வேங்கடம் முதல் குமரி வரை 1/001-027

விக்கிமூலம் இலிருந்து

வேங்கடம் முதல் குமரி வரை
- பாலாற்றின் மருங்கிலே -
1. வடவேங்கடவன்

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை, இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு

ஆனந்த நிலைய விமானம்

உயர்ந்த மலை அல்ல. சின்னஞ் சிறிய மலைதான். அந்த மலைமீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை மக்களுக்கு, கேட்கும் வரத்தையெல்லாம் அளிக்க வல்லது என்று.

ஆதலால் வாழ்க்கையில் இந்த ஊனுடம்பில் ஏற்பட்ட குறை காரணமாகத் துயருறுகிறவர்கள் நால்வர் மலை ஏறுகிறார்கள். இவர்களைப் போல், உடம்பில் குறை இல்லா விட்டாலும், உள்ளத்தில் குறையுடையவர்கள் பலரும் மலை ஏறுகிறார்கள்.

திடீரென்று ஒர் அதிசயம் நிகழ்கிறது அங்கே கூனிக் குறுகிக் கோலூன்றி நடந்தவன், கூன் நிமிர்ந்து ஓடவே தொடங்கி விடுகிறான். குருடன் கண்கள் திறந்து விடுகின்றன. அவன் கண்கள் ஒளி பெற்று நிமிர்ந்து வளைந்திருக்கும் கொம்பொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூட்டைப் பார்த்து, ‘அதோ தேன், அதோ தேன்!’ என்று மற்றவர்களுக்குக் காட்டுகிறான்.

அதுவரை நொண்டியாய் முடமாய்த்தட்டுத் தடுமாறி மலை ஏறிய முடவனோ, குருடன் காட்டிய தேன் கூட்டை எடுக்க, மரத்தின் மேலேயே ஏற ஆரம்பித்து விடுகிறான். அவ்வளவுதான். அதுவரை வாய் பேசாது ஊமையாய்ப் பக்கத்தில் சென்றவனோ, ‘எடுக்கும் தேனில் எனக்குக் கொஞ்சம்!’ என்றே வாய்விட்டுக் கேட்கிறான்.

இப்படியே கூணன், குருடன், முடவன், ஊமையாக இருந்த நால்வரும் தங்கள் தங்கள் குறை நீங்கியவர்களாய் ஓடுகிறார்கள், மலைமேல் நிற்கும் மாதவனின் திருவடிகளில் சென்று வீழ்ந்து வணங்கி எழுவதற்கு.

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒரு கவிஞர். அவரும் மலை ஏறுகிறவர்களில் ஒருவர்தான். அவர் உள்ளத்திலும் ஏதோ குறை. அதற்குப் பிரார்த்தனை செய்து கொண்டே ஏறுகிறார் மலை மேலே. அவருக்கு அந்த நிகழ்ச்சியை, அந்த அற்புதத்தைக் கண்டு ஒரே வியப்பு. வியப்பை விட மலை மேல் இருக்கும் மாதவனிடத்திலேயே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலே பிறக்கிறது, ஒரு பாட்டு. பாட்டு இதுதான்:

கூன் கொண்டு சென்றவன்கூன்நிமிர்ந்து ஓட,
குருடன் கொம்பில்
தேன் என்று காட்ட, முடவன் அத்தேனை
எடுக்க, அயல்

தானின்ற ஊமை எனக்கென்று கேட்க
தருவன் வரம்
வான் நின்ற சோலை வடமலைமேல் நின்ற
மாதவனே.

‘இத்தனையும் இப்படியே நடந்ததா? அதற்கு ஆதார பூர்வமான சான்று உண்டா?' என்று ஆராய வேண்டுவதில்லை. பத்தனாகிய கவிஞன் பாடிப் பல நூறாண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும், மக்கள் உள்ளத்திலே, அதே அசையாத நம்பிக்கை இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

இன்றும் நாள் நக்ஷத்திரம் என்று ஒன்றும் பார்க்காமலேயே தினசரி நூற்றுக் கணக்கான மக்கள் நடந்தோ அல்லது காரிலோ

கோபுர வாயில்

பஸ்ஸிலோ சவாரி பண்ணியோ திருமலை சென்று சேர்கிறார்கள். பணம் படைத்தவர்கள் எல்லாம் நிறையக் கட்டணம் செலுத்தி மலை மேல் நிற்கும் மாதவனைச் சேவிக்கிறார்கள்.

