வெற்றிக்கு எட்டு வழிகள்/008-010

விக்கிமூலம் இலிருந்து



அன்பின்மை, மனிதனின் பண்பைக் கெடுத்து விடுகின்றது. காலப்போக்கில் அவனுடைய முகத்தைக் கெடுத்துவிடுகின்றது. அன்பினால் அவன் அடைந்திருக்கக் கூடிய வெற்றியின் நிறைவைக் கெடுத்து விடுகின்றது.

அன்புடைமை பண்பியல்பை அழகு படுத்துகின்றது. ஆண்டுகளின் வளர்ச்சிக்கேற்ப அவனுடைய முகத்தை அழகு படுத்துகின்றது. மனிதனின் நுண்புலத் திறமைகள் அவனுக்கென உரிமைப்படுத்துகின்ற வெற்றியின் நிறைவுடைமை பெற வழி கோலுகின்றது. மனிதன் அன்பு தோய்ந்ததின் பயனாக அவனுடைய ஆக்கம் கனிந்து செழிக்கின்றது.

பெருந்தன்மை பரந்த நெஞ்சங்கொண்ட அன்புடைமையோடு பொருந்தியிருக்கின்றது. அன்புடைமை, பணிவு மிக்க தங்கையானால் பெருந்தன்மை வலிமை மிக்க தமையனாவான். தன் போக்கான, திறந்த நோக்குடைய, தகைமை வாய்ந்த குணவியல்பு எப்போதும் கவர்ச்சியுடையதாகும், செல்வாக்குடையதாகும். கஞ்சத்தனமும், இழிந்த நோக்கும் எப்போதும் எதிரிடையானவை. அவை இருள்படர்ந்தவை; குறுகியவை; கருத்தற்றவை. அன்புடைமையும், பெருந்தன்மையும் எப்போதும் கவர்ச்சியுடையவை. அவை ஒளி படர்ந்தவை; வளர்ச்சி உறுபவை; வெளிப்படையானவை; கருத்துடையவை. தடைபடுத்தும் ஒன்று தனிமைக்கும், தோல்விக்கும் வழிகாட்டுகின்றது. கவர்ச்சியுடைய ஒன்று ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் வழிகாட்டுகின்றது. 

பெறுவதைப் போன்றே வழங்குவதும் அத்துணை சிறப்பான ஒரு கடமையாகும். தன்னால் இயன்ற அளவு பெறக் கூடியவை அனைத்தையும் பெற்றுவிட்டு, வழங்க மறுப்பவன் இறுதியில் பெறமுடியாத நிலையடைந்து விடுவான். ஏனெனின், நாம் பெறக்கூட வில்லையெனின் நாம் வழங்க முடியாதவாறு போல, நாம் வழங்கவில்லையென்றால் நாம் பெற முடியாது என்பதும் ஓர் ஆன்மீக விதி.

வழங்குவது என்பது மேன்மையானது. இன்றியமையானது. ஒரு கடமை என்றே சமய ஆசிரியர்கள் அனைவராலும் எப்போதும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன? தன்னைப்பொறுத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான தலையாய வழிகளில் ஒன்று வழங்குதலாகும். மேலும், மேலும் மேம்பாடும் தன்னலத் துறவை நாம் அடைதற்கும், தன்னலத்திற்குத் திரும்பவும் வீழ்ச்சியடைந்து விடுவதைத் தடுத்தற்குமான கருவி அதுவே. உடன் வாழும் மக்களுடன் நமக்குள்ள வாழ்வு சார்ந்ததும், சமூகஞ் சார்ந்ததுமான உறவை நாம் உணர்ந்து, பிறருடைய நன்மைக்காகவும், நன்னிலைக்காகவும் நமது தேட்டத்திலிருந்தோ உடைமையிலிருந்தோ ஒரு பகுதியை இழக்கச் சித்தமாயிருக்கின்றோம் என்பதை அது குறிப்பாலுணர்த்துகின்றது. எத்துணை மிகுதியாகப் பெறினும், பின்னும் மிகுதியாக வேண்டுமெனப் பசி கொள்பவனும், கொடுமையான விலங்கொன்று தன் இரையைப் பற்றிக் கொண்டிருத்தல் போன்று, திரண்டு வரும் சேமிப்பின் மீதுள்ள தனது பிடியைத் தளர்த்த மறப்பவனுமான பேராசை கொண்ட மனிதன் கீழ் மண்டிப் போகின்றவனே ஆவான்.

