விந்தன் கதைகள் 1/கவலை இல்லை

விக்கிமூலம் இலிருந்து
கவலை இல்லை

ந்த ஊரில் அரியநாயகத்தின் செருப்புக் கடைதான் பேர்போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மூன்றரை ரூபாய்க்கு விற்றுச் சம்பாதித்த லாபத்தைக் கொண்டுதான் அரியநாயகம் தன்னுடைய டாம்பீகமான வாழ்க்கையை நடத்தி வந்தான்.

காத்தானுக்கு ஒரே ஒரு பெண். அவளை அவன் கானாற்றில் கட்டிக் கொடுத்திருக்கிறான். அவள் ஒரு சமயம் பிரசவத்திற்காகப் பிறந்தகத்துக்கு வந்திருந்தாள். அப்பொழுது மழைக்காலம். செருப்பு வியாபாரம் க்ஷீண தசையை அடைந்திருந்தது. ஆகவே காத்தான் தன்னுடைய மகள் வந்திருந்த சமயம் மிகவும் கஷ்டமான நிலைமையில் காலங் கழித்துக் கொண்டிருந்தான்.

பெண் பிரசவ வேதனைப் படும்போது காத்தானின் கையில் ஒரு காசும் இல்லை. கடன் கேட்டுப் பார்த்தான்; கிடைக்கவில்லை.

அவன் மனம் சோர்ந்தது. மதி மயங்கியது. மனைவி முகத்தைப் பார்த்தான். “செல்லாத்தா....!” என்றான். மேலே அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவளும் அவன் முகத்தைப் பார்த்தாள். “என்னா!” என்றாள். அவளாலும் அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தன் பெண்ணின் வேதனைக் குரலைக் கேட்டதும் காத்தானின் மனம் பதைபதைத்தது. திண்ணையைவிட்டு எழுந்தான். ‘விர்’ரென்று நடந்தான். எங்கே போகிறான்? போகும்போது கூப்பிடலாமா? சகுனத் தடையல்லவா? செல்லாத்தா சிறிது நேரம் யோசனை செய்து பார்த்தாள். அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது. வேறு எங்கே போகப் போகிறார்? எஜமான் கடைக்குத்தான் போவார்!

பகவானே! அவர் மனம் இரங்குவாரா?

* * *

காத்தான் கடைக்கு வந்தான். கடையின் வாயிலைப் பார்த்தான். மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமில்லை. தன்னுடைய எஜமானனுடையதுதான். எஜமான் உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. எஜமானை நோக்கினான். அவன், தான் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டின் புகை சுருள் சுருளாக மேலே போவதைக் கண்டு களித்துக் கொண்டிருந்தான். காத்தான். அதைக் கவனிக்கவில்லை. விஷயத்தைச் சொன்னான்; விம்மினான். பல்லைக் காட்டினான்; பரிதவித்தான்; கதறினான்; காலில் விழுந்தான், இவ்வளவும் ஒரு பத்து ரூபாய் பணத்திற்கு!

“இந்தச் சமயம் மனசு வச்சி, எனக்கு ஒரு பத்து ரூபா உதவுங்க, சாமி நாளையிலேயிருந்து செருப்புப் போடற பணத்திலிருந்து அந்தக் கடனுக்காகத் தினம் ஒரு ரூபாய் பிடிச்சிக்கிங்க சாமி!” என்று காத்தான் ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்சினான்.

“ஒரு காலணா கடன் கிடையாது” என்று கண்டிப்பாய்ச் சொன்னான் கடை முதலாளி.

“குழந்தை ரொம்பவும் கஷ்டப்படுதுங்க. உங்க குழந்தை மாதிரி நெனைச்சுக்கிங்க மருத்துவச்சி வச்சுப் பார்க்கனுங்க!”

“சீ குழந்தையாவது, மண்ணாங்கட்டியாவது? ஊரிலே தர்ம ஆஸ்பத்திரி இல்லையா? நீ கெட்ட கேட்டுக்கு வீட்டுக்கு மருத்துவச்சி வைத்துப் பார்க்க வேணுமா?” என்று சீறினான் அரியநாயகம்.

“சும்மா தர்ம ஆஸ்பத்திரின்னு பேருங்க, அங்கேயும் பணம் கொடுத்தால் தானுங்க!” என்றான் காத்தான்.

