வேங்கடம் முதல் குமரி வரை 5/009-019

விக்கிமூலம் இலிருந்து
9. தமிழ் நாட்டின் அஜந்தா

ரு நாள் காலை நேரம். நானும் சில நண்பர்களும் கன்னியா குமரியிலிருந்து திருவனந்தபுரத்துக்குப் பயணம் புறப்பட்டோம், நாற்பது ஐம்பது மைல் மேடு பள்ளங்களின் வழியாக. எல்லாம் நல்ல 'சிமண்ட்' சாலை போடப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் காரில் போவதே ஒரு இன்பம். போகிற வழியெல்லாம் தோப்புகள், வயல்கள், ஆறுகள், சிற்றோடைகள், தாமரைத் தடாகங்கள்தான். கண் நிறைந்த காட்சிகளே எங்கும். நெய்யாற்றங்கரைக்குக் கீழ்புறம் (ஆம்; நெய் யாற்றங்கரையில் தண்ணீர்தான் ஓடுகிறது. நெய் ஆறாக ஓடுகிறது என்று நினைத்து அங்கு போய் ஏமாந்து விடாதீர்கள்.) ஒரு பெரிய தடாகம். தெளிந்த தண்ணீர் அதில் நிறைந்திருக்கிறது. பக்கத்திலே சேறு பட்ட வயல்கள். தடாகத்திலும், இந்த வயல்களிலும் செவ்வாம்பல் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காதலன் வரவை நோக்கும் காதலியைப் போல் உதய சூரியன், ஆகாய வீதியிலே வர வர மெள்ள மெள்ள இதழ் விரித்துச் சிரிக்க ஆரம்பிக்கின்றன மலர்கள். இந்த மலர்களுக்கிடையிடையே அன்னப் பறவைகள் அங்கு மிங்கும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

அன்னப் பறவைகளின் குஞ்சுகளும் தாய்மாரோடு நீந்துகின்றன, கொஞ்ச நேரத்தில் தடாகம் முழுவதும் செக்கச் செவேலென்று தாமரைப் பூக்கள் மலர்ந்து விடுகின்றன. அந்தக் காட்சி தண்ணீரிலே தீப்பற்றிக் கொண்டது போலத் தோன்றுகிறது. தாய்ப் பறவைகள், "ஏது, நம் குஞ்சுகள் இந்தத்தீயின் வெம்மையில் வெம்பிப்போய்விடக் கூடாதே“ என்று அஞ்சி தத்தம் குஞ்சுகளைத் தங்களுடைய சிறகுகளால் அனைத்து ஒடுக்கிக் கொள்கின்றன. இப்படியெல்லாம் ஒரு காட்சியை நாம் இன்று பார்க்கிறோம். இதே காட்சியை இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பும் ஒரு கவிஞர் பார்த்திருக்கிறார். பார்த்தவர், அந்தக் காட்சியை

“அள்ளல்ப் பழனத்து
அரக் கரம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது
என வெரீஇப் - புள்ளினம் தம்
கைச் சிறகால் பார்ப் பொடுக்கும்.”

(முத்தொள்ளாயிரம்)

என்று ஒரு நல்ல பாட்டிலே அமைத்தும் வைத்திருக்கிறார். ஓர் அற்புத சித்திரத்தை அழகிய சொல்லிலே தீட்டி வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இதைவிட அழகான ஓர் ஓவியத்தைக் கல்லிலே தீட்டி வைத்திருக்கிறான் ஒரு சக்கரவர்த்தி. இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னாலே தீட்டப்பட்ட அந்தச் சித்திரத்தில் நல்ல அழகான தாமரைத் தடாகம் ஒன்று உண்டு. தடாகம் முழுவதும் மலர் மயந்தான். அன்னப் பறவைகளும் குஞ்சுகளும் வெள்ளம் தீப்பட்டது என அஞ்சி நிற்கும் காட்சியெல்லாம் மிக மிக அழகு. தடாகத்தில் அன்னப்பறவைகள் மட்டுமல்ல, யானைகளும் மாடுகளும் வேறே இறங்கிக் குழப்புகின்றன. தாமரைத் தடாகம் என்றால் பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும்தானா? மக்களுக்கு இல்லையா? ஆகையால் புதுப் புனல் குடையும் ஆடவர் சிலரையும் அங்கே காண்கிறோம்.

