ரோமாபுரிப் பாண்டியன்/9. பெருந்தேவியின் மருத்துவர்
9
பெருந்தேவியின் மருத்துவர்
இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்தனர். அந்த உணர்ச்சிமயமான கட்டத்தில், தன் ஆண் வேடத்தைச் சரிசெய்து கொள்ளாமலே செல்லும் முத்துநகையின் பின்னால் ஓடி, அவளுக்குத் தலைப்பாகையைக் கட்டிவிட்டு உடைகளைச் சரி பார்த்து அனுப்பி வைத்தான் இருங்கோவேள். அவளும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று, ஒரு கல்லில் இடறி விழுந்து, பிறகு அருவிக் கரைப்பக்கம் நடையை முடுக்கினாள். இரவெல்லாம் மழையில் நனைந்த குதிரை சோர்ந்து போய் நின்றது. அருகில் சென்று அதைத் தட்டிக் கொடுத்தாள். அவள் முதுகில் யாரோ தட்டினார்கள்; திரும்பினாள்; தாமரை சிரித்துக் கொண்டு நின்றாள்!
முத்துநகை, பயிற்சியின் மூலம் மிகவும் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்ட ஆண் குரலைப் பயன்படுத்தினாள்; "வா, தாமரை! உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறேன் தெரியுமா?" என்றாள்.
தாமரை அதிசயித்து, "என்ன அதற்குள் பேசி விட்டீர்கள்?" என்றாள்.
"இலட்சியம் பாதிக்கு மேல் நிறைவேறிவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி!" என்றாள் முத்துநகை.
"நீங்கள் ஊமை என்றுதான் அண்ணனிடம் கூறியிருக்கிறேன். அதனால் அங்கு வந்து ஊமையாகவே நடிக்க வேண்டும். அதோடு மருத்துவரைப் போலவும் நடந்து கொள்ள வேண்டும்!"
"அய்யோ! எனக்கு மருத்துவம் தெரியாதே-என்னிடம் மருந்து ஒன்றும் கிடையாதே!"
"என் நோய் தீர்க்கும் மருந்து தங்களிடம்தான் இருக்கிறது. பரவாயில்லை; ஆபத்தில்லாப் பச்சிலை எதையாவது அரைத்து அண்ணிக்கு மருத்துவம் செய்வதுபோல் நடியுங்கள் போதும்!"
"தாமரை! என்னைப் போலவே நீயும் நடிக்க வேண்டும்; நாமிருவரும் காதலிக்கிறோம் என்பது யாருக்கும் ஜாடையாகக் கூடத் தெரியக்கூடாது; நெருங்கிப் பழகவே கூடாது! ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்து மகிழ வேண்டும். அவ்வளவுதான். காலமும் நேரமும் விரைவில் நமக்குச் சாதகமாகவே அமைந்துவிடும். அதன் பிறகு நம் காதலை நிறைவேற்றிக் கொள்வோம். என்ன சரிதானா?" என்று அவள் தலையை நிமிர்த்தினாள் முத்துநகை.
தாமரை, அவளைப் பார்த்து "இந்தக் கொடுமையான நிபந்தனைகள் எல்லாம் இப்போதே எதற்காக? என் இஷ்டத்துக்கு விரோதமாக என் அண்ணன் நடக்க மாட்டார். பயப்படாமல் புறப்படுங்கள்" என்றாள் அவள் கைகளைப் பிடித்திழுத்தவாறு.
பின்னர் அவளும் தாமரையும், தனித்தனிக் குதிரைகளில் ஏறிக் கொண்டார்கள். தாமரையைத் தொடர்ந்து முத்துநகை தன் குதிரையை நடத்திச் சென்றாள்.
அவர்கள் இருவரும் போகிற காட்சியைத் தொலைவில் உள்ள புதர் மறைவிலேயிருந்து இருங்கோவேள் கவனித்துக் கொண்டிருந்து விட்டுக் குதிரைகளின் குளம்படிச் சத்தம் மறைந்ததும் தன்னுடைய குதிரையிலேறிப் புறப்பட்டான்.
