வார்த்தை வாசல்/002
மணிப்புறா
ஓசையிலே உருப்பெற்ற தாகக் கூறும்
உலகத்தில்; உறவாடும் ஆண்பெண் வாழ்க்கை
ஆசையிலே ஆரம்பம். இன்பம் துன்பம்
அத்தனைக்கும் நாம்கட்டுப் பட்ட மக்கள்.
பேசுவதோ மிகப்பெரிய மானம்; ஆனால்
பேணுவதோ பெருங்காமம்; எச்சில் இன்பம் !
மாசுமறு வில்லாத நிலவு மில்லை;
மாந்தர்களுள் குற்றமற்றார் யாரு மில்லை !
நரைத்துவரும் முதுமையிலும் காம வேகம்
நமைவிட்டு விடுவதில்லை என்றால், இன்பக்
குருத்துவரும் பருவத்தில் அழகு மிக்க
கோதையரை விடுவாரோ காமம் கொண்டோர் ?
சிரித்துவந்தாள் மாதொருத்தி, வெறிவாய் கொண்டோன்
சேர்த்தணைத்துக் காரியத்தை முடித்து விட்டான்.
மருத்துவனால் கற்பழிக்கப் பட்ட மங்கை
வாழ்வதற்கு விபசாரி யாகி விட்டாள்.
விலைமகள்போல் அவள்வாழ்ந்தாள் எனினும், நெஞ்ச
வீதியிலே ஒருவனைத்தான் நடக்க விட்டாள்.
மலைமலராம் செங்காந்தள் கரத்தி னாலே
மனத்துக்குள் நுழைந்தவனைத் தழுவு தற்குச்
சிலையழகி காத்திருந்தாள். முடிவில் மங்கை
சிறுதுரும்பு போலாகி மாண்டு விட்டாள்.
கலையழகன் அவள்பிணத்தைக் கண்டான் ; கத்தும்
கடற்கரையில் அன்னவனும் மாண்டு போனான்.
வெள்ளைநிறம் புரிகின்ற புறாவைப் போல
விசபாரி உயிர்விட்டாள் அவனுக் காக.
தெள்ளுதமிழ் கற்றோனும் “என்றன் வாழ்வும்
தீரட்டும்” எனச்செத்தான் அவளுக் காக.
உள்ளபடி காதலித்த மாதும், உண்மை
உணர்ந்தோனும் மரணத்தால் ஒன்று பட்டார்.
துள்ளியெழும் கருங்கடலின் அருகே கண்ணீர்த்
துன்பத்தைக் கதைநிகழ்ச்சி காட்டக் கண்டோம்.
சடங்குமனம் கொண்டோரை எதிர்த்து வெல்லும்
சக்திபெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள், நெஞ்சைத்
தொடுங்கதையாய் இக்கதையை எழுதி, மக்கள்
தூக்கத்தைப் போக்குகின்றார் திறமை யோடு !
நெடுங்கதைகள் மூங்கிலைப்போல் நீட்டம் காட்டி
நிற்பதனால் பயனில்லை ; மலைநி லத்தில்
படும்பொருள்போல் பயன்விளைக்க வேண்டும் ; அந்நூல்
பாராட்டும் உரைநடையால் விளங்க வேண்டும்.
தரைச்செல்வம் பலவாகும். அவற்றுள் நண்பர்
தமிழ்ச்செல்வன் தந்துள்ள கதையின் செல்வம்
உரைச்செல்வம்; புதியபல கருத்துச் செல்வம் ;
உண்மையிலே நம்மவர்க்கு வைகை ஆற்றங்
கரைச்செல்வம்; காவிரியின் செல்வம் ; இந்தக்
காலத்து மாந்தரெலாம் மதிக்கும் செல்வம்;
வரச்சொல்லி வள்ளல்தரும் செல்வம் ; காதல்
மங்கைதரும் சுகம்போன்ற செல்வ மாகும்.
மார. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மணிப்புறா’ என்னும் நாவலுக்கு 1966–ஆம் ஆண்டில் வழங்கிய அணிந்துரை.