பேராசை, இழிபோக்கு, பொறாமை, ஐயப்பாடு இவற்றிற்கெதிராக மனிதன் எச்சரிப்புடனிருக்கட்டும். ஏனெனில், இவை வளர இடந் தந்தால், அவனுடைய வாழ்வில் சிறப்புடையனவாக இருப்பவை அனைத்தையும் இவை பறித்துவிடும். பருப்பொருளியலான காரியங்களில் சிறப்படையனவாக இருப்பன அனைத்தையும் அழிக்கும். அதேபோன்று குணவியல்பினும், மகிழ்ச்சியிலும் சிறப்புடையனவாக இருப்பவை அனைத்தையும் கூட இவை பறித்துவிடும்.

அவன் தாராளமான நெஞ்சமும், வாரி வழங்கும் கையும், பெருந்தன்மையும், பிறரை நம்பும் பான்மையும் உடையவனாக, மகிழ்ச்சியுடன் வழங்குவது, அதுவும் பெரும்பாலும் தனது உடைமையிலிருந்தே வழங்குவது மட்டுமன்றி, தனது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் கருத்திலும், செயலிலும் தன்னுரிமை வழங்குபவனாகவும் இருக்கட்டும்; அவ்வாறிருப்பின், நண்பரும் விருந்தினரும்போல, புகழும், செழிப்பும், ஆக்கம் ‘நுழையட்டுமா’ என அவன் கதவைத் தட்டி நிற்கும்.

பண்புடைமை தெய்வத் தன்மையுடன் உறவு கொண்டதாகும். கரடுமுரடான, கொடுமை மிகுந்த, தன்னல நோக்குடைய இருப்பவை அனைத்தினின்றும் பண்புடைமையைப் போன்ற வேறு எக் குணமும் அதிகத் தொலைவில் இருக்காது. எனவே, ஒருவன் பண்புடைமையுடையவனாகும்போது அவன் தெய்வீகத் தன்மையைனாகின்றான். மிகுதியான அனுபவத்தின் மீதும், உயர்ந்த ஒழுக்கத்தின் மூலமுமே அதைப் பெற முடியும். தன்னுடைய விலங்கின இச்சைகளைக் கட்டுப்படுத்தி அவற்றை அடக்கியாளுகின்றபோதுதான் அஃது ஒருவனிதயத்தில் நிலைபேறு கொள்கின்றது. மெல்லோசையுடைய தெளிவான குரல், தனிக்குறிப்புடையதாக, உறுதியுடையதாகயிருப்பினும் அமைதியாக விளக்கிக் கூறும் பாங்கு, குறிப்பாக இக் கட்டான சூழ்நிலைகளில் பரபரப்பு, உணர்ச்சிமேலிடு, சினம் இவற்றிலிருந்து விடுபட்டிருத்தல் ஆகியவையே அதன் வெளிப்புற அடையாளங்களாகும்.

