வஞ்சிமாநகரம்/5. குமரனின் சீற்றம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
5. குமரனின் சீற்றம்

'கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லியைக் கொள்ளைக்காரர்கள் சிறைப்படுத்தி விட்டார்கள்′ என்ற செய்தியை அழும்பில்வேள் கூறியபோது குமரனால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. அவன் முகத்தில் கோபம் தெரிந்தது. மீசை துடி துடித்தது. கண்களில் கிளர்ச்சி தோன்றியது. அவனுக்குப் புரியாதபடி தான் அவனை நன்றாகப் புரிந்து கொள்வதற்கு அந்த விநாடிகளைப் பயன்படுத்திக் கொண்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

“உடனே என்னைக் கொடுங்கோளுருக்கு அனுப்ப அமைச்சர் பெருமான் மனமிசைய வேண்டும். இத்தகைய அக்கிரமங்கள் கொடுங்கோளுரில் நடப்பதை என்னால் ஒரு கணமும் பொறுக்க முடியாது” என்று அவன் குமுறியதைக் கூட அழும்பில்வேள் தெளிவான நிதானத்துடன் ஆராய்ந்தார்.

“இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லியை நீ ஏற்கெனவே அறிந்திருப்பாய் போலிருக்கிறது குமரா !”

“......”

அழும்பில்வேளின் கேள்விக்கு மறுமொழி ஏதும் கூறாமல் தலை குனிந்தான் குமரன். மேலும் அவனை விடாமல் கேள்விகளால் துளைக்கலானார் அழும்பில்வேள். அவனோ அவருடைய எல்லாக் கேள்விகளையும் செவிமடுத்தபின், “அறிந்தவர்களோ, அறியாதவர்களோ - யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தின் தலைவன் என்ற முறையில் என் கடமையை நான் செய்தாக வேண்டும். அதற்கான கட்டளையை எனக்கு அளியுங்கள் அமைச்சர் பெருமானே !” என்றான் குமரன். இவ்வாறு கூறியபின் அழும்பில்வேள் மேலும் அவனைச் சோதிக்க விரும்பவில்லை.

“கடற் கொள்ளைக்காரர்களின் படையெடுப்பிலிருந்து கொடுங்கோளுரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு இப்போது உனக்குக் கட்டளை இடுகிறேன். உனக்கு உதவியாயிருக்கவும் செய்திகளை அவ்வப்போது நாம் அறியச் செய்யவும் இந்த மாளிகையின் ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னுடன் கொடுங்கோளூர் வருவார்கள். அவர்களையும் உடனழைத்துக்கொண்டு நீ கொடுங்கோளுருக்குப் புறப்படலாம்” என்று கட்டளையிட்டார் அமைச்சர்.

குமரன் எதற்காகவோ தயங்கி நின்றான். அமைச்சர் அழும்பில்வேளை அந்த விநாடியில் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னோடு வலியனையும் பூழியனையும் எதற்காகக் கொடுங்கோளுருக்கு அனுப்புகிறார் என்பதே அவனுக்குச் சந்தேக மூட்டியது. வேளாவிக்கோ மாளிகைக்குச் சேரநாட்டின் அரசதந்திர மாளிகை என்று மற்றொரு பெயர் உண்டு. மாளிகையில் உருவாகிற முடிவுகளுக்கும், பின்னால் ஏதாவதொரு அரச தந்திர நோக்கம் நிச்சயமாக இருக்கும் என்பதை அவன் அறிவான். தன்னை நிதானம் செய்து கொண்டு அமைச்சர் பெருமானிடம் மறுபடி பேச அவனுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

“ஐயா ! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திலுள்ள வீரர்களையும் கடற்படையினரையும் துணைக் கொண்டே ஆக வேண்டிய பாதுகாப்புக் காரியங்களை நான் கவனித்துக் கொள்ள முடியும். தங்களுக்கு எப்போதும் உறுதுணையாயிருக்கும் ஊழியர்களை என்னோடு அனுப்பினால் தாங்கள் சிரமப்பட வேண்டியிருக்குமோ?”

