வெளிச்சத்தை நோக்கி/008
அலுவலகத்தில் பாதி இடத்தை ஆக்கிரத்திருந்த விசாலமான அறை. சன்மைக்கா மேஜைமேல் இருந்த 'இண்டர்காம்', வெளிர் மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. அரைவட்ட மேஜையில், இரண்டு டிரேய்கள். எதிரே நாற்காலிகள். ஒரு ஓரத்தில் சோபா ஸெட் வெல்வெட் கம்பளம் விரித்த தரை. நீல டிஸ்டெம்பர் அடித்த கவர்களில் விதவிதமான டிசைன்கள் போட்ட ஓவியங்கள். பெரும்பாலும் 'தழுவல்' ஓவியங்கள். ஆணும் பெண்ணும் அரை நிர்வாணத்துடன் தழுவும் 'மாடர்ன் ஓவியங்கள்'. பத்தமடை பட்டுப்பாய் விரிப்பு, தீபம் ஏந்திய கட்டழகியைக் காட்டியது. எலெக்டிரானிக் சுவர் கடிகாரம் நேரத்தை மின்வெட்டாய் காட்டிக் கொண்டிருந்தது.
மானேஜர், கரையான் புற்றுக்குள் போன பாம்புபோல், தலைவிரித்துப் பார்த்தார். காட்ரெஜ் பீரோவைத் திறந்து அந்த 'அந்தரங்க' ஃபைலை மீண்டும் பார்த்துவிட்டு, பீரோவைப் பூட்டினார்.
காலிங் பெல்லை அழுத்தினார். பியூன் முனுசாமி வந்தான். “வாணியை வரச்சொல்” என்றார், முனுசாமியின் முகத்தைப் பார்க்காமலே, பிறகு நமைச்சல் எடுத்த உடம்பைச் சொறிந்து கொண்டு, டிராவைத் திறந்து, ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு பிளாஸ்கைத் திறந்து வெந்நீரைக் குடித்தார்.
ஒரு நிமிட நேரத்தில் வாணி வந்து நின்றாள். துச்சாதனன் துகிலுரியும்போது திரெளபதி பார்ப்பதுபோல், ஒருவித பாவமான கண்களுடன் பல படங்கள் இருக்கிறதே, அது மாதிரியான பாவத்துடன் வாணி அவரைப் பார்த்தாள். இந்த ஒருவார காலத்தில் அவள் மதர்ப்பான மேனி, சுரைக்காய் கூடுபோல் மாறியது. ஒளி சிந்திய கண்கள், பழி சுமந்து நிற்பதுபோல் விழி விலகி, தெறித்து விடுவதுபோல் நின்றன. சமையலறையில் இருந்து அப்படியே அலுவல கத்திற்கு வந்துவிட்டது போன்ற தோற்றம்.
அவள் வந்து நின்றதும், மானேஜர், 'பிஸி'யாக இருப்பது போல், 'இண்டர்காமில்' யாருடனோ பேசினார். டெலி போனைச் சுழற்றினார். ஏதோ ஒரு ஃபைலை எடுத்து, கலர் பென்சிலால் கோடு போட்டுக் கொண்டே படித்துக் கொண்டார். அவளை உட்காரச் சொல்லவில்லை. கால்மணி நேரம் வரை காத்து நின்ற வாணி, 'சார்' என்றாள். அப்படிச் சொல்லும்போதே வாய் சிக்கியது. கண்கள் பெருக்கெடுத்தன.
மானேஜர் தலையை நிமிர்த்தாமலே 'யெஸ்' என்று அடித் தொண்டையில் கேட்டார். பிறகு இருவரும் பேசவில்லை. இன்னும் ஒரு ஐந்து நிமிடம் இழுபறியில் ஓடியது. ஃபைலை மூடி 'டிரேயில்' தூக்கியெறிந்து விட்டு, கைக் குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு அவளைச் சிறிது நேரம் இளக்காரமாகப் பார்த்தார். அவள் நின்றவிதம், அவருக்குக் குறுகுறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும். நிதானமாகக் கேட்டார்.
"என்னம்மா. ஃபைல் கிடைச்சுதா?"
பதிலில்லை.
"அது டெண்டர் ஃபைல், நாம் 'கோட்' செய்த ரேட் வேற கம்பெனிக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லித்தான் அந்த கான்பிடன்ஷியல் ஃபைலை ஒங்ககிட்ட கொடுத்தேன். நல்ல வேளையா ஒங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டேன்.இல்லன்னா... ஆல்ரைட் ஃபைலை என்ன செய்திங்க... இது ஒரு பெரிய மோசடி தெரியுமா?"
