வெளிச்சத்தை நோக்கி/015
இனிமேல் எழ வேண்டியதில்லை என்பதுபோல் மெய்யப்பன் முடங்கிக் கிடந்தான். நேற்றிரவு, சத்தியாவின் அண்ணன் அவன் தலைமுடியைப் பற்றி இழுத்ததும், தாறுமாறாகப் பேசியதும், ஒரு பிரமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடியே, புரண்டு படுத்தான். பிரமையல்ல… வெளியே அண்ணிக்காரி இன்னும் கத்திக் கொண்டிருப்பது காதில் உறைத்தது. "ஒங்களுக்கு எத்தனை தடவை சொல்றது... சீக்கிரமாய் போங்க... கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு, போலீஸ்காரங்கள கையோடு கூட்டிவாங்க... இல்லன்னா... ஒரு நாள்போல், ஒரு நாள் இருக்காது... போலீஸ் பாடு... இவன் பாடு... நாளைக்கு என்னையே கூட கூப்பிடுவான்... யார் கண்டாங்க...?”
கணவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் பதில் குரலில், கருணை இல்லையானாலும், நிதானம் ஒலித்தது.
மெய்யப்பன் மெல்ல எழுந்தான். போலீஸ் வருமோ? பத்திரிகைகளில் செய்தி வருமோ? நேற்றிரவு பக்கத்து வீடுகளிலும், சத்யாவின் அண்ணன் கத்தியபோது, விளக்குகள் எரிந்தது மாதிரித் தெரிந்ததே... இனிமேல் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? அது போகட்டும். போலீஸ் வரும் தெரு வழியாக தன்னைக் கூட்டிக் கொண்டு போவாங்க... பின்னங்கை கட்டப்பட்டாலும் கட்டப் படலாம்... அடித்தாலும் அடிக்கலாம். ஆஸ்பத்திரியில் டாக்டர்களே நோயாளிகளிடம் எரிந்து விழுகிற இந்தக் காலத்தில், போலீஸ்காரர்கள் இந்த நோயாளிக்கு மாலையா போடப் போறாங்க...? மாலையும் விழலாம்... அடிபட்டு செத்துப் பிணமான பிறகு, யாராவது மாலை போடலாம்... அய்யோ போலீஸ் வருமோ... கண்டிக்கவா..? அல்ல... அல்ல... தண்டிக்க! தண்டிக்க! வேற வழி இல்லை... எங்கேயாவது ஓடிப் போகணும்... மனித சஞ்சாரமில்லாத மிருகங்கள் வாழும் காட்டைப் பார்த்து ஓடிப் போகணும். ஓடியே ஆகணும்..."
மெய்யப்பன் எழுந்தான். குளியலறைக்குப் போகப் போவதுபோல் துண்டை எடுத்தான். சத்யா வீட்டில் இன்னும் சத்தம் அடங்கவில்லை. சொல்லுக்கு சொல் போலீஸ் வருகிறது. வார்த்தைக்கு வார்த்தை பைத்தியக்காரன் என்ற பட்டம் கேட்கிறது. மெய்யப்பன் குளியலறைக்குப் போகவில்லை... அங்கு போய் மீண்டும் ரகளை வந்து, அந்த ரகளைக்கு சத்யா பலியாக வேண்டாம். எங்கேயாவது ஓடிப் போயிடலாம்... எனக்கு நிம்மதியோ... இல்லையோ... எல்லோருக்கும் நிம்மதி.
மெய்யப்பன், தான் வசித்த அறையை நோட்டமிட்டுக் கொண்டான். எதையாவது எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான். பிறகு, அந்த பீடை பிடித்த அறையில் உள்ள எதுவுமே வேண்டாம் என்பதுபோல்... கதவைத் திறக்கப் போனான்.
திடீரென்று போலீஸ்பயத்தால்,தன்மானத்தின் சாவால், சலனமில்லாததுபோல் இருந்த அவன் மனக் குட்டையில் விலாவில், ஒரு எருமை மாடு முட்டுவது போலிருந்து. சத்யாவின் கழுத்தை, அண்ணன் கடிக்கிறான். ரத்தம் பீறிடுகிறது. பீறிட்ட ரத்தம், அவன் சட்டையில் சிதறுகின்றது... காட்டுக்கு ஓடிப்போகிற அவனை... ஓநாய்கள் வளைத்துக் கொள்கின்றன. அவனைத் துண்டு துண்டாகக் கடிக்கின்றன. கூரை விழுகிறது... காலூன்றிய தரை பாதாளத்திற்குள் பாய்கிறது... கை கால்கள் துண்டித்து தனித் தனியாய் விழுகின்றன.
