விடுதலை வீரர்கள் ஐவர்/கட்டபொம்மன்
௧. கட்டபொம்மன்
[திருச்சிற்றம்பலக் கவிராயர்]
1
தாயகத்தின் விடுதலைக்காய்த் தலைகொடுத்துப் புகழ்காத்த
நாயகரைப் போற்றிசெய் நல்லதொரு கவியரங்கைக்
கூட்டுவித்த வானொலியே! கூடிவந்த நல்லவரே!
பாட்டுச் சுவைபடைக்கும் பாவலரே! அவைத்தலைவ!
அவைத்தலைவர் முன்னிலையில் அரங்கேறும் கவிதைகளைச்
செவிமடுத்துக் கேட்டுவக்கும் செந்தமிழ்நன் னாட்டோரே!
உமக்கெல்லாம்———
சிற்றம் பலத்தான்யான் செய்தேன் பல வணக்கம்;
மற்றினியான் கட்டபொம்மன் வரலாற்று மகத்துவத்தைப்
பற்றிச் சிலவார்த்தை பகரத் தொடங்குகிறேன்.
இற்றைத் தினத்துக்கு இருநூறு ஆண்டுகட்குச்
சற்றேறக் குறைவான சமயத்தே, நம்மருமைப்
பாரதமாம் இந்நாட்டில் பாராண்ட மன்னவர்கள்
வேரதிரத் தமக்குள்ளே வேண்டாப் பகைவளர்த்து,
சூழ்ச்சி பலவிளைத்து, சோதரரைச் சோதரரே
வீழ்ச்சியுறச் செய்துவந்த வெய்யதொரு வினைப்பயனால்,
ஆறா யிரம்மைல்கட் கப்பால் இருந்துவந்த
சோரர்குலம் இந்நாட்டைச் சூழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
ஆளாக்கி நம்மையெலாம் அடிமைகொண்ட அந்நாளில்
தோளுயர்த்தித் தாயகத்தின் சுதந்தரத்தைக்
காப்பதற்காய்
வானெடுத்துப் போர்புரிந்து! வரலாற்றுப் பாதையினில்
மாளாப் புகழ்சுமந்த மாவீரர் எத்தனையோ?
என்றாலும்.--
அன்னவர்கள் தமக்குள்ளே அரவான் பலிபோலே
முன்னம்தன் னுயிர் கொடுத்து முதற்போர் தொடுத்திட்ட
மன்னவனும் தமிழ்த்தாயின் மணிவயிறு பெற்றெடுத்த
தென்னவனாம் கட்டபொம்மே என்றுசொலத்
தேவையுண்டோ ?
அன்னவன்தான் ~~
திக்கெட்டும் புகழ்வளர்க்கும் திருநெல்லைச் சீமையதன்
பக்கத்தே வடகிழக்கில், பாஞ்சாலங் குறிச்சியினில்,
சக்கம்மா தேவியவள் சந்நிதிக்கே அல்லாமல்
திக்கெட்டும் மானிடர்க்குச் சிரம் தாழ்த்தி அறியாமல்,
பேச்சில் தடுமாறிப் பேசிடினும், கைவாளின்
வீச்சில் பகைவரையே தடுமாறி விழவைக்கும்
ஊமைத், துரையோடும், உலையாத பெருவீர
மாமன் புலிக்குத்தி நாயக்கர் தம்மோடும்,
மறக்குலத்தில் பிறப்பெடுத்து மன்னவன்றன் ஆதரவில்
திருக்குமரன் போல் வளர்ந்து சிறந்திட்ட மாவீரன்
வெள்ளயனும், மந்திரியாய் வீற்றிருந்த தானாதிப்
பிள்ளையனும் பக்கலிலே பிரியாத் துணையிருக்க,
கொள்ளையரும் புல்லர்களும் குலைநடுங்க, மாற்றாரின்
உள்ளம் நடுநடுங்க , ஊரெல்லாம் தலைவணங்க,
கொட்டிவைத்த தானியத்தைக் குருவியுமே கொத்தாமல்,
கட்டிவெல்லம் வைத்தாலும் கட்டெறும்பு மொய்க்காமல்
பாஞ்சைப் பதியரசைப் பாலித்து, மக்கள் தமை
வாஞ்சையுடன் தானாண்டு வருகின்ற நன்னாளில்--
சந்தைச் சுரக்கினைக் கொண்டுவந்து மன்னர்
- சந்நிதி யில்தவம் தான்கிடந்து
இந்தச் சரக்கிளை விற்றுமு தல்செய்
- இடந்தரு வீரெனக் கோரிநின்று
முந்தி விரித்துநம் நாட்டினில் வாணிய
- மூட்டை யவிழ்த்துக் கடை பரப்பிச்
சந்தியில் நின்றப றங்கியர் நம்மவர்
- சச்சர வால்மனம் தான் துணிந்தார்.
