உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/தனித்தமிழ்நாடு

விக்கிமூலம் இலிருந்து
தனித்தமிழ் நாடு!

“தனித்தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டத்தை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. தென்னிந்தியர் மேல் வட நாட்டினர் இந்திமொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதானால், நாட்டு விடுதலைப் போராட்டத்தை மீண்டும் நான் தொடங்குவேன்” என்று அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. இரா. பெரியார் வேலூரில் பேசியுள்ளதாகச் செய்தித் தாள்களில் செய்தி வந்துள்ளது. செய்தி உண்மையோ பொய்யோ என்று தெளிவாகக் கூறமுடியாமற் போனாலும், பெரியார் உள்ளத்தில் இருப்பதாகக் கூறப்பெறும் விடுதலை உணர்ச்சி பெரும்பாலான தமிழர்களின் உள்ளத்தில் பெரிய புயல் வடிவாகக் காழ்த்துக் கொண்டிருப்பது உண்மையே! முதலமைச்சர் திரு. பக்தவத்சலத்தின் வல்லாண்மைத்தனத்தால் தமிழ்மொழிக் காப்புணர்வும் தமிழ்நாட்டு விடுதலை ஆர்வமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கிய அரசினரின் அடக்கு முறை வலுக்க வலுக்கத் தமிழர்களும் தங்கள் கைகளை முருக்கேற்றிக் கொண்டும், தங்கள் நெஞ்சங்களில் கனப் பேற்றிக் கொண்டும் வருகின்றனர் என்பதை வடவர் மறந்துவிடக் கூடாது.

இந்திய நாட்டின் எல்லைச் சண்டைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு, இந்திய அரசினர் நாட்டு ஒற்றுமையை மிகவும் வலுப்படுத்துகின்றனர். மன ஒருமைப்பாட்டாலன்றிச் சட்டத்தாலும் கடுமையான அடக்குமுறைகளாலும் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்கி விடலாம் என்று கருதுவதுதான் நமக்கு வியப்பாக விருக்கின்றது. பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் இவ் வொற்றுமையை வலுப்படுத்தும் எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் துணையாக நிற்கும் ஒரு சட்டம், வெளி நாட்டுத் தொடர்பில் நாட்டின் பொதுக்கருத்துக்கு மாறாக எவரேனும் நாட்டை எதிரி நாட்டுக்குக் காட்டிக் கொடுக்க முற்படின், அவர் தம்மை நாட்டின் உட்பகையாகக் கருதுவது இயற்கையே. அப்படி உட்பகையாகக் கருதப்பெறுவார் மேல் தண்டம், சிறை முதலிய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும் இயற்கையே! ஆனால் அத்தகையதொரு சட்டத்தை வைத்துக் கொண்டு இந்திய நாட்டை வேட்டெஃகத்தால் ஒற்றுமைப்படுத்த நினைப்பதும், அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தலையாயதாக இந்திமொழியை நாடு முழுவதும் ஆட்சி மொழியாகச் செய்ய முற்படுவதும், அதன் பொருட்டுப் பிறமொழிகளின் இயற்கை உரிமையைப் பறிப்பதும், பிறமொழிகள் பேசும் மக்களின் தன்னுரிமையான எண்ணங்கட்கு மாறாக நடப்பதும், மீறினால் அடக்க நினைப்பதும், அதையும் மீறுவராயின் சிறைப்படுத்திக் கடுங்காவல் தண்டங்களை வழங்குவதும் மக்களுரிமை அரசாட்சி அமைப்புக்கே மாறான செயல்களாகும். இத்தகைய செயல்களால் அரசினர் எதிர்பார்க்கும் நாட்டு ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மாறாக உள்நாட்டுக் குழப்பங்களும் ஒற்றுமைக் குலைவுந்தாம் ஏற்படும் என்பதைத் தொடக்க நிலை அரசியலறிவு வாய்ந்தவன்கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.