“அப்படி ஒன்றும் சிரமமில்லை ! என் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னோடு துணைவராமல் இங்கு தங்கினால்தான் கொடுங்கோளுர்ச் செய்திகள் தெரியாமல் நான் சிரமப்படுவேன். அந்தச் சிரமம், சற்றுமுன் கொடுங்கோளூர் இரத்தின வணிகரின் மகள் கடற்கொள்ளைக்காரர்களால் கடத்திக் கொண்டு போகப்பட்டாள் என்ற செய்தியைக் கேட்டவுடன் நீ அடைந்த சிரமத்தைப் போலிருக்கும்” என்று கூறிவிட்டுப் புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தார் அமைச்சர். அவர் மனத்தில் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு பேசுகிறாரென்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்த நிலையில் அவரோடு அதிகம் பேசி விவாதிக்க விரும்பவில்லை அவன். ஆனால், குமரனின் மனத்திலோ சீற்றம் பொங்கிக் கொண்டிருந்தது.

அமுதவல்லி சிறைப்பட்டாள் என்றறிந்ததனால் வந்த சீற்றத்தை அமைச்சரின் உரையாடல்கள் வேறு அதிகமாக்கின. ஆனாலும், தன் சினம் வெளியே தெரியாமல் அடக்கிக் கொண்டு அவருக்குப் பணிந்தான் அவன். உடனே அவன் அங்கிருந்து கொடுங்கோளுருக்குப் புறப்பட விரும்பியதற்குக் காரணம், கடற்கொள்ளைக்காரர்களை எதிர்த்து அடக்கும் நோக்கம் ஒன்றுமட்டுமல்ல, வேளாவிக்கோ மாளிகையிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிடவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாயிருந்தது. எத்தனை பெரிய தீரனாக இருந்தாலும் வேளாவிக்கோ மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். பிறர்மேல் கோபம் வருவதற்குப் பதில் தனக்குத் தன்மேலேயே ஒரு கையாலாகாத கோபம் வரும். இதனால் எல்லாம்தான் குமரனுக்கு அங்கிருந்து விரைவில் வெளியேற வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நண்பகலில் குமரன் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து புறப்பட முடிந்தது. அமைச்சர் பெருமானின் கட்டளைப்படி வலியனும் பூழியனும் கூட உடன் வந்தார்கள். வஞ்சிமா நகர எல்லையைக் கடக்கிறவரை புரவிகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு போகமுடியவில்லை. அரசவீதிகளும் வாணிகப் பெருந் தெருக்களும் கலகலப்பாயிருந்தன. நகர எல்லையைக் கடந்ததும் கொடுங்கோளுருக்குச் செல்லும் சாலையில் விரைந்து செல்ல முடிந்தது. வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் கொடுங்கோளுர் நிலையைப்பற்றி அவர்கள் கேட்டறிந்தார்கள். கொடுங்கோளூர் முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் பரவியிருப்பதாக வழிப்போக்கர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. வழிப்போக்கர்கள் சிலரிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப் பற்றிக் கேட்டான் குமரன்நம்பி. கொடுங்கோளூர் நகரிலும் அந்தப் பெண்காணாமற் போய்விட்ட செய்தி பரபரப்பை உண்டு பண்ணியிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். குமரன் இவ்வாறு வழியிடை எதிர்ப்பட்டவர்களை விசாரித்த போதெல்லாம் வலியனும் பூழியனும் உள்ளூர நகைத்துக் கொண்டார்கள். “அந்த ஆந்தைக்கண்ணனையும் அவன் குலத்தினரையும் பூண்டோடு வேரறுப்பேன்” என்று வஞ்சினம் கூறினான் குமரன். தலைநகருக்கும் கொடுங்கோளுருக்கும் இடைப்பட்ட சிற்றுார்களிலும் அம்பலங்களிலும் கூடப் பயமும் பரபரப்பும் பரவியிருந்தன.

கதிரவன் மலைவாயில் விழுவதற்கு முன்னதாகவே அவர்கள் கொடுங்கோளூரை அடைந்து விட்டார்கள். படைக் கோட்டத்தில் இருந்த வீரர்கள் யாவரும் பொன்வானியாற்று முகத்துவாரத்திலும் கடற்கரையோரப் பகுதிகளிலும் காவலுக்கு அனுப்பப்பட்டிருந்ததனால் கோட்டத்தில் வீரர்கள் அதிகமாக இல்லை. இரண்டொரு காவலர்களும் மிகச்சில வீரர்களுமே இருந்தனர். அவர்களைக் கேட்டபோதும் “கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லி காணாமற்போனது உண்மையே” - என்று தெரிவித்தார்கள். அதே சமயத்தில் இன்னோர் உண்மையோடு முரண்படுவதாகவும் இருந்தது இந்தச் செய்தி.

