உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/50. இறுதி முறி

விக்கிமூலம் இலிருந்து

50

இறுதி முறி

ரண்மனைக்குள் நுழைந்திட்ட செழியன் நொடிப் பொழுதில், தன்னை - தன் வயதை தூதுவனாகச்சென்று திரும்பிடும் தன் பொறுப்பை, மதிப்பை - எல்லாவற்றையுமே மறந்துவிட்டான். ஏன்? தனக்குப்பின்னால் இரண்டு இளங்காரிகைகள் வந்து கொண்டிருப்பதையுங் கூட மறந்தே விட்டான். அவனுக்கு எங்கிருந்து வந்ததோ அந்தத் துயரத்தின் வெறி - ஆவேசம்! பல நாட்கள் தன் தாய்ப் பசுவினைக் காணாமல் தவித்திட்ட பச்சிளங் கன்றினைப் போல, ஒரே துள்ளலாக அவன் ஓட்டம் பிடித்திட்டான், பாண்டிய வேந்தன் படுத்துக் கிடந்திட்ட த்தினை நோக்கி.

அங்கோ-

யவனர்களால் பரிசாக வழங்கப்பெற்ற அழகான பாவை விளக்கு ஒன்று அமைதியாக ஒளியை உமிழ்ந்த வண்ணம் இருந்தது.

வாழைப் பூவிலே முதிர்ந்து தடித்த மடல்களையெல்லாம் உரித்தபிறகு இறுதியிலே எஞ்சி நிற்குமே, முக்கோண வடிவமான மஞ்சள் வண்ணப் பூமொட்டு, அப்படித்தான் அசையா ஒளிப்பிழம்பாய், அந்தச் சுடர்கொழுந்து எரிந்தது.

பெருவழுதிப் பாண்டியனின் தலைமாட்டுப் பக்கத்திலே ஏற்றி வைக்கப் பெற்ற அந்த விளக்கின் சந்தன வெளிச்சம் அவனை எட்டிப் பார்த்திட்ட போதிலும் அதனையும் மீறி அவனது சாவின் நிழலே படர்ந்து கிடந்தது.

இமைக்கதவுகளோ கவிழ்ந்து கிடக்கும் பழுப்பேறிய கிளிஞ்சல்களைப் போல. மூடியே இருந்தன. வாயிதழ்களோ, செத்துப்போன கெளுத்திமீன் குஞ்சுகளாக வெளுத்துத் தொங்கும் மீசைகளுக்குக் கீழே சற்றே கிளர்ந்திருந்தன.

எனினும் ஓடி ஒடுங்கிடப் போவது இப்போதோ இன்னுஞ் சற்று நேரங்கழித்தோ என்று அறுதியிட முடியாதவாறு மூச்சு மட்டும் மிகுந்த அடக்கத்தோடு இழையோடிற்று.

மன்னன் படுத்துக் கிடந்திடும் கடடிலை ஒட்டி, ஒரு பக்கத்தில் சோழப் பேரரசன் கரிகாலனும், மறுபக்கத்தில் புலவர் காரிக்கண்ணனாரும் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

கரிகாலனுக்குப் பின்னால் உள்ள பெருந்தூணுக்குத் தன் வலக் காலை முட்டுக்கொடுத்திட்டவாறு அதனோடு சாய்ந்து தலை கவிழ்ந்து நின்றிருந்தான் இளவரசன் இளம்பெருவழுதி. அவனுடைய விழிகள் அருவிகளை வழியவிட்ட சுவடுகள் அவனது கன்ன மேடுகளில் நன்கு தெரிந்தன.

கூடத்தில், ஆங்காங்கே அமைச்சர்கள், அரையர்கள், படைத் தளபதிகள், நாடு வகை செய்வோர், வரியியலார், மருத்துவர், புரருரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் - துயரங்கப்பிய முகத்தோடு நின்றிருந்தனர்.

தளபதி நெடுமாறன் மட்டும் ஓரிடத்தில் நில்லாமல் பொறுமை இழந்தவனாக - அமைதி அழிந்தவனாக - அங்குமிங்குமாக நடை பழகிக் கொண்டிருந்தான்.

கண்ணீரும் கம்பலையுமாக, அந்தக் கூடத்தினுள் ஓடி வந்திட்ட செழியன், தன்னையும் மீறி, "அரசே! அரசே!" என்று கூவிவிட்டான்.

அந்தத் தழுதழுத்த குரலைக் கேட்ட அளவிலேயே அங்கிருந்த அத்தனை பேருடைய உடலுமே சட்டென்று சிலிர்த்து விட்டன; அவர்களுடைய கண்களும் குளமாகி விட்டன.

ஆனால் நெடுமாறன் மட்டும் அத்தகைய சலனம் எதற்கும் ஆட்பட்டுவிடாதவனாக, பாய்ந்து வந்திட்ட செழியனின் குறுக்கே போய் மறித்துக்கொண்டு. "இப்படியெல்லாம் கூச்சல் போடாதே! மன்னர் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்; அவரது அமைதியைக் கெடுத்திடலாமா?" என்று தணிந்த குரலில் தனக்குரிய அதிகாரத்துடன் பகர்ந்திட்டான்.

