வெண்பூ மனம்
வெண்பூ மனம்
மேலாண்மை பொன்னுச்சாமி
கங்கை புத்தகநிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017
முதற் பதிப்பு : டிசம்பர், 2002
- விலை: 40-00
☐ Title VENPOO MANAM ☐ Author Melanmai. Ponnuchamy ☐ Subject Short Stories ☐ Language Tamil ☐ Edition First Edition, Dec - 2002 ☐ Pages 180 ☐ Published By GANGAI PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai-600 017.☐ Price Rs : 40.00
- ஒளி அச்சு: நேரு அச்சகம், இராயப்பேட்டை, சென்னை-14
- Printed At: Malar Printers 044-8224803
- சமர்ப்பணம்
மரங்கள் அழிவதனால்
குறைந்து வருகிற
மழை, பசுமை,
சுத்தக் காற்று
இவற்றுடன்
மறைந்து வருகிற
மயில்களுக்கும்...
நானும் விகடனும்
மேலாண்மை. பொன்னுச்சாமி
(10-3-2002 ஆனந்தவிகடனில் கட்டுரை)
மேலாண்மறைநாடு. விருதுநகர் மாவட்டத்து தென்விளிம்புக் கிராமம். பெயரில் ‘நாடு’ இருந்தாலும், நாடு நகரங்களோடு சட்டென்று தொடர்பு கொண்டுவிட முடியாது. இண்டுஇடுக்கில் சிக்கிக்கொண்ட குக்கிராமம். இன்னும் தொலைபேசி வசதி, கிளை நூலகம்கூட இல்லாத ஊர் என்றால்... பார்த்துக்கொள்ளுங்களேன்.
அம்மா, அப்பா இல்லாமல் நாதியற்று வளர்ந்தவன் நான். வறுமையைப் பகிர்ந்துகொள்ள தம்பி கரிகாலன், ஆச்சி ஐமுத்தம்மாள் மட்டுமே... கல்வி கற்க முடியாமற்போன காயம், மனசைத் தழும்பாக்கி இருந்தது; கண்டதையெல்லாம் படிக்கிற வெறி வாசகனாக்கியிருந்தது. ஆயினும் ஆனந்தவிகடன் வாசிக்கிற அளவுக்கு அப்போது நான் வளரவில்லை. விகடனின் தீவிர வாசகனல்ல என்பதே நேர்மையான நிஜம்.
திருவேங்கடம் கிளை நூலகத்தில் அவ்வப்போது விகடன் தட்டுப்படும். லேசான புரட்டு... பருவட்டான துணுக்கு மேய்ச்சல். இப்படி இருந்த என்னை, விகடனில் வெளிவந்த சேவற்கொடியோனின் தொடர்கதை வசீகரித்தது. ஈர்ப்பான மொழிநடை!
ஜூனியர் விகடன் வந்தபோது, அதன் தீவிர வாசகனானேன். கழுகு என்னைக் கவர்ந்தது. சமூகத்தில் புதையுண்டு போக இருந்த எத்தனையோ சமூகக் கொடுமை நிகழ்வுகளை ஜூ.வி. ஒரு போராளிக்குரிய சமூகப் பொறுப்போடு உலகத்துப் பார்வையில் முன்வைத்தது. பெண் சிசுக்கொலை என்கிற சமூகப் பயங்கரத்தை ஜூ.வி.தான் முதன்முதலாக எழுதி, உலகையே அதிர வைத்தது.நல்ல முற்போக்குச் சிந்தனை கொண்ட ஆற்றல்மிக்க எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி. திறக்காமலிருந்த அவர் பேனாவைத் திறக்கச் செய்ய ஏகப்பட்ட முயற்சி செய்தேன், முடியவில்லை. ‘கூட்டாஞ்சோறு’ விருந்து படைக்க வைத்துவிட்டது ஜூ.வி.! அதன் வெற்றியில் தமிழிலக்கியம் செழிக்கிறது.
