வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/இமயமும் குமரியும்

விக்கிமூலம் இலிருந்து





3. இமயமும் குமரியும்



இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழும் நமக்கு இமயமும் குமரியும் நன்கு விளங்குவனவேயாம். இந்திய நாட்டின் வடவெல்லையில் பனிச் சிகரங்களைக் கொண்டு வானோங்கி நிற்கும் இமய மலையையும், தென்கோடியில் உள்ள குமரி முனையையும் அறியாதவர் யார்? பலர் இமயத்தின் உச்கியில் நின்று அப்பனிச் சிகரங்களுக்கு இடையில் தம் மனத்தைப் பறிகொடுத்து இயற்கையில் தோய்ந்து நிற்பதும், மூன்று கடல்களும் தழுவிச் சிறக்கும் குமரிமுனையில் நின்று அதன் அமைதியில் தம்மைப் பறிகொடுப்பதும் நாள்தோறும் நாட்டில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்தாமே! இப்படி இரு பக்கமும் உயர்ந்த மலையும் ஆழ்கடலும் சூழ உள்ள இந்திய மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் உண்மையில் தம் நாட்டை எண்ணிப் பெருமைப்படத் தக்கவரேயாவர். எனினும், இந்த இரு எல்லைகளும் வரலாற்றுக் கால எல்லைக்கு முன் எவ்வாறு இருந்தன என்பதை எண்ணிப் பார்ப்பின் பல உண்மைகள் நமக்கு விளங்காமற் போகா.

இமயம் கடலுள் ஆழ்ந்த காலம் ஒன்று இருந்தது என்ற உண்மையை நிலவரலாற்றையும் தொன்மையையும் ஆய்கின்ற புலவர்கள் நன்றாக விளக்குகின்றார்கள். விந்தியமலைக்கு வடக்கே பெரிய கடற்பரப்பு ஒரு காலத்தில் இருந்ததென்றும், பின், உலக வரலாற்றில் மிகப் பிந்திய காலத்தில் இமயமும் பிற்பகுதிகளும் தோன்றின என்றும் அவர்கள் ஆதாரங் கொண்டு காட்டுகிறார்கள். அதே நாளில் அந்த நினைவுக்கு எட்டாத வரலாற்றுக்கு முற்பட்ட சேய்மைக் காலத்தில் குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததென்றும் அது மேற்கே மடகாஸ்கர் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா வரையில் பரந்து இருந்த தென்றும் கூறுவர். அதைப்பற்றி ஸ்காட்டு எலியட்டு என்பவர் இழந்த லெமூரியாக் கண்டம்[1] என்னும் ஒரு நூலில் நன்றாக லிளக்குகின்றார். இவ்வாறு மேலை நாட்டு ஆராய்ச்சியாளர் தம் கூற்றுக்களை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ் இலக்கியங்கள் பலப்பல சான்றுகளை நமக்குத் தருகின்றன. குமரிக்குத் தெற்கே ஆறுகளும் மலைகளும் இருந்தன என்றும் அவற்றை ஒரு காலத்தில் கடல் கொண்டது என்றும் , அக்காலத்து ஆண்ட பாண்டியன் வடக்கே புதியனவாய் உண்டான கங்கையையும் இமயத்தையும் தனதாக்கிக்கொண்டு வாழ்ந்தானென்றும் சிலப்பதிகாரம் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அந்தப் பழங்காலத்தி லிருந்தே பாண்டியர்கள் ஆண்ட காரணத்தினாலேதான் அவர்களுக்குப் பண்டையர் என்ற பெயர் வந்து, பிறகு பாண்டியர் என்னும் பெயராய் மருவியது என்பர் ஆராய்ச்சியாளர் சிலர். எப்படியாயினும், அந்த நிலம் அழிந்த ஒரு பேரூழிக் காலத்தே பாண்டியர் ஆண்டார் என்று கொள்வதில் தவறு இல்லையன்றோ? சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தைத் தொடங்க நினைத்த இளங்கோவடிகள், அப் பாண்டியன் இழந்த குமரி மலையையும் பஃறுளியாற்றையும் கூறி, அவன் அவற்றிற்குப் பதிலாகக் கங்கையையும் இமயத்தையும் கொண்ட சிறப்பை விளக்குகின்றார்.