ஏழைகளும் 'கியூ' வரிசையிலே, மணிக் கணக்காக நின்று, நகர்ந்து, கர்ப்பகிருஹத்தில் நுழைந்து வேங்கடேசுவரனைத் தரிசிக்கிறார்கள். இத்துடன் அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டபடி பணமாக, நோட்டாக, நகையாக எல்லாம் அந்தக் கோயிலில் வைத்திருக்கும் பெரிய உண்டியலில் போட்டுவிட்டு, உண்டியலைச் சுற்றிவந்து நமஸ்கரித்து விட்டு, வீடு திரும்புகிறார்கள். உண்டியலில் சேர்வது மாதம் இருபது லட்சம் என்கிறார்கள்; முப்பது லட்சம் என்கிறார்கள்.

மக்களது இத்தனை நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பவன்தான், திருப்பதியில் அந்தத் திருமலை மேல் நிற்கும் திருவேங்கடமுடையான். 'வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்' என்று பண்டைத் தமிழர்கள் எல்லை கட்டினார்களே, அந்தத் தமிழ் நாட்டின் வடஎல்லையில் வானுற ஓங்கி வளர்ந்த வட மாலவன் குன்றத்தின் மீதே, வான் நோக்கி நிமிர்ந்து நிற்கிறான் அவன்.

'கடன் வாங்கிக் கல்யாணம்' என்று ஒரு படம். படத்தில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் படத்தின் பெயருக்கும் பொருத்தம் இல்லை என்கிறார்கள் பார்த்தவர்கள், ஆனால் தமிழ் நாட்டில் கடன் வாங்கிக் கல்யாணம் பண்ணி, அந்தக் கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிற பெருமகன் ஒருவர் உண்டென்றால், அவர் திருப்பதி வேங்கடாசலபதிதான். கதை இதுதான்:

வைகுண்டவாசனாக இருந்த மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாக்ஷனை சம்ஹரித்துப் பூதேவியை அவனுடைய பிடியிலிருந்து மீட்டவர் வைகுண்டத்துக்குத் திரும்பாமல் இப் பூவுலகிலேயே நிலைத்து விடுகிறார். ஸ்ரீதேவியும் இப் பூவுலகிலே ஒரு தாமரை மலரிலே குழந்தையாக அவதரிக்கிறாள்.

குழந்தையை ஆகாசராஜன் எடுத்துப் பத்மாவதி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். நாராயண வனத்திலே பத்மாவதி தேவியும், அந்த நாராயணனையே கணவனாக அடையத் தவமிருக்கிறாள். வேங்கடவனாக மலைமேல் நிலைத்து நின்ற நாராயணன், வகுளமாலிகையைத் தூதனுப்பி, பத்மாவதியை மணம் பேசித் திருமணம் செய்து கொள்ள முனைகிறார். கல்யாணச் செலவுக்குப் பணம் வேண்டுமே. அதற்காகக் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொன் கடன் வாங்குகிறார். இந்தக் கடனுக்கு வருஷந்தோறும் வட்டி கட்டுவதாகவும், கலியுக முடிவில் அசலைக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு பத்திரம் வேறே எழுதிக் கொடுக்கிறார். கடன் பத்திரத்தில் சங்கரனும், பிரம்மாவும் சாக்ஷிக் கையொப்பம் இடுகின்றனர்,

இப்படிக் கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு கல்யாணம் 'ஜாம் ஜாம்' என்று நடக்கிறது. கடன்தான் இன்னும் அடைத்தபாடாக இல்லை. அதற்காகவே வேங்கடேசன் இன்னும் பக்தர்களிடம் பிரார்த்தனை மூலம் வாங்கிக் கொண்டிருக்கிறார். வட்டிக்கு வட்டி வாங்கும் வட்டிக் காசுப் பெருமாள் என்ற பெயர் வாங்கியும், வட்டியையும் முதலையும் குபேரனுக்குக் கொடுக்காமலேயே 'மொங்கான்' வைக்கிறார் ஆசாமி. ஒரே ஒரு திருப்தி. வருகிற பணம் முழுவதையும் பள்ளிக்கூடம், கலாசாலை, ஆஸ்பத்திரி, அநாதை ஆசிரமம் என்று தானம் வழங்கி விடுகிறார். குபேரனது கடன் தீராவிட்டால், குபேரனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது?

