ரோமாபுரிப் பாண்டியன்/5. சிவனடியார் திருக்கூடம்
5
சிவனடியார் திருக்கூடம்
களைத்துப் போன குதிரை ஆடி அசைந்து நடந்தது. அவளும் பெருமூச்சு விட்டவாறு சோர்வுற்று உட்கார்ந்திருந்தாள். தாமரையையும் வேறு சில பெண்களையும் சந்தித்தது; யவனக் கிழவரிடம் சிக்கியது இவையிரண்டையும் எண்ணிப் பார்க்கும்போது இருங்கோவேளின் இருப்பிடம் அந்தப் பகுதியில்தான் இருக்க வேண்டுமென்றும்; அந்தப் பெண்கள் இருங்கோவேள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்றும் அவள் தீர்மானித்தாள். அவர்களிடம் செழியன் அகப்பட்டிருப்பான். அவனை என்ன பாடுபடுத்துவார்களோ என்ற கவலையும், இந்நேரம் அவனை என்னென்ன செய்திருப்பார்களோ என்ற அச்சமும் அவளைக் கலங்கச் செய்தன.
அந்த இளம் பெண்ணுள்ளத்தில் சோழப் பெருநாட்டு எதிர்காலம் பற்றிய நினைவுகள் சுழன்றோடி, அவளை அறியாமலே ஒரு வெற்றுச் சிரிப்பை வரவழைத்தன. கரிகால் பெருவளத்தான் திண்தோள் கொண்ட பெருந்தீரன். அவனிடமுள்ள படைகளோ, யாராலும் வெல்ல முடியாத பலங்கொண்டவை. அப்படிப்பட்ட ஆற்றலுடையவனைச் சதித் திட்டத்திலிருந்து காப்பாற்றும் பொறுப்புத் தன்னிடம் விடப்பட்டிருப்பதை எண்ணித்தான் அந்தச் சிரிப்பு வெளிப்பட்டது முத்துநகைக்கு!
நீண்ட நெடுநேரங்கழித்து, இறுதியில் புகார் பட்டினத்தின் விளிம்புக்கே வந்து விட்டாள்.
குதிரை மருவூர்ப்பாக்கத்தின் எல்லையை மிதித்தது. வணிகர்களும் ஏனைய தொழில் வல்லாரும் பரபரப்புடன் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வீதியோரத்தில் முத்துநகை இருமருங்கிலும் கண் பார்வையைச் செலுத்தியவாறு போய்க் கொண்டிருந்தாள். அவளது, காதில் "அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்ற முழக்கம் கேட்டது.
குதிரையை நிறுத்திவிட்டுக் கவனித்தாள். பத்துப் பதினைந்து சிவனடியார்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். முத்துநகைக்குத் தூக்கி வாரிப்போட்டது. செழியனைத் தூக்கிச் சென்றதுபோல் வேறு ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட இருங்கோவேளின் ஆட்கள் ஊரில் நடமாடுகிறார்கள் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
முத்துநகை, அடியார் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றாள். அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் எல்லா வீடுகளிலும் சென்று சைவ முழக்கம் செய்தனர். சில பெரிய வீடுகளில் அவர்கள் நுழைந்து பொருள் பெற்று பூரிப்போடு வெளியே வந்தனர்.
முத்துநகைக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. துரோகிகள் தாங்கியிருக்கும் தூய்மையான வேடம் பற்றி அவள் உள்ளத்தில் பெரும் போராட்டம்; எப்படியும் இன்று அவர்கள் முயற்சியைப் பலிக்காமல் செய்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டாள். நாட்டைக் கவிழ்ப்பதற்கு வேடமிட்டுத் திரியும் வேங்கைகளின் உண்மை உருவத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் சோழத் திருநகரின் மக்கள் ஏமாளிகளாய் இருக்கிறார்களேயென்று அவள் மனம் வெதும்பினாள். வாசனைப் பொடியும் குங்குமக் குழம்பும், சந்தனமும், நறுமணப் புகைப் பொருள்களும் கையிலேந்தி விற்பவர்களுக்கும்-அவைகளை வாங்கி மகிழ்கின்றவர்களுக்கும் இடையே முற்றும் துறந்தவர்களைப் போல அந்த அடியார்கள் சென்றது, அவளுக்குப் பெருஞ்சினத்தை மூட்டியது. பட்டும் பவளமும் பொன்னும் மணியும் முத்தும் பொருந்திய அழகு மிழும் அணிகலன்களை விற்பவர்களிடையே கொட்டை கட்டிகளாக வேடமிட்டுக் கொண்டவர்கள் நடமாடுவதை அவளால் சகிக்க முடியவில்லை.