'அடியிற் றன்னள வரசர்க்கு உணர்த்தி,
'வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி![2]"

என்னும் சிலப்பதிகார அடிகளின்படி ஆராயின், இக்காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி என்ற பேராறும் குமரி மலையும் பிற மலைகளும் இருந்தன என்பதும், அவை அனைத்தும் ஒரு நீர் ஊழியால் அழிந்து விட்டன என்பதும் நன்கு தெரிகின்றன. அதற்குக் காரணமும் காட்டுகின்றார் ஆசிரியர். அதுபற்றி நாம் இங்கு ஆராயத்தேவையில்லை. பல மலைகளும் ஆறுகளும் குமரிக்குத் தெற்கே இருந்து அழிந்தன என்ற ஒன்றே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இழந்த நாட்டுப்பரப்பைச் சரி செய்வதற்காகவே தென்னவனாகிய பாண்டியன் புதியனவாகத் தோன்றிய இமயத்தையும் கங்கையையும் கொண்டான் என்பதும் தெரிகின்றது. இழந்த அந்தப் பரப்பைக் ‘குமரிக்கண்டம்' என்றே கூறுவர். அதில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்றும், அவை எழு பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றிருந்தன என்றும், அப்பகுதியில் தமிழ் மொழி நன்கு வளம்பெற்று நின்றதென்றும் கூறுகின்றனர். அந்தப் பகுதியின் மலைத்தொடர்ச்சியே இன்று சுமத்திரா ஜாவா முதலிய இடங்களில் உள்ளன எனவும் காட்டுவர். அந்தப் பரப்பிலேதான் தமிழ் வளர்த்த முதல், இடைச் சங்கங்கள் இருந்தன என்பர். முதற்சங்கம் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாய் இருந்த பாண்டிய மன்னர் புரக்க, 4440 ஆண்டுகள் தென்மதுரையில் இருந்ததென்றும், இடைச் சங்கம் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாகக் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்ததென்றும், கடைச் சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாக இக்காலத்து மதுரையில் 1850 ஆண்டுகள் இருந்தது என்றும் இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கூற்றை அப் படியே உண்மை என ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், கபாடபுரம் போன்ற தலைநகர்கள் இருந்தன என்று கொள்வதில் தவறு இல்லை எனலாம். வான்மீகியார் தம் இராமாயணத்தில், சுக்கிரீவன் வானர சேனையைத் தேடவிட்ட காலத்தில், “பாண்டியர் தலை நகராகிய கபாடபுரத்திலும் தேடக்கடவீர்கள்” என ஆணையிட்டதாகக் கூறுவர். சமய இலக்கியங்களில்[3] குமரிக்குத் தெற்கில் மகேந்திரமலை என்ற ஒரு மலை இருந்ததாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. மற்றும் கந்தபுராணத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கில் கடலில் மகேந்திர மலையும் நாடும், வழியில் கந்தமாதனக் கிரியும் இருந்தனவென்றும், அவை இருந்த நாட்டின் பகுதியையே சூரபதுமன் ஆண்டான் என்றும் குறிப்புக்கள் உள்ளன[4] . கந்தபுராணத்தில் அந்த மகேந்திரத் திற்கும் செந்திலை ஒட்டியிருந்த கந்தமாதனக் கிரிக்கும் இடையிலேதான் இலங்கை இருந்ததென்றும் கடல் பாய்ந்து சென்ற வீரவாகு அதையும் கடந்து சென்றான் என்றும் காட்டுவர் கச்சியப்பர். அவர் காட்டும் முருகனுடைய வழியில் முறையாகத் தமிழ்நாட்டு ஊர்கள் வருகின்றன. செந்திலுக்குத் தெற்கே நிலப்பரப்பும் மலைகளும் காட்டப் பெறுகின்றன. எனவே, புராணங்கள் வழியும் இக்காலத்துக் குமரிக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததெனக் கொள்ள இடமுண்டு. இந்த மகேந்திரமும் பிற பகுதிகளும் சூரபதுமனுக்குப்பின் கடல் கொண்டது என்ற உண்மையைக் கந்தபுராணம் தெளிவுறக் காட்டுகின்றது[5] பரிபாடலில் இத்தகைய நீர் ஊழிகள் பலப்பல வரும் என்பதை ஆசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்றைய விஞ்ஞான முறைப்படி நிலத்தியல்பை ஆராயும் அறிஞர் அனைவரும் இத்தகைய ஊழிகள் உலகில் இயற்கையே என்றும், பழையன மறைவதும் புதியன தோன்றுவதும் இயல்பே என்றும் தக்க காரணங்கள் காட்டி விளக்குகின்றனர்[6] . எனினும், இந்த இலக்கியங்களில் வந்த குமரித்தென்பாலைக் கடல்கொண்ட ஊழி என்று உண்டாயிற்று என்பது திட்டமாகக் கூற முடிய வில்லை. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் ஒர் ஊழி நடை பெற்றதென்றும், 5000 ஆண்டுகளுக்கு முன் மற்றோர் ஊழி நடைபெற்றதென்றும் கூறுவர். திட்டமாக இவற்றுள் ஒன்றாலேயே குமரிக்கண்டம் அழிவுற்றிருக்க வேண்டும் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, இந்த ஊழி பற்றி வடநாட்டுப் புராணங்களும் பிற ஆரியர் வரலாறுகளும் குறிக்கின்றன. வைவச்சுத மனுவின் காலம் கி. மு. 3100ஐ ஒட்டியதென்றும், அக்காலத்தில் ஒரு பெரிய நீர் ஊழி வந்ததென்றும், அதிலிருந்து ஒரு மீனின் உதவியால் அவன் உயிர் தப்பினான் என்றும், அந்த மீனுக்கு அவன் முன் செய்த உதவியே அவனை வாழவைத்தது என்றும், அவன் ஒர் உயரிய மலையின்மேல் ஏறிப் பிழைத்தான் என்றும் ஆரிய புராணங்கள் குறிக்கின்றன[7]. தமிழ் இலக்கியத்தில் வரும் மனுவேந்தனும் இவனும் ஒருவனோ என எண்ண வேண்டியுள்ளது. இருவரும் சூரியகுல முதல்வர் எனவே குறிக்கப் பெறுகின்றனர். இந்த மனு தன் ஒரே மைந்தனை அவன் பசுவின் கன்றைக் கொன்றான் என்ற காரணத்தால் அறநெறி வழுவா வகையில், தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதி வழுவா நெறி முறையின் ஆண்டவன். தன்னினும் தாழ்ந்த உயிருக்கும் இரங்கிப் பசுவின் துயரத்தைத் துடைத்த வரலாறும், மீனின் துயர் நீக்கிய வரலாறும் ஒரே வகையில் அமைகின்றன. இங்கு நமக்கு அத்தகைய ஆராய்ச்சி தேவை இல்லை. ஆனால், அந்த மனுவின் காலத்தில் சுமார் 5100 ஆண்டுகளுக்குமுன் ஒரு நீர் ஊழி உண்டாயிற்று என்ற ஒன்றே போதும். இப்படிப் புராணங்களும், இலக்கியங்களும், வரலாறும், தொல்பொருள் ஆராய்ச்சியும், நில நூலும் ஒருசேரக் கூறுகின்றபடி இமயம் கடலுள் ஆழ்ந்திருந்த காலமும், குமரிக்குத் தெற்கே பரந்த நிலப் பரப்பு இருந்த காலமும் உலகில் உண்டு என்று கொள்வது முற்றும் பொருந்துவதேயாகும்.

