வெற்றிக்கு எட்டு வழிகள்/009-010

விக்கிமூலம் இலிருந்து

இயற்கையை நோக்குகின்றபோது நாம் மெய்ம்மையை நோக்குபவர்களாகின்றோம்; அதன் எழிலும் மணமும் நம்மை மகிழ்வித்துத் திகைக்க வைக்கின்றன. எங்குமே ஒரு குறைபாட்டை நாம் காணவியலாது; அதோடு, எப்பொருளையும் செம்மையாக்கக் கூடாத நமது தகுதியின்மையையும் நாம் உணர்ந்திருக்கின்றோம். ஒவ்வொன்றும் அதற்கே உரித்தான தனிப்பட்ட நிறைவைக் கொண்டு தன் எளிமையெனும் எழிலுடன் மிளிர்கின்றது.

“இயற்கைக்கே திரும்புதல்” என்பது தற்போதையச் சமூக முழக்கங்களில் ஒன்றாகும். அது நாட்டுப் புறத்தில் ஒரு குடிசையும், பயிர்வளர்க்கச் சிறு பகுதி வயலும் கொண்டிருத்தலையே குறிப்பதாகப் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. நம்முடன் நம் கபடங்களையும் நாம் கொண்டு செல்வதாயிருப்பின் நாட்டுப் புறத்திற்குச் செல்வது சிறிதளவு பயனுடையதாகவே இயிருக்கும்; நம்முடன் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பகட்டையும் நாமிருக்கின்ற இடத்திலேயே முழுக்கிடுதலே சிறப்புடைத்து. சமூக வழக்க முறைகளின் சுமையால் அழுந்துவதாகக் கருதுவோர், நாட்டுப் புறத்திற்குச் சென்று இயற்கையின் அமைதியை நாடவேண்டுமென்பது நன்மையானதே. ஆனால், அதை எளிமைக்கும், மெய்ம்மைக்கும் நம்மை முட்டுத்தருகின்ற உட்புற நல்வழியின் கருவியாகக் கொள்வதன்றி, வேறு எதற்காக இருப்பினும் அது தோல்வியடைந்துவிடும்.

விலங்கினத்தின் இயற்கையான எளிமையினின்றுமே மனித இயல்பு அலைந்து திரிந்திருக்கின்றதெனினும், அது, ஓர் உயர்வான, எளிமையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. பெருந் திறமையாளர்களாக இருக்கும் மக்கள் தமது இயற்கையான எளிமையின் காரணமாகவே அத்தகைமையினராய் இருக்கின்றனர். அவர்கள் பாசாங்கு செய்வதில்லை; இயல்பாக இருக்கின்றனர். சிறுமதி மனங்கொண்டோரே நாகரிகம் கற்று நடைமுறைப் படுத்துகின்றனர். உலக மேடையில் கவர்ச்சியுடைய ஓர் ஆளாகத்தோன்ற அவர்கள் விரும்புகின்றனர்; திருநிலை இல்லா அவ் விருப்பத்தால் அவர்கள் மட்டமான நிலைக்கே உந்தித் தள்ளப்படுகின்றனர்.

தன் ஆய்வுப் பண்பும், ஒழுக்க ஆற்றல்களும் தன்னிடம் கொண்டு, எளிமைக்கு மீளுவதிலேயே ஒரு மனிதன் மேன்மையடைகின்றான். மெய்யான எதையுமே அவன் இழப்பதில்லை. குணவியல்பென்னும் தங்கத்தைப் புலப்படுத்தும் வகையில் கள்ளத்தனங்கள் மட்டுமே களைந்தெறியப்படுகின்றன. மெய்யார்வம் எங்குள்ளதோ அங்கு எப்போதும் எளிமையும் இருக்கும். அதாவது, நாம் இயற்கையில் காண்பதுபோன்ற எளிமை, மெய்ம்மையின் எழில் சேரும் எளிமை அங்கிருக்கும்.

கவர்ச்சி எளிமையின் நேரடி விளைவாகும். நாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ளபடி இயற்கைப் பொருள்கள் அனைத்திலும் கவர்ச்சியைச் செல்வாக்காக வெளிப்படுகின்றது. கவர்ச்சியுடையோராய் கருதப்பட வேண்டுமெனத் துடிப்போர் அவ்வாறு ஆதலும் அரிது.

ஏனெனின், அவருடைய தற்செருக்கே அதற்கொரு தடையாகும். கவர்ச்சியுடையோராய்க் கருதப்பட வேண்டுமென்ற விருப்பமே ஒரு மோசடி. அது எண்ணிறந்த மோசடிகளைச் செய்ய வழி கோலுகின்றது. மேலும் உண்மையான கவர்ச்சிகளும், குணவியல்புச் சிறப்புகளும் தம்மிடம் இல்லாதிருப்பதைத் தாம் உணருவதால், அதற்குப் பகரமான ஒன்றை நாடுதலையே அந்நிலை உணர்த்துகின்றது. ஆனால், மன அழகிற்கும், குணவியல்பு வலிமைக்கும் பகரமே கிடையாது. திறமையைப் போன்றே கவர்ச்சியும் பற்றுக்கொள்வதாலேயே பறிபோய்விடுகின்றது.

