வார்த்தை வாசல்/018
நிலா முற்றம்
நெல்முற்றம் என்பதெது ? வயல்தான் ; உப்பு
நீர்முற்றம் என்பதெது ? கடல்தான் ; ஆய்ந்தோர்
சொல்முற்றம் என்பதெது ? நிகண்டு நூல்தான்.
தூங்காத வெள்ளைநிலா எட்டிப் பார்க்கும்
நல்முற்றம் நிலாமுற்றம் என்றால், வேலூர்
நாராய ணன்படைப்பாம் இந்த முற்றம்
எல்லார்க்கும் பயனளிக்கும் பாட்டு முற்றம்
இவர்கவிதை நிலாமுற்றம் எழுத்து முற்றம்.
மலராய்ந்து பூத்தொடுத்தல் போன்று வார்த்தை
மலராய்ந்து பாமாலை தொடுக்க வல்ல
தலைசிறந்த இக்கவிஞர் எழுபத் தாறு
தலைப்புகளில் நிலாமுற்றம் என்னும் நூலைப்
பலர்புகழ்ந்து பாராட்டத் தக்க வாறு
படைத்துள்ளார் ; மானுடத்தைப் பாடி யுள்ளார்
கலைஞர்களை அறிஞர்களைப் பற்றி யெல்லாம்
கறுப்புச்சூ ரியக்கவிஞர் பாடி யுள்ளார்.
கட்டோடே கனத்தோடே வாழ்வார் தம்மைக்
கண்ணோடே கருத்தோடே இருப்பார் தம்மைப்
பட்டோடே பணியோடே திரிவார் தம்மைப்
பாராட்டும் இந்நாளில் இவரோ, தங்கத்
தட்டோடே தனத்தோடே வாழ்ந்தி டாமல்
தமிழோடு வாழ்பவர்கள் தம்மைப் பற்றி,
‘எட்டாத மேல்நிலையில் இருக்கும் சான்றோர்
இவர்களன்றோ’ எனவியந்து பாடி யுள்ளார்!
ஆங்காங்கே குழந்தைகளை எட்டிப் பார்க்கும்
அரும்புமொட்டுக் கவிதைகளும் ; சமுதா யத்தில்
தேங்கியுள்ள தீமைகளைக் கண்டிக் கின்ற
சீர்திருத்தக் கவிதைகளும் ; புகுத்தப் பெற்ற
சாங்கியத்தைச் சடங்குகளைத் தண்டிக் கின்ற
சாட்டையடிக் கவிதைகளும் இடம்பெற் றுள்ள
மூங்கில்முத்துப் புத்தகத்தில் புதுமை என்னும்
முத்திரையைப் பதித்துள்ளார் என்றன் நண்பர்.
இந்தநாள் அந்தநாளென் றெழுது வோம்நாம்
‘இழைத்தநாள்’ என்றொருவன் எழுத லானான்.
பொந்துமரச் சோலைதனில் உலவும் வண்டைப்
‘பூநக்கி’ என்றொருவன் எழுத லானான்.
பந்தயப்பாட் டரங்கத்தில் வெற்றி பெற்ற
பாவலராம் நாவலராம் இவரோ, காமச்
சந்துவழி யாய்ப்பிறக்கும் குழந்தை தன்னைச்
‘சதைக்கல்வெட்’ டென்கின்றார் புதுமை யாக.
“பகலுக்கே விடைகொடுப்போம் ! வயது வந்த
பால்நிலவைத் துணைக்கழைப்போம் ! ஆங்கி ருக்கும்
அகல்விளக்கின் ஒளிமழையில் நனைந்து கொண்டே
அனைத்துசுகம் நாம்பெறுவோம்” என்னும் பாடல்,
முகத்தோடு முகம்சேர்த்து முத்த மிட்டு
முத்தமிடும் போதில்புறாச் சத்த மிட்டுச்
சுகத்தோடு சுகம்சேர்க்க விரும்பு வோர்க்குத்
தூண்டுகோல் போலமைந்த பாட லாகும்.
ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்க் காலம்.
அக்காலம் வந்துற்றால், முகில்கள் என்னும்
தெப்பங்கள் வானத்தில் மிதக்கும் ; தண்ணீர்
தெளிவடையும் ; அத்தகைய தெளிந்த நீர்போல்
எப்பொழுதும் மிகத்தெளிந்த நடையில் பாக்கள்
இயற்றுமிவர் இதனையும்நன் கியற்றி யுள்ளார்.
பொய்ப்புழுக்கம் சிலநூலில் இருக்கும்; இந்தப்
புத்தகத்தில் அத்தகைய புழுக்க மில்லை.
கவிஞர் வேலூர் ம. நாராயணன், எம். ஏ., அவர்கள் எழுதிய ‘நிலாமுற்றம்’ என்னும் கவிதை நூலுக்கு 1982–இல் வழங்கிய அணிந்துரை.