உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை வீரர்கள் ஐவர்/தலைமையுரை

விக்கிமூலம் இலிருந்து

தலைமையுரை
தமிழகப் பொதுப்பணி அமைச்சர்,
மாண்புமிகு மு. கருணாநிதி அவர்கள்

இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்ற
என்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர்
பொன்னேரிச் சோதரர் புகழ்மிகு பாவலர்
கண்மணித் தமிழின் காவலர் யாவரும்
இற்றைத் திருநாள் ஏற்பீர், வணக்கம்.

ஆகா ...........
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை தந்த தெவ்விதம்? -
வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்
குடித்திடுவோம் உயிர் கொடுத்திடுக நாட்டை
விடுதலை வேண்டாம் எனும் உபதேசம்
நரிகளிள் ஊளை.

நாட்டு வெற்றிப் பிடித்த காளைகளே
கிலிபிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்
புவிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப்
[பொறித்திடுவோம்
என்று சிலிர்த்துப் பொங்கி எழுத்த
தமிழகம் தந்த விடுதலை மறவர்
கமழ்மணப் பாவில் மீண்டும் பிறந்திட
வானொலி நிலையம் வழங்கிய அழைப்பால்
வந்துளர் தாங்கள், தலைவர் நானும்

விழிகளில் வீரம் சிரித்திடும் தமிழர்
விடுதலை கீதம் பாடிய கதையைக்
கவிகளின் மொழியில் கேட்டிட எழுவோம்
கண்களில் ஒத்திக் கால்மலர் தொழுவோம்

முதலில்......
முடக்கடா விடுதலை ஆர்வம் என்றார்
அடக்கடா சுதந்திர அனைலை என்றார்
அவரை எதிர்த்து
முழக்கடா முரசமென்று அதிர்ந்திட்ட கிங்கேறு
சழக்கரால் சாவில்வீழ்த்த சரித்திரம் கேட்டிடுவோம்

வானம் பொழியுது பூமி விளையுது
மன்னவன் காணிக்கை எதுக் கடா
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று
 
இப்படிக்
கனல் கொட்டும் பெருமூச்சு
கட்டபொம்மன் உயிர்மூச்சு - முழக்
கயிற்றினிலே ஆறியதால்
கயத்தாறுத் தலம் என்போம்
அத்தலத்து வரலாற்றை
அழகு திருச் சிற்றம்பலம்
தருகின்றார், அள்ளி உண்போம்.