உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிச்சத்தை நோக்கி/010

விக்கிமூலம் இலிருந்து


10

எப்படி வீட்டுக்கு வந்தோம் என்பது அவனுக்கே நினைவில்லை. பஸ்ஸில் ஏறவில்லை. ஆட்டோவில் அமர வில்லை. நடந்தது போலவும் தெரியவில்லை. எப்படியோ வந்த ஞாபகம் இருந்ததே தவிர, எப்படி வந்தோம் என்று தெரியவில்லை. வீட்டுக்குள் வந்தவன், லுங்கியைக் கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தான். உடம்பு ஆடுவது நின்றது. உள்ளத்தில் லேசாக நிதானம் ஏற்படுவது போலிருந்தது. நேற்று குமார் சொன்னதின் அர்த்தம் அவனுக்குப் புரியப் புரிய, வாழ்க்கையே அவனுக்கு அனர்த்தமாகத் தெரிந்தது. நடந்ததையெல்லாம் நிதானமாகச் சிந்தித்து, வாழ்க்கையைப் பற்றியும், வாழும் விதம் பற்றியும், ஒரு முடிவுக்கு வரலாம் என்பதுபோல், அவன் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கால்களை மாற்றிப் போட்டபோது, உள்ளே இருந்து ஓலம் கேட்டது. சத்யாவின் ஓலம். அவள் அழுதிருக்கிறாள்; ஆனால், இப்படி அழுததில்லை. பிராணனே அழுவது போன்ற ஓலம். பயங்கரமான சத்தம்.

"அடிக்காத அண்ணா... நான் ஒரு பாவமும் அறியாதவள். சாவியைக் கொடுக்கும்போது தவிர, வேற எந்தச் சமயத்துலயும் நான் பேசினதில்ல. சத்தியமாப் பேசுனதில்ல அண்ணா... வேணுமுன்னா கொன்னுடு. இப்படிச் சித்திரவதை பண்ணாத அண்ணா... நாளைக்கு நானே போயிடுறேன். அய்யோ, என் காலு போயிட்டே... என் கன்னம் போயிட்டே.... என் வயிறு வலிக்கே... அண்ணா..."

மெய்யப்பன், தன்னையறியாமலே எழுந்தான்.

சத்யாவின் ஓலம் நின்று விட்டது. அதேசமயம், அண்ணன்காரன், "ஒன்னை என்ன பண்றேன் பாரு... சாவி கொடுக்கிற சாக்கிலயா போனே? இன்னையோட நீ சரி என்று சொல்லிக் கொண்டே அடிக்கும் சத்தமும், "மூதேவிய விட்டுடுங்க ஊரான் பெண்டாட்டிய நாம ஏன் அடிக்கணும். நாளைக்கே கட்டுனவன் முன்னால நிறுத்திட்டு வாங்க..." என்று அண்ணிக்காரி கீதாவுபதேசம் செய்வதும் கேட்டது. இன்னும் அடிப்பது முடியவில்லை. ஆனால், சத்யா அழுவது நின்று விட்டதே... அழ முடியாதபடி அண்ணன் அவள் வாயில் குத்தியிருப்பானோ... சத்தத்தை எழுப்பும் தொண்டையைக் கிழித்திருப்பானோ....

மெய்யப்பன் ஆவேசமாக உள்ளே போனான்.

சத்யா துவண்டு கிடந்தாள். வீட்டுக்கு வெளியே கிடந்த மாவரைக்கும் ஆட்டுக் கல்லுக்கருகே, குப்புறக் கிடந்தாள். சிறிதாய் போன வலதுகால், புடவை விலகி, பல்லியின் வால் போல் துடித்துக் கொண்டிருந்தது. அண்ணன்காரன், அடித்த கை வலித்ததாலோ என்னவோ, இப்போது அவளைக் காலால் உதைத்தான். அவன் உதைக்க உதைக்க, அவள் லேசான முனகலுடன் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருந்தாள்.