காட்டின் நடுவே கட்டப்பட்டிருந்த மரமாளிகையின் அமைப்பும். மாளிகையை ஒட்டினாற்போல் காணப்பட்ட வீரர்களின் கோட்டமும் முத்துநகைக்கு இருங்கோவேளின் மீதிருந்த ஆத்திரத்தை அதிகமாக்கின. இத்துணை ஏற்பாடுகளோடு பகை மன்னன் தன் சூழ்ச்சிக் கோட்டையை உருவாக்கியிருக்கிறானே என்ற திகைப்பும் அவளைச் சற்று நடுங்கச் செய்தது. எதிரியின் இருப்பிடத்திற்கே வந்து விட்டோம். யாரும் கண்டுபிடிக்க இயலாத பகைவனின் பாசறையைக் கண்டுபிடித்து விட்டோம் என்ற திருப்தியும் அவள் முகத்தில் மலர்ந்தது. அதோடு எந்தச் சமயத்தில் தன் வேடம் கலைந்துவிடுமோ என்ற சந்தேகமும், அப்படிக் கலைந்து விட்டால் அதனால் எற்படும் விளைவு எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்ற பயமும் அவளது மலர்ந்த முகத்தை உடனே கருகிடச் செய்தன.
பாழ் மண்டபத்திலே மழையும் காற்றும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கடமையைச் செய்த நேரத்தில் அவளது வேடம் அவனுக்கு எதிரே கலைந்த போது அந்த நெருக்கடியிலும் ஒரு இன்பங் கண்டாள். சந்தர்ப்பத்தை வாழ்த்தினாள். அப்படியொரு சந்தர்ப்பம் இந்த மர மாளிகை வட்டாரத்தில் ஏற்பட்டு விட்டால்? அய்யோ? அதை நினைக்கவே அவளால் முடியவில்லை. இருங்கோவேளைப் பற்றி அவ்வளவு கொடூரமாக அவள் கணக்கிட்டு வைத்திருந்தாள். கரிகால் மன்னரைக் கொல்லுவதற்குச் சதித்திட்டம் வகுத்த ஒருவன் மன்னனுக்குரிய மதிப்புடையவன் அல்லன் என்பது அவள் முடிவு: தமிழ்ப் பண்பு கொண்டவனாக இருக்க முடியாது என்பதும் அவள் கருத்து. கரிகால் பெருவளத்தானையே அவள் தெய்வமாகக் கருதிவிட்டதால் அந்தத் தெய்வத்துக்கு எதிரிடையான யாரையும் அவள் பழி வாங்கிக் கொள்ளத் தயங்க மாட்டாள். தன் திட்டத்துக்குத் துணையாக வீரபாண்டியின் சந்திப்பு அமைந்ததையும் அந்தச் சந்திப்பு தன் வாழ்வில் புதிய சுவை எற்றிவிட்டதையும் நாட்டுத் தொண்டுக்காகத் தனக்குக் கிடைத்தபரிசு என்றே அவள் தீர்மானித்து அகமகிழ்வு கொண்டாள்.
மாளிகையின் முகப்பு நெருங்க நெருங்கத் தாமரை முத்துநகையைப் பார்த்துப் பார்த்துப் புன்னகை பூத்தாள். குதிரைகள் இரண்டும் அருகருகே வந்து கொண்டிருந்தன.
"இனிமேல் நமது கண்கள்தான் பேசிக் கொள்ள வேண்டும்!" என்றாள் தாமரை மெதுவாக!
"ஆமாம்! அதைத்தான் நான் அப்போதே சொன்னேன்" என்றாள் முத்துநகை.
"இந்த மாளிகை வெட்ட வெளியல்ல: இங்கே நாம் சந்திக்கக் கூடிய ரகசிய இடங்களும் இருக்கின்றன!" என்றாள் தாமரை.
இந்த வார்த்தைகள் முத்துநகையை ஒரு குலுக்குக் குலுக்கின!
"சரி சரி” என்று பேச்சை நிறுத்தச் சாடை காட்டினாள் முத்துநகை.
வாயிற்புறத்தில் குதிரைகளைக் கட்டிவிட்டுத் தாமரை முத்துநகையை அழைத்துக் கொண்டு நேரே அண்ணியிருக்கும் இடத்திற்குச் சென்றாள். அரசி பெருந்தேவி தன் படுக்கையில் இருந்தவாறே ஊமை மருத்துவனை வரவேற்று உட்காரச் சொன்னாள்.
"இவர்தான் என் அண்ணி, இந்த மாளிகையில் வாடும் இவர், வேளிர்குடியின் விளக்கு. இந்த விளக்கின் ஒளியை மங்கிவிடாமல் காப்பாற்ற வேண்டியதுதான் வைத்தியரான உமது பொறுப்பு!" என்றாள் தாமரை, முத்துநகையைப் பார்த்து.
முத்துநகை தலையை ஆட்டி ஆமோதித்தவாறு, அரசியின் கையைப் பிடித்து நாடி பார்க்க ஆரம்பித்தாள்.