பண்புடைமைய அறிவுடைமையோடு இணைக்கப் பெற்றிருப்பதாகும். அறிவுடைய மனிதன் தன்னிடமுள்ள சினம் அனைத்தையும் வென்றுவிட்டவனாவான். எனவே, பிறரிடம் அதை எவ்வாறு வெற்றிகாண வேண்டும் என்பதை அவன் புரிந்து கொள்கின்றான். கட்டுப்பாடற்ற மனிதர் தம்மைத்தாம் உட்படுத்திக் கொள்கின்ற தடுமாற்றம், தொந்தரைகள் பலவற்றிலிருந்து பண்டைய மனிதன் காப்பாற்றப்பட்டவனாகின்றான். அவர்கள் பயனற்றதும், தேவையற்றதுமான கடுமை தம்மைத் தாம் களைப்புறச் செய்துகொள்ளும் வேளையில், இவன் அமைதியுடனும், தன்னிறைவுடனுமிருக்கின்றான்; வாழ்வுப்போரில் அத்தகைய அமைதியும், தன்னிறையும் வலுவுற்றனவாகும்.

நுண்புலம் இரக்கத்தின் இயல்திறனாகும். இரக்கமான மனமே ஆழ்ந்து உணர்ந்தறிகின்ற மனம். நாம் நுகர்வறிவால் புரிந்துகொள்கிறோமே அன்றி, வாதாடலால் அன்று. நாம் ஒரு பொருளையோ ஒருவனையோ அறிந்துகொள்ளு முன்பு, நமது வாழ்வு அதனுடையவோ அவனுடையவோ வாழ்வுடன் தொடர்புற்றாக வேண்டும். வாதாடல் வெளிப்புறத் தோலையே பகுத்தாராய்கின்றது. ஆனால், இரக்கம் நெஞ்சத்தையே எட்டி விடுகின்றது; பிறரிடம் குறை காண்பவன் உருவையும், உடையையும் பார்த்துவிட்டு, மனிதனைக் கண்டுவிட்டதாக எண்ணுகின்றான். இரக்கச் சித்தமுடையோன் மனிதனைக் காணுகின்றான்; உருவையும், உடையையும் கருத்தில் கொள்வதில்லை.

வெறுப்பின் ஊடே ஒவ்வொருவனும் மற்றொரு வனைத் தவறாக மதிப்பிடுகின்ற ஒரு பிரிவினை உள்ளது. அன்பின் அனைத்திலும் ஒவ்வொருவனும் மற்றொருவனைப் புரிந்துகொள்கின்ற ஓர் ஒற்றுமையுள்ளது. இரக்கம் அன்பின் தூய்மையான வடிவமாக இருப்பதால், அது மக்களுடைய, பெருள்களுடைய நெஞ்சத்தையே காணுகின்றது. பரந்த நெஞ்சம் இருப்பதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் மிகவுயர்ந்த கவிஞராகத் திகழ்கின்றார். மனித நெஞ்சத்தைக் குறித்தும், உயிருள்ளன உயிரில்லாதன இவற்றின் இயல்பைக் குறித்தும் அத்துணை ஆழ்ந்த அறிவினை, இலக்கியம் அனைத்திலும் வேறு எவருமே, எடுத்துக் காட்டவில்லை. தன்னியல்பான ஷேக்ஸ்பியர் அவருடைய நூல்களில் காணக் கிடைப்பதில்லை; ஏனெனின், இரக்கத்தின் காரணமாக அவர் தம் நாடகமாந்தாகளுக்குள் இரண்டறக் கலந்துவிடுகின்றார். அவர் தற்காலிகமாக மேதை, தத்துவஞானி, கிறுக்கன், மடையன், குடிவெறியன், பரத்தை இவர்களாக ஆகியே விட்டார். அவர்கள் எந்நிலையிலிருந்தனரோ அதோ நிலையில் இவருமிருந்தார். இவர் அவர்களுடைய தனிப்பட்ட பட்டறிவுகளுக்குள் புகுந்து, அவர்கள் தம்மைத்தாம் அறிந்து கொண்டிருந்ததைவிடச் சிறப்பாக இவர் அவர்களை அறிந்து கொண்டார். ஷேக்ஸ்பியருக்கு ஒருதலைச் சார்போ, ஒறுப்போ கிடையாது; மிகத் தாழ்ந்தவர் முதல் மிக உயர்ந்தவர் வரையில் இவருடைய இரக்கம் அனைவரையும் அரவணைக்கின்றது.