மெய்யப்பன் நேராக, உதைப்பவன் கையைப் பிடித்து, தரதரவென்று இழுத்து, சிறிது தூரத்தில் நிறுத்திக்கொண்டு, "ஸார்... நீங்க செய்யுறது அக்கிரமம் ஸார்... இந்த பூமியறிய சொல்றேன்... என் வேலை சத்தியமாய் சொல்றேன். நான் அவங்களை தப்பா நினைச்சதில்ல... அவங்களும் என்கிட்ட தப்பா பேசினதில்ல... தப்பாய் நினைக்கது நீங்கதான்...” என்றான்.

அவன் குறுக்கீடலை எதிர்பாராத அண்ணன்காரன் எப்படிப் பதிலளிப்பது என்று யோசித்தபோது, அடிதடி வருமோ - அதில் புருஷன் உதைபட்டுப் போவானோ என்று உள்ளூறப் பயந்து ஒப்பாரி போடப்போன அண்ணி, மெய்யப்பன் நிதானமாக நிற்பதையும், அவன் கையில் ஒரு சின்ன கம்புகூட இல்லாததையும் பார்த்துவிட்டு, எகிறினாள்.

"ஏன் கல்லு மாதிரி நிக்கீங்க..... இது நம்ம வீட்டுச் சமாச்சாரம்...எவனுக்கும் இதுல தலையிட உரிமைகிடையாதுன்னு சொல்லுங்க.... அவளை அடிச்சால், இவனுக்கென்ன வந்ததாம்..."

அண்ணன்காரனுக்கும் ரோஷம் வந்தது. "நான் அவளை அடிப்பேன். ஒதைப்பேன்... ஒனக்கென்ன வந்தது. ஏய்... எடுடி அரிவாள... தடுக்க வாரவனையும், ஒரே வெட்டாய் வெட்டுறேன்...எல்லாம் இந்த பழிகாரியால வந்தது..."

அண்ணன், மெய்யப்பனை அலட்சியப்படுத்திக் கொண்டே ஓடிப்போய், இன்னும் சுரணை இல்லாதவள் போல் குப்புறக் கிடந்த சத்யாவின் விலாவில் ஒரு உதைவிட்டு, மீண்டும் இன்னொரு காலைத் தூக்கியபோது, மெய்யப்பன் அவன் கைகளை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு, "ஸார்.... இந்த நாட்ல ஒரு நாயை அடிக்கக்கூட நமக்கு உரிமை கிடையாது. மிருகங்களை காக்கக்கூட சங்கம் இருக்கிற காலத்துல... கூடப் பிறந்த தங்கையை... இப்படியா ஸார் அடிக்கது? நீங்க அடிக்கிறபோது, ஒரு பிரஜை என்கிற முறையில, அதைத் தடுக்கிறதுக்காக... நான் எந்த லெவலுக்கும் போகத் தயார் ஸார்...” என்று சிறிது அதட்டலாகக் கேட்டான். பிடியையும் விடவில்லை.

அண்ணிக்காரிக்கு, கணவனின் ஆவேசம் தாவியது.

"இந்த முண்ட.... அவனுக்கு நல்லாத்தான் சொல்லிக் கொடுத்திருக்காள். இவளை இப்பவே ஒரே வெட்டா வெட்டிப் போடுங்க... இவன் என்ன செய்யுறான்னு பார்ப்போம்."

அண்ணன்காரன், மெய்யப்பனின் பிடியில் இருந்து விடுபடத் திமிறிக் கொண்டே, தங்கையைப் பார்த்துக் காலை நீட்டினான். மெய்யப்பன், "ஸார் நான் அப்புறம் பொல்லாதவனாய் ஆயிடுவேன்..." என்று சொல்லிக் கொண்டு பிடியை அழுத்தினான்.

கீழே துவண்டு கிடந்த சத்யா தட்டுத் தடுமாறி எழுந்தாள். நிற்க முடியாமல் போனதால், சுவரை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டே கத்தினாள்.

