வெளிச்சத்தை நோக்கி/004
ஸ்கூட்டர்காரர், உழைப்பாளி சிலையருகே பிரேக் போட்டபோது, மெய்யப்பன் எழிலகத்திற் கருகே ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். பத்து ரூபாய் நோட்டை டிரைவரிடம் நீட்டிவிட்டு, அவர் சில்லறையைத் தேடிய போது, இவன் உழைப்பாளி சிலையருகே வந்து விட்டான். அந்த புதுஜோடி கடல் மண்ணில் கைகோர்த்து நடப்பது அந்த மெலிந்த இருட்டிலும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. இதற்குமேல் போக வேண்டியதில்லை என்பதுபோல், கால்களை மாற்றிப் போடப் போனான். இவ்வளவு தெரிந்தது போதும் என்பதுபோல், கண்களை மூடிப் பார்த்தான். ஆனால், அவனுக்கே புரியாத ஒரு ஆவேசம் அவனைக் கடல் மண்ணைப் பார்த்துத் தள்ளிவிட்டது. வேகமாக நடந்தான். அவர்களைப் பின்தொடர்வது கேவலமான காரியம் என்று நினைத்து, சிறிது நிதானித்தான். அதேசமயம், இதற்கு மேல் கேவலம் இல்லை என்பதுபோல், கேவலப்பட்டவன் போலவே நடந்தான். விமலாவின் பிடியில் சிக்கிய ஒரு அப்பாவியை மீட்கவேண்டும் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, ஏமாற்றப்பட்ட ஆவேசத்தில், கால்களைத் தூக்கிப்போட்டு, கைகளால் அவற்றைப் பிடிப்பவன்போல் நடந்தான்.
விமலாவும், அவளது 'உள்ளங்கவர் கள்வனும்' ஒரு படகுக்கு முன்பக்கமாகப் போய் உட்கார்ந்தபோது, மெய்யப்பன் பின்பக்கமாக உட்கார்ந்து படகோடு படகாக தன்னைக் குறுக்கிக் கொண்டான். சீ... இப்படியா நாம் நடந்து கொள்வது என்பது போல் அதட்டிய மூளையை அடக்குகிறவன்போல் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்பதுபோல் பேசிய மனதைத் தட்டிக் கொடுப்பவன் போல், வலது கையை விரித்து, மார்பை அழுத்திக் கொண்டான். படகிற்கு அந்தப் பக்கம் பல்வேறு அரவணைப்புச் சத்தங்களுக்குப் பிறகு, வாய்ச் சத்தம் வார்த்தைகளாகக் கேட்டது.
"விமல்... நான் ஒன்னை ஒண்ணு கேட்பேன்... தப்பாய் நினைக்க மாட்டியே..."
"என்ன டார்லிங்... நீங்க இப்படி பூடகமாய் பேசுறதைத் தான் தப்பாய் நினைக்கத் தோணுது என்றைக்கும் ஒளிவு மறைவு இல்லாம பேசணும்... இதயமும் உண்மையும் இரும்பும் காந்தமும் மாதிரி இயங்கணும்... மனசை மூடி மூடி வச்சால் அது அழுகிப்போயிடும்." "அடேயப்பா... தத்துவம் பேசுறியே. யார் சொல்லிக் கொடுத்தது?"
"அப்படின்னா எனக்கு சுய புத்தி இல்லன்னு சொல்றீங்களா?"
"நோ... நோ... ஒன் பேச்சு ரசிக்கும்படியாய் இருக்குதுன்னு சொல்ல வந்தேன். ஒன்னை மாதிரி நயத்தோட என்னால பேச முடியல..."
"நான் நயத்தோட சொல்லல... பயத்தோட சொல்றேன். நாம இவ்வளவு காலமாய், அதான்... ஒரு மாதத்துக்கும் மேலாய் அன்னியோன்னியமாய் பழகுன பிறகும், நீங்க சொல்றதை நான் தப்பா நினப்பேன்னு ஒங்களுக்கு ஒரு எண்ணம் வருது பாருங்க... அதுதான் தப்பு... இதுல இருந்து, என்ன தெரியுதுன்னால், நான் உங்களை நினைக்கிற அளவுக்கு நீங்க என்னை என்னை நினைக்கல..."
"மறந்தால்ல நினைக்கறதுக்கு."
"பரவாயில்லியே... அழகாய்த்தான் இருக்கீங்கன்னு நினைச்சேன்... அழகாயும் பேசுறீங்களே... சரி... விஷயத்தை சொல்லுங்க..."
