ரோமாபுரிப் பாண்டியன்/8. வேடம் கலைந்தது
8
வேடம் கலைந்தது!
சே! சே! என்ன அறிவீனம்! இதுவரை அவள் தோளைத் தழுவியிருந்தது மனிதன் கரமல்ல; மரத்தின் கரம்! அவள் சாய்ந்திருந்த மரத்திலேயிருந்து விழுந்துவிட்ட கிளையின் அடிப்பாகம் அவள் தோள் மீது பட்டு. கணநேரக் காதல் இன்பத்தை அவளுக்கு வழங்கி ஏமாற்றிவிட்டது.
யாரோ எதிரேயிருந்து அந்த இருட்டில் தன்னைக் கவனிப்பதுபோல முகத்தை மூடிக்கொண்டாள் முத்துநகை, விறகு வெட்டியின் நினைவு அவளை ஆட்டிப் படைத்தது. அவரைச் சந்தித்தால் அவரிடம் சொல்லி, 'காட்டில் உள்ள எந்த மரத்தை வெட்டினாலும் வெட்டுங்கள்: இந்த மரத்தை வெட்டாதீர்கள்' என்று கூற வேண்டும் எனத் தீர்மானித்தாள்.
"டக்! டக்!" என்று நிறுத்தி நிறுத்தி ஓர் ஒலியெழுந்தது. ஒலி வந்த பக்கம் மெதுவாக நடந்தாள். மரம் வெட்டும் சத்தம்தான் அது ! இந்நேரத்தில் காரிருளில் யார் வந்து மரம் வெட்டப் போகிறார்கள்? ஒரு வேளை அவராகத்தான் இருக்குமோ? சந்தேகத்துடன் முன்னோக்கிச் சென்றாள்.
வர வர ஒலி அருகே கேட்டது. ஒலி வரும் திசையில் விளக்கு வெளிச்சமும் தெரிந்தது.
ஒளிந்து ஒளிந்து வெளிச்சம் தெரியும் இடம் நோக்கிச் சென்றாள்.
தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதனருகேயுள்ள ஒரு மரத்தைத்தான் யாரோ வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
வெட்டுகிறவன் வேறு பக்கம் திரும்பியிருந்ததால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஏறத்தாழ உருவமெல்லாம் மண்டபத்தில் சந்தித்தவனைப் போலவே இருந்தது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவளுக்குத் தெளிவில்லை. மேலும் அருகே செல்வதா அல்லது அங்கேயே நின்று கவனிப்பதா என்று தெரியாது திகைத்துப் போனாள் முத்துநகை.
"யாராக இருக்கும்?" என்று அவளுடைய சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் போதே. மளமளவென்று மரம் முறிந்து கீழே விழத்தொடங்கியது. மரம் சாய்கிற பயங்கரச் சத்தம் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்தது. முத்துநகை நடுங்கிவிட்டாள். வெட்டுண்ட மரமும் அவளை நோக்கியா சாய்ந்திட வேண்டும்? மரம் தன்மேல் தான் விழப்போகிறது எனக்கண்ட முத்துநகை 'ஓ' வென்று அலறிக் கீழே விழுந்து விட்டாள்.
பெண் குரல் கேட்டு, மரம் வெட்டியவன் தீப்பந்தத்துடன் ஓடி வந்தான்; நல்ல வேளையாக மரம் அவளுக்கு மிக அருகிலேயே விழுந்திருந்தது. கொஞ்சம் தவறியிருந்தாலும் முத்துநகையின் உடல் நொறுங்கிப் போயிருக்கும். தீப்பந்தத்தைக் கீழே செருகிவிட்டு, அந்த மரம்வெட்டி அவளைத் தூக்கினான். அவளும் பயத்தோடு கண்களைத் திறந்து பார்த்தாள்.
"முத்து! முத்து! இந்நேரத்தில் எங்கு வந்தாய்?" என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்கு விஷயம் விளங்கி விட்டது. யாராயிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தாளோ அவனையே கண்டாள்.