இந்த இழந்த நிலப்பரப்பிலேதான் முதல் முதல் மனிதன் தோன்றினான் என்பர். மனிதத் தோற்ற வளர்ச்சி பற்றியும் மொழி பற்றியும் ஆராய்கின்ற அறிஞர்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். மனிதர் மத்திய ஆசியாவிலோ அன்றிக் குமரிக்கண்டத்திலோ தனித்தனியாகத் தோன்றிப் பல இடங்களுக்கு மெள்ள மெள்ளப் பரவினர் என்பர். இந்தியா முழுவதிலும் பரவி இருந்த திராவிடப் பெருங்குடி மக்களைப் பற்றி ஆராய்கின்ற வரலாற்றறிஞர்கள், இந்தக் கொள்கையின் அடிப்படையில், நாடு முழுவதும் பரவியிருந்தும், இன்று தென்னாட்டில் தனிப் பண்பாட்டை வளர்த்தும் வாழ்ந்துவரும் திராவிட மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து மெள்ள மெள்ள இமயம் வரை வடக்கு நோக்கி வந்தவர் என்று கூறுகின்றார்கள். ஒருசிலர் மத்தியதரைக் கடலிலிருந்து வந்தவர்கள் என்பர். எனினும், முன்னதே வலியுடைத்தாகும். இன்றும் விந்திய மலைக்குத் தெற்கும். குமரிக்கு வடக்கும் உள்ள நிலப்பரப்பு வடவிந்திய நிலப் பரப்பினும் தொன்மை வாய்ந்தது என்று ஆராய்ந்து காட்டியுள்ளனர். எனவே, பழமையான மண்ணில் மக்கள் தோன்றிப் பிற இடங்களுக்கு மெள்ள மெள்ளச் சென்றார்கள் என்று கொள்வது பொருத்தமாகும்.

