வார்த்தை வாசல்/009
சிரித்து மகிழங்கள்
விழாதவர்கள் சிலருண்டு ; கொண்ட கொள்கை
விடாதவர்கள் சிலருண்டு ; விடிந்த பின்னும்
எழாதவர்கள் சிலருண்டு ; பசித்தோர்க் கன்னம்
இடாதவர்கள் சிலருண்டு ; கோயில் சென்று
தொழாதவர்கள் சிலருண்டு ; பருவப் பெண்ணைத்
தொடாதவர்கள் சிலருண்டு ; விம்மி விம்மி
அழாதவர்கள் இவ்வுலகில் யாரு மில்லை;.
அகிலத்தில் சிரிக்காதார் எவரு மில்லை.
எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கார ணங்கள்
எத்தனையோ இங்குண்டு. நாமெல் லாரும்
சிரிப்பதற்கும் அழுவதற்கும் கார ணங்கள்
சிலவுண்டு, சிலசமயம் பலவும் உண்டு.
நெருக்கடிகள் வரும்போதும், கொடிய துன்ப
நிகழ்ச்சிகளால் தாக்குற்றுக் கலங்கும் போதும்,
சிரிப்பதற்கு முயன்றாலும் முடிவ தில்லை.
சிலர்சிரிப்பில் வஞ்சகமே நுழைவ தில்லை.
முன்கோபக் காரனையும், அக்பர் என்னும்
மொகலாய மன்னனையும் பீர்பால் என்பான்
அன்றாடம் சிரிக்கவைத்தான். நாட்டு மக்கள்
அனைவரையும் நகைச்சுவையால் மகிழ வைத்தான்.
தென்னாலி ராமனென்பான் தனது பேச்சுத்
திறத்தாலே அனைவரையும் சிரிக்க வைத்தான்.
நன்றாக நாமெல்லாம் சிரிக்க வேண்டும்.
நம்மைவிட வெளிநாட்டார் சிரிக்கின் றார்கள்.
அரிப்பூட்டும் கொக்கோகம் எழுதி னானே
அன்னவனால், அவனெழுத்தால், நெஞ்சில் காம
நெருப்பூட்ட முடிந்ததன்றிச் சிரிக்க வைக்க
நிச்சயமாய் ஒருபோதும் முடிய வில்லை.
சிரிப்பூட்டிச் சிந்திக்க வைப்ப தற்குத்
திறன்வேண்டும், அத்திறமை பலருக் கில்லை.
சிரிப்பூட்டும் துணுக்குகளை எழுது தற்கும்
திறன்வேண்டும். அத்திறமை சிலர்க்கே உண்டு.
ஆனந்த விகடனிங்குத் தோன்று முன்பே
ஆயிரத்தெண்ணூற்றெண்பத் தைந்தில் தோன்றி
மானிடர்க்கு நகைச்சுவையை வழங்கி வந்த
மகாவிகட தூதனெனும் இதழைப் போன்று
தேனொழுகும் துணுக்குகளை வாரா வாரம்
சிறப்பாகத் தருதற்கோர் ஏடு வேண்டும்.
வானம்தான் இருக்கிறது ; முகில்தான் இல்லை !
வான்கோழி இருக்கிறது ; மயிலைக் காணோம் !
அகச்சுவைநூல் அதிகமுண்டு நமது நாட்டில்
ஆயினும்நம் நாட்டினிலே மிகுதி யாக
நகைச்சுவைநூல் தோன்றவில்லை ; மேலை நாட்டில்
நாள்தோறும் நகைச்சுவைநூல் தோன்றக் கண்டும்,
புகைச்சல்வரும் கீர்த்தனையும், பிறருள் ளத்தைப்
புண்படுத்தும் கட்டுரையும் தீட்டு கின்றோம்.
சிகிச்சைசெய்யும் நகைச்சுவைநூல் தோன்றா விட்டால்
தேசத்தில் அழுகுரலே அதிக மாகும்.
ஈசனையும் இறைவியையும் பற்றி முன்னோர்
எழுதிவைத்த பாடல்களைத் தொகுத்த ளித்தால்,
பூசனைக்கும் பூசாரிக் கூட்டத் துக்கும்
புராணிகர்க்கும் அந்நூற்கள் உதவு மன்றி
தேசத்தில் முன்னேற்றம் காண்ப தற்குச்
சிறிதுமுத வாதன்றோ? அதனால், கல்வி
வாசனையும் யோசனையும் உடைய சீனி
வாசனொரு நகைச்சுவைநூல் வழங்கி யுள்ளார்.
புவிபுகழும் மெக்காலே என்பான் கையில்
புத்தகந்தான் எப்போதும் இருக்கு மென்பர்.
அவனைப்போல் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே
ஆராய்ச்சி செயும்டாக்டர் சீனி வாசன்,
சுவைமிகுந்த துணுக்குகளைத் தேர்ந்தெ டுத்துத்
தொகுத்துள்ளார் திறனாய்வும் இதில்சேர்த் துள்ளார்.
இவருடைய திறனாய்வும் இந்த நூலும்,
இந்நாட்டுக் கிப்போது மிகவும் தேவை.
இப்படியோர் புத்தகத்தை நமது நாட்டில்
எல்லாரும் தொகுத்திடலாம். தொகுத்த போதும்,
செப்பனிட்ட துணுக்குகளுக் கேற்ற வாறு
சிறப்பான தலைப்புகளைத் தருவ தற்கும் ;
அப்படியே தரினும்நகைச் சுவையைப் பற்றி
அரியதொரு திறனாய்வு செய்வ தற்கும் ;
கொப்புளிக்கும் தனித்திறமை வேண்டு மன்றோ ?
குருத்தோலை எழுத்தரிதற் கெங்கே போவர் ?
சிரித்துமகி ழுங்களெனும் இந்த நூலைத்
திறந்தாலே சிரிப்புவரும். இதைவா சித்தால்,
வருத்தமெலாம் பறந்தோடும். இலக்கி யத்தின்
வளர்ச்சிக்கும் கைகொடுக்கும். பக்கம் தோறும்,
அருத்தமுள்ள துணுக்குகளும், இளைஞர்க் கெல்லாம்
ஆசைதரும் துணுக்குகளும் நிறைந்த இந்நூல்,
மருத்துவர்க்கும் மருந்துதரும். நமது நாட்டு
மக்களிதை அவசியமாய்ப் படிக்க வேண்டும்.
பேராசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், எம். ஏ., எம். லிட், பிஎச். டி. அவர்கள் எழுதிய ‘சிரித்து மகிழுங்கள்’ என்னும் நூலுக்கு 1975-இல் வழங்கிய அணிந்துரை.