்களுக்காக முரசங்கள் முழங்கிடவில்லை: முழவுகள் அதிர்ந்திடவில்லை; குயில்கள் கூவிடவில்லை; கொம்புகள் பிளிறிடவில்லை; ஒரு வாழ்த்துப்பா இல்லை; வரவேற்பு மாலை இல்லை.
பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையம்பதியினை அவர்கள் அடைந்திட்ட பொழுதோ-
அங்கே இன்னும் பயங்கரமான இடுகாட்டு அமைதியே இழையோடிற்று?