உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கை விநோதம்/மறதியின் லீலை

விக்கிமூலம் இலிருந்து
மறதியின் லீலை

“ஏண்டா சுந்தரம், எங்கே அந்த லெட்டரை வைத்தாய்?”

“ லெட்டரா? ஞாபகமில்லையே அப்பா. இங்கே தானே வைத்ததாக ஞாபகம்.”

“என்ன, எது கேட்டாலும் ஞாபகமில்லை என்றே சொல்லுகிறாய் ? உப்புப் போட்டுச் சோறு தின்றால் அல்லவா ஞாபகம் இருக்கும் ? ஏண்டா, இன்றைக்கு உப்புப் போட்டுக்கொண்டாயா சாதத்துக்கு ?”

“அதுவா ? ஞாபகமில்லையே அப்பா,”

சுந்தரம் என்ன, அநேகமாக எல்லோருக்குமே மறதி உண்டுதான். சிலருக்கு அதிகம்; சிலருக்குக் குறைவு.

“எனக்கு ஞாபக மறதிமட்டும் வந்துவிட்டால், உடனேயே உயிரை விட்டுவிடுவேன்" என்று ஒருவர் சொன்னாராம். அவர் போலவே எல்லோரும் சபதம் செய்துகொண்டு, அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்துவிட்டால் ஆயிரத்துக்கு ஒருவர் இருப்பதுகூடக் கஷ்டம்தான். அணுக் குண்டுகளை இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் போட்டுவிட்டால் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பதைப் போலத்தான் ஆகும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் சிலர், பாடம் சம்பந்தமாகப் படிப்பவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு விடுகிறார்கள். ஆனால் சட்டையை எங்கே போட்டோம், வேஷ்டியை எங்கே வைத்தோம் என்பவற்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

இரு நண்பர்கள், ஒரு விஷயம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவில் வேறொருவர் வந்து ஏதாவது கேட்டுவிட்டுப் போய்விடுவார். அவர் போன பிறகு, பேச்சைத் திரும்ப ஆரம்பிப்பதற்காக முன்பு பேசியவர் முயல்வார். ஆனால், விஷயம் ஞாபகத் திற்கு வராது.

“எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்?” என்பார் எதிரே கேட்டுக்கொண்டிருந்தவரை.

“அதுவா, எதையோ பற்றியல்லவா பேசினோம்?” என்று அவரும் மேலே பார்ப்பார்.

ரொம்ப நேரம் ஞாபகப்படுத்தியும் விஷயம் வராது ! கடைசியில் வேறு ஒன்றைப்பற்றி ஆரம்பிப்பார்கள்.

ஒரு பத்திரிகை ஆபீஸிற்கு ஒருவர் சந்தாப் பணத்தை மணி ஆர் டரில் அனுப்பியிருந்தார். பத்திரிகை ஆபீஸ் குமஸ்தா, மணி ஆர்டர் பணத்தையும், கூப்பனையும் வாங்கிக்கொண்டார்.

ஆனால், சந்தாப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யும் போது, பணம் அனுப்பியவரின் விலாசம் தெரியவில்லை. கூப்பனில் கையெழுத்து மட்டுந்தான் இருக்கிறது. விலாசம் முழுவதும் வேண்டுமானால், மணி ஆர்டர் பாரத்தைப் பார்த்து ஏற்கெனவேயே குறித்து வைத்துக்கொள்ள வேண்டாமா ? அதைத்தான் மறந்து போய் விட்டாரே, இந்தக் குமாஸ்தா! ஆனாலும் என்ன சந்தாக் கட்டியவர் பத்திரிகை வரவில்லை என்று புகார் எழுதமாட்டாரா? அப்பொழுது, அந்தக் கடிதத்திலுள்ள விலாசத்தைப் பார்த்துப் பத்திரிகையை அனுப்பி விட்டால் போகிறது!

உயர்ந்த பதவியில் இருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர் ஒருவரை, ஒரு நண்பர் பார்க்க வேண்டியதிருந்தது; கடிதம் எழுதினார். ஒரு நாள் குறித்து, அன்று வந்து பார்க்கும்படி பதில் வந்தது.

நண்பர் அப்படியே சென்றார். அந்த உத்தியோகஸ்தரின் அறைக்குள் நுழைவதற்கு வெகு நேரம் வெளியே காத்திருந்து, கடைசியாகப் பியூனின் தயவால் உள்ளே நுழைந்தார்.