திடீரென்று, இன்னொரு எண்ணம் விமலா அவனைப் பார்க்கிறாள். கண் கலங்க, உதடுகள் துடிக்க,வாய் விம்ம... அவன் தலையை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறாள். கண்ணீரைத் துடைக்கிறாள். கழுத்தைக் கட்டி அழுகிறாள். "அய்யோ... ஒங்களுக்கா... இந்த கதி... இந்த கதி..." என்று ஓலமிடுகிறாள்.
மெய்யப்பன், மழையில் நனைந்த ஆடுபோல், கழுத்தை உதறிக் கொண்டான். 'மூடமனமே... மானங்கெட்ட நெஞ்சமே... இன்னுமா ஒனக்கு அந்த நெஞ்சமற்றவள் மேல் ஆசை... அதுவும்... பேராசை... பெரும் நஷ்டம்... ஒன்னை மானபங்கப்படுத்தப் போகிறேன் பார்... நான்... போலீசில் உதைபட்டு, நாய்போல இழுத்துக்கொண்டு போகப்படும் போது, நீ படும் அவஸ்தையை ரசிக்கப் போகிறேன் பார்..." மெய்யப்பன், தான்வேறு, மனம் வேறு என்று பிரிந்துணர்ந்தவன்போல், கட்டிலில் படுத்துக் கொண்டான். துப்பட்டியை எடுத்து, தலை முழுவதையும் மூடிக் கொண்டு, வெளியுலகைப் பார்க்க விரும்பாதவன்போல் படுத்துக் கொண்டான். உடம்பு கட்டையானது. உள்ளம் ஓய்வு பெற்றது.
திடீரென்று, ஒரு கனவு அல்லது பிரமை, மெஸ்காரர் வந்து, அவன் கடிகாரத்தைக் கழற்றப் பார்க்கிறார். அவன் திமிறுகிறான். கடைசியில், அவனுடைய முன் கையை வெட்டி, கடிகாரத்தோடு கொண்டு போகிறார். திடுக்கிட்டு விழித்த மெய்யப்பன், மேஜையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பகல் பதினொன்று. அன்று, மாதக் கடைசி என்பதும், சம்பள நாள் என்பதும் நினைவுக்கு வருகிறது. சம்பளத்தை வாங்கி, 'மெஸ்'கடனைத் தீர்க்கலாம். செத்த பிறகு, யாரும் ஈமக்கடன் செய்வார்களோ இல்லையோ... என் கடனைப் போக்கி விட்டுப் போகலாம்.
பறட்டைத் தலையுடன், மோவாயை மறைத்த தாடியுடன், முகம் மறைந்த மீசையுடன், கசங்கிய பேண்டோடு, புறப்பட்டான். பல் விளக்கவில்லையே என்பது நினைவுக்கு வரவில்லை. வயிறு என்று ஒன்று இருப்பதும் மறந்து போய்விட்டது.
வெளியே வந்தவன், தெருமுனையில் இரண்டு போலீஸ்காரர்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, பின் வாங்கப் பார்க்கிறான். அவர்கள் யதேச்சையாகப் பார்த்தபோது,உடம்பு ஆடியது... மெள்ள மெள்ள முன்னேறுகிறான்... அவர்கள் அவனைப் பார்ப்பதாகத் தெரியவில்லை... ஒருவேளை 'டக்'கென்று பிடிக்கப் போகிறார்களோ... பிடித்தாலும் நல்லதுதான்... அவர்களே... ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். விமலா வந்து... ஆஸ்பத்திரியில் பார்ப்பாளா... சீ... என்ன மனுஷன் நான்... அடேய்... மெய்யப்பா... இன்னும் உன்னை மனுஷன்னு நினைக்கிறியா... மெய்யப்பன்,விறைப்போடு நடந்தான். போலீஸ்காரர்கள், பிணத்துக்குக் காவல் இருப்பதுபோல், அந்தப் பக்கம் வரப்போகும் ஒரு தலைவரின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது புரியாமல், அவன் பாட்டுக்கு நடந்தான். யாரோ ஒருவரின் குடைக்கம்பி பட்டபோது, லத்திக் கம்போ என்று, மாடு போலத் துள்ளிக் குதித்தான். நல்லவேளை... போலீஸ் இல்லை. மேற்கொண்டும் கஷ்டம் வராததை இன்பமாக நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
அவன் அலுவலகம் வந்தபோது, உள்ளேயிருந்து, சத்யாவின் அண்ணன் வெளியே வந்தான். மெய்யப்பனைப் பார்த்து முறைத்துக் கொண்டான். பிறகு, ரத்தச் சிவப்பேறிய கண்களை உருட்டியடி, தலையை மேலுங்கீழுமாக ஆட்டிக் கொண்டு அகன்றான்.
