உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/51. ரோமாபுரிப் பாண்டியன்

விக்கிமூலம் இலிருந்து

51

ரோமாபுரிப் பாண்டியன்

கரிகாலன் இறுதி முறியினைத் தொடர்ந்து படித்தான்;

"அங்ஙனமாயின் இளம்பெருவழுதி யார் என்கிற கேள்வி எழுந்திடுவது இயற்கை. அவன் எனக்குப் பிறந்திட்ட மகனே அல்லன். இந்தப் பேருண்மையினை - அவன் கொற்கைப் பட்டினத்து இளவரசனாக ஆக்கப்பட்ட பின்னர் - தான் இறந்திடும் தறுவாயில்தான், என் மனைவி பெருங்கோப்பெண்டு என்னிடம் தெரிவித்தாள். பிள்ளை பெறாத மலடி என்னும் காரணம் காட்டி. நான் எங்கே இரண்டாந்தாரமாக அந்த முல்லைக்கொடியாளையோ வேறு எவளையோ மணந்திடு வேனோ என்னும் அச்சங்கொண்டிட்ட அவள், தான் கருத்தரித் திட்டதாகப் பொய்யே புகன்றிருக்கிறாள். தாழ்த்தப்பட்ட குடியொன்றின் பஞ்சம் பட்டினியைப் பயன்படுத்தி நிறையக் கழஞ்சுப் பொன்களை அவர்களுக்கு வாரி வழங்கி இளம்பெருவழுதியை எனக்குத் தெரியாமல் தத்து எடுத்துத் தன் பிள்ளையாகவே வளர்த்திருக்கிறாள் அரசி. சாவினைத் தழுவிடும்பொழுது, அவளது மனச்சாட்சி விழித்துக் கொண்டு உண்மைகளைக் கக்கிட வைத்துள்ளது. செழியனைப் பற்றிய உண்மைகளை அவனைப் பாசத்தோடு வளர்த்திட்ட மீனவ மூதாட்டியே என்னிடம் வந்து வெளிப்படுத்திவிட்டாள். அதுவும் அண்மைக் காலத்தில்தான், நிலைமைகள் இவ்வாறிருக்க நெடுமாறனோ எனக்குப் பின்னர், தானே அரியணை ஏறிட வேண்டும் என்னும் ஆசையினை வளர்த்துக் கொண்டு, அதனை நேரடியாகவும் என்னிடம் கூறிவிட்டான். அவன் இச்சைப்படி இறுதிமுறி - எழுதக்கூடாது என்பதற்காகவே, என் வலக்கரம் முடக்குவாத நோய்க்கு இலக்காகிவிட்டதாக நான் நடித்திட நேர்ந்திட்டது. உண்மையில் என்னை வாட்டியது எலும்புருக்கி நோய் ஒன்றுதான். மேற்கூறியவற்றால், இந்த பாண்டியநாட்டின் மன்னனாக எனக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக் கொள்ளும் உரிமை எனக்கும் முல்லைக்கொடி யாளுக்கும் பிறந்திட்ட செழியனுக்கே உண்டு என்பதனை இதன் மூலம் தெளிவுபடுத்திட விழைகின்றேன்..."

-கரிகாலன் இவ்வாறு இறுதிமுறியினைப் படித்து முடித்திடப் போகும் சமயம் தளபதி நெடுமாறன் எழுந்து குறுக்கிட்டான்;

"செழியனைப் பற்றிப் பெருவழுதிப்பாண்டியர் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் வெறுங்கதைகளாகத்தான் தோன்றுகின்றனவே அன்றி . உண்மையாக இருக்கக்கூடும் என்று என்னால் நம்பவே முடியவில்லை!" என்றான்.

உடனே, "இளம்பெருவழுதி, இறந்த பாண்டிய வேந்தருக்குப் பிறந்தவர் இல்லை என்பதை மட்டும் நம்புகிறீர்களா?" என்று 'கணீர்' என்று ஒரு குரல்எழுந்து அவனைத் தாக்கிற்று.

"அதனை நான் நம்புகிறேன்" என்றான் நெடுமாறன்.

"ஏன், அது உங்களுக்குச் சாதகமாக இருப்பதனாலா?"

