உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமாபுரிப் பாண்டியன்/6. விறகுவெட்டி

விக்கிமூலம் இலிருந்து

6

விறகுவெட்டி

வளுக்கு வேலையெல்லாம் அந்தக் காட்டுப்புறத்திலேதான். காட்டின் ஓரத்திலேயே நெடுந்தூரம் சென்று குதிரையை விட்டு இறங்கி, நாலா திசையிலும் விழிகளைச் செலுத்தினாள். ஒரு பாழடைந்த மண்டபமும், அதனருகே அழகிய குளமொன்றும் இருக்கக் கண்டாள். குளிக்கலாம் போல் தோன்றியது. குளிப்பதற்கு அதுதான் பாதுகாப்பான இடம் என்று தெரிந்து கொண்டாள். குதிரையை மறைவான இடத்தில் கட்டிவிட்டு, ஆண் உடைகளை அவிழ்த்துக் கரைமீது வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கினாள். அந்தக் குளிர்ந்த நீர் அவளது ஆயாசத்தையும், ஏன் மன எரிச்சலையுங்கூடப் போக்கிற்று. கரையேறவே மனமின்றி நீந்தி விளையாடினாள். இன்னும் எத்தனை நாளைக்குப் பெண்மையின் பொலிவை ஆணுடைக்குள் மறைத்துத் திரியவேண்டுமோ என்ற கவலையோடு நீருக்குள்ளே மூழ்கியிருக்கும் மேனியின் அழகைத் தானே பார்த்து ரசித்துக் கொண்டாள். தன்னைப் போய் ஒருத்தி காதலிக்கிறாளேயென்று நினைத்தபோது அவளையறியாமலே சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.

அந்த இன்பமயமான குளியலை அங்குள்ள புதர்களின் இடுக்கின் வழியாக இரு கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை. அனாயாசமாகக் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் குளித்த காட்சியைக் காண வெட்கி அந்தக் கண்கள் மூடித் திறந்தன. பிறகு அந்தக் கண்கள் நகர்ந்தன. பின்னர் அந்த இடத்தைவிட்டு கண்கள் மறைந்தன.

முத்துநகை நீண்ட நேரம் தண்ணீரில் கிடந்து ஊறிய பிறகு கரையேறினாள். எந்தவிதமான பயமும் வெட்கமும் இல்லாமல் கரையில் நின்று உடைமாற்றிக் கொண்டாள். தன் எழிலுருவை - காண்பவரை மயங்க வைக்கும் மாம்பழ உடலை - நீரில் ஆடும் தன் பிரதிபிம்பத்தைத் - தன்னைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என்பது அவள் எண்ணம்.

ஆண் உடைகளைச் சரிபார்த்து அணிந்து கொண்ட பிறகு, கரையில் உள்ள மண்டபத்துக்கு வந்தாள். வந்தவள் திடுக்கிட்டாள். அங்கு ஒரு முரட்டு மனிதன், இரண்டொரு செங்கற்களை அடுக்கிய அடுப்பில் பானையை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் அப்படியே அசைவற்று நின்று விட்டாள். அவன் தன்னையும் தான் குளித்த அலங்கோலத்தையும் பார்த்திருக்க மாட்டான் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டாள்.

அவன் வேறுபக்கம் திரும்பிச் சமையல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அவள் வந்த காலடி ஓசை கேட்ட பிறகுதான் அவன் மெதுவாகத் திரும்பினான். ஆகா! என்ன எடுப்பான முகம்! முறுக்கிவிடப்பட்ட பெரிய மீசைகள்! தடந்தோள்! கண்களில யாரையும் கவரக்கூடிய தனி ஒளி! கட்டான தேகம்! இளைஞனுமல்லன்; வயோதிகனுமல்லன்; நடுத்தரமான வாலிபன் என்று கூறவும் முடியாது. வாலிபன் அல்லன் என்றும் கூறிவிட முடியாது!

அவன் அவளைப் பார்த்ததும் பயந்தவனைப் போல எழுந்து பணிவாக நின்றான். அவளும் அவனை உட்காரச் சொல்லி, சைகை செய்தாள். அவன் உட்காராமல் நின்று கொண்டே அவள் முகத்தையே கவனித்தான். எங்கே தன் பெண்மை தெரிந்துவிடுமோ என்ற பயத்தால் முத்துநகை, தன் முகத்தைத் தடவிப் பார்த்துக் கொள்வதும், கைகளால் மறைப்பதுமாக இருந்தாள்.