அவனாக இருக்கக் கூடாதா என்று அடங்காத ஆவலுடன் ஓடி வந்தவள், 'ஏன் அவனைக் கண்டோம்' என்று பயந்தாள்.
"இந்நேரத்தில் ஏன் மரம் வெட்டுகிறாய்?" - முத்துநகை அவனைப் பார்த்துக் கேட்டாள். பெண் குரலிலே அல்ல; தான் புதிதாகக் கற்றுக் கொண்ட ஆண் குரலில்.
விறகு வெட்டியாக நின்று கொண்டிருக்கும் இருங்கோவேளுக்கு ஆண் குரலில் அவள் பேசுவதைக் கேட்டதும் ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல், அவளைப் பார்த்து. "இலட்சியம் நிறைவேறாமல் பேசுவது இல்லை என்றாய்; இப்போது பேசி விட்டாயே!" என்று கேட்டான்.
"என் இலட்சியம் நிறைவேறும் நிலையில் இருக்கிறது. எப்படியும் வெற்றி எனக்குத்தான் என்று நிச்சயமாகி விட்டது. அதனால் தைரியமாகப் பேச ஆரம்பித்து விட்டேன்!" என்று பதில் கூறினாள் முத்துநகை.
"உன் இலட்சியமென்ன? அது இந்தக் காட்டுக்குள்ளே தான் உலவிக் கொண்டிருக்கிறதா?" இருங்கோவேள் கேட்டான்.
"ஆமாம்" என்றாள் அவள்.
இருங்கோவேள் அதற்குமேல் அதைக் கிளற விரும்பவில்லை. 'எப்படியும் தாமரை அவளை மரமாளிகைக்கு அழைத்துவரப் போகிறாள். வந்த பிறகு சிறிது சிறிதாக அவளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்' என்ற முடிவில், பேச்சின் பாதையைத் திருப்பினான்.
"நல்ல வேளை - முறிந்த மரம் உன் மீது விழவில்லை. நீ ஏன்யா இங்கு வந்தாய்?"
முத்துநகை சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, "அதோ அங்கேயிருக்கிற மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ மரம் வெட்டுகிற சத்தம் கேட்டது. ஒரு வேளை நீதான் வெட்டுவாய் என்று நினைத்து வந்தேன். ஆமாம்... இரவில்தான் மரம் வெட்டுகிற தொழிலா? திருட்டுத்தனமாக வெட்டுகிறாயா?” என்று கேட்டாள்.
மிக சாமர்த்தியமாக ஆண் குரலில் பேசுகிறாள் என்பதை ரசித்துக் கொண்டே நின்ற இருங்கோவேள் “ஆமாம்!" என்று தலையசைத்தான். அவளை மறுமுறையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் தான் அவன் வந்திருக்கிறான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? தாமரை அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டால். மீண்டும் சந்திக்கமுடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் தான் அதற்குள் ஒரு தடவை பார்த்து விட வேண்டுமென்று ஓடி வந்திருக்கிறான். அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் அருவிக்கரையில் உட்கார்ந்திருந்தது. ஆனாலும் மண்டபத்தில் படுத்திருந்ததாக அவள் சொன்ன பொய்யை நம்பியதுபோல் நடித்தான்! அருவிக் கரையில் அவள் இருந்ததைப் பார்த்துக் கொண்டேதான் மரம் வெட்டும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவள் கவனத்தைக் கவர்வதற்காகவே மரம் வெட்டுவது போல் பாசாங்கும் செய்தான். மரமும் விழுந்தது. அவளும் வந்து அவன் வலையில் விழுந்துவிட்டாள். இருங்கோவேள் அந்த இரவு அவளிடம் எதுவும் பேசாமல் பிரிந்துவிடலாம் என்ற எண்ணத்தில் வரவேயில்லை. அவள் பெண்தான் என்பதைத் தான் புரிந்து கொண்டதாகக் காட்டி, இன்ப உரையாடல்கள் -இனிய சுகம் ஆகியவற்றுடன் அந்த இருளை வழி அனுப்பிவைக்க வேண்டுமென்று துடிதுடித்துத்தான் அங்கு வந்தான். ஆயினும் அவனால் அவளுக்கு எதிரே அந்தத் துணிவைப் பெற முடியவில்லை.