"இப்போ வேண்டாம்... நாளைக்கு வச்சுக்கலாம்."
"ஒவ்வொருவரும் அன்றைக்குன்னு வாழனும். நீங்க சொல்லாட்டால், ஒங்களை கைவிடப்போறதில்லன்னு சொல்லமாட்டேன். நிஜமாவே ஒங்க தோள்ல என் கையை எடுக்காமல் இருப்பேன்... உம் சொல்லுங்க..."
"நான் ஸ்கூட்டரை வச்சுட்டு காத்து நின்னேனா... நீ வரலியா... உடனே ஒங்க ஆபீஸ் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். ஒன்கூட வேலை பார்க்கிற ஒரு குறுந்தாடிக்காரன்... கண்ணராவித்தாடி... அதைச் சரியாக்கூட அவன் படிய வைக்கல... ஒன்கிட்ட மனம்விட்டு எதையோ பேசினான்."
விமலா கலகலன்னு சிரித்தாள். "ஓ... அவனா... அவன் பேரு மெய்யப்பன். சரியான பித்துக்குளி; என்னைக் காதலிக்கறானாம்... கன்னா பின்னான்னு உளறுறான்."
"அவனைப் பார்த்தால் பித்துக்குளி மாதிரி தெரியலியே."
"அப்படின்னா... நான் பித்துக்குளியா?"
"என்ன இப்டிக் கோபப்படுறே?"
"பின்ன என்ன ரவி... பூடகமாய் பேசுறீங்களே... இதோ என்னைப் பாருங்க... நல்லாப் பாருங்க... இந்த முகத்துல இருக்கிற தவிப்பப் பாருங்க... நாம வருங்கால கணவன் மனைவி; நமக்குள்ளே உடம்பாலும், உள்ளத்தாலும் ஒளிவு மறைவு கூடாது. என்மேல சந்தேகம் வந்துட்டால், சொல்லுங்க... இப்பவே விலகிக்கிடலாம்... ஆனால், அப்போவும் நான் உங்களை மறக்க மாட்டேன். கழுத்துல சு ரு க் கு ப் போ ட் டா லும் போ டு வேனே த வி ர , இன்னொருத்தனை தாலிபோட விடமாட்டேன்... ஆனால் ஒரே ரிக்வெஸ்ட்... நான் இறந்துட்டாலும்... என் பிணத்தை நீங்கதான் தூக்கணும்... இன்னொருத்தர் கைபடக்கூடாது... நான் தமிழ்ப் பெண்... ஸார்..."
'அன்பு இருக்கிற இடத்துலதான் பொறாமை இருக்குமுன்னு ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது..? இனி மேல் அந்த பித்துக்குளி... ஒன்கிட்ட வாலாட்டினால் சொல்லு... என்கிட்ட ஆளுங்க இருக்கு... காலை மட்டும் எடுக்க ஒரு ரேட்... காலோடு கையையும் எடுக்க ஒரு ரேட்... என்ன சொல்ற..?"
"அய்யோ...எறும்பை மிதிச்சால்கூட... அழுகிற டைப் நான்...இந்த மாதிரியா பேசுறது...?இதுக்குத்தான்,நான் உங்ககிட்ட எனக்கு வேற கம்பெனிலே வேலை பாருங்கன்னு சொல்றேன்... அந்த ஆபீஸ்ல இருந்தால்தானே... அவன் முகத்துல விழிக்கணும்...? அந்த வேலை எப்போ கிடைக்கும் ரவி...”
"எந்த வேலை?” "ஃபாரீன் போகக்கூட சான்ஸ் உண்டுன்னு சொன்னீங்களே. அந்த வேலை..."
"ஓ! அதுவா... ஒன் மன்த் டயம் கொடு... அப்புறம் நீ... ஏர்கண்டிஷன் அறையில் இருப்பே..."
"நான் ஒண்ணும் ஏர்கண்டிஷன் அறைக்கு ஏங்கல... சீதைக்கு, ராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி... எனக்கு இந்தச் செல்ல ரவி இருக்கிற இடம்தான் ஏர்கண்டிஷன்..."
"அப்படின்னா... இன்னும் நெருக்கமாய் வா... ஒனக்கு எதுக்கு சிரமம்... நானே நெருங்குறேன்... நெருக்குகிறேன்..."