குணவியல்பைப் பொறுத்து மிகுதியான திண்மையும், ஆர்வமும் கொண்டு நாடுவோரே அதைப் பெற்று நுகருகின்றனர். நாம் ஆர்வம், என்றழைக்கின்ற மனநிறைவும், நெஞ்ச முழுமையும், கொண்ட கவர்ச்சி ஆற்றலுக்கு ஒப்புமை கூற மனித இயல்பின்கண் எதுவுமே இல்லை. மெய்யார்வமுடைய ஆண்மகனையோ பெண்ணையோ பொறுத்து என்றென்றும் நிலைக்கின்ற ஒரு கவர்ச்சிக் கூறுள்ளது. அவர்கள் தம்மை மனித இயல்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகத் தோற்றுவிக்கின்றனர். மெய்யார்வம் தவிர்ந்த தனிமறைக் கவர்ச்சிக் கூறு வேறதுவுமே இருக்க இயலாது. அறிவு மயக்கம் இருக்கலாம்; இருக்கவே செய்கின்றது. அறிவு மயக்கம் துன்பந் தோய்ந்த மருட்சி நீக்கத்தில் முடிவுறுகின்றது. ஆனால், மெய்யார்வம் கொண்ட உயிர்களிடையே எதுவுமே மறைக்கப் படாததாலும், அவர்கள் மெய்ம்மை என்னும் திண்மையான நிலத்தளத்திலே நிலைபெற்றிருப்பதாலும், மடியச் செய்யப்பட வேண்டிய மருட்சி எதுவுமே கிடையாது.

மனிதரிடையேயுள்ள தலைவர்கள் தமது மெய்மை ஆற்றலாலேயே பிறரைக் கவருகின்றனர் அவர்களுடைய கவர்ச்சிச் செல்வாக்கின் அளவே அவர்களுடைய மெய்யார்வத்தின் அளவாகும்.

மெய்யார்வமுடைய மக்கள் தம் திறமைக் கூறு, தம் சிறப்பாற்றல், தம் அறப்பாங்கு, தம் அழகு இவற்றைக் குறித்து நினைப்பதேயில்லை. அவர்கள் தம்மைக் குறித்து முனைப்புணர்வு இல்லாதோராயிருப்பதாலேயே, அனைவரையும் கவருவதுடன் அவர்களின் நம்பிக்கை, அன்பு, மதிப்பு இவற்றையும் பெற்றுக் கொள்கின்றனர்.

மதிநுட்பம் மெய்யார்வமுடையோர்க்கு உரித்தானது. அவர்கள் முன்னிலையில் பாசாங்குகள் அனைத்தும் வெளிப்பட்டு விடுகின்றன. மெய்யார்வமுடைய மனிதனின் ஆய்ந்துணருங் கண்ணிற்குப் பாசாங்குக்காரர்கள் அனைவரும் தெளிவாகப் புலப்பட்டுகிடுகின்றனர்.

மனிதர் இயற்கைப் பொருள்களைக் கண்ணுற்ற வேளையிலேயே, அது பாம்பு, பறவை, குதிரை, மரம், மல்லிகை எனத் தவறின்றிப் பிரித்துணர்தல் போன்று மெய்யார்வமுடைய மனிதன் பல்வகைக் குணவியல்பு களையும் பகுத்துணருகின்றான். ஓர் அசைவில், ஒரு பார்வையில், ஒரு சொல்லில், ஒரு செயலில் மனிதனின் இயல்பை அவன் அறிந்து அதற்குத் தக நடந்து கொள்கின்றான். ஐயப்பாட்டிற்கு இடமின்றி அவன் பாதுகாப்புடன் இருந்து கொள்கின்றான். அவ நம்பிக்கைக்கு ஆளாகாமல் அவன் பாசாங்குக்காரனுக்காக ஆயத்தமாக இருக்கின்றான். மக்கள் அவனிடம் ஒளிவு மறைவின்றிப் பழகுகின்றனர்; அவன் அவர்களின் மனநிலைகளைக் கற்றறிந்து விடுகின்றான். அவனுடைய நுட்பமான தீர்ப்பு செயல்களின் மையத்திற்கே ஊடுருவிச் சென்று அவை இருக்கின்றவாறே அவற்றுடன் தொடர்பு கொள்ள வழி செய்கின்றது. நேரடியான, தெளிவான அவனுடைய நடத்தை பிறரிடத்து நன்மையை வலுப்படுத்துகின்றது. தீயோரை இழிவுபடுத்துகின்றது, நெஞ்சத்திலும் சிந்தனையிலும் அவன் கொண்டிருக்கின்ற நிறைவுடைமையை இன்னும் பெறாதோர்க்கு அவன் வலிமையூட்டும் ஓர் ஊன்று கோலாகவும் இருக்கின்றான்.

ஆற்றல் மதிநுட்பத்தோடு இணைந்தே செல்லுகின்றது. செயல்களின் தன்மையைப் புரிந்து கொள்ளும் நிலையானது, செயல்கள் அனைத்தையும் நேர்மையான சிறப்புடைய வழியில் எதிர்ப்பட்டு ஈடுபாடு கொள்ளும் ஆற்றலுடன் இணைந்தே வருகின்றது. எப்போதும் அறிவே ஆற்றலாகும். ஆனால், செயல்களின் தன்மையைப் பொறுத்து அறிவு தலைசிறந்த ஆற்றலாகும். அதனைக் கொண்டிருப்போன் நெஞ்சங்கள் அனைத்திற்கும் ஓர் ஆற்றலாக விடுவதுடன், அவற்றின் செயல்களை நன்மையான வகையில் திருப்பியும் விடுகின்றான். அவனுடைய உடல் மறைந்த நெடு நாள்களுக்குப் பின்பும், அவன், பின்னும் நன்மைகளை உருவாக்கும் ஆற்றலாக இருந்து வருகின்றான். மக்களின் மனங்களில் நுட்பமாக இயங்கி விழுமிய பயன்களுக்காக அவர்களை உருவாக்கும் மெய்ம்மையாக இருந்து வருகின்றான். முதலில் அவனுடைய ஆற்றல் ஓரிடத்திற்குரியதாயும், வரையறைக்குட்பட்டதாயுமே இருக்கின்றது. ஆனால், அவன் முடுக்கிவிட்ட நேர்மையென்னும் சுற்றுவட்டம் உலக முழுமையும் தழுவுகின்றவரையில் தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. மனிதர் அனைவரும் அதன் வயப்படுகின்றனர்.