"மரத்தை நாளைக்கு விறகாகப் பிளந்து கொள்கிறேன்; கொஞ்ச நேரம் தூங்கலாம். வாய்யா மண்டபத்துக்குப் போகலாம்!" என்று முத்துநகையை அழைத்தான்.
"இல்லை; நான் வரவில்லை!" என்றாள் அவள்.
"அட சரிதான் வாய்யா!" என்று கையைப் பிடித்து இழுத்தான் இருங்கோவேள்.
"ஊகூம்... எனக்கு வேலையிருக்கிறது."
"ராத்திரியிலே என்ன வேலை! எல்லா வேலையும் காலையிலே பார்த்துக்கலாம்; மழை வேற வரப் போகிறது. வாய்யா போகலாம்!" என்று மறுபடியும் இழுத்தான் இருங்கோவேள், அவன் சொன்னதற்கேற்றவாறு மழைத் தூறலும் விழுந்தது. இடியொலியும் பலமாக இருந்தது.
"பாத்தியா மழையே வந்துட்டது! வாய்யா வா!" என்று அவசரப் படுத்தி, தீப்பந்தத்தையும் கையிலே எடுத்துக் கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு கிளம்பினான். எதுவும் பேச இயலாது அவளும் அவனுடன் போனாள். என்ன செய்வது? போகவும் ஆசை - போனால் என்ன ஆகுமோ என்ற பயமும் கூடவே. இருப்பினும் அவனுடன் சென்றாள். இருவரும் மண்டபத்திற்குள் நுழைவதற்கும் மழை பலமாக ஆரம்பமாவதற்கும் சரியாக இருந்தது. அருவிக்கரையில் கட்டப்பட்டிருக் கும் குதிரையைப்பற்றி அவளுக்குக் கவலை ஏற்பட்டது.
“என்னய்யா யோசிக்கிறே?" என்று முதுகில் ஒரு தட்டுத் தட்டினான் இருங்கோவேள்.
"ஒன்றுமில்லை!" என்று அவள் சமாளித்துக் கொண்டாள். "இப்படி இரவு பகல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி வேலை செய்கிறாயே; உனக்கு என்ன கிடைக்கும்!" என்றாள் அவனைப் பார்த்து.
தீப்பந்தத்தை நன்றாக எரிய விட்டவாறு அவன் பதில் கூறினான். "கஷ்டமில்லாமலா வயிற்றுக்குக் கிடைக்கும்" என்று.
"உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?" என்றாள் முத்துநகை. இந்தக் கேள்வியை அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாள். ஆனால் கேள்வி கேட்டு முடிவதற்குள்ளாகவே அவள் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
"இன்னும் ஆகவில்லை - இந்தக் கட்டைக்கு ஏனய்யா கல்யாணம். அது சரி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? பிள்ளை எத்தனை? பெண்ஜாதி உன்னைப் போலவே அழகிதானா?" என்று கேள்விகளை மளமளவென அடுக்கிக் கொண்டே போனான் இருங்கோவேள்.
"ஊகூம்... கல்யாணம் ஆகவில்லை" என்றாள் முத்துநகை.
"அப்படின்னா நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாம்?" - இருங்கோவேள் குறும்பாகக் கேட்டான்.
"என்னது! நம்ப ரெண்டு பேருமா?" முத்துநகை ஆச்சரியமும் திகிலும் அலைமோத வினா எழுப்பினாள். அத்துடன் உள்ளுக்குள்ளே ஒரு புளகாங்கிதம்!
"சே.... சே... ஆம்பளையும் ஆம்பளையுமா கல்யாணம் பண்ணிக்கிறது! அதாவது நீ ஒரு பெண்ணையும், நான் ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்யா!" என்று மழுப்பினான் இருங்கோவேள்.
முத்துநகை சிரித்துக் கொண்டாள்.