கூவியழைத்து அனைவரையும் ஒன்றுகூட்டி அந்தச் சிவனடியார்களை வளைத்துக் கொள்ளலாமா என்று எண்ணினாள்; இப்படிச் செய்தால் இருங்கோவேளின் சூழ்ச்சி அம்பலமாகாது போய்விடும். அவனும் விழித்துக் கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வழி வகுத்தது போலாகிவிடும் எனப்பயந்து அந்த அடியார்களைப் பின் தொடர்ந்தாள்.
மருவூர்ப்பாக்கம் தாண்டி அந்த அடியார்கள் பட்டினப்பாக்கத்துப் பக்கம் சென்றார்கள். வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நடுங்கல் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் முதலிய இடங்களைக் கடந்து சென்ற அவர்களை அவள் விடாமல் தொடர்ந்தாள். வெள்ளிடை மன்றத்தைக் கண்டதும் அவளுக்குக் கண்கலங்கிற்று. அந்த மன்றத்தின் பெருமையை நினைத்துப் பெருமூச்செறிந்தாள். அந்த மன்றத்தில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குரிய வியாபாரச் சரக்குகளை மூட்டைகளாகக் கட்டி, உரியவர் பெயரை எழுதி அங்கேயே போட்டு விட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கலாம்; அந்த மன்றத்திற்கு கதவுமில்லை; காவலும் இல்லை. அப்படியிருந்தும் ஒரு மூட்டையும் களவு போவதில்லை. இத்துணைச் சிறப்பு மிகுந்த நீதி செழித்திருக்கும் நாட்டில் -ஒழுக்கம் நிறைந்த பூமியில் - துரோகிகள் முளைத்து விட்டார்களேயென்று ஏங்கினாள்.
தன் தந்தையை நினைத்துக் கொண்டாள். அடியார்கள் போகும் வழியைத் திரையிட்டு மறைப்பதுபோல் அவள் கண்களின் முன்னே நீர்த்திரை விழுந்தது.
புத்த விகாரம் முதலிய இடங்களைக் கடந்து அந்த அடியார்கள் சிவன் கோயிலுக்குள்ளே நுழைந்தார்கள்; முத்துநகைக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது அந்த நிகழ்ச்சி. இருங்கோவேளின் ஆட்கள் என்றால் இவ்வளவு தைரியமாகச் சிவன் கோயிலுக்குள்ளே நுழைவார்களா என்று குழப்பமடைந்தாள்.
குதிரையைவிட்டு இறங்கி உள்ளே சென்று கவனித்தாள். அவளுக்கு உண்மை விளங்கிவிட்டது.
அவர்கள் யாரும் இருங்கோவேளின் ஆட்கள் அல்லவர், புகார் நகரைச் சேர்ந்த உண்மையான சிவனடியார்கள்தாம். தன் தவறுக்கு முத்துநகை வெட்கப்பட்டாள். ஆயினும் அவள் சிந்தனை எங்கேயோ ஓடித் திரும்பியது.
ஓலையொன்றை எடுத்து அவசர அவசரமாக அதில் எழுதினாள்:
"அன்பு மிகுந்த சிவனடியார்களே!
வணக்கம். நமது தலைநகரில் எதிரிகள் சிலர் அடியார்கள் வேடத்தில் புகுந்து துரோக வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக நீங்கள் சில திங்களுக்கு வெளியில் வராமல், கோயிலிலேயே இருந்தால் நலம், தயவுசெய்து என்னை யாரென்று கேட்காதீர்கள். வணக்கம்."
அந்த ஓலையை முத்துநகை, அடியார் கூட்டத் தலைவரிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டுப் பதிலுக்குக் காத்து நின்றாள்.
அடியார் கூட்டத் தலைவர் திருநீற்றடியார். நடுத்தர வயதுடையவர்; வாட்டசாட்டமான உருவங்கொண்டவர்; முகத்தில் அருளை வரவழைத்துக்கொண்டுதான் யாரையும் நோக்குவார். காரணம், இயற்கையிலேயே அவர் முகத்தில் அருளைவிட அதிகமாக வீரமும், கம்பீரமும்தான் மின்னிக் கொண்டிருக்கும். அவர் முத்துநகையை உற்றுப் பார்த்தார்.
"விடாதீர்கள் இவனை! இவன்தான் ஏதோ துரோகம் செய்ய வந்திருக்கிறான்!" என்று திருநீற்றடியார் கத்தினார்.
