வெளிச்சத்தை நோக்கி/009
என்னதான் விமலாவை உதறிவிட்டதாக நினைத்தாலும், அவளைப் பற்றிய நினைவுச் சுவடுகள் அழிந்துவிட்டதாகப் பாவனை செய்தாலும், மெய்யப்பனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சு கனத்து, தலை கொதித்து, கண்கள் எரிந்தன.முந்தாநாள்...அந்த ரவி அலுவலகத்திற்கு வந்து, மானேஜரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, விமலாவை 'கையோடு' கூட்டிக் கொண்டுபோனான். ஆம். அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு போனான். வாணியக்கா கூட, அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க மறுக்கிறாள். அவன், அவளருகே போகும் போதெல்லாம், அவள் எழுந்து இன்னொருவர் பக்கம் போய் விடுகிறாள். மஞ்சள் வெயில் விழும் முன்பாகவே ரிஜிஸ்டர் கட்டுக்களோடு மானேஜர் அறைக்குள் போய்விடுகிறாள். மெய்யப்பன், அவள் கற்பைப் காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டியவனாய், சில மாலைப் பொழுதுகளில் வெளியே காத்திருந்து பார்த்தான். கூக்குரல் ஏதும் கேட்கவில்லை.
இது போதாதென்று, இந்தக் குமார் வேறு.... எந்தச் சண்டை வந்தாலும் முதலில் பேசும் அவன், இப்போது நட்பை முறித்ததுபோல், இவனைக் காணும் போதெல்லாம் முகத்தை முறித்துக் கொள்கிறான். காபி சாப்பிட்டாலும் சரி, டிபன் சாப்பிட்டாலும் சரி, இவனுக்கும் சேர்த்து வாங்கும் அவன், இப்போது தனக்கு மட்டுமே வாங்கிக் கொள்கிறான். மெய்யப்பனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தானே வலியப் போய் அவனிடம் பொதுப்படையாய் பேசிவிட்டு, பிறகு வாணிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும், தான் மானேஜரை மிரட்டியதையும், நடித்துக் காட்டுவது போல் பேசினான்.
குமார், எல்லாவற்றையும் எந்தவிதச் சலனமுமில்லாமல் கேட்டு விட்டு, பிறகு "ஒன் புத்தி, குரங்குப் புத்தி.... மந்திக்கு ஒன்றே குறி என்பது குரங்குக்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, ஒனக்குப் பொருந்தும். நான் சொன்னால், நீ கேட்கப் போறதும் இல்லை. ஆனால், நீ யாரையெல்லாம் நட்புப் பாராட்டி நம்புறியோ... அவங்கெல்லாம் ஒன் காலை வாரி விடுறாங்க... இது ஒன்னோட ராசி... நீ என்கிட்ட நட்பாய் இருந்து, என்னை முழுசும் நம்பி, அதனால நானும் ஒன் காலை வாரி விடப்படாது பாரு... அதனால... நான் இனிமேல் விலகி இருக்கதுன்னு தீர்மானிச்சுட்டேன்..." என்று கண்டிப்பாய் சொல்வதுபோல் தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
மெய்யப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை மாதிரி பார்த்தான். குமாரோ ரிஜிஸ்டரில் வைத்த கண்ணை எடுக்கவில்லை. அலுவலகம் இப்படியென்றால், அதற்கு மேல் வீடு. சத்யாவின் அண்ணன் இன்னும் வரவில்லை.மெய்யப்பன்குளியல றைக்குப் போகும் போதெல்லாம் சத்யாவின் அண்ணி ஜாடைமாடையாகத் திட்டுகிறாள். அந்தப் பக்கம் எதேச்சையாக சத்யா வந்தால், அண்ணி, முகத்தை இடிக்கப் போவதுபோல், கைகளை ஆட்டிக் கொண்டே, கண்டபடித் திட்டுகிறாள். "தடிப்பயல வீட்டில வச்சதால.... ஒனக்கு தடிப்பேறிப் போயிட்டு...." என்றுகூடச் சொல்லிவிட்டாள். வேறு அறை பார்க்கலாம் என்று பார்த்தால், எல்லா வீட்டுக்காரனும் ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் கேட்கிறான். என்ன செய்யலாம், ஏன் இப்படி ஆயிட்டேன்... எல்லோருக்கும் நன்மையைத் தவிர, தீமையை செய்யாத என்னிடம் ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள். நான் அசடோ... நான் முட்டாளோ... நான் பைத்தியமோ...
அலுவலகக் கடிகாரத்தை வெறித்துப் பார்த்தபடி, மெய்யப்பன் உட்கார்ந்திருந்தான். ஆடிட் பைலை எடுத்து, சில 'பாயிண்டுகளுக்கு' பதிலெழுதப் போனான். ஆனால், பதிலில்லாமல் போன, 'நான் அசடா... முட்டாளா...' என்ற கேள்வியே அந்த பாயிண்டுக்குள் பாயிண்ட்டுக்களாக நின்றன. மாலை நேரம், மஞ்சள் நிறம் வெயிலாக விழுந்தது.