உண்மை ஆர்வமுடைய மனிதன் தான் செய்பவை அனைத்திலும், தான் தொடர்பு கொள்ளுகின்ற மக்கள் அனைவரிடமும் தனது குணவியல்பைப் பொறித்து விடுகின்றான். ஒரு காலத்தில் அவன் ஒரு சொல்லைக் கூறுகின்றான். அது எவருடைய மனத்திலேனும் பதிந்து விடுகின்றது. அதன் செல்வாக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவரிடமாக அறிவிக்கப்படுகின்றது. பத்தாயிரம் கற்களுக்கப்பால் நம்பிக்கை இழந்து நிற்கும் ஒரு மனிதர் இதைக் கேள்வியுற்றுத் தம்மைச் சீர்படுத்திக் கொள்கின்றார். அத்தகைய ஆற்றலே ஓர் ஆக்கமாகும். அதனுடைய பெறுமானம் நாணயத்தால் மதிப்பிடக் கூடாதது. பண்பென்னும் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களைப் பணத்தால் கொள்முதல் செய்யவியலாது; ஆனால் நேர்மையான உழைப்பிற்கு அஃது இயலுவதாகும்.

தன்னைத் தானே உண்மை ஆர்வமுடையவனாக ஆக்கிக் கொள்பவன், தன் வாழ்நாள் முழுவதும் ஓர் உரமான நிறைவைப் பெற்றுத், தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியும், அரிய ஆற்றலுடைய மனிதனாகி விடுகின்றான். உண்மை ஆர்வமென்னும் வலிமையான தூண் அத் திறத்ததாகும். ஒரு முறை அது முழுமையாக எழுப்பப்பட்டுவிட்டால் ஆக்கமெனும் ஆலயம் நிலைப்பாடு பெற்று விடுகின்ற அளவிற்கு அதன் ஆதரிப்புச் ஆற்றல் அத்துணை மேம்பட்டதாக இருக்கின்றது. அதன் சுவர்கள் பொடிந்து விழுவதில்லை; அதன் உத்திரங்கள் உரங்கெடுவதில்லை. அதன் கூரை கீழே வீழ்ந்து விடுவதில்லை. மனிதன் வாழுகின்ற போது அது நிலைத்து நிற்கும். அவன் மறைந்த பின்னரும் பல தலைமுறைகள் பிறர்க்குத் தஞ்சமும், அடைக்கலமும் தொடர்ந்து அளித்துக்கொண்டே வரும்.

நடுநிலை

தப்பெண்ணம் தவிர்த்திடுதலே ஒரு பெரும் நன்மையாகும். தப்பெண்ணம் மனிதனின் பாதையில், உடல் நலம், வெற்றி, மகிழ்ச்சி, ஆக்கம் இவற்றிற்கு எதிராக இடையூறுகளைக் குவிக்கின்றது. ஆகவே, தன்னுடைய கற்பிதமான பகைவர்களுக்கு எதிராக அவன் தொடர்ந்து போட்டி இடுபவனாகி விடுகின்றான். தப்பெண்ணம் நீக்கப்பட்டுவிடின் அவர்கள் நண்பர்களாகவே தோற்றமளிக்கின்றனர். தப்பெண்ணமுடைய மனிதனுக்கு வாழ்வு ஒரு விதமான தடை கடப்புப் பந்தயமாகி விடுவது உண்மையே. தடைகளைக் கடந்து செல்ல முடியாததும் குறிக்கோளை அடைய முடியாததுமான ஒரு பந்தயம்; நடுநிலையுடைய மனிதனுக்கு அவன் வாழ்வு, மனத்திற்குகந்த நாட்டினில் நாள் முடிவில் உணவும், ஓய்வும் கிடைக்கக் கூடிய ஒரு நாள் நடையேயாகும்.

மனிதன் நடுநிலை எய்த வேண்டுமெனின், தன் சொந்தப் போக்குப்படியன்றிப் பிற எப்போக்குப் படியும் எதையும் காணுவதைத் தடுக்கின்ற உள் அகந்தையை அவன் அகற்றியாக வேண்டும். அது ஒரு பெரும் பணியென்பது உண்மையே ஆனால் மேம்பாடானது. உடனே செய்து முடிக்கக் கூடாததாயினும் இப்போதே தொடங்கிவிடுதற்கு உரியதாகும். உண்மையால் “மலைகளையும் அகற்றிவிட” முடியும். தப்பெண்ணம் மனத்தின் மலைத் தொடர்ச்சியாகும்; ஒருதலைச் சார்பானவன் அதற்கு அப்பால் காணுவதோ, அதற்கு அப்பாலும் உண்டு என நம்புவதோ இல்லை. எவ்வாறெனினும், இந்த மலைகள் அகற்றப்பட்டுவிடின், உற்றுநோக்குகின்ற கண்களை மகிழ்விக்கும் வகையில், ஒளியாலும் நிழலாலுமான, நிறத்தாலும் குரலாலுமான மேன்மையான ஓவியமாக மன நிலைகள் முடிவற்ற ஒளிக் காட்சிக்குரியதாய்த் திறந்து வைக்கப்படுகின்றது.

முரண்பாடான தப்பெண்ணத்தைப் பற்றிக் கொண்டிருப்பதால் எத்துணையோ களிப்புகள் இழக்கப்டுகின்றன. பலரின் நட்பை இழக்க வேண்டியுள்ளது. எத்துணைப் பெரிய மகிழ்ச்சியும் ஊறுபடுத்தப்படுகின்றது. எத்துணை ஆக்கங்கள் அழிக்கப்படுகின்றன. எனினும், தப்பெண்ணத்திலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பது அரிய செயலாகும்.

