வார்த்தை வாசல்/020
மன்மத
ராகங்கள்
காவியமும் ஒவியமும் தீட்டித் தந்து
கலீல்கிப்ரான் புகழ்பெற்றார். வெர்டி என்பார்
ஓவியமும் காவியமும் தந்த தாலே
உறங்காத புகழ்பெற்றார். முத்து வீரப்
பாவலரின் மூத்தமகன் வைத்ய லிங்கம்
பாட்டெழுதிப் படம்வரைந்து பெருமை பெற்றார்.
சேவைசெய்த நாமக்கல் ராம லிங்கம்
சிறப்புற்றார் ஓவியத்தால் காவி யத்தால்.
அத்தகையோர் போன்றவராம் என்றன் நண்பர்
அமுதபா ரதியென்பார், நமது நாட்டில்
சித்திரங்கள் வரைவதிலும், சந்தத் தோடு
செய்யுள்கள் புனைவதிலும் சமர்த்த ராவார்.
புத்தகமே இவருடைய சொத்தாம். பொங்கும்
புதுமைகளே இக்கவிஞர் மதிக்கும் முத்தாம்.
சித்திரங்கள் இவருக்குச் சோறு போடும்.
செய்யுள்கள் இவர்க்குரிய புகழை நாடும்.
இயலைப்போல், இசையைப்போல் இரண்டு நூல்கள்
இயற்றியபின் இக்கவிஞர், கார்கா லத்து
மயிலைப்போல், மயிலினது சாய லைப்போல்
மன்மதரா கங்களெனும் நூல்யாத் துள்ளார்.
கயல்விழியாள் ராதையவள் விழியின் வீச்சைக்
கண்ணபிரான் வாய்பேச்சைப் பதிவு செய்து,
குயிலோசைக் கவிஞரிவர், தமிழில் கீத
கோவிந்தம் புதிதாகப் பாடி யுள்ளார்.
பாதரச வெளிச்சத்தில், சிறப்பு மிக்க
பளிங்குமணி மண்டபத்தில் ஒவ்வோர் நாளும்
ராதைக்கும் கண்ணனுக்கும் லீலை, இன்ப
ரசலீலை. கொக்கோகக் குடும்ப வேலை.
மாதரசி மிஞ்சுவதும், கமலக் கண்ணன்
மங்கையிடம் கெஞ்சுவதும், சிறந்த காட்சி.
ஆதலினால் அவ்வின்பக் காட்சி தன்னை
அற்புதமாய் இக்கவிஞர் வர்ணித் துள்ளார்.
பொன்னுக்கோர் பொட்டுவைத்து விடவா ? பூத்த
பூவுக்கோர் ஆடைகட்டி விடவா ? என்று
மன்னுபுகழ்ச் செல்வத்தை விட்டுச் சென்ற
மாயவநா தக்கவிஞன் கேள்வி கேட்டான்.
அன்னவனைப் போல்ராதை யிடத்தில் கண்ணன்
ஆனந்தக் கேள்விபல கேட்ப தாகக்
கன்னிச்சிந் தாமணியாம் இந்த நூலில்
காதற்சிந் துக்கவிஞர் தெரிவிக் கின்றார்.
ஆயிரத்தெண் ணூற்றறுபத் தைந்தாம் ஆண்டில்
அச்சான நூல்கள்பல வற்றுள், சைவக்
கோயில்மணி ஓசைதரும் திருக்குற் றாலக்
குறவஞ்சி எனும்சிறந்த கவிதை நூலும்,
மேயபுரப் பாவலரின் பத்மா சூர
விலாசமெனும் ஓர்நூலும், இந்த நூலும்
பாயெடுத்து விரிக்கின்ற பருவப் பெண்ணைப்
படம்பிடித்துக் காட்டியுள்ள நூல்க ளாகும்.
உறுப்புநலம் கூறுவதைச் சான்றோ ரெல்லாம்
ஒப்புக்கொண் டிருக்கின்ற கார ணத்தால்,
கறுப்புநிறக் கவிராயன் ஒருவன், காமக்
கலசமெனும் மார்பகத்தைப் பால்மே டென்றான்
வெறியூட்டும் பெண்குறியை நாகப் பாம்பின்
விலாசமென்று சொன்னானோர் புலவன். அந்த
மறைவிடத்தை இக்கவியோ, உழுதற் கேற்ற
மன்மதப்பூ நிலமென்று சொல்லு கின்றார்.
கங்குலும் கரியநிற மங்குலு மிவளுடைய
பைங்குழற் கெதிரேநின்று மங்குதல்லவா?—இரு
கண்களுக்கு வேலும்சேலும் இங்கிணைநா மல்லவென்று
தங்கைவிரற் செங்கையிற் பதுங்குதல்லவா?
திங்களும் கதிருமிந்த மங்கையின் முகத்துக்கஞ்சி
அங்கமும் குறைந்துதினம் பங்கமடை யுதே—இவள்
விண்ணுலகப் பெண்ணரசியோ !—ஆஹா இவள்
விண்ணுலகப் பெண்ணரசியோ !
கும்பமும் குரும்பையொடு பம்பரமும் தும்பிலிரு
கொம்புமிவள் முலைக்கஞ்சி வெம்பிநிற்குதே —வயிறு
கோலத்தைக்கண் டாலிலையும் மாலுக்குச் சயனமாகி
ஓலமிட்டுப் பாற்கடலை நம்பிநிற்குதே !
கொம்பனையாள் சிற்றிடைக்கு உம்பரின்மின் னொளிக்குதே.
பம்புமிவ ளல்குலைச்சர்ப் பப்படங்கண் டேங்குதிவள்
விண்ணுலகப் பெண்ணரசியோ!—ஆஹா இவள்
விண்ணுலகப் பெண்ணரசியோ!
என்றொருவர் தஞ்சைநகர் பாப்பு தாசன்
இவ்வாறு லாவணிப்பாட் டெழுதி யுள்ளார்.
இன்னொருவர் இவர்பெயரோ சித்ரம் பிள்ளை.
இக்கவிஞர் இன்பரசத் தெம்மாங் கென்னும்
மின்மினிநூல் ஒன்றெழுதிப் பருவப் பெண்ணின்
மேடுமுதல் கூடுவரை வர்ணித் துள்ளார்.
அன்னவர்க்கிங் கிளைத்தவராய்த் தெரிய வில்லை,
அழுதபா ரதியென்னும் பாட்டுப் பிள்ளை.
பண்பட்ட ஓவியரின் புதிய நூலோர்
பனிக்கவிதை நூலென்பேன். இந்த நூலை,
வெண்பட்டுத் துணியென்பேன். ஊர்ந்து செல்லும்
வெண்ணிலவும் இதையுடுத்த விரும்பு மென்பேன்.
எண்பட்ட பக்கங்கள் தோறும் செய்யுள்
இலக்கியத்தின் முன்னோட்டம் நினைவின் நீட்டம்.
கண்பட்டால் இதன்மீது படட்டும்; உங்கள்
கைபட்டால் இந்நூலில் படட்டும் இன்றே.
ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய “மன்மத ராகங்கள்” என்னும் கவிதை நூலுக்கு 1984–இல் வழங்கிய அணிந்துரை.