ஒரு நகைச்சுவைத் துணுக்குக்காக ஆசிரியர் கைது செய்யப் பட்டபோது, நான் சார்ந்திருக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிஜமாகவே அதிர்ந்தது. நாடு முழுக்கக் கண்டனக் கூட்டங்கள் நடத்தியது. ராஜபாளையம் த.மு.எ.ச. நடத்திய கண்டனக் கூட்டத்தில் கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடல்கள் பாட, நானும் அருணனும் கனல் தெறிக்கப் பேசினோம். அப்போது விகடனுக்கு இதை செய்தியாகக்கூடத் தெரிவிக்கவில்லை. கருத்துரிமைமீது எங்களுக்கு இயல்பாக இருந்த வேட்கையை மக்களிடம் பதிவு செய்தோம்.
எனக்குப் பிடித்த இலக்கியமேதை ஜெயகாந்தன் சிறுகதைகளுக்கு முத்திரைக்கதை அங்கீகாரம், கி. ராஜநாராயணனுக்கு இடம் தந்து, நியாயமான வெளிச்சம் விழச்செய்த விஷயம்-இதனால் விகடன் எனக்குள் ஆழ்ந்த மரியாதை பெற்றிருந்தது. விகடனின் தனிச்சிறப்பே இதுதான்!
மலினப்பட்டுவிடாத எளிமையோடு பரந்த மக்களுடன் கலந்து படர்வது, நவீன இலக்கியத்தின் எட்டும் தூரத்தில் தன்னை ஒரு கௌரவமான இடத்தில் இருத்திக்கொள்வது என்பதே விகடனின் வலிமை. மனிதநேய லட்சியங்களையும் கண்ணியத்தையும் காப்பாற்றுவதில் தனிக்கவனம். வணிக நோக்குக்காகத் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளாத அதன் வைராக்கியம்.
இதெல்லாம்... இப்போதைய கணிப்பு. இப்படியெல்லாம் கனியாமலிருந்த ஒரு தருணத்தில், விகடனுக்கு ஒரு சிறு கதை அனுப்பியிருந்தேன். கல்கியில் நான் நிறைய எழுதிக்கொண்டு இருந்த சமயம்.சிறுகதையில் ஒரு திருத்தம் செய்வதற்குச் சம்மதம் கோரி, விகடனிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. முரட்டுத்தனமாக மறுத்துவிட்டதைப் பற்றிக் கர்வமாக ஊரெல்லாம் பீற்றிக் கொண்டிருந்தேன்.
மாணவர் சௌந்தரபாண்டியன் கவிஞராகியபோது, எனது நண்பரானார். என்மீது அவருக்கு மிகவும் அன்பு. அவரே பின்னாளில் ‘சௌபா’ ஆகியிருந்தார்.
அவர் என்னைச் சல்லடை போட்டுத் தேடி, மதுரையில் பிடித்தார். ஆசிரியரின் விசாரிப்புக்குள்ளாகியிருப்பதைச் சொன்னார். ஆசிரியரின் இலக்கிய ஆற்றல் பற்றி நிறையச் சொன்னார். அவர்தான் ‘சேவற்கொடியோன்’ என்று சொல்ல, ஆச்சரியமாக அதிர்ந்து போனேன். அடடே... அந்த அழகான மொழி நடைக்குச் சொந்தக்காரரா...?!
சௌபா அன்புரிமையோடு வற்புறுத்தினார். “யோவ் மேலாண்மை, விகடனுக்கு ஒரு சிறுகதை அனுப்புறீரு!”
‘பௌர்ணமி’ என்றொரு சிறுகதை அனுப்பி வைத்தேன். அதில் ஒரு வாக்கியம் மாற்ற வேண்டிய நியாயத்தை விளக்கி, மூன்று பக்கக் கடிதம் எழுதிய ஆசிரியரின் ஜனநாயகப் பண்பில் பிரமித்துப் போனேன். பின்பு, இந்தப் பிரமிப்புகள் தொடர்ந்தன.