இந்நிலையில் அரசினர் தாம் கொண்ட விடாப்பிடியான நடவடிக்கைகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை, ஆங்காங்கே மேற்கொள்ளப்பெறும் கடுமையான அடக்குமுறைகளைக் கொண்டு திட்டவட்டமாக உறுதிப்படுத்தலாம். இந் நடவடிக்கைகளுக்கு முதற்படியாக மக்களின் மொழி உரிமைகளைப் பற்றிப் பேசும்தாளிகைகள் கட்டுப்படுத்தப் பெற்று வருகின்றன. மக்களின் கருத்துகளைத் தெளிவாக உணர்த்தும் செய்தித்தாள்கள் ஒருநாட்டின் அரசியல் அமைப்புகளை விளக்கிக் காட்டும் காலக்கண்ணாடிகள் ஆகும். செய்தித்தாள்கள் அவ்வப்பொழுது அரசினரின் உள்நாட்டு நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசுவது, விளையப் போகும் விளைவுகளை ஆட்சிப் பித்தம் தலைக்கேறிய அரசினர்க்கு எதிர்காலத்தை உணர்த்தும் முன்னறிவிப்பாகும். அதற்காக அச் செய்தித்தாள்களின் மேல் அடக்கு முறைகளைப் பாய்ச்சுவது அந்த உண்மையாக ஏற்பட்டிருக்கும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளைப் புதைத்து விடுவதாகாது. அடக்கு முறைகளாலும் கடுந்தண்டங்களாலும் உரிமையுணர்வு மேன் மேலும் கிளர்ந்தெழுமே யொழிய என்றும் அடங்கிவிடாது. இதனை மக்களின் வரலாறு அறிந்த யாவரும் தெள்ளிதின் உணர்வர். வெளிநாட்டு அரசியல் போக்கிற்காக உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளைத் தடுத்துவிட முடியாது. ஊரில் கொள்ளைக்காரர்கள் மிகுந்து விட்டார்கள் என்பதற்காக, வீட்டிற்குள் எவரும் பசி என்று கிளர்ச்சி செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது மடமை. பசி முதலிய தேவைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தக் கூடாது என்று நெறிமுறைகள் கூறுவது அரசியல் அறம் ஆகாது. இன்னும் சொன்னால் வெளிநாட்டு அரசியல் தொடர்பைச் சரிகட்ட உள்நாட்டின் உரிமையுணர்வுகளை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் அணுகுவதும், தேவையானால் மக்களின் உள்ளார்ந்த உரிமையெழுச்சிகளை மதித்துப் போற்றி அதற்காவன செய்வதுமே இந்நெருக்கடியான நேரத்தில் அரசினர் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளாகும். இதைவிட்டு, விட்டு மக்களின் உரிமை உணர்வுகளையே தவறென்றும் கண்டிக்கத்தக்கன வென்றும் கூறி அடக்கு முறைகளால் அவற்றை ஒடுக்க நினைப்பது, உட்புண்ணை மூடிமறைத்து விட்டு, வெளிப்புண்ணுக்கு மருந்திடும் அறியாமைச் செயலே. காலப்போக்கில் உரிமையுணர்வுகளை மதியாத அரசினரையும் மக்கள் மதியார். அவ்வரசினர் தம் வெளிநாட்டுத் தொடர்பான நடைமுறைகளுக்கும் (அவை சரியாகவே இருப்பினும்) அவர் தம் ஒத்துழைப்பை நல்கார். இனி, ஒத்துழைப்புத் தாரமற் போவதுடன், வெளிப்பகையைப் புறக்கணித்துவிட்டுத் தம் உரிமைக் கிளர்ச்சிகளையும் வெளிப்படையாகவே நடத்த முற்படுவர். தமக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசின் உடைமைகள் எதிரிகளால் தாக்குறும் பொழுது அதைப்பற்றித் துளியும் கவலை கொள்ளார். இந்நிலையில் அரசு கடைப்பிடிக்க வேண்டிய வழங்க வேண்டிய உரிமை முறைகளை கடைப்பிடிக்காமலும் வழங்காமலும் இருப்பதுடன் எதிரியை முறியடிக்க ஒற்றுமையாக இருங்கள் என்று மருட்டிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய மடமை என்பதை அரசினர் காலப் போக்கில் உணரத்தான் போகின்றனர்.