இரக்கத்திற்கும், அறிவிற்கும் பெருந்தடையாக இருப்பது தப்பெண்ணமே. தப்பெண்ணம் கொண் டிருப்பவரை ஒருவன் தானே புரிந்து கொள்ளுதல் இயலாது. அரைகுறையான தீர்ப்புகளை நம் உள்ளங்களினின்றும் அப்புறப்படுத்துகின்றதேபாது தான் மக்களையும், பொருள்களையும் உள்ளவாறே நாம் காண முடியும். நாம் இரக்கமுடையவர்களாக ஆகும் போதோ உண்மை. பார்வையுடையவர்களாகவும் ஆகின்றோம். இரக்கம் அறிவைத் தனது தோழனாக கொண்டிருக்கின்றது.

உணருகின்ற நெஞ்சமும், காணுகின்ற கண்ணும் இணைபிரியாதனவாகும். இரக்கமுள்ள மனிதன் வருவதுரைக்கும் திறமுள்ள அறிவனாவான். நெஞ்சங்கள் அனைத்துடனும் இயைந்து துடிக்கின்ற உள்ளமுடையோனுக்கு அவ் உள்ளங்களின் எண்ணங்கள் அனைத்தும் புலனாகின்றன. மேலும், இரக்கமுள்ள மனிதனுக்கு இறந்தகாலமும், எதிர்காலமும் கண்டறிய முடியாத மறை புதிராக ஒருபோதும் இருப்பதில்லை. அவனுடைய ஒழுக்கநெறி சார்ந்த நுண்புலம் மனித வாழ்வின் நிறை வட்டத்தை உய்த்தறிந்து விடுகின்றது.

இரக்கந் தோய்ந்த நுண்புலம் மனிதனை விடுதலை, களிப்பு ஆற்றல் ஆகியவற்றின் உணர்வு நிலைக்கு உயர்த்தி வடுகின்றது. அவனுடைய மூக்சுப் பைகள் காற்றை உட்கொள்வது போன்று அவனுடைய ஆன்மா களிப்பை உட்கொள்ளும். கூட்டாளிகளாலோ, பகைவர்களாலோ அவனுக்கு அச்சங்கள் எப்போதும் உண்டாவதில்லை. தவழ்ந்து வரும் இந்த மாயைகள் மறைந்துவிடுகின்றன. அவனுடைய எழுச்சி ஊட்டப்பெற்ற திருப்பார்வைக்கு எதிரில் பேராற்றலும், மேம்பாடும் கொண்ட ஆட்சி வந்தமைந்து விடுகின்றது.

இயல்பார்வம்

மனித சமூகம் அதன் இயல்பார்வத்தாலேயே ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. ஓர் உலக உண்மைப் பிசகு ஓர் உலக நம்பிக்கையின்மையைப் பிறப்பித்துவிடும். அது அழிவை உண்டு பண்ணாவிட்டாலும் ஓர் உலகப் பிளவைக் கொணர்ந்துவிடும்.

நாம் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கின்ற ஆழ்ந்து வேரூன்றிய நம்பிக்கையாலேயே வாழ்வு தெளிந்த அறிவுநிலை உடையதாய், நற்பயன் விளைப்பதாய், மகிழ்ச்சியுடையதாக ஆக்கப்படுகின்றது. நாம் மனிதரை நம்பவில்லையெனின் அவர்களுடன் நாம் எவ்வகைத் தொடர்பும் வைத்துக்கொள்ள வியலாது. அவர்களுடன் சேர்ந்து பழகக்கூட இயலாது. தனது மடமையின் காரணமாக மனித இன இயல்பார்வத்தின் மீதிருந்த நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்ட மனிதனின் இழிநிலையையே ஷேக்ஸ்பியரின் “தைமான்” நாடகம் நமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. அவன் மனிதர் அனைவருடைய சேர்க்கையினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்கின்றான்; இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றான்.