பிறகு அவன் அவளைப் பார்த்து "நீங்க யாரு?" என்று கேட்டான்.

அவள் ஊமை ஜாடை காட்டினாள்.

அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும், புரிந்து கொள்ளத் துடித்தான். "எந்த ஊரு?" என்றான்.

அப்போதும் அவள் காட்டிய ஜாடை அவனுக்குப் புரியவில்லை. "என்ன பேரு?" என்றான்.

கழுத்தில் கிடந்த முத்தை எடுத்துக் காட்டித் தன் பெயர் அதுதான் என்பதைப் புரிய வைத்தாள்.

"ஓகோ முத்துவா உங்க பேரு?" எனக் கேட்டுவிட்டு "ரொம்பத் தூரம் பயணம் போல இருக்கு! உக்காருங்க... நான் சமைக்கிற பொங்கலிலே கொஞ்சம் சாப்பிடலாம்" என்று உபசரித்தான்.

முத்துநகை வேண்டாமென்று தலையசைத்தாள், என்றாலும் பசியின் கொடுமை கொஞ்சம் சாப்பிடலாம் போல் இருந்தது. வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

"ஆங்! வயிறு கேக்குது: உக்காருங்கோ!" என்று அவளது வயிற்றை அந்த மனிதனும் உற்சாகத்தோடு தடவிக் கொடுத்துக் கையைப் பிடித்து உட்கார வைத்தான்.

அடுப்பில் பானையிலுள்ள உலை கனவேகமாகப் பொங்கிக் கொண்டிருந்தது. ஒரு துண்டில் முடிந்து வைத்திருந்த முந்திரிப் பருப்புகளையும் வெல்லக் கட்டிகளையும் பானையில் கொட்டிக் கிண்டினான். பொங்கல் தயாராகி விட்டது. பானையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு மண்டபத்தை விட்டு இறங்கி ஓடி இரண்டு பெரிய பூவரசு இலைகளைப் பறித்து வந்தான். அவைகளைக் குளத்தில் கழுவியெடுத்து, அவள் கையில் ஓர் இலையைக் கொடுத்தான் பானையிலுள்ள பொங்கலையெடுத்து அந்த இலையில் வைத்தான். தானும் ஓர் இலையில் பொங்கலை வைத்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

அவனது உபசரிக்கும் தன்மையைக் கண்டு, முத்துநகை உள்ளுக்குள் மகிழ்ந்தாள். ஏழை வீடாக இருந்தாலும் விருந்தினரை உபசரிப்பதில் தமிழ் நாட்டுக்கு ஈடு தமிழ்நாடுதான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். அதை வெளியில் சொன்னால் தன் வேடம் வெளிப்பட்டு விடுமே!

"ம்... இன்னுங் கொஞ்சம் சாப்பிடுங்கய்யா!" என்று அவள் இலையில் பொங்கலை வைத்தான்.

முத்துநகை. "போதும்!" என்று சைகை செய்தும் பயனில்லை.

"என்னை யாரென்று நீங்க கேக்கலியே - நான் விறகு வெட்டி, பெயரு வீரன்! தாய் தந்தை யாருமே கிடையாது. அனாதை! நானே விறகு வெட்ட வேண்டியது - சுமக்க வேண்டியது - விற்க வேண்டியது - அவ்வளவு தான் நம்ப வரலாறு!"

எனக் கூறிவிட்டு, மேலும் கொஞ்சம் பொங்கலை முத்துநகை இலையில் வைத்தான். அவள் வேண்டாமென்று தலையாட்டி, இலையைக் கீழே வைத்தாள்.

"அட! சும்மா சாப்பிடுங்கய்யா! எவ்வளவு சுவையா இருக்கு! இம்... இந்தாங்க" என்று கொஞ்சம் பொங்கலையெடுத்து அவள் வாயிலே திணித்துவிட்டான்.

முத்துநகைக்கு மெல்லவும் முடியவில்லை! விழுங்கவும் முடியவில்லை! பொங்கலையல்ல; தன்னைப் பற்றிய உண்மையை!