மெய்யப்பனால் இருக்க முடியவில்லை. அந்தக் குளிர் காற்றிலும், கடல் மண் சுடுவது போலிருந்தது. புதை மண்ணாய், அவனை கீழ் நோக்கிக் கொண்டு போவது போலிருந்தது. படகைப் பிடித்துக் கொண்டே எழுந்தான்.பார்வையே எதிரியான வேதனையில் பாய்ந்து நடந்தான். காதுகளே தேவையில்லை என்பதுபோல்,அவற்றை இரண்டு கைகளாலும் அடைத்து, கால்களால் தாவினான். ஆங்காங்கே இருட்டு உருவங்களாய் இருந்த ஜோடிகள்தான், அவனை 'வஸ்தாது'என்று நினைத்தவர்கள்போல், தத்தம் உடம்பை விலக்கிக் கொண்டார்கள். மெய்யப்பனோ விலக்க வேண்டிய நினைவை விலக்க முடியாமல், அந்த நினைவே ஒரு பேய் நினைவாக, விரைந்து கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்திலும், அவனுக்கு ஒரு சுகக் கற்பனை ஏற்பட்டது. 'அத்தான், இந்த ரவி என்னோட அண்ணன்... நீங்க... என்மேல் வைத்திருக்கிற காதல், எனக்கு மட்டுமல்ல... இவனுக்கும் தெரியும்... உங்களை சீண்டிவிட்டு, வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகம் போட்டோம்.நம்பி விட்டீர்களா... ஆண்புத்தி அவசரப்புத்தி என்பதைக் காட்டிவிட்டீர்களே என்று நாளைக்கு, சீ... நாளைக்கில்ல... இப்போதே ஓடி வந்து, பல் தெரியச் சிரித்து, அவன் தோளைத் தழுவிக் கொள்வதுபோல் ஒரு சுகபோக எண்ணம். அந்த எண்ணத்தைத் தடுப்பதுபோல் 'எங்களைப் பார்! நாட்டில், தேனும் பாலும் ஓடுகிறதா' என்று கேட்காமல் கேட்பதுபோல், ஒரு நொண்டிக் கிழவர், சாலையைக் கடக்க முடியாமல், ஒற்றைக் காலோடு, கையில் உள்ள கட்டையை கேள்விக்குறியாக வளைத்தது போல வைத்திருக்க, வேர்க்கடலை விற்கும் ஒரு பிஞ்சுப் பையன், அவன் ஏதாவது வாங்குவானா... என்று வினாக்குறியுடன் பார்க்க, தன்னோடு வந்த ஒருத்தியை - அவள் மனைவியோ மற்றவளோ, ஒருத்தன் கண்மண் தெரியாமல் அடிக்க, அந்த அப்பாவிப் பெண், அழுதால் இன்னும் அடிப்பானே என்பதுபோல், அழாமல் அழ -இந்த யதார்த்தத்தின் தாக்கத்தால் தாக்கப்படாமலே, அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
இந்த ரவி, அவளுடைய அண்ணன் அல்ல...அப்படி இருக்கவும் முடியாது.. அவள் குடும்பத்தைப் பற்றி அவனுக்குத் தெரியும். இவன் ஒரு தடவை அலுவலகத்திற்கு 'பர்சேஸ் ஆர்டர்' வாங்க வந்தவன். அவளை... பர்சேஸ் செய்துட்டான். தப்பு... பர்சேஸ் செய்ய வந்த பர்சேஸ்காரனை இவள் பர்சேஸ் செய்துவிட்டாள்.ஆகையால்,இது போலி நாடகமல்ல...நிஜ நாடகம் இதில் நிரந்தரக் கதாநாயகியாக இருக்கப்போவது விமலா ஒருத்திதான்... கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருப்பார்கள்... இன்னும் சொல்லப் போனால்,அவனைப் பொறுத்த அளவில்,ஆடவர்கள் கதாநாயகர்கள் அல்ல...
ரவியையும் விமலா உதறி விடுவாள் என்ற எண்ணம் அவனுக்கு ஒரு எதிர்மறை ஆறுதலைக் கொடுத்தது. ஒரு கணந்தான். மறுகணம், தனது கற்பனைகளும், கட்டிய எதிர்கால வாழ்வு நினைப்புகளும், ஆறுதலை நாகமாய், அவனை அச்சுறுத்த, அவன் தலைவிரி கோலமாக நடந்து கொண்டிருந்தான்.
