வார்த்தை வாசல்/001
இனிக்கும்
நினவுகள்
எத்தனையோ ஆசையுண்டு நமது நெஞ்சில் ;
எத்தனையோ ஏக்கமுண்டு நமது வாழ்வில் ;
எத்தனையோ எண்ணுகின்றோம்; எண்ணும் எண்ணம்
எல்லாமே இனிப்பதில்லை; கசப்ப தில்லை;
ஒத்தமனம் கொண்டுவிட்டால் காதல் ஆங்கே
ஊற்றெடுக்கும்; நினைவெல்லாம் இனிக்கும்; கல்விச்
சத்துடையோர் தொடுக்கின்ற பாடல், நன்கு
சாதிக்கும்; தலைமைக்கும் தலைமை தாங்கும்.
பக்குவத்தைப் பழுத்தபழம் காட்டும்; நல்ல
பாடல்களை அப்பாடல் கருத்து காட்டும்.
தக்கவர்தம் கவிதைகளே தமிழைக் காக்கும்.
தமிழ்நுட்பம் அறியாதார் சருகுச் செய்யுள்
மக்களிடம் போய்ப்பழகும் இந்த நாளில்,
மணிக்கவிஞர் எழில்முதல்வன் வடித்த பாடல்,
விக்கலுக்கு நீர்போன்ற பாட லாகும்;
வீணைக்கும் நரம்பாகும்; கரும்பு மாகும்.
அல்லிமலர் போன்றவளாம் அழகுப் பெண்ணை
ஆசையொடு புத்தகத்தில் ஆட விட்டும்;
கல்மலையின் மெல்லியமே லாடை போன்று
காட்சிதரும் அருவியொன்றை ஓட விட்டும்;
மல்லிகையைப் பந்தலிலே படர விட்டும்;
மடலேறும் வண்டுகளைப் பாட விட்டும்;
நெல்விளையும் தகட்டூர்வாழ் கவிஞர், செய்யுள்
நிதிநமக்குப் புதிதாக வழங்கி யுள்ளார்.
வனந்தெரிந்த இடத்தில்போய் மேயும் மானை
‘வற்கலையே’ என்றழைக்க வேண்டின்; சொல்லின்
இனந்தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ‘வெய்யோன்
இழைக்கும்நாள்’ என்றெழுத நுட்பம் வேண்டும்.
‘சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்.
மனந்திறந்து சொல்லுகின்றேன், சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு.
“விலைமோரில் கடைவதற்கு வெண்ணெய் ஏது?
வெறும்பாட்டில் சுவையேது? வண்ணப் பச்சை
இலைமாலை மணந்தருமோ? சொல்வீர்?” என்றே
எழில்முதல்வன் கேட்கின்றார். நானும் கேட்பேன்.
கலையாக்கம் கருத்தாழ மெல்லாம், போலிக்
கவிதைகளில் குடியிருக்க வருவ தில்லை.
பலர்போற்றும் புலமையிலான் தொடுக்கும் பாடல்
பகுதியைப்போல் நிலைத்திருக்கப் போவ தில்லை.
குழல்முதல்வன் கீதையினால் கீர்த்தி பெற்றான்;
குருபாதன் சதகத்தால் பெருமை பெற்றான்.
கழல்முதல்வன் அதிவீர ராமன் என்பான்
கனிந்தசுவைக் காவியத்தால் ஆவி பெற்றான்.
எழில்முதல்வன் இந்நூலின் மூலம், தக்க
இடம்பெற்றார். மிகச்சிறந்த செய்யுள் செய்யும்
தொழில்முதல்வன் எனும்தகுதி பெற்றார். என்றும்
தூங்காத பெரும்புகழை விரைவில் பெற்றார்.
பூமாலை அசைந்தாடும் பக்கம் ஈக்கள்
போவதில்லை. பலரிங்கே ஈக்கள் போன்று
பாமாலை என்றாலே தொடுவ தில்லை.
பதிப்பகமும் மதிப்பளித்து வளர்ப்ப தில்லை.
காமாசோ மாவென்றே எழுது வோரின்
கதைபடிக்கும் பேர்வழிகள், இந்நூல் என்ன
தேமாவா ? புளிமாவா ? என்றால், நூலைத்
திறந்துபடித் தால்பிறகு தெரியும் சேதி !
பேராசிரியர் எழில் முதல்வன், எம். ஏ., அவர்கள் எழுதிய ‘இனிக்கும் நினைவுகள்’ என்னும் கவிதை நூலுக்கு 1966-ஆம் ஆண்டில் வழங்கிய அணிந்துரை.