மிகக் கஷ்டப்பட்டுப் பொங்கலைத் தின்று முடித்து விட்டுக் குளத்தில் இறங்கிக் கை கழுவிக் கொண்டாள். முத்துநகை கழுவும்போது இடுப்பில் செருகியிருந்த பதக்கம் கீழே விழுந்தது. உடனே அதை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டாள். அதுதான் 'இருங்கோவேள்' என்று எழுதப்பட்ட யவனக் கிழவன் தவறவிட்டுப் போன பதக்கம்!

அந்தப் பதக்கத்துக்குரிய இருங்கோவேள்தான் தனக்குப் பொங்கல் சமைத்துக் கொடுத்துப் பசியாற்றினான், உபசரித்தான் என்ற உண்மை அவளுக்குத் தெரியாது; பாவம், கை கழுவிக் கரையேறிய அவளுக்கு விறகு வெட்டி வேடத்திலிருந்த இருங்கோவேள் தாம்பூலம் கொடுத்தான். அதையும் வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

"அடடே! அய்யாவுக்கு வாய் நல்லா செவக்குதே!" என்று அவளது செவ்விதழ்களைத் தன் முரட்டுவிரல்களால் கிள்ளி விட்டான் இருங்கோவேள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை யென்றாலும். அவன் விரல்களால் இதழ்களில் கிள்ளியதும், விறுவிறு என்று ஆரம்பித்த வலி உணர்ச்சி எப்படியோ போய் முடிந்தது. சமாளித்துக் கொண்டாள்.

விறகு வெட்டியின் கோலத்திலிருந்த இருங்கோவேளின் எடுப்பான தோற்றத்தை அடிக்கடி பார்க்கக் கூடாதென்று கண்களைத் திருப்பிக் கொள்ள எவ்வளவு முயன்றாலுங்கூடத் தோல்வியே கண்டாள். முத்துநகை.

அவனது உயர்ந்த திடமான தோள்களும், அகன்று விரிந்த மார்பகமும் அவளைப் பெரிதும் கவர்ந்தன. அப்பப்பா! எவ்வளவு பெரிய விழிகள் அவனுக்கு! அந்த விழிகளில் நிலைக்கண்ணாடி போல் தன் முகத்தைப் பார்த்துப் பொட்டிட்டுப் பொலிவு செய்து கொள்ளலாம் போலும் என எண்ணிப் பூரிப்படைந்தாள்.

அவனருகே அவள் நிற்கும்போது மலையடிவாரத்தில் ஒரு மான்குட்டி நிற்பதுபோல் இருந்தது; ஆலமரத்தின் பெருங்கிளை யொன்றில் கிள்ளை உட்கார்ந்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும், அவன் அவளை வாரியெடுத்துக் கொஞ்ச ஆரம்பித்தால்!

நல்ல வேளை அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. உதட்டில் அவன் உண்டாக்கிய வலியைப் பொறுத்துக் கொண்டு மண்டபத்திலிருந்து நகரத் தொடங்கினாள்.

"என்னய்யா கிளம்பிட்டே! இருய்யா கொஞ்சம்!" என்று இருங்கோவேள் அவள் கையை பிடித்து இழுத்தான்.

"உஸ்! ஊகூம்!" என்று சைகை செய்துவிட்டு கையைத் திமிறி விடுவித்துக் கொண்டு அவள் புறப்பட எத்தனித்தாள்.

"ஊகூம்! அதுதான் நடக்காது! விடமாட்டேன்" என்று சிரித்தவாறு கத்திக் கொண்டே, இருங்கோவேள் தன் முரட்டுக் கரங்களால் அவளை அலக்காய்த் தூக்கிக் கொண்டு, கரகரவென்று தன்னைத் தானே மூன்று சுற்றுச் சுற்றிக் கொண்டு, மண்டபத்துள்ளே போய் அவளைத் தொப்பென்று போட்டான்.

கிறுகிறுவென்று சுற்றிய காரணத்தால் அவள் கண்ணைத் திறக்க முடியாதபடி மயங்கிக் கிடந்தாள். அவனுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது.

"முத்து! முத்து! அய்யா! அய்யா!" என்று கூப்பிட்டுப் பார்த்தான்.