"ஏம்மா தாமரை! ஊமையென்றாய்; காது நன்றாகக் கேட்கிறதே!" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் பெருந்தேவி.
"இவர் பிறவி ஊமையல்ல அண்ணி! இடையிலே ஏற்பட்டது!" எனச் சமாளித்தாள் தாமரை. நாடி பார்த்து முடிந்த பிறகு ஆகாயத்தைப் பார்த்து ஏதோ சிந்தனையில் இருந்துவிட்டு முத்துநகை இருக்கையை விட்டு எழுந்தாள்.
"என்ன வேண்டும் வைத்தியரே!" என்று கேட்டாள் தாமரை.
ஒன்றும் தேவையில்லை என்பது போல் சைகை செய்து விட்டு முத்துநகை, அங்குமிங்கும் உலவிக்கொண்டேயிருந்தாள், தலையைக் கீழே குனிந்தவாறு.
"பார்த்தீர்களா அண்ணி! எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்!" என்று கேட்டு அண்ணியின் புன்சிரிப்பைப் பதிலாகப் பெற்று ஆறுதலடைந்தாள் தாமரை.
உலவிக் கொண்டிருந்த முத்துநகை ஓர் ஓலையை எடுத்து ஏதேதோ எழுதினாள். அதை அரசியிடம் கொடுத்தாள். அரசி பெருந்தேவி அதை வாங்கிப் படித்துப் பார்த்து விட்டுத் தாமரையிடம் தந்தாள்; "இந்த நோயை நிச்சயம் குணப்படுத்தி விடலாம். இதற்குச் சில முக்கியமான மூலிகைகள் வேண்டும். அதற்கிடையில் அரசரை நான் சந்தித்தால் பரவாயில்லை!" என்று அந்த ஓலையில் முத்துநகை எழுதியிருந்தாள்.
பெருந்தேவிக்கு இருங்கோவேள் மன்னன் முதலில் கூறிய மொழிகள் நினைவுக்கு வந்தன. "அரசர் மாளிகையில் இல்லை; எங்கேயோ போய்விட்டார் என்று மருத்துவனிடம் கூற வேண்டும்" என்று அவன் குறிப்பிட்டிருந்தான். அதனால் அரசி முத்துநகையிடம், "அரசரைப் பார்ப்பது என்பது இயலாத காரியம்; அவர் இங்கில்லை; எங்கே போனார் என்றும் தெரியாது; எப்போது வருவார் என்றும் சொல்ல முடியாது!" என்று உடனடியாகப் பதில் கூறி விட்டாள்.
முத்துநகை தாமரையின் முகத்தைப் பார்த்தாள். ஏனெனில் அரசன் அங்கிருப்பதாகத்தான் அவள் கூறி இருந்தாள். முத்துநகையின் குழப்பத்தைக் கண்ட தாமரை, கண் அசைத்து, "அரசி பொய் சொல்லுகிறாள்" என்பதை ஜாடையாக உணர்த்தினாள். முத்துநகைக்கும் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. பகைவர் வீட்டுக்குள்ளேயே தனக்கு ஆதரவாக ஒரு கருவி கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி எல்லை கடந்தது அவளுக்கு.
"மருத்துவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடம்மா, போ!" என்று அரசி தாமரையிடம் கூறினாள். தாமரை முத்துநகையை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் போனாள்; அங்கும் பெண்களே நிறைந்திருந்தனர். அவர்கள் எல்லாரும் முத்துநகையை உற்று உற்றுப் பார்த்து, தாமரையையும் ஓரக் கண்ணால் பார்த்துத் தங்களுக்குள் ஏதேதோ கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அருமையான கொய்யாப் பழங்களை ஓர் அழகான தட்டில் எடுத்து வந்து தாமரை, முத்துநகைக்கு எதிரே வைத்துச் சாப்பிடுமாறு வற்புறுத்தினாள். அவளும் அதைச் சாப்பிட்டு முடித்து விட்டுத் தூக்கம் வருவதுபோல் பாவனை காட்டினாள். அங்கு கிடந்த நீண்ட மரப்பலகையொன்றின் மீது உறையில்லாத தலையணைகளை எடுத்துப் போட்டு, அதிலே கண்ணயர்ந்திடுமாறு கூறினாள் தாமரை. அரசாங்க மருத்துவனாகச் சென்றிருக்கும் தனக்குச் செய்யப்படும் உபசாரத்தைக் கண்டு முத்துநகை வியப்படையவில்லை. இளவரசியின் காதலனாகச் சென்ற தனக்குத் தரப்பட்ட படுக்கையின் பெருமையைக் குறித்தும் அவள் அதிர்ச்சியடையவில்லை.
