விரல்
விரல்
மேலாண்மை பொன்னுச்சாமி
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை-17.
முதற் பதிப்பு : மே, 1995 இரண்டாம் பதிப்பு : (கங்கை) டிசம்பர், 2003 © உரிமை : ஆசிரியர்
விலை : ரூ.45.00
☐ Title VIRAL ☐ Author MELANMAI PONNUSAMY ☐ Edition Second Edition, December, 2003 ☐ Pages 184 ☐ Published By Gangai Puthaga Nilayam
T.Nagar, Chennai-17.☐ Price Rs. 45.00
Laser Typeset by: Sivaa Graphics, Ph: 56152070
Printed at: Nathan & Company, Chennai – 42.
- சமர்ப்பணம்
- செம்மலர் ஆசிரியரும், தமிழ்நாடு
- முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும்
- ஆலமரத்தை நிறுவி வளர்த்தவரும், நாவல்,
- விமர்சனத் துறையில் அழுந்தக் கால்
- வைத்தவரும், கிராமத்துப் பாமரத்தனத்துடன்
- எழுதத் துவங்கிய என் கதைகளை விருட்சம்
- சுமக்கும் விதையென முன்னுணர்ந்து காத்து,
- வளர்த்து என்னை எனக்கும் உலகுக்கும்
- அறிமுகப்படுத்தியவரும், என் போன்ற
- எத்தனையோ படைப்பாளிகளுக்கு ஆதர்சத்
- தலைவராகவும் பாசமிகு தோழராகவும்
- விளங்கிய என் இனிய தோழர்
- கே. முத்தையா அவர்களுக்கு...
முன்னுரை
கிராமங்களின் உற்பத்தி முறையும், சாகுபடி விதமும் நவீனமாகியிருக்கிறது. உழைப்பை மட்டுமே சார்ந்து நின்ற உற்பத்தி முறைமை.. இப்போது உழவு, நவீன விதைகள், ரசாயன உரம், ஊடுருவிப் பாய்கிற பூச்சி மருந்துகள் என்று பணச் செலவுகள் செய்து விளைச்சல் காணுகிற புதிய முறைமையாக மாறியிருக்கிறது.
இந்த மாறுதல், விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த கூலி மக்களுக்குமான உறவுகளையும் நிறமாற்றம் செய்திருக்கிறது. கிராமங்களுக்கேயுரித்தான மனித நேயம் மிகுந்த அந்நியோன்யம், கொடுக்கல்வாங்கல் எல்லாமே நிறமாற்றம் பெற்றிருக்கிறது.
விவசாய வீட்டுப் பிள்ளைகள் விவசாயத்தை நேசிப்பது என்கிற இயல்பான தன்மைகளும் இயல்பு மாறுகின்றன.
இந்த மாறுதல்கள் கலாசாரத்திலும் நிகழ்கிறது. தெம்மாங்குப் பாட்டுகள், தாத்தா பாட்டிக் கதைகள், வியர்வைக் கலையான வீரம் செறிந்த கிராமீயக் கலைகள் யாவும் மங்கி வருகின்றன. தூரம் தூரமாகின்றன.எங்கள் சின்னஞ்சிறு குக்கிராமத்தில்கூட ஆகாய வழியில் வலை வீசிக்கொண்டு நிற்கின்ற 31 ஆன்டனாக்கள். காதுகுத்து- கல்யாணம்-பூப்புனித நீராட்டு போன்ற குடும்ப விழாக்களில்கூட டெக்— டி.வி. சினிமாக்களின் ஆக்ரமிப்பு, காட்டு வெளியில் மேய்கிற ஆடுகளைப் பார்த்துக் கொண்டு வெயிலில் நிற்கிற ஆட்டுகாரனின் உதடுகளில்கூட சினிமாப் பாட்டின் சிணுங்கல்கள்...
இதெல்லாம்... கிராமங்களின் புதிய பூச்சுகள். புதிய நிறங்கள். புதிய தோற்றங்கள்.
இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களா...? முன்னோக்கிய வளர்ச்சியா? அல்லது வளர் சிதைவுகளா? என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
உறவுகளிலும், கலாசாரத்திலும், மனிதப் பண்பாட்டுச் சாயல்களிலும் ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சலனங்களை என் கதைகள் பதிவு செய்கின்றன.
வாழ்க்கை நிகழ்வுகளால் மனிதப் பண்புகள் மாறுவதும், மானுட ஒற்றுமையான செயல்களால் வாழ்க்கையின் முகமே மாறுவதுமாக... வரலாறு முன்னோக்கி நகர்கிறது.
இந்த நகர்வின் உள் வேதனைகளையும், ரணங்களையும், திசைகளையும் என் கதைகள் உணர்த்துகின்றன.
வானம் பார்த்த பூமியான கரிசல் பகுதி மக்களின் அருமைகளையும், பெருமிதத்துக்குரிய உயர் பண்புகளையும் மட்டுமே என் கதைகள் சொல்வதில்லை. அதற்கும் ஆழத்தில் அதிர்கிற சிறுமைகளையும், கசப்பூட்டும் துயரங்களையும், சிதைவுகளையும் சேர்த்தே பதிவு செய்கின்றன.