இந்த நிலையில் நிலத் தோற்ற அழிவுகளைக் கண்டு அமைவோம். பரந்த குமரிக்கண்டம் அழியவும், புதிய வடவிந்தியப் பகுதி தோன்றவும் தென்னாட்டில் வாழ்ந்த மக்களும் அவர்களின் தலைவனாகிய மன்னனும் இழந்த குமரிக்கண்டத்துக்குப் பதிலாக வடவிந்தியப் பகுதியை இமயம் வரையிலும் ஆப்கானிஸ்தானத்திலிருந்து அசாம் வரையிலும் கைப்பற்றி ஆரியர் நுழைவுக் காலம் வரையில் ஆண்டார்கள் என்றும், பரந்த இந்தியா முழுமையையும் தங்கள் வாழிடமாகக் கொண்டார்கள் என்றும் கொள்ளுதல் வேண்டும்.

தமிழ்நாட்டு மன்னருள் சிலர் அந்தக் கடல் அழியாக் காலத்து இருந்துள்ளார்கள் எனக் கொள்ளலாம் போலும்! அவருள் ஒருவனாகப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறிப்பர். அவனைப் பாராட்டிய புலவர் நெட்டிமையார் அவனை வாழ்த்தும்போது,

'எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!
(புறம். 9)

என வாழ்த்துகின்றார். இந்தப் பாட்டின் அடிப்படி அவன் காலத்தில் பஃறுளி இருந்தது எனக் கொள்ளத் தேவை இல்லை. அவனைப் பாராட்டிய புலவர் அவன் முன்னோன் ஒருவன் வாழ்ந்ததை எண்ணுகிறார். அவனுடைய அழியாத பரந்த நாடும், ஆறும், மலையும், பிறவும் அவர் உள்ளத்திரையில் நிழலிடுகின்றன. எனவே, அந்த ஆற்று மணலினும் பல நாள் வாழ்வானாக என அவனை வாழ்த்துகின்றார்: நெடியோன் நன்னீர்ப் பஃறுளி எனவே குறிக்கின்றார். அந்நெடியோன் யாவன்? அவனைப் பற்றிப் புலவர் சிலர் பாராட்டுகின்றனர். அவன் நிலந்தரு திருவின் நெடியோன்’ எனவே பாராட்டப்பெறுகின்றான். அவன் நிலந்தரு திருவிற் பாண்டியனாய் இருக்கலாம் அன்றோ!

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த வீரமும் தமிழ்ப் பற்றும் உடைய மன்னன்; புலவர் வாய்ச் சொல்லுக்கு ஏங்கி நின்றவன். அவன் வஞ்சினம் கூறுங்கால்,

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலையிய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் கிலவரை'
(புறம்.72)

எனக்கூறித் தான் புலவர் வாய்ச் சொல்லுக்கு ஏங்கி நிற்கும் நிலையை எடுத்துக் காட்டுகின்றான். அத்தகைய மன்னனைப் பாடவந்த புலவர் மாங்குடிமருதனார் அவனைப் பாடுகின்ற அதே வேளையில் அவனுடைய முன்னோர்களையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றார்; பல்யாகசாலை முதுகுடுமியின் சிறந்து வாழ்க’ என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் போல இனிது உறைமதி' என்றும் அவனை வாழ்த்துகின்றார். புலவர் போற்றும் பண்பாட்டிலும் பிற நல்லியல்புகளிலும் அவர்கள் ஒத்திருந்தார்கள் போலும்! அதனாலேயே அவர்களை எண்ணுகின்றார் புலவர். நெடியோனைக் குறிக்கும்போது,

'தொல்ஆணை நல்லா சிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
                      (மதுரைக் காஞ்சி. 761-63)

என்றும், முதுகுடுமியைப்

'பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறையோகிய (மதுரை. 759,60)

என்றும் காட்டுகின்றார். சிலர் இருவரையும் பிணைத்து ஒருவரே என்பர். அவர் கூற்றுக்கு ஆதாரமாக முன் கண்ட புறப்பாடலை எடுத்துக் காட்டுவர். ஆனால், நெட்டிமையார் அப் புறப்பாட்டிலே அம்மன்னனை, குடுமி' எனப் பிரித்துப் பின், நெடியோன் பஃறுளி மணலினும் பலவே வாழிய!” என்றே வாழ்த்துகின்றார். எனவே, இருவரும் ஒருவரே அல்லர் என்பது நன்கு தெரிகின்றது.

