உள்ளடக்கத்துக்குச் செல்

வார்த்தை வாசல்/007

விக்கிமூலம் இலிருந்து

பாட்டுத்
தோட்டம்

மூத்துப் பூத்த மூதாட்டி ஒளவையும் ;
அச்சுத்தேர் ஏறிய அதிவீர ராமனும்,
தேரூரில் பிறந்த தேசிக விநாயகம்
பிள்ளையும், அந்தோணி சாமி பிள்ளையும்,
பாரதி யாரும், பாரதி தாசனும்,
சிறுவர்க்குப் பாட்டுச் சிந்தனை வழங்கிப்
பிறர்க்குவழி காட்டிய பெரிய கவிஞர்கள்.

மூத்த தலைமுறை முடிவுற்ற பின்னர்
அடுத்த தலைமுறை அரும்பி மலர்ந்து,
குழந்தைப் பாடல்கள் கொடுப்பதைப் பார்க்கிறோம்.
சிறுவர்க் கேற்ற சிறந்த பாடலை
இந்நாளில் வழங்கும் எண்ணற்ற கவிஞருள்
வண்டு தொடும்பூ வண்ணனும் ஒருவர்.

புதுப்புகழ் நீட்டும் புலவர்போல், எழுத்தில்
புதுமையைக் காட்டும் பூவண்ணன் அவர்கள்,
‘புலவர்மகன்’ என்னும் புத்தகம் எழுதிப்
பரிந்துரை இன்றியே பரிசு பெற்றவர்.

இந்த நாட்டில் இவரே முதன்முதல்
குழந்தை இலக்கிய வரலாறு கொடுத்தவர்.


இப்படிப் பட்டவர், இளைஞர்க் காகப்
படைத்த சுவடியே பாட்டுத் தோட்டம்.
பாட்டுத் தோட்டத்தில் பாரதி இருக்கிறார்.
பாரதி இருப்பதால் பாரதி தாசனும்
இருந்திட வேண்டும். எனினுமவர் இல்லை !
முத்தமிழ் மோனை முதலில் வந்தபின்
எதுகை வராமல் இருப்பது சரியா ?

“அன்னை காவிரித் தாயே—உன்னைப்
பொன்னி என்பது ஏனோ?
மண்ணை நன்கு செழிக்கச் செய்து
பொன்னை விளைக்கச் செய்தாய்—அதை
எண்ணி எண்ணி உழவர் உனக்கு
இட்ட பெயரோ பொன்னி !”

என்றிவர் காவிரிக் கன்னியைக் கேட்கும்
பாட்டின் அடிகள், பழுத்த புலமையைக்
காட்டும் அடிகள்; கற்பனை வீக்கம் !

பிச்சை இடுவதும் பிச்சை எடுப்பதும்
நமக்கவ மானம் ! நாட்டுக்கும் ஊனம்
என்னும் கருத்தில் எழுந்துள்ள பாடல்,
சாத்திரப் பழமைக்குச் சரியான சவுக்கடி.

“அறிவியல் கற்பேன்—நான்
அனுதினம் கற்பேன்.
பெரிய விஞ்ஞானி—எனும்
பெயரும் வாங்குவேன்.

சந்திர மண்டலம்—நான்
சென்று மீளுவேன்.
வந்து சந்த்ரனின்—பல
விந்தை சொல்லுவேன்.”


என்னும் அடிகள், இந்தநூற் றாண்டு
மனிதன்விஞ் ஞானியாய் மாற முயல்கிறான்
என்பதை உணர்த்தும் எண்ணச் சுவடுகள்.

“வேடன் தாங்கல் போகலாம்
வேடன் தாங்கல் போகலாம்
கோடி கோடி பறவை கண்டு
ஆடிப் பாடி மகிழலாம்”

என்று சிறுவர் இடத்தில் உரைப்பதும்,
காரணம் கூறிக் காஞ்சிக் கழைப்பதும்,
பல்லவர் காலத்துக் கல்ரதம் காணப்
புறப்படு மாமல்ல புரத்துக் கென்பதும்
பயன்தரக் கூடிய பயணப் பாடல்கள்.