"நெடுமாறரே! செழியனைச் சற்று அருகே வரவிடுங்கள்! எவ்வளவோ தொலைவிலிருந்து வந்திருக்கின்ற அவன் இந்தக் கடைசி நேரத்திலாவது தனக்கு வாழ்வளித்திட்ட அரசனின் முகத்தினை ஆசை தீரப் பார்த்திட வேண்டமா?" சற்று அழுத்தமான குரலிலேயே அறைந்திட்டான் கரிகாலன்.

உடனே ஒதுங்கி நின்று செழியனுக்கு வழிவிடுவதைத் தவிர, நெடுமாறனுக்கு வேறு வழியில்லை.

கட்டிலின் அருகே சென்று, கரிகாலனை ஒட்டி நின்றிட்ட செழியன், பற்றி உலர்ந்திட்ட பெருவழுதிப் பாண்டியனின் முகத்தினைக் காணக் காணத் துயர் தாளாமல், சிறு குழந்தைப் போல் தேம்பித் தேம்பி அழ முற்பட்டுவிட்டான்.

எத்தனையோ போர்க் களங்களிலே எதிரிகளை முறியடித்து வெற்றி மங்கையினைத் தழுவி, வேப்பம்பூ மாலையினைச் சூடிக் களித்திட்ட வீரத்திலகம் - பாண்டியப் பேரரசன் இப்படிப் பிணியென்னும் களத்திலே 'இறப்பு' என்னும் கொடும்பகையோடு இறுதிப் போர் நிகழ்த்திடும் அவலக் காட்சியினைக் கண்டிடும்பொழுது செழியனால் அழாமல் எப்படி இருந்திட முடியும்?

கரிகாலன், தன் முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, "இதோ செழியன் வந்துவிட்டான்! செழியன் வந்துவிட்டான்!" என்று உரக்கவே குரல் கொடுத்திட்டான்.

பின்னர், பெருவழுதியின் செவி மடலிலே தன் உதடுகளைப் பொருத்தி ஏதோ ஒரு சொல்லினை உரைத்திட்டான். அந்த ஒரு சொல்லுக்கு என்னதான் மந்திர சக்தியோ, மாய வித்தையோ?

உடனே, பாண்டிய வேந்தனின் இமைக்கூடுகள் மெல்லத் திறந்தன. நிலம் பார்த்திட்ட வெளிறிய விழிகள் செழியனின் முகத்தினைத் துழாவிப் பிடிக்க முயன்றன.

சட்டென்று அவரது பார்வையிலே மின்னித் தெறித்திட்டது ஓர் ஒளி வீச்சு!

முன்பொருநாள், "நெடுந்தூரத்திற்கு அப்பால் உள்ள செழியனை எவ்வாறு கடிதில் கொணர்ந்திட முடியும் என்பதுதான் கவலையினை அளிக்கின்றது..." என்று புலவர் காரிக்கண்ணனார் தயக்கத்துடன் மொழிந்திட்ட போது -

"ஏன்? அவன் வருகின்றவரை இந்த உடம்பிலே என் உயிர் தங்குமோ என்னவோ என்று அஞ்சுகிறீர்களா?... ஆனால், புலவர் அவர்களே! நான் இப்பொழுது கூறுவதை நன்றாக உங்கள் மனத்திலே பதிய வைத்துக் கொள்ளுங்கள். செழியனின் முகத்தினைக் கடைசியாக ஒரு முறையேனும் கண்டிடாமல் என் கண்கள் கண்டிப்பாய் மூடிட மாட்டா..." என்று பெருவழுதி உயிரோடு இயம்பினானே அந்தப் பெருநம்பிக்கை நிறைவேறிவிட்ட பெருமிதம் சுடர்விட்டது, அவனு டைய அந்த ஆழமான பார்வையில். அடுத்த கணமே-

"அய்யோ! அரசே!" என்று அலறியவாறே அவன் மார்பு மீது விழுந்திட்டான் செழியன்.

'மலைசாய்ந்த(து) அய்யோ! எம்
மாத்தமிழின் உள்ளீரல்

குலைசாய்ந்த(து) அய்யோ! செங்
கோலோச்சும் செயல் வீரத்
தலைசாய்ந்த(து) அய்யோ ! இத்
தாரணியே புகழ்நட்புக்
கலைசாய்ந்த(து) அய்யோ!' - என்றே
கதறல் வெடித்ததுவே!

ஊமைகளும் ஆமைகளும்
உயர வைத்த சீரேணி!
பூமாதின் பொறுமையெலாம்
பொலிந்திட்ட திருமேனி!
ரோமாபுரி வரைக்கும்
தமிழ்மணக்கச் செய்த மலர்!
பூமாதின் வயிற்றினுள்ளே
புகல்தேடி மறைவதுவோ?