மற்ற அடியார்கள் முத்துநகையைச் சூழ்ந்து பிடித்துக் கொண்டார்கள். அந்தக் குழப்பத்தில் அவள் ஆண் வேடம் கலைந்தது. அழகுமயமான ஆரணங்கு எதிரே நிற்பதை அடியார்களின் தலைவர் கண்டார். "பொன்னுருக்கிச் செய்ததுவோ! புலவர்களின் கற்பனையோ!" என எண்ணத் தக்கவாறு, தனியாக நின்று கொண்டிருக்கும் ஏந்திழையைக் கண்டதும் திருநீற்றடியாரின் இதயம், காய்ச்சிய ஈயமென உருகி, விலா எலும்புகளைத் தீய்த்து, அடி வயிற்றைப் பற்ற வைத்து அத்தனை இரத்தக்குழாய்களிலும் பாய்ந்தோடிற்று.
சூழ நின்ற மாணவர் குழாத்தைத் திருநீற்றடியார் கடைக்கண்ணால் பார்த்தார். அவர்கள் மறைந்தனர். அவளைக் கரம் பற்றி இழுத்தார். ஓங்கி ஓர் அறை கொடுத்தாள் முத்துநகை. நெற்றியில் உள்ள முப்பட்டைபோல் அவர் கன்னத்திலும் அவளது விரல்கள் பதிந்து, இரத்தக் கோடுகளைக் கிழித்தன.
அதற்குமேல் அடியார் பொறுத்துக் கொள்ளவில்லை. தாவிப் பாய்ந்து அவளைத் தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கோயிலுக்குள்ளேயுள்ள இன்னொரு பகுதிக்குள் நுழைந்திட முனைந்தார். அப்போது, "ஏய், நில்!" என்ற குரலோடு ஓர் உருவம் அடியாரின் பிடரியில் ஓர் அடி கொடுத்தது. முத்துநகை வியப்புடன் திரும்பினாள். வேறு யாருமில்லை; அதே யவனக் கிழவர்தான்!
கிழவரை அடியார் எதிர்த்தார். அடியார் கூட்டமே அங்கு வந்துவிட்டது. யவனக் கிழவரின் வாள் அவர்களை நோக்கிச் சுழன்றது. அடியார்கள் கிழவரின் புலிப்பாய்ச்சல் கண்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தார்கள். இதுதான் சமயமெனக் கண்ட முத்துநகை தன் ஆண் உடைகளைச் சரிசெய்து அணிந்து கொண்டு வெளியே ஓடிக் குதிரையில் ஏறிப் பாய்ந்தாள்.
கோயிலுக்குள்ளே என்ன ஆயிற்று எனத் தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல். வெகுதூரம் போய் மீண்டும் கோயில் பக்கமாகத் திரும்பி வந்தாள். அவள் கோயில் பக்கம் வருவதற்கும் யவனக் கிழவர் கோயிலுக்குள்ளேயிருந்து வெளியில் வந்து குதிரையில் ஏறிப் போவதற்கும் சரியாக இருந்தது. யவனக் கிழவர் தன்னைக் கவனிக்காதவாறு பாதுகாப்பாக ஒளிந்து கொண்டாள், ஒரு மண்டபத்துக்கு அருகே!
சற்று நேரம் கழித்துக் கோயிலைச் சுற்றிக் கொண்டு குதிரையை மெதுவாக நடத்தியவாறு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
அவளுக்கு மேலும் மனப்போராட்டம் துவங்கியது. யவனக் கிழவருக்கு தான் யாரென்று தெரிந்திருக்குமா? முத்துநகைதான் ஆண் உடையில் உலவுகிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டால் என்ன செய்வது? இப்படிப் பல கேள்விகள் அவள் உள்ளத்தை நிலைதடுமாறச் செய்தன. கோயிலுக்குள்ளே யவனக் கிழவன் தன்னை முத்துநகையாகத் தான் கண்டான். நான் மீண்டும் ஆண் வேடம் தரித்ததை அவன் பார்த்திருக்க வழியில்லை. இப்படியும் தன்னைத்தானே அவள் தேற்றிக் கொண்டாள்.
யவனக் கிழவர் வேடத்திலேயுள்ள இருங்கோவேள் தன்னை ஏன் காப்பாற்ற வேண்டும்? தன்மீது அவனுக்கு ஏன் இவ்வளவு பிரியம்?
இதற்குப் பதில் கிடைக்கவில்லை.