தமக்கு அக்கறையுள்ள காரியங்களைக் குறித்து வாதிடுகையில் தப்பெண்ணம் கொண்ட ஒருதலைச் சார்பினராக இல்லாதோர் ஒரு சிலராகவே இருக்கின்றனர். நிகழ்ச்சி அனைத்தையும் கருத்தில் கொண்டு, காரியத்தில் உண்மையைக் காணும்பொருட்டுச் சான்றுகள் அனைத்தையும் சீர் தூக்கித் தனது செயலைக் குறித்து இரு சார்பிலும் நடுநிலை உணர்வுடன் உரையாடுபவனை ஒருவன் மிக அரிதாகவே காணுகின்றான். ஒருதலைச் சார்பினன் ஒவ்வொருவனும் தனது சொந்த வாதத்தையே நிலைநாட்ட முனைகின்றான். அவன் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. ஏனெனின், தன் சொந்த முடிவே உண்மை, பிற அனைத்தும் பொய் என அவன் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்டான். ஆனால், அவன் தன் வழக்கையே வாதாடுவதுடன், வெற்றிக்காகவும் பாடுபடுகின்றான். மேலும், அவன் நிகழ்ச்சிகளை அமைதியுடன் வரிசைப்படுத்தித் தான் கூறுவது உண்மை என்பதை விளக்கிக் காட்ட முயற்சி எடுத்துக் கொள்வதுமில்லை. ஆனால், மிகுதியாகவோ குறைவாகவோ கடுப்பும், கலக்கமும் கொண்டு தனது கூற்றையே வாதிடுகின்றான்.

புத்தொளி உள்ளே புகுவது, மிகுதியான அழகைக் கண்ணுறுவது, மேலான இசையைச் செவிமடுப்பது ஆகிய இவற்றிற்கெதிராக மனக் கதவை மூடி விடுவதே தப்பெண்ணமாகும். ஒருதலைச் சார்பினன் தனது சிறிய நிலையற்ற உறுதியற்ற கருத்தை விடாமல் பற்றிக் கொண்டு அதுவே உலகின் மிகப்பெரிய காரியமென எண்ணுகின்றான். தன்னுடைய சொல்லை மனிதர் அனைவரும் சரியென ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அவன் தன் சொந்தத் தீர்மானத்தின் மீது அத்துணை பற்றுக் கொண்டவனாக இருக்கின்றான். அவன் காணுகின்றபடியே தாமும் காணாத மனிதரை அவன் ஏறத்தாழ அறிவிலிகளாகவே கருதுகின்றான். அதே வேளையில், தன் நோக்கத்தைப் பொறுத்துத் தன்னோடு ஒன்று சேருவோரின் நல்ல தீர்மானத்தை அவன் புகழுகின்றான். அத்தகைய மனிதன் அறிவும் பெறவியலாது. உண்மையும் பெறவியலாது, மெய்ம்மையின் எல்லைக்குட்படாத கருத்னெனும் கோளத்திற்குள் அடைபட்டவனாக இருக்கின்றான். வாழ்வின் எளிய உண்மைகளைக் கூட அவன் காணாதவாறு தடுக்கின்ற ஒரு வகையான மயக்கத்தில் நடமாடுபவனாகி விடுகின்றான். அதே வேளையில், வழக்கமாகவே ஏறத்தாழ ஆதாரமற்றதாகவே இருக்கின்ற அவனுடைய சொந்தக் கோட்பாடுகள் அவனுடைய மனத்தில் வலி மீறிய அளவிற்கு இடம் பெறுகின்றன. ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு வழியே உண்டென்றும், தான் கருதுவதே அவ் வழி என்றும் பற்று மிகுதியால் அவன் கருதுகின்றான். ஒவ்வொன்றிற்கும் குறைந்தது இரு வழிகளேனும் உள்ளன. அவ் இரு வழிகளையும் பரபரப்பினின்றும் நீங்கியவனாய், ஒன்றை மற்றொன்று மேலோச்சி நிற்க வேண்டும் என்ற விருப்பமின்றியும் கவனமாக ஆராய்பவனே அச் சங்கதியின் உண்மையைக் காணுபவனாவான்.

உலகின்கண்ணுள்ள வேறுபாடுகளையும், மாறுபட்ட கருத்துகளையும் பொறுத்த அளவில் உலகம் ஒரு வழக்கை எதிர்வாதிடுகின்ற இரு வழக்கறிஞர்களைப் போன்றதாகும். குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர் தமது பக்கத்தை மெய்யெனக் காட்டுதற்கு வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றார்; அதே வேளையில், எதிர்வாத வழக்குரைஞர் தமது வாதத்திற்கு ஆதாரமாயிருப்பவை அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றார். அவர்களிருவரும் ஒருவருக்கெதிராக ஒருவர் காட்டிய நிகழ்ச்சிகளைச் சிறுமைப்படுத்தவோ புறக்கணிக்கவோ, காரணங் காட்டி மறுக்கவோ செய்கின்றனர். எவ்வாறெனினும், வழக்கின் நீதிபதி மக்கள் நடுவேயுள்ள ஒரு தலைச்சார்பற்ற சிந்தனையாளரைப் போன்றவராகும். அவர் இரு தரப்பிலுமுள்ள சான்றுகள் அனைத்தையும் செவிமடுத்து, நீதி வழங்குதற் பொருட்டு ஒருதலைச் சார்பற்ற ஒரு குறிப்புரையை உருவாக்கும் வகைளில் அவற்றை ஒப்பிட்டு ஆராய்கின்றார்.