வடிக்காத மழையையெலாம்
வடித்தனவே விழிமுகில்கள்!
துடிக்காத அலைகளெல்லாம்
துடித்தனவே மனக்கடலில்!
பிடிக்காத அழுக்காற்றுப்
பிள்ளைகளும் குமுறினவே!
வெடிக்காத இதயமுண்டோ
பெருவழுதி இறந்ததனால்?

'வெள்ளியம்பலம்' என்னும் மதுரை மாநகரிலே துஞ்சிய அந்தப் பெருவழுதியின் மறைவினைக் கேட்டுப் பாண்டிய மண்டலம் மட்டுமா, பழந்தமிழகம் முழுவதுமே துயர இருளிலே புதைந்தது; அழுகைக் கடலிலே அமிழ்ந்தது!

ஆனால், அந்தத் துயரத்தின் வடுக்கள் மறைந்திடுவதற்கு முன்பே - அழுகையின் ஓலம் அடங்கிடுவதற்கு முன்பே... ஏன், பெருவழுதிப் பாண்டியனின் சவ அடக்கம் முடிவுற்றதுமே - தலைநகரிலே கொம்பு சுற்றிக் கொடூரமாக வீசத் தொடங்கி விட்டது அரசியல் புயல்.

ஓர் அரசர் இறந்துபட்டதும் எல்லா நாடுகளிலுமே ஏற்படக்கூடிய வாடிக்கையான நெருக்கடி நிலையே மதுரை மாநகரிலும் ஏற்பட்டது என்றாலும், அரியணை ஏறுவதற்குத் தளபதி நெடுமாறன் வெளிப்படுத்திட்ட அடங்காத பேராசை பொதுமக்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியினையே அளித்திட்டது.

பொதுவாக, ஒரு மன்னர் இயற்கை எய்தியதும் அவரது பிள்ளை பட்டம் சூட்டிக் கொள்வதே அக்காலத்தில் மரபு. மன்னருக்கு வழித் தோன்றல் - வாரிசு யாரும் இல்லையென்றால்தான் பிற ஏற்பாடு களுக்கு இடம் உண்டாகும்.

இங்கோ, பெருவழுதியின் பிள்ளை, இளவரசன் இளம் பெருவழுதி மலைபோல இருக்கிறான். அவனை நெட்டித் தள்ளிவிட்டுத் தானே அரியணையில் ஏறுவதற்கு நெடுமாறன் அடம்பிடிப்பதைக் கண்டிடும் பொழுது யாருக்குத்தான் அதிர்ச்சியும் ஆத்திரமும் உண்டாகமாட்டா?

ஆனால், குழப்பநிலை மிகுந்த உச்சக் கட்டத்தை எட்டிட, கடைசி நேரத்தில் கரிகாலன் - காரிக்கண்ணனார் முன்னிலையில் தன் பேராசைக்கு அவன் காட்டிய காரணங்கள் எல்லாரையும் வியப்படையச் செய்ததோடு திடுக்கிடவும் வைத்துவிட்டன!

...பெருவழுதிப் பாண்டியர் உயிரோடு இருந்தவரையில் நான் அவருடைய நிழலாகவே தொடர்ந்திருக்கிறேன் துணை புரிந்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் தென் வெள்ளாற்றங் கரையினை ஒட்டிய 'முத்தூர் கூற்ற' த்தினை ஆண்டிட்ட வேளிர்குலக் குறுநில மன்னன் நம்முடைய பாண்டிய வேந்தரின் உயிரினைப் பறித்திட முயன்றதை இன்று பலர் மறந்திருக்கலாம். அப்போது அவருக்கு அரணாக, கேடயமாக, தற்காப்பு அளித்துக் காப்பாற்றியவர் யார்? நானேதான்... என்னுடைய தீரச் செயலையும், அரசரிடம் நான் கொண்ட ஆழ்ந்த பற்றுதலையும் மெச்சிய அவர், 'நெடுமாறா! உன்னைப்போல் உற்ற துணை இந்த உலகில எனக்கு எவருமே இல்லை. ஆகவே, என் அருகிலேயே நீ எப்போதும் இருந்திட வேண்டும். அதற்குத் தக்கவாறு உன்னை உரிய நேரத்தில் தளபதியாக உயர்த்தி விடுகிறேன்; அது மட்டும் அல்ல: என்னைச் சாவு வந்து நெருங்கிடும்பொழுது நீ தான் இந்த பாண்டிய மண்டலத்தை எனக்குப் பின்னர் ஆள்கின்ற அருகதை படைத்தவன் என்று 'இறுதிமுறி' எழுதி வைத்துவிடுகிறேன்' என்று வாக்கு அளித்திட்டார்.