"இல்லை; இளம்பெருவழுதியை பெற்றெடுத்த தந்தையே என்னிடம் வந்து உண்மையைக் கூறியிருக்கிறார்"

சில விநாடிகள் அந்தக் கொலுமண்டபத்திலே பயங்கரமான இடுகாட்டு அமைதியே நிலவிற்று.

பின்னர், வெள்ளைச் சேலை அணிந்து தன் தலையினை முக்காடிட்டி ருந்த மூதாட்டி ஒருத்தி எழுந்து நின்றாள். அவளைக் கண்டதும் அமைச்சர்களுக்குப் பின்புற வரிசையில் அமர்ந்திருந்த செழியன் அவள் அருகினில் ஓடினான்;

"நீ ஏனம்மா இந்தத் தள்ளாத வயதிலே நம் ஊரை விட்டு இவ்வளவு தூரம் வந்தாய்?" - என்று பரிவோடு கேட்டு அவளது கரத்தினைப் பற்றினான்.

"உன்னைப் பற்றிய உண்மைகளை இங்கே உரைத்திட வேண்டாமா? அதற்குத்தான்!" என்று தன் பொக்கை வாயினைத் திறந்து அந்த மூதாட்டி நகைத்திட்டாள்.

"உன்னுடைய வார்த்தைகள் எல்லாம் இங்குள்ள பெரிய மனிதர்களிடம் எடுபடுமா? உன்னை யார் நம்பிடப் போகிறார்கள்?"- செழியன் இவ்வாறு சலித்தாற்போல் கூறியது, நெடுமாறனைத் தவிர மற்ற எல்லோரிடமும் ஒருவித உருக்கத்தினை விளைத்திட்டது.

"என்ன செழியா! அப்படிச் சொல்லி விட்டாய்? ஆமாம், அந்த மூதாட்டி யார்?” என்று வினவினான் கரிகாலன்.

"என்னுடைய தாய்!" என்றான் செழியன்.

"சோழப் பேரரசே!" இவன் புகல்வது பொய். நான் இவன் தாய் இல்லை; வளர்ப்புத் தாய்தான்!" என்றாள் அக்கிழவி.

"அப்படியா? சரி. பெருவழுதிப் பாண்டியர் எழுதி வைத்துச் சென்றதைச் சற்றுமுன் படித்தேனே. அதனைக் கேட்டீர்களா"

"ஓ! நன்றாகக் கேட்டேனே! கண்கள் தான் எனக்குப் பஞ்சடைந்து விட்டனவே தவிரக் காது இன்னும் செவிடாகி விடவில்லை. பாண்டிய வேந்தர் எழுதியிருப்பது வரிக்கு வரி - எழுத்துக்கு எழுத்து உண்மை. இந்தச் செழியன் பிறந்திட்டபொழுது இவன் தாய் முல்லைக்கொடியாளுக்குப் பிள்ளைப்பேறு பார்த்தவளே நான்தான்! முத்தூர்க் கூற்றத்துக் குறுநில மன்னனாகிய இவனுடைய அம்மான் இறந்திட்ட பிறகு, திக்குத் தெரியாமல் தேம்பி அழுதிட்ட இவனை என்பிள்ளையாகவே வளர்த்திட்டவளும் நான்தான்! என்னுடைய வறுமைநெருப்பு இவனையும் ஏன் வாடிட்ட வேண்டும் என்பதற்காக அந்த நாளில் இதே அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து, அரசி அவர்களைச் சந்தித்து 'மன்னனின் மகன் என் மண் குடிசையில் வாழ்கிறான்; அவனைக் கொண்டு வந்து இங்கே விட்டுவிடுகிறேன்' என்று கூறியவள் நானே! பெருவழுதியின் மேலிருந்த பாசப்பெருக்கினால் அவனுக்குப் போட்டியாகச் -சற்று முறைதவறிப் பிறந்திட்ட செழியனை ஏற்றுக் கொள்ள உடன்படாததால், அவனை நன்றாக ஆளாக்கிப் பாண்டிய நாட்டுப் படையிலே சேர்த்துவிட்டவளும் நான்தான். கரிகாலனின் வைரியான இருங்கோவேளைத் தானே கொன்றிடுவதற்குச் சூளுரைத்துக் கொண்டிருந்த இவன், எங்கே அவன் தன் மைத்துனன்தான் என்பதை அறியாமல் தன் கையாலேயே அவனைக் கொன்று விடுவானோ என்று அஞ்சி, பெருந்தேவி இவனுடைய தமக்கைதான் என்கிற உண்மையினை வெகுகாலம் கழித்து அவனிடம் வெளிப்படுத்தியவளும் நான்தான். அதேசமயம், பாண்டிய மன்னர்தான் இவன்தந்தைஎன்று சொன்னால் தன் தாயைக் கெடுத்தவர் என்கிற ஆத்திரத்தில் அவரை இவன் வேம்பாக வெறுத்திடுவானோ என்று எண்ணி, அந்த உண்மையை இதுகாறும் இவனிடம் சொல்லாமல் மறைத்தவளும் நான்தான். ஆனால் கடைசிக் காலத்தில் பாண்டிய வேந்தரிடம் வந்து இவனுக்காக வாதிட்டவளும் நான்தான்! ஆகவே, செழியன்தான் இந்த நாட்டின் மன்னனாக வேண்டியவன். இவனுக்குத் தான் மணிமுடி சூட்டிட வேண்டும் என்று உங்கள் எல்லாரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்"