"அரண்மனை விருந்தாளிக்கு மரப் பலகையும் உறையில்லாத தலையணையும்தானா?" என்று முத்துநகை முகம் சுளிக்கவில்லை. காரணம், பட்டத்து அரசி பெருந்தேவி படுத்திருக்கும் கட்டிலே சொர சொரப்பான மரத்தால் அமைக்கப்பட்டிருந்ததுதான். அக்கட்டிலுக்குக் கடைசல் கால்கள் ஒன்றும் அமைக்கப்படவில்லை. யானைத் தந்தங்கள் ஏதும் அதில் பொருத்தப்படவில்லை. இலவம் பஞ்சு மஞ்சமொன்றும் அங்கேயில்லை. கரடுமுரடான மரப்பலகைகளைத் தான் அடுக்கி, அதிலே அரசி படுத்திருந்தாள். படுத்தபடியே சிந்தனையை அலையவிட்ட முத்துநகைக்கு இருங்கோவேள் குடும்பத்தார் மீது சற்று இரக்கம் ஏற்பட்டது.
வேளிர் குடும்பத்து மன்னர்கள் அத்தனை பேரைக் காட்டிலும் அதிக ஆடம்பரமாக வாழ்ந்தவன் இருங்கோவேள்தான் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். அவனது சிம்மாசனத்தின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சிங்கங்களின் திறந்த வாயிலே காணப்படும் பற்கள் அத்தனையும் வைரமாம்! சிங்கமே தங்கமாம்!
இன்றைய தினம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையை எண்ணி முத்துநகையின் உள்ளம் உருகியது. அப்பால் சென்றிருந்த தாமரை அருகே வந்து, "வேறு ஏதாவது தேவையா?" என்று வினவினாள். முத்துநகை கண்களை மூடிக் கொண்டு மூச்சை பலமாக இழுத்துத் தூங்குவது போல நடிக்கவே, "பாவம், அயர்ந்த தூக்கம்!" என்று முனகிக் கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள் தாமரை.
தாமரைக்கும் ஒரே மனப்போராட்டம். 'தனக்கும் முத்துவுக்கும் ஏற்பட்டிருக்கிற காதலை அண்ணனிடம் எப்படி வெளியிடுவது?: வெளியிட்டால் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? அண்ணனுக்கு ஏற்பட்டிருக்கும் மனக் குழப்பங்களில் தானும் ஒரு புயலைக் கிளப்பிவிட்டால் அவரால் தாங்கிக் கொள்ள இயலுமா?"
மெதுவாக நடந்தவாறே, அண்ணியின் படுக்கையின் பக்கம் சென்றாள். அரசிக்குச் சற்று இருமல் அதிகமாயிற்று. பணிப்பெண்கள் அரிசியிடம் விரைந்தோடி சிகிச்சைகளில் ஈடுபட்டனர். தாமரையும் அண்ணியைத் தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டு இருமல் அதிகத் தொல்லை கொடுக்காமல் தடவிக் கொடுத்தாள்.
அரசியின் இருப்பிடத்தையொட்டி வேறோர் இடத்தில் படுத்திருந்த முத்துநகையின் காதில் இருமல் ஒலி விழுந்தாலும் அவள் அதற்காக எழுந்து வராமல் தூங்குவது போலவே படுத்திருந்தாள்.
நீண்ட நேரம் அரசியை இருமல் வாட்டி வதைத்துப் பிறகு சிறிது அடங்கிற்று.
"சாவும் என்னைக் கொண்டு போகத் தாமதிக்கிறது!" என்று கண்கலங்கக் கூறினாள் அரசி.
"அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அண்ணி! நீங்கள் சாகமாட்டீர்கள்; சாகக்கூடாது; சாக விடமாட்டோம்" என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் தாமரை.
இந்தச் சோக நிகழ்ச்சியைச் செவி கொடுத்துக் கவனித்தவாறே தன் கண்களில் அரும்பிய கண்ணீரை துடைத்துக் கொண்டாள் முத்துநகை. பெண்கள் அழுவதைப் பெண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது தான். அதற்காகப் பகைவன் வீட்டுப் பெண்களின் அழுகையைக் கண்டு மனம் தளரலாமா? முத்துநகையின் உள்ளத்தைக் கெட்டிப்படுத்த - உறுதியாக்கிட எழுந்த எண்ணங்களுக்கும் - இரக்க சுபாவத்திற்கும் பெரும் போராட்டமே நடைபெற்றது. ஒரு கணம் கடமையுணர்வு ஜெயிக்கும். மறுகணம் இரக்க இதயம் ஜெயிக்கும். இப்படித் திண்டாடிக் கொண்டு படுத்திருந்தாள் அவள். மீண்டும் அரசி கடுமையாக இருமத் தொடங்கினாள். மூச்சு நின்று விடுமோ என்கின்ற அளவுக்கு இருமல் பலமாக இருந்தது.