"சரி தூங்கலாம்!" என்று இருங்கோவேள் அவளிடம் கூறினான்.
முத்துநகையும் இனிமேல் பேசுவது ஆபத்து என்று கருதித் தூங்கலாம் என்று பதிலுரைத்துவிட்டு, மண்டபத்தின் ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு எழுந்த உணர்ச்சிகள் அவளை மிகவும் பயமுறுத்தின. ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோவென்று நடுங்கினாள். தூங்குவதுபோல் பாசாங்கு செய்து அவன் தூங்கியதும் ஓடி விடலாமென்றும் திட்டம் போட்டாள். இப்படிப் பயப்படுகிறவள் பிறகு எதற்காக வருகிறாள்? ஆசை வெட்கமறியுமா என்ன? அவளுக்கு அருகிலேயே அவனும் படுத்துக் கொண்டான். அதை அவள் எப்படித் தடுக்கமுடியும்? தடுத்தால் தான் பெண் என்ற உண்மையைச் சொல்லியாக வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் தூங்குவதுபோல் நடிக்க ஆரம்பித்தாள். இருங்கோவேளுக்குத் தூக்கம் வருமா என்ன?
...சே சே சே! இந்த வெளிச்சம் வேறு தூக்கத்தைக் கெடுக்குது!" என்று முணுமுணுத்தவாறு எழுந்து தீப்பந்தத்தை அணைத்துவிடாமல் மண்டபத்திலுள்ள இடிந்த சுவருக்குப் பின்புறம் கொண்டுபோய் வைத்தான். பிறகு வந்து அவளருகே படுக்கப் போனான்.
"கொஞ்சம் விலகியே படு! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!" என்றாள் அவள்.
"சரி! சரி! தூங்கு!" என்று கூறியவாறு சிறிது விலகிப் படுத்துக் கொண்டான்.
இருவரும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தனர். இப்படிச் சிறிது நேரம் கழிந்தது. முத்துநகையின் கால்பக்கம் ஏதோ ஊர்வதைப் போல் ஓர் உணர்ச்சி. அப்படியே அசைவற்றுப் படுத்திருந்தாள். அவனுடைய கால் விரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். நெஞ்சு 'திக் திக்' என்று அடித்துக் கொண்டது. காலில் ஊர்ந்து பொருள் வழவழ என்று தெரிந்தது.
"அய்யோ! பாம்பு பாம்பு!" என்று அலறி ஓடிப்போய் இருங்கோவேளை இறுகக் கட்டிக் கொண்டாள்.
"எங்கே? எங்கே?" என்று அவன் கேட்கிறானே தவிர ஓடிப்போய்த் தீப்பந்தத்தை எடுத்து வருவோம் என்ற எண்ணம் அவனுக்கு வரவேயில்லை. எப்படி வரும்? அவளல்லவா அவனை அணைத்துக் கொண்டிருக்கிறாள்? பிறகு அவளே தன்னை விடுவித்துக் கொண்டதும் தீப்பந்தத்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தான். பச்சிலைச் செடியுடன் அவன் கொண்டுவந்து போட்ட அதே பாம்பு தான் அங்கே ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வேகமாக ஓடி அதன் வாலைப் பிடித்துக் கர கரவெனச் சுற்றி மண்டபத்துத் தூணில் அடித்தான். பாம்பு செத்து வீழ்ந்தது.
"ம்! வீராதி வீரனே! பயப்படாமல் படுய்யா!" என்று அவளைத் தட்டிக் கொடுத்தான்.
"ஊகூம், எனக்கு பயமாயிருக்கு நான் போகிறேன்" என்றாள் முத்துநகை.
"இதோ, வெளிச்சத்தை இங்கேயே வைக்கிறேன்." பயமில்லாமல் தூங்கு!" என்று தீப்பந்தத்தை அங்கேயே வைத்தான்.
தானும் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. கண்மூடித் தூங்குவதுபோல் படுத்திருந்த முத்துநகையின் தலைப்பாகையில் அவன் கைபட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பாம்பைக் கண்டு பயந்து அவனை அணைத்துக் கொண்டதை நினைத்து நினைத்து நெஞ்சில் இனிப்பேற்றிக்கொண்டு படுத்திருந்த அவளுக்குமேலும் ஒரு நெருக்கடி!