அப்பம் பகிர்ந்து கொடுக்கவந்த அந்த
- ஆதிக்குரங்கினைப் போற் புகுந்து,
செப்பிடு வித்தை பலபுரிந் தார் ; இந்தத்
- தேசத்தின் ஒற்றுமை சீர்குலைத்தார்.
ஒண்டுக் குடித்தனம் வந்தவன் வீட்டினை
- ஒத்திக்கு வைத்திடும் விந்தையைப்போல்
அண்டிப் பிழைத்திட வந்தவர் இந்திய
- ஆட்சி யுரிமையைப் பற்றி விட்டார்.
வாணிபம் செய்திட வந்தவர் நாடிதன்
- வாரீ சுரிமையைப் பெற்ற வர்போல்
காணியும் பூமியும் தம்மதென்றார் ; கிஸ்தி
- கட்டவும் வேண்டுமென் றணையிட்டார்.
இப்படி யாகநம் இந்திய பூமியை
- ஏப்பங்கள் விட்டு விழுங்கியவர்
கப்பங்கள் கட்டிட வேண்டுமென்று பாஞ்சைக்
- காவலன் தன்னையும் கேட்டு விட்டார்.
3
- காவலன் தன்னையும் கேட்டு விட்டார்.
கம்பமென்ற சொல் கேட்டுக் கொதில் ஊழிக்
- கனல்புகுந்தாற் போல்துடித்தான்; கண்ணில் செந்தீ
கொப்பளிக்கக் கொதித்தெழுந்தான்; குலவை யிட்டான்;
- கும்பினியான் தனநோக்கிக் குமுற லானான்;
“கப்பமென்ற கேட்டிட்டாய்? நாளும் எங்கள்
- மாடுகளை ஏர்பூட்டிக் கழனி யாக்கிச்
செப்பரிய பாடுபட்டு, வியர்வை சிந்திச்
- செந்நெல்லும் தானியமும் விளைத்தோர் உன்றன்
முப்பாட்டன் பரம்பரையா? அன்றேல் நீதான்
- முதுகொடியப் பாடுபட்ட துண்டா ? எங்கள்
அப்பாணை சொல்கின்றேன்! கப்பம் என்றே
- அரைக்காசும் உன்றனுக்கு அளிக்க மாட்டோம்!
“உப்பிட்ட, வீட்டுக்கே கெண்டி தூக்கும்
- உலுத்தரைப்போல் உறவாடி எங்கள் நாட்டை
எப்படியோ தத்தளித்து வித்தை செய்தே
- ஏமாற்றிப் பறித்திட்ட திமிரால், கூலிச்
சிப்பாய்கள் பலமுண்டு , காலை நக்கிச்
- சேவிக்கும் அடியாட்கள் உண்டு, ஓட்டைத்
துப்பாக்கித் துணையுண்டு என்னும் தெம்பால்,
- துணிந்தென்னைக் கப்பமெனக் கேட்டாய் அன்றோ?
“பாட்டலத்தால் எமையடக்கி ஆள- வெண்ணும்
- பறங்கியரே! ஒருவார்த்தை பரஞ்சை என்றன்
குடைநிழலில் வாழுமட்டும், உடம்பில் சீவன்
- குடிகொண் டிருக்குமட்டும், மானத் தோடு நடைபோட்டுத் தலைநிமிர்ந்து நிற்போ மல்லால்,
- நயவஞ்சக் காரருக்கெம் பாஞ்சை மண்ணின்
உடைமரத்து நிழல்தானும் ஒதுங்கத் தாரோம்;
- உயிர்கொடுத்துப் புகழ்காப்போம்; கப்பம் கட்டோம்!”