அன்றிலிருந்து எனது படைப்புகள் நுட்பமான கவனிப்புடனும் உயர்ந்தபட்ச கவுரவத்துடனும் விகடனில் வந்துகொண்டிருக்கின்றன. ஓர் எழுத்தாளன் என்ற அளவில் விகடனுடனான உறவு ஆழமானது; அழுத்தமானது; அடர்த்தியான அனுபவங்கள் நிறைந்தது.
அமரர் கல்கி சிறப்பிதழாகச் செம்மலர் வெளியிட முடிவு செய்தபோது, ஆசிரியரின் பேட்டி தேவைப்பட்டது. இவரோ, எதற்கும் பேட்டியே தரமாட்டார். என்ன செய்ய...? நானும் சோழ. நாகராஜனும் ஆசிரியரைச் ‘சும்மா’ சந்தித்தோம். பேசினோம். கல்கி பக்கமாகப் பேச்சு நகர்ந்தது. உணர்ச்சிமயமாக, உள்ளார்ந்த லயிப்பில் பேசினார்.
“இதையே பேட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?” என்றேன். அத்துமீறலானது, எனது கேள்வி. நட்புரீதியான உரையாடலைக் காரியார்த்தமாக உருமாற்றுகிற தந்திரம்.
ஆசிரியருக்குச் சம்மதமேயில்லை. சம்மதமற்ற மனநிலையிலேயே என்மீதுள்ள பேரன்பு காரணமாகச் சம்மதித்தார்.
எங்கள் ஊரின் ஓடுபாலம் உடைந்தது. ஊர் துண்டிக்கப்பட்டது. பள்ளி செல்லக்கூட ஐம்பத்தாறு கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நரகாவஸ்தை. இதை விளக்கி, அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நான் எழுதிய நீண்ட கடிதத்தின் நகலை ஜூ.வி.க்கும் அனுப்பி இருந்தேன். கடிதத்துடன் கள ஆய்வையும் பிரசுரித்து, என் குரலைத் தமிழகம் முழுக்க ஒலிக்க வைத்தது. ஜூ.வி.! இதைப் படித்த அப்போதைய சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. சொக்கர் அவர்கள், பாலம் கோரி முதல்வரைத் தொடர்ந்து அணுகி வற்புறுத்தியதால், ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு மிகப் பெரிய பாலம் (ஒரு கோடி முப்பது லட்ச மதிப்பீடு) நிஜமாகிவிட்டது! பாலத்தின் பாலம் ஜூ.வி. என்றால் மிகையில்லை.
நாவலாசிரியர் மனைவி என்ற வரிசையில், என் மனைவி பொன்னுத்தாய் பேட்டி விகடனில் வந்தது. என் குடும்பத்துக்கே செய்த உயரிய கௌரவம்.
விகடனுக்குத் தனிக் குணமுண்டு. சமுதாயப் பொறுப்பு உண்டு. இலக்கியப் பொறுப்பு உண்டு. பண்பாட்டுப் பெருமைகளைப் பாதுகாக்கிற சிறப்பு உண்டு.
எத்தனை உலகமயச் சூறாவளிகள், வந்தாலும் நிலை குலையாமல் உயிர் வாழ்கிற தமிழ்ப் பண்பாட்டைப் போலவே... மனித நாகரிகத்தின் சின்னமாக விகடன் வாழும் என்றென்றும். ஏனெனில், விகடன் சமுதாயத்தின் மனசாட்சி.
முன்னுரை
‘முத்திரைச் சிறுகதைகள் அணிவரிசை’ என்ற தனிச் சிறப்புத் தகுதியோடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு உங்கள் கைக்கு வருகிறது.
“வெண்பூ மனம்” தொகுப்பின் ஏழு கதைகள் ஆனந்த விகடனில் மட்டும் “பவளவிழா முத்திரைச் சிறுகதைகள்” என அங்கீகாரம் பெற்ற கதைகள். ‘குங்குமம்’ வார இதழின் முத்திரைச் சிறுகதையாக ‘சக ஜீவராசி’.