அந்தத் திருநீற்றடியாரின் போக்கினைக் கண்ட பிறகு அந்தக் கூட்டத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகிறதே! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை விட்டவர்களின் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் இதைவிட அவமான மிக்க உதாரணம் வேறென்ன வேண்டும்? அவள் அலைக்கழிந்தாள். அதற்குள் அவள் வீட்டு வாசலும் வந்துவிட்டது.
குதிரையை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கினாள். வாயிற்புறத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டிருந்தது. மெதுவாக இறங்கிக் கதவோரம் சென்று உள்ளே கவனித்தாள். தந்தையும் அந்த யவனக் கிழவரும் மிகவும் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்ததே தவிரப் பேசிய விஷயங்களைக் கேட்க முடியவில்லை. முத்துநகைக்கு ஆவேசம் பிறந்தது போன்ற ஓர் உணர்ச்சி. உடனே அரண்மனைக்குச் சென்று கரிகாலரிடம் சொல்லி, வீரர்களை அழைத்து வந்து யவனக்கிழவரைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டாள். ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. தன் வீட்டிலேயிருந்து இருங்கோவேளைப் பிடித்துக் கொடுத்தால் தன் தந்தையும் காட்டிக் கொடுக்கப்படு வாரேயென்று அவள் நினைக்கவில்லை! நினைக்க நேரமில்லை அவள் நெஞ்சில் ஊசலாடியதெல்லாம் சோழ நாட்டுப் பெருமையும், பற்றுந்தான்.
குதிரை, அரண்மனை நோக்கி விரைந்தது. கரிகாலனின் மாளிகையில் முத்துநகை நுழைந்தாள். மன்னரை அவசரமாகப் பார்க்க வேண்டு மென்று துடித்தாள். "மன்னர் தனிமையில் உலவிடச் சென்றார். இப்போது இயலாது!" என்று பதில் கிடைத்தது, மெய்க்காப்பாளரிடமிருந்து.
"யாருமில்லாமல் மன்னரைத் தனியாகச் செல்ல விடலாமா?" என்று முத்துநகை கவலையோடு கேட்டாள்.
அதற்கு மெய்க்காப்பாளன், "கரிகாலனைத் தனியாக எதிர்த்து யாரும் வென்றிட முடியாது. அது பற்றிய கவலை யாருக்கும் தேவையில்லை!" என்று பதில் கூறினான்.
உடனே முத்துநகை, "இருங்கோவேளைக் கையுங் களவுமாகப் பிடிக்க இதுவே தருணம்; என்னோடு ஐம்பது வீரர்களை அனுப்ப வேண்டும்!" எனப் பதறினாள்.
மெய்க்காப்பாளன் சற்று யோசித்து, "அரசர் உத்தரவின்றி அனுப்பக் கூடாதே!" என்று தயங்கினான்.
"எனக்குத் தேவையானவற்றை அளிக்குமாறு முன்பே அரசர் கூறியிருக்கிறாரே; இப்போது நான் கேட்பது எனக்காக அல்லவே? இந்த நாட்டுப் பகைவனைப் பிடிக்கத்தானே!" என்று விளக்கமுரைத்து வற்புறுத்தினாள். மெய்க்காப்பாளன், தன் அதிகாரத்தின் கீழுள்ள வீரர்களில் ஐம்பது பேரை முத்துநகையின் பின்னே அனுப்பி வைத்தான். அவள் அவர்களை அழைத்துக் கொண்டு இருங்கோவேளைப் பிடித்துவிட்டோம் என்ற வெற்றிக் களிப்போடு தன் வீடு நோக்கிச் சென்றாள்.
திடுமென அரண்மனை வீரர்கள் ஐம்பது பேர் தெருவிலே வெகு வேகமாகச் செல்வதைக் கண்டு தலைநகரத்து மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். வீட்டுக்குள்ளிருந்தவர்கள் அனைவரும் வீதிக்கு ஓடி வந்தனர். முன்னே சென்று கொண்டிருந்த முத்துநகை குதிரையைப் பிடித்திழுத்து நிறுத்தினாள். அவளுக்கு பெருத்த ஏமாற்றம்? தன் வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த யவனக் கிழவரின் குதிரையைக் காணவில்லை. இறங்கி வியப்போடு வீட்டைப் பார்த்தாள்; வீடு பூட்டப்பட்டிருந்தது.
"தாமதித்து விட்டோம்; தப்பிவிட்டான் துரோகி!" என்று முணுமுணுத்தாள் முத்துநகை. ஆயாசத்தோடு எல்லாக் குதிரைகளும் அரண்மனை நோக்கித் திரும்பின.