விஷயம் என்னவென்று கேட்டார் உத்தியோகஸ்தர், நண்பர் பதில் சொன்னார்,

“சரி, நாங்கள் தந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு வந்தீரா? கொண்டுவரும்படி எழுதியிருந்தோமே ?” என்றார் உத்தியோகஸ்தர்.

நண்பருக்கு இதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் என்ன செய்வது? அவர்கள் எழுதியது உண்மைதான். ஆனால் மறந்துவிட்டாரே அந்த நண்பர்?

அவருடைய தயக்கத்தைக் கண்ட உத்தியோகஸ்தர், “என்ன, கொண்டுவர மறந்துவிட்டீரா? அது இல்லாமல் எப்படிக் காரியம் முடியும்? சரி, இன்னும் பத்து நாட்கள் சென்று வந்து பாரும். நான் இன்று பம்பாய்க்குப் போகிறேன்” என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார்.

நண்பர் ரயிலுக்குக் கொடுத்த பண நஷ்டத்தோடு காரியமும் வெற்றி பெறவில்லையே இந்த மறதியால்!

ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மறதியாக, ‘தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்’ என்று எழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பிவிட்டாராம். மனைவி அந்த வரியை ஒரு முறைக்குப் பலமுறையாகப் படித்துப் பார்த்தாள். அவள் முகத்தில், மெல்ல ஒரு புன்னகை அரும்பியது. “உம்: இதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு இத்தனை நாட்களாயிற்றா ?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாளாம். எப்படியிருக்கிறது ஒரு மனிதனை, இந்த மறதி மனைவிக்கு அடிமையாக்கும் லீலை !

இந்த மறதி, சாதாரண மனிதர்களுடைய வாழ்வில் தான் காணப்படுகிறது என்று நினைக்காதீர்கள். பெரிய பெரிய மனிதர்களுடைய வாழ்விலே இது பங்கு கொண்டு விடுகிறது.

ஸர் வால்டர் ஸ்காட் என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஒரு சமயம், பத்திரிகையில் வெளிவந்த தம்முடைய பாட்டு ஒன்றைக் கண்டு, தாமே வியந்து போற்றி ஆனந்திக்கத் தொடங்கிவிட்டார். “அவர் எழுதிய பாட்டை அவர்கூடப் போற்றாமல் என்ன செய்வார்?” என்று எண்ணிவிடாதீர்கள். அந்தப் பாட்டு பைரன் என்ற கவிஞர் இயற்றியதாக்கும் என்று கருதியே ஸ்காட் போற்றி னாராம்! ஸ்காட்டின் ஞாபகசக்தி அவ்வளவு அபாரம்!

பிரபல விஞ்ஞானி ஒருவர், ஒரு தடவை, ஏதோ ஓர் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தாராம். அவருக்கு எதிரே காப்பி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். விஞ்ஞானி ஆராய்ச்சி யில் இருந்ததால் அவரைக் கவனிக்கவில்லை. வந்தவர் காப்பியைக் குடித்துவிட்டுக் கோப்பையைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார். விஞ்ஞானி ஆராய்ச்சி முடிந்து காலிக் கோப்பையைப் பார்த்துவிட்டு, “அடடா, அப்பொழுதே குடித்துவிட்டேன் போலிருக்கிறது. ஞாபகமில்லாமல் அல்லவா, இப்பொழுது கோப்பையை எடுக்கப்போனேன்!” என்று எண்ணிச் சிரித்தாராம். அவ்வளவு ஞாபகசக்தி அவருக்கு!

[1]நம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருக்கிறாரே, அவருடைய வாழ்க்கையில்கூட இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

அவர் கல்லூரியில் படிக்கும்போது, எல்லாப் பாடங்களிலும் முதலாவதாகத் தேறிவிடுவார். ஆனல் கணக்குமட்டும்தான் வராது. இவர்தம் நெருங்கிய பள்ளித்தோழர் ஒருவர் இவருக்கு நேர் எதிரிடை: கணக்கில் புலி, ஆனால் மற்ற ஒரு பாடமும் வராது.

கணக்குப் பரீட்சையன்று நண்பர் சொன்னாராம்;

“டேய் இராமலிங்கம், எனக்குக் கணக்கு மட்டும் தான் வருகிறது. பாக்கி ஒன்றிலும் நான் தேறப் போவதில்லை. உனக்கோ கணக்குமட்டும்தான் வரவில்லை. ஒன்று செய்தாலென்ன ? நான் கணக்குப் பேப்பரை எழுதி உன் பெயர் போட்டு வைத்துவிடுகிறேன். அதேபோல், நீ உன் கணக்குப் பேப்பரில் என் பெயர் போட்டு வைத்துவிடேன். நீயாவது தேறுவாய்” என்று தியாகம் செய்ய முன் வந்தாராம்.