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட, அந்த மூதாட்டி இவ்வாறு மொழிந்து முடித்திட்டது தான் தாமதம்!

"பாண்டிய மன்னர் செழியன் வாழ்க! ரோமாபுரிப் பாண்டியன் செழியன் வாழ்க!" என்னும் வாழ்த்தொலிகளாலும் கரவொலிகளாலும் அந்த அரண்மனைக் கொலு மண்டபமே அதிர்ந்திட்டது.

உற்சாக வெறியினால் உந்தப்பட்ட இளைஞர்கள் பலர் செழியனை நோக்கி ஓடிச்சென்று அவனை அப்படியே அலாக்காகத் தூக்கி தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கூத்தாடினர், பின்னர் அரியணைக்கு அருகே அவனைப் பொத்தென்று கொண்டு போய்ப் போட்டனர்.

துணிவுக்குப் பெயர் பெற்றோன் - துயர் உறுவார் தமைத் தூக்கும்
கனிவுக்குப் பெயர் பெற்றோன் - கற்றடங்குஞ் சான்றோரின்
பணிவுக்குப் பெயர் பெற்றோன் - பாண்டிவள நாடாளும்
மணிமுடிக்கு உரிமை பெற்றோன் - மறத்தமிழன் செழிய னன்றோ!

-அவனோ,

அரியணைதான் கிட்டிவிட்டதே என்று உடனே ஓடிப்போய் அதிலே அமர்ந்திடவில்லை; பதவிச் செருக்கோடு தலை நிமிர்ந்திடவும் இல்லை. தனக்கு இரு புறங்களிலும் எதிரிலேயும் உள்ள பெரியார்களையும், பேரறிஞர்களையும், பொதுமக்களாகிய உடன்பிறப்புகளையும் நோக்கிப் பணிவோடு வணக்கம் புரிந்திட்டான்; பின்னர், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு இவ்வாறு உரைக்கலுற்றான்;

"பெரியோர்களே, நண்பர்களே! பெருவழுதிப்பாண்டியரின் பேரன்பும், உங்கள் அத்தனை பேருடைய பாசவெள்ளமும் என்னைப் பேசவிடாமல் திணற அடிக்கின்றன; இன்பவேதனையிலே என் இதயத்தை விம்ம வைக்கின்றன.

