வார்த்தை வாசல்/019
தமிழ்ப்பாவை
மலர்ந்துபயன் படுகின்ற மலரைப் போன்றும் ;
மணந்துபயன் படுகின்ற மங்கை போன்றும் ;
புலர்ந்துபயன் படுகின்ற கதிரைப் போன்றும் ;
பொழிந்துபயன் படுகின்ற மழையைப் போன்றும் ;
கலந்துபயன் படுகின்ற தேனைப் போன்றும் ;
காப்பியங்கள் பயன்படுதல் வேண்டும் ; நாட்டில்
தலைசிறந்த காப்பியங்கள் தோன்று மாயின்
தாய்மொழிக்குப் புதுப்பெருமை வந்து சேரும்.
கண்ணகியின் கண்ணீரை நெருப்பாய் மாற்றிக்
காட்டியதோர் காப்பியத்தை இளங்கோ தந்தார்;
பண்பட்ட திருத்தக்க தேவர் என்பார்
பாட்டாலே கோட்டையொன்று கட்ட லானார் ;
எண்ணற்ற பாக்கள் தந்த பாவின் வேந்தர்
எழுச்சிமிகு காப்பியங்கள் படைத்துத் தந்தார்;
தண்ணமுதப் பெருங்கவிஞர் சங்கர் லிங்கம்
‘தமிழ்ப்பாவை’ காப்பியத்தை வழங்கி யுள்ளார்.
ஆண்டாளின் திருப்பாவை பக்தர் தம்மை
ஆலயத்துக் கழைக்கின்ற பாவை யாகும் ;
பூண்டிதனில் பயின்றவராம் இவர்தம் பாவை
புரட்சிசெயத் தூண்டுகின்ற பாவை யாகும்.
வாண்டையார் கல்லூரி தந்த சிங்கம்
வரலாற்றைப் படைக்கவந்த சங்கர் லிங்கம்.
நீண்டபுகழ் தரத்தக்க காப்பி யத்தை
நெட்டிமையார் போல்நன்கு பாடி யுள்ளார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துப்
பழனியென்பாள், சான்றோர்கள் வியக்கும் வண்ணம்
அதிமதுரக் காவியமொன் றியற்றித் தஞ்சை
அரசனிடம் பரிசுபெற்றாள்; இவரும் இந்தப்
புதுக்கவிதை நூலுக்குப் பரிசு பெற்றுப்
புகழடைவார் என்றெண்ணிப் பூரிக் கின்றேன்.
முதற்கவிதை முதற்குழந்தை போன்ற தென்றால்
முதற்பரிசு முதல்முத்தம் போன்ற தன்றோ !
கவிஞர் உரத்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய ‘தமிழ்ப்பாவை’ என்னும் கவிதை நூலுக்கு 1983–ஆம் ஆண்டு வழங்கிய அணிந்துரை.