“எக்கேடாவது கெட்டுப் போ இதென்ன லேவா தேவிக் கடையா, உனக்குக் கடன் கொடுப்பதற்கு?” என்று சொல்லிவிட்டு, அரியநாயகம் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டு எங்கேயோ போய்விட்டான்.

காத்தான் கடைக் குமாஸ்தாவைப் பார்த்தான்; குமாஸ்தா காத்தானைப் பார்த்தார்; “என்னைப் பார்த்தால் என்ன செய்வது என்று குமாஸ்தா அனுதாபத்துடன் சொல்லி விட்டு இந்தா என்னிடம் இருப்பது இதுதான்!” என்று தன் இடையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துக் காத்தான் கையில் கொடுத்தார்.

காத்தான் அதைப் பெற்றுக் கொண்டு மனச் சோர்வுடன் வீடு திரும்பினான். “இனத்தை இனம் காக்கும் என்கிறார்களே, அது சரிதான்!” என்று எண்ணிக் கொண்டே அவன் வழி நடந்தான்.

* * *

ன்றிரவு அரியநாயகம் படுக்கப் போகும்போது அவனுக்கு ஏனோ மன நிம்மதியே இல்லை. அவன் மனமே அவனை நிந்தனை செய்தது: “உன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு யார் காரணம்? காத்தான்தானே? கண்ணுக்குத் தெரியாத கடவுள் என்று நீ சொல்லலாம். இல்லை; கண்ணுக்குத் தெரிந்த கடவுள் யார் என்று நினைத்துப் பார்! பத்துப் பதினைந்து ரூபாய்க்கு வெய்யிலில் அலைந்து மதப் பிரசாரம் செய்து வந்த நீ இன்று நிழலில் உட்கார்ந்து நகத்தில் மண் படாமல் மாதம் நூற்றுக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு யார் காரணம்? விழிக்காதே; காத்தான் தான்! - யோசித்துப் பார்! அப்படிப் பட்டவனுக்கு ஆபத்துச் சமயத்தில் நெஞ்சில் ஈரமில்லாமல் ஒரு பத்து ரூபாய் - அதுவும் கடனாக இல்லை என்றாயே!”

அரியநாயகத்திற்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

அவன் செய்துவிட்ட தவறு அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது - காலையில் எழுந்ததும் காத்தான் வீட்டுக்கு ஓட வேண்டும்; தான் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக இருபது ரூபாயாவது அவனிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும்; தன்னுடைய நடத்தைக்காகத் தன்னை மன்னித்துவிடும்படி காத்தானைக் கேட்க வேண்டும் - இப்படியெல்லாம் எண்ணிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அரியநாயகம்.

* * *

றுநாள் பொழுது விடிந்தது. அரியநாயகம் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு காத்தான் வீட்டுக்குப் போனான். அவனுடைய குடிசைக்குள் பயங்கரமான நிசப்தம் குடி கொண்டிருந்தது.

“காத்தான், காத்தான்!” என்று உரக்கக் கூப்பிட்டான் அரியநாயகம்.

காத்தான் நடைப் பிணம் மாதிரி வெளியே வந்தான். அவன் உடம்பில் உணர்ச்சியில்லை; கண்களில் ஒளியில்லை; கால்களில் பலம் இல்லை.

“காத்தான்! இதோ பார்; கவலைப்படாதே! இந்தா, ரூபாய் இருபது!” என்று சொல்லி அரியநாயகம் தன் பணப் பையை எடுத்தான். அதிலிருந்த ஒரு ரூபாய் நோட்டுப் புத்தகத்தை எடுத்து இருபது ரூபாயைப் பிய்த்துக் காத்தான் கையில் கொடுத்தான்.

காத்தான் அந்த நோட்டுக் கத்தையை வாங்கிக் காற்றிலே பறக்க விட்டு விட்டு “உங்க பணம் ஒண்ணும் இல்லாமலே என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சுங்க; குழந்தை போனத்துக்கப்புறம் எனக்குப் பணம் எதுக்கு?” என்றான்.

அவனுடைய உதடுகள் துடித்தன. கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்தது. அதைப் பார்த்த அரியநாயகத்தின் கண்களிலும் நீர் துளித்தது. அவன் வாய் அடைத்து நின்றான்.