எந்தத் துறையினின்று நம்பிக்கை விடுவிக்கப்படுமானால் சமுதாயம் வீழச்சியுற்றுச் சிதறிப் போகும் என எமர்சன் குறிப்பிடுகிறார். ஏனெனில் மக்கள் ஒருவரையொருவர் நம்பி வாழவேண்டும் என்பதற்கு இந்த நம்பிக்கை முறையே ஓர் அறிவிப்பாகத் திகழ்கிறது. அனைத்து மோசடியும், வஞ்சனையுமாகும் என்று குறுகிய நோக்குடையோராலும், அறிவிலிகளாலும் பொதுவாகக் கருதப்படுகின்ற வாணிபமும், பிறவும் ஒருபெரும் நம்பிக்கையின் அடிப்படையிலிருந்தே தோன்றுகின்றது. மனிதர் தம் கடமைகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றி விடுவர் என்னும் நம்பிக்கையே யாகும். பொருள்களைத் தந்து ஒப்படைப்பது வரையில் கட்டணம் கேட்கப்படுவதில்லை. பன்னெடுங் காலங்களாக இந்த முறை நடைமுறையிலிருக்கும் உண்மை. பெரும்பான்மையான மனிதர் தம்முடைய கடன்களைத் திருப்பித்தரவே செய்கின்றனர் என்பதுடன், அவ்வாறு கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் விருப்பமுமில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

மனித சமூகம் அதன் குறைபாடுகள் அனைத்திற்கும் அடியில் உண்மையென்னும் வலுவுள்ள அடி நிலையிலேயே நிலைபெற்றிருக்கின்றது. அதன் அடிநிலை இசைவு இயல்பார்வமேயாகும். மிகயுர்ந்த இயர்பார்வம் கொண்ட மக்கள் அனைவரும் அதன் பெருந்தலைகளாவர்; அவர்களின் பெயர்களும், அவர்கள் பெற்ற பேறுகளும் அழிந்துவிட அனுமதிக்கப்படுவதில்லை; இயல்பார்வம் என்னும் அறம் மக்களினம் அனைத்தாலும் பாராட்டப்படுவதற்கு இதுவே சான்று. 

ஒவ்வொருவரும் தம்மைப் போன்றவனே என்று கற்பனை செய்துகொள்வதும், “சமூகத்தின் பண்பாட்டை” குறித்து உரையாடுவதும் இயல்பார்வம் இல்லோர்க்கு எளிதே. அழுகிய பொருளொன்று தலைமுறை தலைமுறையாக இருந்து வரக் கூடுமென்ற நிலையில் இருக்கின்றது இது. ஏனெனின், காமாலைக் கண்னுக்கு காணும் ஒவ்வொன்றும் மஞ்சளாகவே தோன்றுமன்றோ? மனித சமூகக் கட்டமைப்பில் கண நேர நன்மை எதையுமே காணமுடியாத மக்கள் தம்மைத் தாமே பழுதுபார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு இல்லத்தை அடுத்தே இருக்கின்றது. அவர்கள் தீமையை நன்மையென அழைப்பர். நன்மையைக் காணுதல் இயலாது போகும் வரையில் அவர்கள் குற்றங்காணும் குணத்துடனும், சிடுசிடுப்புடனும் தீமையின் கண்ணேயே வதிந்து வந்துள்ளனர். ஒவ்வொன்றும் தீயதாகவே தோன்றுகின்றது. மக்களும் தீயராகவே தோன்றுகின்றனர்.