முத்துநகை ஓர் ஓலையில், "தாமதம்; அதனால் தப்பி விட்டான்" என எழுதி, அதை மெய்க்காப்பாளரிடம் கொடுக்குமாறு சைகை செய்து ஒரு வீரனிடம் தந்துவிட்டு. வேறு பக்கமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.
பாண்டியன் பெருவழுதி, தலைநகருக்குத் திரும்ப வேண்டுமென்ற கருத்தைச் சோழ மன்னனுக்குத் தெரிவித்ததையொட்டிச் சோழன். பாண்டியனின் இருப்பிடத்திற்கு வந்துசேர்ந்தான். "செழியன் காணாமற் போனதைத் தவிர வேறு எந்தக் குறையும் தனக்கில்லை' யென்று பாண்டியன், சோழனிடம் மனம் விட்டுப் பேசினான்.
"செழியனைப் பற்றியும் சோழ மண்டலத்தைக் கவிழ்க்க நடை பெறும் சூழ்ச்சித்திட்டங்களைப் பற்றியும் தகவல் அறிந்து வரப் பொறுப்பு வாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் “செழியனைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம்” என்றும் கரிகாலன், பெருவழுதிக்கு ஆறுதல் கூறினான். பின்னர் பாண்டிய நாடு, சோழபூமி இரண்டின் உறவு முறைகள் பற்றியும், நட்பு உடன்பாடுகள் பற்றியும் நீண்ட நேரம் பேசினர். தங்களின் ஒற்றுமைக்கும், இரு நாடுகளின் நட்புக்கும் வழி கோலிய புலவர் காரிக்கண்ணனார் பற்றி இருவரும் புகழ்ந்துரைத்தனர்.
"காரிக்கண்ணனாருக்கு ஒரு மகளிருக்கிறாள். அவள் பெயர் முத்துநகை. அவளுடைய திருமணத்தை இந்த நாட்டு இளவரசியின் திருமணம் போல் அவ்வளவு சிறப்பாகச் செய்து முடிக்கப் போகிறேன்" என்றான் கரிகாலன்.
"அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஒன்று; அந்தத் திருமண ஏற்பாட்டை என்னைக் கலக்காமல் துவங்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றான் பெருவழுதி.
கரிகாலனும் சிரித்தபடியே, "அதற்கென்ன ஆகட்டும்!" எனப் பதில் கூறினான்.
பாண்டியன் குழுவினரும், பரிவாரங்களும் நீண்ட தூரம் சென்று கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்த பிறகே கரிகாலன் திரும்பினான். திரும்பியவன் திகைத்திடும் வண்ணம் ஒரு வீரன் மிக வேகமாகக் குதிரையில் வந்து கரிகாலனை வணங்கி நின்றான்.
"யார் நீ" என்று கரிகாலன் கேட்பதற்குள், அந்த வீரன் தன் கையிலிருந்த ஓலைச் சுருளை எடுத்து நீட்டினான். அரசன் அதை ஆவலுடன் வாங்கிப் படித்தான்.
"சோழமன்னர் கரிகாலருக்கு வரைவது யாதெனில்- பாண்டிய வீரன் செழியன் என்னிடம் தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனை உயிரோடு பாண்டியனிடம் நீர் ஒப்படைக்க வேண்டுமானால், என்னுடைய நாட்டை என்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் செழியனைச் சித்திரவதை செய்து அணு அணுவாகக் கொல்ல உத்தேசம்! உடனே பதில்-செயல் மூலம்!"
-இருங்கோவேள் மன்னன்."
கடிதத்தைப் படித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான் கரிகாலன். கடிதம் கொண்டு வந்தவனைக் காணவில்லை. அவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.
கரிகாலனின் கண்கள் சிவந்தன. பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டான். உறையில் கிடந்த வாளின் பிடியைக் கரம் இறுகப் பிடித்தது. சிங்கம் போல் தன் மாளிகைக்கு நடந்து வந்தான். "எங்கே சேனைத் தலைவர்கள்?" என உறுமினான். ஒரு நொடியில் சேனைத் தலைவர்கள் வந்து குழுமி விட்டனர்.
"சோழ நாட்டைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலும், ஏன், சோழ நாட்டுக்குள்ளும், நமது படைகளின் முரசம் ஒலிக்க வேண்டும். இந்த இருங்கோவேள் எங்கு இருந்தாலும் அவனை உடனடியாகச் சிறைபிடித்துக் கொண்டு வர வேண்டும்!" என முழங்கினான் சோழர் திலகம்.
