வார்த்தை வாசல்/022
பொழுது
புலரட்டும்
கதிர்ச்செந்நெல் விளைகின்ற ஊராம், மட்டக்
களப்பினிலே பிறந்தமுகில் வாணன் என்பார்
அதிர்வேட்டுக் கெதிர்வேட்டுக் கவிஞ ராவார்
அத்தகைய பூகம்பக் கவிஞர் யாத்த
புதுநூலைப் பொழுதுபுல ரட்டு மென்னும்
போராட்டப் பிரகடனக் கவிதை நூலை
உதிக்கின்ற வெளிச்சத்தில் படித்தேன். பாடல்
ஒவ்வொன்றும் துப்பாக்கித் தும்ம லாகும்.
கொடுமைபல புரிந்துவரும் சிங்க ளத்தார்
குழுவுக்கும், தமிழீழம் கேட்ப வர்க்கும்
விடுதலைப்போர் நடைபெற்றுக் கொண்டி ருக்கும்
வேளையிலே, இக்கவிஞர் இந்த நூலைப்
படையெடுக்க விடுத்துள்ளார் பகைவர் மீது !
பாடல்களை அப்பகைவர் படிப்பா ராயின்,
தொடை நடுக்கம் ஏற்பட்டே தீரும் ஈழம்
துண்டுபடும் என்பதனைப் புரிந்து கொள்வர்.
அந்தரத்துச் சந்திரனை உற்று நோக்கி
அரசாங்கப் பெருங்கவிஞன் ஒருவன், வானச்
சந்திரனே துள்ளாதே இப்போ துன்றன்
தலையில்கால் வைத்திடநான் செய்வேன் என்றான்.
சந்திரனெனத் துள்ளாதே பிரேம தாசா !
சதிகாரா! உனைநானே மிதிப்பேன் என்று
முந்துதமிழ்க் கவிமன்றத் தலைவ ரான
முகில்வாணன் மார்தட்டிக் கூறு கின்றார்.
நிறம்மாறா திருக்கின்ற பாலி னோடு
நீர்சிறிது கலந்திருப்பின், அன்னம் என்னும்
பறவையதைப் பிரித்துண்ணும். நாங்கள் அந்தப்
பறவையினைப் பின்பற்ற விரும்பு கின்றோம்.
பிறவினையும், தன்வினையும் இருக்கும் போது,
பிரிவினையென் றோர்வினையும் இருக்க லாமே ?
தறுக்கர்களே இதற்கென்ன சொல்கின் றீர்கள்
தமிழீழம் தருதற்கேன் மறுக்கின் றீர்கள் ?
தூங்குகின்ற நேரத்தில் வாங்கும் மூச்சு
சுழிமாறிப் போனாலும் போச்சென் பார்கள்.
நாங்களினிச் சாவதற்கும் அஞ்சோம். ஈழ
நாடுபெறப் போராடும் எங்கட் கின்று
மாங்கனியோ, பலாக்கனியோ இனிக்க வில்லை.
மரணந்தான் இனிக்கிறது தெரிந்து கொள்வீர்.
வேங்கைகளோ மான்களைக்கண் டஞ்சும் உங்கள்
வேடத்தை யாமறிவோம் எனச்சொல் கின்றார்
தாமரையின் மொட்டைப்போன் றமைந்தி ருக்கும்
தனித்தீவாம் இலங்கையினை அந்த நாளில்
பூமிபுகழ் இராவணனும், மற்றை யோரும்
பொறுப்போடும் சிறப்போடும் ஆண்டு வந்தார்.
நாமிந்த வரலாற்றை மறந்து விட்டோம்.
நண்டுமொழிச் சிங்களரை நம்பிக் கெட்டோம்.
சாமிகளை நினைக்கின்றோம். நமது நாட்டின்
சரித்திரத்தை நாம்நினைத்துப் பார்ப்ப தில்லை.
என்றிந்தக் கவிராயர் வருந்து கின்றார்
இத்தகைய தோர்வருத்தம் எனக்கும் உண்டு.
நன்றியினை மறந்தாலும் அஃதே போன்று,
நாட்டினது வரலாற்றை மறந்திட் டாலும்,
குன்றைப்போல் குன்றிப்போய் விடுவோம். வாழ்வில்
குறிக்கோளே இல்லாமல் வாழ்ந்தோ ராவோம்.
அன்றுமுதல் இன்றுவரை நடந்த வற்றை
அறிந்துகொள்ளல் அவரவரின் கடமை யன்றோ ?
தங்கம்மா தவமிருந்து பெற்ற மைந்தர்
தமிழீழ விடுதலைப்போர்க் களத்தில் வந்து
சிங்கத்தின் சீற்றத்தோ டுலவும் வீரர்
தீட்டியுள்ள பாடல்களைப் படிப்போ மாயின்
அங்கத்தில் சூடேறும்; கிழவர் கட்கும்
ஆவேசம் உண்டாகும். விரிந்த வானில்
தொங்கிக்கொண் டிருக்கும்வெண் ணிலாவி னுக்கும்
சூடேறும்; சூரியனாய் அதுவும் மாறும்.
மழைமேகம் வாய்திறந்தால் மின்னல் தோன்றும்
மற்றிந்நூல் வாய்திறந்தால் புரட்சி தோன்றும்
இழைவிளக்கு நின்றிமைக்கத் தொடங்கி விட்டால்
இருள்விலகும்; தமிழீழம் அமைத்தற் கான
வழிவகையை அச்சமின்றிக் கூறும் இந்நூல்,
வரலாற்றில் இடம்பெற்று நிலைத்தி ருக்கும்.
முழுப்புகழுக் குரியதொரு நூலைத் தந்த
முகில்வாணன் வாழ்கவென வாழ்த்து கின்றேன்.
கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழுதிய “பொழுது புலரட்டும்” என்னும் கவிதை நூலுக்கு 1984–இல் வழங்கிய அணிந்துரை.