வார்த்தை வாசல்/021
போர்க்களத்தில்
பாரதம்
கரு ‘வெனும் பகுதி நீண்டு
காரென ஆயிற் றென்பர்.
பொரு ‘வெனும் பகுதி நீண்டு
போரென ஆயிற் றென்பர்.
அருளுதல் அன்பாம் ! நாட்டில்
ஆத்திரம் பூத்தால் போராம்.
உருவிய வாளின் வெற்றி
உயிர்க்கொலை நிகழ்ச்சி யாகும்.
அடைமொழித் தமிழர் வீரம்
அஞ்சாத வீர மாகும்.
படுகளம் தன்னில் அன்று
பாரதப் போர்வீ ரர்க்கு
விடுமுறை இன்றிக் கொக்கின்
விரல்நகம் போன்ற சோற்றை
ஒடிபடா ஊக்கத் தோடே
உதவினான் உதியன் சேரன்.
போர்வாழ்க்கை நம்நாட் டார்க்குப்
புதுவாழ்க்கை அன்று ; வீர
வேர்வாழ்க்கை அன்றும் இன்றும்
விடுதலைக் குரிய வாழ்க்கை.
தேர்வாழ்க்கை வந்த தாலே
திறன்குன்றி, வீரம் வீழ்ந்து
நார்வாழ்க்கை, பக்தி வாழ்க்கை
நரிவாழ்க்கை வளர்ந்த திங்கே !
பாரினில் சிறப்பு மிக்க
படைகொண்டு பகைவர் தம்மை
நேரினில் நின்று வென்ற
நிகழ்ச்சியைப் போர்க்க ளத்தில்
பாரதம் என்னும் நூலாய்ப்
படைத்துள்ள ஓடை யானின்
சீரிய நூலாம் இந்தச்
சிறுநூலோர் பரணி யாகும்.
தாழிசை, விருத்தம், வெண்பாத்
தளைகொண்ட கும்மிப் பாட்டால்,
ஏழிசை இன்பத் தோடும்,
இழுமெனும் ஓசை யோடும்,
வாழிநூல் வழங்கிச் செங்கை
மறவரை வாழ்த்தி, நாட்டின்
சூழலை விளக்கி நன்கு
சுடச்சுடப் பாடி யுள்ளார்.
ஓடையான் நூலின் பாடல்
உணர்ச்சியை ஊட்டும் பாடல்.
சோடையே இல்லாப் பாடல் ;
துடித்தெழச் செய்யும் பாடல் ;
மேடைமீ தேறி நின்று
விம்மிதத் தோடு சொன்னால்,
நாடெலாம் அதிரும் ! கேட்டால்
நமக்கெலாம் வீரம் பொங்கும்.
விடுதலை பெற்ற நாட்டை
விழுங்கிட முயற்சி செய்த
கொடியரை வீழ்த்தி, வெற்றி
கொண்டநம் இந்தி யாவின்
நடைமுறைப் போர்நூல் இந்நூல்.
நல்லநூல் ! சிறப்பு மிக்க
முடிவுரை இதற்கு வீடு !
முகவுரை இதற்கு வாசல் !
கவிஞர் சைதை ஓடையான் அவர்கள் எழுதிய ‘போர்க்களத்தில் பாரதம்’ என்னும் கவிதை நூலுக்கு 1966–ஆம் ஆண்டு வழங்கிய அணிந்துரை.