சேனைத் தலைவர்களும் அந்த அவசர உத்தரவுக்கு அடிபணிந்து, தங்கள் வீர வாட்களை எடுத்து அரசனுக்கு வணக்கம் தெரிவித்தனர். அப்போது வெகு வேகமாகப் புலவர் காரிக்கண்ணனார் அங்கு வந்து சேர்ந்தார். "பொறுத்திடுக. மன்னா! பொறுத்திடுக! அமைதி! அமைதி!" எனக் கையுயர்த்தி எதிரே வந்து நின்ற புலவரை நோக்கிக் கரிகாலன். "புலவரே! என்ன சொல்கிறீர்கள்?" எனப் பதறிக் கேட்டான்.
"இருங்கோவேளைப் பிடிப்பதும் கொல்வதும் நமக்குப் பெரிதல்லவே! செழியனை உயிரோடு மீட்பதல்லவா நமது குறிக்கோள்?" என்றார் புலவர்.
"இதோ! அந்த இருங்கோவேளின் பயமுறுத்தல் ஓலையைப் படியுங்கள். இதுவரையில் கரிகாலனை யாரும் மிரட்டியதில்லை. என்னிடம் தோற்றோடி ஒளிந்து கொண்ட இந்தக் கோழை மிரட்டுகிறான். இவனுக்கு நான் அஞ்சிச் சாவதா? முடியாது; முடியாது. சோழ நாட்டு வீரம் சோரம் போய்விடவில்லை. நம் நாட்டு வீரர்கள் வாள் பிடித்துப் பழகியவர்களே தவிரப் பகைவரின் தாள் பிடித்துப் பழகியவர்களல்லர். புலிக்கொடியின் நிழலிலே போர்க்குரல் கொடுத்த பரம்பரை. விழுப்புண் பெற்றுப் பெருமை கொள்ளுமே தவிர, எதிரியின் காலில் விழுந்தல்ல. கரிகாலனை யாரும் தடுக்க வேண்டாம். ஓரிரு நாட்களில் அந்த உன்மத்தன் இருங்கோவேளின் தலை என் முன்னே தாழ்ந்திடல் வேண்டும். அதுவரை எனக்கு வேறு நினைவே இல்லை."
-எனக் கர்ச்சனை செய்து கிளம்பினான் கரிகாலன்.
புலவர் புன்னகை புரிந்தவாறு அவனை அணுகி, "சோழப் பெருவேந்தே? பெருவழுதிப் பாண்டியருக்கு அளித்துள்ள வாக்குறுதி என்ன? எப்படியும் செழியனை மீட்டுக் கொடுப்பதாகத்தானே? அதை மறந்து விடலாமா? தங்களுக்கு இருங்கோவேள் எழுதியது போலவே பாண்டிய மன்னருக்கும் ஒரு மடல் அவன் எழுதவில்லையென்று தாங்கள் எண்ணுகிறீர்களா? பெருவழுதிக்கும் இப்படியொரு கடிதம் வந்திருக்கிறது!"
"அப்படியா?" - கரிகாலனுக்கு ஒரே வியப்பு!
"ஆமாம்; பெருவழுதிப் பாண்டியன் திடீரெனத் தலைநகருக்குப் புறப்பட்டதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?"
"என்ன காரணம் புலவரே?"
"இருங்கோவேள் அவருக்கும் எழுதியிருக்கிறான்; அதாவது பாண்டியநாடு, சோழநாடு இரண்டின் நட்புரிமைக்குக் குந்தகம் உண்டாக்குவதற்காகவே இந்த ஏற்பாடு!"
"எப்படிப் புலவரே?"
"இது புரியவில்லையா! பறித்துக் கொண்ட நாடுகளைக் கொடுத்தால் செழியனைத் திரும்பத் தருவேன்; இல்லையேல் செழியனைக் கொன்றுவிடுவேன் என்பது இருங்கோவேளின் எச்சரிக்கை!"
"ஆமாம்!"
"நாடுகளைத் திரும்பக் கொடுத்துச் செழியனை ஏன் மீட்டுத் தரக் கூடாது என்று பாண்டியன் நினைக்கக்கூடும். தாங்கள் அப்படிச் செய்யாவிட்டால் பாண்டியருக்குத் தங்கள் மீது பகை ஏற்படக்கூடும். அந்தப் பகையை மூட்டிவிட்டுத் தன் சூழ்ச்சியை வெற்றி பெறச் செய்யலாம் என்பது இருங்கோவேளின் நினைவாக இருக்கும். இந்தச் சங்கடமான நிலையைச் சமாளிக்க முடியாமல்தான் பாண்டிய மன்னர் உடனடியாகத் தலைநகருக்குப் புறப்பட்டுவிட்டார்!"