நிலந்தரு திருவின் பாண்டியன் இடைச்சங்க காலத்திருந்தவன். அவன் காலத்திலேதான் தொல்காப்பியம் அரங்கேறிற்று என்று தொல்காப்பியப் பாயிரம் நன்கு காட்டுகின்றது. தொல்காப்பியர்,

'நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி'த்
                              
(தொல். பாயிரம், 9. 12)

தம் தொல்காப்பியத்தை நிறைவேற்றினர். இதில் வரும் நான்மறை என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் நன்கு விளக்கம் தருகின்றார். எனவே, தொல்காப்பியம் பாண்டியன் அவைக்களத்து நிறைவேறிற்று எனக் கொள்ளல் பொருந்தும். தொல்காப்பியம் கபாடபுரத்து இருந்த இடைச்சங்க நூலென இறையனார் களவியல் உரை குறிக்கின்றது. எனினும், தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுக்குமுன் கொண்டு செல்ல முடியாது எனச் சிலர் வாதிடுகின்றனர். சிலர் அஃது ஐயாயிரமாண்டுகளுக்கு முற்பட்டதென்பர். பின்னவர் கூற்றுப்படி பார்ப்பின், மேலே நாம் கண்ட அந்தரத்தில் மனு உண்டான 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊழிக்குமுன் அவர் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். இக்கொள்கை இன்னும் நன்கு ஆராய்தற்குரியது.

நிலந்தருதிருவின் நெடியோன் காலத்தில் பஃறுளி ஆறு இருந்ததென்பதே நமக்கு இங்குத் தேவை அவனை நேராகப் பாராட்டிய புலவர் இவர். புலவரைப் போற்றும் நெடுஞ்செழியனைப் பாடவந்த மருதனாருக்கு அந்நெடியோன் பண்பும் தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுறவும் நினைவுக்கு வரவே, அவனைக் காட்டி, அவனைப்போல வாழ்க என்றார்! அவனுடன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியையும் பிணைத்தார். முதுகுடு மியைப் பாட வந்த நெட்டிமையாரும் இதே நினைவிலேதான் நெடியோனை நினைந்து, ‘அவனது ஆற்று மணலினும் பலவாக இவன் வாழ்வானாக!” என வாழ்த்தினார்.

இனி இதே தொடரில்,

"நிலந்தரு திருவின் நெடியோய்! (பதிற், 82: 16)

என்று பெருங்குன்றுரர் கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைக் காட்டி வாழ்த்துகின்றார். இங்கே வரும் தொடர், அவன் நிலத்தை நன்கு ஆளுகின்றான். எனவே குறிக்கின்றது. ஆகவே, இந்தத் தொடருக்கும் பாண்டியருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

பல்யாகசாலை முதுகுடுமியைப் பற்றிக் காண்போம். ‘முதுகுடுமி’ என்ற இவன் பெயரும் இவனைப் பாடியவரின் நெட்டிமையார்’ என்ற பெயருமே ஓரளவு தொன்மையைக் குறிக்க வருவன எனக்கொள்ளலாம். இவனைப் பாடினவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள்[8] உள்ளன. இவனைப் பாடியவர் காரி கிழார் (6), நெட்டிமையார் (9,12,15), நெடும்பல்லியத்தனார் (64) ஆவர் மூவர் பெயர்களுமே பழமையைக் குறிப்பன. இனி இவர் தம் பாடலுள் காரிகிழார் இவன் ஆட்சி எல்லையை இமயம் முதல் குமரி எல்லைக்கு அப்பாலும் குறிக்கின்றார்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’

                                          (புறம் .6:1,2)

இவன் உருவும் புகழும் சிறந்தனவாய் இருந்தன எனக் குறிக்கின்றார். எனவே, இவன் இமயம் வரை ஆண்டான் என்று கொள்ளலாம். ஆளவில்லை என்று சொல்லினும் இவன் புகழ் இமயம் வரை பரவி இருந்தது எனக் கொள்ளு வதில் தவறு இல்லையன்றோ! இவனைப் பாராட்டும் பாடல்கள் இரண்டு. இவன் நான்மறை முனிவரைப் பணிந்தமையையும் வேள்வி வேட்டதையும் குறிக்கின்றன. இவன் பெயரே இவன் இராசசூய யாகம் வேட்டவன் எனக் குறிக்கின்றது. நான்மறை என்றதற்கு நச்சினார்க்கினியர் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கும் அல்லாத வேறு வேதங்களைக் காட்டுவர். வேள்வி எத்தகையது எனக் கொள்ள முடியவில்லை. எனினும், சற்று ஆராய்ந்தால் இவன் ஆரியர் வேதத்தையும் யாகத்தையும் கொள்ள வில்லை என்று கூறுவதிலும், அவற்றைக் கொண்டான் என்பதிலும் தவறில்லை என்பது கொள்ளத்தகும். தொல்காப்பியர் காலத்து நிலந்தரு திருவின் நெடியோனுக்குப்பின், இவன் வாழ்ந்தவன் என்பது மேலே கண்ட வகையில் தெளிவாகின்றது. தொல்காப்பியத்தில் வேட்டல், வேட்பித்தல் போன்ற சடங்குகளும், பிற இரண்டோர் ஆரியர் பழக்க வழக்கங்களும் காட்டப்பெறுகின்றன. எனவே, இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றேனும் அதற்குப் பிறகு கடைச்சங்க காலத்துக்கு முன் ஆரியர் தமிழ் நாட்டில் நுழைந்து தம் கொள்கையைப் பரப்ப முயன்றனர் எனக் கொள்ளல் பொருந்துவதாகும். தக்கணப் பழங்கால வரலாற்றை எழுதிய பண்டர்க்கார் என்பவர் ஆரியர் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வந்தார் எனவும், பதஞ்சலிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அவர் தம் கொள்கை தென்னாட்டில் பரவி இருக்க வேண்டும் எனவும் காட்டியுள்ளார்[9]. பதஞ்சலியின் காலத்தைச் சிலர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், சிலர் ஐந்தாம் நூற்றாண்டு என்றும் காட்டுவர். எனவே, இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்பது பெறப்படும். ஆகவே, அக்காலத்தை ஒட்டியோ அதற்குச் சற்றுப் பிந்தியோ கடைச்சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவனே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று கொள்வது பொருந்துவதேயாகும். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பேரும் புகழும் இமயம்வரை சிறந்திருந்தன என்பதும், எனவே அக்காலத்தில் தமிழர் இமயம் வரை பெருமையோடு பரந்து வாழ்ந்துவந்தனர் என்பதுமே நாம் கொள்ள வேண்டுவன.