தலைப்பாகையில் பட்ட அவன் கையைப் பிடித்து, "என்ன இது?" என்றாள் அதட்டலாக.
"அட, ரொம்பக் குளிருதய்யா! தலைப்பாகைத் துணியைக் கொடு! உடம்புக்குப் போர்த்திக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் தடுத்தும் கேளாமல் அவளது தலைப்பாகையை அவிழ்க்கத் தொடங்கினான் இருங்கோவேள்.
அதற்குமேல் முத்துநகையால் தடுக்க முடியவில்லை. அவனை அறவே வெறுத்திருந்தால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டே இருக்காது. முதல் சந்திப்பிலேயே முகத்தை முறித்துப் பேசிவிட்டுப் போயிருப்பாள். இப்போதோ இரண்டும் கெட்டான் நிலை. அவிழ்ந்த தலைப்பாகை அவன் கையிலே. அலை அலையாய்ச் சுருண்டு அடர்த்தியாகத் தொங்கும் கூந்தல் அவள் தலையிலே. முன்பே இது அவனுக்குத் தெரியும் என்றாலும், இப்போது தான் தெரிந்தவனைப் போல, "ஆ?" என்று வியப்புச் சொல் உதிர்த்துவிட்டு அசையாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் இனிமேல் நடிக்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டாள். என்னதான் இரும்புக் கம்பியை நட்டு வைத்து அதன் மீது ஏற்றிவிட்டாலும் கொடி துவண்டு துவண்டு நெளிந்து படருமே தவிர, கம்பீரமாக ஆண்மை காட்டி நிற்குமா என்ன?
இருங்கோவேள் நடிப்பின் உச்சக்கட்டத்தை எட்டிப் பிடித்தான். "என்ன ஆச்சரியம்! நான் காண்பது கனவா? அல்லது கண் எதிரே மாய மந்திரம் ஏதாவது நடக்கிறதா? முத்து! நீ ஆண் இல்லையா? பெண்ணா?" என்று பரபரப்புடன் கேட்டுத் தான் பெரிய குழப்பத்தில் இருப்பதுபோல் பாவனை காட்டினான்.
முத்துநகை பேசவில்லை. தலைகுனிந்து கொண்டாள்.
இருங்கோவேள் அருகே சென்று அவள் கன்னத்தைக் கரங்களால் பற்றித் தன் முகத்துக்கு நேரே திருப்பினான். இருவர் முகமும் அருகருகே நெருங்கின. இரு ஜோடி விழிகளும் ஒன்றையொன்று கௌவிக் கொண்டன. மூன்று விரல் இடைவெளியில் மூக்கின் நுனிகள்! பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தின் ஒளி பட்டு, அவள் முகம் மெருகேற் றப்பட்ட தங்கம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மலர்ந்த தாமரை யொன்றை இருகையால் ஏந்தி அதன் எழிலைக் கண்களால் பருகுவது போல் அவள் கன்னங்களில் தன் கைகளைப் பதித்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் இருங்கோவேள்.
முத்துநகை உலகத்தையே மறந்தாள். அவன் கையிலிருந்து முகத்தை விடுவித்துக் கொண்டு, அவனது அகன்ற மார்பகத்தில் சாய்ந்து கொண்டாள். இடியும் மழையும் முன்னைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாயிற்று. திடீரெனச் சுழன்று வீசிய பெருங்காற்றில் தீப்பந்தமும் அணைந்து போயிற்று. இருவரும் இயற்கையை மனத்துள் வாழ்த்தினர்! அந்த வாழ்த்துக்களைப் பற்றிக் கவலைப்படாமலே பொழுது விடிய ஆரம்பித்தது. மழை அறவே இல்லை. மெல்லிய பூங்காற்று வீசிக் கொண்டிருந்தது. இருவரும் மௌனமாக வெளுத்து வரும் ஆகாயத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தனர்.