முழுக்க முழுக்கத் தன்னலக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சமூகப் பணியில் பங்குகொள்ளும் மனிதன், நீடித்துச் செழிப்புற இயலாமலும், செல்வாக்குடையவன் என்ற முறையில் எந்த இடத்தையும் நிரப்ப இயலாமலும் போய்விடுகிறான். விரைவில் அவனுடைய திரை விலக்கப்பட்டு அவன் அவமதிக்கப்படுகின்றான். குறிப்பிட்ட காலத்திற்கேனும் அத்தகைய மனிதன் மனித ஏமாளித்தனத்தால் தின்று கொழுக்க இயலும் எனும் உண்மை மனிதரின் அறிவின்மையை எடுத்துக் காட்டினும் மனிதரின் நம்பிக்கைப்பான்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.

கலைத்திறம் வாய்ந்த நடிகன் மேடையில் பாராட்டப்படுகின்றான். ஆனால், வாழ்வெனும் மேடையில் போலி நடிகன் தன்னை இகழ்ச்சிக்கும், ஏளனத்திற்கும் உரியவனாகத் தாழ்த்திக் கொள்கின்றான். தான் இயல்பாக இல்லாத நிலையினில் தோற்றமளிக்க முயற்சி செய்வதில், அவன் தனித்தன்மையில்லாத, குணவியல்பு இல்லாத ஒருவனாகி விடுகின்றான். அவன் செல்வாக்கு அனைத்தும், ஆற்றல் அனைத்தும், வெற்றி அனைத்தும் இழந்தவனாகி விடுகின்றான்.

கணப் பொழுதிற்கு வண்ணப் பூச்சான வாழ்வால் தற்பெருமை கொள்பவர்களோ திறமையாக வீசப்படுகின்ற மோசடியில் மனநிறைவு காணுபவர்களோ செல்வாக்கின் ஏமாற்றத்திலிருந்து தப்ப முடியாது; அவை நெஞ்சத்தை உருக்கி, நிலைபேறுடைய, இறுதியான பயன்களுக்காகத் தீர்ப்பை உருவாக்குகின்றன. அதே வேளையில், திட்டமிடப்பட்ட இந்த ஏமாற்றங்கள் மனத்தின் மேற்பரப்பில் கணநேரச் சிற்றலைகளையே உண்டு பண்ணுகின்றன.

“மெய்யொலி எழுதல்” என்பது பொருள் பொதிந்த சொல்லாகும். நாணயத்தைச் சுண்டிப் பார்க்கும்போது அது தரக் குறைவான உலோகப் பொருளின் கலப்பின்றி முழுவதும் தூய்மையான உலோகப் பொருளால் ஆக்கப்பட்டதென்பதைப் புலப்படுத்தும் ஒலியை, எழுப்புவதையே இது குறிப்பிடுகின்றது. அது உயர்நிலைக்கு வந்துவிடுவதால், எங்கும், எல்லாவிடத்தும் செல்லுபடியாகும்.

மனிதர் நிலையும் அதுவே. அவர்களுடைய சொற்களும், செயல்களும் அவர்களுக்கே சொந்தமான தனிப்பட்ட செல்வாக்கையே வெளிப்படுத்துகின்றன. பிற மனிதரனைவரும் உள்ளூரச் செவிமடுத்து இயல்புணர்வாகவே கண்டுகொள்கின்ற செவிப் புலனாகாத ஓர் ஒலி அவர்களிடமிருக்கின்றது. மெய்யான ஒலியினின்றும் பொய்யான ஒலியை அவர் பிரித்தறிந்து விடுவர்; எனினும், தாம் அறிந்து கொண்டது எவ்வாறென அவர் அறியமாட்டார். ஒலிகளிலுள்ள மிகமிக நுண்ணிய வேறுபாடுகளைப் புறச்செவி உணர்ந்தறிதல் போன்று, உயிர்களிடையுள்ள நொய்தான வேறுபாடுகளை அகச்செவி உணர்ந்தறியவியலும். ஏமாற்றுபவனைத் தவிர இறுதியில் ஏமாற்றப்படுபவர்கள் யாருமே இலர்.