கடலில் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் முதல் நாள் மாலை எந்த இடத்தில் நின்றிருந்தனவோ அந்த இடத்திலிருந்து முன்னேறவோ, பின் வாங்கவோ இல்லை என்று கூறினார்கள். அமுதவல்லி காணாமற் போய்விட்டாள் என்ற செய்தியும் கொள்ளை மரக்கலங்கள் கடலில் அதே இடத்தில்தான் இருக்கின்றன என்பதையும் இணைத்துப் பார்த்தபோது  ஒன்றோடொன்று பொருந்தவில்லை. ஆனால் சிந்திப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. முகத்துவாரத்திலிருந்து நகருக்குள் வர ஏற்றபடி பொன்வானியாற்றின் கால்வாய் ஒன்று இரத்தின வணிகரின் மாளிகைப் புறக்கடையை ஒட்டிச் செல்கிறது. அந்தக் கால்வாய் வழியே சிறு மரக்கலங்கள், பாய்மரப் படகுகள் ஊருக்குள் போக்கு வரவு உண்டு என்பதை நினைவு கூர்ந்தான் குமரன்.

ஒருகணம் இரத்தின வணிகளின் மாளிகைக்கே நேரே சென்று நிலைகளை அறியலாமா என்று தோன்றியது அவனுக்கு. அடுத்த கணம் அப்படிச் செய்யப் புகுவது சரியில்லை என்று தோன்றியது. அமைச்சர் பெருமானால் தன்னோடு அனுப்பப்பட்டிருக்கும் வலியனும் பூழியனும் தான் எங்கு சென்றாலும் உடன் வருவார்கள் என்பதும் அவன் அப்படிச் செல்வதற்கு ஒரு தடையாயிருந்தது. மேலும் கொடுங்கோளுர் நகரம் முழுவதுமே கடற் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் போது படைக்கோட்டத்துத் தலைவனாகிய தான் இரத்தின வணிகருடைய மாளிகையை மட்டும் தேடிச் செல்வது பலருக்குச் சந்தேகங்களை உண்டாக்கக்கூடும் என்றும் அவனால் உணர முடிந்தது.

அந்த வேளையில் அவனுக்கு உண்டாகிய சீற்றம் உடனே செயலாற்ற முடியாத சீற்றமாக இருந்தது. எப்படியும் அன்றிரவு தேர்ந்தெடுத்த வீரர்கள் சிலரோடு படகில் கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைவதென்று திட்டமிட்டான் அவன். கடம்பர்கள் என்னும் கொள்ளைக்காரர் கூட்டத்தை நிர்மூலமாக்கிவிடவேண்டும் என்னும் அளவிற்கு அவனுள் ஆத்திரம் நிறைந்திருந்தது. எங்கும் பயமும் பரபரப்பும் நிறைந்திருந்த சூழ்நிலையில் கொடுங்கோளுர் நகரமே உறங்கும் நள்ளிரவு வேளையில் கடற் பிரவேசம் செய்வதென்று தீர்மானித்தான் குமரன் நம்பி, வலியனையும் பூழியனையும் கூட இயன்றவரை தவிர்க்க விரும்பினான் அவன். அதனால் அவர்கள் உறங்கியபின்தன் குழுவினருடன் பொன்வானிக் கால்வாய் வழியே படகில் புறப்படவேண்டுமென்பது அவன் திட்டம்.

“அதே கால்வாய் வழியாக நாம் புறப்படுகிற வேளையில் கொள்ளை மரக்கலத்தைச் சேர்ந்தவர்கள் கடலிலிருந்து நகருக்குள் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?”- என்று வினவினான் குமரனின் வீரர் குழுவில் ஒருவன். அதற்குக் குமரன் மறுமொழி கூறினான்.

“இத்தகைய கடற்போரில் வெல்லும் நுணுக்கங்களை நம் பேரரசரும் கடற்பிறக்கோட்டியவர் என்ற சிறப்பு அடைமொழி பெற்றவருமான மாமன்னர் செங்குட்டுவர் நமக்குப் பழக்கியிருக்கிறார் என்றாலும் இரவுவேளையில் நாம் முன்னெச்சரிக்கையாகவே செல்லவேண்டும்.”

“ஆம்; இத்தகைய பலக்குறைவான வேளைகளில் புத்தியைவிட யுக்தியையே அதிகம் பயன்படுத்தவேண்டும்” என்றான் குமரன்.