ஆனால், அவருக்கு முடக்குவாத நோய் வந்து, கைகளிலே நடுக்கம் ஏற்பட்டுவிட்டதால் கடைசிக் காலத்தில் தாம் சொன்னவாறு "இறுதிமுறி" எழுதிவைத்திட முடியவில்லை. மற்றபடித் தாம் இயம்பியவாறே அவர் என்னைத் தளபதியாக உயர்த்தி வைத்ததை எல்லாருமே அறிவார்கள். ஆகவே மறைந்த மன்னரின் எண்ணப்படி இந்த மாமண்டலத்தை இனிமேல் ஆளவேண்டியவன் நானே என்பதில் எத்தகைய ஐயப்பாட்டிற்கும் இடம் இருக்கவே தேவை இல்லை; நீங்கள் எல்லாருமே இளவரசன் இளம்பெருவழுதிதான் அரியணைக்கு உரியவர் என்று

எண்ணிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், மிகச் சிறிய கொற்கைப் பட்டினத்தையே சரியாக நிர்வாகம் செய்ய முடியாத அவர், இந்த மாபெரும் பாண்டிய நாட்டையே எங்ஙனம் கோலோச்சிட இயலும்? மேலும், கவிதைகள் புனைவதிலும், கடற்பயணம் போவதிலும் காலங்கழித்திடுகின்ற அவர், அரசியல் கலையிலே எவ்வாறு அரிமாவாகத்திகழ்ந்திட முடியும்? போதாதற்குக் காதல் நினைவுகள்- இருங்கோவேளின் தங்கை தாமரையின் மேலுள்ள தணியாத மோகம் வேறு அவருடைய சிந்தனையைச் சிதற அடித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அவரே அரியணை ஏறுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் பிறகு இந்நாடும் மக்களும் நலம் பெற்றிட முடியுமா? அத்தோடு, இளம் பெருவழுதியைப் பற்றிய இன்னோர் உண்மையும் அண்மையில்தான் என் செவிக்கு வந்து எட்டியது. அதனைக் கேள்வியுற்றால் நீங்கள் அத்தனை பேருமே அதிர்ச்சியால் மயங்கி விழுந்திட்டால் கூட நான் வியப்படைந்திட மாட்டேன்" என்று பெரும் பீடிகையோடு நிறுத்தினான் நெடுமாறன்.

அவனுடைய கூற்றினைக் கேட்டுக் கரிகாலன் மெல்ல நகைத்திட்டான். "உண்மையானதோ பொய்யானதோ ஒரு செய்தியினைக் கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியோ மயக்கமோ அடைகின்ற அளவுக்கு எங்கள் இதயங்கள் அத்துணை பலவீனமானவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வேடிக்கைதான்! அத்தகைய உள்ளத்தொய்வினை -பக்குவப்படாத மனச் சோர்வினை எப்போதோ கடந்து வந்திருப்போர் என்பது முதுமை ததும்பும் எங்கள் முகத்தினைப் பார்த்தாலே தெரிந்திட வில்லையா? ஆகவே, என்ன உண்மையானாலும் நீங்கள் தாராளமாகத் தயக்கமின்றி வெளியிடலாம்" என்றார் அவர்.

உடனே தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு நெடுமாறன் இவ்வாறு உரைத்திட்டான்.

"இளம்பெருவழுதி, மறைந்த பெருவழுதிப் பாண்டியரின் உண்மையான மகன் இல்லை; ஆகவே அரியணைக்கு உரிமை கோரிட அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை!"

திடுக்கிட வைத்திடும் என்னும் கணிப்போடு வெளி வந்திட்ட இந்தச் சொற்கள் சோழப் பேரரசரின் முகத்திலோ, புலவர் காரிக்கண்ணனாரின் முகத்திலோ எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்திடவில்லை; மாறாகப் பொருள் செறிந்த பெரிய முறுவல் ஒன்றினையே விரிந்திடச் செய்தன.

புலவர் காரிக்கண்ணனார் இப்போது தாம் எண்ணுவதை இயம்பிட முற்பட்டார்;

"தளபதியாரே! எங்களுடைய நோக்கம் எல்லாம், பெருவழுதிப் பாண்டியரின் இறுதி ஆசை என்னவோ அதனை நிறைவேற்றிட வேண்டும் என்பதுதான். ஆகவே, எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களான நீங்கள் அரியணை ஏறினால் என்ன? இளவரசன் இளம்பெருவழுதி அரியணை ஏறினால் என்ன? எல்லாம் எங்களுக்கு ஒன்று தான்!"

ஆனால் புலவர் விடுவாரா?

"எழுத்து மூலமாக அப்படி ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? ஓலைச்சுவடி இருக்கிறதா?"

"அதைத்தான் அவரால் எழுத முடியவில்லை என்று முன்பே சொன்னேனே! ஆமாம், நீங்கள் மட்டும் எப்படி அவரது இறுதி ஆசையைத் தெரிந்து கொள்ள முடியும்? அதற்கு என்ன ஆதாரம் காட்டிட இயலும்?"

"எங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லையென்றால் உங்களிடம் வீணாக வாயைக்கொடுப்போமா? பெருவழுதிப் பாண்டியர் தம் கைப்பட எழுதி வைத்துள்ள 'இறுதி முறி’0 ஓலைச்சுவடி எங்கள் கைக்குக் கிட்டியுள்ளது" என்று சிரித்தவாறே மொழிந்திட்டார் காரிக்கண்ணனார்.