குளத்திற்கு ஓடித் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தான். அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். அப்போது அவனுக்கு உடம்பெல்லாம் சூடேறி உதறியது! குளிரில் தான் உடம்பு நடுங்கும்! இப்படிப்பட்ட சூட்டிலும் உடம்பு நடுங்குமென்பதை அவன் உணராதவனல்ல. மயங்கிக் கிடந்தவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

விறகு வெட்டி, தன்னை ஆண் என நம்பித் தாராளமாகப் பழகுவது நிலைமையை எங்கேயோ இழுத்துச் செல்கிறது என்பதை அவள் புரிந்துகொள்ளாமல் இல்லை. அந்த நிலையை அவளால் விரும்பவும் முடியவில்லை, வெறுக்கவும் இயலவில்லை. தலைப்பாகைத் துணியால் நெஞ்சை இழுத்து மூடிக் கொண்டு அவனை விட்டுக் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.

அவன் தன்னைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கக் கூடுமோ என்ற பயமும் சந்தேகமும் அதிகரித்தது. அவன் முகத்தைக் கவனித்தாள். அவனது வீரம் செறிந்த முகத்திலேயிருந்து எந்தக் குறிப்பையும் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை. ஈட்டிகள் விழிகளுக்கு நேரே பாய்ந்து வந்தாலும் இமை கொட்டுவது கோழைத்தனம் என்று வீரத்துக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டுள்ள தமிழ்ப் பெருங்குடியில் பிறந்தவன் தானே இருங்கோவேளும்! அவனது முகத்தில் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சி பாவ மாறுதல்களைக் கண்டறிந்து விட முடியுமா என்ன?

"எப்படி இருக்கு? இன்னும் மயக்கம் இருக்கா?" எனக் கேட்டான் இருங்கோவேள்.

"இல்லை" என்ற பொருளில் தலையசைத்தாள் முத்துநகை.

"மயக்கம் ஆரம்பமாயிருக்கிறது உள்ளத்தில்!" என்று அவள் சொல்லவில்லை. கண்கள் சொல்லாமலும் இல்லை. அவனும் அதைக் கண்டு பிடித்து விட்டான் என்றே தோன்றியது.

"பிறவியே ஊமைதானா?" என்று கேட்டான் அவன்.

உடனே அவள், ஒரு ஓலையில் கிறுகிறுவென்று எழுதி அவனெதிரே நீட்டினாள். தாமரையிடம் எழுதிக் காட்டினாளே! அதே வாசகந்தான்!

"என்ன இது பொம்பளை கையெழுத்தாட்டம் இருக்கு! எங்கே விரலைக் கொடு! அட, ஆமாம்! விரல் கூடப் பயத்தங்காய் மாதிரிதான் இருக்கு" என்று கிண்டல் செய்தவாறு அவள் விரலைக் கடித்து விட்டான். இருங்கோவேள்!

அவள் வலி பொறுக்கமாட்டாமல் துடித்தாள். ஆனாலும் கோபம் வரவில்லை. கடிப்பட்ட விரலைத் தன் வாயில் வைத்து இரத்தங்கட்டாமல் நாக்கால் நனைத்துக் கொண்டாள்.

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது; அவன் வாயின் எச்சில் பட்ட விரலைத் துடைக்காமல் தன் வாயில் வைத்துக் கொண்டோம் என்பது. ஏனோ, அது கூட அவளுக்கு வெறுப்பு எதையும் உண்டாக்கவில்லை. அவள் செய்கைகளை ஜாடையாகக் கவனித்துக் கொண்டே அந்த ஓலையைப் படித்தான் இருங்கோவேள்.

"என் இலட்சியம் நிறைவேறுகிற சமயம் நான் பேச ஆரம்பித்து விடுவேன். அப்போது சந்திக்க நேர்ந்தால் விவரம் கூறுகிறேன். அதுவரை என்னைத் தொந்தரவு செய்து இலட்சியம் பற்றிக் கேட்க வேண்டாம்."

என எழுதப்பட்டிருந்தது.

படித்து முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்தான் இருங்கோவேள்! அவள், கடிபட்ட விரலைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அது ரத்தம் கட்டி வீங்கி விட்டது.