"சரி.. அப்படியானால் இப்போது என்ன செய்யலாம்?"
"சூழ்ச்சியைச் சூழ்ச்சியினால் தான் முறியடிக்க வேண்டும்!"
"இருங்கோவேளின் நிபந்தனைப்படி அவனது நாடுகளைத் திரும்பக் கொடுத்துவிடுவதா?"
"நான் அவ்வாறு கூறவில்லை மன்னா! படை வீரர்களைப் பல திசைகளிலும் அனுப்பி அவனுக்குக் கோபத்தை மூட்டினால், திடீரென்று அவன் செழியனைக் கொன்று விடவும் கூடும்!" "அப்படியானால் இதுபற்றிப் பாண்டிய மன்னரின் யோசனையைக் கேட்கலாமா?"
"அவருக்கே எதுவும் புரியாமல்தானே தங்களுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாதென்று புறப்பட்டு விட்டார்!"
"புலவர் அவர்களே! இந்த ஓலை நமது நாட்டின் வீரத்துக்கு விடப்பட்ட அறைகூவல்! இதை நான் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். இருங்கோவேளுக்கு நாடும் திரும்பக் கிடையாது; செழியனையும் அவன் கொல்ல முடியாது" எனக் கொக்கரித்தான் கரிகாலன்.
அப்போது, வீரன் ஒருவன் மாளிகைக்குள் நுழைந்தான். கரிகாலன், அவனை அடையாளம் தெரியாமல் வியப்புற்று விழித்தான். அருகேயிருந்த மெய்க்காப்பாளன் கரிகாலனின் காதில், "வருவது முத்துநகைதான்!" என்று ரகசியமாகச் சொல்லவே, கரிகாலன் புலவரை ஒருமுறை பார்த்துவிட்டு எச்சரிக்கையாக இருந்து கொண்டான். புலவருக்கு எதிரே வருவது தன் மகள் என்று அடையாளம் தெரியவில்லை.
முத்துநகை கரிகாலனிடம், 'ரகசியமாகப் பேச வேண்டும்' என முகக் குறிப்புக் காட்டவே, அவன் புலவரையும் மற்றவர்களையும் பார்த்து, "சரி; நான் ஒற்றனிடம் பேச வேண்டியிருக்கிறது... எல்லாரும் போகலாம்; தேவையானால் மீண்டும் அழைக்கிறேன்" எனக் கூறி விட்டுப் புலவர் பின்னால் ஏழடி தூரம் நடந்து சென்று அவரையும் வழியனுப்பிவிட்டு, முத்துநகையுடன் மாளிகைக்கு உட்புறம் சென்றான். தன் தந்தைக்கு எதிரே தெரியாதவளைப்போல் நடந்து கொண்டோமே என்று முத்துநகை நினைக்கிறாள் என்பதை, அவளது கலங்கிய கண்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
கரிகாலன் அவளைப் பார்த்து, "நீ மிகவும் திறமைசாலிதான்! அடையாளமே தெரியவில்லையே!" என்று வியந்து பாராட்டினான்.
"முதலில் என்னைப் பற்றிச் சந்தேகப்பட்டீர்களே; பார்த்தீர்களா உங்களையே ஒருகணம் திகைக்க வைத்து விட்டேன்!" என்றாள் முத்துநகை சிரித்துக் கொண்டே!
"எல்லாம் சரி, குரல் உன்னைப் புரியவைத்துவிடுகிறதே!" என்றான் அரசன்.
"அதற்காகத்தான் ஊமை நாடகம் ஆடுகிறேனே! மெளன நோன்பு கடைப்பிடிப்பதாகக் கூறிவிட்டு எல்லாப் பேச்சு வார்த்தைகளையும் எழுத்தாணியாலேயே பூர்த்தி செய்கிறேன்!"
"போகட்டும்! உன் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றியளித்திருக்கின்றன? என்னிடம் ஏதாவது கூற முடியுமா?"
முத்துநகை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள்.
"பயப்படாதே! இங்கு யாரும் இல்லை. தைரியமாகச் சொல்!"
"இருங்கோவேளின் இருப்பிடத்தை அநேகமாகத் தெரிந்து கொண்டு வந்துவிட்டேன்!"
"எப்படி? எப்படி?"