நடுநிலையுடைய ஒரு மனிதன் தப்பெண்ணத்திலிருந்தும், விருப்பு, வெறுப்புகளினின்றும் விடுதலை பெற்றுக் கூர்ந்தாராய்கின்றான். சீர்தூக்கி மதிப்பிடுகின்றான்; சிந்திக்கின்றான். அவனுடைய ஒரே விருப்பம் மெய்ம்மையைக் கண்டு பிடித்தலேயாகும். கற்பிதமாக அவன் கொண்டிருந்த எண்ணங்களை அவன் நீக்கி விடுகின்றான். நிகழ்ச்சிகளும், சான்றுகளும் தம் கூற்றை எடுத்துரைக்க விட்டுவிடுகின்றான். அவன் சாதித்துக் காட்ட வேண்டுமென்று தனக்கென வழக்கெதுவும் வைத்திருப்பதில்லை. ஏனெனின், உண்மை மாற்றப்படவியலாதது, தன் கருத்துகள் அதற்கு வேற்றுமை கற்பிப்பதில்லை, அதைத் துருவித் தேடிக் கண்டுபிடிக்கக் கூடும் என்பதை அவன் அறிவான். அதன் காரணமாகப் பரபரப்பு மிக்க ஒருதலைச் சார்பிற்கு உள்ளாகின்ற பெருமளவு பண்பு முரண்பாடுகளினின்றும், நடுக்கத்தின் இழப்பினின்றும் அவன் தப்பிவிடுகின்றான். இதற்கும் மேலாத அவன் இயற்பொருளை நேருக்கு நேர் நோக்குகின்றான்; ஆகவே, தெளிவும் அமைதியும் உடையவனாகி விடுகின்றான்.

நடுவுநிலைச் சிந்தனையாளன் எங்கிருப்பினும் விலைவிலோ பின்னரோ உலகின் மதிப்பீட்டிலும், அதன் ஊழை வழிப்படுத்துவதிலும் அவன் மிக மேன்மையான நிலையை வகிக்கப்போவதை உறுதியாகக் கொள்கின்ற அளவிற்குத் தப்பெண்ணத்திலிருந்து விடுபடுதல் அத்துணை அரிதாகும். அந்நிலை உலகியல் சார்ந்த காரியங்களில் ஒரு பதவியைப் பெறுவதாயிருக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனின், அது நிகழ்தற்கரிதானது. ஆனால், அந் நிலை செல்வாக்கில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெறுவதேயாகும். இப்போது அத்தகைய ஒருவன் இருக்கலாம். அவன் ஒரு தச்சனாக இருக்கலாம், ஒரு நெசவாளியாக இருக்கலாம், ஒரு கணக்கராக இருக்கலாம், அவன் ஏழையிலிருக்கலாம், பெருஞ் செல்வரின் வீட்டிலே இருக்கலாம்; அவன் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கலாம். எந்நிறமும் உடையவனாக இருக்கலாம்; ஆனால், எந்நிலையிலிருப்பினும், அவன் உலகத்தை இயக்கத் தொடங்கிவிட்டவனாவான். அவன் ஒருநாள் வளர்ச்சியின் ஒரு புது ஆற்றலாகவும், படைப்பு மையமாகவும் உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்படுவான்.

எல்லையற்ற பரம்பெருள் இக் கோளத்தின்கண் ஒரு சிந்தனையாளனைக் கட்ட விழ்த்து விடுகையில் கவனமாக இருங்கள் என எமர்சன் கூறுகின்றார். தப்பெண்ணத்தால் கட்டுண்ட மனிதன் சிந்தனையாளனல்லன்; அவன் வெறுமனே ஒரு கருத்தை விடாப்பிடியுடன் கொண்டிருப்பவனேயாவான். ஒவ்வோர் எண்ணமும் அவனுடைய குறிப்பிட்ட தப்பெண்ணம் என்னும் வாயிலைக் கடந்து வந்து அதன் நிறத்தைப் பெற்றேயாக வேண்டும். எனவே, உணர்ச்சி வயப்படாத சிந்தனையும், நடுநிலையுடைய தீர்ப்பும் இயலாத காரியங்கள் ஆக்கப்பட்டுவிடுகின்றன. அத்தகைய மனிதன் தன் நோக்கத்தின் தொடர்பையோ இருப்பதாகத் தான் கற்பனை செய்கின்ற தொடர்பைக் கொண்டே ஒவ்வொரு காரியத்தையும் காண்கின்றான். அதே வேளையில், சிந்தனையாளன் காரியங்களை அவையுள்ளவாறே காணுகின்றான், இயற்பொருளை நேருக்குநேர் காணத் தகுதியுடையவனாகும் வகையில் தப்பெண்ணத்தினின்றும், தானெனும் அகந்தையின் சிறுமைகளினின்றும் தன் மனத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்ற மனிதன் ஆற்றலின் உச்சியை அடைந்தவனாகின்றான். அவன் தன் கைகளுக்குள் பெருமளவு செல்வாக்கை வைத்துக் கொண்டிருப்பவனாகின்றான். அவன் அறிந்திருப்பினும் இல்லையெனினும் இந்த ஆற்றலை அவன் கையாண்டே தீருவான். அஃது அவனுடைய வாழ்வினின்றும் பிரிக்கப்பட இயலாததாகிவிடும். மலரினின்றும் மணம் கமழுவது போன்று அஃது அவனிடமிருந்து தோன்றும் அவனுடைய சொற்களில், செயல்களில், உடல் தோற்றங்களில் மன இயக்கங்களில், என் அவனுடைய அமைதியிலும், உடலமைப்பின் அசைவின்மையிலும் அது மிளிரும். அவன் எங்குச் செல்வதாயினும், அவன் பாலைவனத்திற்குப் பறப்பதாயினுங்கூட இந்த மிக உயர்ந்த, விதியிலிருந்து அவன் தப்ப இயலாது. எனெனின், பெரிய சிந்தனையாளன் உலகத்தின் மையமாவான். அவனாலேயே மனிதர் அனைவரும் தத்தமது கோள் வழியில் நிறுத்தப்படுகின்றனர்; சிந்தனை அனைத்தும் அவனை நோக்கியே மைய ஈர்ப்புக் கொள்கின்றன.