மெய்யப்பன் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த அத்தனை சகாக்களும் அவனைக் குழப்பத்தோடு பார்த்தார்கள். விமலா, கனகத்தைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டாள். தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.
மெய்யப்பன்,இருக்கையில் உட்கார்ந்து, மேஜையில் குப்புறப்படுத்தான். பிறகு, அங்குமிங்குமாக நிமிர்ந்து, முன் கைகளை ஊன்றி, அவற்றில் மோவாயை வைத்துக் கொண்டான். "எப்போ... போர்ட் மீட்டிங்..." என்று பியூன் முனுசாமி வாணியிடம் கேட்டபோது, மெய்யப்பனுக்கு பர்ஸேஸ் ஸ்டேட்மெண்ட் நினைவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட ரசீதுகளைப் பார்த்து, ரிஜிஸ்டர்களுடன் ஒப்பிட்டு, ஸ்டேட்மெண்ட் தயாரிக்க வேண்டியது அவன் பொறுப்பு... பாதி தயாரித்து விட்டான். நன்றாக இருக்கும் போதே, பத்து நாள் வாங்கும் வேலை... பாதிதான் முடிந்திருக்கிறது... இன்றைக்குள் ஒரு பாதியை முடித்தாக வேண்டும்... முடியுமா? முடியுமா... முடியாதா என்பதல்ல கேள்வி... முடித்தாக வேண்டும்.
மெய்யப்பன், 'டிராவில்' வைத்த ரசீதுகளை வெளியே எடுத்தபோது, மானேஜர் ஏகத்தாளமாக அங்கே வந்தார். அவரின் இடுப்பின் இரண்டு பக்கமும் கைகள் அம்புக்குறி போல் பிணைந்து நின்றன. "ஏனய்யா... மெய்யப்பா... ஒனக்கு என்னய்யா... கேடு...”
மெய்யப்பன், கேடு பிடித்தவன்போல், அவரை ஏறிட்டுப் பார்த்தான். மானேஜர் கோபத்தோடு கத்தினார்."நீ... ஆபீஸ்லதான்... பித்துக்குளித்தனமாய் நடக்கிற.,. சகிச்சுக் கிட்டோம்... குடித்தனம் இருக்கிறவன் சகிப்பானா? எதுக்குய்யா... ராத்திரியில...அதுவும் எல்லோரும் தூங்கின பிறகு, பக்கத்து வீட்டுக்காரன் தங்கையைக் கூப்புடுறே...? சத்யா, சத்யான்னு கத்துனியாமே... ஒன் தங்கையைக் கூப்பிட்டால் சகிப்பியா... ஒன் பெண்டாட்டியைக் கூப்பிட்டால் சகிப்பியா..."
அலுவலக ஊழியர்கள் அனைவரும், மானேஜரின் வாயையே பார்த்தார்கள். பாஷ்யம் "லோகத்துல... இப்டியும் மனுஷாளா..." என்று அலுத்துக் கொண்டார். மானேஜர் எல்லோரையும் கம்பீரமாய் பார்த்துக் கொண்டே பேசினார்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்துட்டு ஒருவர் போனாரில்ல... அவருடைய துரதிருஷ்டம், இந்த மகாராஜாவோட இருப்பிடத்தில் இருக்கிறாராம். அவருக்கு ஒரு தங்கை வாழா வெட்டியாய் இருக்குதாம்... இந்த மைனர் நேற்று நைட்ல... அதுவும் பன்னிரெண்டு மணிக்கு... சத்யா... சத்யா...ன்னு கூப்புடுறாராம். இப்போ சொல்லுங்க. இவரு பைத்தியமா... இல்ல நம்மை பைத்தியமாய் ஆக்குறவரா? அந்த ஆள்... கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டுப் போறான்... நான் ஆக்ஷன் எடுக்காட்டால், போலீஸுக்குப் போகப் போறானாம். பார்த்திங்களா. நம்ம ஆளோட வேலையை..." எல்லோரும் மெய்யப்பனைப் பார்த்தார்கள். கடித உறைகளில் தபால் தலைகளை ஒட்டிக் கொண்டிருந்த பியூன் முனுசாமி, நம்ப முடியாதவன்போல், அந்த உறைகளை உதறிப் போட்டுவிட்டு, தலையைப் பிடித்தான். 'டைப்' அடித்துக் கொண்டிருந்த வாணி, ‘டைப்' அடிக்காமல், நிமிர்ந்தாள். விமலா தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.