"யோவ்... எங்கண்ணன் என்னை அடிச்சா ஒனக் கென்னய்யா வந்தது...? நான் யாரு? நீ யாருய்யா? நீ ஏய்யா தலையிடுறே...? ஒங்கிட்ட தெரியாம சாவியக் கொடுத்துட்டு நான் படுறது போதாதா... போய்யா... மானமுள்ளவன்னால்... சொன்னபடி வீட்டைக் காலி பண்ணிட்டு ஒரேயடியாய் போய்யா... அண்ணா...! என்னை வெளியேத்தணுமுன்னாலும் சரி... கொல்லணுமுன்னாலும் சரி... வேற காரணத்தைக் கண்டுபிடிண்ணா... நான் காலுலதான் நொண்டியே தவிர... கற்பில இல்லண்ணா... அண்ணா... அண்ணா..." மெய்யப்பன் விக்கித்து நின்றான். அவள் அண்ணனை விட்டுவிட்டு, சிறிது விலகி நின்றான். சிறிது நேரம் கூனிக்குறுகி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டு நின்றவன், பிறகு, மின்வெட்டுப்போல் கால்வெட்ட தன் அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டான். மனத்திரையில் விமலா வந்தாள். வாணியும் சத்யாவும் நிழலுருவங்களாகத் தெரிந்தன. வாணி வந்தபோது, விமலாவும் சத்யாவும் நிழலுருவங்கள் போல் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து, அந்த உருவங்கள் அஸ்தமித்தபோது, மானேஜர் கொக்கரித்த சிரிப்போடும், ரவி பரிகாசமாகவும், குமார் உதட்டைப் பிதுக்கிக் கொண்டும் வந்து போனார்கள்.

திடீரென்று, சத்யா மீண்டும் ஓலமிடுவது அவனுக்குக் கேட்டது. 'அய்யோ என் வயிறு போச்சே' என்றும், 'அய்யோ என் இடுப்பு போச்சே' என்றும் அவள் விட்டு விட்டுக் கத்துவது காதைக் குத்தியது. பிறகு சத்தமே இல்லை. அடிபட்டு அடிபட்டு, வலிக்கே வலியெடுத்துப் போனதோ... ஒரேயடியாய் அடியின் சொரணை இல்லாமல் போய் விட்டாளோ... போகட்டும்.... எக்கேடாவது கெட்டுப் போகட்டும்... காதலியே கைவிட்டாள்... உடன் பிறவா அக்காளே ஏமாற்றிவிட்டாள்... உயிர் நண்பனே ஒதுங்கி விட்டான்... இவள் யார்? நான் யார்? ஆமாம் நான் யார்? யார் பெற்ற பிள்ளை? எத்தனை நாள் வாழப் போகிறேன்... சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, எத்தனை நாள் இப்படிச் சுமப்பது? இதற்கு முடிவே இல்லையா.... விடிவே கிடையாதா...

மெய்யப்பன் நாற்காலியில் உட்கார்ந்தபடி, கண்களை மூடிப் பார்த்தான். மூடிய கண்களைத் திறந்து பார்த்தான். விளக்கை அணைத்துப் பார்த்தான். அணைத்த விளக்கைப் போட்டுப் பார்த்தான். அந்த அறையே அவனுக்கு சமாதி போலவும், அந்த வீடே ஒரு சுடுகாடு போலவும் தோன்றியது. அத்தனை உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதியவை பிரிந்து, பிரிந்தவை மோதி, உணர்வே இல்லாதவனாய், உள்ளமே செத்துப் போனவனாய், ஏதோ ஒன்று உடம்பெங்கும் பரவி, தொண்டைக் குழியில் வேர்விட்டு, தலையில் முளைவிட்டு, காலில் கிளைவிட்டு, உடலெங்கும் வியாபித்திருப்பது போன்ற சுமையுணர்வு. அந்த உணர்வுச் சுமையை சுமக்கவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தான். விழித்த கண்கள் பார்க்கவில்லை. கனத்த நெஞ்சம் நினைக்கவில்லை.

தெரு உறங்கியது. சத்யாவும் உறங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம், அவள் சத்தமாவது உறங்கியிருக்க வேண்டும். உறக்கமோ... உறைவோ.. நிசப்தமோ... நிர்மலமோ... தூக்கமோ... துக்கமோ... எல்லாமே சூன்யப்பட்டு அவன் ஒருவன் மட்டும் இருப்பதுபோன்ற பிரமை. அவன் ஒருவன் மட்டும் சூன்யமாகி, அனைத்தும் ஆனந்தக் கோட்டில் இயங்குவது போன்ற பேதமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=வெளிச்சத்தை_நோக்கி/010&oldid=1847641" இலிருந்து மீள்விக்கப்பட்டது