"இந்த வேடத்தால், விசித்திரம் ஒன்று நடந்துவிட்டது. முதல்நாள் காடுமேடெல்லாம் அலைந்து ஒரு அருவிக் கரையில் தங்கினேன்; அப்போது ஒரு பெண் வந்தாள். வந்தவள் என் மீது காதல் கொண்டாள்!"
"என்ன? காதல் கொண்டாளா? பைத்தியக்காரி. அவள் யார்?"
"அவள் பெயர் தாமரை?"
"தாமரை! அழகான பெயர்தான்!"
"அந்தத் தாமரை மலர்ந்த தடாகம் எது என்பது எனக்கு முதல்நாள் தெரியாமல் போய்விட்டது. அதற்குள் அவள் பிரிந்துவிட்டாள். அவள் விருப்பப்படி மறுநாளும் அங்கு சென்றேன்!"
"ஓகோ, அவளும் வந்தாளாக்கும்?"
"வராமல் இருப்பாளா? வந்தாள் தன்னந்தனியாக, அந்தப் பொன்னவிர் மேனியாள் நான் இலட்சியத்திற்காகப் பேசாத நோன்பு இருப்பதாக முதல் நாளே சொல்லி விட்டேன்! அதைப் பின்பற்றி மறுநாளும் என்னுடைய ஊமை நாடகத்தை ஆரம்பித்தேன். என்னைக் கண்டது முதல் அவள் இதயத்தைப் பறிகொடுத்து ஏங்கித் தவிப்பதாகக் கூறி அழுதாள்!"
"உம்... வழக்கமான காதல் துவக்க விழா! பிறகு?"
"பிறகென்ன...? நானோ விடுவிக்க முடியாத சிக்கலில் அகப்பட்டுக் கொண்டேன். அவள் காதல் தாகத்தைப் பார்த்தபோது, 'அம்மா! நானும் உன்னைப் போல ஒரு பெண்தான்' என்று கூறி விடலாமா என்று யோசித்தேன். அய்யோ, பாவம்! அவள் இருதயம் வெடித்துவிடுமே என்று பயந்து எதுவும் கூறாமல் இருந்து விட்டேன்!"
"அதிருக்கட்டும்! அவள் யாரம்மா?"
"அதுதானே மிக முக்கியம்? அதைத் தெரிந்து கொண்ட பிறகுதானே அவளை நானும் காதலிப்பதாக உறுதி செய்து கொடுத்திருக்கிறேன்!"
"அப்படியென்றால்?"
"அரசர் பெருமானே! அவள் நமது பகைவனின் தங்கை! ஆமாம்-இருங்கோவேளின் கூடப்பிறந்தவள்!"
"ஆ! அப்படியா?"
"எப்படியோ நான் பகைவனின் இருப்பிடத்துக்குள் நுழைய வழி ஏற்பட்டு விட்டது. நாளைய தினம் அவள் என்னை மீண்டும். சந்திப்பதாகக் கூறிப் பிரிந்திருக்கிறாள். தன் அண்ணனிடம் ஏதாவது பொய் சொல்லித் தந்திரம் செய்து என்னை அவள் கூடவே அழைத்துப் போவதாகவும் கூறியிருக்கிறாள்.
"இருங்கோவேளின் தங்கையும் அவனைப் போலவே சூழ்ச்சிக்காரியாக இருந்து, உன்னை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது முத்துநகை?"
"பயமே தேவையில்லை-நான் அவர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு வெற்றி பெறுவேன். சோழத் திருநாட்டின் மேன்மைக்கு குழிதோண்ட முயல்பவன் யாராயிருந்தாலும். என் உயிரை பணயமாக வைத்து அவனை அழிக்க முற்படுவேன். இந்த உறுதி என்னைக் காப்பாற்றும்!"
"முத்துநகை! இருங்கோவேள் எழுதியுள்ள மிரட்டல் கடிதத்தைப் பார்!" என்று சோழன் அவளிடம் ஓலையைக் கொடுத்தான். அதை அவள் படித்துப் பார்த்துவிட்டுத் திரும்ப அரசரிடமே கொடுத்தாள்.
"தந்திரத்தை தந்திரத்தால்தான் வெல்ல வேண்டும். படை கொண்டு மோதினால் செழியனை உயிரோடு பெறுவது கஷ்டமாகி விடக் கூடும். எதற்கும் நான் அடுத்த முறை வந்து தங்களைச் சந்திக்கும் வரையில் பொறுத்திருங்கள்." என்று கூறிவிட்டு அரசரிடம் விடைபெற்று, முத்துநகை தன் குதிரையில் ஏறிப் புறப்பட்டாள்.