"அவர்தாம் எழுதியிருப்பாரா, இல்லை வேறு எவராவது பொய்யாக வரைந்திருப்பார்களா என்கிற ஐயப்பாடு உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அந்த ஓலைச்சுவடிகளை உங்கள் கண்ணாலேயே நன்றாகப் பார்த்து தெளிவடைந்து கொள்ளலாம்; ஆனால், இன்றைக்கல்ல; நாளை அரண்மனை மண்டபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெருவழுதி யாரின் 'இறுதி முறி' ஓலைச்சுவடி படிக்கப்படும். அதிலே எவ்வாறு குறிப்பிட்டுள்ளதோ அவ்வாறே அரியணைக்குரியவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். அது தானே முறை!" என்று முத்தாய்ப்பு வைத்திட்டான் கரிகாலன்.

புலவர், புரவலர் இருவரும் புகன்றதைக் கேட்ட தளபதி நெடுமாறனுக்குப் பொறியே கலங்கினார்போல் தலைசுற்றிக் கொண்டு வந்தது.

மறுநாள் காலை உதயசூரியனின் ஒளிக்கதிர்களிலே ஒரு தனிக் களையே சுடர்விட்டது!

பாண்டியப் பெருநாட்டுத் தலைநகரமே பரபரப்போடு சுறுசுறுப்போடு - சுழன்றிட்டது. தங்களுடைய அடுத்த மாமன்னர் யார் என்று அறிந்திடுவதற்கு ஆர்வம் கொண்டிட்ட பொதுமக்கள், அணைகடந்த வெள்ளமென அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் நிரம்பி வழிந்திட்டனர்.

வண்ண விளக்குகளாலும் வகைவகையான மலர்ச்சரங்களாலும் எளிமையான முறையிலே அலங்கரிக்கப்பட்டிருந்தது, அந்த அரண்மனைக் கொலுமண்டபம்.

ஆயினும் -

முத்தனைய விண்மீன்கள் எத்தனை கோடிதான் மோகப்புன்னகை வீசிடினும் நிலவில்லா வானுக்கு நெஞ்சினைக் குளிர வைத்திடும் பொலிவேது? - வலுவேது? பெருவழுதிப் பாண்டியன் இல்லாத அந்த எழிலார்ந்த பெருமண்டபமும் துயரமூச்சினைச் சுமந்திட்டதாகக் களையிழந்தே காணப்பட்டது.

விளக்கில்லா மாடம் என வெறுமையுற்றுக் கிடந்திட்ட அரியணையைப் பார்த்திடும்பொழுது சிலருக்கு அழுகையே பீறிட்டுக் கொண்டு வந்துவிட்டது. மீண்டும் ஒரு புதிய விளக்கு அங்கே புத்தொளி வீசிடத்தான் போகிறது - அதற்காகத்தான் குழுமியிருக்கிறோம்... என்கிற உணர்வுகூட அவர்களை விட்டுச் சற்றே விலகிவிட்டது.

முதல் நிகழ்ச்சியாகக் கரிகாலனும் மற்றவர்களும் எழுந்து நின்று மறைந்த மாமன்னனுக்குச் சிலநொடிப் பொழுது தங்கள் இறுகி மூடிய உதடுகளால் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர். பிறகு சோழப் பேரரசன், அவையோர்களை முறைப்படி விளித்து வணக்கம் செலுத்திவிட்டுத் தன் உரையினைத் தொடங்கினான்:

...பாண்டியப் பெருநாட்டின் வரலாற்றிலேயே இன்று பொன்னாள் என்று சொல்வதைவிட ஒரு திருப்புமுனை நாள் என்று சொல்வதே சாலப் பொருந்துவதாகும். ஒரு நெருக்கடியான நிலையினை நேசக்கரங் கொண்டு - பாசப் புனல்கொண்டு தணிக்கவும் தவிர்க்கவுமே நாம் இங்கே குழுமியுள்ளோம். காழ்ப்புக்கோ கசப்புக்கோ துளியேனும் இடமின்றி, எவ்வளவுக்கெவ்வளவு பொறுப்புடன் கடமை ஆற்றுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு என் இனிய நண்பருக்கு - உங்கள் மறைந்த பேரரசருக்கு - நாம் செய்திடும் சிறப்பு மட்டும் அல்ல; கைம்மாறும் ஆகும். நம்மை அச்சுறுத்துகின்ற இன்றைய அரசியல் சிக்கலை அவிழ்ப்பதற்கு அவரே ஓர் அருமையான கருவியையும் படைத்து விட்டுப் போயிருக்கின்றார். அதுதான் இந்த இறுதி முறி. இதிலே வரையப்பட்டுள்ள ஒவ்வோர் எழுத்தினையும் நிறைவேற்றிடுவதே நமது நீங்காக் கடமை என்பதை நான் நினைவூட்டிடத் தேவையில்லை. ஆனால் இது பெருவழுதிப் பாண்டியரால்தான் எழுதப்பட்டதா என்னும் ஐயப்பாடு சிலருக்கு எழுந்திடலாம். அதனை அகற்றிட வேண்டும் என்பதற்காக அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அமைச்சர்கள், திருமுகம் வரைவோர் - அரையர் - முதலான அரசு அதிகாரிகள், அறங்கூறு அவையத்தினர், தளபதி நெடுமாறர், இளவரசர் இளம்பெருவழுதி ஆகியோரது பார்வைக்கு இந்த இறுதி முறி அனுப்பி வைக்கப்படுகின்றது. மேலோட்டமாக விழிகளை ஓடவிட்டாலே இதிலே உள்ள எழுத்துக்களும் சரி, கையொப்பமும் சரி, மன்னருடையவை தானா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் இல்லை. பார்வையிட்ட பின்னர் எவருக்கேனும் மறுப்பு இருக்குமானால் உடனே தெரிவித்திடலாம்."