இந்தப் பெருமாளைப் பற்றி மக்கள் பேசிக் கொள்ளும் கதைகளோ அனந்தம். ஸ்ரீ வேங்கடேசனோ திருமலை மீது நிற்கிறார். அங்கு அவர் பக்கத்திலோ துணைவி இருக்கவில்லை. அந்த அலர்மேல் மங்கையோ மலை அடிவாரத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள திருச்சானூரில் குடியிருக்கிறாள்.

இப்படி இவர்கள் பிரிந்திருப்பானேன்? அது தெரியாதா? . மணப் பெண்ணான அலர்மேல் மங்கை கணவன் வீட்டுக்கு வரும்போது நிறைந்த ஸ்ரீதனம் எல்லாம் கொண்டு வந்திருக்கிறாள். அவள் கொண்டு வராத பண்ட பாத்திரமோ, தட்டு முட்டோ இல்லை. என்றாலும் ஒரே ஒரு பொருள் - மிகவும் அற்பமானதுதான் - அதுதான் கருவேப்பிலைக் கொத்து ஒன்று கொண்டு வர மறந்துவிட்டாளாம். அதற்காக மணமகன் அவளைவிரட்டி அடித்து விட்டார். அவளும் வீம்பு குறையாமல் தன் பிறந்தகத்துக்கு வந்து அன்று தங்கியவள்தான். புருஷன் வீட்டுக்குத் திரும்பவே இல்லை.

ஆனால் புருஷனுடைய வீராப்பு எத்தனை நாளைக்கு? இப்போதோ ஒவ்வொரு இரவிலும் ஆசாமி மலையிலிருந்து இறங்கி, மனைவியின் மனைக்கே நடக்கிறார். விடிவதற்குள் திரும்பியும் விடுகிறார். யதாஸ்தானத்துக்கு. மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு தேய்கிறது.

இப்படி யெல்லாம் பக்தர்கள், அதிலும் பெண்மணிகள் எல்லாம் பேசிக் கொள்வது நம் காதில் விழும் - திருப்பதி திருமலை செல்லும் வழியில். ஆனால் இப்படி இவர்கள் மலை மேல் ஒருவரும், நிலத்தில் ஒருவருமாகத் தனித்திருப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது, எனக்கு. வேங்கடவனுக்கும் அலர்மேல் மங்கைக்கும் ஒரு போட்டி. பக்தர்களுக்கு அருள் புரிவதிலே அப்பனை விட, அன்னை அருள் மிகுந்தவளல்லவா? ஆதலால், அவள் அவசரம் அவசரமாக இறங்கி ஓடி வந்து பக்தர்களை எதிர்கொண்டு அருள்புரிவதிலே முந்திக் கொள்கிறாள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.

இந்தத் திருவேங்கடமுடையானது திருப்பதி இன்று மூன்று பிரிவாக இருக்கிறது. அலர்மேல்மங்கைத் தாயார் கோயில் கொண்டிருக்கும் திருச்சானூர்; கோவிந்தராஜன் திருக்கோயில் இருக்கும் கீழைத் திருப்பதி; வேங்கடவன் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கும் திருமலை.

ரயிலிலோ, காரிலோ போகிறவர்கள் எல்லாம் ஒன்று சேர்வது கீழைத் திருப்பதியில்தான். இங்குதான் ராமாநுஜரால் நிர்மாணிக்கப்பட்ட கோவிந்த ராஜன் கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றியே திருப்பதி நகரம். தேவஸ்தானத்தார் நடத்தும் கீழ்த்திசைக் கல்லூரி, சர்வ கலாசாலை, பெண்கள் பள்ளிக்கூடம், அநாத சரணாலயம் எல்லாம் இருப்பது இங்கேதான். வேங்கடேசுவர விசுவ வித்யாலயம், பாலிடெக்னிக் தொழிற் கல்விச்சாலை, யாத்திரீகர் தங்கப் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன.

இங்கிருந்து தென் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் திருச்சானூர். அங்குள்ள பத்மசரோவரம் என்ற குளத்தில் மலர்ந்த தாமரையிலேதான் பத்மாவதித் தாயார் தோன்றியிருக்கிறாள். குளத்துக்குக் கிழக்கே கோயில்.

