உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுக் காப்பியம்/எண்ணும் எழுத்தும்

விக்கிமூலம் இலிருந்து

எண்ணும் எழுத்தும்

ஒலித்து ஒலித்து உருவம் கொடுத்து
வரி வடிவென்ற வழக்கிற்கு வர
முதற்கண் பொருளின் வடிவைப் பொறித்தான்
சித்திர எழுத்தென்று செப்பினர் முன்னோர்
சீனர் முறையும் அந்த சித்திர வகுப்பே
செந்தமிழன் வகுத்தது கண்ணெழுத்து
கண்ணெழுத்து வளர்ந்து கல்லெழுத்தானது
ஒட்டு உடைவு வளைவு நெளிவுகளை
ஒழுங்கு படுத்தி வெட்டெழுத்தாக்கினான்
வட்டெழுத்தென்ற வடிவுக்கு வந்தான்
ஏடுதிருத்தினான் எழுத்தாணி பிடித்தான்
நெட்டெழுத்தாகி நெடுங்கணக்கானது
யவனர் எழுத்தும் தமிழினத்துச் சாயலே
எழுத்தில் சிறந்தான் எண்ணத்தில் உயர்ந்தான்
மண்ணிலும் வளம்பார்த்து வகுத்தான்
தெங்கம் மதுரை முன்பாலை பின்பாலை
குன்றம் குணகரை குறும்பனை என்று
நாற்பத்து ஒன்பது நாடுகள் ஆயின
எழு நூற்றுக் காவதம் இடம் கொண்டதென்றார்
காவதத்திற்கும் கணக்குண்டு சொல்லிவைத்தார்
அணுக்கள் எட்டுகொண்டது ஒரு தேர்த்துகள்
தேர்த்துகள் எட்டுகொண்டது பஞ்சிழை
பஞ்சிழை எட்டுகொண்டது மயிரிழை
மயிரிழை பட்டுகொண்டது ஒரு மணல்

மணல் எட்டு கொண்டது ஒரு கடுகு
கடுகு எட்டு கொண்டது ஒரு நெல்
நெல்லளவு எட்டு கொண்டது ஒரு விரல்
விறற்கிடை எட்டு கொண்டது ஒரு சாண்
சாணிரண்டு கொண்டது ஒரு முழம்
முழம் நான்கு கொண்டது ஒரு கோல்
ஐநூறு கோல் அளவு ஒரு கூப்பீடு.
கூப்பீடு நான்குக்கு ஒரு காவதம்
முன்னைத் தமிழன் முழக்கோல் முறையில்
காவதத்துக்கு எண்ணாயிரம் முழங்கள்
பின்னும் பொருள் நூல் புகன்ற புலவன்
தூரத்தை நேரத்தால் யோசனை என்றளந்தான்
யோசனை ஒன்றுக்கு காவதம் இரண்டென்றார்
இன்றய அளவைமுறை இவற்றிற்கு மாறுபடும்
மைலும் கிலோவும் இன்று வந்த புதுக்கணக்கு
ஒன்றிரண்டென்று ஒன்பதுக்குமேல்
இன்றுவரை உலகில் எவனுமே எண்ணவில்லை
சுன்னத்தில் பெரிய எண்ணுமில்லை
பால்கணக் கெழுதும் பாட்டியர் இன்றும்
சுவரில் கோடுகிழித்துக் கூட்டுவார்
பழந்தமிழரும் ஒன்றுக்கு ஒரு கீறல்
இரண்டுக்கு இருகீற்றென்று கீறினார்
கீறிக்கீறி ஏடு கிழிந்ததோ
கோடுபோட்டுச் சுவரும் கொள்ளவில்லையோ
எண்ணுக்கு எண் இடு குறியாக

ஒன்றுக்கு ககரம் இரண்டுக்கு உகரம்
என்று தொடர்ந்து யகரத்தை பத்தென்றார்
ஆயிரத்துக்கு தகரம் நூறாயிரத்துக்கு
ளகர மென்றார் கணக்கில் அடங்காத
பதினான்கு சுன்னம் பத்து நூறாயிரம்
கோடிக்கு வைத்தபெயர் சங்கம்
இருபத்திநான்கு சுன்னமிட்டால் விந்தம்
இருபத்தொன்பது சுன்னம் ஆம்பல்
முப்பத்தாறு சுன்னத்தை குவளை என்றார்
கன்னம் ஐம்பதுக்கு நெய்தலாக்கினார்
இன்னும் எண்மடங்கு பெருக்கினால் வெள்ளம்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
கமலமும் வெள்ளமும் நுதலிய கணிதத்தை
பரிபாடல் பகர்ந்தது மேல் வாயிலக்கம்.
ஒன்றை இருபது கூறாக்கினால் மா
ஐந்திலொன்று நாலு மா
எண்பதிலொன்று காணி
பதினாறி லொன்றினை வீசம் என்பார்
அரையில் அரையை கால் என்றார்
காலின் அரை அரைக்கால் ஆகும்
அரைக்காலின் அரையும் வீசமே
முன்னூற்று இருபதில் ஒன்று முந்திரி
ஏழால் வகுத்தால் இம்மி இன்னும்
ஏழால் வகுத்தால் அணுஎன்று
கீழ்வாய் இலக்கம் மேலும் செல்லும்.