இயல்பார்வமற்றவர்கள் தமது வெற்றிகரமான பாசாங்குகளைக் குறித்துத் தம்மைத் தாம் தற்புகழ்ச்சி செய்து கொள்வதால் அவர்கள் ஏமாற்றிக் கொள்வது தம்மையே அன்றிப் பிறரையன்று. இது அவர்களுடைய கண்மூடித்தனமான மடமையாகும். அவர்களுடைய செயல்கள் ஒளிப்பு, மறைப்பின்றி அப்படியே எல்லா நெஞ்சங்களின் முன்பும் வைக்கப்படுகின்றன. மனிதனின் நெஞ்சத்துள் ஒரு தீர்ப்புரிமை மன்றமிருக்கின்றது; அதனுடைய தீர்ப்புக்கள் தவறுடையனவாய் ஆவதில்லை. புலன்கள் தவறின்றிக் கண்டுகொள்ளக் கூடுமெனின், ஆன்மா தவறின்றிப் புரிந்து கொள்ளாதோ? இந்த அகத் தவறின்மை மனித இனக் கூட்டுத் தீர்ப்புரையிலே காணக்கிடக்கின்றது. இத் தீர்ப்புரை நிறைவானது. இலக்கியம், கலை, அறிவியல், புனைவு, சமயம் ஆகிய அறிவின் ஒவ்வொரு துறையிலும், தீமையினின்றும் நன்மையை, தகுதியில்லாதன வற்றினின்றும் தகுதியுள்ளனவற்றை, பொய்ம்மையினின்றும் மெய்மையைப் பகுத்துப் பின்னதை முனைப்பார்வமுடன் காத்துக் காப்பாற்றவும், முன்னதை அழிந்துபட விட்டுவிடவும் செய்கின்ற அளவிற்கு அத்துணை நிறைவானதாகும்.

மேம்பட்ட மனிதரின் பணிகள், சொற்கள், செயல்கள் இவை மனித இன மரபுரிமைகளாகும். மனித இனம் இவற்றின் பயனைக் குறித்துக் கவனமற்றிருப்பதில்லை. ஒரு நூலை ஆயிரம் மனிதர் எழுதுகின்றனர். ஒன்றே ஒன்றுதான் தோற்றுவாய்த் திறனுடைய படைப்பாகவிருக்கின்றது. எனினும், அந்த ஒன்றை மனித இனம் தனியாகப் பொறுக்கி எடுத்துப் போற்றிப் பேணிக் காக்கின்றது. அதே வேளையில் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது சார்பெழுத்தாளர்களை வெறுமையாக்கி விடுகின்றது. ஒரே வகையான சூழ்நிலையில் பத்தாயிரம் மக்கள் ஒரு தொடரைக் கூறுகின்றனர்; அவற்றில் ஒன்றே ஒன்றுதான் அறிவொளியுடையதாக இருக்கின்றது; எனினும், பின் மரபினருக்கு வழி காட்டுவதற்காக மனித இனம் அந்த ஒன்றைமட்டும் தனியாகப் பொறுக்கி எடுக்கின்றது; அதே போது, பிற தொடர்கள் பின்பு கேட்கப்படுவதே இல்லை.

தூய்மையான நாணயம் மனிதர் அனைவரிடையேயும் புழங்கி அதன் பெறுமானத்திற்காக மதிக்கப்படுகின்ற வேளையில், போலிநாணயம் கண்டு பிடிக்கப்பட்டு உலோக முருக்கும் பானையில் எறிந்து விடப்படுதல் போன்று, போலியான சொல்லோ, செயலோ குணவியல்போ உணர்ந்தறியப்பட்டு, உண்மையற்ற, ஆற்றலற்ற, இறந்துபட்ட ஒரு பொருளாக அது தோன்றிய வெறுமையில் வீழ்ந்து மடிய விடப்படுகின்றது.