இனி வேங்கட வாணனைத் தரிசிக்க மலை ஏறலாம். காலிலே வலுவுள்ளவர்கள், ஏழு மலை ஏறி, ஏழுமைல் நடந்து ஏழுமலையானிடம் ஒன்று சேரலாம். கால் கடுக்க நடக்க இயலாதவர்களுக்கு பஸ் வசதி செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் 'ஜம்' என்று காரிலேயே பதினோரு மைல் தூரத்தில் ஏழுமலையையுமே கடந்து விடலாம்.

இந்தத் திருமலைத் தொடருக்கு சேஷாசலம் என்று பெயர். கீழே இருந்து பார்த்தால் இம் மலைத் தொடர் உடலை வளைத்துப் படுத்துக் கிடக்கிற பாம்பு போலவே இருக்கும். இப்படி எல்லாம் ‘வான்கலந்த வண்ணன் வரை யை'க் கடந்து சென்றால், 'தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்' வந்து சேருவோம். மலை ஏறியதும், சுவாமி புஷ்கரணியில் ஒரு முழுக்குப் போட்டு, அக்குளத்தின் மேல் கரையில் உள்ள வராக மூர்த்தியைத் தரிசித்து விட வேண்டும். உருவிலே சிறிய மூர்த்தி என்றாலும், இவர்தானே ஆதி மூர்த்தி.

இனி, கோயிலுக்குள் போகலாம். கோயில் மற்றையத் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கோயிலின் தலைவாயிலைப் படிக்காவலி என்கிறார்கள். அந்த வாயிலை ஒரு கோபுரம் அணி செய்கிறது. இந்த வாயிலில் நுழைந்து முதற் பிராகாரத்தையும் கடந்தால் வெள்ளி வாயில் (வெண்டி வாகிலி). அதனுள் நுழைந்தால் விமானப் பிரதக்ஷிணம். இங்கு எங்கே திரும்பினாலும் ஒரே தங்கமயம். பங்காரு பாவி என்னும் தங்கக் கிணறு இருப்பது இங்கேதான். இந்தப் பிராகாரத்தைச் சுற்றினால் கர்ப்பகிருஹத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஆனந்த நிலைய விமானம். ஒரே ஜோதிமயம். இரவிலும் பகலிலும். இந்தப் பொன் போர்த்த விமானத்தைப் பதுப்பிக்க முப்பத்திரண்டு லட்சம் ரூபாய் செலவாம்.

இந்தத் தங்க விமான தரிசனம் செய்த பின், தங்க வாயிலைக் (பங்காரு வாகிலி} கடந்தால் கர்ப்ப கிருஹம் வந்து சேரலாம். இந்தத் தங்க வாயிலில் இரண்டு தங்கமயமான துவார பாலகர்கள், தங்கச் சட்டங்களுக்குள்ளே நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் கண் திறந்து பார்த்துவிடக் கூடாதே என்று கண்களை மறைத்து ஒரே பட்டையான திரு நாமம். இவர்கள் அனுமதி பெற்றே உள்ளே நுழைய வேண்டும்.

ஆம்! இந்த 'வேங்கடத்து மேவிய வேத நல்விளக்கை'க் கண்டு தொழ எவ்வளவோ வசதி. கட்டணங் கட்டிச் சேவை செய்கிறவர்களுக்குச் சலுகை அதிகம்தான். தரும தரிசனக்காரர்கள் எல்லாம் 'கியூ' வரிசையிலே காத்து நின்றுதான் வேங்கடவனைக் காண வேண்டும்.

தரிசனத்திலே (ஆம், பிரசாதத்தில் அல்ல) கண்ணாயிருப்பவர்கள், ஒரு வியாழன் மாலை திருமலை சென்று இரவு ஏழு மணிக்கு இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று மலரால் அணி. செய்தி ருக்கும் வேங்கடவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழலாம். அன்றுதான் கண்களை

புஷ்கரணி - வராகர் கோயில்

மறைத்து எப்போதும் இட்டிருக்கும் நாமத்தை அகற்றி விட்டு, மெல்லியதான நாமம் ஒன்றை கொண்டு, அவனுமே கண் திறந்து குளிர்ந்த நோக்கோடு நம்மை அருள்பாலிப்டான்.

இதே பூலங்கி தரிசனத்தை விரும்பினால் மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலையிலும், சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி எல்லாம் முடியும்வரை திகுமாமணி மண்டபத்தில் காத்திருந்து, பின்னர் உள்ளே சென்று காணலாம் - வசதி படைத்தவர் மட்டும்.