முத்துநகை படுக்கையை விட்டெழுந்து அரசியின் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அவள் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை. அரசி தாங்க முடியாமல் துடித்துத் துவள்வதையும், அவளோடு தாமரையும் துவண்டு துவண்டு விழுவதையும் கண்டு குடும்பப் பாசத்தின் உயர்வை எண்ணிக் கலங்கினாள்.
"அய்யோ! இந்தக் குடும்பத்துக்கு இப்படியொரு கஷ்டமா? இவர்கள் அரண்மனையிலே இருந்தால் இந்நேரம் ஆயிரம் வைத்தியர்கள் வந்திருப்பார்களே !" என்று வருந்தினாள்.
அரசி, கஷ்டத்திலேயிருந்து சிறிது விடுபட்டுச் சோர்ந்து போய்த் தாமரையின் நெஞ்சில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். தாமரை தன் மெல்லிய கரங்களால்அரசியின் தோள்பட்டையில் தட்டிக் கொடுத்த வாறு கண்கலங்கி உட்கார்ந்திருந்தாள். அப்போது ஒரு வீரன் உள்ளே நுழைந்து வணங்கி நின்றான்.
"என்ன செய்தி?" என்று தாமரை ஆவலோடு கேட்டாள்.
"செழியனை அடைத்திருக்கிறோமே; அந்த இடத்தை ஒரு முறை திறந்து பார்த்தால் நல்லது இளவரசி!" என்றான் வீரன் பரபரப்புடன்.
"ஏன், எதற்காக?" என்றாள் தாமரை. அதற்குள் அரசியும் மெதுவாகக் கண்விழித்து, வீரன் பேசுவதைக் கவனித்தாள்.
"அந்தச் சிறைக்குள்ளேயிருந்து சத்தமே வரவில்லை. ஒருவேளை ஆள் செத்திருப்பானோ என்று சந்தேகமாயிருக்கிறது!" என்றான் வீரன்.
"போனால் போகட்டுமே!" என்றாள் அரசி அலட்சியமாக.
"இல்லை மகாராணி! அவன் சாகாமல் இருப்பது தானே நமக்கு நல்லது. அவனை வைத்துத்தானே இழந்த நாடுகளைப் பெற வேண்டுமென்று அரசர் திட்டமிட்டிருக்கிறார்!" என்று வீரன் பதில் கூறினான். இதற்குள், முத்துநகைக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டி விட்டது.
"இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?" - இது அரசியின் கேள்வி.
"ஒரு முறை அந்தக் கூண்டைத் திறந்து பார்க்க அனுமதி தேவை. அத்தோடு கூண்டுக்குரிய திறவு கோலும் தங்களிடம் இருந்தால்..." வீரன் இழுத்தாற் போல் பேசினான்.
"அரசர் இல்லாத நேரத்தில் கூண்டைத் திறப்பதென்றால்..." அரசியும் சந்தேகத்துடன் பதில் கூறினாள்.
"நானே நேரில்போய்த் திறந்து பார்த்துவிட்டு வருகிறேன் அண்ணி!" என்று தாமரை கூறவே, அரசி அதற்குச் சம்மதித்து, தன் தலையணைக்குக் கீழேயிருந்த திறவு கோலை எடுத்துத் தாமரையிடம் கொடுத்து, "ஜாக்கிரதை!" என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள்.
தாமரை போவதையே பார்த்துக் கொண்டிருந்த முத்துநகை, தானும் எப்படியாவது அவளுடன் சென்று செழியனின் நிலையை அறிய வேண்டுமென்ற ஆவலுடன் சுற்றுமுற்றும் பார்த்தாள். எந்தப் பக்கத்திலும் வழியில்லை. அரசி படுத்திருக்குமிடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். என்ன ஆனாலும் ஆகட்டுமென்று அந்த இடத்தைக் கடந்து தாமரையைப் பின் தொடர்ந்தாள் முத்துநகை.
அதைக் கண்ட அரசி, "நில்!! நில்!" என்று முத்துநகையைத் தடுத்து விட்டாள்.
முத்துநகை எதுவும் புரியாமல் விழித்தாள்.