அரும்பொருள் தொகுதியாயினும் சரி, மனிதராயினும் சரி, போலிப் பொருள்களுக்கு மதிப்பில்லை. உண்மையான பண்டமாகத் தேர்வுபெற முயலுகின்ற போலிப் பொருள்களைக் கண்டு நாம் வெட்கமுறுகின்றோம். போலித்தன்மை இழிவானது. ஏமாற்றித் திரிபவன் ஒரு வசைச்சொல்லுக்கு ஆளாகிவிடுகின்றான். அவன் மற்ற மனிதரைவிட அருகதை குறைந்தவன். அவன் ஒரு நிழல், பொய், முகமூடி. உண்மைப் பான்மை மதிப்பிற்குரியது. நல்லுள்ளம் கொண்ட மனிதன் ஓர் எடுத்துக் காட்டாகிவிடுகின்றான். அவன் ஏனைய மனிதரைவிட அருகதை மிகுந்தவன்; அவன் ஒரு மெய்ம்மை. ஆற்றல், உருவமைப்பு அறம், போலித்தன்மையால் அனைத்தும் அழிந்துவிடுகின்றன. தனித்தன்மை கூடத் தேய்ந்து மறைந்து விடுகின்றது. ஏனெனின், போலித் தன்மை, வெறுமை, உண்மைப்பான்மையால் ஒவ்வொன்றும் பெறப்படுகின்றது. உண்மைப்பான்மை உறுதியானது, நிலையானது, மெய்யானது.

போலித்தனங்களாலும், பொய்த் தோற்றங்களாலும் வெற்றிகரமான வாழ்க்கைப் போக்கை உருவாக்கிவிட முடியுமென எம் மனிதனாகிலும் எண்ணுவானேயாயின், நிழல்கள் என்னும் ஆழ்ந்த குழிக்குள் அவன் அமிழ்ந்து விடுவதற்கு முன் தயக்கங் கொள்ளட்டும். ஏனெனின் இயல்பார்வமின்மையில் வன்மையான நிலத்தளம் கிடையாது; மூலாதாரம் கிடையாது; மெய்ம்மை கிடையாது. அங்கு எப்பொருளும் நிலைகொள்ள எதுவுமே கிடையாது; ஆனால், அங்குத் தனிமை, ஏழைமை, அவமானம், குழப்பம், அச்சங்கள், ஐயப்பாடுகள், ஏக்கங்கள், பிற அனைத்தையும்விட இழிந்த, இருண்ட, அற்பமான ஒரு நரகம் உண்டெனின், அது இயல்பார்வமின்மை என்னும் நரகமேயாகும்.

இயல்பார்வமுடைய மனிதனின் மனத்தை அழகான நான்கு சிறப்புக் குணங்கள் அணி செய்கின்றன. அவை

1. எளிமை 3. மதி நுட்பம்
2. கவர்ச்சி 4. ஆற்றல்

ளிமையென்பது இயல்தன்மையே, அது, பொய்த் தோற்றமோ அயலான அலங்காரமோ இன்றி வெறுமனே உள்ளவாறிருத்தலேயாகும். இயற்கையின் கண்ணுள்ள பொருள்கள அனைத்தும் அழகுடையன வாயிருப்பதேன்? அவை இயற்கையாயிருப்பவை. அவற்றை நாம் அவையிருக்கின்றபடியே காண்கின்றோ மேயன்றி, அவை விரும்பக்கூடும் வகையில் காண்பதில்லை. ஏன், உண்மையில் பிற இருப்பதினின்றும் மாறுபட்டுத் தோற்றமளிக்கவேண்டுமென்ற விருப்பம் அவற்றிற்குக் கிடையாது.

மனித இனத்தின் வெளிப்புறத்து இயலுலகில் கபடம் எங்ஙணுமில்லை. கண்கள் அனைத்திற்கும் அத்துணை அழகாகத்தோன்றுகின்ற மலர் பாசாங்கு செய்யக் கூடுமெனின் அது தன் அழகை இழந்துவிடும்.