ஐந்து குட்டிக்கதைகளை இத்தொகுப்பில் சேர்க்கலாமா, வேண்டாமா என்றொரு விவாதம் எனக்குள் நிகழ்ந்தது. சிறுகதைக் கூறுகளும், உணர்ச்சி விளைவுகளையும் நிகழ்த்தவல்ல ஹைக்கூச் சிறுகதைகளாக இவை திகழ்வதால், இத்தொகுப்பில் இணைகிற உரிமை பெறுகின்றன என்ற துணியில் சேர்க்கிறேன்.
‘நானும் விகடனும்’ என்ற பவளவிழா விகடன் கட்டுரை வரிசையில், என்னையும் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டது, விகடன் ஆசிரியர் குழு. மனசுக்குள் நெகிழ்ந்தேன். ஆயினும்-
நேர்மையோடும் மனஉண்மையோடும் ‘நானும் விகடனும்’ என்ற சிறப்புக் கட்டுரையை எழுதியிருந்தேன். பொய்யில்லை. போலிப் புகழ்ச்சியில்லை. மிகையில்லாத மனஉண்மையை கண்ணியமாக பதிவு செய்தேன்.
அந்தக் கட்டுரையும், இந்த நூலில் இடம்பெறுகிறது.
‘முட்டை வேட்டை’ சிறுகதை ரொம்பவும் தனித்துவமானது. வேறு யாரும் எட்டிப் பார்க்காத களம். யோசித்துப் பார்த்திருக்க முடியாத பிரச்சினை. மிகப்பெரிய பாராட்டுக்களையும், புகழையும் பெற்றுத் தந்தது. இராஜபாளையம் லோகநாதராஜா போன்ற உயர்சிந்தனைப் பிரமுகர்கள் பலரின் நட்பை வாங்கித் தந்தது.
மழலைச் சுமை எந்த இறுகலான பாறை மனசையும் நெகிழ வைக்கிற தனிவல்லமை பெற்ற சிறப்புக்கதை.
உலகமய வர்த்தகச் சுழல்வில் இந்தியாவும் இணைந்து கொண்ட பிறகு, இந்தியா தொழில் ரீதியான சரிவுகளையும், வணிக ரீதியான நாசங்களையும், பண்பாட்டுச் சிதைவுகளையும் சந்திக்கிறது.
பெப்ஸி, கொக்கொ கோலா போன்ற அந்நிய நாட்டு குளிர்பானப் படையெடுப்பில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர், கண்மார்க் போன்ற கலர் கம்பெனிகள் கலகலத்தது மட்டுமல்ல, ஐஸ் விற்று கஞ்சி குடிக்கிற ஏழைகளின் அடுப்பிலும் மண் விழுந்துவிட்டது.
‘காடு கரையே கதி’யென்றும், ‘உள்ளூரே உலகம்’ என்றும் வஞ்சகமில்லாமல் உழைத்துக் கிடந்த நிலம் சார்ந்த உழைப்பாளிகள், தொப்பூள் கொடி அறுபடுவதைப் போல சொந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர். வேலையின்மை என்ற ராட்சஸத்தின் காலடியில் சிக்குண்டு... பஞ்சம் பிழைக்கப் போகிற அகதி நிலைக்கு ஆளாகிற அவலம். வியர்வையை ஏலம் போட ஊர்ஊராக சுற்றவேண்டிய இழிவு, இன்றைய கிராமத்தின் இந்திய உண்மை.
உலகமய வர்த்தகச் சுழல்வின் பண்பாட்டுச் சீரழிவுப் படையெடுப்பில் ஒன்றுதான், உலக அழகிப் போட்டிகள். இந்தியப் பெண்களும் உலக அழகிகளாகிற அதிசயம். ‘அழகைப் பாதுகாப்பதே வாழ்வின் லட்சியம்’ என்று நிறம் மாறுகிற முரணில், பாதுகாப்பற்றுப் போகிற பண்பாடு பற்றி யாருக்கும் கவலையில்லை. ‘உடல் சதைகளின் கச்சிதமும், நளினமுமே அழகு’ என்றாகிற நாசகார மதிப்பீடுகள். ‘உழைப்பே அழகு, மனிதநேயமே அழகு’ என்ற இந்திய மரபார்ந்த உழைப்பாளி மக்களின் பண்பாட்டுணர்வை தொட்டுக் காட்டி, கட்டிக் காப்பாற்ற வேண்டியது, இந்த நாளின் கடமை.