இந்தச் சூழ்நிலையின் முதல் விளைவுதான் நாம் இக்கட்டுரைத் தொடக்கத்தில் பெரியார் ஈ.வே.இரா. பேசியதாகக் கூறிய கூற்று. நாட்டு விடுதலை உணர்வையும், தம் கட்சி நோக்கங்களையும் சிறிதுகாலம் மறந்து விட்டு, ஆளுங் கட்சியான பேராயக் கட்சிக்குத் தம் முழுத்துணையையும் ஆற்றலையும் நல்கிய பெரியார், தம் மறந்து போன எண்ணங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும், அதன் வழியே தாம் இனிநடக்க வேண்டும் என்று கருதுவதும் அரசினர்க்கு ஏற்பட்ட இரட்டை இழப்பே! ஒன்று பெரியாரின் பெருந்துணையைப் பேராயக் கட்சி இழப்பது. இரண்டு, அவரின் வலிந்த அரசியல் எதிர்ப்பைத் தாம் ஏற்படுத்திக் கொள்வது, இந்த இருவகையான இழப்பும் அரசினரின் ஆட்சிக் கப்பலில் விழுந்த இரண்டு ஓட்டைகளாகும். அரசினர் இவை போன்ற ஓட்டைகளுக்கு மதிப்புக் கொடுத்தே ஆகல் வேண்டும். இல்லெனில் அவர்தம் ஆட்சிக் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.

இனி, பெரியார் நடத்தப் போவதாகக் கூறும் தமிழ் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை அவர் துணிந்து நடத்துவாரோ இல்லையோ என்ற ஐயப்பாடு முறையே ஆட்சியினர்க்கும் மக்களுக்கும் எழாமல் இல்லை. ஒரு வேளை ஆட்சியினர்க்கு அவர் ஐயப்பாடு ஊதியமாகவும் படலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், பெரியாரின் புரட்சியுள்ளத்தைப் பார்க்கினும் வலிவான, மேலான ஒரு பெருத்த புரட்சி மனப்பான்மை உருவாகிச் செயல்படப் போவதை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. உண்மையிலேயே இந்தியைப் பல வகையான எதிர்ப்புகளுக் கிடையிலும் வடநாட்டு அரசினர் வலிந்து புகுத்துவதை மேற்கொள்ளுவார்களானால், அவர்தம் முடிவு இரங்கத்தக்கதாகவும், எதிரிகளால் பழித்துரைக்கப்படுவதாகவும் இருக்கும் என்று கணித்துக் கூறுகின்றோம். இந்தி எதிர்ப்பை முறியடிக்க மக்கள் மேற்கொள்ளவிருக்கும் பெரும் புரட்சிக்கு முதல் நடவடிக்கையே அண்மையில் நடந்த மாணவர் புரட்சியாகும். இம் மாணவர் புரட்சியால் அரசினர் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் விரைந்து மேற்கொள்ளப் பெறாவிடில் மக்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் கிளர்ந்தெழப் போவது கல்மேல் எழுத்துப் போன்ற உண்மை! இந்த உண்மை நடந்து தீர வேண்டிய கட்டாயம் நடக்கப்போகின்ற உண்மை.

தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்த மட்டில் வடநாட்டு அரசினரின் கைப்பாவையாக இங்குள்ள முதலமைச்சர் இயங்கிக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை, மேலும் தமிழக முதலமைச்சர் இருவகையான குற்றங்களைத் தம்மையறியாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். அவை. வடநாட்டாரின் நடைமுறை ஆட்சி முறைகள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடு பயப்பன என்று தம்மளவில் அரசினர்க்கு உணர்த்தாமலிருப்பதும். இம்மாநில மக்களிடத்தே வளர்ந்து வரும் மனக்கசப்புகளை ஆளுநரிடம் தக்க முறையில் எடுத்துக் கூறாமல் மூடிமறைத்துத் தம் பதவிப் பொறுப்பை நீட்டித்துக் கொள்வதுமாகும். தாம் எவ்வாறாகிலும் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமை உணர்வுகளைக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று உறுதி பூண்டிருப்பதும் அவரின் அறியாமையே! இவ்வகையில் ஆங்காங்குள்ள தமிழ்ச் செய்தித்தாள்களின் ஆசிரியர்களைச் சிறைப்படுத்தி அவர்மேல் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார் அண்மையில் ஏற்படவிருந்த தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தை (அவ்வேற்பாடும் சரியான முறையில் அமைக்கபடாமற் போயினும்) நடந்த முற்பட்ட தமிழ்ப் பேராசிரியர். இலக்குவனாரைப் பாதுகாப்புச் சட்டப்படி சிறைப்படுத்தியுள்ளனர். இந்நிலை தமிழ்ப் பேராசிரியர் பிறர்க்கும் நேரவிருக்கும் நிகழ்ச்சிக்கு ஓர் எச்சரிக்கையே! துடிப்பும், பொறுப்பும் வாய்ந்த திரு. இலக்குவனார் போன்ற தமிழ் உரிமைக் காப்பாளர்களைச் சிறைப்படுத்தி விட்டால், தமிழ்மொழியுணர்வு அற்றுப் போகும் என திரு. பக்தவத்சலம் போட்ட தப்புக்கணக்கின் விளைவு இனிமேல்தான் நடக்கவிருக்கின்றது. மொழியுணர்வு அற்ற முதலமைச்சரின் போக்கு நகைப்பை விளைவிக்கின்றது. தமிழ் மொழி விடுதலை உணர்வு தமிழக விடுதலை உணர்வாகக் கிளைக்க நெடுங்காலம் ஆகாது. பேராசிரியர்களால் தான் தமிழ்மொழியுணர்வு கிளப்பப்பெறுகின்றது என்று கருதுவது அறியாமையாகும். காட்டுமிராண்டிக்கும் மொழியுணர்வு உண்டு. தாய் உள்ளவனுக்கெல்லாம் தாய்மொழிப் பற்று அதனைப் பேணி வளர்க்கும் கடப்பாடும் உரிமையுணர்வும் இருப்பது இயற்கை, இந்தி யாட்சியினர் இந்தியைப் பரப்புவதற்கும் போலிக் காரணமாக ஒருமைப்பாட்டைக் கூறினாலும் உண்மையாக அதற்கும் அவர்தம் மொழியுணர்வே அடிப்படையான காரணம் ஆகும்.

மக்கள் எல்லார்க்கும் பொதுவான மொழியுணர்வு மொழிப் பேராசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொள்ள அத்தகையாரை ஒழித்துக்கட்ட முனைந்திருப்பது. பேதையுள் பேதையின் செயலாகும். இவ்வாறு செய்வதால் ஒரு மொழி அடக்கப்பட்டு, அதன் உணர்வும் முடக்கப்பட்டு விடுவது உண்மையாயின், ஆங்கிலத்தை இந்நாட்டினின்று அகற்றப் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் தன்மானம் வாய்ந்த(!) வட ஆட்சி வெறியர் சிலர் ஆங்கிலப் பேராசிரியர்களையும் சிறைப் பிடிப்பதுதானே, அவ்வாறு செய்வது ஆங்கிலத்தை அகற்றுவதற்கும், அவ்விடத்தில் இந்தியை வலிந்து திணிப்பதற்கும் ஏற்ற ஓர் அருஞ்செயலாக இருக்குமே! எனவே எழுந்து வரும் தமிழ் உணர்வை அடக்கித் தமிழ் விடுதலை இயக்கத்தை அழித்துவிட முயல்வது தமிழ் நாட்டு விடுதலை இயக்கத்திற்கு வித்திடுவது போல ஆகும் என்றும், அவ்வாறு தமிழ் நாட்டு விடுதலை இயக்கம் தொடங்கப்பெறுமானால் அதனை அடக்குதல் எதிரிநாடுகளை அடக்குவதினும் அரிதாகும். என்றும் அரசினர் தெளிவாக உணர்ந்து கொள்வாராக!

-தென்மொழி, சுவடி 3, ஒலை 4, 1965