- கரிகாலன் இவ்வாறு இயம்பியவாறே முதலில் தளபதி நெடுமாறனிடமே அந்த ஓலைச்சுவடிகளை அளித்திட்டார். அவற்றை அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் புரட்டிப் பார்த்திட்ட அவனுக்கு எத்தகைய மறுப்பினை எழுப்பிடுவது என்றே புரிந்திடவில்லைபோலும்! நொடிக்கு நொடி வெய்யில் பட்டு வெம்பிய மாம்பிஞ்சாக அவனது முகந்தான் வெளிறியதேயன்றி வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தையும் வந்திடவில்லை.

இயல்பாகவோ தூண்டப்பட்டோ, ஒருவருடைய உள்ளத்திலே பேராசைத் தீ என்னதான் கொழுந்துவிட்டு எரிந்திட்ட போதிலும், மனச்சாட்சி என்னும் கருங்கல் பாறையினை அதனால் கரியாக்கிட, இரையாக்கிட முடிந்திடுமா?

அத்தகைய ஓர் உண்மையினைத்தான் நெடுமாறனின் அமைதி, கூறாமல் கூறியது.

தான் பார்த்து முடித்திட்ட பிறகு அந்த ஓலைச்சுவடிகளை இளம்பெருவழுதியிடம் அவன் நீட்டினான்.

இளவரசனுக்கும் தன் தந்தையின் கையெழுத்தினைப் பற்றி எத்தகைய ஐயப்பாடும் எழுந்திடவில்லை. அமைச்சர்கள், அறங்கூறு அவையத்தார் முதலான மற்றையோரும் அது பெருவழுதியால் எழுதப்பட்டதே என்று உறுதி செய்தனர்.

இறுதிமுறி இவ்வாறு சோதனை செய்யப்படும் பொழுதே முத்துநகையின் நெஞ்சத் திரையிலே என்ன நிழலாடிற்று தெரியுமா?

"...என் தந்தையார் தந்திட்ட தகவலின் அடிப்படையில், ரோமாபுரி ஆட்சித் தலைவர் அகஸ்டஸ் அவர்களிடமும், கப்பலில் வரும்பொழுது செழியன் அண்ணாவிடமும் நான் தெரிவித்திட்ட அந்த இரகசியச் செய்திக்கு இந்த இறுதிமுறி ஒப்புதல் முத்திரை அளித்திட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்னும் கவலையே கொண்டாள் அவள்.

இறுதிமுறியினைப் பார்வையிட்டவர்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் வராமற்போகவே கரிகாலன் எழுந்து, "அறிவு சான்ற அவையோரே! இனி நானே இதனைப் படித்திடலாம் என்று கருதுகிறேன்" என்றான்.

சோழப் பேரரசனின் மிடுக்கான குரல் சட்டென்று அந்த அரண்மனை மண்டபத்திலே அமைதியைக் கொணர்ந்திட்டது. எல்லாரும் செவிகளைத் தீட்டிக் கொண்டு உன்னிப்பாகக் கேட்டனர்.

பெருவழுதிப்பாண்டியர் தமது கடைசிக்கால விருப்பமாக மட்டுமின்றித் தம் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமாகவும் அந்த இறுதி முறியினை எழுதியிருந்தார். சில குறிப்பிடத்தக்க பகுதிகள் மட்டும் இங்கே கொடுக்கப்படுகின்றன.