இருங்கோவேள்தான் பேசத் தொடங்கினான். வெகு நேரத்துக்குப் பிறகு பேச முயன்ற அவனுக்கு ஏதோ ஓர் உணர்ச்சி நெஞ்சை அழுத்தியது. அவளை உற்றுப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன.
"ஏன் வாட்டமாயிருக்கிறாய்?" என்று அருகில் சென்று கேட்டான்: பதில் இல்லை.
"என்னை மன்னித்து விடு!" என்று கெஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டான். முத்துநகையோ அவனை அனுதாபத்துடன் நோக்கினாள்.
"மன்னிக்க மாட்டாயா?" என்று மறுபடியும் அவள் தோளைக் குலுக்கியவாறு கேட்டான்.
"நீங்கள் ஒன்றும் குற்றம் செய்யவில்லையே; எல்லாவற்றுக்கும் நான்தானே காரணம்?" என்றாள் அவள் தழுதழுத்த குரலில்!
"இல்லை, நானும் தான் காரணம்? நீ ஒரு பெண் என்பதை முதலிலேயே தெரிந்து கொண்டுதான் உன்னிடம் இவ்வளவு தூரம் பழகினேன்" என்றான் இருங்கோவேள்.
"எப்படித் தெரியும் உங்களுக்கு?"
"நீ மண்டபத்துக் குளத்தில் குளிக்கும்போது...
அவன் பேச்சை முடிக்கவில்லை. அவள் வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்டாள்.
"அதிருக்கட்டும் - உன் உண்மையான பெயர் என்ன?"
"முத்துநகை!"
"ஆகா பொருத்தமான பெயர்! நீ எதற்காக இந்த உடையில் இப்படிக் காட்டில் திரிய வேண்டும்?"
"அதுதான் முன்பே சொன்னேன், முக்கியமான இலட்சியம் ஒன்று இருப்பதாக!"
"அது என்ன இலட்சியம் என்று என்னிடம் விவரமாகக் கூறக்கூடாதா?"
"உங்களை யாரென்று புரிந்து கொண்ட பிறகு சொன்னால் என்ன? நிச்சயம் சொல்லத்தான் போகிறேன்."
"நான் ஒரு சாதாரண விறகுவெட்டி! அவ்வளவு தான்!"
"என்னையொன்றும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் யார் என்பதற்கு என்னிடம் ஆதாரமே இருக்கிறது!"
"ஆதாரமா?" - திடுக்கிட்டுக் கேட்டான், இருங்கோவேள்
"இதோ! என் விரல் வீக்கத்திறகுப் பச்சிலை கொண்டு வரப் போனீர்களே; அப்போது தவறிப்போய் இந்த மண்டபத்தில் நீங்கள் விட்டுப்போன ஓலை!" என்று கூறி ஓர் ஓலைச் சுருளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதை வியப்போடு பார்த்த இருங்கோவேள் சமாளித்துக் கொண்டு, "இந்த ஓலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்று தெரியாதவனைப் போல விழித்தான்.
தான் தவறிப் போட்டுவிட்ட ஓலைச்சுருளைப் பார்த்து, தான் இன்னார் என்பதை முத்துநகை புரிந்து கொண்டு விட்டாள் என்று உணர்ந்த இருங்கோவேள், ஒன்றும் தெரியாதவனைப்போல, "இந்த ஓலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டபோது, "என்ன சம்பந்தமா? இதோ படிக்கிறேன்!" என்று அவள் கருளைப் பிரித்தாள்.
"அனுப்பியவர்: பெருவழுதிப் பாண்டியர்.
பெறுபவர்: பாண்டியநாட்டு ஒற்றர் வீரபாண்டி.
ஒற்றரே!
உமது ஓலை கண்டு விளக்கமறிந்தோம். நீர் குறிப்பிடும் காட்டில்தான் இருங்கோவேள் இருக்கிறான் என்பது சரியானால் அதுபற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து வரவும். அவன் இருப்பிடம் - சூழ்நிலை - அவனிடமுள்ள படைவீரர் கணக்கு - இத்தைைனயும் தெரிந்து கொண்டு வந்து சேரவும். வெல்க முயற்சி!