குனிந்த தலை குனிந்தபடி இருக்க, கையில் இருந்த ரசீது புத்தகத்தையே வெறித்துப் பார்த்த மெய்யப்பன், அந்த ரசீது புத்தகத்தைக் கிழித்தான். அருகே இருந்த பத்துப் பதினைந்து ஸ்டேட்மெண்ட்களையும் எடுத்து, சுக்கல் சுக்கலாகக் கிழித்தான். பிறகு, இரண்டு கைகளையும் நீட்டி நீட்டி, மடக்கி மடக்கி, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். தன் தலையெழுத்து மோசமாக இருந்தால், அது, அடித்த அடியில் ஒழியட்டும் என்று... உள்ளே ஒன்றுமில்லாமல் போன தலை சுக்கல் சுக்கலாக ஒன்றுமில்லாமல் உடையட்டும் என்று. பெண் விவகாரத்தில் டிஸ்மிஸ் ஆகாமல், அலுவலகத் தவறுக்காக டிஸ்மிஸ் ஆகலாம் என்றா? இது அவனுக்கே தெரியாது.
பியூன் முனுசாமி மெய்யப்பனைப் போய் பிடித்துக் கொண்டான். முண்டியடித்து, கைகளைத் தூக்கப்போன மெய்யப்பனை, மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். வாணி, மெய்யப்பன் அருகே வந்துவிட்டாள். பாஷ்யம், நிதானமாக நடந்து வந்தார். விமலா, எதுவும் தெரியாதவள்போல், வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஓரக்கண்ணை மட்டும் அந்தப் பக்கமாக விட்டு வைத்தாள். மானேஜர், மெய்யப்பன் கிழித்துப் போட்ட காகிதக் கத்தைகளைப் பொறுக்கி, லேசாகப் படித்துப் பார்த்துவிட்டு, முகத்தில் மட்டுமே உயிர் இருப்பதுபோல் அதைத் துடிப்பாக வைத்துக்கொண்டு, உடம்பின் இதர பகுதி முண்டமானதுபோல், அவனையே பார்த்தார். பிறகு, வெறியன்போல் கத்தினார். "அட பாவி...போர்ட் மீட்டிங்ல வைக்க வேண்டிய ஸ்டேட்மெண்ட்களையா கிழிச்சுப் போட்டே...? ஒன் சீட்டை... நான் கிழிக்கேனா...இல்லையா பாரு... நீ. காரியப் பைத்தியம். ஆபீஸையே பைத்தியமாக்க நினைக்கிறவன்... ஒன்கிட்ட என்ன பேச்சு... எல்லாம் இந்த வாணியால வந்த வினை...ஒனக்கு 'மெமோ' கொடுக்க நினைத்த போதெல்லாம், இந்தப் புண்ணியவதி தடுத்தாள். இல்லன்னா... எப்பவோ... ஒன்னை விரட்டியிருப்பேன்... இனிமேல் நான் யார் பேச்சையும் கேட்கப் போறதில்ல... வாணி, நோட்ஸ் புக்கை எடுத்துட்டு வா... இப்பவே டிக்டேஷன் கொடுக்கேன்... இங்கேயே எடு... மிஸ்டர் மெய்யப்பன் இஸ் அண்டர் சஸ்பென்ஷன் அஸ்... என்ன வாணி ஏன் அப்டி பார்க்கிறே? நோட்ஸை எடு, ஐ ஸே... டேக் டவுன் ஐ ஸே..."
வாணி, மானேஜரை உறுதியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
"என்ன யோசிக்கிற..."