இவனைத் தவிர்த்து, ‘இமயவரம்பன்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற வேந்தர்களே தமிழகத்தில் வாழ்ந்துள்ளார்கள். தமிழ்நாட்டுச் சேர, சோழ, பாண்டியர் மூவருமே இமயம் வரை சென்றிருக்கின்றனர்; இமயம் வரை வென்றும் இருக்கின்றனர். மூவேந்தர் தம் இலச்சினையும் இமயத்தில் பொறிக்கப் பெற்றன. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு இலக்கியங்களும், வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மை காட்டும் வரலாறுகளும் நன்கு விளங்குகின்றன. பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் என்பவன் பாண்டவர் துரியோதனாதியர் போரில் இடையிடைச் சோறிட்டு உதவினான் என்பதைப் புறம் இரண்டாம் பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. அவனைப் பற்றித் தனியாகவே ஆராய்ந்து காணலாம் எனக் கருதுகின்றேன். புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் அவனை வாழ்த்துமுறையே இங்கு நாம் காண வேண்டுவது. அவருக்கு அவன் வாழ்வையும் உயர்ச்சியையும் செம்மையையும் எண்ணும்போது வடக்கில் ஒரு மலையும் தெற்கில் ஒரு மலையும் நினைவுக்கு வருகின்றன. அக் காலத்தில் இமயத்தில் அந்தணர் அந்தி அருங்கடன் இறுக்கும் காட்சியும் அக்காட்சியைச் சூழ்ந்த இயற்கை எழிலும் மான் துஞ்சலும் அவருக்கு விளங்குகின்றன. அனைத்தையும் பிணைத்து,

'திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தி விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!
(புறம் 2)

என முடிக்கின்றார் அவர் எனவே, அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழருக்கு இமயம் பொதியமலை ஒத்தே உரியதாகவும் சிறந்ததாகவும் விளங்கிற்று என்பது தெளிவு.

இமயத்தை எல்லையாகக் கொண்ட காரணத்தால்

"இமயவரம்பன்' என்ற பெயரைப் பெற்றனர் என்பது அக்கால அவ்வரசர்களுக்குப் பொருந்துவதாகும். வட நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் ஆண்ட காலத்தில் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் தொடர்பு இருந்துவந்தது எனக் காண்கின்றோம். அவர் காலத்துக்கு முன்னும் சந்திரகுப்தமெளரியர், நந்தர் காலத்திலும் தமிழ்நாட்டுக்கும் வடநாட்டுக்கும் தொடர்பு இருந்ததை அறிகின்றோம். எனவே, அசோகர் காலத்துக்கு முன்னோ பின்னோ, தமிழ்நாட்டு அரச மரபினருள் சிலர் ஒருவர்பின் ஒருவராக இமயம் வரை படை எடுத்துச் சென்று வெற்றி கண்டு இமயத்தில் இலச்சினையைப் பொறித்து வந்தனர் என்பது அறிய முடிகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் இமயத்தையும் குமரியையும் எல்லை யாகக் கொண்டார்கள் என்பதை ,

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்துஒழுகிய
கொற்றவர்தம் கோனாகுவை'
(மதுரை.70-74)

என மாங்குடி மருதனாரும்,

‘தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை,
(புறம். 17: 1,2)

எனக் குறுங்கோழியூர் கிழாரும்,

‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே'
                                    (பதிற். 11: 23-25)

எனக் குமட்டுர்க் கண்ணனாரும் வரைந்துள்ளனர். இவற்றுள் நாம் முன்கண்ட புறநானூற்று ஆறாவது பாடலும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். அதிலும் முதுகுடுமிப் பெருவழுதிக்கு இவ்வெல்லை குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு தமிழ் மன்னர்கள்-மூன்று குலத்திலும் பிறந்த சிறந்த மன்னர்கள் . இமயம் வரை சென்றுள்ளார்கள் எனக் காண்கின்றோம்.

பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழன் கரிகாற் பெருவளத்தானும், சேரன் இமயவரம்பனும் செங்குட்டுவனும் இமயம் வரை சென்று கயல், புலி, வில் இவற்றைப் பொறித்தார்கள் எனக் காண்கின்றோம். பாண்டியர் இமயம் வரை சென்றதை,

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல்எழுதிய புலியும் வில்லும்
நாவலம் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பார்அர சாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன்'
                                (சிலம்பு. 17: 1-5)

என இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகின்றார். இனி, அவரே சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயம் வரையில் சென்றதையும் அவன் பெற்ற வெற்றிச் சிறப்புக்களையும் குறிக்கின்றார்.

“செருவெங் காதலின் திருமா வளவன்
...............................
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு

மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதான் னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்"
                             (சிலம்பு, 5: 90, 97-104)

என்று இளங்கோவடிகள் திருமாவளவன் வடநாட்டு இமயப் படை எடுப்பைக் குறிக்கின்றார். இது சிலப்பதிகாரக் காலத்துக்கு நெடுநாட்கு முன்னரே நடைபெற்ற நிகழ்ச்சி என்பதை அவரே, புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள், (சிலம்பு. 5; 94) என இறந்த காலத்தால் சேய்மை சுட்டி விளக்குகின்றார். சிலம்பின் காலத்தில் திருமாவளவன் வாழவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. இளங்கோவடிகள் இப்படி விளக்கிக் கூறிய ஒன்றைத்தான் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் 'வடவர் வாட' (276) என மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டார். இவ்வாறு பாண்டியரும் சோழரும் இமயம்வரை சென்றாலும், இமயவரம்பன்' என்ற சிறப்புப் பெயர் சேரனுக்கே அமைந் துள்ளதைக் காண்கின்றோம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனவே அவன் குறிக்கப் பெறுகின்றான். அவனைக் குமட்டுர்க் கண்ணனார் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தால் பாராட்டிப் பேசுகின்றார்.

இரண்டாம்பத்தில் பதிகம் அவன் வென்றியைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றது.

'அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
..................................
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி"

ஆண்டவன் எனப் பதிகத்தால் அவன் புகழப்பெறுகின்றான். இமயம் வரை ஆண்ட மன்னர் அவன் வாய்மொழி வழி ஒழுகி நின்றார்கள் என்பதையும் அவ்விமயத்து ஆரியர்கள் இருந்தார்கள் என்பதையும், அந்த இமயம் இயற்கையொடு பொருந்திய பெருமலை என்பதையும் புலவர் குமட்டுர்க் கண்ணனார், -

'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்துஇலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே!
                                (பதிற். 11: 21-25)

எனக் காட்டுகின்றார். இமயவரம்பன் கொடையைக் கூற நினைத்தபோது புலவருக்குப் பாரதப் போரும், அதில் இடை நின்று உதவிய அக்குரன் பெயரும் நினைவுக்கு வர,

போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே."
                          (பதிற். 14: 5.7)

எனப் பாராட்டுகின்றார். இவ்வாறு இமயவரம்பன் என்ற பெயர் பொருந்தும் வகையில் இவன் இமயம் வரையில் வெற்றி கொண்டு, அவ் வடநாட்டவரோடு தொடர்பு கொண்டிருந்தான் என்பதைக் காண்கின்றோம்.

இவனுக்குப் பின் ஆண்ட சேரன் செங்குட்டுவனும் இமயம் வரை இரு முறை படையெடுத்து வந்தவன் என இலக்கியங்கள் குறிக்கின்றன. இவனைப் பரணர் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்திருக்கின்றார். அவர் இவன் இமயம் வரை பெற்ற வெற்றிச் சிறப்பினை,

'கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக,
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்

முரசுடைப் பெருஞ்சமம் ததைய, ஆர்ப்புஎழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!'
                                 (பதிற். 43: 6-11)

எனச் சிறப்பிக்கின்றார். இவன் பத்தினிக் கடவுளுக்குக் கல் வேண்டி இமயம் சென்றதை இப்பத்தின் பதிகம்,

'கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டிக்
கான்கவில் கானம் கணையின் போகி
ஆரிய அண்ணலை வீட்டி, பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி!'
                      (5-ஆம் பதிகம், 4-7)

எனக் காட்டுகிறது. இவ்வாறு இங்குப் பாராட்டப்பெற்ற இவன் சிறப்பும், போரும், விழாவும், வாழ்த்துமே சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டமாக உருப்பெற்றுள்ளன. சிலர் தம் கொள்கையை நிலைநாட்டுவதற்காக இச்செயலை மறுக்க வேண்டிச் சிலப்பதிகார வஞ்சிக்காண்டமே இளங்கோவடிகளால் எழுதப்பட்டது அன்று என மறுப்பர். இப்படித் தம் கொள்கையை ஆராயும் நூல்களில் புகுத்தி முடிவு காண முயன்றால், நாட்டில்-உலகில்-எத்தனையோ நூல்கள் அழிக்கப்பட வேண்டியிருக்கும். இந்தக் காலத்தில் பிந்திய செங்குட்டுவன் படை எடுப்பே இராது என்றால், பிறவற்றை யெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தென்னாட்டு இலக்கியங்களும், வடநாட்டுக் காவியங்களும் இரு நாடுகளுக்கும் வரலாற்றுக்கு நெடுநாட்கள் முன்னிருந்தே உள்ள தொடர்பினைக் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்கக் கால எல்லையில் நின்று வரலாற்றுக்குப் பயன்படா என்பது ஒரளவு உண்மை என்றாலும், இவை வரலாற்றுக்கே பொருந்தா எனக் கொள்வதும், தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்துடைய இலக்கியங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் நல்ல வரலாற்றறிஞர் செய்கை ஆகாது என்பது துணிபு.

இவ்வாறு சில ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே வடக்கே உள்ள இமயமும் தெற்கே உள்ள குமரியும் பலப் பல வகைகளில் பின்னிப் பிணைந்து நின்றன. ‘குமரியொடு’ வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' என்று இளங்கோவடிகள் கூறியபடி இந்த நாடு முழுவதும் திராவிட மொழியும், அதன் அடிப்பட்ட பண்பாடும் நாகரிகமும் பரவி இருந்தன என்பது வரலாறு அறிந்த ஒன்றாகும். இன்றும் கிழக்கே காமரூபமாகிய அசாமிலும், மேற்கே பலுசிஸ்தானத்திலும், மத்திய இந்தியாவில் சூடிய நாகபுரியின் பக்கத்திலும் இத்திராவிட மொழிச் சிதறல்கள் இருப்பதைக் காண்கின்றோம். அக்காலத்தில் இம்மக்களால் அனைத்திந்தியாவிலும் போற்றி வழங்கப்பட்ட பலவகை நல் இயல்புகள் இன்றும் பல்வேறு வகையில் உறழ்ந்தும், பிறழ்ந்தும், மாறியும் வாழ்வதைக் காண்கின்றோம். அன்று தென்கோடியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அன்பாலும், ஆணையாலும், பண்பாலும், பாராட்டாலும் இமயம்வரை தங்கள் கலையையும் நாகரிகத்தையும் வளர்த்து வாழ வைத்தார்கள். அவர்தம் செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும்' நல்ல பண்பினால் மெள்ள மெள்ள வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வழிவிட்டுத் தெற்கே வந்தனர். தெற்கே அவர்கள் வாழ்ந்திருந்த பெருநிலப் பகுதியை இயற்கை கொண்டு, கடலால் அழிந்தது. இவ்வாறு இரு புறத்தும் இயற்கையாலும் செயற்கையாலும் வாழ்விழந்த தமிழ் மக்கள், இன்றும் வாழிடம் எல்லையில் சுருங்கிய போதிலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த மனப் பான்மையின் உணர்வையும் உள்ளத்தையும் விரிவாக்கியே வாழ்ந்து வருகின்றார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட அந்த நெடுங்காலத்தில் இவர்கள் எவ்வெவ்வாறு வடநாட்டோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக உணர்ந்து பார்ப்பின் இவர்கள் பெருமை இனிது விளங்கும் என்பது உறுதி.

  1. The Lost Lemuria, by Scott Eliot
  2. சிலப். 11 : 17.22
  3. சிவதருமோத்திரம்.
  4. கந்தபுராணம்: மகேந்திரகாண்டம்.
  5. கந்த மீட்சிப்படலம், 15, 16
  6. கந்த மீட்சிப் படலம் பாடல் 16, 18.
  7. The Vedic Age, Vol. p. 271
  8. புறம். 6, 9, 12, 15, 64.
  9. Early History of Dekkan, by R.G. Bhandarkar, 18-21