எல்லோரும் போகத் துவங்கினார்கள். போய் விட்டார்கள். விமலாவை ரவி வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டான். வாணி, மானேஜர் அறைக்குள் போய்விட்டாள். குமார், முன்னதாகவே போய்விட்டான். நாளையில் இருந்து இரண்டு மாத லீவில் போகிறானாம். இதை அவன்கூடச் சொல்லவில்லை. ஆபீஸ் பியூன் சொல்லித்தான் தெரியும்.
மெய்யப்பன் வெளியேறினான். எதிரே இருந்த ஒரு டீக்கடையில் போய் அமர்ந்து கொண்டான். எப்படியாவது, வாணி வெளியே வந்ததும்,அவளின் பாரா முகத்துக்குப் பதில் கேட்க வேண்டும் என்று உட்கார்ந்தான். 'அவள் எப்படிப் போனால்நமக்கென்ன' என்றும் ஒரு எண்ணம் வந்தது. அவளே பேச விரும்பாதபோது, தான், அவளுக்காக எதிர்பார்த்து இருப்பது பைத்தியக்காரத்தனம்தானே என்பதுபோல், தனக்குள்ளேயே ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டான். பிறகு பைத்தியமாய் ஆனாலும், முழு பைத்தியமாய் ஆகலாம் என்று ஒரு பதிலையும் சொல்லிக் கொண்டான்.
எப்போதாவது ஓரிரண்டு சிகரெட்டுகளைப் பற்ற வைப்பவன், அப்போது ஒரு பாக்கெட்டைத் தீர்த்து விட்டான். மணி ஏழாகிவிட்டது. வாணியைக் காணவில்லை. ஒருவேளை, வாணியக்காவிடம் அந்த மானேஜர் முறை தவறி நடக்கும் முயற்சியில் இருப்பானோ? ஓடிப்போய் அக்காவின் மானத்தைக் காப்பாற்றலாமா? மெய்யப்பன், அலுவலகத்திற்கு உள்ளேயும் போக முடியாமல், வெளியேயும் நிற்க முடியாமல், சந்தேக வேதனையில் துடித்தான். டீக்கடையில் இருந்தவர்கள் கூட அவனை ஒரு மாதிரிபார்த்தார்கள்.
அலுவலகத்தில் இருந்து மானேஜர் கார் புறப்பட்டது. மெய்யப்பன் விறைப்பாக நின்றான். மானேஜர் மோசமானவன் என்பதற்காக, அவன் சொல்லும் வேலையை அக்காவால் தட்ட முடியுமா.... அதுவும் ஸ்டெனோகிராபராக இருக்கும்போது.... இவ்வளவு மிரட்டியபிறகு, மானேஜருக்குத் தான் தைரியம் வருமா...?
தெருவுக்கு வந்த மானேஜரின் காரைப் பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஆனால், அது உண்மைதான். கண்ணுக்குச் சிந்திக்கும் சக்தி கிடையாததால், அது உள்ளதை உள்ளபடிக் காட்டியது. வாணியக்கா, காரின் முன்னிருக்கையில் மானேஜருடன் நெருக்கமாக உட்கார்ந்திருக்கிறாள். மானேஜரின் இடது கை, அக்காவின் இடது தோளில் கிடப்பது நன்றாகத் தெரிகிறது. சந்தேகமில்லை. அது வாணியக்காதான். எப்படிச் சிரிக்கிறாள்? அன்று அழுதவளா இப்படிச் சிரிக்கிறாள்? அதுவும், தன் தோளில் தொங்கும் மானேஜரின் கையை பிடித்துக் கொண்டே... மெய்யப்பன், அவன் கண்ணில் தூசியைப் பரப்பிக் கொண்டு போகும், அந்த 'பச்சைக்' காரையே கண் கொட்டாது பார்த்தான்.நிற்பது நடுரோடு என்ற நினைவில்லாமலே பார்த்தான். அந்தக் காராலேயே அடிபட்டு, உடம்பு சின்னாபின்னமாகி செத்துப் போனது போலவும், இப்போதுதான் அங்கே பேயுருவாக நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. பின்னால் வந்த இன்னொரு கார் அவன் காலில் மோதாக் குறையாக நின்று ஹாரன் அடித்தது. அதற்கும் அவன் நகராமல் நின்றபோது, டிரைவர் இறங்கி வந்து, அவன் கையைப் பிடித்து, தரதரவென்று இழுத்து, ரோட்டு முனையில் நிறுத்திவிட்டு, மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். காருக்குள் இருந்த ஆண் பெண் அத்தனைபேரும் சிரித்தார்கள். சிரிப்போடு கார் போனபோது, மெய்யப்பன் சிலிர்ப்போடு திரும்பினான். டீக்கடையில் உள்ள வானொலிப் பெட்டி, "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்” என்று பாடியபோது, "அம்மம்மா உலகினிலே யாவும் வஞ்சம்....” என்று மெய்யப்பனே தன்னையறியாமலே சத்தம் போட்டுக் கத்தினான்.