"ஒண்ணுமில்ல ஸார்... முன்னப் பின்ன யோசிக்காமல் நானே நடந்துகிட்ட விஷயத்தைப் பற்றி யோசிக்கிறேன்..."
"பாட்டி கதை வேண்டாம். டேக் டவுன் ஐ ஸே..."
“ஸாரி... ஸார்...என்னால முடியாது."
"வாட் யூ மீன்... இப்போ நான் மானேஜர்... நீ ஸ்டேனோ... சொல்றதை எழுத வேண்டியது ஒன் வேலை..."
"சொல்றதை மட்டும் எழுதுறவளாய்...என்னை நீங்க நடத்தியிருந்தால்... நான் இப்படி பேசமாட்டேன் ஸார்..."
'இது ஆபீஸ். பெர்ஸனல் சமாச்சாரம் எதுவாக இருந்தாலும், அப்புறமாய் என் ரூம்ல வந்து பேசு..."
"அதே கேள்வியைத்தான் ஸார் நானும் கேக்கிறேன். மிஸ்டர் மெய்யப்பன் எந்தப் பெண்ணையாவது கூப்பிட்டிருந்தால், அது அவரோட பெர்ஸனல் சமாச்சாரம் அவரை... ஒங்க ரூம்ல கூப்பிட்டு...தனியாய் கேட்டிருக்கணும்... அவரு தப்பு செய்திருந்தால், நடவடிக்கைகூட எடுத் திருக்கலாம். அதை விட்டுவிட்டு, ஒரு மனிதரை நாலுபேர் முன்னால அவமானப் படுத்திட்டிங்க... அதனால... அவர் என்ன செய்றோமுன்னு தெரியாமல் ஸ்டேட் மெண்ட்களை மட்டும் கிழிச்சதுக்கு நீங்க அவருக்கு நன்றி சொல்லணும்..."
"டோண்ட் டாக் நான்ஸென்ஸ்... நீ இப்போ ஸ்டெனோ... மறந்துடாதே..."
"இல்ல ஸார்... நான் வாணி ...என் தம்பி மெய்யப்பனை, இந்த நிலைக்கு கொண்டுவரக் காரணமானவர்கள்ல ஒருத்தி என்னால... டிக்டேஷன் எடுக்க முடியாது..."
'அவனுக்குப் பிடித்த பைத்தியம்...ஒனக்கும் பிடித்துட்டுன்னு நினைக்கேன். ஆல்ரைட்... மிஸ். விமலா, கொஞ்சம் வந்து டிக்டேஷன் எடுக்கிறீங்களா..?"
விமலா லேசாகத் தயங்கினாள். பிறகு, 'டைப்பிஸ்டில்' இருந்து, 'ஸ்டெனோ' புரமோஷன் கிடைத்தாலும் கிடைக்கலாம் - என்று நினைத்தாளோ அல்லது அதிகாரி சொல்வதற்கு உடனடியாகக் கீழ்ப்படியவேண்டும் என்று நினைத்தாளோ தெரியவில்லை, குறிப்புப் புத்தகத்தை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஓடி வந்தாள். பியூன் முனுசாமியின் முகத்தை அவள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், பாதி வழியிலேயே நின்றிருப்பாளோ என்னவோ... நாகப் பாம்புபோல், தலை முடி சிலிர்க்க, நெளிந்து கொண்டே நடந்து வந்தாள். மெய்யப்பன் இன்னும் முனுசாமியின் மார்புக்குள் அடைக்கலமாகக் கிடந்தான்.
மானேஜர், 'மிஸ்டர் மெய்.' என்று சொல்லும்போதே, பியூன் முனுசாமி, மெய்யப்பனை விட்டுவிட்டு, மானேஜர் முன்னால் வந்து நின்றான். வாணி, மெய்யப்பனை, மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவனோ, செத்துப் போன விழிகளோடு, சவமாய்போன உடம்போடு, ஆடாமல் அசையாமல் அன்னையின் மார்பிலே அடைக்கலமான குழந்தைபோல முடங்கிக் கிடந்தான். பியூன் முனுசாமி கர்ஜித்தான்.