"அடடா! வீங்கிப் போச்சா! இருய்யா; இதோ ஒரு மருந்து கொண்டு வர்றேன்!" என்று அவன் அவசர அவசரமாக மண்டபத்தை விட்டு விரைந்து சென்றான்.

அவன் தேடிய பச்சிலை கிடைக்கவில்லை. எப்படியும் பச்சிலையைப் பறித்துச் செல்ல வேண்டுமென்ற ஆவலுடன் சிறிது தேடினான்.

சோழ நாடு - கரிகாலன் - பழிக்குப் பழி - போன்ற முணுமுணுப்புகள் அவனை விட்டுக் கொஞ்ச நேரம் விலகியிருந்தன.

ஏதோ ஒரு தெளிவில்லாத உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது. அவள் குளிக்கும்போது, அவன் அவளைப் பார்த்து விட்டான்; அப்போதே அவன் உள்ளம் உருக ஆரம்பித்துவிட்டது. அவன் சமைத்த பொங்கலை உண்ணும் சமயத்தில் அவளை மிக அருகே அவன் கண்டான். பிறகு அவளைத் தூக்கிக் கொண்டு ஆடினான்.

அவளுக்கு மயக்கம் வந்ததும்.... அவள் நெஞ்சாங்குழியில் தடவிக் கொடுக்க ஆரம்பித்து சே... சே.. சே.. ஒரு மன்னன் என்பதையே ஒரு கணம் மறந்து விட்டான்.

பச்சிலைக்காக அவன் கால்கள் நடந்தன. பசுமையான எண்ணங்களோ அவனை எங்கெங்கோ இழுத்துச் சென்று காதல் சூறாவளியில் சுருட்டிப் போட்டன. விடுவித்துக் கொள்ள முடியாமல் தத்தளித்தான். அவனுக்கு இந்தச் சுவையே அனுபவமில்லையென்று கூறிவிட முடியாது.

மிக இளமைப் பருவத்திலேயே அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மாமன் மகள் பெருந்தேவியைத்தான் அவன் ஆசைப்பட்டு மணம் புரிந்து கொண்டான். இருவரும் இரண்டு மூன்று ஆண்டுகள் காதற் பெருவெள்ளத்தில் நீந்திக் குளித்தனர்.

இன்ப வாழ்வு நீடிக்க முடியாமல் பெருந்தேவியை மூச்சுப்பை நோய் வாட்டத் தொடங்கியது.

வேளிர்குடியில் நல்ல மருத்துவர்களுக்குப் பஞ்சமேயில்லை.

திறன் படைத்த மருத்துவ சிகாமணிகள் எல்லாம் பார்த்தும் பலன் ஏற்படவில்லை. எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாள் அரசி.

நாழிகை தவறினாலும் தவறும்; அரசிக்கு மருந்து அளிப்பது தவறுவதில்லை. இந்த நிலையில் அரசன் என்றால் ஓர் அரசி இருக்க வேண்டும் என்ற முறைமையை மட்டும் பெயரளவில் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறாள் பெருந்தேவி.

நாட்டுக்குக் கேடு வந்து காட்டுக்கு வந்த பிறகு அரசியின் நோய் அதிகப்படுவதற்குக் கேட்கவா வேண்டும்? தன் கணவனின் நிலையை நினைத்து அழுது அழுது, அரசியின் முகமெல்லாம் வீங்கிக் கிடந்தது. அந்த வீங்கிய முகம் எதுவும் இப்போது இருங்கோவேளின் மனத்திரையில் நிழலாட்டம் போடவில்லை. அழகு தேங்கிய முத்துநகை யின் வதனம் மட்டுமே அவன் உள்ளத்தில் பெரும் போராட்டத்தை மூட்டிவிட்டுக் கொண்டிருந்தது.

"அழகையெல்லாம் ஒரு சேர எடுத்துச் செய்த தங்கச் சிலை போன்றாள் தனித்து ஏன் உலவ வேண்டும்? ஆபத்து எதுவும் ஏற்படாமல் இருப்பதற்குத்தான் அந்த ஆண் உடையா? அல்லது அவள் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளவா? அவள் பேச மறுப்பது ஏன்? பேசினால் பெண் குரல் தெரிந்துவிடும் என்றுதானே? அவள் குளித்த காட்சியைக் கண்டிராவிட்டால் நாம்கூட ஏமாந்துதான் போயிருக்க வேண்டும்."