இவ்வுரை கேட்டதும் கும்பினி யான்இனி
- ஏதும் வழியிலே என்றுணர்ந்தே
செவ்வி மிகுந்திடும் பாஞ்சை யதிடனைச்
- சிறைபி டிக்கவும் துணிந்து வீட்டான்.
கும்பினிப் பட்டாளம் சூழ்ந்துவரப் புலிக்
- குகைக்குள் சிக்கிய கம்பளத்தான்
தம்பி துணையொடும் வானின் பலத்தொடும்
- தப்பித்து நாடு திரும்பி வந்தான்.
நாடு திரும்பிய கட்டபொம்மன் கோட்டை
- நாலு புறமும் பலப்படுத்தித்
தேடிவரும் பகை யோடு பொருதிடும்
- தேதியை நோக்கிக் காத்திருந்தான்.
ஆண்பிள்ளை என்றுபி றந்தவர் யாவரும்
- ஆயுதந் தாங்கத் துடிதுடிக்க,
சாண்பிள்ளை யாயினும் சல்லடம், கட்டியோர்
- சன்னதங் கண்டு குதிகுதிக்க
தொண்டு கிழவரும் தோள் புடைக்க, அவர்
- தொங்கிய மீசை கறுகறுக்க ,
பன்டைய வாலிபம் மீண்டது போலவர்
- பாலாக் கம்பினைத் தான்சுழற்ற, ஏரைப் பிடித்த கரங்களில் வல்லயம்
- ஈட்டி முனைகள் பளபளக்க,
சோறு படைத்திடும் மெள்கரமும் ஒரு
- சூரிக் கத்தியைத் தாங்கிநிற்க,
தாலேலம் பாடிடும் தாயர் பகைவருக்
- காலோலம் பாடிக் கவண்சுழற்ற,
வாலைக் குமரியர் காதல் பரிசமாய்
- நாலு தலைகளைக் கோரி நிற்க,
தொட்டுத் தழுவிய பொற்கரமும் யுத்தக்
- கொட்டு முழக்கினைக் கேட்டவுடன்
நட்டிய மாமன் மகன்கரத்தில் வீரக்
- கங்கணக் காப்புகள் கட்டிவிட,
தீட்டிய வாள்முனை தீப்பறக்க, போரைத்
- தேடிய தோள்கள் தினவெடுக்க,
நாட்டினர் யாவரும் படைதிரளப் பகை
- மூட்டிய வெள்ளையன் போர்தொடுத்தான்
கும்பினியான் பீரங்கி குண்டுமழை பொழிந்தாலும்
கம்பளத்தார் போர்வீரம் கடுகளவும் குன்றவில்லை!
வானத்தை இருளாக்கி மண்டிவரும் கரும்புகையில்
மானத்தில் தலைசிறந்த வீரர்புகழ் மங்கவில்லை!
தோட்டாக்கள் உடலத்தைத் தும்புதும்பாய்ப் பிய்த்தாலும்
நாட்டாரின் தனிவீரம் நைந்துபட்டுப் போகவில்லை!
வேல்பிடித்த கரமருந்து வீழ்ந்தாலும், வேற்றுவரின்
கால்பிடித்துச் சரணடைய யாரும் கருதவில்லை! சேனா பலமெல்லாம் சிதறுண்டு போனாலும்
மானாபி மானம்மட்டும் மண்ணைவிட்டு நீங்கவில்லை!
ஆனாலும்-
கோட்டை இடிந்ததனால், கொத்தளங்கள் சாய்ந்ததனால்,
போட்டிருந்த திட்டமெல்லாம் பொடியாகிட்ட போனதனால்,
நாட்டைவிட்டு வெளியேறி நயவஞ்சக் காரர்தாம்
ஓட்டவழி பார்த்திருக்கும் உற்றதொரு வேளையிலே,
வேற்றுவார்தம் ஆட்சிக்கு வெற்றிலைகள் வைத்தழைத்து
சாற்றுக் கவிபாடிச் சலாமிட்ட பேர்வழிகள்,
ஆங்கிலர் தம் சூழ்ச்சிகளை ஆதரித்து அன்னவரைத்
தாங்கிப் பிடித்துமிகத் தரங்கெட்டுப் போனவர்கள்,
பெற்றெடுத்த தாயவளைப் பிறனொருவன் தொட்டிழுக்கச்
சற்றும் அதையெதிர்க்கும் தன்மையற்றுப் போனவர்கள்,
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவதுவே குலத்தைக் கெடுப்பதுபோல்
காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மன் பிடிபட்டான்!