வாணி அழுகையை அடக்கிக் கொண்டு, அது வெளிப்பட முடியாதபடி, நிதானமாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டுப் பேசினாள். 'ஸார்... நான் மோசடி பட்டுத்தான் பழக்கமே தவிர... மோசடி செய்து பழக்கமில்ல... அவரோட அண்ணன் தம்பிங்க... என் சொத்தைப் பறிச்சுட்டாங்க... அவருகிட்ட கடன் வாங்குனவங்க..."
"ஓங்க பெர்சனல் சமாச்சாரம் எனக்கு எதுக்கும்மா...? வீடுன்னா ஆயிரம் இருக்கும். இது ஆபீஸ். அந்த ஃபைலைப் பற்றி மட்டும் பேசுங்க... கடைசியாய் கேட்கிறேன். ஃபைலை "டிரேஸ்' செய்து தர முடியுமா? தர முடியாதா?”
மேஜைமேல் ஒரு சொட்டுக் கண்ணீர் பதிலாக வந்து விழுந்தது. மானேஜர் அதட்டலுக்கு மேல் அதட்டலாகக் கேட்டார்.
"ஆல்ரைட்... ஒங்களால இனிமேல் அந்த ஃபைலைக் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோசனம் இல்லை. ஏன் கொடுக்க முடியாது என்கிறது எனக்கும் தெரியும். சிவராம் கம்பெனிக்காரங்ககிட்ட 'ரேட்' பேசிட்டு கொடுத்திருப்பீங்க... அவங்க ஃபைலை, நகலெடுத்துட்டு தரதாய்ச் சொல்லி,வாங்கிட்டுப் போயிருப்பாங்க...சரி.ஒங்களுக்குன்னு பேசின பணத்தையாவது தந்தாங்களா? ஏம்மா கண்ணீர் விடுறீங்க... இந்த ஃபைலுங்க நனையுது பாருங்க... நீங்க போகலாம்... அரைமணி நேரம் கழித்து அக்கெளண்டன்டைப் பார்த்து ஒங்க கணக்கை 'செட்டில்' பண்ணுங்கோ... அப்புறமாய் இங்கே வந்து டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக்கோங்கோ, இப்போ, நீங்கே போகலாம். ஐ ஆம் பிஸி."
மானேஜர், இண்டர்காமில் ஒரு பட்டனை அழுத்தி, 'அக்கெளண்டன் ' என்றபோது, வாணி அவரது இரண்டு கைகளையும் எதேச்சையாகப் பிடித்துக் கொண்டு விம்மினாள்.மானேஜர் அந்த ஸ்பரிச இன்பத்தில் ஏற்பட்டகிறக்கத்தை அடக்கிக் கொண்டே, 'என்னை ஏம்மா தொடுறீங்க...? நீங்க கண்ணகி பரம்பரையாச்சே' என்று சொன்னபோதுதான் அவளுக்குச் சுயச் செயல் நினைவுக்கு வந்தது. ஏந்திய அவரது கைகளை படபடப்புடன் போட்டுவிட்டு, சிறிது விலகி நின்றபடி, கையெடுத்துக் கும்பிட்டு, “ஸார், நீங்கதான் சார் என்னைக் காப்பாத்தணும். இல்லன்னா, என் பிள்ளைங்க தெருவுல நிக்கும்" என்றாள். அந்தக் காட்சியைக் கற்பனை செய்தவள் போலவும், அதைப் பார்க்க மறுப்பவள் போலவும் கண்களை மூடிக் கொண்டாள். மூடிய கண்களைத் திறக்காமலே, "ஒங்களை விட்டால், எனக்கு வேறு ஆதரவில்ல ஸார்" என்று சொல்லி விட்டு, மீண்டும் விம்மினாள்.
"நான் யாரும்மா ஒங்களுக்கு ஆதரவு தரதுக்கு? அதுக்குத்தான் அந்த ரெளடி மெய்யப்பன் இருக்கானே."
வாணி தலையை நிமிர்த்தி, கைகளை அம்புக்குறி போல் வளைத்துப் பக்கவாட்டில் வைத்தபடி, பத்ரகாளிபோல் கோபத்தோடு கத்தினாள்.
"வினையே அந்தப் பித்துக்குளியாலதான் ஸார் வந்தது. நீங்க அன்றைக்கு என் கையைப் பிடிச்ச படபடப்புல, அந்த பைத்தியக்காரன்கிட்ட லேசா உளறிட்டேன். இவ்வளவுக்கும் கோபப்படாமத்தான் சொன்னேன். உடனே வந்து அவன் ஒங்கள இப்டி மிரட்டுவான்னு நினைக்கல.... சத்யமாய் நினைக்கல ஸார்."
மானேஜர் அடக்கமில்லாமல் சிரித்தார். "சிலர், பிறத்தியார் பாதிக்கப்படுவாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டே, ஹீரோவாய் மாறதுக்காக, பிறத்தியார் கஷ்டத்தையே மூலதனமாகப் போட்டு, பாறையை பிளக்கது மாதிரி பேசுவாங்க... மெய்யப்பன் அந்த டைப்.... இப்போவாவது புரியுதா?”