"-இளமைத் துடிப்பிலே நம்மை அறிந்தோ அறியாமலோ நாம் இடறி வீழ்கின்ற காலங்களும் உண்டு. அத்தகைய இடறல் என் வாழ்விலும் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை முத்துக் குளிப்பு விழாவினைக் கண்டுகளித்திடுவதற்காக நான் என் மனைவி பெருங்கோப்பெண்டுடன் கொற்கைப் பட்டினத்திற்குச் சென்றிருந்தேன்; அப்போது தென்வெள்ளாற்றங் கரையினை ஒட்டிய முத்தூர்க் கூற்றத்தினை ஆண்ட குறுநில மன்னனின் குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தனர். அவர்களிடம் என் மனைவிக்கு அளப்பரிய பாசம் உண்டாகிவிட்டது. எங்கள் சிறிய அரண்மனையிலேயே அவர்களும் தங்கிக்கொள்வதற்கு இவள் ஏற்பாடு செய்துவிட்டாள். அவர்களில் அந்தக் குறுநில மன்னனின் தங்கை முல்லைக்கொடியாள் ஒரு முழுநிலவு; கட்டழகியான அவள் ஒரேயொரு பெண் மகவைப் பெற்ற அளவிலேயே கைம்பெண்ணாகித் தான் பிறந்த அரண்மனைக்கே திரும்பி வந்துவிட்டாள். ஒரு நாள் மாலை, என் மனைவியும் மற்றவர்களும் கடற்கரைக்கு வேடிக்கை காணச் சென்றிருந்தனர். காய்ச்சல்கண்டிட்ட தன் பெண் மகவைக் கவனித்துக் கொண்டு, தனித்து இருந்திட்ட அத்தளிர்க் கொடியாளை நான் என் இளமைக்குப் பலியாக்கிக்கொண்டு விட்டேன். ஆனால், அதுகாறும் பிள்ளை ஏதும் இல்லாதிருந்த நான் அவளை இரண்டாந்தாரம் ஆக்கிக் கொள்வதாகவும் உறுதி அளித்திட்டேன். அதனை நம்பித்தான் அவளும் எனக்கு இணங்கினாள். ஆனால், என் மனைவியிடமோ மறுமணத்தைப் பற்றிய பேச்சையே என்னால் எடுத்திட முடியவில்லை. தானும் அப்போது கருத்தரித்திருப்பதாக அவள் கூறியதே அதற்குக் காரணம். பின்னர் முல்லைக்கொடியாள் தன் அண்ணியின் துணையோடு எவருக்கும் தெரிந்திடாமல் ஒரு முத்துக்குச் சிப்பியானாள். எனினும் கூட, அவமானத்தைத் தாங்கிட முடியாமலும், அண்ணன் என்ன செய்திடுவானோ என்னும் அச்சத்தினாலும் அவள் எங்கோ ஓடி மறைந்து விட்டாள். அவளுக்குப் பிறந்த அந்த இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய கண்மணிகளாகவே கருதி வளர்த்திடலானாள் அக்குறுநில மன்னனின் மனைவி. இதற்கிடையில், முல்லைக் கொடியாளைக் கெடுத்தவன் நான்தான் என்கிற உண்மை அவளது அண்ணனுக்கு எட்டிவிட்டது.

என்மீது தீராப் பகைமை கொண்டுவிட்ட அவன் எப்படியேனும் என்னைப்பழி தீர்த்துக்கொள்ள முனைந்திட்டான். அந்த நேரத்தில், எனக்கு உறுதுணையாய் இருந்து உயிரைக் காப்பாற்றியவன் நெடுமாறனே. அந்த நன்றிக் கடனைக் கழித்திடவே அவனைத் தளபதியாக உயர்த்தி வைத்திட்டேன்!"

கரிகாலன் இவ்வாறு படித்திடும்பொழுதே நெடுமாறன் குறுக்கிட்டான்:

"பார்த்தீர்களா,பார்த்தீர்களா! நான் உங்களிடம் உரைத்தவை யெல்லாம் உண்மையே என்பதற்குப் பாண்டிய வேந்தர் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியினை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?" என்று உற்சாகம் பொங்கிடக் கூவினான்.

"சற்றுப் பொறுங்கள் தளபதியாரே. இன்னும் எஞ்சியுள்ள சுவடிகளையும் படித்து விடுகிறேன். பிறகு நீங்கள் உங்கள் கருத்தினைத் தெரிவித்திடலாம்" என்ற அவர், மேலும் தொடர்ந்திட்டார்.

"காலப்போக்கிலே, முத்தூர்க்கூற்றக் குறுநில மன்னனின் சதி என்னைச் சாய்த்திடவில்லை; அவனையே மாய்த்திட்டது. என்னுடைய படைவீரர்களால் அவனுடைய கொற்றம், கொடிமரம், அரண்மனை, அந்தப்புரம் எல்லாமே தகர்த்தெறியப்பட்டன. அந்த அமளியிலே தப்பியவர்கள் முல்லைக்கொடியாளின் பிள்ளைகளே! ஆனால், அந்த இருவரும் திசைக்கு ஒருவராகத் தெறித்து ஓடிவிட்டனர். வயதில் பெரியவளான அந்தப் பெண் தங்கள் கூற்றத்தினை அடுத்த 'மிழலைக் கூற்ற'த்தினை ஆண்டு வந்த இருங்கோவேளிடம் அடைக்கலம் புகுந்து விட்டாள் என்பதனை அப்போதே நான் கேள்வியுற்றேன். அவள்தான் பின்னர் இருங்கோவேளின் பட்டத்தரசியான பெருந்தேவி ஆனாள். அவளுடைய தம்பியும் முல்லைக் கொடியாளுக்கும் எனக்கும் பிறந்தவனுமான சிறுவன், தன் தமக்கை என்ன ஆனாள் என்பதே தெரியாத நிலையில் ஒரு மீனவர் குடும்பத்தினால் காப்பாற்றப் பட்டிருக்கிறான்; அவனே பாண்டிய நாட்டுப் படைவீரனாக மாறிய செழியன்!"