-பெருவழுதிப் பாண்டியன்"
ஓலையைப் படித்து முடித்துவிட்டு, "இப்போது புரிகிறதா என்ன சம்பந்தமென்று?” எனக் கேட்டாள் முத்துநகை.
இருங்கோவேள் சிரித்துக் கொண்டான்.
இருங்கோவேள், எதிரிகளை ஏமாற்றுவதற்காக வேண்டுமென்றே தயாரித்த பொய்க் கடிதம் - போலி மடல் அது என்பதை முத்துநகை எப்படி உணரமுடியும்? நன்றாக நம்பிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட இருங்கோவேள், "நல்லவேளை உன் கையில் கிடைத்ததே! கொடு இங்கே!" என்று அந்த ஓலையை வாங்கிக் கொண்டான். இருங்கோவேள் அவளை ஏமாற்றியது உண்மைதான். ஆனால் அவளை எதிரியாகவே அவனால் கருதமுடியவில்லை. அவள் அழகில் அவன் விழுந்து விட்டான். அவளும் தன்னை இதயபூர்வமாக நேசிக்கிறாள் எனத் தெரிந்து மகிழ்ந்தான்.
"ம்! சொல்லு உன் இலட்சியத்தை!" என்றான், அவளைத் தழுவியவாறு!
"நான் சோழ நாட்டைச் சேர்ந்தவள் என்பது உங்களுக்குத் தெரியுமா!"
"நீ சொன்ன பிறகே தெரிகிறது; தென்னகத்து மயில் என்று உன் முகம் எனக்கு முதல் சேதி சொல்லிற்று. தெண்டனிட்டேன் உன் அழகுக்கு!"
"இல்லை! என்னை அடிமையாக்கி விட்டீர்கள்!"
"பாண்டிய நாடும் சோழ நாடும் நட்புக் கொண்டிருக்கின்றனவே தவிர ஒன்றையொன்று அடிமைப்படுத்தவில்லையே- அது போலத்தான் நாமும்!"
இந்தக் காதல் வாசகத்திற்குப் பெறவேண்டிய பரிசை அட்டியின்றி அவன் பெற்றுக் கொண்ட பிறகு, மறுபடியும் கேட்டான்: "உன் இலட்சியம் என்ன?" என்று.
"உங்கள் இலட்சியம் எதுவோ, அதுவே என் இலட்சியமும்! இருங்கோவேளின் கொட்டத்தை அடக்க வேண்டும்; அவனுக்கு அனுசரணையாகச் சோழ நாட்டில் உலவுகிற துரோகிகள் சிலருக்கு நல்லறிவு புகட்ட வேண்டும்; செழியனின் உயிருக்கு ஆபத்து எதுவுமின்றி மீட்க வேண்டும்.."
இருங்கோவேள் ஒரு வெற்றுச் சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு, அவள் பேசுவதைக் கவனமாகக் கேட்டான்.
"செழியனை ஆபத்தின்றி மீட்பதில் நீங்கள் அக்கறை காட்டப் போகின்றீர்களா இல்லையா?" என முத்துநகை கேட்டாள்.
"இருங்கோவேள் வீழ்ச்சியிலேதான் எல்லாம் அடங்கியிருக்கிறதே!" என்றான் இருங்கோவேள்.
"இருந்தாலும் செழியனை ஆபத்தின்றி மீட்க வேண்டும். அதுவே என் முதல் வேலையாகக் கருதுகிறேன்"
"முத்துநகை! செழியன் மீது உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?" என்று அவளிடம் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்த்தான் அவன்.
"இருங்கோவேளின் தளபதியுடன் போரிட்டு வென்ற பிறகு உடம்பிலே பட்ட காயங்களுக்கு எங்கள் வீட்டில் தான் மருந்து போட்டோம். அவரைப்போன்ற நாட்டுப் பற்றுக் கொண்டவர்களைக் காப்பாற்ற வேண்டியது பொறுப்பு மிகுந்த செயலல்லவா? செழியன் மிகவும் நல்லவர். உத்தமத் தமிழர். அவரில்லாவிட்டால் அந்த படுபாவி இருங்கோவேளின் எண்ணப்படி கரிகாலரின் உயிர் போயிருக்கும்!" என முத்துநகை பதில் கூறினாள்.