வாழ்வின் சமகாலப் புதிய முகங்கள் என் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம்... ஏன் முன்னுரையில் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.
முற்போக்காளர்கள் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இப்போது சொல்லப்படுகிறது. ‘ரொம்ப அதிநவீன வாதிகளை’ப் போல தம்மைப் பகட்டிக் கொள்கிற சமகால உருவவியல் வாதிகளால் மட்டுமே அந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அது என்ன குற்றச்சாட்டு?
“முற்போக்காளர்களின் யதார்த்தம், மொண்ணையான யதார்த்தம். வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களை மொண்ணையான யதார்த்த பாணியில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”
இதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
இது... கொஞ்சம்கூட உண்மைக் கலப்பற்ற— அப்பட்டமான—அவதூறு.
வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களையல்ல... புறவாழ்வின் மிகப் புதிய சலனங்களையும்-மனித உறவுகளின், உணர்வுகளின் நிறமாற்றங்களையும் முற்போக்காளர்கள் பதிவு செய்வு செய்து வருகிறார்கள் என்பதே நிஜம்.
அது மட்டுமல்ல... அவற்றையும் கூர்மழுங்கிப் போன ‘மொண்ணையான’ யதார்த்தமாகச் சொல்வதில்லை. ஆழ்ந்துணர்ந்த மன உலக வெளிப்பாடுகளாக— ஆகவே கலைத் தரமிக்க வகையில்— சொல்கிறார்கள். வாழ்வின் நிகழ்வுகள் மன உலகயதார்த்தமாக உணர்வுலகில் கலந்து சங்கமித்து ததும்பிய வெளிப்பாடுகள்தான்... முற்போக்காளர்களின் படைப்புகள் அதனால்தான்... அவர்கள் படைப்புகள் யதார்த்த வடிவத்திற்கே புதிய பரிமாணம் தந்து கொண்டிருக்கின்றன.
சமூக அக்கறையில் எந்த அளவுக்கு ஆழமும் அழுத்தமும் அசலாகவும் முற்போக்காளர்கள் இருக்கிறார்களோ... அதே அளவுக்கு இலக்கிய அக்கறையும் கொண்டிருப்பார்கள். உள்ளடக்க அக்கறையின் அளவுக்கு வடிவ அக்கறையும் இருக்கும்.
‘இலக்கியம் மக்களுக்காக’ என்பதில் அழுத்தமானவர்கள், முற்போக்காளர்கள். இலக்கிய உள்ளடக்கம் மக்களின் உணர்வுகளாக இடம் மாற்றம் பெற்றாக வேண்டும். அதற்கு வடிவம் மிகமிக முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்ந்திருப்பவர்கள்.
ஆகவே... ‘மொண்ணை’ யான யதார்த்தத்தை மனசின் ஆழத்திலிருந்து வெறுப்பவர்கள், முற்போக்காளர்கள். யதார்த்த வடிவத்திலேயே புதிய புதிய சோதனைகள் செய்து வெற்றி கண்டு யதார்த்த வடிவத்தையே சிருஷ்டிப்புத் தன்மைமிக்க வளரும் யதார்த்தமாக்கி... அதைப் போற்றி பாதுகாப்பவர்கள்.
இது... பொய்யல்ல... நிஜம்.
இந்த நிஜம்தான்... இலக்கிய உலகில் முற்போக்காளர்கள் மென்மேலும் செல்வாக்கு பெற்று வருகிற உண்மைக்கான காரணம்.இது... இன்றைய நிஜம் மட்டுமல்ல... எல்லாக் காலத்து உண்மையும் இதுதான்.
வாழும் காலத்திலேயே விரிந்து பரந்த செல்வாக்கு பெற்றிருந்த புதுமைப்பித்தன் ‘காஞ்சனையின் கனவு,’ ‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்,’ ‘கயிற்றரவு’ போன்ற பல கதைகளில் யதார்த்த தளத்தில் ஆழமாகக் காலூன்றி நின்றுகொண்டே வடிவப் பரிசோதனைகள் செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இதில் இடம் பெற்றுள்ள கதைகளில் ‘விரல்’ எனக்கு மிகவும் பிடித்த கதை. உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் எனக்குப் பிடித்தமான கதை. அதே போல... புஞ்சை, பலிபீடம் கதைகளும் பிடித்த மானவை.
இக் கதைகளை தொகுப்பாக சிறந்த முறையில் அழகான வடிவத்தில் நூலாக வெளியிடுகிற புகழ்மிக்க ‘வானதி பதிப்பக’ உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுக்கு எனது இதய நன்றிகள்.
இதோ... உங்கள் கையில் எனது நூல். எனது படைப்புகள். வாசித்து முடித்தவுடன் மவுனத்தில் ஆழ்ந்துவிடாமல்... ஒரு கடிதம் போடுங்கள். படைப்பு பற்றிய உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு மையூற்றும்; விமர்சனங்கள் என் பேனாவை இன்னும் தீட்டிக் கூர்மையாக்கும். இரண்டுமே என்னை வளர்க்கும்.
- நன்றி!
16.1.1995
மேலாண் மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி
உள்ளே...
10 |
26 |
42 |
53 |
60 |
73 |
89 |
103 |
117 |
127 |
144 |
153 |
171 |