பெண்டிரும் இருந்திருக்க வேண்டும் என்று கொஞ்சம் கற்பனையும் செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு சித்தன்ன வாசல் சமணக் குகைக் கோயிலிலே முதற்கட்டின் விதானத்திலே சித்திரித்திருக்கிறான் மன்னன் மகேந்திர வர்மன். ஜைனர்களுடைய சுவர்க்கம் ஆகிய சாமவ சரவணப் பொய்கையையே சித்திரிக்க முயன்றிருக்கிறான். எல்லாம் கல்லின் மேல் சுண்ணாம்பு பூசி அதன் மேல் என்றும் அழியா வர்ணங்களைக் குழைத்துத் தீட்டிய சித்திரங்கள் தான்.

சித்தன்ன வாசலைத் ‘தமிழ் நாட்டின் அஜந்தா' என்று சொல்லலாம். அஜந்தா செல்ல அவகாசம் இல்லாதவர்கள் சித்தன்ன வாசலுக்கு நடையைக் கட்டலாம். தொண்டைமான் புதுக் கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து காரிலோ வண்டியிலோ நேரே மேற்கே சென்றால், இந்தக் குகை வாயிலின் முன் கொண்டு விடும். பின் அங்குள்ள இரும்புக் கிராதியைக் காவலன் மூலம் திறந்து உள்ளே சென்று முதற் கட்டில் நுழைய வேண்டும்.

கொஞ்சம் நம்முடைய கௌரவத்தை யெல்லாம் கட்டித் தூர வைத்து விட்டு, மேலே கிடக்கும் துண்டை எடுத்துக் கீழே விரித்து அதில் படுத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தால் - பார்க்கலாம் நான் மேலே சொன்ன சித்திரங்களை. கொஞ்ச நேரம் இமை கொட்டாது பார்த்தால், அந்தச் சித்திரக்காரப் புலி செய்துள்ள வர்ண விஸ்தாரங்கள் அழகிய காட்சிகள் எல்லாம் தத்ரூபமாய்க் காட்சியளிக்க ஆரம்பித்து விடும். படுத்தவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விடாமல், அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மற்றக் காட்சிகளையும் பார்க்கலாம். தடுப்பவர் ஒருவருமே கிடையாது.

சித்தன்ன வாசல் குகைக் கோயில் மிகவும் சிறிய கோயில்தான். உள்ளே ஒரு சதுரமான அறையும் வெளியே ஒரு நீண்ட தாழ்வாரமுமே. எல்லாம் கருங்கல் மலையிலே குடையப்பட்டிருக்கிறது. தாழ்வாரத்துப் பக்கச் சுவர்களில் இரண்டு சிலைகள். வடக்கே பார்த்து இருப்பவர் பார்ஸவ நாதர். அவரை ஜைன தீர்த்தாங்கரர் இருபத்தி நாலு பேர்களில் ஒருவர் என்கிறார்கள். அவருடைய தலைமீது படமெடுத்த நாகம் விரிந்து குடை பிடிக்கிறது. தென்புறம் பார்க்க இருப்பவர் ஜைன குரு ஆச்சார்யார். இவருக்குச் சாதாரண குடையேதான். இருவரும் அர்த்த பத்மாசனத்தில் தியானத்தில் இருக்கிறார்கள். இந்தச் சிலைகள் கல்லில் செதுக்கிய சிலைகள். மேலே வர்ணம் பூசப்பட்டுப் பின்னால் உதிர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மேல் விதானத்தையும், பக்கச் சுவர்களையும் விட்டுக் கொஞ்சம் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ள தூண்களைப் பார்த்தால் உலகமே கண்டு அதிசயிக்கத் தகுந்த இரண்டு அழகிய சித்திரங்களைப் பார்ப்போம். வடபுறத்தில் ஒரு நடன மாதைப் பார்க்கிறோம். அவளுடைய அங்கங்களில் ஒரு குழைவு. கண்களிலே ஒரு கவர்ச்சி. அணிகளிலே ஒரு வியப்பு. அவளது ரோஜா வர்ண உடல் அழகும், கருங் கூந்தலிலே தாமரை சொருகியிருக்கும் நேர்த்தியும் நம்மை மயக்கவே செய்யும். அவளது தோற்றத்திலும், நடனத்திலும் நாம் உள்ளத்தைப் பறிகொடுத்து விடாமல் கொஞ்சம் கண்களைத் திருப்பி அடுத்த தூணைப் பார்த்தால் அங்கே காட்சி கொடுக்க மகேந்திர வர்மனே காத்து நிற்கிறான்.