வாணிக்கு எல்லாமே புரிந்தது. "கத்தன்... துஷ்டனோட பலன் செய்யும்." என்ற மலையாளப் பழமொழியின் அர்த்தமும் புரிந்தது. அதோடு மானேஜர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சபலம் ஏற்பட்டு, பிறகு மனச்சாட்சியால் கொல்லப்படும் நிலையில் இருப்பவரல்ல என்பதும், இந்த வகையில் அவர் ஒரு அரசியல்வாதி என்பதும், அவளுக்குப் புரிந்தது. புரியப் புரியக் கண்கள் குளமாயின. கைகள் கும்பிட்டன. கனிய வேண்டியது காய் நிலையில் இருப்பதை உணர்ந்த அந்த 'பழுத்த' மானேஜர் மேலும் அதட்டினார். "எத்தன தடவம்மா ஒங்களுக்குச் சொல்றது? ப்ளீஸ் லீவ் மீ அலோன். நான் சொன்னால் சொன்னதுதான். அரைமணி நேரத்திற்குப் பிறகு ஆர்டரை 'கலெக்ட்' பண்ண வாங்க. ஸாரி, நீங்க வரமாட்டீங்க கூப்பிட்டாலும், அலட்சியமாய் வீட்டுக்குப் போகிறவங்களாச்சே... அதனால... நானே வந்து கொடுக்கறேன். இப்போ போங்க... ஐ ஸே, கெட் அவுட்"
வாணி ஒரு கையை மேஜையில் ஊன்றியபடியே, இன்னொரு கையால் முகத்தை மறைத்தபடி விம்மினாள். "அய்யோ... அந்தப் பாழாப் போறவனால... என் நிலமை இப்படி ஆயிட்டே... ஆயிட்டே" என்று இடையிடையே விட்டும் விடாமலும், பட்டும் படாமலும் உளறிக் கொண்டே அழுதாள். அவள் ஏங்கி அழும் ஒலி வெளியே கேட்கு மளவிற்கு வலுத்தது. மேஜையில் ஊன்றிய கை தனியாகத் துண்டித்து விழப்போவதுபோல் ஆடியது. இந்த வேலை போய்விட்டால், வீட்டை விட்டு தெருவுக்குப் போக முடியாது. இரண்டு மாத வாடகைப் பாக்கி இருக்கிறது. அவள் தன்னைக் கட்டுப்படுத்தத்தான் பார்த்தாள். முடியவில்லை. காட்டாற்று ஒலியுடன் அழுகையும், கண்ணீரும் ஒன்றாகப் பாய்ந்தன.
மானேஜர் மர்மப் புன்னகை ஒன்றை மலரவிட்டுக் கொண்டே, "அடடே... என்னம்மா இது... இப்படியா அழுகிறது. நீ அழுதால் எனக்கும் அழுகை வரும் போலிருக்கே... அழாதம்மா..." என்று வார்த்தைக்கு வார்த்தை, 'அம்மா. அம்மா என்று சொல்லிக் கொண்டே, அவளுக்குப் பின்புறமாகச் சென்று, அவளை மார்போடு சேர்த்து அணைத்தபடி, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களைத் துடைத்தார். அவள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நின்றபோது, மேலும் அவளைத் தன் மார்புடன் நெருக்கிக் கொண்டே, "ஒனக்காக ரொம்ப வருத்தப்படுறேன்... டோண்ட் ஒர்ரி... சாயங்காலமாய், எல்லோரும் போன பிறகு, இரண்டு பேருமாய் அந்த ஃபைலைத் தேடலாம்..." என்றார். வாணி முனங்கினாள். நடுக்கத்தோடு முனங்கினாள். முகத்தைக் கரங்களால் மூடிக் கொண்டே பிதற்றுவது போல் பேசினாள்.
"அந்தப் ஃபைல் கிடைக்காது சார்... என்னோட ராசியே அப்படித்தான் ஸார். நான்,எது எதையெல்லாம் பாதுகாத்துக் கணுமுன்னு நினைக்கேனோ, அதெல்லாம் பறிபோயிடும் சார்."
மானேஜர், அவளுக்கு ஆறுதல் சொல்பவர்போல், அவள் கழுத்தை வருடிவிட்டபடி, "சரி,என்னைப் பாரு... வெட்கமா இருக்கா...?” என்றார்.
வாணி, வெட்கப்பட வேண்டியதில்லை என்பதுபோல, வெறுமையாகச் சிரிக்கிறாள்;பொறுமையாக நிற்கிறாள். ஆசைக்கு வெட்கம் இல்லை என்பார்கள். வறுமைக்கு மட்டும் என்ன வெட்கம் வாழுது?