“நாளைய நனவு” என்ற இந்தச் சிறுகதை ஆனந்த விகடனில் பிரசுரமான இரண்டொரு நாளிலேயே, இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் புதல்வி திருமதி புஷ்பா கந்தசாமி அவர்களால் இனம் காணப்பட்டு, பாராட்டு பெற்றது. அது மட்டுமல்ல, டெலிபிலிம் எடுப்பதற்காக இக்கதையை என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்கள், அவர்களது கவிதாலயா நிறுவனத்துக்காக.
கள்ளச்சாராயத்தின் இடத்தை கவர்ந்துகொண்ட கவர்மெண்ட் ஒயின் ஷாப்புகள், தெருவுக்கு நாலு என்று திறந்துகொண்டே போகிற முன்னேற்றம். போதையில் தள்ளாடி வேரிழக்கிற ஏழை எளியோரின் குடும்பங்கள். மலிவு விலை மதுகளும், உயர்வகை மது வகைகளும் கல்யாண வீடுகள், இழவு வீடுகள் என்று எல்லா இடங்களிலும் நுரை பொங்கி வழிகின்றன. தேசமும், பண்பாடும், வாழ்வும் தள்ளாடித் தத்தளிக்கின்றன.
நாடு காக்க நல்ல பல காந்திகளும், வாலிபர்களும் தேவைப் படுகின்றனர்.
‘கோட்டைச்சாமி’ சற்றே வித்தியாசமான மொழிநடையில் எழுகிறது. அரசகாலத்து நிகழ்வுச் சித்திரம்.
‘மாரியம்மாள்’ கதையும் அப்படித்தான். மழையின் இரு குணத்தை உணர்த்துகிற கதை. ‘மழை என்றாலே அழகானது. நனைந்தால் சுகமானது’ என்று பாதுகாப்பான இல்லத்தில் உட்கார்ந்துகொண்டு, ஜன்னல் வழியே மழையை ரசித்து கவிதை எழுதுகிற மனோபாவத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. மழையின் முழுமை தெரியாத இந்த மனோபாவம், என்னை எரிச்சலூட்டியது.
மழையின்றி உலகில்லை. உண்மை. அதே மழைக்கு இன்னொரு முகமும், குணமும் உண்டு. அதைப் பதிவு பண்ணவே ‘மாரியம்மாளை’ எழுதினேன். “ஈரமான மாரியம்மன், (மாரி என்றால் மழை) ரௌத்ரமான பத்ரகாளி” என்ற இருமுகம் கொண்ட மழையை எழுதினேன்.
என் கதைமாந்தர்கள், வியர்வை ஜாதியினர். தலித்-மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர். விவசாயத் தொழிலாளர், விவசாயிகள். மழை கண்டு, பயந்து ஓடுவதைப் பரிகசிப்பார்கள். மழைப் பொழுதிலும் கொழை ஒடிக்க ஓடுவார்கள். வெய்யில் பொழுதிலும் வேலைகள் செய்வார்கள்.
‘பாடுபடுவதே மனிதச் செயல்’ என்று எந்நேரமும் மெய்வருந்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் குணாம்சமே, எனது கதைகளின் சுபாவம். அவர்கள் மொழியே, சிந்தனைத் தொனியே எனது கதையின் குணங்கள். அவர்களது வாழ்வியல் பண்பாட்டுத்தளமே, என் கதைகளின் இயங்கு தளம்.