மனித இனம் அமிழ்ந்து கிடக்கின்ற இச்சையென்னும் கொந்தளிக்கும் நீர்ச்சுழிக்கு மேலே உண்மையான சிந்தனையாளன் வாழுகின்றான். தனிமுறைச் சார்புடைய நோக்கங்களினால் அவன் தள்ளாட்டம் கொள்வதில்லை. ஏனெனின், தனிச் சார்பற்ற நியதிகளின் சிறப்பை அவன் புரிந்து கொண்டிருக்கின்றான். எனவே, அகந்தையான இச்சைகள் மோதுகின்ற போரில் அவன் ஈடுபடாதவனாய் இருப்பதால், நடுநிலைக்குரிய சாதக நிலையிலிருந்து கருத்தற்ற பார்வையாளராகவும் இருந்து விடாமல், இருபுறமும் சமமாகக் காணுவதோடு, அப் போரின் காரணத்தையும் பொருளையும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.

உண்மையான சிந்தனையாளனே மனிதரில் மிக மேன்மையானவன். அவனுடைய ஊழே மிகவும் உயர்வுடையது. முற்றிலும் நடுநிலையான மனம் உயர் நிலையை அடைந்துவிட்டதாகும்; அது இயற்பொருளின் முழுமையான ஒளியில் பொலிகின்றது.

நடுநிலையின் பெரும் ஆக்கக் கூறுகள் நான்கு :

1. நீதி 3. அமைதி
2. பொறுமை 4. மெய்யறிவு

சமமான பெறுமதிகளைக் கொடுக்கலும், வாங்கலுமே நீதி. “கடினமான கொள்முதல் செய்தல்” என்றழைக்கப்படுவது ஒருவகைத் திருட்டேயாகும். கொள்முதல் செய்வோன் தன் கொள்முதல் பொருளின் ஒரு பகுதிக்கான விலையைக் கொடுத்துவிட்டு மீதத்தைத் தனியான ஆக்கத்தைத் தனதாக்கிக் கொள்வதையே அது குறிக்கும். பேரத்தை முடித்து விடுவதன் மூலம் விற்போனும் கூட இதற்கு ஊக்க மூட்டுபவனாவான்.

நேர்மையான மனிதன் விழுமம் மிஞ்சிய பலன் அடைய முயற்சி செய்வதில்லை. அவன் பொருள்களின் உண்மையான பெறுமதிகளை ஆராய்ந்து அதற்குப் பொருந்துமாறு தன் கொடுக்கல் வாங்கல்களை உருவாக்கிக் கொள்கின்றான். “எது ஆதாயமாயிருக்கும்” என்ற எண்ணம் “எது நேர்மையானது” என்ற எண்ணத்திற்கு முன்பாகத் தன்னிடத்தே தோன்ற அவன் இடந்தருவதில்லை. ஏனெனின், நேர்மையானதே இறுதியில் ஆதாயமாகவும் இருக்கும் என்பதை அவன் அறிவான். வேறு ஒருவனுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் தன் சொந்த நலனை அவன் நாடுவதில்லை. ஏனெனின், கொடுக்கல் வாங்கலில் தொடர்புற்ற இரு சாரார்க்கும் நேர்மையான செயல் சமமாகவும், முழுமையாகவும் நலந்தருகின்றது என்பதை அறிவான். “ஒரு மனிதனின் இழப்பு, இன்னொரு மனிதனின் ஆதாயமாக இருப்பின்”, அந்த வேறுபாடு பின்னர் ஈடு செய்யப்பட்டுவிடும் என்பதே அதன் குறிப்பு. நேர்மையற்ற ஆதாயங்கள் ஆக்கத்திற்கு வழிகாட்டாது.

தொழிலில் பேரம் பேசுகின்ற ஊக்கம், வாணிபத்தின் உண்மையான ஊக்கமன்று. அது ஒன்றுமில்லாததற்கு எதையேனும் பெறவேண்டுமென்ற தன்னலத் திருட்டூக்கமேயாகும். நேர்மையான மனிதன் பேரங்கள் அனைத்தையும் ஒழித்துத் தன்தொழிலைத் தூய்மைப்படுத்துகின்றான். மிகவும் சீர்மை வாய்ந்த நீதியின் அடிப்படையில் அதை அமைக்கின்றான். “ஒரு நல்ல சரக்கை” அதன் சரியான விலையில் அவன் கொடுக்கின்றான்; அதை மாற்றுவதில்லை. மோசடியால் கறைப்படுத்தப்பட்டுள்ள எந்தத் தொழிலினும் அவன் தன் கைகளைக் கறைப்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய சரக்குகள் தூய்மையானவை. அவை தக்கமுறையில் விலையிடப்பட்டுள்ளன.

பிற அனைத்திற்கும் மேலாக மனிதன் கஞ்சத்தனத்தை விட்டு, மேலும் மேலும் முழுமையான நேர்மையுடையவனாக இருக்க முயற்சி செய்யட்டும். ஏனெனின், நேர்மையில்லையெனின், அவன் நாணயமுடையவனாகவோ, பெருந்தன்மையுடையவனாகவோ ஆண்மையுடையவனாகவோ இருக்கவியலாது. ஆனால், அவன் தன்னாலியன்றது அனைத்தையும் பெறவும், எத்துணைச் சிறிதளவு இயலுமோ, அத்துணைச் சிறிதளவே திருப்பிக் கொடுக்கவும் முயற்சி செய்கின்ற ஒருவகை மறைமுகத் திருடனாகவே இருக்கின்றான். அவன் பேரங்கள் அனைத்தையும் விட்டொழிக்கட்டும். அதனோடு பேரளவானதும், பாராட்டிற்குரியதுமான வெற்றியை மேம்பட்ட தகுதியுடன் தொழிலை நடத்தும் சிறந்த வழியைப் பேரம் பேசுவோர்க்குக் கற்றுத் தரட்டும்.