கலை ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் பூலங்கி சேவை, அல்லது தோமாலை சேவையினால் எல்லாம் திருப்தி அடைய முடியாது. அணியும் பணியும் இல்லாமல், வேங்கடவனை அவனிருக்கும் வண்ணத்திலே கண்டு தொழ, வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்குத் திரும்பவும் செல்ல வேணும். அன்றுதான் பணம் படைத்த பக்தர்கள் நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் கட்டணங்கள் கட்டி, கர்ப்பூரக் கிண்ணி, கஸ்தூரிக் கிண்ணி என்றெல்லாம் ஏற்பாடுகள் செய்து திருமஞ்சனம் ஆட்டுவார்கள்.

அந்தப் பக்தர்கள் தயவால், அவர்களைச் சேர்ந்தவர்களில் ஒருவராய் உள்நுழைந்து விட்டால், எம்பெருமான் திருக்கோலத்தைக் கண்குளிரக் காணலாம். வக்ஷ ஸ்தலத்தில் ஸ்ரீதேவியை வைத்திருக்கும் அந்த ஸ்ரீனிவாசப் பெருமாளைப் பாதாதி கேச பர்யந்தம், ஏன். கேசபர்யந்தம்? கேசத்துக்கும் மேலே நீண்டுயர்ந்திருக்கும் மணிமகுட பர்யந்தம் கண்டு தரிசிக்கலாம். அன்று இளங்கோ பாடினாரே,

"பகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடுமால் நின்ற வண்ணம்"

என்று, அந்த வண்ணத் திருவுருவையே கண்டு தொழலாம். அழகினால் உயர்ந்துள்ள பெருமாள் திருவுருவங்கள் பல பார்த்திருப்போம், நாம். ஆனால், இந்த வேங்கடவனது திரு உருவில் இருக்கும் காம்பீர்யம் அலாதியாக இருக்கிறது.

பல்லவர் காலத்து விஷ்ணு சிலைகளில் உள்ள உத்தரீயம் இல்லை. நில உலகிலே வேங்கடவாணனுக்கு இருக்கின்ற பெருமையோடு கலை உலகிலும் வேங்கடவனாகவே (அழிவற்றஐசுவர்யம் உடையவனாகவே) இருக்கிறான் இவன்.

தெய்வத் திருமலை வாழ் வேங்கடவன் ரிக் வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறான் என்பர், திருமந்திரம் பாடிய திருமூலரும், திருவந்தாதி பாடிய கபிலதேவ நாயனாருமே இந்த வேங்கடத்து மேயானைப் பாடி இருக்கிறார்கள். தொண்டர் அடிப்பொடியைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள்.

தொண்டைமான் சக்ரவர்த்திதான் இந்தக் கோயிலை எடுப்பித்தவர் என்று வேங்கடாசல மாகாத்மியம் கூறும். பல்லவர், சோழர், பாண்டியர், யாதவர் முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விஸ்தரித்திருக்கிறார்கள் என்றாலும், விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகி இருக்கிறது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்கதேவனே விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்திருக்கிறான். கிருஷ்ண தேவராயனும் அச்சுததேவராயனும் பலதுறைகளில் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த வேங்கடவனைப் பற்றி ஒரு பெரிய விவாதம். இந்த மூர்த்தி முருகனே, பின்னர்தான் ராமானுஜர் அந்த மூர்த்தியைச் சங்கு சக்கரம் ஏந்த வைத்து ஸ்ரீனிவாசனாக மாற்றி விட்டார் என்பர் ஒரு சாரார். ஆதி முதலே அவன் ஸ்ரீனிவாசனே என்று அறுதி இட்டு உரைப்பார்கள் மற்றவர்கள்.

இது வேண்டாத விவாதம். தமிழ் நாட்டில் சைவ வைணவ வேற்றுமைகள் ஒரு காலத்தில் தலை தூக்கி நின்றிருந்தாலும், அந்த வேற்றுமைகளை யெல்லாம் மறக்கத் தெரிந்தவர்கள் தமிழ் மக்கள். 'உணர்வார் பார் உன்னுருவம் தன்னை ?' என்று முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கை யாழ்வார் மயக்கினாலும், பேயாழ்வாரோ,

தாழ் சடையும், நீள் முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழ்அரவும், பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இயைந்து

என்று முடிவு கட்டிச் சைவ வைஷ்ணவ ஒற்றுமையை நிலவச் செய்து வருகிறார். இது போதாதா, விவாதத்துக்கு முற்றுப் புள்ளிவைக்க?