"ஸார்... இந்த ஆபீஸ்ல, நான் உட்பட...நீங்க உட்பட யாருமே யோக்கியமில்ல... அவரு ஸ்டேட்மெண்டைத் தான் கிழிச்சாரு... அந்த ஸ்டேட்மெண்ட்டுக்குள்ள எவ்வளவு 'பிராடு' உண்டுங்கறது... எல்லோருக்கும் தெரியும். இப்டி சொல்றது என் வேலையில்ல... ஆனால், என்ன செய்யுறது? ஒவ்வொருவரும் தங்களோட வேலைய மட்டும் செய்தால், நான் இதைச் சொல்லியிருக்க மாட்டேன்..."
"என்னையா பண்ணுவே?” என்றார் மானேஜர்.
முனுசாமி சாவகாசமாகச் சொன்னான்: "என்னை டிஸ்மிஸ் செய்யு முன்னால... மெய்யப்பன் ஸார...டிஸ்மிஸ் செய்ய முடியாது. டிஸ்மிஸ் ஆக நினைக்கிறவன், அதுக்காக, கையைக் காலைக்கூட முறிப்பான். அதிகாரத்தைக் காட்டி அபலைப் பெண்கள் கைகாலைப் பிடித்து மடக்கிற வங்களோட தலையை முறிக்கிறதுலயும் தப்பில்ல..."
மானேஜர் அவனை ஓரக் கண்ணால் பார்த்தார். இயல்பான உயிர்ப்பயம் அவரை உலுக்கியது. குரலில் அஹிம்சை பளிச்சிட்டது. "என்ன முனுசாமி... விஷயம் தெரியாமப் பேசுற...ஸ்டேட்மெண்ட் முழுசையும் கிழிச்சிட்டான்...போர்ட் மீட்டிங்கில பதில் சொல்ல வேண்டியது நீயா..? நானா?”
வாணி, மானேஜரை நிமிர்ந்து பார்க்காமல், மெய்யப்பனைப் பிடித்திருப்பதை விடாமல், பொதுப் படையாகப் பேசுவதுபோல், பேசினாள்.
"போர்ட் மீட்டிங் நடக்க இன்னும் இரண்டு நாள் இருக்கு... எல்லா ஸ்டேட்மெண்டையும் நான் அடிச்சுக் கொடுத்துடுறேன்..." பிடுங்கித் தின்னும் அவமானத்துடன், மானேஜர் பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டார்: "அம்மா, எவ்வளவு நாளாய் பரோபகாரியாய் மாறுனிங்க?"
"பரோபகாரியாய் இருந்தவன் பைத்திய நிலைக்கு வந்த போது, பைத்தியமாய் நடந்துகிட்ட நான் பரோபகாரியாய் மாறிட்டேன். அவனுக்கே இதுன்னால், மற்றவங்களுக்கு என்ன கூலியோ..?”
"ஷட் அப்."
"சரிதான் போங்க ஸார்...இனிமேல்... தரக்குறைவாய் நடந்து கிட்டாலோ..., இல்ல பேசினாலோ.... நான் ஷட் அப்னு நாகரிகமாய் பேசமாட்டேன்... ஞாபகம் இருக்கட்டும்..."
மானேஜர் சுயமரியாதை உணர்வுக்கும், அவமரியாதை உணர்வுக்கும் இடையே அல்லாடியபோது, பாஷ்யம் பல்குழையப் பேசினார். 'எதுக்கு வீண் வம்பு... லோகத்துல... ஒருத்தனோட கெட்ட நேரம்... அவனுக்கு உபகாரம் செய்ற வாளுக்கும் வரும். அதனால... அவனை வச்சிருக்கதும் தப்பு... வைக்காமல் விடுறதும் தப்பு...நான் என்ன சொல்றேன்னா. பேசாம... மிஸ்டர் மெய்யப்பனை ஒரு மாதம் கம்பெல்ஸரி லீவ்ல அனுப்புவோம்... அப்புறம் பார்த்துக்கலாம்... இதனால பாம்பும் சாகாது, பாம்படித்த கம்பும் நோகாது பாருங்கோ..."
மானேஜர், பாஷ்யம் சொல்வதை, அங்கீகரிப்பதுபோல், மெளனமாக நின்றார். பிறகு, "வாணி... ஐ அம் ஸாரி... மிஸ் விமலா... என் ரூமுக்கு வாங்க. கம்பெல்ஸரி லீவுக்கு ஒரு டிக்டேஷன் கொடுக்கிறேன். வாரீங்களா..?" என்றார்.