‘நெடுங்கடல் என்பது, நெய்தல் நிலத்தின்
ஓரத்தைக் குறிக்கும் உப்புநீர் விளம்பரம்’
என்றுநான் பாடி இருக்கிறேன். இவரோ,

“நீலக் கடல்
நெளியும் கடல்
நிலத்தை விழுங்கி நிற்குது!

முத்துக் கடல்
மூத்த கடல்
முதுகில் கப்பல் சுமக்குது !”

என்கிறார். நாள்தொறும் ஏங்கும் கடலின்
முதுமையை உணர்த்த மூத்தகடல் என்கிறார்.

குறிப்பிட்ட மூன்றடி கொண்ட பாட்டுநூல்
ஒன்றுநம் நாட்டில் உளதாம் அதன்பெயர்
மூவடி முப்பது. மூவடி முப்பதோ,


இலக்கியக் கிழவர் இடைக்காட னாரின்
அறிவின் அறுவடை ! அந்நூல் போலவே,

“இலையைப் பறிக்காதே பாப்பா—ஓர்
இலைக்குள்ளும் உணர்வுண்டு ; இன்னலும் உண்டு ;
இலையைப் பறிக்காதே பாப்பா.”

என்றும் ; கிளையை முறிக்காதே என்றும் ;
சீவ காருண்யச் சிந்தனை ஏறிய
மூவடிப் பாடல் முத்திரை பதித்துளார்.

ஏழைப் புலவர்கள் எதிர்பார்த்து நிற்கையில்
‘இரும்—பொறும்’ என்றே இழுத்தடிக் காதவன்
இரும்பொறை ! அந்தக் கணைக்கால் இரும்பொறை,
விழித்த வீரமும் ; மிக்கபே ராற்றலும்;
அரசியல் நுணுக்கமும் ; அஞ்சா நெஞ்சமும் ;
கொண்டு விளங்கிய கோமகன் ! படையொடு
முன்னின் றெதிர்த்த மூவனென் பானைக்
கொன்று வீழ்த்திய குகைப்புலி ! களத்தில்
பட்டு வீழ்ந்தோனின் பல்லைப் பிடுங்கிக்
கற்கோட்டை வாயிற் கதவில் பதித்தவன்.

அந்த மன்னனின் சொந்தவர லாற்றைப்
பரிதிமாற் கலைஞரும் பாடலாய் வடித்துளார்.
இந்தக் கவிஞரும் இந்நூலில் தந்துளார்.

இருவரும் தந்துளர் என்ற போதிலும்,
இவரது பாடலில் இருக்கும் எளிமை
அவரது பாடல் அடிகளில் இல்லை.

மணல்வீடு கட்டி மகிழும் சிறார்க்குப்
பச்சை மரத்தின் உச்சியைக் காட்டி,


அதற்குப் பின்னர் அம்புலி காட்டல்போல்,
அரும்புச் சிறுவரின் அறிவுநிலை யறிந்து,
கண்கவர் காட்சிக் கவிதையை முதலிலும்,
முழுக்கதைப் பாடலை நூலின் முடிவிலும்
வைத்துள்ள போக்கு வரவேற்கத் தக்கது.
உள்ளபடி சொல்கிறேன் ஒவ்வொரு பாடலும்
கொள்ளுபடி ஆகுமே அன்றிக் கொஞ்சமும்
தள்ளுபடி ஆகாது சாரம் இருப்பதால் !
இலக்கியம் கற்றவர் இயற்றிய இந்நூல்
முழுநிலவு போன்றது, மொட்டுச் சிறுவரை
நல்லவ ராகவும் வல்லவ ராகவும்
ஆக்கத் தக்கநூல் ; அறியாமை இருளைப்
போக்கக் கூடிய புத்தக வெளிச்சம்.

வளரட்டும் இந்த வெளிச்சம்
வளரட்டும் இவர்புகழ் வரலாறு போலவே.


பூவண்ணன், எம். ஏ., அவர்கள் எழுதிய ‘பாட்டுத் தோட்டம்’ என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970–இல் வழங்கிய அணிந்துரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=வார்த்தை_வாசல்/007&oldid=1877272" இலிருந்து மீள்விக்கப்பட்டது