வேட்டை கிடைத்ததென்று வெள்ளையரும் மனமகிழ்ந்தார்.
கட்டபொம்மன் பிடிபட்டான் என்னக் கேட்டுக்
- களிப்படைந்த கும்பினியான், ‘நாயை யேனும்
சுட்டுவிட வேண்டுமெனில், வெறிநாய் என்றே
- சொல்லிவிட்டுச் சுடவேண்டும்’ என்ற சொல்போல்,
திட்டமிட்டுச் சதிசெய்து, கட்ட பொம்மகன்
- செய்திட்ட குற்றங்கள் என்றே நீளப்
பட்டியலும் தயாரித்துக் கயத்தா றென்னும்
- பதியினிலே முகாமிட்டுப் பதிலும் கேட்டான்! “குற்றமற் சொல்கின்றாய்? ஆமாம், செய்த
- குற்றங்கள் பலவுண்டு; வேற்றார் உம்மை
உற்றடுத்தக் கெடுக்கவந்த உலுத்தர் என்றே
- உணராத தொருகுற்றம்; எங்கள் நாட்டுள்
பற்றெடுத்த சுதநாகம் போலே, உம்மைப்
- புகவிட்ட தொருகுற்றம்; உங்கள் கையை
முற்றுவிட்டுத் தவிக்கின்ற பெரிய குற்றம்
- முன்னோரும் என்னேரும் செய்து குற்றம்!
“குற்றமென்று சொல்லிவிட்டாய்? எதுதான் குற்றம்?
- கும்பினியார் உமதாட்சி தன்னை, யானும்
தொற்றிவரும் நோயென்று தெளிந்து தேர்ந்து
- துடைத்தெறிய முனைத்தேனே, அதுவா குற்றம்?
குற்றேவேல் செய்தும்மை வாழ்த்தி, சுழைக்
- கும்பிடுகள் போட்டுவர வேற்கும் ஏனைச்
சிற்றரசர்' போலன்ரறி, மணம் பேணிச்
- சீறியமை எதிர்த்தேனே, அதுவா குற்றம்?
“குற்றந்தான் என்பாயேல், அதனை யானும்
- குலவையிட்டு வரவேற்பேன்! இந்நாள் என்னை
ஒற்றைமுழ சிறுகயிற்றில் தொங்க விட்டே
- உயிர்பறிப்பாய் என்குலும், இந்த மண்ணில்
பெற்றெடுக்கும் உடம்பெல்லாம் புகுவேன்! உம்மைப்
- பேர்த்தெறிந்து விடுதலையைப் பெறுநாள் மட்டும்
குற்றமிதை தான்புரியத் தயங்க மாட்டேன்!
- கெடிதுாக்கிப் போரிடுவேன்! திண்ணம்! திண்ணம்!”
கட்டபொம்மன் சூளுரையைக் கேட்டே, நெஞ்சக்
- கலக்கமுற்ற கும்பினியான் ‘இவனை இன்னும்
விட்டுவைத்தால் ஆபத்தே’ என்ப தோர்ந்து
- வீரனையே! தூக்கிட்டான்! எனினும் அந்த மட்டில்லாப் புகழ்படைத்த வீரன் நந்தம்
- வரலாற்றில் ஏற்றிவைக்கும் சுடரே, தம்மைச்
சுட்டெரித்துச் சுடுசாம்பல் ஆக்கும் என்னும்
- சூட்சுமத்தை மட்டுமவன் உணர்ந்தா னில்லை!
ஏற்றிவைத்த அச்சுடரே பரத நாட்டின்
- இதயங்கள் எல்லாம்புகுந்து, எழுச்சிக் காலக்
காற்றுவர நிமிர்ந்தெழுந்து, வடவைத் தீயாய்க்
- கனன்றெழுந்து, புடைபுடைத்துக் கனன்று சீறி
வேற்றுவர் தம் ஆட்சியினை வெட்டி வீழ்த்தி
- விடுதலையைத் தந்ததன்றோ? என்றே கூறி
எற்றிருந்த பணிமுடிப்பேன்! அவனை எண்ணி
- இருகையும் கூப்புகின்றேன்! விடையும் கொண்டேன்