மகேந்திர வர்மன் பெரிய வீரன், நல்ல கவிஞன், சங்கீர்ண ஜதியின் ஆதி கர்த்தா, மத்த விலாச நாடகாசிரியன், பெரிய சித்திரக்காரப் புலி என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மற்ற விஷயங்கள் எல்லாம் உண்மையோ என்னவோ தெரியாது. ஆனால் அவன் ஒரு பெரிய சித்திரக்காரப் புலி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதான். அவனுடைய காம்பீர்யம் அவனுடைய மகுடத்திலேயே தெரிகிறது. அவனுடைய முகத்திலோ களை சொட்டுகிறது. “நல்ல பணியை நாமும் தமிழ் நாட்டிலே செய்து முடித்து விட்டோம்” - என்ற ஆத்ம திருப்தியை அவன் கண் களிலே காண்கிறோம்.

ஆனால் ஒரே ஒரு எச்சரிக்கை. இந்த இரண்டு சித்திரங்களையும் பார்ப்பதற்கு சூட்சும திருஷ்டி வேண்டும். மங்கிய சித்திரங்கள்தான் அங்கே இப்போது இருக்கின்றன. கண்ணாடிக் கண்ணர்கள் யாராவது போய், 'ஒன்றுமே தெரியவில்லையே' என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

வெளித் தாழ்வாரத்தை விட்டு உள்ளே சென்றால் அங்கும் சுவரெல்லாம் சித்திரம். பல இடங்களில் பொரிந்து விழுந்து விட்டன என்றாலும், விதானத்தில் எழுதப்பட்டுள்ள சித்திரம் மட்டும் ஆசு அழியாமல் இருக்கிறது. கம்பளம் விரித்தாற் போன்ற சித்திரம் வெகு அழகாய் இருக்கிறது. ஜைனர்கள் கற்பனை செய்துள்ள தெய்வ லோகக் காட்சியே அங்கு சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அங்கும் மூன்று தீர்த்தாங்கரர்களின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குகைக் கோயிலைப் பல்லவ சக்கரவர்த்தி மகேந்திரவர்மன், அப்பர் பெருமான் அருளால் சைவ சமயத்தைத் தழுவுவதற்கு முன் செய்து முடித்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள் சரித்திரக்காரப்புலிகள். ஜைனனாக இருக்கும் போதே இந்தச் சித்திரங்களை எழுதியிருக்க வேண்டும் என்று வேறே சொல்கிறார்கள். மன்னன் மகேந்திரனைப் போன்ற மகா ரஸிகர்கள், ஜாதி மதபேதங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.

இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சியும் விவாதமும் நமக் கென்னத்திற்கு?. நாம் பார்த்து அனுபவிக்க வேண்டியதெல்லாம் அவனும் அவனுடைய சகாக்களும் தீட்டி வைத்திருக்கும் சித்திரங்களைத் தானே. சித்திரங்கள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலாகவே அழியாதிருப்பது அதிசயத்திலும் அதிசயமே. மூலிகைகளிலிருந்து எடுத்த வர்ணம் என்று மட்டும் சொல்வதற்கில்லை. உலோகங்களிலிருந்தும் வர்ணத்தை வடித்தெடுத்திருப்பார்கள் போல் தோன்றுகிறது, சாதாரண வர்ணத்தில் கூட இந்தச் சித்திரங்களைத் தீட்டி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க என்னால் இயலவில்லை. ஏதோ பேனாச்சித்திரங்களைத் தந்தே உங்களைத் திருப்தி செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கும் ஒரு 'அஜந்தா' உண்டு. அதை நாமும் பார்த்து விட்டோம் என்று கொஞ்சம் திருப்தியடையலாம் அல்லவா?