வார்த்தை வாசல்/003
திருமதி சிற்றம்பலம்
அரியபல கட்டுரைகள் ஏடுகளின்
அகலத்தை அளந்த துண்டு ;
கருவிமழை போற்சிறந்த காவியங்கள்
எழுந்தவொரு கால முண்டு ;
பருவநிலை மாறுதல்போல் சிந்தனையில்
புதுமைபல படர்ந்த தாலே
நுரைமணிகள் ஏந்திவரும் சிற்றருவிச்
சிறுகதைகள் நுழைதல் கண்டோம்.
ஏட்டில்நடை பெறுங்கவிதை கட்டுரைகள்,
சிறுகதைகள் எல்லாம் ; தீயின்
சூட்டில் நடை பெறும்சமையல் பக்குவத்தைப்
போன்றதுதான், சுருங்கச் சொன்னால்,
நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்
சிறுகதையாம் ; நல்லோர் செய்த
பாட்டுநடைத் தேனமுதாம் ; உரைநடையே
பொதுமக்கள் பசிக்குச் சோறாம்.
அதிமதுரக் காலியத்தால் அத்தனைபே
ரையுந்தூக்கி அடித்தான் கம்பன்.
இதுவரையில் செயங்கொண்டான் பரணியினை
வெல்லும்நூல் எழுந்த தில்லை.
கதைவழியில் புதுவழியைத் தமிழர்க்குக்
காட்டியவர் கல்கி என்றால் ;
புதியநடை, புதியவழி, சிறுகதையில்
புகுத்தியவர் புதுமைப் பித்தன்.
முத்தனுக்குப் பின்முனியன் உழுதுபயிர்
செய்வதுபோல் முதிர்ந்த கல்விப்
பித்தனுக்குப் பின்வந்து சிறுகதைகள்
பயிர்செய்யும் பெரியோன் தந்த
சித்திரப்பெண் ‘திருமதிசிற் றம்பல’த்தை
நான்தொட்டுச் சிலிர்த்தேன் ! நல்ல
புத்தகத்தை ஏழெட்டு முறைபடிப்பேன் ;
அவ்வாறே புரட்டிப் பார்த்தேன்.
திறன்தோய்ந்த சிந்தனையால், தேன்தோய்ந்த
தலைப்புகளால், செழித்த சொல்லால்,
சிறந்தோங்கும் சிறுகதைகள் பலஎழுதிப்
பரிசுபெற்ற திறமை யாளர்
அறந்தாங்கிப் பூவைநகர் எழுத்தாளர்
ஆறுமுகம் அவர்கள் ; வேங்கை
மறம்தாங்கும் வீரர்விழி போற்சிறந்த
சிறுதைகள் வழங்கி யுள்ளார்.
இரவல்நடை எழுத்தாளர், வான்கோழி
எழுத்தாளர், இவர்கள் எல்லாம்;
ஒருவர்நடை போலெழுதிப் பிறர்கதையின்
பெயர்மாற்றி உயர்வு காண்பர்.
அருவிநடை எழுத்தாளர் பூவைநகர்
ஆறுமுகம் அளித்த நூலில்,
இரவல்நடை எச்சில்நடை ஏதுமில்லை;
முகமூடி எழுத்து மில்லை.
அலைவரம்பு மீறிவிடின் நெய்தல்நிலப்
பகுதியெலாம் அழிந்து போகும்.
கலைவரம்பு மீறிவிடின் சமுதாயச்
சிந்தனைகள் கருகிப் போகும்.
இலைநரம்புச் சிறுகதைகள் பதினான்கைக்
கொண்டிருக்கும் இந்நூல், வாழ்க்கை
நிலைவரம்பை மீறவில்லை எனக்கூறி
இத்தோடு நிறுத்து கின்றேன்.
பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் எழுதிய திருமதி சிற்றம்பலம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1966-ல் வழங்கிய அணிந்துரை.