இந்திய அரசியல், பொருளாதார, ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற கிராமங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் (வேளாண்மை, பிற்படுத்தப்பட்டோர், தலித்) என்கிற மகாசமுத்திரக் கறுப்பு ஜனங்கள்தான்... இந்தியாவுக்குச் சோறு போடுகிறார்கள்: இந்தியப் பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறார்கள். புதிய பொதுமைச் சுபிட்ச இந்தியாவை கருக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயினும் ஆட்சியும், வரலாறும், அறிவுஜீவிகளும் இந்த மகாசமுத்திரக் கறுப்பு ஜனத்தைப் பொருட்படுத்துவதில்லை. புறக்கணிக்கின்றனர். அறிவுஜீவிகளின் புறக்கணிப்புகளையும் மீறித்தான், இந்த மகாசமுத்திரக் கறுப்பு மக்களின் பண்பாட்டு இலக்கியத்தளம் அரவமற்று இயங்குகிறது.
அந்த மக்களின் ஆன்மஒலியாக என் கதைகளும், கதை மொழியும் இயங்குவதில்தான்... என் கதைகளுக்கான ஆன்மபலம் அடங்கியிருக்கிறது.
புறக்கணிப்புகளை மீறிய புதிய நதியாகவும், ஜனநாயக சிந்தனை கொண்ட லட்சோப லட்ச படிப்பாளிகளின் ஆதரவு பெற்ற இலக்கியப் பாதையாகவும் என் கதைகள் இயங்குகின்றன.
கங்கை புத்தக நிலையம புகழ்மிக்க பாரம்பர்யமிக்கது. அவர்கள் பதிப்பித்த எனது நூல்களான ‘மனப்பூ’, ‘ஒரு மாலை பூத்து வரும்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும் அடுத்தடுத்து தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றன. ஆச்சரியமிக்க ஆனந்த அனுபவம் இது.
கங்கைக்கும், எனக்குமான உறவு அடர்த்தியாகிறது; அழுத்தமாகிறது ஆத்மார்த்தமாகிறது. திருமிகு இராமு அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அந்தக் கங்கை புத்தக நிலையமே இந்த நூலையும் பதிப்பிப்பது, கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
அழகும் கச்சிதமும் பொருந்திய நூலாக வடிவமைத்த பதிப்பகத்திற்கும், அற்புதமான அட்டை வடிவமைத்த ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கும், இந்தச் சிறுகதைகளைப் பிரசுரித்து என்னைப் பெருமைப்படுத்திய ஆனந்தவிகடன், தேவி, குங்குமம், தினமலர், வாசுகி, செம்மலர் போன்ற இதழ்களின் ஆசிரியர்களுக்கும், கதைகள் வந்த இதழ்களை பத்திரப்படுத்தி, பாதுகாத்து, கத்தரித்துத் தந்த என் மூத்த மகள் பொ. வைகறைச் செல்வி (பி.ஏ.தமிழ்)க்கும், என் இலக்கிய வாழ்க்கைக்கு ஆதாரபலமாகவும், ஆணிவேராகவும் திகழ்கிற என் உடன்பிறப்பு செ. கரிகாலனுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
தொகுப்பை வாசித்து முடித்துவிட்டீர்களா? மௌனத்தில் புதைந்து போய்விட வேண்டாம். பாராட்டத் தோன்றினாலும், குறைகூறத் தோன்றினாலும் ஓர் அஞ்சலட்டையில் உணர்த்துங்கள்.
உங்கள் பாராட்டுச் சொற்கள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும்; நீங்கள் கண்டுணர்த்தும் குறைகள், என் பேனாவை மேலும் தீட்டி, கூர்படுத்தும். இரண்டுமே இலக்கியத்துக்கு உரமூட்டும்.
நன்றி!
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
626127
இராஜபாளையம் வழி
விருதுநகர் மாவட்டம்.
உள்ளே...
1. | 15 |
2. | 29 |
3. | 43 |
4. | 59 |
5. | 62 |
6. | 75 |
7. | 90 |
8. | 93 |
9. | 109 |
10. | 122 |
11. | 125 |
12. | 137 |
13. | 150 |
14. | 153 |
15. | 165 |
16. | 177 |