- சோழப் பேரரசன் இவ்வாறு படித்திடும்பொழுதே மண்டபத்தில் குழுமியிருந்த அத்தனை பேருடைய உடலுமே புளகமுற்றுச் சிலிர்த்திட்டது.

அதே சமயம் தாமரையின் நினைவு வானிலும் பழைய நிகழ்ச்சியொன்று மின்னலாய்ப் பளிச்சிட்டது.

தன் அண்ணன் இருங்கோவேளின் இருட்சிறையிலே செழியன் சிக்கியிருந்த வேளையிலே, கரிகாலனைக் கட்டாரியால் மடித்திடச் சென்ற பெருந்தேவி, தானே மடிந்திட்ட செய்தியினைக் கேட்டவுடனே செழியன், 'அக்கா !அக்கா!' என்று அலறினான் அல்லவா? அதற்கான விளக்கத்தினை கேட்டபொழுது, 'தாமரை! என்கதையில் நீ இதுவரை கேட்டறியாத புதுமையும் பயங்கரமும் நிறைய உண்டு. தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலம் வரும். அந்தக் காலம், நாமிருவரும் பேசக்கூடிய சூழ்நிலையொன்றை வகுத்துத் தருமானால், அப்போது விளக்குகிறேன். உன் அண்ணி என் அக்காள் என்பது மட்டும் உண்மை...! என்று அவன் கூறியது அவளுடைய காது மடல்களிலே மீண்டும் மீண்டும் இப்போது வந்து எதிரொலித்தது.

...அப்படியானால், எங்கள் மரமாளிகைக்குச் சிறைப்பட்டு வந்த செழியனைத் தன் தம்பிதான் என்று அண்ணி ஏன் கூறிடவில்லை? இவரும் தம் தமக்கை அரசியாக இருந்திட்ட பொழுது அப்படியெல்லாம் ஏன் சாதாரண மறவராக அவதிப்பட்டிருக்க வேண்டும்?' என்று தாமரையால் எண்ணாமலும் இருந்திட முடியவில்லை. ஆனால் அவளது ஐயப்பாடுகளுக்கு அவளுடைய மனமே மறுமொழி அளித்திட்டது.

...சின்னஞ்சிறு வயதிலே எப்போதோ தன்னை விட்டுப் பிரிந்திப் தன் தம்பியை, வளர்ந்துவிட்ட நிலையில் அத்துணை எளிதாக அண்ணியால்தான் எப்படி அடையாளம் கண்டிருக்க முடியும்? மேலும் நோயாளியாகப் பெரும்பாலும் படுக்கையிலே கிடந்திட்ட அவளுக்குச் சிறைப்பட்டிருந்த செழியனைத் தனித்துச் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புத்தான் ஏது?.. செழியனுக்கும் பல ஆண்டுகள் கழித்துத் தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த மீனவக் குடும்பத்தாலோ, பிறராலோ இருங்கோ வேளின் மனைவி தன் தமக்கைதான் என்கிற உண்மை மட்டும் தெரியவந் திருக்கலாம். ஏழை மீனவப் பையனாகவே வறுமையில் வாடி பழக்கப்பட்டு விட்டதால் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்துவிட்ட அவனுக்கு அரண்மனைக்காரர்களிடம் உறவு கொண்டிடும் ஆசையினை அவனுடைய தன்மான உணர்வே தடுத்திருக்கலாம். அத்தோடு. பாண்டிய வேந்தரின் நம்பிக்கைக்குரிய படைவீரனாகத் தான் மாறி விட்ட பிறகு, அவருடைய நண்பரான கரிகாலரின் உயிரையே பறித்திடச் சதி புரிந்து, நாடோடி வாழ்க்கை வாழ்ந்திட்ட என் அண்ணியிடம் வந்து பழைய உறவு முறைக்குத் தான் உயிர் கொடுக்க முனைவதால் பாண்டிய மன்னரின் நல்லெண்ணத்தை இழந்திட நேருமோ என்னும் அச்சத்தாலும் செழியன் ஒதுங்கி இருந்திருக்கலாம்'

- இவ்வாறெல்லாம் முத்துநகையின் திட்டப்படி ஜூனோ வடிவத்திலுள்ள தாமரை சிந்தனை அலைகளிலே மிதந்திடும்பொழுதே, இன்னொரு முக்கியமான உண்மையினைப் பெருவழுதியின் இறுதி முறியினின்றும் அவிழ்த்து விட்டான் கரிகாலன்.