இப்படியெல்லாம் கேள்விகளும் பதில்களும் எழுப்பப்பட்டு, உடனுக்குடனே அழிக்கப்பட்டு, அவள் உருவம் மட்டும் அழியாத சித்திரமாகப் பதிந்துவிட்டதை அவன் உணர்ந்தான்.

அவன் பார்க்கும் பச்சிலைகளினுடைய பசுமை நிறத்தின் மீதெல்லாம் அவள் பளிங்கு முகத்தையே கண்டான். அவள் கழுத்தைத் திருகுவது போல் அந்தப் பச்சிலையை எப்படிப் பறிப்பது என்று தயங்கி நின்றான். பெரிய மரமொன்றில் ஒரு நீலநிறப் பசலைக்கொடி படர்ந்து கிடந்தது. அந்தக் கொடியை அவள் குளிக்கும்போது கண்ட இடை நெளிவோடு ஒப்பிட்டுப் பார்த்து, கொடி தோற்று விட்டதாக வலிய வந்து தீர்ப்புக் கூறினான். வழக்கு நடக்காமலே! செவ்விளநீர் தாங்கி நிற்கும் இளந் தென்னைகளைக் கண்டான். ஏனோ அவனையறியாமல் பெருமூச்சு எழுந்தது. கண்களை மூடிக் கொண்டு நின்றான்.

ஏனெனில், திடீரெனக் கண்ணைத் திறந்து, நாடி வந்த பச்சிலையைப் பறித்து விடலாம் என்ற தந்திரம்- இல்லாவிட்டால் பச்சிலைச் செடிகள் அவளாகவே மாறிவிடுகின்றனவாம்! கண்ணை மூடினால் இன்னும் மோசம்! குளக்கரை எதிரே வந்து நின்று அவன் உயிரை மெல்ல மெல்லக் கொல்ல முனைந்தது.

"இருங்கோவேள்! உனக்கு 'இரும்பு நெஞ்சன்' என்று பெயர். நீயா இப்படி மனந்தளர்கிறாய்; மயக்கமுறாதே!" என ஒரு முறை உரக்கச் சொல்லிக் கொண்டு வெகு வேகமாக நடந்தான்.

எதிரே பச்சிலைச் செடி! திடீரென்று பாய்ந்து அந்தச் செடியைப் பிடுங்கினான்.

அந்தச் செடியோடு ஒரு பாம்பும் சுற்றிக் கொண்டிருந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. அவள் நினைவு அவனை எதையும் கவனிக்க விடவில்லை. பாவம்! பாம்பு கிடந்து தவித்தது, அவன் கையில் தலையைக் கொடுத்து விட்டு!

மள மளவென்று மண்டபத்திற்கு வந்தான். மண்டபம் காலியாக இருந்தது.

அவள் இல்லை! அவள் அப்போதே போய்விட்டாள்! பச்சிலைச் செடியைக் கீழே போட்டான்; பாம்பு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மண்டபத்திற்குள்ளே ஒரு பொந்தில் புகுந்து கொண்டது.

அவளைக் காணாத திகைப்பில் பாம்பு கையில் இருந்து கீழே விழுந்ததையும் ஓடியதையும் ஒளிந்ததையும் அவன் கவனிக்கவே இல்லை.

மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி அலைந்தான். குளக்கரையில் போய் நின்றான். அவள் குளித்த இடத்தில் போய்ச் சிறிது நேரம் உட்கார்ந்தான். தண்ணீரைக் கையில் அள்ளி முகத்தில் ஊற்றிக் கொண்டான். பிறகு எழுந்து நடந்தான்.

வெகுதூரம் நடந்து காட்டுக்குள்ளே சென்று மறைந்த இருங்கோவேள், ஓர் உயர்ந்த குதிரையில் ஏறிக்கொண்டு தன் மரமாளிகை நோக்கி விரைந்தான். மர்ம மாளிகையின் வாயிலிலே நின்ற வீரர்கள் குதிரையைப் பிடித்துக்கட்டி அதற்கான உபசரணைகளைச் செய்தார்கள்.