நடுநிலையுடைய மனிதனின் குணவியல்பில் பொறுமையே ஒளிமிக்க அணியாகும். இஃது, ஒரு சிறுமி தனது பின்னல் வேலையில் கொண்டிருப்பதைப் போன்றதோ, ஒரு சிறுவன் தன் பொம்மை இயந்திரத்தை அமைப்பதில் கொண்டிருப்பதைப் போன்றதோ ஆன குறிப்பிட்ட காரியத்தில் கொண்டுள்ள குறிப்பிட்ட பொறுமையைக் குறிப்பதாகாது. ஆனால், பிறழ்வின்றிப் பிறர் நலம் காணும் தன்மை, எவ் வேளையிலும், மிகவும் சோதனையான சூழ்நிலைகளின் போதும் இனிமையான செவ்வி, எச் சோதனையும் கெடுத்துவிட முடியாததும், எத்தொல்லையும் முறித்துவிட முடியாததுமான மாறுபடாத, மென்மையான வலிமை ஆகியவற்றையே இது குறிக்கும். இது ஓர் அரிய உடைமை என்பது உண்மையே. மனித இனத் தொகுதியில் ஒருவன் நீண்ட காலம் எதிர்பார்க்கக்கூடாத ஒன்றுமாகும்; ஆனால், படிப்படியாக அடைந்துவிடக் கூடிய அறம் இதுவே. அறைகுறைப் பொறுமைகூட மனிதனின் வாழ்விலும், காரியங்களிலும், வியக்கத்தக்க அருமைகளை உண்டு பண்ணும். ஏனெனின், பொறுமையின்மை அழிவையே உண்டு பண்ணும். முன்கோபி மனிதன் விரைவாக அழிவை நாடுவான். குற்றச்சாட்டு அன்றி நுண்ணாய்வின் ஒரு சிறு சுடர் தன்மீது வீழ்ந்த மாத்திரத்திலேயே வெடிமருந்தைப் போன்று தொடர்ச்சியாக வெடவெடக்கும் மனிதனுடன் எவரே தொடர்பு கொள்ள விரும்புவர்? அவனுடைய நண்பர்கள் கூட ஒருவர் ஒருவராக அவனை விட்டு நீங்கிவிடுவர். ஏனெனின், ஒவ்வொரு சிறிய மாறுபாடும் தப்பெண்ணத்தின் மீதும் பொறுமையற்றதும், அனல் கக்குவதுமான நாக்கால் தன்னை முரட்டுத் தனமாகத் தாக்கும் மனிதனின் நட்பை யார் நாடுவர்?

ஒரு மனிதன் மிகவும் ஆக்கமுடையவனாக, பயனும், ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டுமெனின், தன்னை அறிவுடன் ஒழுங்குடன் அடக்கியாள வேண்டும். பொறுமையின் அழகான படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும். அவன் பிறரைக் குறித்துச் சிந்திக்கவும், தனக்காக மட்டுமன்றி, அவர்களுடைய நன்மைக்காகவும் செயல்படக் கற்றுக் கொள்ளவேண்டும். பிறர்நலம் கருதுவோனாக, பொறுமையுடையவனாக இருக்க வேண்டும். மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தாம் கருதுகின்ற காரியங்களில், தம்மிலிருந்து மாறுபட்ட கருத்துடைய மனிதருடன் அமைதியான நெஞ்சத்தைக் கொண்டிருத்தல் எவ்வாறு என்பதை அவன் கற்குக் கொள்ள வேண்டும். உயிருக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய நஞ்சைப் பருகுவதை அவன் தவிர்ப்பது போன்று, சண்டையிடுதலையும் அவன் தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கையாளுவதன் மூலம் வணக்கத்தைக் கொணருதல் எவ்வாறு என்பதையும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

சச்சரவு சாதாரணமானது. அஃது நெஞ்சத்தைத் துன்புறுத்தி மனத்தைச் சிதறடித்து விடுகின்றது. பொறுமை மிகவும் அரிதானது; அஃது நெஞ்சத்திற்கு வளமூட்டி, மனத்தை அழகு செய்கின்றது. கரடுமுரடான பாறையை மெதுவான நீர்தேய்த்துக் கரைத்து விடுதல் போன்று, எதிர்ப்புகள் அனைத்தையும் பொறுமை வென்றுவிடுகின்றது, அது மனிதர்களின் நெஞ்சங்களை வயப்படுத்துகின்றது. அது வெற்றி காணுகின்றது, அடக்கியாளுகின்றது.

அமைதி பொறுமையைப் பின்தொடர்கின்றது, அது மிகப் பெரிய மேம்பட்ட பண்பாகும். இச்சையெனும் சூறாவளி சூழ்ந்த கடலின்கண் நெடுநாள் அலைந்து திரிந்த பின்னர் அடிமையொழித்த உயிர்கள் சென்றடையும் அமைதியான துறைமுகம் அதுவேயாகும். மிகுதியாகத் துன்புற்று, மிகுதியாகப் பொறுமையுடனிருந்து முடிவில் வெற்றியும் கண்ட மனிதனை அது அடையாளப்படுத்தி வைக்கின்றது.

அமைதி இல்லத மனிதன் நடுநிலையுடைய மனிதனாக இருக்கவியலாது. பரபரப்பு, தப்பெண்ணம், ஒருதலைச் சார்பு ஆகியவை அமைதிகுலைந்த இச்சைகளினின்றுமே தோன்றுகின்றன.