பெரியோர்களே! நான் மணிமுடியினைத் தரித்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. சாதாரண மனிதனாக நடமாடியும் எத்தனையோ அருஞ்செயல்களை எல்லாம் இயற்றிடலாம். ஆம்; அந்த முடிவுக்குத் தான் நான் வந்துவிட்டேன். இதுகாறும் கொற்கைப் பட்டினத்து இளவரசராகப் பட்டம் சூட்டப் பெற்றவர்களே இங்கே பாண்டிய வேந்தராகக் கொலுவேற்றிருக்கிறார்கள். பெருவழுதிப் பாண்டியர் என்னதான் எனக்காக எழுதியிருந்தபோதிலும், அந்த அருமையான மரபினை நான் அழித்திடலாமா, அதன் மூலம், இளம்பெருவழுதிதான் மறைந்த மாமன்னரின் மகன் என்றும், அதனாலே அவர்தான் அடுத்த பேரரசராக அரியணை ஏறிடுவார் என்றும் பெரும்பாலான பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை நான் தகர்க்கலாமா? இளவரசர் அவர்களின் ஏக்கத்திற்கும் நான் இடம் அளித்திடலாமா? ஆகவே அவரே இப்போது மணிமுடியினைச் சூடிக் கொள்ளட்டும். ஓர் எளிய தொண்டனாக அவருக்கு எல்லாவகையான ஒத்துழைப்பும் நல்கிடுவதற்கு நான் என்றுமே காத்திருக்கிறேன். என்னுடைய இந்த முடிவிலிருந்து மாறிடுமாறு வற்புறுத்த வேண்டாமென்று சோழப் பேரரசர் அவர்களையும், மற்ற பெரியவர்களையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்'

-என்று உறுதியான குரலில் உரைத்திட்ட செழியன், அரியணை மேடையினைவிட்டுக் கிடுகிடுவென்று கீழே இறங்கித் தன் இருக்கையினை நோக்கி நடந்திட்டான்.

அவனுடைய அந்தத் துறவுப் போக்கினைக் கண்டு அரண்மனை மண்டபமே திடுக்கிட்டுப் போய் ஆறாத்துயரில் ஆழ்ந்துவிட்டது. பதவி மோகத்தினைத் தூசென உதறித் தள்ளிடும் அவனுடைய தன்னல மறுப்பு - திண்ணிய உள்ளம் - திடீரென்று அவனுடைய புகழொளியை விண்ணளவு வீசிடச் செய்துவிட்டது.

கரிகாலனும் காரிக்கண்ணனாருமோ பொதிகை மலையினும் உயர்ந் துவிட்ட செழியனின் விரிந்த நெஞ்சினுக்குத் தலை வணக்கம் செய்கின்றவர்களைப்போல அப்படியே வாயடைத்துப் போய்விட்டனர்.

'மலைவாழைத் தமிழுக்கும்
மாண்புமிகு திராவிடர்க்கும்
தலைகொடுக்கத் தயங்காதவன்;
தாரணியின் புகழ் சேர்த்தான்;
கொலுவேறும் வாய்ப்பிருந்தும்
கொள்கையொன்றே உயிர் மூச்சாய்
நிலைகுலையா நெஞ்சோடு
நெடும்பயணம் தொடர்ந்திடுவான்;
பெரியாரைத் துணைக்கொள்வான்;
பேரறிஞர் வழிசெல்வான்
பெருமறவன் செழியனைப்போல்
பிறிதொருவன் காண்போமோ?'

- என்று நம் 'ரோமாபுரிப் பாண்டியன்' அருஞ்செயலைக் கேட்டுப் பாண்டிய மண்டலம் மட்டுமின்றித் தமிழகம் முழுவதுமே அகங் குளிர்ந்து மனம் மகிழ்ந்து வாழ்த்துப்பா இசைத்திட்டது.

பாண்டிய வேந்தனாக ஆவதற்கு முன்பே பாவேந்தனாகப் புகழ் குளித்திட்ட இளம்பெருவழுதியோ உணர்ச்சிப் பிழம்பாகவே மாறி, செழியனின் பரந்த உள்ளத்தினைச் சிறந்த நயத்துடன் உள்ளடக்கி, அடியிற் காணும் ஓர் அற்புதமான - ஆழ்ந்த தத்துவம் உள்ள - அழகெலாம் ஒளிர்கின்ற - ஒரு தமிழ்ப்பாவினைப் பாடிக் களித்திட்டான். அதனைச் செழியனின் காலங்கடந்த புகழ்க் கோவிலுக்குக் காணிக்கை என்றும் நாம் போற்றிடலாம்.

'உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமிய ருண்டலும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினுங்கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே!'

(புறநானூறு 182)

வாழ்க 'ரோமாபுரிப் பாண்டியன்' புகழ்!

வணக்கம்.

ரோமாபுரிப் பாண்டியன்.pdf