மானேஜர், அவமானத்தை மறைக்க விரும்புபவர் போல், அவசர அவசரமாக அறைக்குள் போனார். அவர் போன ஐந்து நிமிஷத்திற்குள் மிஸ். விமலாவும் நோட்ஸ் புத்தகமும் கையுமாக உள்ளே போனாள்.
அரைமணி நேரத்திற்குள், மெய்யப்பனைக் கம்பெல்ஸரி லீவில் அனுப்பும் 'மெமோ' டைப் அடிக்கப்பட்டு, அவனிடம் கொடுக்கப்பட்டது. மெய்யப்பன், அதை வாங்கி, கிழிக்கப் போனான். முனுசாமி தடுத்துவிட்டான். இருக்கையில் இருந்தபடியே, விமலாவுடன் கடற்கரைக்கும், கிராமத்துப் பள்ளிக் கூடத்திற்கும், அரசியல் மேடைகளுக்கும் இப்படி எங்கெல்லாமோ போய்க் கொண்டிருந்த மெய்யப்பன் கையில், பாஷ்யம் சம்பளத்தைக் கொடுத்தார். அவன் அதை எண்ணாமலே, பைக்குள் வைத்துக் கொண்டான்.
பியூன் முனுசாமி அவனைச் செல்லமாக அதட்டினான். "வா ஸார்... ஒரு ஆட்டோவுல கொண்டு போய் விடுறேன்...எய்ந்திரு ஸார். ஏன் ஸார் கலங்குறே... இன்னா ஸார் நடந்துட்டு. நீ லீவ்லதான் போறே... நீ நல்லபடியாய் மாறி, பழையபடி வரத்தான் போற... அப்போ ஒரு சிலர், லீவ் போடவேண்டிய அவசியம் இல்லாமல், ஒரேயடியாய் போயிடுவாங்க... நட ஸார்...நிமிர்ந்து நட ஸார்...ஒரு பாவமும் செய்யாத பைத்தியமாக்கப்பட்ட ஒனக்கே இந்த நிலமைன்னா... ஒன்னை பைத்தியமாக்கினவங்களுக்கு என்ன நிலையோ... ஒன்னை நம்பக்கூடாது ஸார். அப்போகூட, நீ அவங்களுக்கு உதவுவே. நட ஸார்... அட அழுவுறதப் பாரு... ஒன்னோட ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், சிலருக்கு ஒவ்வொரு துளி ரத்தமாய் வரப்போவுது ...என்ன யாருக்கும் சாபம் போடாண்டாமா... சரி போடல. நீ இப்போ நடந்தியான்னா. சாபம் கொடுக்கல... உம், அப்படித்தான் நடக்கணும்..."
பாஷ்யம் குறுக்கிட்டார். 'டேய் முனி... அவரை அழக்கூடாதுன்னுட்டு, நீ... ஏண்டா அழுவுறே...?"
முனுசாமியும், மெய்யப்பனும் போவதைப் பார்த்துக் கொண்டே நின்ற வாணி, கண்ணீர் விடாமல், சத்தம் போடாமல், முட்டாமல், மோதாமல், தனக்குள்ளே அழுதாள். முனுசாமி, விமலாவுக்குத்தான் சாபம் கொடுத்தான் என்றாலும், சாபம் என்பது, அவனைப்போல் வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காது என்பதைப் உணர்ந்தவள்போல், தனக்குள்ளே மருகினாள். நல்லவர்களின் சாபம் என்பது, தர்மத்தின் கோபமாயிற்றே. வாணி, தனக்குள்ளே புலம்பினாள். 'முனுசாமி, என் சம்பளத்துல பாதி வாங்குறவன் நீ... என் பிள்ளைங்களை மாதிரி, ரெண்டு மடங்கு அதிகப் பிள்ளை குட்டிக்காரன். ஆனாலும், ஒன்னால நிமிர்ந்து நிற்கமுடியுது...சத்தியத்தைப் பற்றிப் பேச முடியுது. ஆனால், நான்...போலித்தனமான வாழ்க்கைக்காக, புனிதத்தையே போலியாக்கிட்டேன். ஒன்னை மாதிரி, என்னால சத்தியத்தைப் பற்றிப் பேச முடியலியே... நிமிர்ந்துகூட பார்க்க முடியலியே... சத்தியத்தைப் பேசக்கூட வேண்டாம்... பேசுற வார்த்தையைக் கேட்ககூட யோக்கியதை இல்லாமல் போயிட்டேனே... ஒரேயடியாய் போயிட்டேனே...'