கவிஞர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கடைசியில் மேலே சொன்னவாறே, ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு பரீட்சை எழுதிவிட்டார்கள்.

கொஞ்சநாள் சென்று கவிஞருடைய வீட்டுக்குக் கணக்கு வாத்தியார் வந்தார்.

“ஏண்டா இராமலிங்கம், என்னடா கணக்குப் பேப்பர் இரண்டு எழுதி வைத்திருக்கிருய்?” என்று கேட்டார்.

அப்பொழுதுதான் கவிஞருக்கு உண்மை புரிந்தது.

நண்பன், தன்னுடைய பெயரைக் கணக்குப் பேப்பரில் எழுதி, சத்தியத்தைக் காப்பாற்றி விட்டதையும், தான் நண்பன் பெயரை எழுத மறந்து, தன் பெயரையே எழுதிவிட்டதையும் உணர்ந்தார்.

ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வாத்தியாரிடம் சரணகதி அடைந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருவரும் மன்னிக்கப்பட்டனர்.

என்னைக்கூட இந்த மறதி எத்தனையோ தடவைகளில் படாதபாடு படுத்திவைத்துவிட்டது. ஆனால் ஒரு சமயம் என்னைக் காப்பாற்றியும்விட்டது! எப்படித் தெரியுமா ?

முக்கியமான ஒருவரின் விலாசத்தைக் குறித்துக் கொடுத்து, அந்த விலாசத்துக்கு ஒரு கடிதம் எழுதும் படி ஆபீஸ் மானேஜர் கட்டளையிட்டிருந்தார். அவர் தந்த சீட்டை எங்கேயோ வைத்து மறந்துவிட்டேன்.

மானேஜர், நான் கடிதம் எழுதவில்லை என்பதை அறிந்து கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். அபாரமாகக் கோபம் வந்துவிட்டது, அவருக்கு.

“ என்ன, உம்மிடம் எந்தக் காரியம் சொன்னாலும் இப்படித்தான். மறந்துபோச்சு, மறந்துபோச்சு என்று சொல்லியே வருகிறீர். மாதம் பிறந்தவுடன் சம்பளம் வாங்க மட்டும் மறந்துவிடுகிறீரா? “Thirty days have September, April, June & November’ என்று நாளைக் கணக்குப் பண்ணிக்கொண்டே இருக்கிறீரே !” என்று எரிந்து விழுந்தார்.

என்ன செய்வது? குற்றம் என்னுடையதுதான். இரண்டு நாட்களாகக் கஷ்டப்பட்டுக் கடைசியில், அந்த விலாசம் எழுதிய சீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். அந்த விலாசத்துக்குக் கடிதமும் எழுதிவிட்டேன்.

நான்கு நாட்களில் கடிதம் திரும்பி வந்துவிட்டது. காரணம், அந்த விலாசத்தில் அந்த ஆசாமி இல்லையாம். மானேஜரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

“அடடா, அவர் வேறு இடத்திற்கு மாறிவிட்டதாகப் பத்து நாட்களுக்கு முன்னால் எழுதியிருந்தாரே! மறந்தே போய்விட்டேன், பார்த்தீரா!” என்று தலையைச் சொறிந்தார்.

“என்ன ஐயா, மானேஜரே, நீர் மட்டும் மாதம் பிறந்தவுடனே, சம்பளம் வாங்க மறந்துவிடுகிறீரா?” என்று கேட்க என் வாய் துடித்தது. ஆனாலும் என்ன செய்வது? வேலை போகாதிருக்க வேண்டுமே !

இப்படி ஏன், என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் ஒரு பகுதியை இங்கே எடுத்துவிட்டேன் என்றால், அநேக பெரிய மனிதர்கள் வாழ்விலும்கூட, இந்த மறதி தனது லீலையைச் செய்கிறது என்பதைக் காட்டவேதான்!


  1. இந்த நிகழ்ச்சி, கவிஞரின் “என் கதை” யில் இல்லை. ஆனால் சென்னையில் நடந்த கூட்டமொன்றில், கவிஞராலேயே வெளிப்படுத்தப்பட்டது.