அவளது பேச்சில் இலட்சியவெறி தலைதூக்கியது. அதை இருங்கோவேள் ரசித்தான். என்றாலும் தனக்கு எதிரே தன்னைத் திட்டும்போது அதைப் பொறுத்துக் கொள்வதைச் சற்றுச் சிரமமாகவே கருதினான்.
"இந்த ஆபத்தான வேலைக்கு நீ வந்திருக்க வேண்டாம் முத்துநகை! இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. உன் வேலையையும் சேர்த்து நானே பார்த்துக் கொள்கிறேன்; நீ நிம்மதியாக வீட்டில் இருக்கலாம்!" என்று கூறினான்.
"அய்யய்யோ! காலம் கனிந்து வரும்போது, காரியம் கைகூடும் போது தடுக்கப்பார்க்கிறீர்களே! நான் இருங்கோவேளின் கோட்டைக் குள்ளேயே நுழையப் போகிறேன்" என்றாள் முத்துநகை உற்சாகத்தோடு!
"எப்படி முடியும் உன்னால்"? இது, இருங்கோவேளின் கேள்வி.
"முரட்டு இருங்கோவேளுக்கு ஒரு முட்டாள் தங்கை இருக்கிறாள்; தாமரை என்பது அவள் பெயர். அழகிதான்! கதிரவனைக் கண்டு மலர வேண்டிய அந்த தாமரை சந்திரனைக் கண்டு மலர்ந்து விட்டது, ஏமாந்து போய்!"
"புரியவில்லையே எனக்கு!"
"என் வேடத்தை நம்பி, என்னை ஆண் என்று கருதி, என்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள்."
"ம் அப்புறம்?"
"அப்புறமென்ன அவளிடம் திறமையாக நடித்து, அவள் உதவியினாலேயே இருங்கோவேளின் மாளிகைக்குள் நுழைவதற்குத் திட்டம் தீட்டிவிட்டேன். இன்று காலையில் அவசியம் வந்து விடுவாள்!"
"ஓகோ! நீ மிகவும் திறமைசாலிதான்; ம்...இயற்கை உனக்கு உதவி செய்கிறது! நீ ஆண் வேடம் போட்டால் நம்புவார்கள். நான் பெண் வேடம் போட்டால் யார் நம்பப் போகிறார்கள்?" எனக் கூறி அவன் சிரித்தான். அவளும் சேர்ந்து கொண்டு சிரித்தாள். சிரிப்பினூடே இருவரும் இதழ் பரிமாறி மெய்மறந்தனர்.
"நேரமாகிறது; தாமரை வந்து விடுவாள்; நான் புறப்படுகிறேன்!" எனக் கிளம்பினாள் முத்துநகை.
"ஜாக்கிரதை. இருங்கோவேள் மிகவும் கொடியவன். அவன் கையில் சிக்கினால் உன்னிடம் தவறாக நடந்து கொள்ளவும் தயங்க மாட்டான் படுபாவி!" என்றான் அவன்.
"அவனா? அந்தப் பாதகனா? என் பிணத்தைக் கூட அவன் தொடுவதற்கு வாய்ப்புத் தரமாட்டேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலையே கொள்ளவேண்டாம். நீங்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள் - நான் வருகிறேன்"
"மறுபடியும்?"
"இதே இடத்தில் சந்திக்கலாமா?"
"எப்போது?"
"நீங்களே சொல்லுங்கள்."
"வரும் முழு நிலா அன்றைய தினம்!"
"கட்டாயம் வருவேன் - நீங்கள் தவறி விடாதீர்கள்."
"தவறுவேனா? அன்று இந்த இடத்தில் இரண்டு நிலாக்களைச் சந்திக்கப்போகிறேனே!"