அமைதி சூழ்ந்த, நடுநிலையுடைய மனிதன் மகிழ்ச்கிரமான மனிதன் மட்டுமன்று; அவன் தன்னுடைய ஆற்றல்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனுமாவன். அவன் உறுதியானவன், முன்னோக்குடையவன்; செயல் திறமைக்கு உகந்தவன். எளிதில் சினங்கெள்கின்ற மனிதன் தனது கூச்சலின் மூலம் மெதுவாகவும், கடினப் பாட்டுடனும் செய்து முடிப்பதை அவன் விரைவிலும் எளிதாகவும் மெளனமாகச் செய்து முடித்து விடுகின்றான். அவனுடைய மனம் தூய்மைப் படுத்தப் பட்டதாக, சமநிலையுடையதாக, ஒருமுகப் படுத்தப்பட்டதாக விருக்கின்றது. கொடுக்கப்படுகின்ற வேலையைக் குறைபாடில்லா ஆற்றலுடன் செய்து முடிக்கப் பணிக்கும் ஏவலை ஏற்க அவன் எக்கணமும் அணியமாயிருக்கிறான். அமைதியான மனத்தில் இச்சைகள் அனைத்தும் தணிவுறுகின்றன. முரண்பாடுகள் அனைத்தும் இசைவிணக்கம் பெறுகின்றன. எதிர் மறைகள் அனைத்தும் பொருத்தம் பெறுகின்றன. அங்கு நல் ஒளி வீசும் களிப்பும், என்றும் நிலைக்கும் அமைதியும் இடம் பெறுகின்றன. எமர்சன் கூறுவது போன்று “களிப்பு நிலையானதாகவும் நடைமுறைப் பழக்கத்திற்குரியதாகவும் இருப்பதே அமைதியாகும்.”

தன்னடக்கம் செல்வத்திலும் சிறந்தது. அமைதியோ இறுதியிலாப் பேரின்ப நிலையே.

நடுநிலையுடைய நல்ல மனிதனிடமே மெய்யறிவு நிலையாக உறைகின்றது. அத் தாயின் அறிவரைகளே அவனுக்கு வழிகாட்டுகின்றன. அத் தாயின் சிறகுகளே அவனைப் பாதுகாக்கின்றன. அவள் மகிழ்ச்சிகரமான வழியிலேயே அவனைக் களிப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றாள்.

மெய்யறிவு பல்வகையானது. அறிவுடைய மனிதன் பிறருக்கேற்பத் தன்மனத்தை இணக்கப்படுத்திக் கொள்கின்றான். அவர்களுடைய நன்மைக்காக அவன் செயல்படுகின்றான். ஆனால், அதற்காக ஒழுக்க அறங்களையோ நேர்மையான நடத்தையின் நியதிகளையோ அவன் மீறுவதில்லை. மடமையுடைய மனிதன் பிறருக்கேற்பத் தன்னை இணக்கப்படுத்திக் கொள்ளவியலாது. அவன் தனக்காகவே செயல்படுகின்றான். ஒழுக்க அறங்களையும் நேர்மையான நடத்தையின் நியதிகளையும் தொடர்ச்சியாக மீறுகின்றான். நடுநிலையுடைய செயல் ஒவ்வொன்றிலும் ஓரளவு மெய்யறிவு இருக்கின்றது. ஒரு மனிதன் நடுநிலையின் எல்லையை ஒருமுறை தொட்டு அதை அனுபவித்துவிடின், அவன் இறுதியில் அதன்கண் நிலைபேறு கொள்ளும் வரையில் அவன் திரும்பத் திரும்ப அதை மீட்டுக் கொள்ளலாம்.

மெய்யறிவு ஒவ்வொரு கருத்தும், சொல்லும் செயலும் உலகின்கண் மிக்க பயனை விளைவிக்கின்றது. அது மேம்பாடு செறிந்ததாக விருக்கின்றது. மெய்யறிவு ஓர் அறிவுக் கிணறும், ஆற்றலின் ஊற்றுமாகும். அது ஆழ்ந்த அறிவுடையது, கவியாற்றல் மிக்கது. மிகச் சிறிய நுணுக்கங்களைக் கூட ஆர்வமாக ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு அத்துணை நுட்பமானதும், அனைத்தையும் உட்கொள்வதுமாகும். அது தன்னுடைய பரந்த மேன்மையில் சிறியதைப் புறக்கணிப்பதில்லை. மெய்யறிவு செறிந்த மனம் ஞாலத்தைப் போன்றது. பொருள்கள் அனைத்தையும் அவற்றினுடைய சரியான இடத்திலும், ஒழுங்கிலும் அது கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக அது அழுத்தம் பெறுவதில்லை. உலகத்தைப் போன்றே அதுவும் தன்னுரிமையுடையதாகவும், தடைகள் எதையும் காணாததாகவும் இருந்து வருகின்றது. எனினும், அது என்றுமே நெறி தவறுவதில்லை. என்றுமே பிழைபடுவதில்லை, என்றுமே பழிசூழ்வதாகவோ, எண்ணி இரங்கத் தக்கதாகவோ இருப்பதில்லை. மடமையெனும் அழுங்குழவியாக இருந்ததால் நிலையான வளர்ச்சி பெற்ற உருவமே மெய்யறிவு அது குழந்தைப் பருவ அறியாமையின் வலுவின்மையையும், சார்பு நிலையையும், தவறுகளையும், தண்டனைகளையும் கடந்து வளர்ந்துவிட்டது. அது நிமிர்ந்து சமநிலையுடனும், வலுவுடனும் அமைதியுடனும் இருக்கின்றது.

மெய்யறிவு ஒரு மனிதனை ஒன்றியபோது அவன் உயர்த்தப்பட்டு உருமாற்றப்படுகின்றான். புதிய குறிக்கோள்களும், புதிய ஆற்றல்களும் கொண்ட புதிய உயிருருவாகவே மாறிவிடுகின்றான். புதியதும், மேம்பட்டதுமான ஓர் ஊமை நிறைவேற்றுதற்காக அவன் ஒரு புதிய உலகிலேயே குடியேறி விடுகின்றான்.

ஆக்கமெனும் கோயிலைத் தாங்கி அழகு செய்யத் தனது மிகுதியான வலிமையையும், ஒப்புமை கூற வியலாத நயத்தையும் வழங்குகின்ற நடுநிலையெனும் ஆதாரம் அத்தகையதாம்.